|
|
துரதிஷ்டவசமாக வெகு நாட்களுக்குப் பிறகு புத்தக வெளியீட்டு நிகழ்வுக்குச்
செல்ல நேர்ந்தது. மு.அன்புச்செல்வன் அவர்களின் அரைநூற்றாண்டு சிறுகதைத்
தொகுப்பின் வெளியீடு என்று விரிவுரைஞர் சொன்னபோது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது
அதற்குக் காரணமாக இருக்கலாம். மலேசியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்
என பெயர் பெற்றவர் மு.அன்புச்செல்வன். பல்கலைக்கழகத்தின் இடுபணி வேலைகள்
இருந்தபோதும் நான் உட்பட நான்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருவதாக
வாக்களித்தோம். எங்களின் ஆர்வத்தைப் பார்த்து விரிவுரைஞரே எங்களுக்குப்
போக்குவரத்து ஏற்பாடு செய்திருந்தார். மழைக்காலமானாலும் அன்று ஆச்சரியமாக
(24.3.2011) மழை இல்லை. 5.30க்கு நிகழ்ச்சி. தாமதமாகி விடுமோ என்று அரக்கப்
பரக்க நேதாஜி மண்டபத்துக்குச் சென்றோம்.
தாமதம் இல்லாமல் நாங்கள் வந்து சேர்ந்தும், வெகு தாமதமாகவே நிகழ்வு
ஆரம்பித்தது. இன்றைக்கு நிகழ்ச்சி நடக்குமா? நடக்காதா? என்று
எங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டோம். அவைத்தலைவர் திரு. தங்கமணி அவர்கள்
ஒலிப்பெருக்கியைப் பிடித்ததும் என் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்துக்
கொண்டேன். மணி 6.45ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழ் வாழ்த்தோடு நிகழ்வு
ஆரம்பித்தது. அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது. இனி நிகழ்வு தடையில்லாமல்
நடக்கும் என்ற திருப்தி. ஆனால் மணி 8.30க்கு மேல் ஆகியும் டத்தோ சரவணன்
அவர்களின் உரையிலேயே நிகழ்வு முக்கிக்கொண்டிருந்ததுதான் சகிக்க
முடியவில்லை.
முதல் அங்கத்திலேயே முக்கியமானவர்கள் சிலருக்குச் சிறப்புச் செய்யப்பட்டது.
அதற்கு தான் ஸ்ரீ சோமா அவர்கள் தலைமை ஏற்றார். பிறகு அலுவல் காரணமாக
இடையிலேயே சென்று விட்டார்.
நிகழ்ச்சியில் என்னை அதிர்ச்சிக்குள்ளாகிய நிகழ்வே ஒரு மோசமான அரசியல்
பிரச்சாரம்தான். ஒலி பெருக்கியின் முன் நின்று “அடுத்த ம.இ.காவின் தலைவர்
டத்தோ சரவணன்தான்” என்ற வாசகம் திடுக்கிட வைத்தது. அண்ணன் எப்ப சாவான்
திண்ணை எப்ப காலியாகும் என்ற பழமொழியை நன்கு எனக்குப் புரிய வைத்தது. அதில்
“நாங்கள் சொன்னா நிச்சயம் பலிக்கும்” என்ற உறுதிமொழி வேறு. உண்மையில் இது
இலக்கிய மேடையா இல்லை அரசியல் மேடையா என்ற குழப்பம் எங்களுக்கு எழுந்தது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அனுபவத்தில் நரைத்தவர்கள்.
வந்திருந்த இளையோர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இலக்கிய நிகழ்வு இப்படி
இருந்தால் இளையோர்கள் எப்படி இந்த மேடைகளின் உந்துதலின் வழி இலக்கியத்தை
முன்னெடுப்பார்கள் என்று புரியவில்லை.
வாழ்த்துரையாற்றிய சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கச் செயலாளர் நீளமான ஒரு
வாழ்த்துரையை வாசித்தார். அந்த வாழ்த்துரையும் நிகழ்வு நாயகனான
மு.அன்புச்செல்வனுக்கு என்று பார்த்தால் அதுதான் இல்லை “..... அவர்தான் நம்
ம.இ.கா துணைத்தலைவர் டத்தோ சரவணன்" என்று முடித்தபோதுதான் கதை
சப்பென்றாகியது. பிறகு அவரே அன்புச் செல்வனுக்கு மீண்டும் வாழ்த்துரை
வழங்கும்போது தூக்கம் வந்திருந்தது.
பிறகு சிறப்புரையாற்றியவர் சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தலைவர். இதுவும்
சிறிது நீண்ட உரைதான். அவரின் உரையும் அவரது அருமை நண்பரான மு. அன்புச்
செல்வன் அவர்களைச் சந்தித்த நாள் முதல் அன்புச்செல்வனின் 10 சிறுகதையின்
சுருக்கம் வரைச் சுருங்காமல் நீண்டது. பின்னர் மலேசிய எழுத்தாளர் சங்கத்
தலைவரின் உரை. பவ்வியமாக ஆரம்பித்தவர் உடனே முடிப்பார் என
எதிர்ப்பார்த்தோம். எதிர்பார்த்தது மட்டுமே. அவர் பேச்சியில் பல இடங்களில்
‘நகைச்சுவை’, அதில் ஒன்று அன்புச் செல்வன் குரல் மேல் அவருக்கு அலாதி
பிரியமாம் (அன்புச்செல்வன் வானொலியில் பணியாற்றியவர் என்பது அனைவரும்
அறிந்ததே) அவரின் கதையைப் படிக்கும்போதெல்லாம் அன்புச்செல்வனே பக்கத்தில்
இருந்து படிப்பதைப்போல் உணர்வாராம். இடம்பெற்ற உரைகளிலே அன்புச் செல்வன்
அவர்களின் உரை மட்டுமே சுருக்கமாக இருந்தது. (பாவம் அவரும் என்ன செய்வார்.)
இதில் முக்கியமானது டத்தோ சரவணன் அவர்களின் உரை. ஒருவனின் எழுத்து எவ்வாறு
இருக்க வேண்டும் என ஆரம்பித்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை நாளிதழில்
இடம்பெற்ற மகேந்திரன் என்பவரின் கோயில் வியாபார இடமாகி விட்டதென கரு கொண்ட
கவிதையைத் தொட்டு விட்டில் பூச்சி கவிதை வந்து, எதெல்லாம் கருப்பு என்று
எழுதிய பாடலாசிரியன் வரை புகழ்ந்தார். மாபெரும் சிந்தனை என அடையாளப்
படுத்தினார். முதல் இரண்டு கவிதைகள் சரி, ஆனால் அடுத்து மாபெரும் சிந்தனை
என அவர் இரண்டு முறை அழுத்தமாக சொன்ன வரிகள் எப்படி யோசித்தும் எந்த
வகையில் மாபெரும் சிந்தனை என்றுதான் எனக்குத் தெரியவில்லை. அந்த வரி
“பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச இடம் கருப்புதான்...”
சரவணனுக்கு அது பெரிரிரிரிய சிந்தனையாக இருக்கலாம்.
இறுதிவரை டத்தோ அவர்கள் மு.அன்புச் செல்வனின் சிறுகதையைப் பற்றி பேசினாரா
இல்லையா என்று தெரியவில்லை. அவரின் மாபெரும் சிந்தனையைக் கேட்டவுடன் அரை
நூற்றாண்டை ஆற அமர வாங்கிக் கொள்ளலாம் என நடையைக் கட்டிவிட்டேன்.
இன்று மேடையில் பேசும் மூத்த எழுத்தாளர்கள் எல்லாம் இளைஞர்கள்
இலக்கியத்தில் ஈடுபட வேண்டும் என்கிறார்கள். இளைஞர்கள் இலக்கியத்தில்
ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது இத்தனை அசிங்கமான அரசியல் வேசம்
போட்டதல்ல என்பது மட்டும் உண்மை. அறை நூற்றாண்டு காலம் இலக்கியம் படைத்தவர்
அன்புச்செல்வன் என்கிறார்கள் ஆனால்...
|
|