முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 28
ஏப்ரல் 2011

  நேர்காணல்:
"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"
லீனா மணிமேகலை
 
 
       
நேர்காணல்:

"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"

லீனா மணிமேகலை



பத்தி:

மதவாதம் என்கிற நோய்
கே. பாலமுருகன்

ஆடுதின்னவன் பட்டுக்கலை அணி தின்னவன்....
அ. ரெங்கசாமி

ஓர் இலக்கிய நிகழ்ச்சியாம்!
தினேசுவரி



சிறுகதை:

கூலி
ம. நவீன்

ரயில்பயணத்தில்
கிரகம்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...10
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த இயக்குனர், நடிகர் நாசரின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...18

ம. நவீன்

லதாமகன்



எதிர்வினை

(லீனா மணிமேகலையின் நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. முதல் பகுதியை வாசிக்க http://www.vallinam.com.my/issue27/interview.html)

அதிகாரத்தின் பிடியிலிருந்து கலையை மீட்டெடுப்பது நம் கடமை. 'செங்கடல்' திரைப்படத்தை மாநில தணிக்கைக் குழு தடைசெய்ததற்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடு எதிர்வரும் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது. உங்களது ஆதரவு தேவை. தடையை நீக்குமாறு கோரி இந்த மனுவில் நீங்களும் கையொப்பமிடுங்கள். நன்றி. - ஆசிரியர்
http://indianvoice.org/censorship-for-sengadal-petition.html

கேள்வி: தமிழ்ச்சினிமாவில் ஒரு ஹீரோவை அதீதமான பிம்ப உருவாக்கங்கள் கொடுத்து உருவாக்கிவிட்டு, பின்னர் அவர் பெயரை வைத்து சம்பாதிக்கும் மலிவான சூழல் போல தமிழகத்தில் நீங்கள் சொன்ன இதழியல் மடாலயங்களும் செயல்படுவதைப் போன்று வெளியிலிருந்து பார்க்கும் என் போன்ற வாசகர்களுக்குத் தோன்றுகிறது. அது பற்றி கூறுங்கள்...

பதில்: இளம் படைப்பாளராகவும், வாசகராகவும், தமிழ்ச் சூழலின் சந்தைமயச் சூழல் என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது. சந்தை என்ற பேரதிகாரத்திற்கு எதிராக எந்த எழுத்தும் உருவாகி விடக்கூடாது என்பதில் இலக்கிய மடங்கள் மிகக் கவனமாகவே உள்ளன.

சர்வதேசப் பார்ப்பன வலைப்பின்னலை வைத்துக் கொண்டு சமூகத்தின் உள்முரண்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் 'காலச்சுவடு' கண்ணன் தன்னை 'விக்கி லீக்ஸ்' அளவுக்கு நம்பிக் கொள்வதும், நம்மை நம்ப வைக்கத் துணிவதும் இலக்கியச் சூழலின் சாபக்கேடு. சுந்தரராமசாமியோடு காலச்சுவடு நின்றிருந்தால் இலக்கியப் பிரதியாகவாவது காலத்தின் நினைவில் இருந்திருக்கும். தொண்ணூறுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் பேசிப் பரப்பி, இஸ்லாமிய வெறுப்பைக் கக்கிய கண்ணன், இரண்டாயிரங்களில் இஸ்லாமியப் பிரதிகளை விற்கிறார். அவருக்குப் பத்திரிகை நடத்தத் தெரிந்திருக்கிறது. அல்லது வாசகர்களின் மறதியையும், முட்டாள்தனத்தையும் சந்தைப்படுத்தும் தந்திரம் கைவந்திருக்கிறது.

பார்ப்பனிய சங்கத்திற்குச் சென்று பார்ப்பனிய விழுமியங்களைப் பேசிய சுஜாதாவை இலக்கியக் கர்த்தாவாகக் கூவி விற்கும் மனுஷ்ய புத்திரன், மனிதர்களைப் பேதப்படுத்திப் பார்க்க முடியாத குழந்தையாகிவிட்டார். அவருக்கு எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் போலிருக்கிறது. இதற்கிடையில், அவர் காலச்சுவட்டில் விட்டு வந்த மூட்டையை வேறு எரித்துவிட்டார்கள். அவருடைய அன்பின் பரிமாணம் எல்லா திசைகளிலும் சந்தை வரை வழிகிறது. மேல்தட்டு பாலியல் அரிப்புகளைச் சுரண்டும் கார்பரேட் பிரதிகளையும், மிகக் கவனமாக அரசியல் நீக்கத்தைத் தணிக்கை முறையாக கொண்ட இலக்கியப் பிரதிகளையும், புனைவு மொழியாக ஆர்.எஸ்.எஸ் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் பழைய ஆசிரியப் பிரதிகளையும் அவர் அன்பிற்காகவே உற்பத்தி செய்து தரும் நாயகர்களும் அவருக்கு வாய்த்திருக்கிறார்கள்.

கேள்வி: உங்கள் கவிதைகளின் சொல் மற்றும் வரிகளின் அடுக்குகள் அவற்றுக்கென தனிச் சிறப்புடன் ஓர் இடத்தில் அமர்கின்றன. பிரக்ஞையோடு அவற்றை அடுக்குகிறீர்களா? அவை எவ்வகையில் கவிதைக்கு அவசியமாகின்றன?

பதில்: கவிதையில் இயங்கும் வார்த்தைகள் அதற்கெனவே கொடுக்கப்பட்ட இடங்களில் வாகாகச் சென்று அமர்வதில்லை. ஒழுங்கு குலைந்த அடுக்குகளில்தான் இடம்பெறுகிறது. அவை வாசிப்பவரின் அர்த்தம் கோரும் நேர்க்கோட்டுத்தன்மையை விட உணர்வுத் தளங்களை அதிகம் கோருகின்றன. வெறும் உணர்ச்சிக் கோர்வைகளா என்று கேட்டுவிட வேண்டியதில்லை. ஆணின் அத்தனை பிரதிகளிலும் உணர்ச்சியற்ற இடத்தில்தானே பெண் வைக்கப்பட்டிருக்கிறாள்? அதனாலேயே கவிதையில் உணர்வுத் தளம் என்பதும் ஒழுங்கற்ற அரசியலாகவே இருக்கின்றது.

ஆமாம், நான் பிரக்ஞையோடுதான் வார்த்தைகள், அடுக்குகள், வடிவங்கள் வழியாகக் கவிதைகளைத் தயாரிக்கிறேன். அதிக ரொட்டிகளைத் தயாரிப்பதாலேயே என் பெயர் அவற்றில் பொறிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரெக்டின் (Brecht) குறிப்பொன்று கூடவே நினைவுக்கு வருகிறது.

கேள்வி: எழுதுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறீர்கள். இதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்.

பதில்: ஆசிரியர் இறந்து விட்டார் என்பதை ஏற்கெனவே முன்மொழியப்பட்ட கருத்துருவங்கள் இறந்துவிட்டதாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். அவ்வகையில் உலகத்தின் மொத்த மூல ஆசிரியப் பிரதிகளும் இறந்துவிட்டன என்று சொல்லலாம் எனக் கருதுகிறேன். கடவுள் உட்பட.

இப்பொழுது எழுதப்படுவது வாசக மறுபடைப்பு பிரதிகள்.

வாசகர் படைப்பாளியாகக் கோரவில்லை. அவர் தன் அரசியல் உரிமையை மீட்டெடுக்கிறார். அவ்வளவில் பிரதி மீதான ஆசிரிய ஆதிக்கம் இல்லாமல் போகிறது. வாசக மறுபதிப்பு பிரதிகளை அடித்தளப் படைப்புகளாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில், மூலப்பிரதி என்பது எப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக, வழிமொழிவதாக இருக்கிறதோ, வாசக மறுபடைப்பு பிரதி எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். அந்தப் பாதையில் எனக்கென்ற உலகைப் புதியதாகக் கட்ட முயன்ற அளவில் என் மீதான விமர்சனங்களைப் பொருட்படுத்தியும், கடந்தும் செல்ல எத்தனிக்கிறேன்.

கேள்வி: உங்கள் கவிதைக்கான ஆரோக்கியமான விமர்சனங்கள், உரையாடல்கள் தமிழ் சூழலில் நிகழ்ந்துள்ளதா?

பதில்: இல்லை. நடந்த உரையாடல்களும் சமூகத்தின் ஆரோக்கியமின்மையையும், நோய்மையையும் காட்டின. அது குறித்து எனக்கு வருத்தம்தான். சமூகம் என்பது ஒரு புனைவு. அதை நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள். பெண் தன் உடலை, உலகை எழுதும்போது பரத்தமை கால செவ்வியல் பண்புகளில் ஒருவித பதற்றம் ஏற்படுகிறது. இங்கே மத அடிப்படைவாதிகள் வைக்கும் அதே குற்றச்சாட்டைத்தான் மார்க்சிய வாதிகளும் வைக்கிறார்கள், எல்லா வாதிகளும் வைக்கிறார்கள். பெண்ணை நிலைகுலைய செய்ய வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஏராளமாகச் சமூகத்தின் கையிருப்பில் இருக்கின்றன. ஆனால் பொதுவாக அத்தகைய 'சமூக' ஆரோக்கியம்? குறித்து நான் கவலைப்படுவதில்லை.

கேள்வி: கவிதை தவிர வேறெந்த இலக்கிய வடிவத்தில் முயன்றுள்ளீர்கள்?

பதில்: கவிதை தவிர என் கவனமெல்லாம் சினிமா மட்டுமே.

கேள்வி: தனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வின் துயரத்தைக் கண்டும், அதிகாரத்தால் சுரண்டப்பட்ட கொடூரத்தை கண்டும், சராசரியாக மூன்று மீனவக் குடும்பங்களில் ஒரு விதவையாவது இருப்பதை உணர்ந்தபோதும், செங்கடலை எழுதத் துவங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒட்டுமொத்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் கூட்டத்தில் நீங்கள் தொட்டிருப்பது மீனவ சமூகத்தை மட்டும் என்பதால் அவர்களின் துயரத்தை நெருக்கமாக உணரும்போது, ஈழம்/யுத்தம் குறித்த உங்களின் மனநிலை எப்படி மாறுபட்டது?

பதில்: யுத்தம் என்பது தேசிய அரசாங்கங்களின் பிரச்சனை. தேசியத்திற்கு எதிரான புரட்சி என்பது மக்கள் பிரச்சினை. இடையில் தேசிய வரைவெல்லைகளில் மக்கள் பலியாவார்கள். வளர்ந்த நாடுகளில் குடியமர வேண்டி முன்றாம் உலக நாடுகளிலிருந்து தப்பி எல்லை தாண்ட முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் சிறிமாவோ -லால் பகதூர் சாத்திரி ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான மலையக மக்களை இந்தியா திருப்ப பெற்றுக் கொண்டதும் , இந்திரா காந்தி கச்சத் தீவை விட்டுக் கொடுத்ததும் இனப்போருக்கு முன்தானே நிகழ்ந்தது.

இலங்கை என்கிற தீவினுடைய சர்வதேச மதிப்பு பன்னாட்டு கம்பெனிகளுக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தன்னைத் திறந்து விடும் சிங்கள அரசாங்கம் அதை ஏற்று வாழாத, அல்லது எதிர்வினை செய்கிறவர்களை அழித்தது. ஜே.வி.பி.முன்னெடுத்த மார்க்சிய எழுச்சியின்போது பெரும்பான்மை இனமான சிங்களர்களிலேயே ஒரு லட்சம் மக்களை கொன்றது. பிறகு இன உள்முரண்களை ஊதி சிங்கள தமிழ் இனங்களைப் பிரித்தாண்டு சிறுபான்மை தேசிய இனத்தை ஒழித்தது.

சந்தை மதிப்பு மிக்க மனிதர்கள் தவிர ஒரு நாட்டின் எல்லைக்குள் அதன் சொந்த வருமானத்திற்குப் பயன்படாத அன்னியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வேளை மீனவர்கள் வரி கட்டுபவர்களாக, அந்நியச் செலாவணியில் பங்கு கொள்கிறவர்களாக இருந்தால், அரசாங்கங்கள் பதில் சொல்லும். ஆனால், எல்லை தாண்டும் "சர்வதேச குற்றவாளிகளை" காப்பாற்றுமா என்றால் செய்யாது.பாரம்பரியமாக மீன் பிடிப்பவர்களுக்கு சர்வதேச எல்லைகள் கிடையாது என்பதை தேசிய அரசாங்கங்கள் கையெழுத்துப் போட்டு ஒத்துக் கொள்ளும். ஆனால் நடைமுறையில் எல்லைகளில் கொலைக்காரர்களை நிறுத்தும்.

ஆகவே மீனவர் பிரச்சனையை மனிதாபிமான பிரச்சினையாகப் பார்க்க முடியாது. அது அரசியல் பிரச்சனை.

ஏகாதிபத்தியத்தின் சர்வதேசிய வல்லாதிக்கத்தினை ஏற்றுக் கொள்ளாத எந்த நாடும் தனித்து வாழ முடியாது. அதன் வெளிப்படையான முரண்பாடுதான் யுத்தம். மக்களை சதா சாமானியர்களாக்கி அச்சுறுத்துவதுதான் யுத்தத்தின் வெற்றி. அதற்காகத்தான் அரசாங்கங்கள் தங்கள் ராணுவத் தளவாடங்களில் இரவு பகலாகக் கருவிகளை உற்பத்தி செய்கின்றன.

இதுவே செங்கடல் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்

கேள்வி: தனுஷ்கோடி, ராமேஷ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை சினிமாவின் (செங்கடல்) மூலம் மீளுருவாக்கம் செய்யும் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? சினிமாவின் வழி அவர்களின் வாழ்வைப் பதிவாக்கும் முயற்சியில் அவர்களிடம் பழகிய கணங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பதிவுகள் பற்றி சொல்லுங்கள்.

பதில்: எப்படிக் கடற்கோள் ஒரு நகரத்தை அழிக்கும் என்ற பீதியை ஏற்படுத்தும் காட்சிப் பொருளாக, நாடெங்கிலுமிருந்து பேரழிவின் சின்னத்தைப் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற சாடிசத்தோடு வரும் டூரிஸ்டுகளின் வடிகாலாக, பூணூல் போட்ட அய்யர்சாமிகள் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் வங்காள வரிகுடாவும் - இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கும் புனிதத் தலமாக தனுஷ்கோடி இதுவரை அறியப்பட்டிருக்கிறது. எனக்கு அது ஒரு பராரி நிலம். நடந்து செல்லும் மணல் மேட்டிற்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் சடலங்களைக் குறித்த கதைகள் துரத்தும் காடு. உயிர் வாழ்தலை மட்டுமே செய்துக் கொண்டிருக்கிற அந்த மீனவ சமூகம் என் அலைவுறுதலையும் தன் பாடோடு இனம் கண்டது. குறைந்தபட்ச வாழ்வாதாரங்களோடு தங்கள் இருப்பை நீட்டித்துக் கொண்டிருக்கும் அவர்களை அதிகாரம் குற்றவாளிகளாகப் பார்ப்பதை முறையிட்டது. அதை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டி தங்கள் வாழ்வுரிமைக்கான எளிய நம்பிக்கையை செங்கடல் பெற்றுத் தரும் என்று நம்பியது. அரசாங்கங்களுக்கு எல்லைகள் குறித்தான பிரக்ஞை இருப்பது போல மக்கள் குறித்தான பிரக்ஞை இல்லை. அந்தச் சமூகத்திற்கு நற்செய்தி சொல்லிவிடும் வல்லமை எனக்கில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் பொது நீதிக்கும், தன்னிலைக்குமிடையே அவர்கள் படும் போராட்டத்தை மிக நேர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக என்னால் செங்கடல் மூலம் எடுத்துச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதை எந்தப் பழுதுமில்லாமல் செய்திருக்கிறேன்.

ராணுவம், காவல் துறை, சுங்க வரித்துறை, உளவுத்துறை, என்று அதிகாரம் நசுக்கும் தனுஷ்கோடியின் மீனவ வாழ்வியல் மிக மிக ஆதாரமான உரிமையையே கோருகின்றது. ஆனால் நானும் கூட இரண்டு நாடுகளுக்கான சட்டங்களுக்கு அவர்களைக் கையளித்து விட்டே திரும்ப வேண்டியிருந்தது. அவர்களின் ஆதாரமான வாழ்வின் தோல்வியே என் கலையின் தோல்வியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். படம் முடக்கப்பட்ட நிலையில் சட்டங்களை மீறி கூட மீனவர்கள் வாழத்தான் செய்வார்கள் என்ற உணர்வே எனக்குமான உணர்வாக இருக்கிறது.

ஆனால், இப்படிப்பட்ட நிலங்களைத்தான் ஒரு காட்சிக் கலைஞராக நான் வாழ்நாள் முழுதும் தேடி கண்டடைவேன் என்ற உறுதி மட்டும் என்னுடன் திண்ணமாக மிஞ்சியிருக்கிறது.

கேள்வி: ஷோபா சக்தியின் இலக்கிய ஆளுமையும் அதே சமயத்தில் யுத்தம் தொடர்பான நெருக்கமான அவருடைய அனுபவமும் செங்கடல் சினிமாவில் எப்படி வெளிப்பட்டுள்ளது? சினிமாவின் எந்தப் பகுதியில் அவருடைய ஆளுமைத் தீவிரமாக இயங்கியது?

பதில்: ஒரு இலக்கிய வாசகராக ஷோபாசக்தியின் தீவிர காதலி நான். அவரின் பிரதிகளிலேயே ஒரு நூறு திரைக்கதைகள் விரவியிருக்கின்றன. செங்கடலைப் பற்றி சொன்ன போது, இது தனுஷ்கோடி மீனவ சமூகத்தை கள ஆய்வு செய்ததன் மூலமாக எழுதப்பட்ட கதை, அதன் அடிப்படையிலேயே திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்றேன். குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் வரும் காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்கள் போன்றவற்றிற்கு அவர் பொறுப்பேற்று உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். ஜெரால்டோடும், என்னோடும் திரைக்கதைப் பணியில் இணைந்து பணியாற்றுவதற்கு உற்சாகமாக ஒத்துக் கொண்டார். வசனத்தையும் பொறுப்பேற்று செய்தார். அது அவரின் பெருந்தன்மை. அந்த நிமிடத்தில் இருந்து இன்று வரை செங்கடலில் என்னை விடவும், ஜெரால்டை விடவும் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் அவர். தயாரிப்பாளர் இருந்தபோதும் சரி, கைவிட்டபோதும் சரி, எந்த ஆதரவும் இல்லாமல் நண்பர்களிடமும், குடும்பத்திடமும் கடன் வாங்கி படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்திலும், படத்தைத் தொடர்ந்து முடிக்க முடியுமா, வேறு தயாரிப்பாளர் கிடைப்பாரா என்ற அவநம்பிக்கையும், அலைதலும், விரக்தியுமாய் நொந்து திரிந்த நேரத்திலும், எண்ணற்ற தடைகளும், கல்லடிகளும் அவமானமுமாய் மௌனித்திருக்கும் தருணங்களிலும் அவர் தந்த அசைக்க முடியாத உறுதி எனக்கு பாரிய ஆறுதல்.

படத்தில் அகதிகளாக நடித்தவர்களும் அகதிகளே. அவர்களைப் பயிற்றுவித்ததும், அவர்களின் அனுபவங்களை வசனங்களாக மாற்றியதும், முக்கியமாக சூரி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியதுமாய் செங்கடலின் ஆக்கத்தில் அவர் பங்கு முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட அகதி கதாபாத்திரத்திற்கு யாரும் சரியாக வராததால், நானும் அகதி தானே, எனக்கு வாய்ப்பு தர மாட்டீர்களா என்று கேட்டதோடு, அதை மிகச் சிறப்பாக நடித்தும் தந்தார்.

எந்த சூழ்நிலையிலும், படைப்பாக்க மன நிலையையும், ஆன்மாவையும் சிதைக்க அனுமதிக்காத அவரின் தோழமை செங்கடல் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

கேள்வி: தங்களின் முந்தைய படைப்புகளின் (குறும்படங்கள், ஆவணப்படங்கள்) மீது உங்களுக்கு அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்லாததாக ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். உங்களுடைய முந்தைய குறும்படங்கள், ஆவணப்படங்களின் அடைவுநிலையை எப்படி மீள்பார்வை செய்கிறீர்கள்?

பதில்: ஆரம்ப கால படைப்புகளைப் பற்றி யார் கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வருவது நபகோவின் மேற்கோள் ஒன்று.

"யாராவது தன்னுடைய கோழையையே தட்டில் வைத்து சுற்றுக்கு விடுவார்களா?"

செங்கடலை விட்டே நான் வெளியேறி விட்டேன்.

நிம்மதி என்பது ஆன்மாவிற்கு இழிவாம் நவீன்.

கேள்வி: இத்தனை சிரமங்களுக்கிடையில் தணிக்கை குழுவினரால் நிராகரிக்கப்பட்ட செங்கடலைத் திரையிட அடுத்த தங்களின் செயல்பாடு என்ன? தணிக்கை குழுவினர் சொல்லும் காரணம்தான் என்ன?

பதில்: வெட்கங்கெட்ட இந்திய சனநாயகம் கலையைக் கண்டு அஞ்சுகிறது. சட்டமன்றம் நாடாளுமன்றம் போன்ற தன் கண்ணாடி கூடுகளை நிஜமான கலை, சிறு கல் கொண்டு எரிந்து நாசம் செய்து விடுமோ என்று நடுங்குகிறது. அவ்வளவு பலவீனமான அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மக்களுக்குமான கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஆர்டிகல் (Article) பத்தொன்பதை வாப்பஸ் பெற்றுக் கொண்டு இந்தியாவில் எமெர்ஜென்சியை அறிவிக்கட்டும். ஏன், எல்லோரையும் முட்டாளாக்கி சுதந்திர இந்தியா என்று நம்ப வைக்க வேண்டும்?

எண்பதுகளிலேயே, மத்திய தணிக்கை குழு, மத்திய சான்றிதழ் குழு என சட்டப்படி மாறிவிட்டது. எல்லோரும் பார்க்கும் படம் (U), அல்லது பெற்றோர் வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகள் பார்க்கும் படம் (UA) அல்லது வயது வந்தோருக்கான படம் (A) என்று சான்றிதழ் வழங்கும் வேலை மட்டும்தான் சான்றிதழ் குழுவிற்கானது. அந்நிலையில் கத்தரிக்கோலை வைத்துக் கொண்டு திரைப்படைப்பாளிகளை அதிகாரம் செய்ய, இவர்களுக்கு யார் உரிமை தந்தது.

என் கலையை மக்கள் மன்றத்தின் முன் வைக்க தடை செய்வது என் அடிப்படை உரிமையைப் பறிப்பது அன்றி வேறென்ன? மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து அவர்களைச் சிந்திக்க விடாமல் மந்தையாக்கும் குப்பை சினிமா கலாச்சாரம் "தணிக்கை அதிகாரிகளால் பாராட்டு பெற்ற படம்" என்று ஆளுயுர கட் அவுட் விளம்பரம் வைக்கும் வணிகத்திற்கு மத்தியில் என் உரிமைக்கான குரல் ஒரு பைத்தியக்காரியின் குரலாக இந்தக் காயடிக்கப்பட்ட தமிழ்ச் சூழலில் பார்க்கப்படுகிறது.

24 மணி நேரமும், குறைந்தபட்சம் 200 தொலைகாட்சி சேனல்கள் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறைகளிலும் தணிக்கையில்லாமல்தான் ஓடுகின்றன. இதில் கட்சிக்கொரு ஊடகம் வேறு. இணைய வெளி எல்லோருக்கும் எதற்கும் திறந்தே கிடக்கின்றது. அரை மணி நேரத்திற்குள், ஒரு நூறு விளம்பரங்கள் நம்மீது ஏதோவொரு ஷேம்பூவையோ, சிவப்பழகு க்ரீமையோ, ஆணுறையையோ எறிந்து விட்டுப் போகின்றன. ரேடியோ, பத்திரிக்கை என்று எதிலும் தணிக்கை இல்லை. ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கி சினிமா பார்க்க வரும் பார்வையாளன் மட்டும் எப்படி அரசாங்கத்திற்கு முட்டாளாகத் தெரிகிறான்?

செங்கடலைத் தடை செய்ய மூன்று காரணங்களாம். ஒன்று - படம் நேரடியாக தமிழக இந்திய அரசாங்கங்களை விமர்சனம் செய்கிறது. இரண்டு - படம் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாட்டை விமர்சனம் செய்கிறது. மூன்று - நியதிக்கு புறம்பான ஆபாச மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தில் பங்கேற்று நடித்த மீனவ, அகதி மக்கள் பயன்படுத்துவது வட்டார வழக்கு சொற்கள். இந்தியப் பாராளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் பயன்படுத்தும் ஆபாச சொற்களை விட மீனவனின் மொழி மேலானதே! அப்படியென்றால் பாராளுமன்றத்தைத் தடை செய்வோமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் உறுப்பினர்களை நியமித்து தன் சொந்த மக்கள் பேசும் மொழியையே அவமானப்படுத்துகிறது. விக்டோரியா மகாராணி, அதிகாரத்தின் மன அமைப்புகளில் இன்னும் சாக வில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்திய இலங்கை நாட்டு நட்புறவுகளை அப்பாவி மீனவர்களின் சடலங்களின் மீது நின்று அரசாங்கங்கள் பாதுகாக்க நினைத்தால், எப்படி மக்களும், கலைஞர்களும் எதிர்க்காமல், உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும். அரசை விமர்சிக்க கூடாது என்று எந்த சட்டத்தில் எழுதியிருக்கின்றது?

ராஜபக்சேயும், மன்மோகன் சிங்கும், கருணாநிதியும், தங்கள் சொந்த மக்களைக் கொன்றார்கள். அரச பயங்கரவாதிகளுக்கு ஒரு கலைஞன் எப்படிப் பல்லக்கு தூக்க முடியும்.

ஒரு வேளை, செங்கடல் உதயநிதி ஸ்டாலின் அண்ட் கோ வழங்கும் படமாக இருந்திருத்தால், அல்லது சன்பிக்சர்ஸ் பெருமையுடன் திரையிடும் படமாக இருந்திருத்தால், மீனவர்கள் கடலுக்குச் சென்று தாங்களே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்று எடுத்திருப்பார்கள், தடையேதும் இருந்திருக்காது. காட்சிப் பிழை போன்று இன்டலக்சுவல் திரைப்பட பத்திரிகை நடத்தும் மேதாவிகள் கூட சூட்டோடு சூடாக படத்தை மதித்து, அலசி, ஆராய்ந்து அதிகாரத்திற்கு, முதலாளிகளுக்கு தங்கள் அறிவைக் கப்பம் கட்டியிருப்பார்கள்.

ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை. தணிக்கையில்லாமல் செங்கடலை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வது வரை நடக்கும் என் போராட்டம். I know, it is a lonely fight.

தமிழ் நாட்டின் அறிவுத்துறையில் தொண்ணூறு சதவிகிதம் கேடு கேட்ட கும்பல். பிரதியைக் குறித்தல்லாமல் பிரதியாளரைக் குறித்துப் பேச்சைப் பெருக்கும் சாதீயப் புற்று நோய் பிடித்தவர்கள். அவர்கள் செங்கடலை மௌனித்து விடலாம் என நினைப்பது நடக்காது. ஏனெனில் செங்கடல் அவர்களுக்காக எடுக்கப்பட்டதல்ல.

ஒரு பார்ப்பனரல்லாத, முதல் தலைமுறை பட்டதாரி சிறுபான்மை இனப் பெண் அறிவுத்துறையில், கலைத்துறையில் பயிற்சி பெற்று எடுத்த தேவதைகள் என்ற ஆவணப்படம் மும்பை சர்வதேச திரைப்படப் பிரிவில் தங்கச் சங்கு அங்கீகாரத்தைப் பெற்றது தற்செயலானதல்ல.

எனக்கு என் நேர்மையிலும், மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிலும் இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது.

நேர்காணல் : ம. நவீன், கே. பாலமுருகன்


செங்கடல் படக்காட்சி 1

செங்கடல் படக்காட்சி 2

தேவதைகள் ஆவணப்படத்தின் படக்காட்சி

லீனா மணிமேகலை வலைப்பூக்கள்:

www.goddessesthefilm.blogspot.com

www.ulaginazhagiyamuthalpenn.blogspot.com

செங்கடல் அகப்பக்கம்:

www.sengadal.com

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>