|
|
ஒரு கொலையாளியாவது...
உலகை அழிக்க
சாத்தான் வரப்போகும் நாளுக்கு
முதல் நாள்
ஒரு கொலை செய்ய முடிவெடுத்தேன்
கொலைக்கான ஆயுதம்
ஒரு கூரிய கத்தியாக இருப்பதை
முதலில் உறுதி செய்தேன்
தலையணை, மெத்தை, அரிசி மூட்டை என
சகலத்திலும் செருகி சரிப்பார்த்தேன்
ஒரு கொலைக்கு முன்பாக உக்கிரத்தை
கொலையாளியின் முகம் கோரமாக இருக்க வேண்டும்
கொலையாளி கருப்பு உடை அணிய வேண்டும்
இடமோ வலமோ ஒரு வெட்டின் தழும்பிருத்தல் நலம்
இதற்கு முன் அறிந்திருந்த
பல்லாயிரக்கணக்கான கொலையாளிகளின்
ஆன்மாவைச் சேகரித்து சேகரித்து
செரித்தேன்
ஒரு கொலையாளியின்
முறுக்கும் திடமும் வன்மமும்
வந்தபின்
தலையை மெல்ல குனிந்து
கண்களை மேல் நகர்த்தி
கழுகின் பார்வையாகினேன்
நான் ஒரு கொலையாளியாகிவிட்டதை
உறுதி செய்து கொள்ள
நரம்புகள் வெடிக்க அலறினேன்
பொருட்களை நாசம் செய்தேன்
கத்தியை நாலா புறமும் வீசினேன்
பிணம் உருவாக்க அழைந்தேன்
உலகம் அழிவதற்கு முன்பான
விழித்திருந்த நள்ளிரவு நகரத்தில்
ஒரு கொலையாளியாக
வலம் வருவது அநர்த்தமானது
அவ்விரவில்
அனைவரும் கொலைக்காரர்களாகியிருந்தனர்
அவர்கள்
நரம்புகள் வெடிக்க அலறினர்
பொருட்களை நாசம் செய்தனர்
கத்தியை நாலா புறமும் வீசினர்
பிணம் உருவாக்க அழைந்தனர்
இரவு முடியும் தருணம்
வெளிர் ஒளியுடன் சாத்தான் வருகையில்
உலகம் அழிந்திருந்தது
சாத்தான் தனது
மெல்லிய மயிலிறகின்
புனிதம் குறித்த சந்தேகத்தில்
உலகை
மெல்ல ஒருதரம் வருடினான்.
|
|