முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 28
ஏப்ரல் 2011

  கூலி
ம. நவீன்
 
 
நேர்காணல்:

"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"

லீனா மணிமேகலை



பத்தி:

மதவாதம் என்கிற நோய்
கே. பாலமுருகன்

ஆடுதின்னவன் பட்டுக்கலை அணி தின்னவன்....
அ. ரெங்கசாமி

ஓர் இலக்கிய நிகழ்ச்சியாம்!
தினேசுவரி



சிறுகதை:

கூலி
ம. நவீன்

ரயில்பயணத்தில்
கிரகம்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...10
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த இயக்குனர், நடிகர் நாசரின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...18

ம. நவீன்

லதாமகன்



எதிர்வினை

அடுத்து இரண்டு எட்டு வைத்தால் அண்ணன் இருக்கும் அறை தட்டுப்படலாம். அக்கா தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் 'நான்காவது பிலோர் 4-பி' என்று பதறத்துடன் குறிப்பெடுத்ததை மீண்டும் ஒருதரம் நினைத்து சரி பார்த்துக்கொண்டான். நிச்சயம் அவ்வறை அழுகை சூழ்ந்து இருக்கும். அம்மாதான் அதிகம் அழுதிருப்பாள். அம்மாவுக்கு அழுவதற்குப் பெரிய காரணங்கள் வேண்டாம். சாதாரணமாக மேசையின் கால்கள் உடைந்துவிட்டாலே அம்மேசையை அப்பா வாங்குவதற்கு உழைத்த உழைப்பையும் பிடித்த சிக்கனத்தையும் சொல்லி அன்று முழுதும் அழுது தீர்த்துவிடுவாள். அண்ணனுக்கு விபத்து நடந்தது நிச்சயம் அவளை நிலைகுழைய வைத்திருக்கும். அப்பா வேலையை விட்டு ரிட்டாயரான பிறகு அவளின் முழு நம்பிக்கையும் அண்ணன்மீதுதான் இருந்தது.

அண்ணனே தொலைபேசியில் அழைத்து அக்காவிடம் நிதானமாக விவரத்தைச் சொன்னது உருத்திரமூர்த்திக்குக் கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. பெரிய பாதிப்பாக இருக்காது எனத் தோன்றியது. பர்ஸில் ஐந்து ரிங்கிட் மட்டும் இருந்தது. முந்தினம் அண்ணன் அவரது மோட்டார் சைக்கிளைக் கழுவியதற்காகக் கொடுத்ததுதான். கிள்ளானிலிருந்து கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைவரை பேருந்தில் நின்றபடியே வந்தது கால்களை கடுக்கச் செய்தது. ஒரு மணி நேரப் பயணம். இடையிடையே ஒரு சிலர் இறங்கினாலும் காத்திருக்கும் மற்றொருவர் சட்டென காலியாகும் இருக்கையில் இடம்பிடித்துக்கொள்ளும் லாவகம் அவனுக்கு அந்த ஒரு மணி நேரமும் பிடிபடவில்லை. பேருந்துக்கு மட்டுமே மூன்று ரிங்கிட் செலவானது. மீதம் இரண்டு ரிங்கிட்டை கண்டேக்டர் சில்லரைச் சேர்ந்தவுடன் கொடுப்பதாகக் கூறி கடைசி நிமிடம் வரை இழுத்தடித்ததுதான் நின்றுக்கொண்டு வருவதை விட பயத்தைக் கொடுத்தது. பேருந்தின் கூட்டத்தைத் தனது அதட்டல் குரலால் மிரள வைத்துக்கொண்டிருந்தவரிடம் இரண்டாவது முறை சில்லரை கேட்க அவனுக்குப் பயமாக இருந்தது. தன்னையே மொய்துக்கொண்டிருந்த உருத்திரமூர்த்தியின் கண்களை ஒருதரம் கூர்ந்து பார்த்து அவன் கைகளில் இரண்டு ஒரு வெள்ளி நோட்டுகளை கண்டேக்டர் படார் என திணித்தபோதுதான் இலகுவாக சுவாசம் விட முடிந்தது.

அறைக்கு வெளியில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கால்களை மெல்ல பிடித்துவிட்டுக் கொண்டான். வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன்னை கொஞ்சமும் சட்டைச் செய்யாமல் குடும்பமே கிளம்பி அண்ணனைக் காண அவசரமாகச் சென்றது இந்தக் கால்வலியின் போதுதான் நிதானமாக நினைவுக்கு வந்தது. அவ்வாறு அவன் விட்டுச்செல்லப்பட்டது புதிதில்லை. தொடர்ந்து எல்லா அரசாங்கத் தேர்வுகளிலும் வரலாறு காணாத அளவு 'இ' இலக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட அவனுக்கு வீட்டையும் வீட்டைப் பாதுகாக்கும் டோனியையும் பாதுகாப்பதுதான் முழுநேர பொறுப்பு. கூடுதலாக அம்மாவுக்கு கூட மாட உதவினால் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வெள்ளி கிடைக்கும். ஆனால் அண்ணன் மருத்துவமனையில் இருக்கும்போது வீட்டில் தெம்மே என்று இருப்பது அவனால் முடியாதது. அண்ணன் மேல் அவனுக்குப் பாசம் அதிகம். காலணிக்கு பார்லிஸ் போட்டுக் கொடுக்கும் எளிய வேலைக்கெல்லாம் மூன்று ரிங்கிட்வரை தருவது அவர் மட்டும்தான்.

மருத்துவமனையின் அப்பகுதி எலும்பு முறிவுக்கானதாக இருக்க வேண்டும். பார்க்கும் இடத்திலெல்லாம் சுண்ணாம்பு கட்டுகளோடு மனித நடமாட்டம் தெரிந்தது. தான் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து அகலாமலேயே கண்களை மேயவிட்டான். எங்கும் வெள்ளை வெள்ளையாய் மாவுக் கட்டுகள், வலியின் முனகல்கள், குளுகோŠஸ் , ரத்தவாடை. தொலைவில் எங்கோ அழுகை சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. வாயில் எதையோ வைத்து அழுத்தியப்பின் வெளிப்படும் அழுகைச் சத்தம். நிச்சயம் மரணமாக இருக்காது என நினைத்துக்கொண்டான். எலும்பு முறிவுக்கெல்லாம் மரணம் ஏற்படுவது சாத்தியம் இல்லை என்றே அவனுக்குத் தோன்றியது. பெஞ்ச் அவனுக்கு ஒருவித பாதுகாப்பைக் கொடுப்பதை போல உணர்ந்தான். அந்தப் பெஞ்சின் இருப்பக்க கால்களையும் இணைக்க நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் நீள் சட்டம் உடைந்திருக்க வேண்டும். உடலைக் கொஞ்சம் அசைத்தாலே 'கிய்க் முய்க்' என இட வலம் அசைந்து சத்தம் போடத்தொடங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் அச்சத்தம் அவனுக்கு ஒரு விளையாட்டு சாதனமாக மாறியது. அந்த மருத்துவமனையின் அனைத்து அசைவுகளும் அந்த பெஞ்சின் 'கிய்க் முய்க்' கிலிருந்து தொடங்குவதாகத் தோன்றியது. தாதிகள் நடையில் இருந்த அசைவு, பெரிய சுவர் கடிகாரத்தின் வினாடி முள், டாக்டரின் காலணி ஓசை, நோயாளிகளின் முணகல் என சகலமும் 'கிய்க் முய்க்' ஓசையிலிருந்தே தொடங்கியது. அங்கு ஒரு பெஞ்ச் இருப்பது யார் கண்களுக்கும் பல ஆண்டுகளாகப் படவில்லையோ எனத்தோன்றியது. அதை கடவுளின் இருக்கையாக ஒரு நிமிடம் கற்பனை செய்து கொண்டான். அவன் சகலத்தையும் பார்க்கமுடிவதுபோல தன்னை யாரும் உணரவில்லை என்பது அவனுக்குத் தெம்பாக இருந்தது. எந்தக் காட்சியும் முழுமையாகத் தெரியாமல் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் தெரிந்தது. ஒரு சுவரின் மற்றொரு பாகத்தில் அமர்ந்திருப்பவரின் சேற்றுப்புண் கால், கணினியில் எதையோ பதிவு செய்துகொண்டிருக்கும் தாதிகளின் கைகள், வார்ட்டில் சில தலைகள், மூத்திரக்குடுவையை எடுக்க முயன்று கொண்டிருக்கும் ஒரு வயதான கைவிரகள்.

ஏற்கனவே இந்தக் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு அவன் வந்ததுண்டு. அக்காவுக்குக் குழந்தை பிறந்த போது ஒருமுறையும் குழந்தை பிறந்து ஒரு மாதத்திலேயே மூளைக்கட்டியால் இறந்தபோது மறுமுறையும் வந்திருக்கிறான். இரண்டு முறை வந்த போதும் வெவ்வேறான ஓசைகளை அவன் கேட்டதுண்டு. முதலாவது பெரும் சிரிப்பு இரண்டாவது பேரழுகை. இதுபோன்று சதா காதுகளை குமைந்து கொண்டிருக்கின்ற முணகல்களை ஓயாமல் இப்போதுதான் கேட்கிறான். அவை ஒரு மொழியாய் இல்லை. மரணவலிகள் எல்லோரின் மொழியையும் மறக்கடித்திருந்தது. குறிப்பாகத் தமிழர்கள் கல்தோன்றி மண்தோன்றுவதற்கு முன் பிறந்த மொழியை அங்குப் பேணிக்காப்பதில் தவறியிருந்தனர். ஒரு நோயாளியை ஏற்றிச்செல்லும் துரோளி கடந்த பின், எதிரில் இருந்த அறையில் மூத்திரக்குடுவையை எடுக்க முயன்று கொண்டிருந்த வயதானக் கை விரல்களில் கட்டுப் போடப்பட்டிருந்தது இம்முறை பளிச்சென தெரிந்தது. எட்டிப் பார்த்தபோது அவரது கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டு ஒரு இரும்பு கம்பியோடு கட்டிலில் இணைத்திருந்தது.

உருத்திரமூர்த்திக்கும் இவ்வாறு மாவுக்கட்டுப் போட்ட அனுபவம் உண்டு. அப்போது அவன் சிறுவன். சரியாக பந்தை உதைக்கத் தெரியாததால் கோல் காப்பாளனாக அவன் அணியினர் அவனை நிறுத்தினர். கோல்கீப்பராக அவன் பொறுப்பேற்ற சில நிமிடங்களிலேயே நான்கு கோல் நுழைந்துவிடவே அவ்வணியின் தலைவன் அடுத்த கோலைத் தடுக்காவிட்டால் குஞ்சை அறுத்துவிடுவேன் என மிரட்டியிருந்தான். தனக்கு நிகழப்போகும் கொடூரத்தை உருத்திரமூர்த்தியால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை. வெறிகொண்டு பந்தை பிடித்ததில் வலதுகால் கோல் தூணில் இடித்து எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. மாவுக்கட்டு ஏற்படுத்திய அசௌகரியத்திற்கு குஞ்சையே கொடுத்துவிட்டு வந்திருக்கலாம் எனப் புலம்பிக்கொண்டான். இரண்டு நாட்களுக்குப் பின் ஏற்படும் அறிப்பை சமாளிக்க ஒரு விளக்கமாற்றுக் குச்சியுடனே சுற்ற வேண்டியிருந்தது. அரிப்பு ஏற்படும் போதெல்லாம் விளக்கமாற்றுக்குச்சியை உள்ளே விட்டு குடைந்தால் இதமாக இருந்தது.

ஏறக்குறைய அக்காலக் கட்டத்திதான் அப்பா அவனை உருப்படாதவன் என அழைக்கத் தொடங்கியிருந்தார். அதிலும் குறிப்பாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அவனை அழைத்துச் செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு உரையாடலின் இறுதியிலும் உருப்படாதவன் என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொள்வார். ஒவ்வொருமுறையும் விடுமுறை எடுக்கும் போது அவர் முதலாளியிடம் பெறப்போகும் வசைகளை முன்னமே பல மடங்காக உருத்திரமூர்த்தியின் மேல் செலுத்தத் தொடங்கியிருந்தார். காலப்போக்கில் அப்பா அவனைத்திட்டுவது பெரிதாக பாதிக்காவிட்டாலும் உருப்படாதவன் என்ற வார்த்தை மட்டும் திகிலடையச் செய்தது. என்றாவது ஒருநாள் அது 'உருப்படாத உருத்திரமூர்த்தி' என அடைமொழியாய் இணைந்துகொண்டால் பின்னர் காலாகாலத்துக்கும் பிரித்தெடுப்பது சிரமம் என அறிந்திருந்தான்.

தலையில் கொட்டியது அக்காவென பார்க்காமலேயே அறிய முடிந்தது. பத்தொன்பது ஆண்டுகளாக வாங்கி கொண்டிருக்கும் கொட்டு என்பதால் அடையாளம் காண ஏதுவாக இருந்தது. நிதானாமாகத் திரும்பினான். 'இங்க என்ன பண்ணுற ?' என்றாள் . அக்காவின் குரல் கம்மியிருந்தது. அவள் குழந்தை இறந்த போது குரல் இவ்வாறு கம்மியிருந்ததாக அவனுக்கு ஞாபகம். 'உன்ன யாரு வரச்சொன்னா? வீட்ட பாத்துக்க வேண்டியதுதான!' என்றவள்... ஏதோ நினைவுக்கு வந்தவளாக 'சரி வந்துட்ட ... அண்ணனுக்கு ஹாஸ்பிட்டல் சாப்பாடு புடிக்கலயாம். போயி நாசி ஆயாம் வாங்கிட்டு வா' எனக்கூறி அவன் கைகளில் பணத்தைத் திணித்தாள். 'வாங்கத் தெரியுமுல்ல...' என சந்தேகத்தோடு அவள் பார்ப்பதைக் கண்டுக்கொள்ளாதவனாக அவன் நடக்கத்தொடங்கினான்.

கால்வலி இன்னும் குறைந்திருக்கவில்லை. முன்பு எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியில் நுணுகிய ஊசி குத்துவது போலவே இருந்தது. நாசி ஆயாம் கடை தொலைவில் இருந்தது. சாலையைக் கடக்க மேம்பாலம் எல்லாம் ஏறிச்செல்ல வேண்டும். அவன் கெட்ட நேரம் கடை அன்று அடைத்திருந்தது. நாசி ஆயாம் வாங்காமல் போனால் கடையை மூடியதற்கே தான்தான் காரணம் என குடும்பமே நின்று குற்றம் சாற்றுவது உறுதி. அக்கா கொடுத்த பணத்தை எண்ணினான். சரியாக நான்கு ரிங்கிட். நாசி ஆயாமுக்குக் கூட்டியும் குறைக்காமலும் மிகச் சரியாகக் கொடுத்திருந்தாள். காலையில் பேருந்துக்கு அழுதது போக மீதம் இரண்டு ரிங்கிட் அவன் பையில் இருந்தது. அருகில் இருக்கும் ஒரே பட்டணம் செந்தூள். பேருந்தில் போக வர ஒரு ரிங்கிட் செலவாகலாம். பின்னர் வீட்டுக்குத் திரும்பி போக பணம் இடிக்கும். நடந்து சென்றால் இருபது நிமிடங்களுக்குள் திரும்பிவிடலாம். உருத்திரமூர்த்தி யோசிக்காமல் நடக்கத் தொடங்கினான்.

நாசி ஆயாமை மடித்துக்கொடுத்த சீன சிறுமி ஐந்து ரிங்கிட் கேட்டவுடன் உருத்திரமூர்த்திக்கு தூக்கிவாரிப்போட்டது. 'அம்பாட் ரிங்கிட் சாஹாஜா ... புகான் ?' என்றான். கடைக்காரன், தான் நாசி ஆயாமில் அரை முட்டையைச் சேர்த்திருப்பதாகவும் அதனால் கூடுதலாக ஐந்து ரிங்கிட் என்றான். 'கேட்காததை இவனாகவே போட்டு காசை பிடுங்கிக் கொள்கிறான்' என முணுமுணுத்துக்கொண்டான் உருத்திரமூர்த்தி. 'முட்டையை நீயே திரும்ப எடுத்துக்கொள்' என சொல்லலாம் என்று தோன்றியது. அதை எப்படி மலாயில் முறையாகச் சொல்வதென யோசிக்கும் முன்பே பின்நிர்க்கும் வாடிக்கையாளர்கள் அவனை முந்திக்கொண்டு சென்றுவிட்டனர்.

ஒன்றும் பேசாமல் திரும்பி நடக்கும்போது மனம் சோர்ந்திருந்தது. முன் பின் அறியாத ஒரு சீனனால் கூட தன்னை எளிதில் ஏமாற்ற முடிவது அவமானமாக இருந்தது. 'எளிதில் ஏமாறும் முகம்' என பார்க்கும் மாத்திரத்திலேயே எல்லோர் கண்களிலும் தெரிகிறதோ என்னவோ என முனங்கிக் கொண்டான். சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட கார் கண்ணாடிகளில் தனது முகத்தை பார்த்தவாரே நடந்துகொண்டிருந்தான். அவ்வாறு நடப்பது பயண தூரத்தை மறக்கடித்திருந்தது. ஒவ்வொரு கண்ணாடிக்கும் ஒவ்வொரு பாணியில் முகத்தை மாற்றியமைத்துப் பார்த்தான். அதில் ஏதாவது ஒன்று தனது அறிவின் பிரகாசத்தை காட்டும் பட்சத்தில் அந்தக் கோணத்தையே வாழ்வு முழுதும் பயன்படுத்திக்கொள்வதென முடிவு. திடீரென அடித்த பிரேக்கும் ஹாரன் ஒலியும் அவனை ஒரு நிமிடம் நிறுத்தியது. 'லன்சாவ்... பூத்தாக்கா யூ...தரா குனாபுஞ்சா ஓராங்' சீனன் ஒருவன் கத்திவிட்டுப் போனபோதுதான் சாலையின் நடுவுக்கு வந்துவிட்டதை உணர்ந்தான். கை கால்கள் பதற்றம் எடுத்தது. முதலில் அவன் திட்டிய 'லன்சாவ்' என்ற கொச்சையைவிட 'தாரா குனா' என வைதது மனதில் மீண்டும் சோர்வை ஏற்படுத்தியது. 'உருப்படாதவனே...' என அப்பா கூறுவது மிக அருகில் கேட்டது. ஒரு நிமிட அதிர்ச்சியில் தான் பயிற்சி செய்து வைத்திருந்த முக பாவம் கலைந்துபோனதை உணர்ந்தான். அதற்குமேல் கார் கண்ணாடியில் முகத்தைப் பார்க்க வெறுப்பாய் இருந்தது.

அவன் வருகைக்காக அக்கா நெடுநேரம் காத்திருந்திருக்க வேண்டும். கட்டடத்தின் கீழ் தளத்தில் பொங்கியிருந்தார். 'வாங்கிட்டு வந்தியா... இல்ல நீயே சமைச்சி கொடுத்துட்டு வந்தியா ?' என கடுப்பாகக் கேட்டவர் கையில் இருந்த பொட்டலத்தைப் பிடுங்கிகொண்டு லிப்டுக்குள் புகுந்தார். உருத்திரமூர்த்திக்குத் தொடர்ந்து மேலே செல்வதற்கு மனமில்லாவிட்டாலும் வீட்டுக்குத் திரும்பிப் போக மேற்கொண்டு இரண்டு ரிங்கிட் தேவைப்பட்டதால் அண்ணனைப் பார்த்துவிட்டு அப்படியே அப்பாவிடமோ அக்காவிடமோ ஐந்து ரிங்கிட்டை கேட்கலாம் என நினைத்தான். மூன்று ரிங்கிட்டுக்கு ஏதாவது வாங்கி சாப்பிட்டுவிட்டு ஆறு மணிக்குள் பஸ் பிடித்தால் இருட்டுவதற்குள் போய்விடலாம். கம்பத்தில் திருட்டு தொல்லை ஜாஸ்தி. விளக்கைத் தட்டாமல் வந்துவிட்டதால் வீடு இருண்டு கிடக்கும். டோனி பயந்திருக்கலாம். அது திருடர்களுக்கு வசதியாகிவிடலாம் . இந்த நியாயத்தை அம்மாவிடம் சொன்னால் பத்து ரிங்கிட் கூட கிடைக்க வாய்ப்பு உண்டு. பாஸா கடைக்கு இன்னும் போகாமல் இருக்கும் அவரது பத்து பவுன் சங்கிலியைப் பாதுகாக்கவாவது அம்மா தன்னை விரைந்து அனுப்பிவைக்கலாம்.

கால்களை பிடித்துக்கொண்டிருக்கும் தசைகளை உருவி விட்டபடி ,மீண்டும் அண்ணன் இருந்த 4 - பி தளத்தை அடைந்து லிப்ட் கதவை திறந்த போது அப்பா கீழே இறங்க காத்திருந்தார். 'எங்கடா போற...' அப்பா கேட்டபோது லிப்டுக்கு உள்ளிருந்து பதில் சொல்வதா வெளியே வந்து விடுவதா என புரியவில்லை. அதற்குள் லிப்ட் கதவுகள் தானாகச் சாத்த எத்தணிக்க அப்பா விசையை அழுத்தி திறந்து 'வெளிய வாடா உருப்படாதவன...' என்றார். 'கீழ நேரா போனா ஒரு பொன்டோக் போலிஸ் இருக்கும். எக்ஸிடன்னு சொல்லு. ரிப்போட் எழுதிக்குவானுங்க. சரியா?' என்றார் முறைப்பாக. ஒழுங்காக இதையாவது செய்துவிட்டால் கொஞ்சம் உரிமையாகவே வீடு திரும்ப பணம் கேட்கலாம் என்று நினைத்தவன் 'சரி' என்றான். 'ஒலப்பி வச்சிடாத' என அப்பா சொல்லும்போது லிப்டின் கதவுகள் மூடியிருந்தது.

கீழ் தளத்தின் முன்புறமே அப்பா சொன்ன போலிஸ் கூண்டு இருந்தது. உள்ளே ஒரிரு மலாய் போலிஸ்காரர்கள் காரசாரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். உருத்திரமூர்த்தியைப் பார்த்தவுடன் பேச்சை நிறுத்தியவர்கள் தலையசைத்து என்னவென்று வினவினர். உருத்திரமூர்த்தி சுறுக்கமாக 'எக்ஸிடன்' என்றான். 'சியாப்பா?' இப்போது வேறொருவன். 'அபாங்'. 'சுடா மத்திக்கா?' போலிஸ்காரனிடம் மெல்லிய கிண்டல் இருந்தது. 'தரா' என பலமாக மறுத்தான். 'நொம்பொர் மோட்டோர் ?' அப்போதுதான் உருத்திரமூர்த்திக்கு வியர்த்தது. மோட்டாரின் எண்களை நினைவுக்குக் கொண்டுவரத் தொடங்கினான். அது பலவாராக வித்தைகள் காட்டவே அப்பாவிடம் கேட்டுவருவதாகச் சொல்லி மேலே ஏறினான். அவன் போகும் போது அண்ணன் கட்டிலில் இல்லை. கழிவறைக்கு அப்பா அழைத்துச் சென்றிருந்தார். அக்காவிடம் அண்ணனின் மோட்டார் எண்களைக் கேட்டவன் மீண்டும் கீழே வந்தான். அப்போது அவனுக்கு முன் வேறு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். தமிழர்தான். உருத்திரமூர்த்தியிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி அவ்விளைஞனிடமும் கேட்கப்பட்டது அவனுக்கு ஒருவகையில் ஆறுதலாக இருந்தது. தன்னை வைத்து போலிஸ்காரர்கள் விளையாடவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டான். தொடர்ந்து அவ்விளைஞனிடம் கேட்கப்படும் கேள்விகளைக் கவனித்தான். மோட்டாரின் வகை, விபத்துக்குள்ளான இடம் என அவை நீண்டிருந்தது. உருத்திரமூர்த்திக்கு மீண்டும் கண்கள் இருண்டன. தாமதமாகும் லிப்டுக்குக் காத்திருக்காமல் பதறியடித்து படியில் ஏறும் அவனை போலிஸ்காரர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

நான்காவது மாடியில் ஏறி இருகைகளாலும் தொடையைப் பிடித்தவன் பெரும் இழுப்பில் வாயால் ஒருதரம் சுவாசத்தை வெளியாக்கினான். வியர்வையில் சட்டை முதுகில் ஒட்டிக்கொண்டது. தொலைவில் அப்பா வருவது தெரிந்தது. 'முடிஞ்சதா ?' என புருவங்களை உயர்த்தினார். 'ரிப்போட் எங்க ? இன்னும் செய்யலயா? உங்கிட்ட கொடுத்த எதுதான் உருப்படியா வந்திருக்கு...' என்றவர் ஒரு உஷ்ணக் காற்றை அவன் மேல் படரவிட்டு லிப்டின் விசையைத் தட்டினார். காத்திருந்தது போல சட்டென திறந்தது.

உருத்திரமூர்த்திக்குக் கால்கள் கடுத்தன. கடவுளில் இருக்கையில் அமர்ந்தான். அமர்வதற்கு முன்னமே அவன் கால்கள் பலம் இழந்து பொத்தென அவன் பிட்டத்தை இறக்கியது. இப்போது அவனது தேவை இரண்டு ரிங்கிட். உணவெல்லாம் கூட வேண்டாம். வீட்டின் தனது இருண்ட அறையில் புகுந்துகொண்டால் ஒரு பாதுகாப்பு கிடைக்கும் போல தோன்றியது. இனி அக்காவிடம் கேட்கமுடியாது. அண்ணனைப் பார்க்கப் போனால் அப்பாவுக்கு இந்த வயதிலும் சுமையாகிவிட்டதாக அம்மாவுடன் சேர்ந்து திட்டத் தொடங்கலாம். பின்னர் அவர்களே காரில் ஏற்றிச் சென்றாலும் வழி நெடுகிலும் அர்ச்சனை ஓயாது. அக்காவுக்கு தனது வேர்வை வாடை தொடர்ந்து பீயை நினைவு படுத்திக் கொண்டிருக்கும். முற்றாக தன்னை அவமானப்படுத்தி நிராகரிப்பதில் அவர்கள் தற்காலிகமாக அண்ணன் ஏற்படுத்தியுள்ள துக்கத்திலிருந்து மீண்டுவர முயலலாம். கிள்ளான் வரை நடப்பது சாத்தியமா என நினைக்கும் போதே பயமாக இருந்தது. தனது எலும்பு முறிந்த காலை ஒருதரம் தடவிக்கொண்டான். எதிரில் இருந்த மூத்திரக்குடுவை எடுக்க முயலும் கைகள் மீண்டும் கண்களுக்குப் பட்டது.

அப்பா திரும்பிவரும்போது அவரை மீண்டும் எதிர்க்கொள்ள தைரியம் வரவில்லை. இன்றைக்கு போதுமான அளவு 'உருப்படாவன்' என்ற அர்ச்சனையைக் கேட்டாகிவிட்டது. உடனே அவ்விடத்தைவிட்டு அகல நினைத்தவனை இரண்டு ரிங்கிட் தடுத்துவைத்திருந்தது. தனது குடும்பத்தாரின் கண்களில் படாதவாறு அருகில் இருந்த அறையில் புகுந்தபோது மூத்திரக்குடுவையை எடுக்க முயன்றுகொண்டிருக்கும் பெரியவரின் தோற்றம் இம்முறை முழுமையாகக் கண்ணில் பட்டது. தாதிகள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது அறை. மூத்திரக்குடுவையைக் கையில் எடுத்தவன் அந்தப் பெரியவரின் போர்வையை விளக்கி வாகாகப் பிடித்துக்கொண்டான். அப்பா இன்னும் திரும்பியிருக்கவில்லை. கொஞ்ச நேரத்தின் குடுவை கனமானது. பெரியவரின் முகத்தில் ஏதோ மின்னுவது போல உணர்ந்து உற்றுப்பார்த்தான். கண்ணீர். அவர் உடல் மெல்ல அசைந்தது. அவரது வலது கரம் பக்கத்திலிருந்த மேசையில் எதையோ துளாவி எடுத்து அவனை நோக்கி நீட்டியது. முழு பத்து ரிங்கிட் நோட்டு. கசங்கலாக இருந்தது.

கிள்ளான் வரை நடப்பதை மீண்டும் கற்பனை செய்து பார்த்தான். அதிக தொலைவில்லை போல தோன்றியது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>