|
|
ஞானோபதேசம்
சுகநகரில் ஒரு நாள்
ஒவ்வொருவரும்
அடுத்தவன் தலை தொப்பிக்கு
அடித்துக்கொண்டனர்.
கதாநாயகர்கள்
கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள
மர்ம மடையர்கள் எல்லாம்
மந்திரங்களாலும் தந்திரங்களாலும்
சூழ்ச்சிகளாலும் வாய்ச் சவால்களாலும்
பூதாகரமாய் மேடையேறினர்.
"சிரி" என்றொருவன் சீண்டினால்
சிரிப்பாய் எல்லோரும் சிரித்தனர்.
"நட" என்றொருவன் வேண்டினால்
நடையோ நடையென...
கால்கள் விறைக்க
ஊர்க்கதைக்கும், சந்தேகங்களுக்கும்,
அடிமட்டத் தீர்மானங்களுக்கும்,
காதுகள் தொங்க
திமிர்நடை பழகினர்.
கோபாவேசக் கோமாளிகளின்
கம்பீரமான ஏமாளித்தனத்தை
கவனித்துக் கொண்டிருந்த
ஞானி,
"கேளுங்கள் தோழர்களே -
நீங்கள் நம்பவே கூடாத
பத்து கட்டளைகளை!" என்றான்.
சுகநகர்வாசிகள்
தரையில் விழுந்து
சொல்வதைக் கேட்டனர்:
ஒன்று - பாட்டன் காலத்து பெருமைகள்
இரண்டு - பாட்டி சுவாசித்த சம்பிரதாயங்கள்
மூன்று - தெருவில் கேட்ட ரகசியம்
நான்கு - புலவன் மேய்ந்த முதுமொழி
ஐந்து - நீ சுற்றிவிடும் சூதின் சக்கரம்
ஆறு - நீ பெற்றதாய் நினைக்கும் வெற்றி
ஏழு - உன் மூளையில் ஒழுகும் தத்துவம்
எட்டு - அனைவரும் பகிர்ந்து கொள்ளும் பொது அறிவு
ஒன்பது - நீ பெருமைப்படும் உனது மனசாட்சி
பத்து - இளம் பிராயத்து குருவும் அவனது விதிகளும்
உன்னைப்போல் என்னைப்போல்
அவனிடமும் முரண்பாடுகளுண்டு
உனக்குத் தெரியும்
செயலிலும்
விளைவிலும்
மட்டும் நம்பிக்கை வை.
|
|