|
|
தாராசுரம் : அழியும் உன்னதம்
கும்பகோணத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தாராசுரம்.
இரண்டாம் ராஜராஜன் காலத்தில் (கி.பி.12 ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்ட அழகிய
கோயில்தான் இந்த ஊரின் சிறப்பு. கட்டிடக் கலையின் சிறப்புக்கு
எடுத்துக்காட்டாகக் குறிப்பிடத்தக்க அந்தக் கோயிலுக்கு சிலநாட்களுக்கு
முன்னால் போயிருந்தேன். அந்தக் கோயிலின் கருவறைக்குமேல் உள்ள கோபுரத்தின்
வெளிப்புறம் முழுவதும் அருமையான வண்ணங்களைக்கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்
உள்ளன. கோயிலின் நுழைவாசலின் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறம் இருக்கும்
மண்டபத்தில் அண்மைக்காலத்தில் அங்கு புனரமைப்புப் பணிகள் செய்தபோது கிடைத்த
கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களைப் பார்வைக்கு வைத்துள்ளனர்.அந்த
மண்டபத்தின் சுவரிலும் ஓவியங்கள் உள்ளன.இந்த ஓவியங்கள் ஒரு ஆள் உயரத்துக்கு
கருவறை போன்று தோற்றமுடைய அமைப்பின் இரு புறங்களிலும் வரையப்பட்டுள்ளன. இதே
வண்ணங்களைக் கொண்டே விமானத்தின் வெளிப்புற ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிகழ்வின்போது அக்கோயிலில்
இருக்கும் ஓவியங்கள் யாவும் புகைப்படங்களாகத் தொகுக்கப்பட்டு அழகிய
முறையில் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. திருவாரூர் கோயிலில் இருக்கும்
முசுகொண்டசுவாமி ஓவியங்களை இஸ்ரேலைச் சேர்ந்த அறிஞர் டேவிட் ஷுல்மான்
அவர்கள் அற்புதமாகத் தொகுத்து அழகிய நூலாக வெளியிட்டிருக்கிறார் (The
Mucukunda Murals in the Tyagarajasvami Temple, Tiruvarur) திருவாரூர்
தியாகராஜ சுவாமி கோயிலில் தேவாசிரிய மண்டபத்தின் கூரையின் உள்புறத்தில்
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர்(17 ஆம் நூற்றாண்டு) வரையப்பட்ட ஓவியங்கள்
கால ஓட்டத்தில் சிதைந்துகொண்டிருந்த நேரத்தில் அவற்றைப் பாதுகாக்க டேவிட்
ஷுல்மன் அவர்கள் எடுத்த முன்முயற்சி நன்றிக்குரியது. எழுபத்தாறு வயதான
புகைப்படக் கலைஞர் வி.கே.ராஜாமணி அவர்களின் அற்புதமான புகைப்படங்கள்
இடம்பெற்றிருக்கும் இந்த நூலை சிறந்த முறையில் அச்சிட்டு
வெளிக்கொண்டுவந்திருக்கும் ப்ரகிருதி ஃபவுண்டேஷன் நிறுவனத்தையும் நாம்
பாராட்டவேண்டும். இப்படியொரு நூல் வெளிவந்திருப்பதை முதலில் எனக்கு திரு
க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள்தான் கவனப்படுத்தினார். அவர் மூலமாக உடனடியாக
ஒரு பிரதியை வாங்கினேன். அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் திருவாரூர்க்காரர்
என்பதால் அவருக்கு அந்த நூலின் ஒரு படியைத் தரலாமெனத் தோன்றியது. அவருக்கென
ஒரு பிரதியை வாங்கிச் சென்று தந்தபோது ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த
ஓவியங்களைப் பார்த்தார். அவற்றைப் பற்றி விவரிக்கவும் செய்தார். அந்த
நூலைத் தமிழில் கொண்டுவரலாமென நான் சொன்ன யோசனையையும் வரவேற்றார். இப்போது
அரசு சார்பில் அந்த முயற்சியை மேற்கொள்ளமுடியாது. ஆங்கிலத்தில்
வெளியிட்டிருப்பவர்களே அதைத் தமிழிலும் கொண்டுவந்தால் நன்றாக
இருக்கும்.டேவிட் ஷுல்மன் அவர்கள் சொன்னால் க்ரியா பதிப்பகமேகூட அதை
வெளியிடலாம். அதைப்போல இந்தக் கோயிலின் ஓவியங்களையும் நூலாக்கவேண்டும்.
அதைப்போல தாராசுரம் கோயிலில் இருக்கும் இந்த ஓவியங்கள் அனைத்தையும்
தொகுத்து நூலாக்கினால் சிறப்பாக இருக்கும்.
தாராசுரம் கோயில் ஓவியங்கள் நிறைந்ததாக மட்டுமின்றி அழகிய சிற்பங்களின்
உறைவிடமாகவும் இருக்கிறது. விதம் விதமான சிற்பங்கள் மிகவும் கலை நயத்தோடு
செதுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டிய வகைகள் மற்றும் முத்திரைகளைக் காட்டும்
சிற்பங்கள் மட்டுமல்லாது அபூர்வமான சில விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளைச்
சித்திரிக்கும் சிற்பங்களும் அங்கே உள்ளன.
கர்ப்பிணிப் பெண் ஒருத்திக்கு சில பெண்கள் மகப்பேறு பார்க்கும் காட்சி
அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது. குழந்தை பெறும் பெண் நின்றுகொண்டே
குழந்தையைப் பெறுவதுபோல இந்த சிற்பத்தில் செதுக்கியுள்ளனர். பண்டையத்
தமிழகத்தில் தமிழ்ப் பெண்கள் நின்ற நிலையில்தான் பிரசவித்தார்களா?
அதற்கெனப் பிரத்தியேகமான காரணங்கள் எதுவும் உண்டா? என்று எனக்குச்
சந்தேகம்.இதுகுறித்து நான் ’தமிழ்மன்றம்’ என்ற மின்குழுமத்தில்
எழுதினேன்.அமெரிக்காவில் வாழும் தமிழ் அறிஞர் வி.எஸ்.ராஜம் அவர்கள் அதற்கு
உடனடியாகப் பதில் எழுதினார்:” மகப்பேற்றுக் காலத்தில் அந்தக் காலப் பெண்கள்
படுத்திருந்தார்களா அல்லது நின்றிருந்தார்களா என்று யாரும் திட்டமாகச்
சொல்லவில்லை.தொல்காப்பிய உரையில் "அரசி பொறையுயிர்த்த கட்டிலின் கீழ்"
என்று காணப்படுகிறது. அதை வைத்து மகப்பேற்றுக் காலத்தில் அந்தக் காலப்
பெண்கள் கட்டிலில் படுத்திருந்தனர் என்றும் சொல்கிறார்கள். ("வயலில் வேலை
செய்த உழத்தியர் கட்டிலுக்கு எங்கே போனார்கள்?" என்று என் மனம்
கேட்கிறது.) எது உண்மை?” என்று அவர் எழுதியிருந்தார்.
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் டாக்டர்
நாச்சிமுத்து,” நின்ற நிலையில் பிள்ளைப்பேறு காட்டும் சிற்பங்களை நானும்
தொல்பொருள் அறிஞர் வேதாசலம் அவர்களும் திருசெந்தூர்- தூத்துக்குடி வழியில்
உள்ள ஆற்றூர் (ஆத்தூர்) சோமநாதர் கோயிலில் கண்டிருக்கிறோம் .அப்போது அவர்
பல கோயில்களிலும் அது உள்ளதாகவும் அது அன்றைய பிள்ளைபெறும் முறை என்றும்
சொன்ன நினைவு. நம் மருத்துவ நூல்களில் குறிப்புக்கள் காணக்கூடும்.” என்று
பதிலளித்திருந்தார்.
தமிழ்நாட்டின் மருத்துவ வரலாறு குறித்து யாரேனும் ஆய்வு
செய்திருக்கிறார்களா தெரியவில்லை. சித்த மருத்துவத்துக்குப் பெயர்போன
தமிழகம் தனது அறிவு வளங்களைப் பாதுகாக்கும் திறனின்றி எல்லாவற்றையும்
தொலைத்துவிட்டுக் கைபிசைந்து நிற்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்
சென்னையில் புகழ்பெற்ற சித்த மருத்துவராக அனைவராலும் அறியப்பட்டிருந்தவர்
அயோத்திதாசப் பண்டிதர். அவரது மருத்துவத் திறமைகுறித்து தமிழறிஞர்
திரு.வி.க தனது தன்வரலாற்றில் எழுதியிருக்கிறார்.சித்த மருத்துவம் குறித்து
ஏராளமாக எழுதியது மட்டுமின்றி அரிய மருத்துவ நூல்கள் பலவற்றைப்
பதிப்பித்தவர் அயோத்திதாசர். 1998 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி
முதன்முதலாக இந்தியாவின் மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பைப்
பெற்றது. அப்போது ‘தலித்’ எழில்மலை மத்திய சுகாதார அமைச்சராகப்
பொறுப்பேற்றார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நானும் சில நண்பர்களுமாக
முயற்சி எடுத்து சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை சென்னை, தாம்பரம்
பகுதியில் அமைப்பதற்கு தலித் எழில்மலை அவர்களை வற்புறுத்தினோம். அவரும்
இசைவு தந்தார். அந்த நிறுவனத்துக்கு அயோத்திதாசப் பண்டிதர் பெயரை
வைக்கவேண்டும் என நான் தெரிவித்த யோசனையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர்தான் அந்த ஆராய்ச்சி மையத்துக்கு
அடிக்கல் நாட்டினார். ஆனால் அந்நிறுவனம் அயோத்திதாசர் பெயரில் அமைவதை அவர்
அப்போது விரும்பவில்லை. எனவே அந்தப் பெயரை அந்த விழாவில் அவர்
சொல்லவுமில்லை. ஓராண்டுகூட அமைச்சர் பதவியில் எழில்மலை நீடிக்கவில்லை.
ஆட்சி கலைந்து தேர்தல் வந்துவிட்டது. அவர் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து
வெளியேறிவிட்டார். பின்னர் சிலகாலம் கழித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் அதே
சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றபோது தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி
மையம் கட்டி முடிக்கப்பட்டுத் திறப்புவிழா காணத் தயாராக இருந்தது. ஆனால்
அயோத்திதாசர் பெயர்தான் அங்கு இல்லை. அதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளும்
போராட்டங்களும் தனிக் கதை. இப்போது அந்த ஆராய்ச்சி மையத்தில் இருக்கும்
மருத்துவமனைக்கு மட்டும் அயோத்திதாசர் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஓவியர்
சந்ரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட அயோத்திதாசரின் மார்பளவு சிலை ஒன்றும்
அந்த வளாகத்துள் அமைக்கப்பட்டிருக்கிறது.
சித்த மருத்துவம் புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணங்கள் பல. அவற்றுள்
முக்கியமான ஒன்று அந்த மருத்துவத்தைக் கையாண்டவர்களுக்குத் தமிழ்ச்
சமூகத்தில் இருந்த இடம். அவர்கள் இழிவாகப் பார்க்கப்பட்ட காரணத்தால்தான்
அந்த மருத்துவமும் மதிக்கப்படவில்லை. அந்த மனோபாவம் இன்றளவும் தொடர்கிறது
என்பதைத்தான் மேலே நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் நிகழ்வும்
புலப்படுத்துகிறது.
|
|