|
|
பழி
என்னுடைய திருமணம் பஹாய் சமயப்படி எளிமையாக நடந்த
பதிவு திருமணம். ஆர்ப்பாட்டங்கள் சடங்குகள் இன்றி அழகான திருமணம். திருமணம்
நடந்த ஐந்தாவது நாளே தலைநகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு
வீடுப் பார்த்து குடித்தனம் வந்தோம். நல்ல நேரம் ராகுகாலம் என்று எதற்கும்
நேரத்தை பார்க்காத எங்களுக்கு எல்லாமும் நல்ல நேரமாகவும் நல்ல காலமுமாகவே
இருந்தது.
எங்களின் வாழ்க்கைக்கு தேவையான எல்லா முடிவுகளையும் நானும் சந்துருவும்
மட்டுமே நிர்ணயித்தோம். எங்களை பெரியவர்கள் ஆதரித்தார்களே தவிர
மறுக்கவில்லை. தடைகள் வரும் என நினைத்த எதுவும் அதுவாகவே கடந்து போனது.
அதுவே வாழ்வைப் பிடிப்பதற்கு ஒரு வலுவை என்னுள் ஏற்படுத்தியது.
ஒருமையில் வாழும் போது ஏற்படாத சில குடும்ப தேவைகள் திருமண வாழ்க்கையிலும்
எங்களுக்கு ஏற்பட்டது. எங்களுடையத் தேவைகள் நாளுக்கு நாள் பெருக பொருளாதார
போதாமை ஏற்பட்டது. எந்த ஒரு வசதியும் இல்லாத பட்சத்தில் நம்பிக்கையும்
செய்துக்கொண்டிருந்த தொழிலும்தான் துணையாக இருந்தன. இந்நிலையில்தான்
நாட்டின் பணவீழ்ச்சியின் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டு
தொழிலாளர்களையும் வேலை நிறுத்தம் செய்தது. எங்கும் வேலை நிறுத்தம்
நடந்துக்கொண்டிருக்க எனக்கும் வேலை பறிபோனது. வாழ்வு குறித்த கேள்விகள்
சட்டென தொற்றிக்கொண்டன.
குறைந்தது இரண்டு மாதம் எங்கெங்கோ வேலைத் தேடிக்கொண்டிருந்தேன்.
பணப்பற்றாக்குறை எனக்கு மன உளைசலை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்து
விட்டது. முன்பு நான் தனியாள். என் தேவைகளை யார் மீதும் திணிக்காமல்
பார்த்துக்கொண்டேன். இப்போது சந்துருவுக்குப் பாரமாகி விட்டோமே என்று
உள்மனதின் உறுத்தல் ஆரம்பமானது. ஆனால் சந்துரு மிகவும் நிதானமானவர்.
எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அவரிடம் உண்டு. என்னை
ஆசுவாசப்பப்படுத்த ஏதாவது சொல்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
'நம்மிடம் எதுவுமே இல்லை. ஆனால் எல்லாம் இங்கே இருக்கிறது. உன்னுடைய கண்களை
திறந்து பார்' என்பார். 'பசிக்கு உணவு, இருப்பதற்கு அமைதியான வீடு, உனக்கு
பிடித்த நான். எல்லாமே இங்கே உண்டு. நாம் சௌகரியமாகதான் வாழ்கிறோம். நீதான்
இங்கே இல்லை' என்பார். இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா என்று ஊதி
தள்ளிவிடுவார். எனக்கு சுயகௌரவம் ஜாஸ்தி என்று தாமதித்துதான் அவர்
புரிந்துகொண்டார்.
எனக்கு அவசரமாக ஒரு வேலை தேவைப்பட்டது. தொடர் முயற்சியின் பயனாக 'கிராண்ட்
சீசன்' நான்கு நட்சத்திர தங்கும் விடுதியில் எனக்கு வேலை கிடைத்தது.
மீண்டும் ஒரு புதிய வேலைக்குப் பயிற்சி ஆரம்பமானது. வேலை என்றாலே எனக்கு
தனி உற்சாகம் பிறந்து விடும். எனக்கு snooker விளையாட்டு அறையில் காசாளராக
வேலை கிடத்தது. அந்த இடம் உணவுசாலை மற்றும் கராவ்கே (karaoke) இணைப்பும்
கொஞ்சம் அகலமான அமைப்பையும் கொண்டதுதான். 19 பிரமாண்டமான மேஜைகளை
கடந்துதான் கணக்கருக்கான தனி இடம் இருந்தது. இதுவரைக்கும் இந்தியர்கள்
யாரும் அங்கே வேலை செய்ததில்லையாம். முதல் ஆள் நான்தான் என்ற பதிவு
இன்றளவும் நீடிக்கிறது.
கணக்கர் வேலையைப் பயின்ற விதம் மிகவும் சுவாரஸ்யமானது. தினமும் பல
ஆயிரங்கள் கைமாறுவதும் அதை எண்ணுவதும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.
சுவர்போல் நீண்டு வளைந்திருக்கும் தடுப்பு மேஜையைத் தவிர பாதுகாப்புக்கு
ஒன்றும் இல்லை. திருடன் வந்தால் என்ன செய்வது? வருபவன் சும்மாவா வருவான்?
துப்பாக்கி கொண்டு வருவானோ, வெட்டுக்கத்தி கொண்டு வருவானோ? யாருக்குத்
தெரியும்? பணத்தையெல்லாம் கொள்ளையடித்துப் போய் விட்டால் அதற்கு யார்
பொறுப்பேர்ப்பது. அங்கேயே என்னை கொன்றுவிட்டால்... என் உயிர் அங்கேயா
போகனும் என்ற அர்த்தமற்ற கனவெல்லாம் வந்துக்கொண்டே இருந்தது.
இதில் நகைச்சுவை என்னவென்றால் ஒவ்வொருமுறை பணத்தை எண்ணும் போதும் திருடனின்
பயம் வந்து கற்பனைகளும் வளர்ந்து விடும். விரல்கள் பணத்தை
எண்ணிக்கொண்டிருக்க நான் திருடனைக் குறித்து எண்ணிக் கணக்கை தவற
விட்டிருப்பேன். சாதாரண கூட்டல் கழித்தல் கணக்குக்குக்கூட கணிப்பானின் உதவி
தேவைப்பட்டது. பணம் என் மீது ஏற்படுத்திய பயத்தை அத்தனை சுலபமாக விவரித்து
விடமுடியாது. அது வன்கலவியைவிட கொடூரமாகவும் கொலையைவிட பயங்கரமாகவும்
இருந்தது. கட்டுக்கட்டாக பணத்தை வாடிக்கையாளர்கள் இழக்கும் போதும் அதை
வாங்கி எண்ணும்போதும் கைகள் நடுங்கும்.
எனக்கு பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகி ஒரு சீனத்தி. நல்ல பயிற்சியாளர்.
பணத்தை எண்ணும்போது எனக்கு ஏற்படும் பீதியை அவர் பார்த்து விட்டார்.
விசாரிக்கவும் செய்தார். எனக்கு என்னை மறைக்க தெரியவில்லை. இந்தப் பணங்கள்
என்னை பயமுறுத்துகின்றன என்றேன். இங்கே வேலை செய்வதற்கான தகுதி எனக்கு
உண்டா என்ற சந்தேகம் வந்துகொண்டே இருப்பதாகச் சொன்னேன். இதற்கு முன் வேலை
செய்த நிர்வாகங்களில் நான் இப்படி ஒரு வார்த்தையை சொன்னதே இல்லை.
தலைமை நிர்வாகி சிரித்துக்கொண்டே ஐம்பது ரிங்கிட் கட்டு ஒன்றை எடுத்து
வந்தார். இது என்ன என்றார்? பணம் என்றேன். அவர் இல்லை என்றார். இது
காகிதம். அச்சடித்த காகிதம். கிழிந்தும் போகக்கூடிய காகிதம். இதை பார்த்து
நீ பயப்பட என்ன காரணம் என்றார். நான் பரிதாபங்களை ஒன்று திரட்டி
பார்த்தேன். தவிரவும் இந்தக் காகிதங்கள் உன்னுடையதும் அல்ல. பிறகு ஏன்
பயப்பட வேண்டும். அன்றாடம் உன் கைக்கு வரும் காகிதங்களை எண்ணி அலுவலகத்தில்
ஒப்படைக்க எதற்கு நடுக்கம் என்றார். எதுவும் சொல்வதற்கு எனக்கு வாயே
வரவில்லை.
புளியங்கொட்டையை உபயோகித்தது உண்டா என்றார். பல்லாங்குழி விளையாடும் போது
உபயோகித்தது உண்டு. ஆரம்ப பள்ளியில் கணக்கு பாடம் பயில்வதற்கு
உபயோகித்திருக்கேன் என்றேன். இந்தப் பணங்களும் அந்தப் புளியங்கொட்டைக்குச்
சமமானவைதான் என்றார். ஒரு காலி டப்பாவில் பத்திரமாகச் சேகரித்த
புளியங்கொட்டைதான் இப்போ காகிதமாகக் கல்லாவில் இருப்பதாக நினைத்துக்கொள்.
அதை நேர்மையாகக் கையாள வேண்டும். 100 புளியங்கொட்டையில் ஒன்று குறைந்தாலும்
அல்லது தொலைந்தாலும் அதை ஈடு செய்வதற்கான பொறுப்பு பொறுப்பில்
இருப்பவர்களுடையது. ஆகவே எண்ணமும் கவனமும் புளியங்கொட்டையின் மீதுதான்
இருக்கனுமே தவிர அது எப்போது பறிபோகும் என்று இருக்க கூடாது. நம்முடைய
எண்ணம்தான் நடப்பதற்கு எல்லாம் காரணம் என்றார்.
சீனர்களுடைய நம்பிக்கை கண்மூடித்தனமானதாகச் சில சமயம் தெரிந்தாலும் அதில்
எதார்த்தமும் உண்மையும் இருப்பது எனக்கு தலைமையில் இருந்து ஒருவர் சொன்ன
போதுதான் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
நான் இரண்டு வாரத்தில் முழு வேலையையும் கற்றுக்கொண்டேன். மூன்றாவது
மாதத்திலேயே சம்பள உயர்வும் கிடைத்தது. என்னுள் நல்ல திறமை இருக்கிறது
என்று என் தலைமை நிர்வாகி என்னைப் பாராட்டினார். என்னை மனதார பாராட்டிய
அவரால்தான் ஒரு வருடத்திற்குப் பிறகு திருடி என பழி சுமத்தப்பட்டேன்.
"திருட்டு வேலைக்கு இங்கு இடமில்லை. நீ வேலையை நிறுத்திக்கொள்ளலாம்" என
அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் குறையாத கசப்பை நினைவு படுத்துகிறது.
ஒரு திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு snooker விளையாடியவன் ஏழு ரிங்கிட்
கட்டணம் செலுத்தி போய்விட்டான். திங்கட்கிழமை என்னுடைய விடுமுறை.
செவ்வாய்க்கிழமை வழக்கம் போல வேலைக்கு வந்து மூன்று மணிக்கு வீட்டுக்கும்
போய்விட்டேன். அந்த நேரத்தில் பணியில் இருந்த என் தலைமை நிர்வாகியிடம்
திங்கட்கிழமை snooker விளையாடியவன், காலையில்தான் பணம் செழுத்தியதற்கு
ரசீது பெறவில்லை. ரசீது வேண்டும் என்று கேட்டுள்ளான். எனது நிர்வாகி
என்னுடைய பணிநேரத்தில் இருந்த அத்தனை ரசீதுகளையும் பரிசோதித்திருக்கிறார்.
அவன் சொன்ன அந்த நேரத்தில் அந்த மேஜையில் அந்தக் கட்டணம் இல்லாததால்
வாடிக்கையாளனை ஏதோ சமாதானம் செய்து அனுப்பி விட்டு என் மீது சந்தேகப்பட்டு
விட்டார்.
நேரத்தை சொன்ன அவன், எந்த நாள் என்று சொல்லவில்லை. தீர விசாரிக்காமல்
மறுநாள் என் மீது பழி சுமத்தப்பட்டது. திருடிப்பட்டம். காலை ஏழு மணிமுதல்
மதியம் வரை ஒரு வாடிக்கையாளனும் அங்கு வரவில்லை என நான் சத்தியமே செய்தேன்.
அதை மதிக்கவோ விசாரிக்கவோ என் பேச்சை கேட்கவோ யாருக்குமே பொறுமை இல்லை.
திருடனின் பேச்சு எந்த இடத்தில் எடுபடும். எந்தச் சாட்சியும் இல்லாமல் நான்
செய்யவில்லை, என்று எத்தனை முறை சொன்னாலும் எப்படி உண்மையாகும். நான்
யாரைப்பார்த்தாலும் யார் என்னைப் பார்த்தாலும் ஒரு குற்றவாளிக் கொள்ளும்
குற்ற உணர்வு என்னுள் ஏற்பட்டது. அழுது அழுது எதைத்தான் நிரூபிக்க
முடியும். பல ஆயிரங்களைப் பத்திரப்படுத்தி கணக்கை காட்டிய நான் ஏழு
ரிங்கிட்டில் திருடியாகி நின்றேன். ஏழு ரிங்கிட் பிரச்சனையில் ஏழரை நாட்டு
சனி பிடித்தது.
யாருமே மறுநாள் நான் வேலைக்கு வருவேன் என்று எண்ணவில்லை. நான் தப்பு
செய்யவில்லை என்று எனக்கு தெரியும். அதை நிரூபிக்க வேண்டியது என் கடமையாக
முன்வந்து நின்றது. தமிழ் பெண் ஒருத்தி வேலைக்கு வந்தாள். அவள் ஒரு திருடி.
நிர்வாகம் அவளை உடனே வேலை நீக்கம் செய்து விட்டது என்ற வரலாற்றை
கொடுப்பதற்காகவா அங்கே வேலைக்கு போனேன். விசாரணையில் நானே இறங்கினேன்.
முதலில் அந்த வாடிக்கையாளர் யார் என்பதை கேட்டு தெரிந்துகொண்டேன். ஒரு
ராஜினாமா கடிதத்தையும் எழுதி என்னுடைய சட்டைபையில் வைத்துக்கொண்டேன். நான்
குற்றமற்றவள் என்று நிரூபித்த பின் இந்த வேலைக்கே முடிவு கட்டுவேன்
என்பதுதான் எனது தீர்மானம்.
ஐந்து நாட்கள் கழித்து அந்த வாடிக்கையாளனை சந்தித்தேன். என் கண்ணுக்கு
தெய்வமாகவே அவன் தெரிந்தான். ஐந்து நாட்களாக நான் பட்ட வேதனைக்கும் இந்த
வேலைக்கும் ஒரு முடிவு வரப்போகிறது. எதை சுமப்பதைக் காட்டிலும் பழியைச்
சுமப்பது அத்தனை கனமாக இருந்தது. அவனை அழைத்துக்கொண்டுப் போய் அலுவலகத்தில்
விசாரிக்கச் சொன்னேன். பிறகு நானே அவனை விசாரித்தேன். மிளகாயை
கடித்திருக்கும் எனக்குதானே காரமும் தெரியும். விசாரணையில் என் மீது தவறு
இல்லை என்பது நிரூபணமானது. துளியும் தாமதிக்காமல் எனது தலைமை நிர்வாகி
என்னிடம் மன்னிப்பு கேட்டார். நிமிஷம் பெறாத சுலபமான ஒரு மன்னிப்பு. அது
யாருக்கு வேண்டும். நான் அனுபவித்த தாங்க முடியாத மன உளைசலுக்கு அந்த
மன்னிப்பு ஈடு செய்யுமா? நான் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். என் குரல்
உயர்ந்தது. இந்த அலுவலகத்தில் வேலை செய்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை
என்றேன். சொல்லி முடிப்பதற்குள் கண்களில் நீர் வந்து விட்டது. அடச்சீ! என்ன
இது. அன்று பழி போட்டு விட்டார்களே என்று கோபத்தில் அழுகை, இன்று அதை இல்லை
என்று நிருபித்த பின்னும் அழுகை. கண்களில் எந்த மூலையில் கண்ணீர் தொட்டி
உள்ளதோ? மூளை சொல்வதற்குள் கண்ணீர் தொட்டி உடைந்து வழிந்து என் மானத்தை
வாங்கி விடுகிறது.
"முழுமையான மனிதன் என்று யாரும் இல்லை. தப்பு செய்வதும் தவறு இழைப்பதும்
மனிதனின் பிறவி குணம். எங்களுக்கு இது ஒரு பாடம். இனி இப்படி ஒரு சம்பவம்
நடக்காது. இங்கே வேலை செய்வதற்கு உனக்கு எல்லா தகுதியும் உண்டு" என்று தன்
தவற்றை என் தலைமை நிர்வாகி ஒப்புக்கொண்டார். என் கைகளைப் பிடித்துக்கொண்டு,
பிறகு என்னை அணைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டார். அந்த
ஆண்டிற்கான சிறந்த ஊழியர் என்று எனக்கு நூறு ரிங்கிட் பரிசு கிடைத்தது.
இப்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிர்வாகத்தில் வேலை
செய்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வேலை இடத்திலும் வெவ்வேறான கருப்பு
நாட்கள் எல்லா பெண்களுக்கும் இருக்கும் போலிருக்கு. அதை அறிய கூடுதலான
கண்கள் பெண்களுக்குத் தேவைப்படுகிறது.
|
|