முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 38
பிப்ரவரி 2012

  ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 3
கே. பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

‘இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்’

கருணாகரன்



வல்லினம் பதிப்பக நூல்கள்: எழுத்தாளர்களுடனான நேர்காணல்


உண்மைகள் மட்டுமே என் புத்தகத்துக்கான தரவுகள்
யோகி

சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்
கே. பாலமுருகன்

நல்ல கவிதைகளில் வார்த்தைகள் ஆடைகள் மட்டும்தான்
ரேணுகா



கட்டுரை:

நாடு திரும்பாத கடைசி கம்யூனிஸ்ட் (ஆவணப்படம்) - அமிர் முகமாட் (மலேசியா)
கே. பாலமுருகன்

வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'
ஷம்மிக்கா



வல்லினம் கலை, இலக்கிய விழா 4:

கலை இலக்கிய விழா 4 : இன்னொரு தொடக்கம்
ம. நவீன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...28

ராஜா

சின்னப்பயல்

துரோணா

ந. பெரியசாமி

ஸ்ரீவிஜி

தப்புக்கணக்கு: டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா அவர்கள் ஈழத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மல்லிகை இலக்கிய இதழின் ஆசிரியர். யுகமாயினி ஆசிரியர் சித்தன் மூலமே எனக்கு டொமினிக் ஜீவா அறிமுகமானார். மேலும் ஈழ இலக்கியச் சூழலில் பல காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த இலக்கியவாதியும் கூட. தப்புக் கணக்கு எனும் அவருடைய சிறுகதையை ஈழத் தலித் சிறுகதை தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. தலித் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு சொல்லாடல் அவரிடம் நிரம்பியிருப்பதை உணர முடிந்தது. ‘மல்லிகை’ இதழில் மூலம் ஈழ இலக்கியத்திற்கான ஒரு படைப்பிலக்கியக் குரலை முன்னெடுக்கும் ஒரு களத்தை அமைத்துக்கொடுத்துச் செயலாற்றிக்கொண்டிருக்கும் ஈழக் கதைச்சொல்லி டொமினிக் ஜீவா.

தப்புக்கணக்கு - ஒடுக்கப்பட்டவனின் குரல்

இச்சிறுகதை என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. கதையில் வரும் சிறுவனின் ஆழ்மனதைச் சென்றடையக்கூடிய சாத்தியம் உருவானது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நானும் தப்புக்கணக்குக் கதையில் வரும் சிறுவனைப் போல வகுப்பறையில் நடத்தப்பட்டிருக்கிறேன். அவனைப் போல பல மாணவர்கள் ஓரங்கட்டப்படுவதைக் கவனித்திருக்கிறேன். தமிழ்ப்பள்ளி ஆசிரியனான என்னால் கதையுடன் என்னை அடையாளம்காண முடிகிறது. ஒரு வகுப்பறை சூழலில் கதைநாயகனாகத் தன்னை உணர வேண்டிய மாணவர்களின் மனமும் உடலும் வதைக்கும் புண்படுதலுக்கும் ஆளாகி சிதைந்து விடுகின்றன. ஆசிரியர்களின் முன் அடையும் தோல்வி அவனை அவமானத்திற்குள்ளாக்கி மௌனமாக்கிவிடுகிறது. காலம் முழுக்க மௌனமாக ஓர் மூலையில் தன்னைத் தானே ஒடுக்கிக்கொண்டு பள்ளியைவிட்டு வெளியேறிய மாணவர்களின் நிலை என்ன? வாழ்வின் அடுத்த கட்டம் அவர்களை எங்குக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கும்?

தப்புக்கணக்கு சிறுகதையில் கதையாசிரியர் அறிமுகப்படுத்தும் அந்தச் சிறுவன் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். கதை முழுக்க ஒரு வகுப்பறையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசியலையும் அதில் சிக்கிக்கொண்ட ஒரு தலித் மாணவனின் மன உணர்வுகளையும் பதிவு செய்கிறது. சாதிய சமூகத்தால் ஒடுக்கப்பட்டவனின் ஓர் அந்தரங்கமான குரலைக் கதைக்குள்ளிருந்து நுகர முடிகிறது. கதைகள் அந்த நிலப்பபரப்பில் வாழும் மனிதர்களின் குரலைச் சேமித்து வைத்திருக்கும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். எந்தச் சமூகத்தின் பின்னணியாக இருந்தாலும் அச்சமூகத்தின் நேர்மையான குரலைப் பதிவு செய்வதன் மூலம் ஒரு சிறுகதை வெற்றியடையக்கூடும். டொமினிக் ஜீவாவின் இக்கதை மொழிநடையிலும் உத்தியிலும் மிகச்சாதரணமாக அமைந்திருப்பினும், கதையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் நேர்மையான குரலை அவர் சேகரித்துள்ள விதம் மனதைச் சட்டென வந்தடைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வகுப்பில் தனிமைப்பட்டுக்கிடக்கும் அச்சிறுவன் கதையின் ஊடாக பேசிக்கொண்டிருக்கிறான். வகுப்பறையிலுள்ள யேசுநாதரின் படம், அதன் கீழுள்ள வாசகம், அதனைப் பற்றி ஆசிரியர்கள் சொன்ன கருத்துகள், அதையும் மீறி அந்த ஓவியத்தின் மீது அவன் கொள்ளும் விருப்பம் எனக் கதைச்சொல்லி விவரித்துக் கொண்டே செல்கிறான். தனிமையும் புறக்கணிப்பும் வார்த்தைகளைச் சேமித்து தனக்குத் தானே உரையாடும் பழக்கத்திற்கு ஆளாக்கும். அப்படி ஏதும் நிகழ்வில்லையென்றால் அது மனப்பிரச்சனையை உருவாக்கிவிடும் என நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் தனிமையில் தினசரிகளைச் சந்திக்கும் தலித் மாணவனான அவன் வகுப்பறைக்குள் அவனுக்கான ஓர் உலகத்தில் வாழ்ந்துகொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறான்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் மேல்தட்டு மாணவர்களையும் பணக்கார மாணவர்களையும் தனியான சலுகைகளுடன் கவனிப்பதைக் கண்டு மனம் நோகின்றான். இது தலித் மாணவர்களுக்குக் கிடைத்த சாபம். கல்வி அவர்களுக்கு வழங்கப்படும் ஒன்றாக இல்லாமல் ஏதோ கடமைக்காகத் தரப்படும் ஒன்றாகப் பாவிக்கப்படுகிறது. வகுப்பில் ஆசிரியர்கள் பாராபட்சமாக நடந்துகொள்ளும் விதம் கல்வி அமைப்பின் மீதான சந்தேகங்களாகவும் கேள்விகளாகவும் எழுகின்றன. ஓர் ஆசிரியர் எந்த வகையிலும் மாணவர்களின் பொருளாதார பின்புலத்தையும் பெற்றோர்களின் செல்வாக்கையும் பயன்படுத்தி இலாப அடைய நினைப்பது பெரும் குற்றமாகும். இக்கதையில் வரும் ஆசிரியர் தலித் மாணவனான அச்சிறுவன் மீது காட்டும் அவமாரியாதையும் வெறுப்புணர்வும் எப்படி ஈழத்தில் கல்வியும் ஓர் அதிகாரமாகச் செயல்படுகிறது என்பதை உணர முடிகிறது.

மேலும், சிறுவனின் ஆசிரியர் பிற உயர்த்தர மாணவர்களின் மீது காட்டும் தனி கவனத்தையும் சலுகைகளையும் அவன் முன் வைத்தே காட்டி வெறுப்பேற்ற முயல்கிறார். அதன் மூலம் அவன் ஆசிரியர் மீது நேசமற்றுப் போகிறான். மேரி மாதாவை நேசிக்க முடிந்த அளவிற்கு அவனால் தன் வகுப்பாசிரியரை நேசிக்க முடியாமல் போனதன் தோல்வியை ஒப்புக்கொள்கிறான். இது போன்ற வெறுப்பேற்றும் செயல்களின் வழியாக மீண்டும் மீண்டும் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் என்ற சாதிய உணர்வை விதைக்கவே முற்படுகிறார்கள். கல்வியின் வழியாக அவர்களின் சாதி சார்ந்த அறிவையும் தகவலையும் இப்படிப் பல இடங்களில் தலித் மாணவர்களுக்குள் வலிந்து புகுத்தப்படுகின்றன. சாதி இழிவு பற்றிய பிரக்ஞை ஒரு பாடமாக வகுப்பறை சூழலில் மறைமுகமாகத் திணிக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் தலித் மாணவர்கள் பார்க்கும்படியே மேல்தட்டு மாணவர்களுக்குச் சிறப்பு சலுகைகளை அளித்து அவர்களைக் கொண்டாடுவது ஆகும்.

சிறப்பு சலுகை என்கிற இனவாத நோய்

சிறப்பு சலுகை என்றதும் என் மனம் படப்படக்கிறது. ஓர் இனத்துக்கு கேள்விக்குட்படுத்த முடியாத வகையில் சலுகைகளை வழங்குவதும் அதே சமூகத்தில் வாழும் மற்றொரு இனத்துக்கு வழங்க மறுத்து அவர்களின் உரிமையையும் சேர்த்துப் பறித்து அவர்களை ஒடுக்குவதையும் அறியும்போது சட்டென எழும் கோபம் வடிகால் அற்று தவிக்கிறது. கோபம் மட்டுமே படமுடியும் என்பதுதான் வாழும் எல்லாம் சமூகங்களின் இறுதி நிலையாகிவிடுகிறது. எப்பொழுதும் ஒரு சாராருக்குச் சலுகைகள் வழங்கப்படுவதையும் அச்சலுகைகளை நோக்கி எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாத சூழலிலும் மனம் ஒடுங்கிய ஒரு வாழ்வை வாழ்ந்து கடக்கும் தமிழர்களின் பிரதிநிதியாகத்தான் இவையனைத்தையும் எதிர்க்கொள்கிறார்கள்.

எப்படியிருப்பினும் சிறப்பு சலுகை என்பது ஓர் இனத்தைப் பேரினவாதமாக அடையாளப்படுத்தும் செயல்பாடுகளில் ஒன்றுத்தான். அரசிடமிருந்து அல்லது சாதிய அமைப்புகளிடமிருந்து சிறப்பு சலுகைகள் பெறுவதன் மூலம், அவர்கள் தன் இனம் கவனிக்கப்படுவதையும் முக்கியத்துவப்படுத்தப்படுவதையும் ஆழமாக உணர்கிறார்கள். இதன் மூலம் அந்த இனத்திற்கு மண் சார்ந்த பெருமித உணர்வும், இனவாத உணர்வும் மேலோங்கிவிடுகின்றன. ஒரு சாராரைச் சுரண்டி மற்றொரு சாரரை வாழவைக்கும் இந்தச் சலுகை என்ற கிருமி அனைவரின் மனதிலும் ஒரு இன மேலாண்மையாகப் பதிந்துவிடுகிறது.

அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் வேளையில், எப்படி அரசு ஒரு சாராரை அல்லது ஓர் இனத்தினரைச் செல்லப்பிள்ளையாக்கிக்கொள்ள முடியும்? அரசு மத இன சார்புடைய ரீதியில் மிகத் துல்லியமாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதால் மட்டுமே இப்படியொரு தனி சலுகை என்ற ஒரு விசயம் மேலோங்கிக் காணப்படுகின்றது. ஈழத்தில் சாதிய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஓங்கி இருப்பவர்கள் தனியான ஓர் எல்லைக்குள் குடியமர்த்தப்படுகிறார்கள். தலித்துகளிடமிருந்து அவர்களை வேறுப்படுத்திக்காட்டவே இப்படியான ஒரு நில வேறுபாடுகள் உருவாகின. ஏன் இந்த மேட்டுக்குடிகள் தலித்துகளிடமிருந்து தனித்துக் காட்டப்பட வேண்டும்?

இவர்களுக்குக் கிடைக்கும் அரசின் தனி சலுகைகள் எக்காரணத்துக் கொண்டும் தகித்துகளுக்குத் தெரியக்கூடாது அல்லது அந்தச் சலுகைகளை அவர்கள் அனுபவிப்பதைத் தலித்துகள் பார்க்கக்கூடாது என்பது காரணமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. இது அரசின் அல்லது சாதிய சமூகத்தின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட பிரிவினையாகக் கருதலாம். எப்படியிருப்பினும் இறுதியாக அரசு தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து விரட்டியடித்துக் கொன்றொழிக்கும்போது மேல்சாதி தலித் என்ற வேறுபாடில்லாமல் எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள். ஷோபா சக்தி ஒருமுறை மலேசியா வந்திருந்தபோது இதையே அழுத்தமாகக் குறிப்பிட்டார். சாதிய ஒடுக்குமுறை தலித்துகளுக்குள்ளும் இருந்தது. மேல்சாதிக்காரனின் சாதியவெறித்தனத்திடமிருந்து தலித்துகள் கற்றுக்கொண்ட ஒரே விசயம் தன் சொந்த தலித்துகளை அதே சாதிய வேறுபாட்டுணர்வுடன் எப்படி பிரித்து ஒடுக்குவது என்பதைத்தான். சாதிய சமூகத்தின் எல்லாம் அடுக்குகளும் கடைசியில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகுவதைத் தடுக்கவே முடியாது என்பதன் நிதர்சனம் அது.

இனத்துவேசமும் வகுப்பறையும்

இக்கதையில் டொமினிக் ஜீவா காட்டும் சிறுவன் எனக்குள்ளும் இருக்கிறான். இடைநிலைப்பள்ளியில் என் ஆசிரியரால் குரூரமாகப் பார்க்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல என் இன நண்பர்களும் இதே போல பலமுறை ஆசிரியரால் இனத்துவேசத்துக்கு ஆளாகியுள்ளோம். இனத்தால் அடையாளப்படுத்தப்பட்டு கல்வி வழங்கப்படும் போது அதில் ஒரு மோசமான போதாமையையும் வெறுப்பையும் தரிசிக்க முடிகிறது. இப்படி வெறுப்போடும் வஞ்சனையோடும் வழங்கப்படும் கல்வியையும் கல்வி அமைப்பையும் எப்படி நேசிக்க முடியும்?

இக்கதையில் சிறுவன் சந்திக்கும் வகுப்புவாதக் கொடுமைகளை, எங்கும் எல்லாம் நிலப்பரப்புகளிலும் நம்மால் பார்க்க முடியும். படிக்க முடியாத காரணத்தால், பொருளாதார வித்தியாசத்தால், தலித் வர்க்கத்தைச் சேர்ந்தமையால் என ஒரு மாணவனை வெறுக்கவும் ஒதுக்கவும் எல்லாம் கல்விக்கூடங்களிலும் காரணங்கள் இருக்கின்றன. காரணத்தைத் தேடி அதை ஒரு வசதிக்காகத் தக்கைவைத்துக்கொண்டு அது போன்ற மாணவர்களின் மீது அதிகாரத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களும் எல்லாம் கல்விக்கூடங்களிலும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இவர்களைக் கடந்தும், சாதிய நிறுவனத்தைக் கடந்தும் எப்பாடி ஒரு தலித் சிறுவனால் மீள முடியும்? அது எப்படிப்பட்ட ஒரு போராட்டம்? சாதிய வேறுபாட்டுணர்வால் கட்டுண்டு கிடக்கும் சமூக அமைப்பிற்கு முன் ஒரு மாணவன் தோல்வியையே அடைய முடியும் என்ற வகையில்தான் டொமினிக் ஜீவா இக்கதையை முடித்துள்ளார்.

சாதிய உணர்வுடன் வகுப்புக்குள் நுழையும் ஓர் ஆசிரியரால் நேர்மையாகப் பாடத்தைப் போதிக்க முடியாது. எப்படியிருப்பினும் தன் சாதிய போதனையைப் பாடத்தின் வழி நுழைத்து மாணவர்களுக்குள் தங்கள் சாதியம் சார்ந்த பெருமித உணர்வை உருவாக்கவே முயல்வார். இதன் வழி ஆசிரியரின் சாதிய சிந்தனையுடன் சற்றும் ஒத்துப்போகாத மாணவர்கள் கேலிக்கும் வசைக்கும் ஆளாகி அவமானப்பட்டு நிற்பார்கள். வகுப்பறை என்பது யாருடையது? மேல்தட்டு வர்க்கத்துக்குரியதா?

இக்கதையில் வகுப்பறையில் இருக்கும் யேசுநாதரின் ஓவியத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அந்த ஓவியத்துக்குக் கீழ் உள்ள வாசகம் அதிகமாகக் கவனப்படுத்தப்படுகிறது. “தொழிலாளர்களை என்னிடம் வர அனுமதியுங்கள்” என்பதாக அந்த வாசகம் இடம்பெற்றிருக்கும். தொழிலாளர்கள் எனும் அடையாளம் அந்தத் தேசத்தின் உழைக்கும் மக்களுக்குரிய அழைப்பாகும். கடவுள் அவர்களுக்கும் உரியவர் என்கிற போதனையை இதன்வழி புரிந்துகொள்ள முடிகிறது. பெரும்பாலும் வகுப்பறையில் தலித் மாணவர்கள் தொழிலாளர்களுடைய குழந்தைகளாக இருப்பார்கள். முதலாளிகளின் குழந்தைகளுக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குமிடையே இருக்கும் இடைவெளியைத் தகர்க்கும் இடம்தான் இறை என்பது போல அந்த வாசகம் கதைக்குள்ளிருந்து கவனம் பெறுகிறது. ஆனால் வகுப்பிற்குள் நுழையும் ஆசிரியர்கள் அதற்கான அர்த்தம் சொல்வார்களே தவிர அதைக் கடைப்பிடிப்பதில்லை என அச்சிறுவன் கூறுகிறான்.

எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. எங்களுடைய இயற்பியல் ஆசிரியர் ஒரு சீனர். அவர் வகுப்பில் படித்த இந்திய மாணவர்களிடம் இந்திய சமூகத்தைப் பற்றி மலிவான விமர்சனங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். சீனர்கள் கணித்தத்தில் திறமையானவர்கள், ஆனால் தமிழர்கள் சாராயம் குடிப்பதில் மட்டுமே திறமையானவர்கள், அதனால்தான் எப்பொழுதும் மயக்கநிலையிலேயே இருக்கிறார்கள் என இப்படிப் பல வகைகளில் எங்களை அவமானப்படுத்துவார். அப்பொழுது எங்களுக்குள் அவமானங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் இயந்திரம் மட்டுமே அதிவேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.

யார் தப்புக்கணக்கு வென்றது?

ஆசிரியர் கரும்பலகையில் போடும் ஒரு கணக்கின் பிழையைக் கண்டறியும் சிறுவன் அதனைச் சொல்ல முடியாமல் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றான். தன்னை ஆசிரியர் மேலும் வெறுத்து அவமானப்படுத்திவிடுவார் எனப் பயப்படுகிறான். அமைதியில் உறைய நினைக்கும் அவன், அப்பிழையைக் கண்டு மிரள்கிறான். உடனே கையை உயர்த்தி அப்பிழையைச் சுட்டிக்காட்டும் அவனை ஆசிரியர் ‘போயும் போயும் சிரைக்கப்போற உனக்கு படிப்பெதுக்குடா?” எனச் சொல்லி அவனைக் கண்டிக்கிறார். தலித் பையனாகப் பிறந்ததற்காக அவன் அப்படி ஒதுக்கப்பட்டு நடத்தப்படுகிறான். கல்விக்கும் சாதிக்கும் என்ன தொடர்புண்டு? கல்வி கற்ற சமூகம் எப்படிச் சாதிய வேறுபாட்டால் பிளவுண்டு கிடக்கின்றது?

இப்படிப் பல கேள்விகளுக்கு நம்மிடையே இருக்கும் மிக உண்மையான பதில் தலித்துகளின் வாழ்க்கை வரலாறு மட்டுமே. தொடர்ந்து ஒடுக்கப்படும் அவர்களே சாதிய சமூகத்தின் மனசாட்சி. யாரும் நெருங்கி பார்க்க விரும்பாத இருண்டக் கிணறு போல பற்பல குரல்களுடன் அமிழ்ந்துகிடக்கின்றது. தப்புக்கணக்கைத் திருத்தியச் சிறுவனை அவன் குலத்தொழிலைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தும் ஆசிரியர் ஓர் அறிவுத்துறையைச் சேர்ந்தவர். புனிதமாகப் பார்க்கப்படும் கல்வியை வழங்கக்கூடிய நிலையில் இருப்பவர். அந்த இடத்தில் இருந்துகொண்டு அவனை அப்படிச் சாதியப் பின்புலத்துடன் எதிர்க்கொள்ளும்போது தலித் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதோடு அர்த்தமற்றும் போகிறது. பெரும் தடையாக எல்லாம் சூழலும் அவர்களுக்கு சாதியச் சுவரை எழுப்பி மிரட்டுகிறது. அந்த பெரும் மிரட்டலை இக்கதையில் வரும் சிறுவனுக்குள் என்னால் உணர முடிகிறது.

கதையில் தப்புக்கணக்கைச் சரிப்படுத்தியவனின் எதிர்காலம் தப்புக்கணக்காகி போவதைப் பார்க்க முடிகிறது. இரண்டு துண்டாகிக் கிடக்கும் கொப்பி பிறகெப்பொழுதும் ஒட்டப்படவில்லை எனக் கதையை முடித்திருக்கும் விதத்திலிருந்து தலித்துகளின் எல்லையை, முடிவுகளை அறிந்துகொள்ளலாம். சமூக அமைப்பிலிருந்து, கல்விக்கூடங்களிலிருந்து தூக்கியெறியப்படும் தலித்துகளின் எண்ணிக்கை எப்பொழுதும் நிகரற்றது. அதிகரித்துக்கொண்டேயிருக்கும். அவர்கள் நிராகரிப்பதற்குரியவர்கள் போல நடத்தப்படுகிறார்கள். வகுப்பறையிலிருந்து அவமானப்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்ட அந்தச் சிறுவனைப் போல சமூகத் தளத்தில் வெவ்வேறு சூழலில் தலித்துகள் நிராகரிக்கப்பட்டே வருகின்றனர். பௌத்தத்தை அறிமுகப்படுத்திய இந்தியா, உங்களுக்குச் சாதியையும் அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் எனக் காந்தி ஒருமுறை இலங்கை வந்தபோது சொன்னதாகப் படித்தேன். ஈழம் அதிகார வர்க்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்படுகிறது என்றால், அதே ஈழம் சொந்த சமூகத்தால் சாதிய ரீதியிலும் ஒடுக்கப்பட்டு மேலும் மேலும் சிதைவுக்குள்ளாகிறது.

அதிகார வர்க்கம் தப்புக்கணக்கே போட்டாலும் அதைச் சரிப்படுத்தும் உரிமையும் வாய்ப்பும் அதே வர்க்கத்தால் ஒடுக்கப்படும் சமூக மக்களுக்குக் கிடையாது என்பதை உணர்த்தும் கதையின் முடிவு கனமான ஒன்றை நம்மீது கடத்திவிட்டு நகர்கிறது.

ஆசிரியம் – சவாலும் தப்புக்கணக்கும்

டொமினிக் ஜீவாவின் இக்கதையில் நிகழும் அந்த வகுப்பு சூழலை பொதுவான ஒரு கல்வி தத்துவத்தின் அடிப்படையிலும் விவாதிக்க முடியும். அதனை இரண்டு களமாகப் பிரித்தறிய முடியும் என நம்புகிறேன். கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது. அரசு இலவசக் கல்வியை வழங்குவது அனைவருக்கும் பொதுவானதாகும். அதனை எந்தத் தனிப்பட்ட இனமும் சிறப்பு சலுகை என்ற பெயரில் கொள்ளையடிப்பதோ ஆக்கிரமிப்பு செய்வதோ சமூகக் குற்றமாகும். ஆனால் கல்விச் சூழலிலும்கூட இப்படிப்பட்ட இன ஆக்கிரமிப்புகள் நடந்துகொண்டுத்தான் இருக்கின்றன.

மாணவர்களைத் தரம் பிரித்துப் போதித்து அனைவருக்கும் கல்வியை வழங்குவதுதான் வகுப்பறை தர்மம். இதை ஒவ்வொரு ஆசிரியரும் கடைப்பிடித்தாக வேண்டும். ஆனால் அதே மாணவர்களை, சாதி, மதம், பொருளாதாரம் எனத் தரம் பிரித்து கவனிப்பதும் வரவேற்பதும் கடுமையான ஒரு குற்றம். வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களையும் ஒரே மாதிரியாக ஆதரிக்கும் ஏற்றுக்கொள்ளும் ஓர் ஆசிரியர்தான் மிகவும் நியாயமானவர் எனக் கல்வி அமைப்பு வரையறுக்கிறது.

வகுப்பறை என்பது கல்வி நிறுவனம் கிடையாது. அல்லது ஆசிரியர் முதலாளியாகவும் மாணவர்கள் அவருக்கு அடங்கினவர்களாகவும் பாவிக்கப்படக்கூடாது. வகுப்பறை மகிழ்ச்சிக்கரமான கற்றல் சூழலையும் எல்லாவற்றையும் கற்பதற்கான வாய்ப்புகளையும் வழங்கும் இடமாகும். ஆசிரியர் தன் அறிவைப் பரிசோதிப்பதற்கான களமாக வகுப்பறை ஆகிவிடக்கூடாது. தொடர்ந்து அறிவை ஒரு அதிகாரமாக நிறுவி அதற்கு முன் மாணவர்களை மண்டியிடும்படி செய்யக்கூடாது. அறிவு அதிகாரமாகும் போது, அதன் மீது காட்டப்படும் அனைத்து எதிர்வினைகளையும் அழிப்பதற்கே முயலும். இக்கதையில் வரும் ஆசிரியரும் ஒரு அழிவு சக்தியாகவே மாறுகிறார். அறிவு முதலில் ஆக்கிரமிக்கும், பிறகு அழிக்கும் என்பதுக்கு இக்கதையில் வரும் தலித் சிறுவன் மீதான வெறுப்புணர்வின் வழி நேரடியாகக் கவனிக்க முடிகிறது.

மாணவர்கள் சுட்டிக்காட்டும் நம்முடைய தவறுகளை எப்பொழுதும் நாம் ஒப்புக்கொள்வதில்லை, அதனை எப்படியாவது மறுத்து அவர்களை முட்டாளாக்கவே முயல்கிறோம். நாம் எப்பொழுது ஒரு அதிகார அமைப்பாக மாறுகிறோமோ அப்பொழுதிலிருந்தே நாம் மாணவர்களுக்கு முன் தோல்விகளை ஒப்புக்கொள்ள விழைவதில்லை. தப்புக்கணக்கைச் சுட்டிக்காட்டிய மாணவர்கள் அவமானத்தின் பிடியில் தப்புக்கணக்காகி நிற்கிறார்கள்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768