முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 38
பிப்ரவரி 2012

  நாடு திரும்பாத கடைசி கம்யூனிஸ்ட் ஆவணப்படம் - அமிர் முகமாட் (மலேசியா)
கே. பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

‘இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்’

கருணாகரன்



வல்லினம் பதிப்பக நூல்கள்: எழுத்தாளர்களுடனான நேர்காணல்


உண்மைகள் மட்டுமே என் புத்தகத்துக்கான தரவுகள்
யோகி

சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்
கே. பாலமுருகன்

நல்ல கவிதைகளில் வார்த்தைகள் ஆடைகள் மட்டும்தான்
ரேணுகா



கட்டுரை:

நாடு திரும்பாத கடைசி கம்யூனிஸ்ட் (ஆவணப்படம்) - அமிர் முகமாட் (மலேசியா)
கே. பாலமுருகன்

வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'
ஷம்மிக்கா



வல்லினம் கலை, இலக்கிய விழா 4:

கலை இலக்கிய விழா 4 : இன்னொரு தொடக்கம்
ம. நவீன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...28

ராஜா

சின்னப்பயல்

துரோணா

ந. பெரியசாமி

ஸ்ரீவிஜி

2009ஆம் ஆண்டு யஸ்மின் அமாட் அவர்களின் மரணத்திற்குப் பிறகு மலேசியாவில் சொல்லத்தக்கப் படங்கள் ஏதும் வெளிவராததை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இது கலை போதாமை கிடையாது. ஆனால் அவர் உருவாக்கிய ஒரு சினிமா தாக்கத்தை அதன் பிறகு யாராலும் ஏற்படுத்த முடியவில்லை. இன்னமும் காதலின் கமர்ஷியல் கொண்டாட்டமும், பேய்க் கதைகளும்தான் மலேசியாவில் முதன்மை மையப்பொருளாகச் சினிமாவின் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

2006ஆம் ஆண்டில் "The Last Communist" என்ற 'மிதவாத ஆவணத்தன்மையும் கதையையும்' உள்ளடக்கிய ஆவணப்படம் இயக்கிய அமிர் முகமாட் கடந்த வருடம் யஸ்மின் அமாட் நினைவாக 'யஸ்மின் அமாட் திரைப்படங்கள்’ (Yasmin Ahmad's Films) என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். யஸ்மினுக்கு அடுத்ததாகப் பொருட்படுத்தக்கூடிய மலேசிய இயக்குனர்களில் அமீர் முக்கியமானவர். பெர்லின், லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றுள்ளன. இவருடைய "The Last Communist" ஆவணப்படம் மலேசியாவில் தடைச்செய்யப்பட்டவையாகும். மலாயா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கடைசி தலைவரான சின் பெங் அவர்கள் பிறந்த நகரம் தொடங்கி அவர் இறுதியாக ஒளிந்திருந்த தாய்லாந்து எல்லைவரை சென்று ஒரு சிலரைச் சந்தித்து நேர்காணல் செய்து திரட்டப்பட்ட கருத்துகளை ஒரு முக்கிய ஆவணமாகத் தந்திருக்கிறார். சின் பெங் கம்யுனிஸ்ட் சித்தாந்தத்தைக் கற்றுக்கொண்டதன் முதல் நாடு விடுதலை அடையும்வரை, அவருக்கும் நாட்டின் அரசியலுக்குமான முரண்கள், போராட்டங்கள், இயக்கத்தின் தோற்றம் போன்ற விசயங்களை ஆராயும் வகையிலேயே அமீர் ஆவணபடத்தை இயக்கியிருக்கிறார்.

ஜப்பான் மலாயாவை ஆண்டக் காலம் தொடங்கி மலாயா சுதந்திரம் அடைந்த பின்பும் தொடர்ந்து உள்நாட்டுத் தாக்குதலை ஏற்படுத்தி பொதுமக்களின் நிம்மதியைச் சீர்குலைத்த தீவிரவாத இயக்கமாகக் கருதப்படும் மலாயா கம்யுனிஸ்டுகளின் தலைவரான சின் பெங் அவர்களின் உண்மையான அடையாளம் என்ன? அவருடைய இயக்கம் தீவிரவாதத்தைக் கையாண்டதா?

The Last Communist

படத்தின் துவக்கக் காட்சி சென் பெங் பிறந்த ஊரான சித்தியவானை நோக்கி நகர்வதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆவணப்படத்தின் மையப்பொருளைத் தேடி அலைந்து அதனை முடிந்தவரை எல்லாம் வகையிலுமே பதிவு செய்வது ஆவணப்படத்திற்குரிய உழைப்பாகும். அதன் துவக்கமும் முடிவும் இரண்டும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியே பயணம். சித்தியவானில் செங் பெங் வாழ்ந்த இடங்கள் ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் அமிர். மேலும் அங்கு இப்பொழுது வசிக்கும் மனிதர்களையும் பொதுவான நேர்காணலின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.

சென் பெங் 1924ஆம் ஆண்டில் சித்தியாவானில் பிறந்தவர். சித்தியவான் அக்காலக்கட்டத்தில் ‘gajah mati’ (செத்த யானை) என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. சித்தியாவான் காடுகளின் பெரிய தந்தமுள்ள இராட்சத யானைகள் அதிகமாக வாழ்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சின் பெங் அவர்கள் கடைசி கம்னியூஸ்டாகக் கருதப்படும் அளவுக்குத் தன்னுடைய சித்தாந்தத்தில் பிடிப்புடனும் தீவிரத்துடனும் இறுதிவரை கருத்துத் தெளிவுடன் இயங்கியவர். சின் பெங் ஆரம்பக்காலக்கட்டத்தில் கடை வரிசையில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அவருடைய அப்பா சைக்கிள் வியாபாரம் செய்து வாழ்ந்தவர். சென் பெங் வாழ்விடங்களையும் அவருடைய வாழ்வின் தருணங்களையும் சமக்காலத்தில் மீட்டுணரும் ஒரு பணியைத்தான் இந்த ஆவணப்படம் தொடர்ந்து செய்கிறது.

ஆகையால் அவர் தங்கியிருந்ததாக நம்பப்படும் கடைத்தெருவில் இருக்கும் ஒரு சைக்கிள் வியாபாரியை அமீர் நேர்காணல் செய்கிறார். முன்பு சைக்கிள் அதிகமாகப் பாவிக்கப்பட்டதாகும், மோட்டார் பயன்பாடு கூடியதும் சைக்கிள் வியாபாரம் நொடித்துவிட்டதாகவும் கூறுகிறார். சைக்கிளுக்கும் மலாயா வரலாறுக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு நம் தோட்டப்புறங்களில் காண்டா வாளியை இரு பக்கமும் கட்டிக்கொண்டு தீம்பாருக்குச் செல்வதற்குச் சைக்கிள்தான் பயன்படுத்தினார்கள். 1941 ஆம் ஆண்டு மலாயாவிற்குள் நுழைந்த ஜப்பான் படை சைக்கிளில்தான் வந்து சேர்ந்தது. சின் பெங் அதன் பிறகௌ மெத்தடிஷ் தேவாலயத்தில் பாலர் கல்வியைத் தொடர்கிறார். அவருக்குக் குழுப்பாடலிலும் ஆர்வம் வந்து தேவாலயத்தைப் பிரதிநிதித்துப் போட்டிகளுக்கும் செல்கிறார். சென் பெங் பிரிட்டிஷ் காலனியத்துவ காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு ஒடுக்கப்பட்ட சிறுவன் என்பதை அடையாளப்படுத்தியே ஆக வேண்டும். அவர் சிறுவனாகச் சுற்றித்திரிந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் மட்டும் உலாவக்கூடிய நடமாடக்கூடிய இடங்களைக் கண்டு மிரள்கிறான். இந்தப் பாகுபாடும் பிரிவினையும் அவனை அச்சுறுத்துகின்றன. காலனிய ஆட்சி அவனுக்குள் அளித்த முதல் தாக்கமே இந்தச் சம்பவம்தான். பட்டம் விடுதல், பந்து விளையாடுதல் எனத் தன் பால்ய பருவத்தைக் கழித்த சென் பெங், தான் வாழும் நிலம், ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் மத்தியில் உடைப்பட்டுக் கிடப்பதை ஆழமாக உணர்கிறான்.

அக்காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த சீனர்களின் தாய்நிலமான சீனாவிற்கு உதவுவதற்காகக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டிருந்தது. 1930களில் சீனாவில் உருவான ஜப்பானியப் புரட்சி அந்த நிலத்தை மிகக்கொடூரமாகச் சிதைத்தது என்றே சொல்ல வேண்டும். இராணுவ முரண் மூலம் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் உண்டான பெரும் பகைத்தான் இரண்டாவது சீன- ஜப்பானியப் போர். 20ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் நிகழ்ந்த மிக ஆபத்தான போராகவும் அதைக் கருதுகிறார்கள்.

அதே சமயத்தில், சென் பெங் அவர்களின் அப்பா வியாபாரத்தில் நஷ்டமடைந்து பொருளாதார பலத்தை இழக்கிறார். ஆனால் சின் பெங் அவர்களுக்கு அப்பாவின் சைக்கிள் வியாபாரத்தில் ஆர்வம் இல்லாமல் போகிறது. ஜப்பானை எதிர்க்கொள்வதற்காக சீனா சோவியத் யூனியனின் உதவியை நாடியிருந்த காலக்கட்டத்தில், கம்னியூச சித்தாந்தம் அங்கேயும் நுழைந்திருந்தது. அதன் விளைவாகப் போரின் மூலம் சிந்தனை பாதிக்கப்பட்டிருந்த மலாயாவிலும் கம்னியூச கருத்துகள் பரவியிருந்தது. ஆகையால் சென் பெங் வளர்ந்த சமூகச் சூழலில் கம்யூனிச கருத்தாக்கங்களைப் பரப்புவதற்காக இயக்கங்களும் கிளாப்புகளும் நிறையவே இருந்தன. அவர் பலத்தரப்பட்ட இயக்கங்களில் சேர்ந்து கம்யூனிசத்தை உள்வாங்கிக்கொள்ளத் துவங்கினார்.

சிறுக சிறுக சோசலியச புத்தகங்களைப் படித்து ரஷ்யப் புரட்சியையும் ஆழமாக அறிந்துகொண்டார். வாசிப்பு இல்லாமல் ஒரு கருத்தாக்கத்தையோ அல்லது ஒரு புரட்சியையோ புரிந்துகொள்ள முடியாததற்கு சென் பெங் வாழ்பனுபவே உதாரணம். வெறும் செவி வழி செய்தியைக் கேட்டோ அல்லது நாளிதழை வாசித்தோ அடைவதெல்லாம் வெறும் மேலோட்டமான கிளர்ச்சி மட்டுமே. ஆழமான விரிவான வாசிப்பும்கூட ஒரு புரட்சியை முழுமையாக அறிந்துகொள்வதற்கான முதல் நிலையாகும். அது போன்ற நூல்களைப் படித்துவிட்டு சென் பெங் அவர் நண்பர்களுடன் சீனாவின் போர் சூழல் குறித்துத் தீவிரமாக உரையாடினார்கள். (1941 முதல் 1945வரை ஜப்பான் மலாயாவைக் கைப்பற்றியபோது, சீனாவுக்கு முன்பு சீன-ஜப்பான் போரில் உதவி செய்ததற்காக, சீனர்கள் கடுமையான முறையில் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்)

Malayan Communist Party – மலாயா கம்யூனிச இயக்கம்

பிரிட்டிஷாரின் ஆட்சியை எதிர்த்தே கம்யூனிச இயக்கம் மலேசியாவால் 1930ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. வன்முறையின் மூலம் அதிகாரத்தைத் தகர்த்தல் என்கிற கொள்கையுடன் அந்த இயக்கம் தீவிரம் கொண்டது. இந்தக் கம்னியூச இயக்கமே பின்னர் 1948 தொடங்கி 1989வரை மலாயாவில் ஆயுதப் போரை முன்னெடுத்து இறுதியில் தோல்விக் கண்டது. மலேசியா சுதந்திரம் அடைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லை நகர்ந்து ஓடிப்போன கம்னியூச இயக்கம், பலவீனமடைந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டது. சின் பெங் மட்டுமே அந்த இயக்கத்தின் மிகச்சிறந்த போராட்டவாதியாகவும் சித்தாந்த கொள்கையுடையவராகவும் கருதப்பட்டார்.

ஜப்பான் இராணுவப்படையை எதிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட கொரில்லா போரின் மீது சின் பெங் நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்தியாவில் பகவத் சிங் அவர்களுக்கு ஏற்பட்ட மனநிலையே சின் பெங் அவர்களுக்குள்ளும் காண முடிகிறது. தன்னுடைய 14ஆவது வயதில் பேராக் மாநிலத்திலுள்ள லூமுட் பகுதியில் சொந்தக்காரர் கடையில் வேலை செய்வதற்காக வந்திருந்தார். ஆனால் அவர் மார்க்சியம் தொடர்பான புத்தகங்களை வாசிப்பதற்காக மட்டுமே அங்கே ஒரு மாதம் செலவழித்தார். அந்த ஒரு மாதம் வாசிப்பிற்குப் பிறகே ஒரு கம்யூனிஸ்டாக மாற முடிவெடுத்தார்.

ஒரு முழு கம்யூனிஸ்டாக சின் பெங்

சித்தியாவானுக்குத் திரும்பிய சின் பெங், அவருடைய முன்னால் சீன இலக்கிய ஆசிரியர் ஒருவர் மலாயா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆன்ம பிரதிநிதியாக சித்தியாவான் கிளைக்குப் பொறுப்பாளராக அங்கிருப்பதைக் கண்டறிகிறார். அந்த ஆசிரியருக்குப் பிறகு அந்த இயக்கத்தை சின் பெங் எடுத்தாளுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. 16ஆவது வயதுக்கு முன்பே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினராக மாறி, சித்தியவான் பகுதிக்குப் பொறுப்பெடுத்தார். அக்காலக்கட்டத்தில் பிரிட்டிஸ் காலனிய ஆட்சிக்குத் தடையாக இருந்த இந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அவர்களின் பெரும் எதிரியாகப் பார்க்கப்பட்டது. காடுகளில் ஒளிந்துகொண்டு இயக்கம் நடத்தும் கொரில்லா போரை ஒடுக்குவதற்காக பிரிட்டிஸ் பல வழிமுறைகளைக் கையாண்டது. வியாபாரத்திற்கும் சர்வதேச இணைப்புகளை ஏற்படுத்தி காலனிய நாடுகள் பெரும் முதலீட்டு நிறுவனங்களாக மாறுவதற்கும் கம்யூனிச சித்தாந்தமும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் தடையாகவும் முரணாகவும் கருதப்பட்டன. ஆகையால் சித்தியவான் பகுதியில் இருந்த சின் பெங் அவர்களின் பால்யக்கால நண்பர்கள் சில இயக்கத்தினர்கள் கைது செய்யப்பட்டனர்.

அடுத்து அவரைத்தான் பிரிட்டிஸ் அரசு கைது செய்யும் எனப் பயந்து, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சின் பெங் நகரத்தைவிட்டு வெளியேறினார். 1940ஆம் ஆண்டு இயக்கம் அவரை தைப்பிங் நகரத்திற்கு அனுப்பி வைத்தது. பிறகு ஈப்போவில் அவர் இயக்கத்தின் முழுமையான ஓர் உறுப்பியத்தைப் பெற்றுக் கௌரவிக்கப்பட்டார். அப்பொழுது மலாயா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராக வியட்நாமைச் சேர்ந்த லை தீ பொறுப்பேற்றிருந்தார். அதன் பிறகு கம்யூனிஸ்ட் கருத்துகளை மாணவர்களிடத்தில் போதிப்பது, கம்யூனிஸ்ட் ஒருமை உணர்வை மக்கள் மத்தியில் மேலோங்கச் செய்வதென இயக்கம் சார்ந்து இயங்கிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய இயக்கம் மலாயாவில் வழுப்பெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டம் அது.

கம்யூனிச இயக்கம் ஏன் ஆயுதப் போரை முன்னெடுத்தது?

இன்றும் கம்யூனிச இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமாகக் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டும் வருகிறது. இப்பொழுது மலாயாவில் கம்யூனிஸ்ட் கருத்துகளும் சித்தாந்தமும் தடைச்செய்யப்பட்ட ஒன்றாகும். அதனைச் சார்ந்து பொதுமேடையில் பிரச்சாரம் செய்வதும் அல்லது தன்னை ஒரு கம்யூனிஸ்ட் எனச் சொல்லிக்கொள்வதும் அல்லது கம்யூனிஸ்ட் கருத்துகள் சார்ந்து தீவிரமாக உரையாட நினைப்பதும் சட்டப்படி குற்றமாகும். இருந்தபோது வரலாற்று ரீதியில் கம்யூனிஸ்ட் இயக்கம், அவர்களின் செயல்பாடுகள் சார்ந்து தொடர்ந்து விவாதிக்கபட்டுத்தான் வருகின்றன.

ஆரம்பத்தில், உலகில் காலனிய ஆட்சிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல், அவர்களை ஒடுக்கி விரட்டுவதற்காக ஆங்காங்கே சித்தாந்தகளின் பாதிப்புகளினால் ஆயுதப் போர் தொடங்கியது. ஆயுதப் போர் என்பது சொந்த மக்களின் மீது பிரயோகிக்கப்படுவதற்கு முன் முதலில் ஆண்டானை நோக்கியதாகத்தான் இருந்தது. எல்லாம் சமூகங்களிலும் அதிகாரங்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட்டக்குணமிக்க ஒரு குழு உருவாவது உலகின் நியதி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் விடுதலை புலி இயக்கத்தையும், மலாயாவின் கம்யூனிஸ்ட் இயக்கங்களையும் நாம் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த ஆயுதப்போராட்டம் பிறகு சொந்த நாட்டிற்கு மிரட்டலாகவும் சொந்த மக்களைக் கொன்றொழிப்பதற்காகச் செயல்படத் துவங்கியதையும் எப்படிப் புரிந்துகொள்வது? அது வரலாற்றின் கருப்பு பக்கமாகவே பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் பெண்களையும் அப்பாவி மக்களையும் சுட்டுக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.

1941ஆம் ஆண்டு ஜெர்மனி ரஷ்யாவைக் கடுமையாகத் தாக்கியது. அந்தச் சமயத்தில் மலாயாவிலும் உலகில் இன்னப்பிற இடங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் பிரிட்டனுக்கு உதவி செய்வதற்காக முன்வந்தன. இந்த உதவியின் மூலம் பிரிட்டிஸ் காலனிய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்துவிடும் எனக் கம்யூனிஸ்ட்டுகள் நம்பினர். அதன் விளைவாக, பிரிட்டிஸ் கைது செய்து வைத்திருந்த கம்யூனிஸ்ட்டுகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பழைய எதிரியான கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து தன்னுடைய இன்னொரு எதிரியான ஜப்பானை எதிர்ப்பதற்கு பிரிட்டிஸ் செயல்பட வேண்டியாகப் போயிற்று. கம்யூனிஸ்ட்டுகள் பிரிட்டனுக்கு இராணுவ உதவிகளைச் செய்தனர். இயக்கங்களிருந்து பல இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டன்னர். ஆனால், மலேரியா நோயால் பாதிப்புற்றிருந்த சின் பெங் அதில் ஈடுபட முடியாமல் போனது. பிரிட்டிஸ், ஜப்பானுக்கு அடுத்ததாத மலாயாவின் கடுமையான எதிரியாகக் கருதப்பட்டது மலாரியா நோய். பல்லாயிரம் பேர் மலாரியாவால் இறந்து போயினர். அக்காலக்கட்டத்தில் “Malaya dijajah oleh Malaria” (மலாயா மலாரியா நோயால் ஆளப்பட்டது) என அடையாளப்படுத்தினர்.

இருப்பினும், பிரிட்டனால் தொடர்ந்து ஜப்பானை எதிர்க்கொள்ள முடியவில்லை. ஆகையால் ஜப்பான் பிரிட்டனிடமிருந்து மலாயாவைக் கைப்பற்றியது. சைக்கிளின் மூலம் மலாயாவுக்குள் நுழைந்த ஜப்பான் இராணுவம் ஒன்று கிழக்குக் கரையை நோக்கியும் மற்றொன்று பேராக் நதிக்கரையை நோக்கியும் முன்னேறி தன் படைப்பலத்தை வழுவாக்கி விரிவுப்படுத்தியது. ஜப்பான் ஆட்சிக்குக் கீழ் வந்த மலாயா பசியாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டது. ஜப்பான் சீனப் போரில் இங்கிருந்த சீனர்கள் சீனாவுக்கு உதவிச் செய்ததாகக் கருதப்பட்டு கூட்டம் கூட்டமாக ஜப்பான் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். சீனர்களைக் கொன்றொழிப்பதற்காகவே ஒரு சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ‘war museum’-ஐ சொல்லலாம். இங்கு வைத்து சீனர்கள் தலை வெட்டப்பட்டு சாகடிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.

தஞ்சோங் மாலிங் – பேராக் – 1942

ஜப்பானின் கொடும் ஆட்சியை எதிர்த்து மீண்டும் கம்யூனிஸ்ட்டுகள் படைத்திரண்டு பலம் பெறத் துவங்கின. நாட்டு மக்களை ஜப்பானின் பிடியிலிருந்து காப்பாற்ற கொரில்லா தாக்குதல்களை நிறைவேற்றினர். காடுகளில் ஒளிந்துகொண்டு ஜப்பான் இராணுவத்தைத் தாக்குவதற்காக ஆயுதங்கள் பிரிட்டிஷாரால் வழங்கப்பட்டன. தஞ்சோங் மாலிங் நகரத்தையொட்டித்தான் ஜப்பானுக்கு எதிரான முதல் கொரில்லா போர் துவங்கியது. இதனை சின் பெங் தலைமை வகித்து முன்னெடுத்தார்.

ஆவணப்படத்தின் இயக்குனர் அமீர், தஞ்சோங் மாலிங் வட்டாரதிலுள்ள மிகப் பிரசித்திப்பெற்ற கல்லூரியான சுல்தான் இட்ரிஸ் மாணவர்களையும் நேர்காணல் செய்திருப்பது சிறப்பான அம்சமாகும். அக்கல்லூரி மாணவர் ஒருவர் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து விவரிக்கிறார். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை முன்வைத்து ஒரு நாட்டை ஆளுவது என்பது முடியாத காரியம் என்றும், மதப்பிடிமானவும் கடவுள் நம்பிக்கையுமற்ற கம்யூனிஸ்ட்டுகளால் நாட்டைச் சுபிட்சமாக ஆள் முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் கருத்துரைக்கிறார். இருந்தபோதும் காலனிய ஆட்சியின் போது, பிரிட்டிஸ், ஜப்பான் என நாட்டின் எதிரிகளை விரட்டுவதற்காக அவர்கள் போராடியது எப்பொழுதும் போற்றப்பட வேண்டியது எனவும் பொதுமக்களுக்கு நாட்டுப்பற்றையும் எதிரிகளை எதிர்க்கும் சக்தியையும் வழங்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான் என்றும் குறிப்பிடுகிறார்.

பீடோர் பேராக் – டிசம்பர் 1943

பீடோர் காட்டில் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பிரிட்டிஸ்க்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன் வழி ஒரு சில பிரிட்டிஸ் இராணுவம் கம்யூனிஸ்டுகளுக்கு உதவுவதற்காகக் காட்டுக்குள் நுழைந்தன. சின் பெங் அப்பொழுது 19 வயதே நிரம்பிய போராட்ட இளைஞனாக இருந்தார். பிரிட்டிஸ் ஆதரவுடன் அதன் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கம், மலாயா ஜப்பான் எதிர்ப்பு இயக்கமாகவும் செயல்படத் துவங்கியது. பிரிட்டிஸாரின் ஆயுத உதவிகளும் இராணுவப் பயிற்சிகளும் தொடர்ந்து அந்த இயக்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கப்பட்டன.

அமீர், பீடோர் காட்டில் பெத்தாய் அறுத்து விற்பனை செய்யும் ஒரு சிறு வியாபாரியைச் சந்தித்து நேர்காணல் செய்யும் இடம் மிகவும் சுவாரிஷ்யமானதாகும். ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டிருந்த அவர், முதலாளியால் தொடர்ந்து சுரண்டப்படுவதை உணர்ந்து வேலையைவிட்டு வெளியேறி சுயமாகத் தொழில் செய்து பிழைத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஏறக்குறைய மலேசியாவில் இன்னமும் முதலாளிய அமைப்பின் உழைப்புச் சுரண்டல் மீது பிரக்ஞைபூர்வமான எதிர்வினையையும் விமர்சனத்தையும் கொண்டிருப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

கிந்தா வேல்லி பேராக் - 1943-45

அக்காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர்களை மேலும் அதிகப்படுத்தும் பொறுப்பு சின் பெங் அவர்களிடம் வழங்கப்பட்டிருந்தன. 500 தீமா தொழலாளர்கள் இயக்கத்தின் சேர்ந்தனர். பிரிட்டிஷாரின் செயல்பாடுகளைச் சந்தேகித்த கம்யூனிஸ்ட்டுகள் ஜப்பானை எதிர்க்க ஆயுதத்தைப் பயன்படுத்தியதோடு இல்லாமல் பிறகு பிரிட்டிஷை எதிர்க்கொள்ளவும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்தனர். ஹிரோஷிமா நாகாசாக்கி குண்டுவெடிப்புக்குப் பிறகு ஜப்பான் இராணுவப்படையினர் தோல்வியடைந்து சரணடைந்தனர். ஆகஸ்ட் 1945-இல் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்.

ஒப்பந்தபடி பிரிட்டிஸ் அரசிடமிருந்து மலாயாவை விடுவித்து கம்யூனிஸ்ட்டுகள் மலாயாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால் அப்பொழுது இயக்கத்தின் தலைவராக இருந்த லை தீ பிரிட்டிஸ் அரசை எதிர்த்து எதையும் செய்யாதது சின் பெங் அவர்களுக்குக் கடுமையான கோபம் வரக் காரணமாக இருந்தது. அப்பொழுது, லை தீ, மலாயாவை ஆக்கிரமிப்பு செய்து ஆளும் அளவிற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் பலமுடையதாக இல்லை என ஒப்புக்கொண்டார். இந்தக் கூற்று, பிரிட்டிஸ் மீண்டும் மலாயாவைத் தன் காலனிய ஆட்சிக்குள் கொண்டு வர ஏதுவாக அமைந்துவிட்டிருந்தது.

மலாயா – ஆகஸ்ட் 1945 முதல் செப்டம்பர் 1946 வரை

இந்தக் குறுகிய காலக்கட்டத்தில் பிரிட்டிஸ் அரசால் மலாயாவை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. ஜப்பான் ஆட்சியின் போது இங்கு உருவான கடுமையான சமூகப் பாதிப்புகள், மனச்சிதைவுகள், கம்யூனிஸ்ட் எதிர்ப்புகள் என நாடே அமைதி இழந்து போயிருந்தன. ஜப்பானுக்கு உதவி செய்ததாக நம்பப்படும் பலரைச் சீனர்கள் சிலர் தேடிப்பிடித்துக் கொன்றனர். இக்காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பொதுமக்களைக் கொன்றார்கள் எனச் சொல்லப்படுவது இதன் விளைவாகக்கூட இருக்கலாம் என அவதானிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் சமூக சூழலையும் கலவரங்களையும் சரிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் லை தீ எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் மௌனம் சாதித்தார். அதே சமயத்தில் சின் பெங் இன்னும் சில கம்யூனிச போராளிகளுக்கு அவர்களின் துணிச்சலைக் கண்டு அரசு பதக்கங்கள் வழங்கிக் கௌரவித்தது. இருப்பினும் நாட்டைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை அவர்கள் கைவிடவில்லை. ஆகையால் பிரிட்டிஸ் அரசும் கம்யூனிஸ்ட்டுகளும் மீண்டும் பெரும் எதிரிகளாக உருவாகினர்.

300 தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரிட்டிஸ் இராணுவம் பல தொழிலாளர்களைக் கொன்றது. பிரிட்டிஷ் அரசுக்குத் தொழிலாளர் போராட்டத்தின் விளைவுக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் திட்டத்திற்கும் தொடர்பிருப்பதை அறிய முடிந்ததால், அதைத் தொடரவிடாமல் உடனே துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி முறியடித்தனர். இப்படிப் பல தகவல்களை ஆவணப்படம் வாயிலாக அமீர் சொல்லிக்கொண்டே செல்கிறார். காட்சிகளும் அந்தக் குறிப்பிட்ட இடங்களைக் காட்டி நகர்கின்றன.

தஞ்சோங் பூங்கா – பினாங்கு – அக்டோபர் 1946

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் லை தீ அவர்கள் சின் பெங்-ஆல் சந்தேகிக்கப்பட்டார். அவர் ஒருவேளை பிரிட்டிஸ் அரசின் கண்கானிப்பாளராக இருக்கக்கூடும் என சின் பெங் எண்ணினார். இது குறித்து சின் பெங் ஓர் இரகசியச் சந்திப்பை ஏற்படுத்தினார். அவருடைய சமக்காலத்துப் போராளிகள் ஒரு சிலர் அதில் கலந்துகொண்டு கருத்துரைத்தனர். அதனையடுத்து லை தீ ஒரு துரோகி என்றே இறுதியில் கண்டறியப்பட்டார். இயக்கத்தின் 2 மில்லியன் நிதி பணத்தை எடுத்துக்கொண்டு அதன் பிறகு எங்கோ தலைமறைவானார். லை தீ பணத்துடன் காணாமல் போன பிறகு, சின் பெங் அதிகாரப்பூர்வ தலைவராகக் கம்யூனிஸ்ட்டுகளால் நியமிக்கப்பட்டார்.

சுங்கை சிப்புட் – ஜூன் 1948

அதிகாலையில் சுங்கை சிப்புட் தோட்டத்திற்குள் சைக்கிளுடன் நுழைந்த சில கம்யுனிஸ்ட்டுகள் 3 பிரிட்டிஷ் தோட்ட நிர்வாகிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஆனால் சின் பெங் அவர்களுக்கு இந்தத் தாக்குதல் குறித்து ஏதும் தெரிந்திருக்கவில்லை. இந்தச் சமபவத்திற்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளை முற்றாக அழிக்கப் பிரிட்டிஷ் கடுமையான போரைத் துவங்கியது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்தது. 12 வருடங்கள் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் நீடித்தது என்பதுதான் மலாயாவின் மிக நீண்ட துயரம்.

இடதுசாரி அரசியல் கருத்துடைய பலரும் இந்தக் காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் பல கம்யூனிஸ்ட் இயக்கவாதிகள் கொல்லப்பட்டனர். சுங்கை சிப்புட்டில் ஒளிந்திருந்த சின் பெங் அவர் படையுடன் மேலும் அடர்ந்த காட்டுக்குள் தப்பியோட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு 40 வருடங்கள் காட்டுக்குள்ளேயிருந்து அவர்கள் போராடினார்கள். இது கம்யூனிஸ்ட்டுகளின் இருண்ட காலத்தின் துவக்கம் என்றே சொல்ல வேண்டும். சுங்கை சிப்புட் தோட்டத்தில் துப்புரவு பணிச்செய்யும் ஒரு இந்தியப் பெண்ணை அமீர் நேர்காணல் செய்திருந்தார். தோட்டத்தில் 1948-இல் நடந்த கொலை சம்பவத்தைப் பற்றி அங்குள்ளவர்களுக்குத் தெரிந்திருப்பதாகவும், அவரின் பாட்டி தாத்தா காலத்தில் அது நிகழ்ந்ததாகவும் பகிர்ந்து கொண்டார்.

கேமரன் மலை – 1948-இன் இறுதி

சின் பெங் ஒரு தற்காலிகமான கூடாரத்தை இங்கு அமைத்திருந்தார். இக்காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகப் பலவீனமடைந்து காணப்பட்டது. தகவல்களைக் கொண்டு போய் சேர்ப்பவர்கள் காட்டுக்குள்ளிருந்து பல வாரங்கள் பயணிக்க நேர்ந்ததால், கம்யூனிஸ்ட்டுகளால் விரைவாக இயங்க முடியாமல் போனது. இருப்பினும், சின் பெங் கேமரன் மலை காட்டுக்குள்ளிருந்து பிரிட்டிஸ் மீது தொடர்ந்து தாக்குதல்களை ஏற்படுத்திக்கொண்டுத்தான் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டிஷ் அரசின் முதலாவது எதிரியாக சின் பெங் கருதப்பட்டார். அவரை உயிருடன் பிடித்து வருபவர்களுக்கு 250 000 ரொக்கப் பணம் தருவதாக அரசு அறிவித்திருந்தது.

பெந்துங் பகாங் – 1950

அதன் பிறகு, சின் பெங் பெந்துங் காட்டில் ஒரு தற்காலிகமான கூடாரத்தை அமைத்துத் தங்கியிருந்தார். பிரிட்டிஸ் இராணுவத்தின் படையெடுப்பின் வேகம் சின் பெங் ஒவ்வொரு இடமாக மாறி மாறி செல்ல வேண்டிய சூழலை உண்டாக்கியிருந்தது. பெந்துங் முழுக்கக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உணவு தரக்கூடாது என உத்தரவைப் பிரப்பித்தது. மேலும் பொது மக்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் பிரித்தறிய அடையாள அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஆட்களைச் சேர்ப்பதற்காகக் கவர்ச்சியான இளம் பெண்களைப் பாவித்ததாக ஒரு மூத்த மலாய்க்காரர் சொல்வதாக அமீர் பதிவு செய்கிறார். அவர் வீட்டைத் தேடி வந்த அப்பெண் மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தாள் எனக் குறிப்பிடுகிறார். அவர் இயக்கத்தில் சேர்ந்த பிறகு அவருக்கு பயத்தை மறக்கடிப்பதற்காக ஒரு வகையான மதுபானம் அளிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்.

பெத்தோங்- தாய்லாந்து – 1953 முதல் 1955 வரை

தீபக்கற்ப மலாயாவின் காடுகளின் எல்லாம் பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கொண்ட பிரிட்டிஷ் இராணுவத்திடமிருந்து தப்பி, சின் பெங் இறுதியில் பெத்தோங் எனப்படும் தாய்லாந்து எல்லையையொட்டிய இடத்தில் தன்னுடைய கூடாரத்தை அமைத்தார். இங்கு அவருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பாதுகாப்பான ஒரு அடித்தளம் இருந்தது. அப்பொழுது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முன்னால் கம்யூனிஸ்ட்டான வோங் ஆ லேக் அமீரால் நேர்காணல் செய்யப்படுகிறார். சின் பெங் தாய்லாந்து எல்லைக்கு வந்து சேர்ந்த பிறகு தான் இயக்கத்தில் இணைந்ததாகவும், அதன் பிறகு 10 வருடங்கள் காட்டிலேயே தங்கி இயக்கப் பயிற்சிகளை மேற்கொண்டு போராடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதே பகுதியில் பல முன்னால் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதை அமீர் கண்டறிகிறார். அவர்களை நேர்காணலும் செய்கின்றனர். ஒரு பெண்மனியைக் கேட்டப்போது, அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் பலவீனம் அடைந்ததற்கு முதல் காரணமாக உணவின்மையை அவர் குறிப்பிடுகிறார். மேலும் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் எனச் சொல்லப்பட்டதையும் அவர் மறுக்கிறார்.

பாலிங் கெடா – 1955

துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் நாட்டை அந்நிய ஆட்சியிலிருந்து விடுவிக்க சர்வதேச அளவில் போராடிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. தேசியப் போராட்டவாதிகளான இவர்களை பிரிட்டிஷ் அரசு சுதந்திரத்திற்கான பேச்சு வார்த்தைகளைத் துவக்கி வைக்க அழைத்தது. இதன் மூலம் MCA UMNO போன்ற இனத்தைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் மலாயாவில் தோன்றின. மெல்ல மெல்ல பிரிட்டிஷ் அரசு மலாயாவிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டது. மலாயாவிற்குச் சுதந்திரம் கொடுக்கம் ஒப்புக்கொண்டது. இந்தச் சமயத்தில்தான் சின் பெங் மேலும் காட்டுக்குள்ளிருந்து சிரமப்பட வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்தார். மலாயா கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் ஓர் அரசியல் கட்சியாக மாற்றி அதன் மூலம் மலாயாவைக் கைப்பற்ற முயலலாம் என அவருக்குத் தோன்றியது.

துங்கு அப்துல் ரஹ்மான், தன் சேங் லோக், மார்ஷல் என மூவரும் சின் பெங் மற்றும் மேலும் இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் கலந்துகொண்ட ஒரு சந்திப்பு பாலிங் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. துங்கு கம்யூனிஸ்ட்டுகள் அனைவரையும் தங்கள் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் கைவிட்டுவிட்டு சரணடையுமாறு கேட்டுக்கொண்டார். நாட்டைச் சமாதான வழியிலும் சுபிட்சமாகவும் வழிநடத்த இதுவே சரியான தருணம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், சிங் பெங் தங்களின் கம்யூனிஸ்ட் சிந்தனைகளையும் கருத்துகளையும் விட்டுக்கொடுப்பதாக இல்லை என மறுத்துவிட்டார். அந்தச் சந்திப்பு அத்துடன் எந்தத் தீர்வும் காணமுடியாமல் முடிவுற்றது.

கோலாலம்பூர் – 31 ஆகஸ்ட் 1957

அதன் பிறகு சின் பெங் அவர்களுடன் எந்தச் சந்திப்புக்கும் துங்கு இணங்கவில்லை. சின் பெங் தனக்கு நிகரானவர் கிடையாது, ஆகையால் அவரைச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை எனத் துங்கு மறுத்துவிட்டார். 2000 போராளிகளை மட்டுமே வைத்திருந்த சின் பெங் தொடர்ந்து சுதந்திரம் அடைந்த மலேசியாவின் மீது தாக்குதல்களை ஏற்படுத்தினார். மலேசியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த துங்கு அப்துல் ரஹ்மானின் முதல் கடமையாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வேரைக்கூட விட்டு வைக்காமல் அழிக்க வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது. நாலாபக்கமும் இராணுவத்தைப் பலப்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தாக்குதல்களைத் தகர்க்க முற்பட்டார்.

இறுதியாக, ஓர் அமைதி ஒப்பந்தத்திற்குத் தீர்வானது. கம்யூனிஸ்ட்டுகளுக்கும் மலேசிய அரசுக்குமிடையே உருவான அந்த ஒப்பந்தம் 1989 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் கையெழுத்திடப்பட்டது. மலேசியாவைக் கைப்பற்ற முடியாத கம்யூனிஸ்ட்டுகள் இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டனர். ஒப்பந்த கையெழுத்தானதும் இத்தனை வருடங்கள் காடுகளில் இருந்து போராடிய அனைவரும் மலேசியாவில் உள்ள தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரே ஒரு மனிதர் மட்டும் நாடு திரும்ப மறுத்துவிட்டார். தோல்வியை எப்பொழுதும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் எனச் சொல்லி தாய்லாந்திலுள்ள எக்சைல் பகுதியிலேயே தங்கிவிட்டார். 82 வயதாகியும் நாடு திரும்பாமல் அங்கேயா இருக்கும் மலாயாவின் அந்தக் கடைசி கம்யூனிஸ்ட் சின் பெங் ஆவார்.

சித்தியாவானில் பிறந்து சர்வதேச அரசியல் கருத்துகளுக்கு ஆளாகி, போராளியாக வாழ்ந்து, போராடி தப்பியோடி, தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வீரவாழ்க்கை வாழ்ந்து, இப்பொழுதும் மலேசியா திரும்பாமல் இருக்கும் சின் பெங் உண்மையிலேயே தீவிரவாதியா? அமீர் இந்த ஆவணப்படத்தைக் கம்யூனிஸ்ட்டுகளை நியாயப்படுத்துவதற்காக எடுக்கவில்லை. வரலாற்றை நோக்கிப் பயணித்துள்ளார். சர்வதேச அரசியல் கருத்துகளால் பாதிப்படைபவர்களை நம்மால் 24 மணிநேரமும் கண்கானித்துத் தடுக்க முடியாது. விரிவான தேடலும் வாசிப்பும் உள்ள மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் எதை வாசிக்க வேண்டும் எதனைத் தேடிப் பயணிக்க வேண்டும் என்பதை எந்த அதிகார வர்க்கமும் தீர்மானிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு கலைஞனின் பதிவுத்தான் இப்படம்.

அமீரின் இந்த முயற்சியும் படைப்பும் தடைச்செய்யப்பட்டிருந்தாலும், மலேசியர்கள் முதிர்ச்சியானவர்கள் என்றும் விவாதிக்கும் ஆற்றல் உடையவர்கள் என்ற நம்பிக்கை அவரிடம் நிரம்பவே இருக்கின்றது. இந்த ஆவணப்படம் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் ஒளிப்பரப்பட்டு, பல விமர்சங்களையும் பெற்றுள்ளது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768