|
|
மலேசிய இலக்கியத்தில் பெண்களிடமிருந்து அபூர்வமான நவீன கவிதைகள்
பிறக்கையில் அதிகம் கவனிக்கப்பட்டவர் யோகி. அனுபவத்தை பலமாகக் கொண்டு
அமையும் அவரது ஆக்கங்கள் அனைத்து தரப்பட்ட வாசகர்களையும் கவர்பவை.
'துடைக்கப்படாத இரத்தக் கறைகள்' எனும் அவரது நூல் மிக விரைவில் வெளியீடு
காண உள்ளது. அந்நூல் எழுதிய அனுபவம் குறித்து யோகியின் பகிர்வு.
இரத்தக் கறைகள் என்ற தலைப்பின் வழி உங்கள் புத்தகம் முன் வைப்பது எதை?
தொழில் ரீதியாக பெண்கள் எதிர்க்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகளை, சங்கடங்களை
தன்னிலை சார்ந்த பார்வையில் கூறியிருக்கிறேன். துடைக்கப்படாமல் அல்லது
துடைத்தொழிக்க முடியாமல் இருக்கும் சிக்கல்களோடுதான் பெண்கள்
சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்பதை யாரும் மறுத்துக்கூறி விட முடியாது.
புத்தகத்திலுள்ள எல்லா கட்டுரைகளும் பெண்களின் வாழ்வைப் பற்றியதா?
இங்கு வாழ்வு எனும் சொல்லைக் காட்டிலும் பணியிடங்களில் நிகழும் சிக்கல்களை
நான் பதிவு செய்துள்ளேன் எனலாம். ஒரு பெண் குசினிக்குள் காலம் முழுதும்
முடங்கி கிடப்பதும் வாழ்வுதானே. வாழ்வென்பது அகன்றது. நான் சொல்ல வருவதை
இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று வேலையிடங்களில் எனக்கு நேரடியாக
நிகழ்ந்தவை. மற்றது சாதாரணமாகவே பெண்களின் வாழ்க்கையில் நடப்பது. ஆனால்
தொழில் ரீதியில் என்று பார்க்கும் போது கசப்பான சம்பவங்களை ஆண்பெண்
இருவருமே சந்திக்கிறார்கள். அதை எதிர்க்கொள்ளும் விதம்தான் மாறுபடுகிறது.
இதை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பார்வையாக மட்டும்
குறுக்கியுள்ளீர்களா அல்லது பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் பெண்களின்
ஒடுக்குமுறை குறித்து பேசியுள்ளீர்களா?
மலேசியாவின் ஒட்டுமொத்த பெண்களின் வாழ்வை என் எழுத்து இன்னும் கூற வில்லை.
மலேசியாவில் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் இந்தியர்கள். அந்தச்
சிறுபான்மையில் ஒடுக்கப்படும் அங்கத்தினர் பெண்கள். மலாய் பெண்கள்
பூமிபுத்ரா அங்கீகாரத்தோடும் சீனப்பெண்கள் பிறப்பிலேயே பணபலத்தோடும்
இந்தியப்பெண்கள் இவை இரண்டுமே இல்லாமல் இருக்கிறார்கள். உடல் சார்ந்து
அனைவரும் பெண்கள்தான் என்றாலும் சந்திக்கும் பிரச்சனைகளும் அதற்கான
தீர்வுகளும் இங்கே வெவ்வேறாக உள்ளது. பணிசெய்யும் இடங்களில் ஏற்படும்
மனரீதியான சங்கடங்களை தொட்டுதான் எழுதி இருக்கேன். இது ஒரு முழுமையான ஆய்வு
என்று கூறிவிட முடியாது. குறிப்பிடும் தூரத்தை என்னால் முடிந்தவரை
கடந்திருக்கிறேன்.
புத்தகம் உருவானதற்குப் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
முக்கியமாக வல்லின ஆசிரியர் ம. நவீன் இருக்கிறார். எனக்கு ஒரு வாய்ப்பை
வழங்கியதுடன் பத்திகளை திருத்தி செம்மைபடுத்தி அது புத்தகவடிவுக்கு
தகுந்ததாக அடையாளப்படுத்தி இருக்கிறார். வல்லின இலக்கிய வட்டத்தின்
அலோசனைகளும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி இருக்கின்றன. இவற்றை விடவும்
மேலாக எனக்கு எந்த சூழலிலும் ஆதரவையும் அன்பையும் கொடுத்து உற்சாகப்
படுத்தியர் என் துணைவர். அனைவருக்குமே நான் நன்றி சொல்ல கடைமை பட்டுள்ளேன்.
உங்கள் புத்தகம் இந்தச் சமூகத்தில் உருவாக்கப் போகும் விளைவுகள் என்னவாக
இருக்கும்?
தெரியவில்லை. இந்த கேள்விக்கான விடையையோ அல்லது அதன் விளைவுகளையோ காலம்தான்
பரிசீலித்து சொல்ல வேண்டும். நான் வெறும் அம்பாகதான் பாய்ந்திருக்கிறேன்.
யாருக்கேனும் காயம் பட்டிருந்தால் வலியை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
மலேசியச் சூழலில் இந்தப் புத்தகம் எந்தமாதிரியான வரவேற்பைப் பெறும் என
நினைக்கிறீர்கள்?
வரவேற்கவும் வணிக நோக்கத்துக்காகவும் இது எழுதபடவில்லை. மலேசியப் பெண்களில்
நானும் ஒருத்தியாக இருக்கிறேன். சந்திக்கும் பிரச்சினைகளையும் சவால்களையும்
அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் நான் எப்படி எதிர்கொண்டேன் என்ற
வெளிப்படையான எதார்த்தம் மட்டுமே நூலில் இருக்கிறது. எதார்த்தத்துக்கும்
உண்மைக்கும் எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு உண்டென நான் நம்புகிறேன்.
இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள் அடையும் மாற்றம் என்னவாக இருக்கும்?
வெளிநாட்டவர்கள் பலர், நம் நாட்டை வளர்ந்துவிட்ட அல்லது உலகத்தரத்திலான
மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட ஒரு நிலபரப்பாகவே நம்புகிறார்கள். ஆனால் நம்
சமுதாயத்தை பொறுத்தவரை நாம் எப்படி இருக்கிறோம் என்று பார்க்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம். நான் இதில் எந்த அறிவுரையும் கூறவில்லை. அதை
இலக்கியத்தில் செயல்பாடாகக் கருதவில்லை. இந்த சமூகத்தைக் கூர்ந்து நோக்கி
அதன் பலவீனங்கள் குறித்து பதிவு செய்திருக்கிறேன். அந்தக் பதிவை
வாசிப்பதால் மட்டுமே எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை. மாற்றங்கள்
அதுவாகவே நிகழ வேண்டும். அப்படி நிகழும் போது இந்த நூல் ஒரு சாட்சியாக
இருக்கும்.
இந்தச் சமூகம் பெண்களின் மீது வைக்கும் மதிப்பீடுகளை மறுவிசாரணை செய்வதாக
உங்கள் நூலை அறிமுகப்படுத்தலாமா? உங்கள் கருத்து என்ன?
நான் முன்பே கூறியதைப் போல் மதிப்பீடுகளை மறுவிசாரணை செய்யும் அளவுக்கு இது
ஒரு முழுமையான நூல் என்று கூறிவிட முடியாது. இன்னும் சொல்ல போனால் அப்படி
ஒரு நூல் மலேசிய சூழலில் இன்னும் வரவில்லை என்றே சொல்லலாம். இங்கே
எழுதுவதற்கு ஒரு தடையும் இல்லை. ஆனால் மறுவிசாரணை செய்யும் அளவு
எழுதுவதற்க்கு சில பிரச்சனைகள் உண்டு. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும்
இருந்தாலும் எழுத்து சுதந்திரம் வாய்ப்பதில்லை. சிலவற்றை மாம்பழத்தை
கடிப்பது போன்று சுவைத்து சொல்ல முடியாது; கடிந்துதான் சொல்ல
வேண்டியுள்ளது. ஆனால் முயன்று பார்க்கலாம். தலையை கொய்து விட மாட்டார்கள்.
உங்கள் நூலை எழுதுவதற்கு என்ன மாதிரியான ஆய்வுகளை தரவுகளை பெற்றீர்கள்
அல்லது மேற்கொண்டீர்கள்?
ஆய்வுகள் ஒன்றும் செய்யவில்லை. புத்திக்கு தெரியாமல் மனதின் கடைசி இடத்தில்
ஒளித்து வைத்திருந்த சம்பவங்கள் அவை. மறந்தும் மறக்காமல் தங்கி போனவை. மனதை
கிளரும்போது கொஞ்சம் வலி இருந்தது. அவை எந்த அளவுக்கு மனதை ரணப்படுத்தி
இருந்தன என்பதை பத்தியை எழுதும் போதுதான் முழுதாக உணந்தேன். உண்மைகள்
மட்டுமே என் புத்தகத்துக்கு தரவுகளாக இருந்தன.
நூல்வெளியீடு விபரங்கள்:
நாள் : 5.2.2012 (ஞாயிறு)
இடம் : சோமா அரங்கம், துன் சம்பந்தன் கட்டடம்
நேரம் : மதியம் 2.00
சிறப்பு பேச்சாளர்கள் : பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் ஆதவன் தீட்சண்யா
|
|