முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 38
பிப்ரவரி 2012

  வல்லினம் பதிப்பக நூல்கள்: எழுத்தாளர்களுடனான நேர்காணல்
"நல்ல கவிதைகளில் வார்த்தைகள் ஆடைகள் மட்டும்தான்"
ரேணுகா
 
 
       
நேர்காணல்:

‘இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்’

கருணாகரன்



வல்லினம் பதிப்பக நூல்கள்: எழுத்தாளர்களுடனான நேர்காணல்


உண்மைகள் மட்டுமே என் புத்தகத்துக்கான தரவுகள்
யோகி

சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்
கே. பாலமுருகன்

நல்ல கவிதைகளில் வார்த்தைகள் ஆடைகள் மட்டும்தான்
ரேணுகா



கட்டுரை:

நாடு திரும்பாத கடைசி கம்யூனிஸ்ட் (ஆவணப்படம்) - அமிர் முகமாட் (மலேசியா)
கே. பாலமுருகன்

வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'
ஷம்மிக்கா



வல்லினம் கலை, இலக்கிய விழா 4:

கலை இலக்கிய விழா 4 : இன்னொரு தொடக்கம்
ம. நவீன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...28

ராஜா

சின்னப்பயல்

துரோணா

ந. பெரியசாமி

ஸ்ரீவிஜி

ரேணுகா என்ற பெயரில் எழுதிவரும் சிவா பெரியண்ணனின் கவிதை தொகுப்பு வல்லினம் பதிப்பில் இம்மாதம் வெளியீடு காண்கிறது. புனைவு மற்றும் அல்-புனைவுகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் அவர் தன் கருத்துகளை இவ்வாறு பகிர்கிறார்.

கேள்வி : இந்த கவிதைத் தொகுப்புக்கு ஏன் “என்னை நாயென்று கூப்பிடுங்கள்” எனும் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ரேணுகா : 'இன்டர்லோக்' (Interlok) நாவல் நாடு முழுக்க ஏற்படுத்திய எதிர்ப்பு அலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அதனை பாடத்திட்டத்திலிருந்து அகற்றுவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்தது. இந்த நாவலை பாடத்திட்டத்தில் கொண்டு வந்ததற்கு அரசாங்கத்திற்கு ஒரு நோக்கம் உண்டு. நாடு சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மலேசிய சீனர்களும், இந்தியர்களும் வந்தேறிகள் என்பதை இளைய தலைமுறைக்கு நினைவுப்படுத்த வேண்டிய நியாயமான கடப்பாடு தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், சாதி உணர்வு புரையோடி போயிருக்கும் நம் சமூகத்தில், பறையன் என்ற சொல்லை முன்வைத்து ஏற்பட்ட எதிர்ப்பு அலை மிகவும் போலித்தனமான ஒன்றாகவே எனக்குப்பட்டது. அந்த எதிர்ப்பு அலைக்கு காரணம் இல்லாமல் இல்லை. மலேசிய இந்தியர்களை பொத்தாம் பொதுவாக பறையன் என்று அடையாளப்படுத்துகிறது அந்நாவல். பிறகு எப்படி பொறுத்துக் கொள்வான் மலேசிய இந்தியன்? நாய் என்பது மலேசிய இந்தியனுக்கான குறியீடு. அரசியல் பலத்தால் ஒரு சமூகமும், பொருளாதார பலத்தால் இன்னொரு சமூகமும் தத்தம் வேர்களை பலப்படுத்திக்கொண்டு வரும் நிலையில், மலேசிய இந்தியனின் நிலை இங்கு நாய் பாடுதான் என்றால் மிகையாகாது. மலேசிய இந்தியன் என்ற வகையில் நம்மை அரசாங்கம் நாய் போல் நடத்தலாம், நாயென்றும் கூப்பிடலாம். ஆனால், நாய்களிலே நாங்கள் உயர்சாதி நாய்களும் இருக்கிறோம். அதனால் தெருநாய் என்று எங்களை பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்தக்கூடாது என்பதை முன்வைத்து மேலோங்கிய போராட்டமாகவே 'இன்டர்லோக்' நாவல் பிரச்னையை என்னால் பார்க்க முடிகிறது. அந்த பிரச்னைக்கான போராட்டம் உச்சத்திலிருந்த 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் எழுதப்பட்ட கவிதை 'என்னை நாயென்று கூப்பிடுங்கள்'. இந்த தொகுப்பின் சாராம்சமாக இந்தக் கவிதையையே நான் கருதுகிறேன். எனவே, அதனையே தலைப்பாக்கியுள்ளேன்.

கேள்வி : உங்கள் கவிதைகள் எக்காலக்கட்டத்தில் எழுதப்பட்டவை? ஏதேனும் பரிசுகள் பெற்றுள்ளனவா?

ரேணுகா : 2001 தொடங்கி 2011 வரை பத்தாண்டு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய 50 கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். அதில் ஏறக்குறைய 20 கவிதைகள் கைவசம் இல்லை. சேமித்தவற்றை மட்டுமே தொகுக்க முடிந்தது. 2003-ம் ஆண்டில் மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர்களுக்கான கவிதைப்போட்டியில் என்னுடைய கவிதை ஒன்று பரிசுப்பெற்றது. அதன்பிறகு போட்டிகளுக்கு நான் கவிதைகளை அனுப்பியதில்லை.

கேள்வி : கவிதைகளின் வழி நீங்கள் முன்வைக்கும் கருத்தாக்கங்கள் எதனைச் சார்ந்தவை?

ரேணுகா : கவிதைகளை நான் திட்டமிட்டு எழுதுவதில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என்னை மனவெழுச்சிக்கு ஆட்படுத்தும் விசயங்கள் வார்த்தைகளாக வரிக்கொள்வதாகவே நான் கருதுகிறேன். தன்னிச்சையாக நிகழும் கவிதைகள் மூலம் எந்தக் கருத்துக்களையும் நான் முன்வைப்பதில்லை. மேலும், கவிதைகள் பரிமாணங்களை கொண்டவை. நெகிழ் தன்மை உடையவை. அந்த நெகிழ் தன்மை வாசகனில் உருவாக்கும் வடிவம்தான் அந்த கவிதைக்கான இறுதி வடிவம். ஒருவருக்கு சதுரமாகவும் இன்னொருவருக்கு வட்டமாகவும் அது நிலைகொள்ளலாம். தொடர்ந்த உரையாடல் மூலம் ஒரு பொதுப்புரிதலுக்கு நாம் வரலாம். இருப்பினும், எழுதப்படும் எல்லா கவிதைகளுக்கும் உரையாடல் என்பது சாத்தியப்படக்கூடியதல்ல.

கேள்வி : உங்களின் சில கவிதைகள் உறவுகள் குறித்த தீராத ஏக்கங்களைச் சொல்வது போலவும் (குறிப்பாக அம்மா குறித்து) சில கவிதைகள் உறவுகளை விட்டு விலகுவது போலவும் அமைந்துள்ளன. இந்த நவீன வாழ்வில் உறவுகள் குறித்த உங்கள் புரிதல் என்ன?

ரேணுகா : புரியாமைதான். நேரிடையானதும், இலகுவானதுமான உறவுகள் இன்றைய வாழ்வில் இடியாப்பச் சிக்கலாக உள்ளன. என்னளவில் உறவுகளை சற்று தள்ளி நின்றே (detached) கவனிக்கும் மனப்போக்கை கொண்டிருக்கிறேன். என்னை மிகவும் பலவீனமாக நான் உணர்வது உறவுகளின் பிடியில்தான். என் கவிதைகளில் வெளிப்பட்டுள்ள ஏக்கங்கள் என்னில் தேங்கி இருக்கும் எச்சங்கள். இந்த கவிதைகள் வழி அவற்றையும் கடந்து விட முயல்கின்றேன்.

கேள்வி : உங்களுடைய புத்தகம் கொண்டிருக்கும் அரசியல் நிலைபாடு என்ன?

ரேணுகா : அரசாங்கத்தைத் திட்டிக்கொண்டே ஒரு அரசாங்க அதிகாரியாக பணியாற்றி கொண்டிருக்கிறேன். இந்தத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் நான் ஒரு சந்தர்ப்பவாதி. ஒரு சந்தர்ப்பவாதிக்கு என்ன அரசியல் நிலைப்பாடு இருந்து விட முடியும்.

கேள்வி : உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலும் பிரசுரிப்பதன் நோக்கம் என்ன?

ரேணுகா : இந்தத் தொகுப்பு மட்டுமல்ல. மலேசியாவில் வரக்கூடிய தரமான தமிழ் படைப்புகள் அனைத்தும் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மேலும் பரவலான வாசகர் வட்டத்தை அது அடையக்கூடும். மலேசியச்சூழலில், தமிழ் எழுத்தாளர்கள் மிகச் சிறிய வட்டத்திற்குள்தான் இயங்க முடிகின்றது. தற்கால மலாய், ஆங்கில சிறுகதை, நாவல் ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்களுக்கு இணையான தமிழ் எழுத்தாளர்கள் நம்மிடையே உண்டு. இருப்பினும், நமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. எனவே, இந்தத் தொகுப்பை ஆங்கிலத்திலும் கொண்டு வர வேண்டும் என விரும்பினேன். நண்பர் ம. நவீன் அவர்களின் கவிதைத் தொகுப்பும் (சர்வம் பிரம்மாஸ்மி) இதுபோல இரு மொழிகளில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. என் கவிதைகளை சிரமம் பாராது ஆங்கிலத்தில் மறுபுனைவு செய்து கொடுத்த நண்பர் சிங்கை இளங்கோவன் என் அன்புக்கு உரியவர். இந்த தொகுப்பில் உள்ள கவிதைகளை மலாயிலும் மொழிபெயர்க்கும் திட்டம் உள்ளது. உதவ முடிந்தவர்கள் என்னைத் தொடர்ப்பு கொள்ளலாம். என் மின்னஞ்சல் riasiva@gmail.com

கேள்வி : பிற மலேசியக் கவிதைகளிலிருந்து உங்கள் கவிதைகள் எப்படி வேறுப்படுகின்றன? ஏதேனும் தனித்துவம்?

ரேணுகா : தனித்துவம் என்று எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை. பொதுவாகவே சக எழுத்தாள நண்பர்கள் கையாளும் கருவையே என்னுடைய கவிதைகளும் பேசுகின்றன என்றே நான் நினைக்கின்றேன். எப்படி வேறுபடுகின்றன என்பதை விமர்சகர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.

கேள்வி : உங்கள் புத்தகம் இந்தச் சமூகத்தில் உருவாக்கப் போகும் விளைவுகள் என்னவாக இருக்கும்?

ரேணுகா : பொதுவாக மலேசியர்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவு என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அதுவும் மலேசிய இந்தியர்களிடையே இலக்கிய வாசிப்பு என்பது ஒரு ஒரு கெட்ட செயலுக்கு ஒப்பான ஒரு விசயமாகவே கருதப்பட்டு வருகிறது என்பது கண்கூடான விசயம். பள்ளி, கல்லூரி பாடங்களை படித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும். இலக்கியம் படித்து கெட்டுப்போகக்கூடாது என்று கருதும் ஒரு சபிக்கப்பட்ட சமூக வெளியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னுடைய புத்தகம் ஒரு மிகச் சிறிய எண்ணிக்கையிலான வாசகர்களால்தான் வாசிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். புத்தகத்தின் தலைப்பை மட்டும் பார்த்து, என்ன தலைப்பு இது? இப்படியெல்லாம் தலைப்பு வைக்கலாமா? என்று ஒரு நண்பர் கேட்டதாக இன்னொரு நண்பர் சொன்னார். எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. வேறு தலைப்பு வைத்திருக்கலாமோ என்று இப்போது எண்ணுகிறேன். ஆனால், ஒன்றும் செய்வதற்கில்லை. புத்தகம் அச்சடித்தாகிவிட்டது. படித்துவிட்டு இனி என்னை நாயென்றே சமூகம் கூப்பிடலாம்.

கேள்வி : மலேசியச் சூழலில் இந்தப் புத்தகம் எந்தமாதிரியான வரவேற்பைப் பெறும் என நினைக்கிறீர்கள்?

ரேணுகா : தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, இப்பொழுது செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு முழு நேர கவிஞனாகிவிடும் எண்ணமும் உண்டு. பார்ப்போம்.

கேள்வி : புத்தகம் உருவானதற்குப் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

ரேணுகா : தொகுப்பு வெளிவர முதன்மை காரணம் நண்பர் ம. நவீன். அவரது அயராத உழைப்பால் வல்லினம் பதிப்பகம் மூலம் தொடர்ந்து புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், என் கவிதைகளை ஆங்கிலத்தில் மறுபுனைவு செய்ததோடு மட்டுமல்லாமல் புத்தக அட்டை தொடங்கி உள்ளடக்கம் வரை தீவிர கவனம் செலுத்தி, ஆலோசனைகள் வழங்கிய நண்பர் சிங்கை இளங்கோவன் அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு.

கேள்வி : மலேசிய இலக்கியச் சூழலில் கவிதை வாசிப்பு எப்படி இருக்கிறது? உங்கள் புத்தகம் அத்தகைய வாசிப்புச் சூழலை எப்படி மாற்றியமைக்கும் என நினைக்கிறீர்கள்?

ரேணுகா : கவிதைகள் காட்சிப்பிழைகள் நிரம்பியவை. உங்களுக்குத் தெரிந்த மொழியையும், உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளையும் அர்த்தமிழக்கச் செய்பவை. நல்ல கவிதைகளில் வார்த்தைகள் ஆடைகள் மட்டும்தான். நிர்வாணத்தை காட்சிப்படுத்த முனையும் கவிஞன் வார்த்தைகளை ஆடைகளாக நெய்து வைக்கிறான். ஏனெனில் நிர்வாணத்தை பொதுவில் வைக்க சமூகம் சம்மதிக்காது. நிர்வாணம் உங்களை நிம்மதியிழக்கச்செய்யக்கூடும். நிர்வாணம் உங்கள் முகத்தில் அறையக்கூடும். ஆடை விலக்கிப் பார்க்க தயாராகயிருந்தால் மட்டுமே கவிஞன் காட்டும் தரிசனத்தை நீங்களும் உணரக்கூடும். வார்த்தைகள் அர்த்தமிழக்கும் புள்ளியில்தான் நல்ல கவிதைகள் தொடங்குகின்றன என்றே நான் நம்புகின்றேன். மலேசிய இலக்கியச் சூழலில் நான் நம்புவதை எத்தனைப் பேர் நம்புகின்றார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. கவிதைகள் என்று மட்டுமல்ல. பொதுவாகவே இலக்கிய வாசிப்பு என்பது கடுமையான உழைப்பைக் கோருவது. அத்தகைய உழைப்பைத் தருவதற்கு தயாராக இருப்பவர்கள் சிறுபான்மையினரே. வல்லினம், செம்பருத்தி மற்றும் திசைகள் இதழ்களில் (இணைய மற்றும் அச்சு இலக்கிய இதழ்கள்) வெளிவந்தபோது மிக சிறிய எண்ணிக்கையிலான வாசகர்களாலேயே கவனிக்கப்பட்டவை என் கவிதைகள். இந்தச் சூழலில் என்னுடைய புத்தகம் சமூகவெளி என்னும் சமுத்திரத்தை நோக்கி எறியப்படும் சிறு கல்லாக மட்டுமே எஞ்சும் என்றே நான் நினைக்கிறேன்.

நூல்வெளியீடு விபரங்கள்:

நாள் : 5.2.2012 (ஞாயிறு)
இடம் : சோமா அரங்கம், துன் சம்பந்தன் கட்டடம்
நேரம் : மதியம் 2.00
சிறப்பு பேச்சாளர்கள் : பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் ஆதவன் தீட்சண்யா

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768