|
|
அன்ட்ஸ் : பாதம் பட காத்திருக்கும் பாதைகள்
“Think for yourself rather than follow orders all
your life” – Antz, 1998
நான் என் வகுப்பில் பயிலத் தொடங்கும் குழந்தைகளுக்கு
ஆரம்ப நிலை பயிற்சிகளாக சிலவற்றை வழங்குவதுண்டு. பொதுவாக அப்போதுதான்
எழுதத் துவங்கும் குழந்தைகளுக்கு , படங்களுக்கு வண்ணம் தீட்டுதல்,
அழுத்தமாக எழுதப்படாத எழுத்துகளின் மீது மீண்டும் எழுதும் பயிற்சிகள்,
விடுப்பட்டத் தொடர்க் கோடுகளை இணைத்து முழு எழுத்தின் வரிவடிவத்தையோ அல்லது
ஒரு பொருளையோ வரையும் பயிற்சிகள் போன்ற எளிமையான பயிற்சிகளையே வழங்குவேன்.
மேலும் குழந்தைகள் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் படங்களில் எந்த படம்
வேறுபட்டு இருக்கிறதோ அதற்கு பிழைக்குறி இடுவது அல்லது வட்டமிடுவது என்ற
ஒரு வகை பயிற்சியையும் செய்வதுண்டு. உலக அளவிலும் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு
இந்த வகை பயிற்சிகள் வழங்கப்பட்டே வருகின்றன. இந்தப் பயிற்சியினால்
பெரிதாய் எந்தத் தீங்கும் விளையாது என்றாலும் கூட கூர்ந்து நோக்கின்
குழந்தைகள் ஒருமித்தத் தன்மையுடைய வரிசையில் ஒத்துப் போகாத ஒன்றைப் பிழை
என்று நம்பும் மனோபாவத்தை நாம் அறியாமலே அவர்களின் மனங்களில் விதைக்கிறோம்.
மேலும் பள்ளிகளில் வரிசை களையாமல் ஒரே மாதிரி விரைத்து நிற்கப் பழகும்
குழந்தைகள் குடும்பங்களிலும் பாதுகாப்புக் கருதி அணைத்திலும் சுயச்சிந்தனை
இன்றி பெரியவர்களின் கட்டளைகளை அப்படியே ஏற்று நடக்கப் பழகுகின்றன. குழந்தை
பருவத்தில் இந்நிலை சரிதான் எனினும் இதன் தொடர்ச்சியாக இளைஞர்களாக வளர்ந்த
பிறகும் கூட ஒரு குழுவில் அல்லது சமூகத்தில் வேறுபட்டு நிற்பது பிழை என்றே
அவர்களில் பலர் நம்ப ஆரம்பிக்கின்றனர்.
மொத்தத்தில் நம் பள்ளிகளும் சமூகமும் தாங்கள் முன்மாதிரிகளாக கருதும்
சிலரின் அல்லது நல்லவை என வரையறுக்கப்பட்ட பழக்கவழக்கங்களைக் கொண்ட
ஆயிரமாயிரம் நகல்களைத் தான் உருவாக்குகின்றன. இப்படி இருப்பதில்
இடர்பாடுகள் குறைவுதான். ஓர் அலுவலகத்தில் இருபது முப்பது ஆண்டுகளாய் ஒரே
வேலையை மீண்டும் மீண்டும் செய்து, பணி ஓய்வுப் பெற்று இறுதி காலங்களில்
ஓய்வூதியம் பெருவதைப் போல் மிக பாதுகாப்பானதுதான். ஆனாலும் இந்த நிலை
சாதனைகள் படைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றதல்ல. யாரும் பிரவேசிக்காத
பாதையிலும்கூட தன்னம்பிக்கையுடன் பயணப்பட்டவர்களே இவ்வுலகில் தங்களின்
பெயர்களை நிலைக்கச் செய்திருக்கின்றனர்.
1998 ஆம் ஆண்டு வெளியான ஒரு முழுநீல சிறப்புப் பண்பியலுடைய இயக்கவூட்டத்
திரைப்படமான அன்ட்ஸ் (Antz) இது போன்று தன் சமூக கட்டமைப்புகளை உடைத்துத்
தனக்கான பாதையைத் தானே தேர்வு செய்யத் துணியும் ஒரு ஆண் எறும்பின்
கதையாகும். ஓர் அமெரிக்கத் திரைப்படமான இது, Dreamworks நிறுவனத்தின் முதல்
திரைப்படமும் மேலும் CGI (Computer Generated Imagery) தொழிற்நுட்பத்தின்
வழி தயாரிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் திரைப்படமும் ஆகும்.
இந்தப் படத்தின் கதைநாயகன் ‘சீ’ (Zee) என்பவன் நியூ யார்க் (New York)
நகரத்தில் அமைந்த ஒரு நுண்ணுயிர் குடியிருப்பில் வாழும் எறும்புகளில்
ஒருவனாவான். தொழிலாளிகள், போர் வீரர்கள், அரசக் குடும்பத்தினர் என மூவகை
குழுவினராய் வாழும் எறும்புகளில் சீ ஒரு தொழிலாளி. சீ பிறந்தது முதல் ஒரே
இடத்தில் இருப்பதும் தனக்கு இடப்படும் கட்டளைகளை எல்லோரையும் போல ஏற்றுத்
தொடர்ந்து ஒரே வேலையைச் செய்வதும் அலுத்துப் போய் ஒரு வகை மன இறுக்கத்துடன்
இருக்கிறான். தனக்கென்று வேறொரு தேர்வு இருக்கக்கூடுமா என ஏங்கியபடி
இருக்கிறான். இந்நிலையில் சீக்குத் தன்னுடன் வேலை செய்யும் பெண்
எறும்பான‘அஸ்திக்காவும் (Azteca) போர் வீரன் வீவரும் (Weaver) நண்பர்களாக
இருப்பது ஆறுதலைத் தருகிறது.
அந்த எறும்புகள் ராஜ்யத்தின் இளம் அரசகுமாரி பாலா (Bala) என்பவள் ஆவாள்.
இவளுக்கும் திரைப்படத்தின் எதிர்மறை பாத்திரமான படைத் தளபதி மண்டீபளுக்கும்
(General Mandible) திருமணம் செய்து வைக்க அரசி முடிவெடுத்து இருக்கிறாள்.
பாலா தன் வருங்கால கணவன் மண்டீபளுடன் பேசி பழக முயற்சிக்கிறாள். ஆனால்
மொத்த ராஜ்ஜியத்தையும் தன் வசமாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை
எதிர்பார்த்து அதற்காக மட்டுமே திட்டம் போடும் மண்டீபளின் மூளையில் காதல்
உறைப்பதற்கில்லை. பாலாவும் சீயைப் போலவே தனக்கான வாழ்க்கைக்கு வேறொரு
தேர்வு இருக்கக்கூடுமோ என ஏங்குகிறாள்.
ஒரு நாள் பாலா அரண்மனையிலிருந்து தப்பித்து ஒரு மது விடுதிக்கு வருகிறாள்.
அங்கே சீ பாலாவைக் காண்கிறான். கண்டதும் காதல் கொள்கிறான். இருவரும்
சேர்ந்து நடனமாடுகிறார்கள்; பிரிகிறார்கள். அரண்மனைக்குத் திரும்பும் பாலா
சீயை மறந்து விடுகிறாள். ஆனால் சீயோ பாலாவையே நினைத்தபடி இருக்கிறான். அவளை
மீண்டும் பார்க்க எண்ணுகிறான். போர் வீரனாக இருக்கும் வீவரோடு தன் இடத்தை
மாற்றிக் கொள்வதைத் தொடர்ந்து வீவர் தொழிற்கிடங்குக்கும் சீ போர்வீரர்கள்
கூடும் மைதானத்துக்கும் செல்கின்றனர். போர்வீரர்கள் கூடும் மைதானத்தில்
தளபதி மண்டீபள் தனக்குச் சாதகமான வலிமையுள்ள போர்வீரர்களை மட்டுமே கொண்ட
புதிய சாம்ராஜ்யத்தைத் தொடங்கும் உள்நோக்கத்தோடு, அரசிக்கு விசுவாசமாக
இருக்கும் வலிமையற்ற எறும்பு வீரர்களை மூளைச்சலவை செய்து ராட்சசக்
கரையான்களோடு போரிட்டு மடியச் செய்யத் திட்டமிடுகிறான். விபரீதம் அறியாமல்
போர்வீரர்களோடு அணிவகுத்து நிற்கும் சீ இளவரசி பாலாவைக் கண்ட மன
எழுச்சியில் கையசைத்துத் தன்னை அடையாளம் காட்ட முயற்சிக்கிறான். அச்சமயம்
பார்பாட்டஸ் (Barbatus) என்னும் போர்வீரன் சீயிடம் நடக்கவிருக்கும் போரின்
பயங்கரத்தை விளக்குகிறான். உண்மையறிந்து தன்னைச் சுதாகரித்துக் கொள்வதற்கு
முன்பே சீ போர்க்களத்தை அடைகிறான்.
அங்கே மறைந்திருந்த நஞ்சைப் பீச்சும் கொடிய ராட்சசக் கரையான்கள் எட்டுத்
திசைகளிலிருந்தும் திடுமென வெளியேறி போர்வீரர்களைத் தாக்கி கொன்று
குவிக்கத் தொடங்கின. நிலைமையைக் கண்டு மருண்டுபோன சீ தற்செயலாய் ஒரு
பொந்தில் விழுகையில் அங்கேயே ஒளிந்து கொள்கிறான். சிறிது நேரத்தில் போர்
முடிவுற்று அவயங்கள் அறுப்பட்ட நிலையில் எறும்பு வீரர்களின் பிணங்கள்
போர்க்களத்தில் குவிந்து கிடக்கின்றன. பொந்திலிருந்து வெளியேறும் சீ உடலில்
இருந்து அறுப்பட்ட பார்பட்டஸின் தலையை மட்டும் காண்கிறான். இறக்கும்
தருவாயில் இருக்கும் பார்பட்டஸ் இறுதியாக சீயிடம் ஒரு பெரும் வாழ்க்கை
உபதேசத்தைச் சொல்லுகிறான்; தன் வாழ்நாள் முழுக்க பிறரின் கட்டளைகளை மட்டுமே
ஏற்றுச் செயலாற்றி தான் செய்தத் தவறை மீண்டும் செய்துவிடாமல், சீ,
அவனுக்காகவும் யோசித்துச் செயலாற்றத் துணியும்படி கேட்டுக் கொண்டு உயிர்
விடுகிறான் பார்பட்டஸ். இந்தச் சம்பவம் சீயின் வாழ்க்கையில் பெரும்
திருப்புமுனையாக அமைகிறது.
குடியிருப்புக்குத் திரும்பிய சீ, போரில் உயிர்த்தப்பிய ஒரே வீரன் என்பதால்
மக்களால் கொண்டாடப் படுகிறான். அரசியைச் சந்திக்க சீயை மண்டீபள்
அரண்மனைக்கு அழைத்து வருகிறான். அங்கே இளவரசி பாலா தன்னுடன் நடனமாடிய ஒரு
தொழிலாளிதான் சீ என்பதைக் காட்டிக் கொடுக்கிறாள். பாலாவின் செய்கை
நோக்கமற்றதாய் இருப்பினும் தான் ஒரு குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டதைத்
தொடர்ந்து பாலாவை பிணையாகக் கொண்டு சீ அரண்மனையிலிருந்து தப்பித்துப்
போகிறான்.
முன்பு ஒருநாள் மதுவிடுதியில் இன்செக்தோப்பியா (Insectopia) என்னும் ஓர்
இடம் இருப்பதாக ஓர் எறும்பு நண்பன் சொல்லக் கேட்டிருந்த சீ
அரண்மனையிலிருந்து தப்பித்தக் கையோடு பாலாவையும் பொருட்படுத்தாமல்
அவ்விடத்தைத் தேடிச் செல்கிறான். ஒரு வெட்டுக்கிளியிடமிருந்து அப்போதுதான்
உயிர்த் தப்பும் பாலா, வேறுவழியின்றி சீயைப் பின்தொடர்கிறாள். இறுதியில்
இருவரும் இன்செக்தோப்பியாவை அடைகின்றனர். மீதப்பட்ட நிறையத்
திண்பட்டங்களும் சுவைபானங்களும் நிறைந்த குப்பைமேடான இன்செக்தோப்பியாவில்
பாலா சீயின் மீது காதல் வயப்படுகிறாள். இருவரும் மற்ற வகை பூச்சிகளுடனும்
சேர்ந்து உணவுகளுக்கும் கேளிக்கைகளுக்கும் பஞ்சமில்லாத இன்செக்தோப்பியாவின்
சூழலை அனுபவித்து வாழத் தொடங்குகின்றனர்.
இதற்கிடையில் சீ ஓர் அடிமைப்படுத்தும் இராணுவ ஆட்சியின் மரபுகளையும்
வரையறைகளையும் உடைத்துத் தன் தனித்தன்மையை நீரூபித்தத் துணிகரச் செயல்
அவனின் பழையக் குடியிருப்பில் வாழும் ஏணைய எறும்புகளின் மனதில் ஒரு
புரட்சியை ஏற்படுத்துகிறது. சில எறும்புகள் தொடர்ந்து கட்டளைகளை ஏற்று வேலை
செய்ய முடியாது என சுய எதிர்ப்பைக் காட்டத் தொடங்குகின்றன. இதனால் கலவரம்
அடையும் தளபதி மண்டீபள் ஒரு நீர் மூலத்தோடு இணைக்கும் சுரங்கப் பாதையைத்
தோண்டி எல்லா எறும்புகளையும் ஒரே இடத்தில் திரட்டி நீரில் மூழ்கவைத்துக்
கொல்லத் திட்டமிடுகிறான். ஒன்றாய்த் திரளும் எறும்புகளிடம் ஒரு சுரங்கப்
பாதையைத் தோண்டுவதன் வழி அனைவருக்கும் புதிய குடியிருப்பும், உழைப்புக்குத்
தகுந்த ஓய்வும் கிடைக்கும் எனக் கூறி நம்ப வைக்கிறான். அணைத்து
எறும்புகளும் அச்சுரங்கப் பாதையைத் தோண்டுவதற்கு மீண்டும் உழைக்க
ஆரம்பிக்கின்றன.
தொடர்ந்து, சீயின் மீது கடும்கோபத்தில் இருக்கும் மண்டீபள் அவனின்
நண்பர்களான அஸ்திக்காவையும் வீவரையும் கைது செய்து சீ இருக்கும் இடத்தை
அறிகிறான். தன் உதவியாளரான கட்டரை (Cutter) அனுப்பி பாலாவைக் கடத்தி வரப்
பணிக்கிறான். பாலா கடத்திச் செல்லப்பட்ட செய்தி அறியும் சீ அவளைத் தேடி
மீண்டும் அரண்மனைக்கு வருகிறான். மண்டீபளின் சதி திட்டத்தை முழுவதுமாக
அறிந்த பாலாவைச் சீ மீண்டும் மண்டீபளின் அலுவலகத்தில் சந்திக்கிறான்.
பாலாவும் சீயும் இணைந்து தங்களின் மக்களுக்கு எதிரான மண்டீபளின் திட்டத்தை
முறியடிக்க முடிவு செய்கின்றனர். சீ இரகசியமாக தொழிலாளர்களைச் சந்தித்துச்
சுரங்கத்தைத் தோண்டும் வேலையைத் தொடர வேண்டாம் என மன்றாடுகிறான். ஆனால்
சீயுக்குச் செவி சாய்க்காத தொழிலாளன் ஒருவன் மேலும் தோண்ட நிலம் உடைத்த
நீர் குடியிருப்பில் வெள்ளமாய்ப் பாயத் தொடங்குகிறது. இந்த
பேராபத்திலிருந்து சீ தன் சமூகத்தைக் காப்பாற்றினானா? மண்டீபளின் திட்டம்
முறியடிக்கப்பட்டதா? சீயும் பாலாவும் இணைந்தார்களா? என்பனவற்றை ஒட்டியே
நகர்கின்ற இத்திரைப்படத்தின் இறுதி காட்சிகள்.
இத்திரைப்படம் அது வெளியீடு கண்ட ஆண்டில் பலத் தரப்பினரிடமிருந்து நல்ல
அல்லது நேர்மறையான விமர்சனத்தையே பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு
முக்கிய காரணமாக இருப்பது இதன் திரைக்கதையும் உணர்ச்சிமிக்க
காட்சிகளும்தான். சற்றே சிக்கலான சர்ச்சைக்குரிய கம்யூனிசச் சித்தாந்தத்தை
உள்ளடக்கிய திரைக்கதை எளிமையாக நகர்கிறது. எறும்பு கதைநாயகன் அதிகாரத்தை
எதிர்த்து மார்க்சியம் பேசுவதும், வர்க்க முரண்பாடுகளை மீறி காதல்
கொள்வதும் என்னை இரசிக்க வைத்தது. மரணத் தருவாயில் இருக்கும் பார்பட்டஸின்
உயிரை காப்பாற்ற நினைத்து, அவரின் உடலைத் தேட எத்தணிக்கும் சீ
கண்டந்துண்டமாக கிடக்கும் எறும்புகளின் அறுப்பட்ட உடல்களில் எப்படி உடலைத்
தேடுவது என்று தவிக்கும் காட்சி மனதைச் சலனப்படுத்தியது. மேலும் முத்தமிடத்
துடிக்கும் எறும்பு காதலர்கள் ஆசைகளை மறைக்க முற்பட்டு ஏதேதோ
பேசிக்கொள்ளும் காட்சி அழகிய கவிதை போன்று அமைந்திருந்தது.
இவற்றைத் தவிர்த்துக் கொடிய கரையான்கள் போர்வீரர்களைக் கொன்று குவிக்கும்
பயங்கர போர்க்களத்தையும், ஒரு நீர்த்துளிக்குள் அகப்படும் எறும்பு
காதலர்கள் இதமாக தத்தளிப்பதையும், நீரில் மூழ்கிவிடாமல் எறும்புகள் ஒன்றன்
மேல் ஒன்று ஊர்ந்தும் பிடித்துக் கொண்டும் ஏணி போன்று வளர்ந்து தப்பிக்க
முயற்சிப்பதையும், மேலும் நம் கண்கள் அறியாத எறும்புகளின் அதிசய
உலகத்தையும் திரையில் காட்டிய தொழிற்நுட்பம் மீண்டும் நம்மைப் பிரமிக்க
வைக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் குரல் நடிகர்களான அமெரிக்கப் பிரபலங்கள்
காட்சிகளுக்கு மேலும் உயிரூட்டியுள்ளனர். பிரபல வசனகர்த்தா, இயக்குனர்,
நடிகர் மற்றும் எழுத்தாளருமான Woody Allen-தான் சீக்குக் குரல் கொடுத்தவர்.
இளவரசி பாலாவுக்கு நடிகை Sharon Stone-உம் மண்டீபளுக்கு நடிகரும்
நாவலாசிரியருமான Gene Hackman-உம், வீவருக்கு ரம்போ புகழ் Sylvester
Stallone-உம் அஸ்திக்காவுக்குப் பாடகியும் நடிகையுமான Jennifer Lopez-உம்
குரல் கொடுத்துள்ளனர். இவர்களுடன் இணைந்து இத்திரைப்படத்தின் இசை
இயக்குனரான John Powell தனது உயிரோட்டமான இசையினால் காட்சிகளுக்கு மேலும்
பலம் சேர்க்கிறார். இவருக்கு 1999ஆம் ஆண்டின் ASCAP-இன் திரைப்படம் மற்றும்
தொலைக்காட்சி இசைக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்ட்ஸ் என்னும் இத்திரைப்படம் நல்லத் திரைக்கதையுடனும் வியப்பூட்டும்
இயக்கவூட்டக் காட்சிகளுடனும் அமைந்த போதும், படத்தில் ஆழமான கருத்தியலைக்
கூற முற்பட்டு இருப்பது முதன்மை பார்வையாளரான குழந்தைகளுக்கு அவ்வளவு
பொருத்தமானதாக இல்லை. இருப்பினும் பெற்றோர்களின் உதவியுடன் குழந்தைகள்
இத்திரைக்கதையை நன்கு புரிந்துகொள்ளக்கூடும். மேலும் சீ
இன்செக்தோப்பியாவைத் தேடி செல்லும் காட்சிகள் சற்றே அதிகமாக
நீட்டித்திருப்பது பார்வையாளர்களின் கவனத்தைச் சிதைக்கவும் கூடும்.
இதுபோன்ற சில சறுக்கல்கள் இருப்பினும் அன்ட்ஸ் இயக்கவூட்டத்
திரைப்படங்களுள் குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு முக்கியத்
திரைப்படமாகும்.
|
|