|
|
காட்டைத் தேடி
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய நான் மருத்துவரின் கட்டளைக்கு இணங்க
எங்கேயும் வெளியே போகாமல் வீட்டு காவலில் இருக்க நேரிட்டது. அம்மாவும் கூட
இருந்ததால் சொல்லவே வேண்டாம். அவருக்குத் தெரியாமல் மறைந்து கூட போக
முடியவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் உடல் தேறி விட்டதால் அம்மாவை
தீபகற்பத்துக்கு அனுப்பி விட்டேன். அனுப்பிய மறு நாளே...ஹாஹாஹா என் ஆட்டம்
தொடங்கி விட்டது. ஒருவாரம் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டதால்
கண்களுக்குக் குளிர்ச்சியைத் தேடி நானும் என் இரு தோழிகளும்
கிளம்பிவிட்டோம். எப்போதும் போல மூவராய் காரில் காலையிலேயே. எங்கே
செல்கிறோம் என்ற எந்த பிரஞ்சையும் இல்லாமல் கூச்சிங்கை விட்டு கொஞ்சம்
தூரமாய் போக வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமாக இருந்தது. எவ்வளவு
நாள்தான் கூச்சிங்கிலேயே குட்டி போட்ட பூனையை போல சுற்றுவது. போகும்
வழியில்தான் பாக்கோ தேசிய வன காப்பகத்துக்கு போகலாமே என்ற எண்ணம்
தோன்றியது. அப்புறம் என்ன, மெதுவாய் போய் கொண்டிருந்த கார் அதன் பின்
காற்றில் பறக்கத் தொடங்கியது.
காலை மணி 7.30 அளவில் தொடங்கி 9.30-க்கு அதாவது இரண்டு மணி நேரத்தில் முடிய
வேண்டிய எங்கள் பயணம் காரின் வேகத்தால் ஒரே மணி நேரத்தில் முடிந்து விட்டது
என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்களேன். போகும் வழி நெடுக்க சரவாகின்
இயற்கை சின்னங்களான மரங்கள், மலைகள், ஆங்காங்கே பிய்த்து போட்ட மாதிரி
பொட்டல் பொட்டலாய் வீடுகள். இதை தவிர சாலை ஓரங்களில் புளியூட்டப்பட்ட
பழங்கள், பருவ கால உள்ளூர் பழங்கள் என ஏதாவது ஒன்று கண்களில் பட்டு கொண்டே
இருந்தது. இரண்டு வாரங்கள் வீட்டில் அடைப்பட்டு பசியுற்றிருந்த கண்கள்
இயற்கையின் குளிர்க்கரம் தழுவ பெற்று புத்துணர்ச்சி பெற ஆரம்பித்திருந்தன.
அந்தக் குறுகிய பயணத்தின் எல்லை ஒரு மீனவ கிராமம். அதாவது பாக்கோ மீனவ
கிராமம். கடலில் கலக்கும் சரவாக் நதியின் கரைதோறும் அமைய பெற்ற குடிசைகள்,
பயமின்றி நதிக்குள் நீச்சலடிக்கும் சிறுவர்களின் கந்தை உடைகள் என பல
விசயங்கள் அங்குள்ள மக்களின் ஏழ்மையை மெல்ல உணர்த்தின. அங்குள்ள பெண்களும்
பெரியவர்களும் மீன் வலைகளை பின்னிக்கொண்டிருப்பதை நன்றாக கவனிக்க
முடிந்தது. இங்குள்ளவர்கள் பொதுவாகவே வெளுத்த தோல் உள்ளவர்கள். ஆனாலும்
உப்பு நீரின் உக்கிரத்தால் தோல் கருமையுற்றிருந்தது. அதோடு சேறும்
சகதியுமான வீடுகளும் மீன்களின் நாற்றமும் சுத்தமற்ற ஒரு சூழலை கோடிட்டு
காட்டி கொண்டிருந்தது.
பாக்கோ தேசிய வன காப்பகத்துக்கு போக வேண்டும் என்றால் அந்த மீனவ
கிராமத்திலிருந்து படகேறி கடலை தாண்டிதான் போக வேண்டும் என்ற விசயம் அங்கே
சென்ற பின் தான் எங்களுக்கே தெரியும். அதாவது அங்கு வரும் சுற்று பயணிகளை
பாக்கோ தேசிய வனத்திற்கும் பின்னர் மீண்டும் கிராமத் துறைமுகத்துக்கும்
படகில் கொண்டு வந்து சேர்ப்பதுதான் அங்குள்ள மீனவர்களின் பகுதி வேலை.
அதற்கு கட்டணமாக ஒரு படகுக்கு 90 ரிங்கிட் என வரையறுக்கப்படுள்ளது.
தேவைப்பட்டால் அங்குள்ளவர்களை வழித்துணையாக அழைத்து செல்லலாம். அதற்கும்
ஆளுக்கு 150 ரிங்கிட் வசூலிக்கப்படுகிறது. ஆக அங்கே தொட்டதேல்லாம்
காசுதான். எதுவும் திட்டமிடாமல் வந்ததால் பணப்பையில் எவ்வளவு இருக்கிறது என
கூட நான் தெரிந்து வைத்திருக்கவில்லை. திறந்துப்பார்க்கையில் சரியாக 150
ரிங்கிட்தான் இருந்தது. என் தோழிகள் என்னை விட மோசம். மருந்துக்குக்கூட
இருவரிடமும் மொத்தமாக 100 ரிங்கிட்டை தாண்டவில்லை. எல்லாவற்றை ஒன்றாக
சேர்த்து படகு ஏற பணம் திரட்டியாகிவிட்டது. படகுக்கு பணம் கட்டும் போது
அங்கிருந்த பணியாளரிடம் சில விசயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். அதாவது
அந்த ஆற்றில் முதலை அவ்வப்போது தோன்றுமாம். அப்படி தோன்றியதில் அகப்பட்ட
ஒரு முதலையின் எலும்புகூட்டை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அதோடு கடலை
கடக்கும் போது மழை காலமாயின் ஆபத்து அதிகமாம். படகு கவிழும் அபாயம்
உண்டாம். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்றார். அதோடு நாங்கள் சென்ற கால
கட்டம் மழை காலம் எனவும் நினைத்து நினைத்து மழை வரும் எனவும் எனவே உயிர்
காக்கும் உடையை அணிந்து கொள்ள வேண்டும் எனவும் நினைவூட்டினார்.
படகுக்குக் காத்திருந்த நேரத்தில் இவையாவையும் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம்
ஏற்பட்டது. ஒரு நான்கைந்து படகுகள் தான் அப்போது சேவையில் இருந்தன. அதே
சமயத்தில் நடுத்தர வயதினர் ஒருவர் எங்களை நோக்கி கையசைத்து படகில் ஏறுமாறு
சொன்னார். அங்கே ஓரத்தில் நின்றிருந்த படகில் ஏறிய நாங்கள் முக்கியமாக நான்
படகின் நிலையை ஆராய்ச்சி கண்ணோடே பார்த்தேன். இருந்தால் அந்த படகு பல
வருடங்களை கடந்ததாக இருக்க வேண்டும். லைஃப் ஜேக்கேட் கரை பிடித்திருந்தது.
அது நல்ல நிலையில் இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு எழவே செய்திருந்தது.
ஆனாலும் ஒரு குருட்டு தைரியத்தில் நடப்பது நடக்கட்டும் என்று படகில் ஏறி
விட்டோம். போகும் போது எந்த பிரச்சனையும் இல்லை.
உயிரை பணயம் வைத்து எத்தனை காலமாக அங்குள்ள மீனவர்கள் இந்த வேலையை
செய்கிறார்கள். அவர்களே இருக்கும் போது நமக்கென்ன பயம். எண்ணி பார்க்கும்
போது அவர்களின் வீரமும் தன்னம்பிக்கையும் வாழ்க்கையை குறித்த பயமின்மையும்
என்னை பிரமிக்க வைத்தது. பட்டணத்தில் இருந்து கொண்டு அதாவது எல்லாமே போதிய
நிலையில் இருந்தும் கூட அது இல்லை இது இல்லை என குறை படும் நாம் எங்கே. ஒரு
வேளை சோறு கூட உருப்படியாய் கிடைக்காமல் உயிர் வாழ இயற்கையோடு
மல்லுக்கட்டும் இவர்கள் எங்கே. சர்வைவல் (survival) என சொல்லபடும் போராட்ட
குணத்தை பிள்ளைகளுக்குப் பள்ளியில் கற்று கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்து
விட்ட நிலையில் அதையே கல்வியறிவு குறைந்த பட்சத்தில் (இல்லை என்று
சொல்லவில்லை) தம் வாழ்வின் ஆதாரமாக கொண்டு போராடும் இம்மீனவர்களை huts off
சொன்னாலும் தப்பில்லை.
படகின் இயந்திரம் இயக்கப்பட்டபோது எங்கள் மூவரின் கரங்களும் தானாகவே
கோர்த்துகொண்டன. துறைமுகத்திலிருந்து கடலை சேரும் வரை நதியில் அலைகள்
இல்லை. அமைதியாகவே இருந்தது. ஆனால் நதியை விட்டு கடலில் அதுவும் அந்த சின்ன
படகில் பயணிக்கும் போது அலைகளின் அறிமுகம் ஆரம்பித்தது. சின்ன சின்ன மழலை
அலைகள் பின்னர் விசுரூபம் எடுக்கவிருப்பதை நாங்கள் அறிந்திருக்க
நியாயமில்லைதான். அப்படியும் அந்த அலைகளில் கை நனைப்பது சுகமாக இருந்தது.
மிரட்சி வியப்பு என கலவையான ஓர் உணர்வு. படகு பாக்கோ வன காப்பகத்தை நெருங்க
நெருங்க படகு தடுமாற தொடங்கியது. நாங்கள் பயப்படுவதை அறிந்த அந்த படகோட்டி
அண்ணா கரை ஆழம் சீராக இல்லாவிடில் படகு கரையை தொட தடுமாறும் என்ற பௌதீக
கூற்றை சொல்லி அசுவசப்படுத்தினார். பாக்கோவை வந்தடைந்த போது மணி சரியாக
மதியம் 12. வெறும் ஜப்பான் சிலிப்பர். தோலில் கைப்பை. அது தான் எங்களின்
தோற்றம். படகை விட்டு இறங்கியதும் வெறும் காலோடு தான் நடக்க ஆரம்பித்தோம்.
அங்கே முதலில் எங்களை ஆவலாய் வரவேற்றது காட்டுப்பன்றி.
|
|