|
|
புதுக்கவிதைகளைப் புறக்கணிக்கலாமா?
இவ்வாண்டுத் தமிழ் இலக்கிய வகுப்பின் முதல் நாளில்
நான்காம் படிவ மாணவன் ஒருவன் கேட்ட கேள்வி என் நீண்ட கால ஆதங்கத்தை
மீண்டும் அவிழ்த்துவிட்டது.
“இவ்வளவு நாள் தமிழ்நாட்டு நாவல். இந்த வருசம் மலேசிய நாவல் படிக்கலாம்னு
சொல்றீங்க. ஆனா, கவிதைப்பிரிவிலே பழையபடி எல்லாமே மரபுக்கவிதையா இருக்கே.
புதுக்கவிதை ஒண்ணுகூட இல்லையா சார்?”
இதுநாள்வரை எனக்குள் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விதான். மாணவன்
கேட்கிறான். என்ன பதில் சொல்வது? வாழ்க்கையில் சில கேள்விகளுக்குப்
பதில்கள் இல்லை எனத் தத்துவார்த்துவமாகச் சொல்லிச் சமாளித்தேன்.
ஐந்தாம் படிவத் தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் கடந்த அரை நூற்றாண்டாக
மரபுக்கவிதைகள் மட்டுமே கோலோச்சி வருகின்றன. புதுக்கவிதை மீதான தீண்டாமை
எண்ணம் காரணமாக அக்கவிதைகள் இன்னும் அங்கீகாரம் இல்லாத வடிவமாக பாடநூலுக்கு
வெளியே காத்திருக்கின்றன. மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் நெடிய
வரலாற்றைக் கொண்டது மரபுக் கவிதை என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
தமிழகத்தில் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற பெரும் கவிதை
ஆளுமைகளின் வழித்தோன்றல்களாக இங்கும் பல கவிஞர்கள் தோன்றி, கவிதைக் கொடைகளை
அள்ளியள்ளி வழங்கியுள்ளதையும் மறைக்க முடியாது. எனவே, தேர்வு வாரியத்தின்
பாடத்திட்டத்தில் மரபுக்கவிதைக்கான கம்பீரமான ‘சிம்மாசனம்’ யாரும்
புரிந்துகொள்ளக்கூடியதுதான். அதுமட்டுமன்றி, அரை நூற்றாண்டுக்கு முன்பு
இங்குப் புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவமே தோன்றியிருக்கவில்லை.
ஆனால், பாடத்திட்டத்திற்கு வெளியே இன்று எதார்த்தம் வேறுமாதிரியாக
இருக்கிறது. 1964இல் சி.கமலநாதனின் ‘கள்ள பார்ட்டுகள்’ என்ற மரபுமீறிய
புதுக்கவிதை பிள்ளையார் சுழியிட்டுத் தொடக்கி வைக்க,கடந்த 47 ஆண்டுகளில்
தன் மீதான கல்லையும் மண்ணையும் முட்டி மோதித்தள்ளி முளைக்கும் வீரியமுள்ள
விதையாக - புதுக்கவிதை தனித்த இலக்கிய வடிவமாக எதிர்ப்பு அலைகளில் நீந்தி
நீந்திக் கரையேறிவிட்டது. இன்று புதுக்கவிதை இல்லாத ஏடுகள் உண்டா? எல்லா
ஊடகங்களும் கொண்டாடும் வடிவமாக புதுக்கவிதை அங்கீகாரம் பெற்றுவிட்டது.
இன்று இளையோர்களின் நெஞ்சுக்கு நெருக்கமான இலக்கிய வடிவம் புதுக்கவிதைதான்.
அவர்களை மரபுக்கவிதை நோக்கி ஆற்றுப்படுத்தும் பயிலரங்குகள், பயிற்சிப்
பட்டறைகள், கவிதை விழாக்கள் நடத்தப்பட்டாலும் தாங்கள் வாழும் காலத்தில்
இயங்கும் இலக்கிய வடிவத்தோடு கைகுலுக்கி அதனை அரவணைக்கும் போக்கையே அவர்கள்
நாடுவார்கள் என்பது காலத்தின் நியதி. பாடத்திட்டத்தின்வழி அவர்களை
மரபுக்கவிதைகளைப் படிக்கத் தூண்டலாம்; படைக்கத் தூண்டமுடியுமா?
காலந்தோறும் கவிதைமொழி மாறிக்கொண்டிருக்கிறது. சங்க காலத்தில் இறுக்கமாக,
நெருக்கமாக பவனி வந்த கவிதைமொழி நெகிழ்ந்து உடைந்து இன்று அலங்காரங்களைக்
கலைத்துவிட்டு பேச்சுமொழியையும் உரைநடை மொழியையும்அணிந்துகொண்டு எளிமையாக
வலம்வருகிறது. நிகழ்காலப் புழங்கல் மொழியில்‘சொல்லுதலை’விட ‘உணர்த்துதலை’
மையமிட்டு நகர்கிறது. இத்தகைய மாற்றங்களை இளையோர்கள் எதிர்நோக்கி
வருகிறார்கள். இவர்களை வழிமறித்து வழக்கொழிந்த கவிதைமொழியை நீட்டும்
முயற்சிகள் பலன் தருமா?
புதுக்கவிதை, நவீனக் கவிதை, மினிக்கவிதை போன்ற அடைமொழிகள் உதிர்ந்து இன்று
கவிதை மட்டுமே எஞ்சியிருக்கிறது. இலக்கிய மாநாடுகள், கருத்தரங்குகள்,
இலக்கியப் போட்டிகள் எங்கும் புதுக்கவிதைக்கும் சரியாசனம் தரப்படுகிறது.
நீண்ட காலமாக உயர்கல்விக்கூடங்களில்,பல்கலைக்கழகங்களில் புதுக்கவிதை
நூல்கள் பாடநூல்களாக உள்ளன. புதுக்கவிதை பற்றி இளங்கலை, முதுகலை, முனைவர்
பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில்
பயிற்சி ஆசிரியர்கள் புதுக்கவிதை குறித்த ஆய்வினை மேற்கொள்ளப்
பணிக்கப்படுகின்றனர்.
ஆறாம் படிவத்தில் பயிலும் மாணவர்கள் நிலையோ வேறு. மரபுக் கவிதைகளோடு
வாலியின் ‘விருட்சங்கள்’ புதுக்கவிதை பாடத் திட்டத்தில்
இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய திறந்த மனப்போக்கு ஐந்தாம் படிவ இலக்கியப்
பாடத்திட்டத்தில் இல்லையே என்பது ஏமாற்றத்தைத் தருகிறது.
மலாய்மொழிப் பாடத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவம் ஒன்று முதல் ஐந்து
வரைக்குமான இலக்கியத் தொகுப்பு நூல்களைக் கண்ணோட்டமிட்டாலும்
புதுக்கவிதைக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் தெள்ளத் தெளிவாகப் புரியும்.
Pantun, Syair, Gurindam போன்ற மரபார்ந்த இலக்கிய வடிவங்களோடு Sajak
எனப்படும் புதுக்கவிதைகளையும் இடம்பெறச் செய்து மாணவர்கள் அவற்றைப் பயிலும்
வாய்ப்பினை வழங்கியுள்ள திறந்த மனப்பான்மையை நன்கு உணர முடியும்.
இத்தகைய நிலை எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் இல்லாமல் போனது
ஏன்? புதுக்கவிதை வடிவம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன்?
இங்கு ‘மரபு’தான் புதுக்கவிதை உள்ளே நுழையும் வழியை மறைக்கிறது. அதாவது,
அரை நூற்றாண்டாகப் போற்றிக் காக்கப்படும் ‘மரபுக்கவிதைகளுக்கு மட்டும்
பாடத்திட்டத்தில் இடம்’ என்ற மரபு, புதுக்கவிதைகளை முற்றாகப்
புறக்கணிக்கும் நிலைக்குக் காரணமாகும். ஒரு காலக் கட்டத்தில்
ஏற்படுத்தப்பட்ட மரபு (புதுக்கவிதை இங்கே பிறக்காத காலக்கட்டம்) தொடர்ந்து
மாற்றமில்லாமல் தொடர வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே? கல்விக் கொள்கைகள்கூட
காலந்தோறும் மறுபரிசீலனைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு மாற்றங்களைக்
கண்டு வருகின்றதே! அரை நூற்றாண்டில் மலேசிய தமிழ் இலக்கியப் பரப்பில்
எத்தனையோ வளர்ச்சிகளும் மாற்றங்களும் நிகழ்ந்து விட்டனவே!
மலேசிய அரசுகூட நிர்வாக அமைப்பிலும் கொள்கை அமலாக்கத்திலும் இப்பொழுது
உருமாற்றத்தை (Transformasi) நிகழ்த்தி வருகிறது. மக்களிடையே தன்
செல்வாக்கை நிலைநிறுத்தவும் அவர்களின் ஆதரவைத் தம் பக்கம் திருப்பவும்
அரசுக்கு இது மிகவும் தேவையாக இருக்கிறது. தேர்வு வாரியத்துக்கும் இந்தக்
கவிதைச் சிக்கலில் உருமாற்றம் மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.
உருமாற்றம் அறவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஐந்தாம் படிவத் தமிழ்
மொழித் தாள் இரண்டில் எத்தனையோ அருமையான மாற்றங்களைக் காணமுடிகிறது.
புதுக்கவிதை, நகைச்சுவைத் துணுக்கு, சினிமா தொடர்பான கேள்வி,
சிந்தனையாற்றலை மையமிட்ட கேள்விகள் என காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை
நடைமுறைப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. ஆனால், இந்த உருமாற்றம்
இலக்கியத் தாளுக்கு வரத் தயக்கம் ஏன்? புரியவில்லை. தமிழ்மொழித் தாளில்
புதுக்கவிதைகள் இடம்பெறச் செய்வதுகூட இலக்கியத் தாளில் புதுக்கவிதைகள்
விடுபட்டுப்போவதற்குச் சமாதானம் செய்யத்தானோ?
பாடத்திட்டத்தில் புதுக்கவிதையை இடம்பெறச் செய்வதில் வேறு என்ன சிக்கல்
இருக்க முடியும்? புதுக்கவிதைப் படைப்பில் ஆர்வம் காட்டி வரும் நண்பரைக்
கேட்டேன். “வேறு என்ன? பாடத்திட்டத்தில் புதுக்கவிதையைச்
சேர்த்துக்கொண்டால் நம் மரபுக் கவிஞர்கள் கோபித்துக்கொண்டு ஏடுகளில்
திட்டித் தீர்ப்பார்கள். ஏன் அறம்கூட பாடிவிடுவார்கள். அவர்களை யார்
சமாதானப் படுத்துவது? இந்தப் பொல்லாப்பு யாருக்கு வேண்டும்?” நண்பரின்
கூற்றில் உண்மை இருப்பதையும் மறுப்பதற்கில்லை. தமிழ் இலக்கியப் பாடத்
திட்டத்தில் மரபுக்கவிதைகளோடு புதுக்கவிதைகளையும் இடம்பெறச் செய்வதால் என்ன
விளைவுகள் ஏற்படும் என எண்ணிப் பார்த்தேன். இந்தப் பாடத்தில் மாணவரின்
ஆர்வம் அதிகரிக்கும். அதிக மாணவர்கள் இந்தப் பாடத்தைத் தேர்வுசெய்து
படிக்கத் தூண்டும் முயற்சிகள் வெற்றிபெறும்.
தேர்வுக்காக இலக்கியம் படிக்கும் மாணவர்கள், தேர்வு முடிந்து வெளியே
வந்தபிறகு படைப்பிலக்கியத்தின் பக்கம் பாதம் பதிக்கவும் இது தூண்டுகோலாக
அமையலாம். வறண்டு கிடக்கும் புதுக்கவிதை வயலுக்கு நீர்பாய்ச்சும் புதிய
முயற்சிகள் தோன்றலாம். இன்று, புத்திலக்கியத்தில் ஈடுபாடு காட்டும் இளைய
படைப்பாளிகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் நிலையில் மிகக் குறைவாகவே
இருக்கிறது. தேர்வுக்காக இலக்கியம் என்ற நிலையோடு இளையோரின் நெஞ்சுக்கு
நெருக்கமான இலக்கிய வடிவம் என்ற நிலையும் சேர்ந்தால்தான் புதிய
படைப்பாளிகள் தோன்றுவார்கள்.
‘பழமையில் விழு, புதுமையில் எழு’என்று ஒரு முறை எழுதினேன். மரபுக்கவிதைகள்
வழி நம் முன்னைய கவிதைமொழியை மாணவர்க்கு முன்மொழியலாம். அதே வேளையில், அது
மட்டுமே நம் கவிதைமொழி என்ற கருத்தை அவர்களிடம் வலிந்து திணித்து, நிகழ்கால
கவிதைமொழியை மறைத்துவிட்டு, படைப்பாளியாக உருமாறவேண்டிய இளையோரை வாழ்க்கை
நெடுக ‘மௌனப் பார்வையாளர்களாக’ நடமாட விடுவது நியாயமாகுமா?
இலக்கியப் பாடத்திட்டத்தில் புதுக்கவிதைகளை இடம்பெற என்ன செய்யவேண்டும்?
இதற்கும் ஆண்டுக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றிக் காத்திருக்க
வேண்டுமா? அல்லது மலேசிய நாவலைப் பாடநூலாக்கும் முயற்சியைப் போன்று இருபது
ஆண்டுகாலத் தொடர்ப் போராட்டம் நடத்தவேண்டுமா?
இணையத்தில் ஓர்அழகான இயற்கைக் காட்சிப் படத்தைப் பார்த்தேன். பசுமை படர்ந்த
நிலத்தில் நீளும் சாலை, சம அளவில் இரண்டாகப் பிரிந்து இணையாகப்
பயணப்படுவதாக அமைந்த காட்சி. இதுபோல், இலக்கியப் பாடத்தில் மரபுக்கவிதையும்
புதுக்கவிதையும் சரியாசனத்தில் அமர்த்தப்பட்டு மாணவர்க்குப் பரிமாறப்பட
வேண்டும். எந்த வடிவம் சிறந்தது என்ற தீர்ப்புகளைவிட இரு வேறு வடிவம்
குறித்த புரிதலை மாணவரிடத்தில் ஏற்படுத்துவதாக அ•து அமைய வேண்டும்.
எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் உருமாற்றம் வரவேண்டுமானால்
தேர்வு வாரியத்தின் தமிழ்ப்பிரிவு அதிகாரிகள் மனமாற்றம் பெறவேண்டும்.
அதற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதான் விடை காண
முடியாத கேள்விகளாக மனத்தைக் கனக்கச் செய்கின்றன.
|
|