|
|
பெண் அதிகாரம்
என் காதலனின் மனைவியே,
என் கணவனின் காதலியே,
என் காதலனின் காதலியே.
இது
இருந்திருக்க வேண்டிய
நமது நட்புக்காக.
அழகு ராணிப் போட்டியில்
அதிகப் புள்ளிகளுக்காக
புன்னகைக்கையில்,
சமையற் போட்டியில்
சாப்பாட்டிற்கு
இன்னும் ருசியேற்றத் துடிக்கையில்
தங்கப் பதக்கத்திற்காக
ஆணின் இதயம் நோக்கி
ஓடுகையில்
இருமுனைகளில் நிற்கும் பெண்கள்
எப்போதுமே எதிரிகள்தான்.
நம்மை நாம்
விநோதமாக பார்க்கத் துணிவோமா?
என் அழகை அவன் எடைபோட
உதாரணம் நீயில்லையா?
நீ கசப்பா இனிப்பாவென
அவன் தீர்மானிக்க நாடும்
சுவை நானில்லையா?
பந்தயம் முடிவதற்குள்
படபடப்போடு ஒன்றையொன்று
இறுக்கிக் கொண்டு தடுமாறும்
எல்லைக் கயிறுகள் நாமில்லையா?
போட்டிக்கும் பந்தயத்திற்கும்
அப்பால் பார்!
நமது வாழ்க்கை
இம்மனிதனால் மட்டுமே
பிணைக்கப்படவில்லை...
கன்னிமையில் முதல் இரத்தத்தில்
கன்னி கழியும் நிறத்தில்
பிரசவப் பெருக்கில் என்று
பெண்மையில் பந்தத்தில்
இணைக்கப்பட்டுள்ளது.
பொறாமை, ஆத்திரம், வெறி
இவற்றையும் மீறி
நாம் பகிர்ந்து கொள்ள
நிறைய இருக்கிறது.
என்னுடன் பேசு சகோதரி
என் காதலனின் மனைவியே,
என் கணவனின் காதலியே,
என் காதலனின் காதலியே,
இருந்தும், என் சகோதரியே.
|
|