வெளிச்சம்
அடுத்த முறை ஊருக்கு வரும்போது
பால்ய நண்பர்களைப் பார்க்கணும்.
சிவன்மலைக்கு நடந்தே போகலாம்.
பள்ளிக்கூடத்திற்குள் போய் வர வேண்டும்.
இன்னும் கொஞ்சம் கனிவோடு பேசலாம்.
பக்கவாட்டு சன்னல்வழி
புகும் காற்றில் ஈரத்துளிகள்.
மழை எச்சில்
கண்ணீர் சளிக்கு
ஈரம் பொது அம்சம்
எனில்
எவ்வழி இத்துளி ?
ஏறிய இடம் வேறு
இறங்கும் இடம் வேறு
சகவாசம் தற்காலிகம்.
அசைவன அசைவற்றன
சகலமும் பின்னகரும்.
இருட்டை கீறிப் பாய்கிறது
பேருந்து வெளிச்சம்.
நிரபராதம்
ஹால்ஸ் மிட்டாயை
வாயில் போட்டுக்கொண்டு
உறையை விரல்களிடையே இடுக்கியபடி
நடந்தேன்.
கூட்டித் தெளித்து
துப்புரவாய் இருந்தது தரை.
கீழே போட்டால் குப்பையாகும்.
குப்பையே இல்லையென்றால்
எதைக் கூட்டுவார்கள்?
குற்ற உணர்ச்சி
சுய சமாதானம்
இரண்டுமே
நினைவில் இல்லாத ஒரு நொடியில்
உறையை தவற விட்டிருந்தேன்.
பிறர் தர வாரா
காக்கையோ குருவியோ
வேறு ஏதாவதாகவும் இருக்கலாம்.
உச்சந்தலையில் விழுந்தது
எச்சமோ ஜீரணித்த மிச்சமோ
ஊர்ஜிதம் செய்தல்
உடனடியாக சாத்தியமில்லை.
ஆனாலும்
மூக்கு நுனியை உறுத்தியபடி இருக்கிறது
மலவாடை ஒன்று.
|