|
|
தேஜாவு
நான் நிலைப்புடன் நிற்க
உலகம் என்னைச்சுற்றுகிறது
வளைந்து நெளிந்த பிம்பங்கள்
உருவத்தில் தன் இயல்பைவிட
பெரிதாகின்றது
அல்லது சிறிதாகின்றது
இப்போதெல்லாம் என்னை நானே
வெளியிலிருந்து காண முடிகின்றது
எனது கவலைகள் அனைத்தும்
துப்புரவாக நீக்கப்படுகிறது.
என் முழு இதயமும்,
மனமும் உடலும்
உச்சக்கட்ட உணர்வுக்கும்
ஒளிவெள்ளத்துக்கும்
எழுச்சி அடைந்து நிற்கிறது.
எல்லையற்ற பேரானந்தமும்
நம்பிக்கையும் நிறைந்து
நிற்கச்செய்கிறது.
இப்போதெல்லாம்
என்னைக்கொடுமைப்படுத்த
பிறரால் இயல்வதில்லை
அடக்குமுறையை என்னில்
ஏவ அவர்களிடம் ஆற்றல்
இருப்பதில்லை
என்னைத்திட்டமிட்டு கொலை
செய்வதும் அவர்களால்
இயலாது போய்விட்டது.
இது ஏற்கனவே கேட்டது,
இல்லை இது புத்தம் புதியது,
அதி மகிழ்ச்சி,
உச்சக்கட்ட உணர்ச்சிக்குவியல்,
சில சமயம்
கடவுளிடமிருந்தும்
எனக்கு செய்தி வருகிறது.
அந்த ஒளிவெள்ளம்
மீண்டும் எப்போது வரும்
அது கொடுக்கும் இன்பமும்
பெரும் மகிழ்வும்
எனக்கு மிகவும்
பிடித்துதான் போய்விட்டது.
|
|