|
|
‘பரண் மேல இருக்கிற அரணைக்குச் சொரண இருக்காது’
எல்லாருக்கும் தத்தம் பக்கங்கள் நிச்சயமாக இருக்கும். அவை வேறு போல
இருப்பினும், அடிப்படையில் ஒளிக்கப்பாலிருக்கிற இருண்ட பக்கங்கள்தான்.
அதிலும் பொதுச் சேவையில் இயங்குகின்றவர்களிடம் இவ்விருண்ட பக்கங்கள்
அதிகமாகவே இருக்கும். இதனால்தான் என்னவோ, வம்பு தும்புகளில் சிக்கிக்
கொள்ளாமல் இருப்பதற்காகவே பலர் பொதுச் சேவை பக்கம் தலை வைத்துப்
படுப்பதில்லை. பொதுச் சேவைக்கும் அதன் தூய செயல்பாட்டுக்கும் யார்
பொருத்தமானவர் என்பதை சாமான்ய மனிதரிடம் கேட்டால் அதற்கு ஆசிரியர்களே
உகந்தவர்கள் எனப் பெருமளவில் கூறுவது வழக்கம். இதற்குக் காரணம் உண்டு.
எல்லாச் சமூகத்திலும் ஆசிரியருக்கு இருக்கின்ற இடம் உயர்வானது.
கற்றவர்,எல்லாம் அறிந்தவர் என்பதைக் காட்டிலும், நீதி நெறியில் அவரே
முன்னுதாரணமானவர் என்பதால் சமூகம் அவ்வாறே பார்த்துப் பார்த்துப்
பழகிவிட்டது. கல்வித் தகுதியைத் தவிர பிறவற்றில் அவர்களும்
சாமான்யர்கள்தான் என்பதைப் பலர் உணர்ந்துள்ளார்களா என்பது தெரியவில்லை.
புறத்தில் புனிதமாகவும் அகத்தில் அழுக்கு நிறைந்தோராயும் இருக்கவே
செய்கின்றனர். இத்தகைய ஆசிரியர் புரிகின்ற பஞ்சமாபாதகங்கள் பல வேளைகளில்
அவர்களும் சாமான்யர்தான் என்பதை உணர்த்திவிடுகின்றன. இதிலென்ன தப்பு
இருக்கிறது எனக் கேள்வி எழுப்பும் ஆசிரியர்களுக்கு என்ன உரைப்பது?
அப்படிப்பட்டவர்களைப் பதிவு செய்வதோடு நல்லாசிரியர்களையும் அவர்களது மாசு
மறுவற்ற சேவைகளையும் இக்கட்டுரைத் தொடர் சுட்டிக்காட்டும். இக்கட்டுரைத்
தொடரில் இம்முறை தமது ஆசிரியப் பணியை விட பொதுப்பணியே மேலென்று கருதி
வாழ்ந்து வருபவரின் இன்னொரு பக்கத்தைச் சொல்லவிருக்கிறேன்.
நான் ஐந்தாம் வகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோது வேறு பள்ளியிலிருந்து
மாற்றலாகி வந்த ஆசிரியர் ஒருவர் எனக்கு விஞ்ஞானப் பாடம் போதிக்க
வந்திருந்தார். அவரைப் பல பொது நிகழ்வுகளில் பார்த்ததுண்டு. தோட்டந்தோறும்
நடைபெறுகின்ற எல்லாச் சமூக நிகழ்வுகளிலும் தமது எழுச்சிமிக்க உரையால்
மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்கியதில் அவரது பங்கை மறுதலிக்க
முடியாது. நானும் எனது நண்பர்களும் பொது மண்டபத்துக்குள் நுழைய முடியாது
என்பதால் வெளியே நின்றுதான் எகிறிப் பார்ப்போம். அவரது அன்றைய எடுப்பான
உருவத்தை முழுமையாகத் தரிசிக்க வாய்ப்புக் கிட்டாதெனினும், அனல் பறக்கும்
சொற்கள் காதுக்குள் நுழைந்து உள்ளத்துள் உறைந்துவிடும்.அன்றைய நாட்களில்
அவரது இந்தச் செயல்பாடுகள் அறிந்தும் அறியாமலும் என் உள்ளத்திற்கு உரம்
சேர்த்தன. மேடைப் பேச்சுக்கு வடிவம் கொடுத்தவர்களில் அவர் முகாமையானவர்.
இது போல இவர் மட்டுமல்ல, நாடாளாவிய நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவர்
இருந்துள்ளனர். அவர்களின் மேடைப் பேச்சு எனக்குள்ளும் தாக்கத்தை
ஏற்படுத்தியது. அதை எனது பின்னாளில் நன்கு உணர முடிந்தது.
சரி, திரும்பவும் அவருக்கே வருகிறேன்.வகுப்பறை நடவடிக்கைகளில் அவரது போதனை
எளிமையும் அன்பும் நிறைந்ததாய் இருந்தது. உருட்டி மிரட்டி விழிகளில்
அக்கினியைப் பாய்ச்சுகின்ற ஆசிரியர்களுக்கு மத்தியில், இவரது வருகை
எங்களுக்கு உவப்பை அளிக்கவே செய்தது. எதையும் அலட்டிக்கொள்ளாமல் வெகு
இயல்பாக அவரது பாட வேளை நகர்ந்தது. அதிகமாகப் பேசாது மாணவர்களின் எழுத்துப்
பயிற்சிக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பது அவரது பாணி.கொடுக்கப்படுகின்ற
பாடங்களை அன்றன்றைக்குத் திருத்தி மாணவர்களிடம் ஒப்படைத்துவிடும் பழக்கம்
அவரிடமிருந்தது. அதனால், அவர் மீது எங்கள் எல்லோருக்கும் நல்ல மதிப்பு
உருவானது. ஆனாலும், பல வேளைகளில் பள்ளிக்குத் தாமதமாக வரும் பழக்கம்
அவரிடமிருந்ததாலோ என்னவோ,சில மாதங்களுக்குப் பின்னர் வேறு பள்ளிக்கு
மாற்றலாகிப் போனார். அவரைப் பின் தொடரவேண்டுமென்று மனத்துக்குள் உந்துதல்
ஏற்பட்டது.
1970 களின் பிற்பகுதியில் எனது இடைநிலைப்பள்ளி வாழ்க்கையின்போது
ஆங்காங்குத் தூரத்து நிலவாய் அவரைச் சந்தித்தேன். சமூக அமைப்புகளில் தலைமை
வகித்ததுவும், விழாக்களை ஏற்று நடத்துவதும் அவரது முக்கியப் பணிகளாக
இருந்தன. அதனை முன்னிட்டு நாடு முழுக்க தம் சகாக்களோடு சுற்றி வந்துள்ளார்.
அவர் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகள் தொடர்பான படங்களும் செய்திகளும்
தினசரிகளில் தவறாமல் இடம்பெற்றுவிடும். எப்படி இவரால் இயங்கமுடிகிறதோவெனப்
புருவத்தை உயர்த்திப் பார்த்த நாட்கள் அவை! இத்தனை தீவிரமாக இயங்கிய
அவருக்கு எல்லோரும் போலவே மனைவி பிள்ளைகளும் இருந்தனர். அவர்களுக்கேற்பட்ட
நிலையைச் சிலரிடம் கேட்டறிந்தபோது மனம் பகீரென்றது. அவருக்கு ஆண் மக்கள்
மூவரும் பெண் மக்கள் இருவரும் இருந்தனர். யாருமே தமிழ்ப் பள்ளிக்குப்
போகவில்லை. தேசிய மொழிப் பள்ளியில் பயின்ற அவர்களுக்குத் தாய்மொழியில் பேச
மட்டுமே தெரியும்; எழுத வராது. ஆண் மக்கள் மிகவும் சிரமத்தோடுதான்
வாழ்ந்துள்ளனர். ஒரு ஜோடி உடையும் பழைய காலணியும் இடைவாருக்குப் பதிலாக
அரைஞாண் கயிற்றையும் அணிந்துகொண்டுதான் பள்ளிக்குச் சென்றதாகப் பலர் என்
காதுபடக் கூறியிருக்கின்றனர். அதை நேரடியாகக் காணும் வாய்ப்பு ஒரு முறை
எனக்கேற்பட்டது. அ•து உண்மையே என மனம் சொன்னது. பின்னாளில், தமிழே அறியாத
அவரது ஆண்மக்களில் இருவர் வேற்று இன/மதப் பெண்ணை மணந்து தந்தை
வார்த்தெடுக்க எண்ணிய தமிழ் வாழ்வைப் பிள்ளைகளே தோண்டிப் புதைத்தார்கள்.
தமிழர்களைச் சந்தித்தால் அவர்கள் மருந்துக்கும் தமிழில் பேசுவதில்லை. பூமி
புத்ராவாக மாற அநேகமாக முயற்சி செய்துகொண்டிருந்தாலும் இருக்கலாம்!
அதற்குத் தோலின் நிறம் ஒத்துழைக்குமா என்பதை இயற்கையிடமே விட்டுவிட
வேண்டும்!
இப்படியாகப் பிள்ளைகளின் வாழ்வு திசை மாறிப் போனாலும், அவர்களது உத்தியோகம்
பல அனுகூலங்களோடு நல்ல நிலையில் இருப்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.
ஆனால், அந்தத் தமிழ் ஆசிரியர் எதை இந்தச் சமூகத்தில் உருவாக்க எண்ணினாரோ
அத்தனையும் தலைகீழாக மாறியது தன் குடும்பத்தில்! அன்றையக் காலக்கட்டத்தில்
உள்ள பெரும்பாலான தமிழாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை வேற்று மொழிப்
பள்ளிக்கு அனுப்பியுள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதில் இவரும்
விதிவிலக்கல்ல.ஊராரின் பழிச் சொல்லுக்கு இலக்கானாலும் அதை அவர் ஒரு
பொருட்டாகக் கருதவேயில்லை. மீண்டும் சமூகம்! சமூகம்!சமூகம் எனத் துரித
கதியில் இயங்க, ஒரு கட்டத்தில் பிள்ளைகளோடு பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டு
இறுதியில் தமது வீட்டிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டார். வீட்டிலிருந்து
அவரது ஆவணங்கள் ஒன்றுவிடாமல் தூக்கியெறியப்பட்டன. ஏராளமான தமிழ் நூல்களும்,
சிறப்பு மலர்களும் அவற்றுள் அதிகம். எல்லா ஆவணங்களையும் கூட்டிப்
பெருக்கித் தீக்கிரையாக்கினார் அவரது மனைவி. மேலோட்டமாகப் பார்க்கின்ற
புறக்கண்களுக்கு இது அராஜகம் போல் தெரியும். ஆனால், இத்தனை ஆண்டுகளாகக்
குடும்பத்தைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் தான்தோன்றித்தனமாய்ச்
செயல்பட்ட அந்தத் தமிழாசிரியர் புரிந்த அராஜகத்தைவிடவா இது மோசம்? அதன்
வெளிப்பாடுதான் இந்தத் தீச்சம்பவம்.
பேதலித்துப்போன அந்தத் தமிழாசிரியர் தண்ணீர் தெளித்துவிட்டாற்போல் வீட்டை
விட்டு வெளியேறினார். பயணப் போக்குவரத்துக்குக் கச்சிதமாக ஒரு வாகனத்தை
வாங்கிக்கொண்டு அப்படியே அரசின் உதவியுடன் நகர மையத்தில் வாடகை அறையை
எடுத்துத் தங்கிக்கொண்டு, அங்கிருந்தபடியே தம் பொதுப்பணியை இன்னும்
தீவிரமாக முடுக்கினார். துணிமணிகளைத் துவைக்க சலவை நிலையம் அருகில்
இருந்தது. உணவுக்குத் தமிழர்ச் சிற்றுண்டிச் சாலைகள் அருகிலேயே இருந்தன.
இப்பொழுது எழுபது வயதைத் தாண்டிய பின்னும், ‘பரண மேல இருக்கிற அரணைக்குச்
சொரண இருக்காது’ மாதிரி மிடுக்குக் குறையாமல் பொதுப்பணிக்குப்
புறப்பட்டுவிடுகிறார். பொதுப்பணியில் நிரம்பப் பட்டறிவு கொண்டிருப்பதும்,
ஒரு பத்துப் பதினைந்து பேர் சேர்ந்தால் ஏதாகிலும் ஒரு பெயரில் இயக்கத்தை
ஆரம்பிப்பதும் பிறகு காணாமல் போவதுவும் அவரது வாடிக்கை. அப்படிப்பட்ட
இயக்கத்திற்கு நானும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசியச் செயலாளராக
இருந்துள்ளேன். ஒழுங்குமுறையும் சரியான திட்டமிடலும் இல்லாத இயக்கம்
என்பதால் விலகிவிட்டேன். பத்திரிகையில் அவர் தருகின்ற விளம்பரத்திற்கும்
நடைமுறைக்கும் சம்பந்தமேயில்லையே என மண்டையில் அடித்துக்கொண்டேன். ஆனாலும்,
அவரது பயணம் தொடர்கிறது.
இடையில், அவர் இன்னொரு வீட்டிற்கு மாறிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது.
பக்கத்து வீட்டில் தமிழ்க் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. ஆனால், இவரிடம்
பேச்சு வழக்கு வைத்துக்கொள்வதில் பிடிப்பின்றிக் கிடந்தது. அவரும் தான்
உண்டு தன் வேலையுண்டு என்று காலை தொடங்கி இரவு வரை பம்பரமாகச்
சுற்றிவிட்டுப் பின்புதான் வீடு திரும்புவார். அவர் வருவதும் போவதும்
தெரியாத அளவுக்கு வீடு எப்பொழுதும் நாய்ச் சங்கிலியால் பூட்டிக் கிடக்கும்.
அவரது இந்தப் புதிய வாடகை வீட்டுக்குள் நுழைவது கடினம். பூட்டப்பட்ட பலகைக்
கதவு, பூட்டப்பட்ட இருப்புக் கதவு, அதை இறுகப் பற்றியிருக்கும் நாய்ச்
சங்கிலி- இத்தனையும் மீறி ஒருவர் நுழைவதென்றால் அலுப்பை உண்டாக்கும்.
எல்லாம் இவராக ஏற்படுத்திக்கொண்டது!
சில வாரங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில், அவரது வீட்டிலிருந்து பெருத்த
அலறல். சேவலின் கழுத்தை அறுத்தால் அதன் உயிர்த்துடிப்பு எப்படியிருக்குமோ,
அதுபோல! மனிதன் படுத்திருந்த கட்டிலிலிருந்து நழுவி விழுந்திருந்தார்.
அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தது. பக்கத்து மேசையிலிருக்கிற மருந்தை
எடுக்கக் கூட வலுவின்றிச் சரிந்து கிடந்தார்; கைத்தொலைபேசியோ ஒரு மூலையில்
கிடந்தது; அறைக்கதவு தாழிடப்பட்டிருந்தது. அவரது அலறல் நின்றபாடில்லை.
பக்கத்து வீட்டு நாயொன்று பதறிக்கொண்டு குரைத்தது. அந்தச் சத்தத்தில் அண்டை
வீட்டு அம்மா எழுந்து வர, விசயம் புரிந்தது. உதவி செய்வதற்கு எவ்வளவோ
முயன்றும் கதவு திறக்கப்படவில்லை. என்ன செய்வதென்றறியாது நகர்ப்புறத்துக்கு
விரைந்து, தெரிந்த சிலரிடம் விவரத்தைச் சொல்ல, அவர்களும் பதறிக்கொண்டு
வந்து சாளரத்தை உடைத்தே திறந்தனர். உள்ளே கிடந்த தமிழாசிரியர் கைகால்கள்
உதற அவரால் ஒரு வார்த்தையும் பேச இயலவில்லை. சிறிது நேரத்தில் மருத்துவ
வண்டி வரவே, அவரைப் படுக்க வைத்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.
இரண்டு வாரங்களுக்குப் பின் வீடு திரும்பினார். அந்த அம்மாவின் கையைப்
பற்றி ‘ நீங்க மட்டும் இல்லன்னா, நான் செத்தே போயிருப்பேன்!” என்று கண்ணீர்
மல்கக் கூறினார்.
அந்த அம்மா மனைவி மக்களோடு அனுசரித்து வாழ்ந்தால் இந்த அவதி தேவையில்லையே
எனச் சொல்ல வாயெடுத்தார். ஆனால், அதற்குள் ஒரு தொலைபேசி அழைப்பு வரவே
சட்டைப் பை நிறைய மருந்து மாத்திரைகளோடு தாங்கித் தாங்கிப்
புறப்பட்டுவிட்டார் இன்னொரு விழாவை நடத்த!
|
|