|
|
கலை இலக்கிய விழா 4 விபரங்கள்:
நாள் : 5.2.2012 (ஞாயிறு)
இடம் : சோமா அரங்கம், துன் சம்பந்தன் கட்டடம்
நேரம் : மதியம் 2.00
சிறப்பு பேச்சாளர்கள் : பேராசிரியர் அ. மார்க்ஸ், கவிஞர் ஆதவன் தீட்சண்யா
நான்காவது ஆண்டாக 'கலை இலக்கிய விழா' ஏற்பாட்டில் இருக்கும் இத்தருணத்தில்
கடந்த மூன்று ஆண்டுகள் குறித்த நினைவுகள் வந்து மோதுவதைத் தவிர்க்க
முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள், ஒவ்வொரு விதமான
மனிதர்கள். நீண்ட இடைவெளி எல்லா சம்பவங்கள், மனிதர்கள் குறித்த கசப்பையும்
நெகிழ்வையும் ஒருங்கே சமன்படுத்தி அனுபவங்களாக மட்டுமே எஞ்ச வைத்துள்ளது.
முதல் கலை இலக்கிய விழாவில் ஏற்பட்ட தடுமாற்றமும் குழப்பங்களும் இந்த
நான்காவது ஆண்டில் இல்லாவிட்டாலும் அதன் பரபரப்பில் எந்தச் சமரசமும் இல்லை.
முதலில் 'கலை இலக்கிய நிகழ்வு' என்றுதான் இந்நிகழ்வுக்குப்
பெயரிட்டிருந்தேன். டாக்டர் சண்முகசிவா நிகழ்வு என்பதை விழா என
மாற்றச்சொன்னார். 'நாம் இதை கொண்டாடப்போகிறோம்' என்றார்.
கலை இலக்கிய விழாவின் வழி இலக்கியம் மட்டுமல்லாமல் மலேசியாவில் பல்வேறு
கலைத்துறைகளில் இயங்கும் ஆளுமைகளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பதே
முதன்மையான நோக்கமாக இருந்தது. அதன்படி ஓவியர் சந்துருவிடமும் நிழல்பட
கலைஞர் ஸ்டார் கணேசனிடமும் அவரவர் பதிவுகளை கண்காட்சியாக வைக்க அனுமதி
பெற்றேன். அது ஒரு நிறைவான தருணம். ஒரு ரசிகனுக்கு கண்காட்சி அளிக்கும்
அனுபவங்களை நேரில் பார்க்க முடிந்தது. என் சமகால கலைஞர்களிடம்
பார்வையாளர்கள் சந்தேகங்களைக் கேட்பதும் அவர்கள் தெளிவு படுத்துவதும் என
ஓர் முழுமையை அந்த அங்கம் கொடுத்தது. பொதுவாகவே ஒரு பெரும் நிகழ்வில் ஏதோ
ஒரு கணத்தில் 'இதுதான்' என மனம் சொல்லிவிடும். அந்த நிமிடம் ஏதோ ஒன்று
முழுமை அடைந்துவிட்டதைப் போல ஓர் நிறைவிருக்கும். எனக்கு அந்நிறைவு முதல்
அங்கத்திலேயே ஏற்பட்டுவிட்டது ஆச்சரியம். அதற்குப் பின் பெரிய பதற்றம்
இல்லை.
சிறுகதை, கவிதை திறனாய்வு, நூல் வெளியீடுகள், கண்காட்சிகள், மேடை நாடகம் என
முதல் கலை இலக்கிய விழா முடிந்தபோது சில நண்பர்கள் தூரம் சென்றுவிட்டதை உணர
முடிந்தது. எல்லோருக்கும் நிகழ்வில் ஏதோ ஒரு பகுதியில் புகார்கள் இருந்தன.
வல்லினம் இதழில் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களே நிறைகளில் 'நாம்' எனவும்
குறைகளில் 'நீ' எனவும் கரங்களை நீட்டினர். கடைசி நிமிடம்வரை அழைப்புக்கு
பதில் சொல்லாத நண்பர்கள் சிங்கை இளங்கோவன் நாடகத்தால் பதறி துடித்து
கோபித்தனர். ஆசிரியர் குழுவிலிருந்து பெயரை நீக்கிவிட கேட்டுக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் தொலைபேசிகளை எடுக்காத தார்மீகத்தைக் கவிதையாக எழுதி
கைத்தட்டல் பெற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் 'கலை இலக்கிய விழா' பெயரைச்
சொல்லி வெளியில் பணம் பெற்றிருப்பது அப்போதுதான் தெரிந்தது. எல்லோருக்கும்
பதில் சொல்ல வேண்டியிருந்தது. சமாதானம் ஆகாதது நான் மட்டும்தான். இனி
இதுபோன்ற முயற்சிகளில் எப்போதும் ஈடுபடுவதில்லை என அப்போதே
முடிவெடுத்துக்கொண்டேன்.
முதல் கலை இலக்கியவிழாவில் துவங்கப்பட்ட வல்லினம் அகப்பக்கம், அச்சு
எழுத்தில் படித்துப் பழகியவர்களுக்கு அந்நியமாகியிருந்தது. எனவே இணைய
இதழில் வரும் முக்கியமான கட்டுரைகளையும் புனைவுகளையும் தொகுப்பதென
முடிவெடுத்து 200 பக்கங்களுக்கு நூலாக்கினேன். 'மலேசிய - சிங்கப்பூர் 2010'
எனும் தலைப்பில் அம்மலர் வெளியீடு செய்யும் திட்டம் இருந்தபோது ஜெயமோகன்
வரும் தகவல் கிடைத்தது. ஜெயமோகனின் இலக்கிய உரையுடன் நூலை வெளியிடுவதென
முடிவானபோது சினிமா குறித்து கலந்துரையாடல் நடத்த இயக்குநர் ராமை
அழைக்கலாம் என சிவா சொன்னார். அதற்கான பொறுப்புகளை அவரே ஏற்றுக்கொண்டார்.
எல்லாம் அறிவித்தப்பின் ராம் வர முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் நிகழ்வு
நிறைவாய் அமைந்தது. குறிப்பாக 'மலேசிய - சிங்கப்பூர் 2010' நூலை
மலேசியாவில் இருக்கின்ற ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும்
பல்கலைகழகங்களில் சேர்க்க முடிந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இரண்டாவது
கலை இலக்கிய விழாவில் 'இயக்கியகமும்' இணைந்து கொண்டது பலமாக இருந்தது. 'கலை
இலக்கிய விழா 2' முடியும் போதுதான் இதை இனி செய்யக்கூடாது என
முடிவெடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த நிகழ்வின் வழிதான்
கே.பாலமுருகன் மீண்டும் நண்பராயிருந்தார். எனவே செய்தது தப்பில்லை என
சமாதானம் செய்துகொண்டேன்.
மூன்றாவது கலை இலக்கிய விழாவில் வரலாற்றை புனைவாக மாற்றியவர்களை
மீட்டெடுக்கும் எண்ணம் எழுந்தது. அதன்படி 'வரலாற்றை மீட்டுணர்தல்' எனும்
தலைப்பில் அ.ரெங்கசாமி எழுதிய 'இமையத் தியாகம்' மற்றும் முத்தம்மாள்
பழனிசாமி எழுதிய 'நாடு விட்டு நாடு' எனும் நூல்களை வெளியிட்டோம். இவ்விரு
நூல்களும் ஏற்கனவே நூலாக்கம் பெற்று வெளியிடப்படாமல் இருந்தன. இவற்றோடு
அ.ரெங்கசாமி எழுதிய 'விடிந்தது ஈழம்' எனும் இலங்கையின் சுருக்கமான வரலாற்று
நூலையும் செம்பருத்தி பதிப்பகத்தின் மூலம் இலவச வெளியீடாக அச்சிட்டு
விநியோகித்தோம். இந்நிகழ்வு வல்லினம் - செம்பருத்தி கூட்டணியில்
நடந்தேறியது. ஜானகிராமனின் மலேசியத் தமிழர்கள் வரலாறு ஒட்டிய பேச்சுடன்
அந்நிகழ்ச்சி முடிவுற்றது.
ஒரு நிகழ்வு முடிந்தபின்தான் அது ஏற்படுத்திய விளைவுகள் தெரியும். அதன்படி
முத்தம்மாள் பழனிசாமியின் எழுத்து மலேசிய தமிழ் இலக்கிய உலக்குக்கு
அந்நிகழ்வின் மூலம் நன்கு அறிமுகமானது. வானொலியில் அவரது குரல் ஒலித்தது.
பல நாட்களாக இலங்கை வரலாறை எழுதிவைத்திருந்த 80 வயது முதியவர்
ரெங்கசாமியில் 'விடிந்தது ஈழம்' நாடு முழுமையும் இலவசமாக படர்ந்தது.
மூன்றாவது கலை இலக்கிய விழா ஏற்படுத்திய மகிழ்வின் பிசுபிசுப்பு சில
மாதங்கள் நீடித்தன. ஓர் எழுத்தாளனை மீண்டும் மீண்டும் சமூகத்தின் முன்
நிறுத்தி அவனைக் கொண்டாட வைப்பது சமூகத்தின் மனப்போக்கை மாற்றும் ஒரு
செயல்பாடாகவே எனக்குப் பட்டது. அதை தொடர்ந்து செய்வதில் உள்ள போதை நீக்கமற
நிறைந்திருந்தது.
இந்நிலையில் நான்காவது கலை இலக்கிய விழா இவ்வருட தொடக்கத்திலேயே வருகிறது.
நான்கு நூல்கள், இரண்டு தமிழகப் பேச்சாளர்கள் என கனமான அங்கங்கள். இதில்
வெளியீடு காணும் என் நூலைத் தவிர்த்த பிற 3 நூல்களையும் முழு விருப்பத்தின்
பேரிலேயே பதிப்பித்தேன். அவற்றில் இரண்டு வல்லினத்தில் ஏற்கனவே தொடராக
வந்தவை. கடந்த ஆண்டு வல்லினம் தொடர்களை ஆரம்பித்த போது நண்பர்கள்
வட்டத்திலிருந்தே எதிர்ப்புகள் வந்தன. 'தொடர் வெளியிடுவது வல்லினத்தில்
தரத்தைக் கெடுக்கும்' எனச்சொல்லப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பல புதிய
எழுத்தாளர்களுக்கு எழுத வாய்ப்பளித்தோம். இன்று அத்தொடர்களில் குறைந்தது
ஐந்தாவது நூலுரு பெறும் தரம் பெற்றுள்ளன.
ஒரு முறை ரேணுகா எனும் பெண் அதே பெயர் கொண்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து
கவிதைகளை அனுப்பியிருந்தார். நல்ல கவிதைகள். உடனே பிரசுரித்தேன்.
மறுமாதமும் அவரிடம் கவிதைகள் வந்தன. சில காரணங்களினால் அது புனைப்பெயரில்
எழுதப்படும் கவிதை என சந்தேகித்து பிரசுரிக்கத் தாமதப்படுத்தினேன்.
"கவிதையை ஏன் போடவில்லை" என்ற குரல் எங்கிருந்து வருகிறதோ அவர்தான் அந்த
கவிஞர் என காத்திருந்த போது, சிவா அழைத்து, மின்னஞ்சலை சரியாகச் சோதிக்கும்
படியும் ஏதாவது விடுபட்டதா என பார்க்கும் படியும் கூறியபோது புரிந்து
போனது. சிவா பெரியண்ணனின் கவிதைகளை நூலாக்குவதில் எனக்கு ஆர்வம் இருந்தது.
அதற்கு மிக முக்கிய காரணம் அவற்றில் சில சமகால அரசியலைப் பேசுகின்றன.
மலேசியாவில் அகம் நோக்கிய ஓர் அந்தரங்கக் குரலில் கவிதை புனைவது
பெருக்கெடுத்துவிட்ட சூழலில் பிரச்சாரக் குரல் ஓங்காத இதுபோன்ற கவிதைகளின்
வருகை அவசியம் என கருதுகிறேன். பாலமுருகன் அவர் கட்டுரைகளுக்குக்
கொடுத்துள்ள உழைப்பு அபாரமானது. அந்த உழைப்பை கட்டுரை வாசிக்கும்
ஒவ்வொருவரும் உணர்வர். அதே போல யோகிக்கு இந்த நூல் புதிய அடையாளங்களைக்
கொடுக்கும்.
ஜெயமோகன் வந்து சென்ற பிறகு, சில நாட்களிலேயே அ. மார்க்ஸை வர வைக்க
வேண்டும் என நினைத்தேன். இலக்கியத்தின் பல்வேறு பக்கங்களை இதுபோன்ற பல்வேறு
ஆளுமைகளுடன் ஏற்படும் உரையாடல்கள் மூலமே அறிமுகப்படுத்த முடியும் என
நம்பினேன். இந்நிகழ்வில் அது சாத்தியப்பட்டுள்ளது. ஆதவன் தீட்சண்யா உடன்
வருவது கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. எப்படியும் நிகழ்வில் ஏதோ
பகுதியில் 'இதுதான்' என மனதளவில் ஒரு நிறைவுக்கு வந்துவிடுவேன். அந்த
நிமிடத்திலிருந்து அடுத்த கலை இலக்கிய விழா குறித்து யோசிப்பேன். அந்த
நிமிடம் எது என்பதுதான் இப்போதைக்குத் தெரியவில்லை.
|
|