முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 46
அக்டோபர் 2012

  காலாவதியான இரசனையும் சினிமாவும்
கே. பாலமுருகன்
 
 
       

பதிவு:

வல்லினம் வகுப்புகள் 2 - 'மஹாத்மன் சிறுகதைகள் உலகத்தரமானவை'
தமிழவன்



கட்டுரை:

காலாவதியான இரசனையும் சினிமாவும்
கே. பாலமுருகன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
கே. எஸ். சுதாகர்

மதமாற்றத்தின் அரசியல்
கே. பாலமுருகன்

ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்
லதா



நேர்காணல்:

எனக்கு அறிவியல் பள்ளியில் இடம் இல்லை
ஸ்ரீ அறிவேஷ்

சிறுவர் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டும்
கே. பாலமுருகன்



சிறுவர் சிறுகதை:

ஓரம் போ
கே. பாலமுருகன்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 5
அ. மார்க்ஸ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

இரா. சரவண தீர்த்தா

சின்னப்பயல்

செ. சுஜாதா

ந. பெரியசாமி

துரோணா

‘சினிமா வளர்ந்து கொண்டிருக்கின்றது. நம் இரசனை ஊனமாகிக் கொண்டு போகிறது.’

சமீபத்திய முகநூல் விவாதம் ஒன்றில் இன்றைய இளைஞர்கள் சீரழிந்து போவதற்குச் சினிமாதான் காரணம் என்பதைப் போல எழுதப்பட்டிருந்தது. சமூகத்தின் ஒரு தரப்பினர் மொத்தமாகச் சீரழிந்து போவதற்கு ஒன்றை மட்டுமே காரணமாகச் சுட்டிக் காட்டுவது அபத்தமாகத் தெரிந்தது. உலகத் தமிழ் இலக்கியமே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என நினைப்பது எப்படி அபத்தமோ அதே போலதான் சினிமா என்ற கலையைத் தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய படங்களோடு மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் அபத்தமே.

தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய 10 படங்களில் 5 வணிகத்தன்மை கொண்டவையாக இருந்தால், மற்ற 3 கலை சினிமா என்ற போர்வையில் தழுவல் படங்களும், தப்பித்தோம் பிழைத்தோம் என 2 நல்ல படங்களும் மட்டுமே கடைசியாக மிச்சமாக வந்து சேர்கின்றன. சினிமா ஒரு உற்பத்தி தொழிற்சாலையாக மாறிவிட்ட எல்லா நாடுகளிலுமே அவை கலை என்பதை மீறி வியாபாரமாக மட்டுமே கவனிக்கப்படுகிறது. சினிமா எம்மாதிரியான விளைவுகளைச் சமூகத்தில் உண்டாக்குகின்றது என்பதைக் கவனிப்போம்.

1.பண்ட மாற்று தொழில்முறை

சினிமா ஒரு போதை வஸ்துவாகச் சமூகத்திற்குள் உபயோகிக்கப்படுகிறது. தனிமனிதனின் நிஜ வாழ்க்கை அளிக்கக்கூடிய மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, மன அழுத்தம் என அனைத்திலிருந்தும் விடுவிக்கக்கூடிய ஆற்றல் சினிமாவுக்கு இருக்கிறது என நம்ப வைக்கப்பட்டுள்ளோம். நனவு மனதை அதன் ஆழங்களிலிருந்து கடத்திச் சென்று மிதக்க வைக்கும் தன்மையைப் போதை அளிக்கக்கூடியது.

நேரடியாக ஆபத்தை விளைவிக்காத ஒரு மாற்றுப் போதையாகச் சினிமா மெல்ல சமூகத்தின் நனவு மனதைச் செயழிக்கச் செய்கிறது. சினிமா என்பதை நிஜ வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத ஒரு மந்திரத்தன்மை வாய்ந்ததாக நம்பத்தொடங்கிவிடுகிறோம். போதை நம்மைக் காப்பாற்றிவிடும் என ஆழமாக நம்புவதைப் போல, சினிமா நிஜ வாழ்க்கையின் அனைத்துவிதமான கசப்புகளையும் துன்பங்களையும் மறக்கும் உணர்வைக் கொடுக்கவல்லது என ஏற்றுக்கொள்கிறோம். சினிமா என்பதை ஒரு சமூகம் மீள்புரிதல் செய்யும் இடத்திலிருந்து பல வியாபாரிகள் உருவாகிறார்கள். மறைமுகமாகப் போதையைக் கடத்துவதைப் போல மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல சினிமாவைத் தயாரிக்கத் தொடங்குகிறார்கள்.

இதன் மூலம் எல்லா சினிமாக்களும் ஒற்றைத்தன்மையை அடைகின்றன. ஒரே லேபள் ஒட்டப்பட்டு வெளியேற்றப்படும் நெகிழி புட்டி மாதிரி சினிமா உற்பத்தி செய்யப்படுகின்றன.

தனிமனிதனின் அன்றாட துன்பங்களுக்கு மாற்றாக ஒரு சினிமா விற்கப்படுகிறது. ஒரு வழக்கமான சினிமாவை எடுப்பதன் மூலம் ஆயிரம் இரசிகர்களின் வாழ்க்கையை விடுவிக்கிறோம் என்ற தோரணையில் சினிமா என்பதன் அர்த்தம் மெல்ல சிதைக்கப்பட்டு புதுபிக்கப்படுகிறது. சினிமா வாழ்க்கைக்குள்ளிருந்து பேசும் கலை என்பது போய் சினிமா வாழ்க்கைக்கு வெளியே மகிழ்ச்சியை மட்டும் அளிக்கும் சாதனமாக பொருள் கொள்ளப்படுகின்றது. தன்னுடைய எல்லாம் கோபங்களையும் சோம்பல்களையும் வீணான பொழுதுகளையும் கொட்டும் சாக்கடையாக மாறி சினிமாவுக்குப் பல முகங்கள் தோன்ற தொடங்கின.

சமூகத்திற்காகச் சினிமா எனத் தொடங்கப்பட்ட தொழில்முறை, சினிமாவுக்கென ஒரு சமூகத்தை உற்பத்திக்கும் தொழிற்சாலையாக மாற்றம் கண்டது. இன்று சினிமா பல வசைகளுக்கும் அல்லது கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகிறது. வாழ்க்கையோடு ஒட்டாமல் அந்நியமாகிவிட்டது. காய்ச்சலுக்கு மருந்தைப் புட்டியில் அடைத்துக் கொடுப்பதைப் போல சினிமா மிகவும் மலிவான முறையின் உடனடியாகத் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.

2. கொண்டாட்ட உணர்வை விதைக்கின்றது

சமூகம் எப்பொழுதும் எதையாவது கொண்டாடிக் கொண்டும் எதையாவது மிதித்துக் கொண்டேதான் செயல்படும். ஒன்றைக் கொண்டாடி, மற்றொன்றை மிதிக்கும் பேரானந்த நிலையில் இந்தச் சமூகம் பிறழ்வுப்படாமல் தன்னைக் காப்பற்றிக்கொள்கிறது என நினைக்கிறேன். 90% சதவீதம் பேர் ஒரேமாதிரி பேச, ஒருவர் மட்டும் வேறு மாதிரி பேசி மாற்றுக்கருத்தை முன்வைத்தால் அவரை மனநோயாளி என அடையாளப்படுத்தும் சிந்தனைசூழலே இங்கு மிச்சமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இப்படியொரு பிறழ்வு மனநிலையுடன் சமூகம் செயல்பட சினிமா மிக வசதியாக அமைந்துவிட்டிருக்கிறது. தங்களுக்குப் பிடித்தமான சினிமா எனச் சொல்லும்போதே சினிமா பன்முகத்தன்மைகேற்ப கற்பழிக்கப்பட்டு விடுகிறது. தங்கள் என்பவர்கள் யார்? இரசனை ரீதியில், கொள்கை ரீதியில், சிந்தனை ரீதியில், பொருளாதார ரீதியில், மத ரீதியில் பலவகைகளில் பிரிந்து கிடக்கும் பொது மக்கள். இவர்களை எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தும் சாபக்கேடு எந்தவொரு மலினமான கலைக்கும் நேர்ந்துவிடுகிறது. அப்படித் திருப்திப்படாத ஒரு கூட்டம் அதன் மீது கல்லெறிந்து எச்சில் உமிழ்ந்து வசைப்பாடுவதும் இயல்பே.

அப்படியென்றால் இன்னும் பல யுகங்கள் போனாலும், ‘தங்களுக்குப் பிடித்தமான’ ஒரு சினிமாவை உலகில் யாராலும் கொடுத்துவிட முடியாது. சிலருக்குப் பிடித்தப் படத்தைச் சிலர் கொண்டாடுவதும், ஒரு சிலருக்குப் பிடிக்காத சினிமாவைத் தூற்றுவதும் இங்கு மிகச் சாதரணமாக நடந்து வருகிறது. இந்தப்பெருங்கூட்டத்தில் இரசனையின் கதி என்ன? முற்றிலும் வளர்க்கப்படாமல் ஊனமாகிக் கிடக்கும் இரசனையைக் காலத்திற்கும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சினிமாவின் வருகையையும் மதிப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் மூளையை என்ன செய்ய முடியும்?

3. சினிமா சமூக சீரழிவிற்குக் காரணம் எனப் பழி சுமத்துவது

சமீபத்தில் இதுபோன்ற சினிமா மீதான அவதூறுகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. சினிமா அதிகமான மக்கள் வரவேற்பை பெற்ற துறை என்பதால் அதனை நோக்கியே அனைவரின் பார்வையும் விமர்சனமும் இருக்கின்றன. சமூகக் குற்றங்களின் சரியான காரணிகளைத் தேடிக் கண்டறிய முடியாமல் பட்டிமன்றம் வைத்து சினிமாதான் காரணம், பாடல் வரிகள்தான் காரணம் எனப் சகட்டுமேனிக்குப் பேசித் திரியும் சூழல் சமூகத்தில் உருவாகியிருக்கிறது. அதனைப் படித்தவர்கள் முன்னின்று நடத்த, சாதாரண மக்களையும் இணைத்துக் கொண்டு அவர்களையும் சிந்திக்க முடியாத சோம்பேறிகளாக மாற்றுகிறார்கள்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் என வாதிடுபவர்கள் எப்படி அதுவே சமூகத்தின் ஒழுக்கத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக மாறும் எனச் சிந்திக்க மறுக்கிறார்கள். ஒருவேளை சினிமா நேரடியாகச் சமூகத்தைப் பாதிக்கிறதென்றால் எப்படி அது வெறும் பொழுதுபோக்கு கருவியாக மட்டும் இருக்க முடியும்? ஓய்வாக இருக்கும்போது புத்தகம் வாசிப்பவர்களுக்கு வாசிப்பது ஒரு பொழுதைக் கழிக்கும் செயலாக இருக்கும். ஆனால், உண்மையில் வாசிப்பு அளிக்கக்கூடியது வெறும் ஒரு பொழுதைக் கழிக்கும் தருணம் மட்டுமா? எல்லாவற்றையும் பொழுதுபோக்கு என மேம்போக்காகச் சொல்லிவிட முடியாது. ஆனால், அதிமுக்கியமான சில செயல்களை ஒரு சிலர் தங்களின் ஓய்வான பொழுதுகளில் மேற்கொள்வதுண்டு. அதற்காக, அவை ஒரு பொழுதுபோக்குக்குரிய விசயமாகக் கருதிவிட முடியாது.

சினிமா பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி இந்த நூற்றாண்டின் மாபெரும் கனவு. நிஜத்தையும் நிஜத்திற்கு அப்பாற்பட்ட கற்பனையையும் கலந்துகொடுக்கும் போதை. சினிமா ஒரு சமூகத்தை மறுகண்டுபிடிப்பு செய்யக்கூடும், சினிமா ஒரு சமூகத்தின் இழப்புகளுக்கு சர்வதேச கவனத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். சினிமா அடித்தட்டு கலைஞர்களை வாழவைக்கும், சினிமா தன் நிலம் சார்ந்த அடையாளங்களை மறுசீரமைப்பு செய்யும், சினிமா சமூகக் குற்றங்களை அம்பலப்படுத்தும், சினிமா நடப்பவற்றை பச்சையாக வெளிக்கொணரும், சினிமா மனித எழுச்சியை நோக்கி பாயக்கூடியது. இவற்றுக்கு அப்பாற்பட்டு சினிமா சந்தையாகிவிட்டது, சினிமா பண்டமாற்று கலாச்சாரத்தை வளர்த்துவிட்டிருக்கிறது, சினிமா முதலாளிய நிறுவனங்களின் தத்துப்பிள்ளையானது, சினிமா அபத்தங்களின் இருப்பிடமானது என்பதெல்லாம் இதே நூற்றாண்டில் சினிமா எனும் கலைக்குக் கிடைத்த சாபங்கள்.

உலகின் அனைத்துக் கலைகளும் வெறும் பொழுதுப்போக்குகாக மட்டும் படைக்கப்படுவதில்லை. சிந்திக்க வைப்பதும், மனித ஆழங்களைச் சென்றடைவதும், பலவகையான மௌனங்களைக் களைப்பதும் என அதன் பங்களிப்பை ஒவ்வொருக் காலக்கட்டத்தின் நகர்ச்சிக்கு ஏற்ப செய்து கொண்டுத்தான் வருகின்றன. காற்பந்து மிக முக்கியமான உலக விளையாட்டு. அதனைக் கற்றுக்கொண்டு சிறந்த விளையாட்டார்களை உருவாக்க ஒவ்வொரு நாடும் உழைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அதே காற்பந்துதான் இன்று சமூகத்தில் சூதாட்டச் சந்தைகளை உற்பத்தி செய்து வைத்திருக்கின்றது. அதற்காக, காற்பந்தைத் தடை செய்ய முடியுமா? இளைஞர்கள் சீரழிந்து போவதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் சினிமாதான் காரணம் எனத் தீர்க்கமாகப் பழி சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

சந்தையில் குவிந்துகிடக்கும் எல்லாவற்றையும் நாம் அள்ளி நமக்குள் இரைத்துக்கொள்ள வேண்டியதில்லை. நமக்குரியதை அல்லது நம் இளம் தலைமுறையினருக்குரியதை நாம் தேர்தெடுத்துக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். நாமும் அன்றாட மெகாத் தொடரில் / சீரியலில் அடிமையாகிக் கிடந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?

எப்பொழுது ஒரு மாணவன் வகுப்பறையில் வாய்ப்பளிக்கப்படாமல் ஓரங்கட்டப்படுகிறானோ அப்பொழுதிலிருந்து அவனுக்குள் வன்முறை கிளைவிடத் தொடங்கிவிடுகிறது. அங்கீகாரமின்மையும் தன்னை நிருபிக்கக் களம் இல்லாதபோதும், அவன் எப்படியாவது இந்தச் சமூகம் தன்னைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கதாநாயகனாக மாறுகிறான். வன்முறை செய்கிறான். இது இடைநிலைப்பள்ளிக்குப் போனதும் ஆரம்பமாகின்றது. மலாய்மொழியில் பேசத் தெரியாததனாலும், தமிழனாக இருப்பதனாலும் எத்தனை இந்திய மாணவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் எனப் போய் பார்த்தால்தான் தெரியும் நண்பர்களே. வன்முறை எப்படி எங்கிருந்து தொடங்குகின்றது என்பது விரிவாக விமர்சிக்க வேண்டிய ஒரு களம். தமிழ் சினிமா மட்டுமே காரணம் என எதையும் முழுமையாக விவாதிக்காமல் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவது ஓர் இயலாமை.

சினிமாவைத் தவிர்த்து ஒரு சமூகத்தின் குற்றங்களை நாம் அணுகும் விதம் பல கோணங்களில் இருக்க வேண்டும். சினிமாவே அதன் களத்தில் சீர்குலைந்து கிடக்கும்போது, எப்படி அது சமூகத்தைச் சீர்குலைக்கும்? சினிமா இந்தச் சமூகத்திற்கேற்ப அதன் தரங்களிலிருந்து கீழிறக்கப்பட்டிருக்க, மீண்டும் இந்தச் சமூகம் சினிமாவைக் குறைக்கூறுவது மிகவும் வேடிக்கையானது. சினிமா சமூகத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே காலத்தில்தான் சமூகம் சினிமாவைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768