|
|
இந்தக் கதை சொல்லப்படுவதற்கோ வாசிக்கப்படுவதற்கோ அல்ல. இது
பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி. ஆகையால் இக்கதையில் சேர வேண்டியவை -
சொல்லப்படவேண்டியவை - வாசிப்பின் சிரமங்கள் பற்றிய வேதனைகள் - வசிக்க
முடியாதுள்ள குறைபாடுகள் - குறிப்புகள் - திட்டுகள் - சித்திரங்கள் -
படங்கள் - என்று அனுப்பக்கூடியதுகளை அனுப்புங்கள். எல்லாம் இக்கதையில்
சேர்த்துக்கொள்ளப்படும்.
4. கனவுகளின் கனவு
ஓடக் காலைத் தூக்கிய கனவின் நரம்புகள் குலைந்தன.
கனவுகளின் கனவொன்று கால்களின் கீழ் நொருங்கிக் கிடந்தது.
எத்தனை மனங்களைத் துள்ளிக் குதிக்க வைத்த கனவது... சிதைந்து
சின்னாபின்னமாகிக் கிடந்தது. நெஞ்சம் வெடித்துச் சிதறியது போல் ஏங்கு ஏங்கு
என்று ஏங்கியது முதலாம் கனவு. பொருமிய நெஞ்சு கண்ணீரைப் புரட்டி இறைத்தது.
‘அழகின் அழகை- உயிர்ப்பின் உதைப்பை -இருத்தலின் அர்த்தத்தைத் துண்டு
துண்டாக்கிய வக்கிரங்களே’ என்று கூவியது.
இனி ஓடிப்பயனில்லை என்று நிலத்தில் காலை ஓங்கிக் குத்தியது கனவு. குனிந்து
நிலத்தில் மண்டையை மோதி ஒரு சத்தியம் செய்தது.
“விடமாட்டேன்”
‘கனவின் கனவே- என் தமிழ் ஈழமே! உன் மேல் சத்தியம். இதோ இரத்தம் பிழியப்
பிழிய சிதறிக்கிடக்கும் உன் துண்டுகள் மேல் சத்தியம். உன்னைக் குதறியவர்களை
விடமாட்டேன்’ கனவு ஓங்கிக் குரல் விட்டது.
‘இனி என்ன செய்யப் போகிறாய் நீ ? நீ ஒரு வெறுங்கனவு’ என்று மென்மையான
அமைதியான குரல் ஒன்று பக்கத்தில் கேட்டது.
இரண்டாம் கனவொன்று(இ.கனவு) முழங்காலில் தலை சாய்த்து முதலாம்
கனவைப்(மு.கனவு) பார்த்துக் கதைத்தது. ‘என்னால் முடிந்ததைச் செய்வேன்
என்றுகூட நீ சொல்ல முடியாது. அதோ பார் அங்கு கிடக்கும் ஒவ்வொரு மனிதத்
துண்டுகளும் தங்களால் முடிந்ததை செய்ய முயன்று தான் சிதறிக் கிடக்கின்றன.
இல்லை என்று சொல்லிக் கொச்சைப்படுத்தாதே. என்றது இ.கனவு.
‘இந்தப் பக்கம் பார் வெள்ளை வான். அங்குபார் அடிவானம். இரண்டுக்குமிடையில்
மாட்டிக்கொண்டு என்ன மண்ணாங்கட்டியைப் புடுங்கப்போகிறாய்’ என்றது இ.கனவு.
‘நானோ வெள்ளை வானுக்காகத்தான் காத்திருக்கிறேன். இன்னும் தப்பியிருப்பது
பிழை’ என்றது இ.கனவு.
‘முட்டாள் நீ. அவர்கள் என் வேர் புடுங்கும் வரையும் எதிர்க்கும்.– கனவை
சும்மா சாக விடேன்’ என்று உரத்துக் கத்தியது மு.கனவு.
‘நீ சொல்வழி கேட்க மாட்டாயா?’ என்ற இ.கனவு எப்படிச் சொன்னாலும் மு.கனவிற்கு
எதுவும் ஏறவில்லை என்ற புறுபுறுப்போடு ‘இஞ்சபார் கனவு வெடிப்பின்
பின்னிருக்கும் மூன்று குட்டிக்கதைகளைச் சொல்கிறேன் கேள்’ என்றது. இ.கனவு
சொன்ன குட்டிக்கதைகள் மண்டைக்காய் பாணிச் செல்லக் கதைகள் அல்ல.
இ.கனவு இருந்தபடியே எட்டி தனக்கு முன்னால் சிதறிக் கிடந்த சில துண்டுக்
கனவுகளைப் பொறுக்கியது. அதில் மூன்று துண்டுகளைச் சும்மா தெரிவு செய்து
தூசு தட்டியது. இந்தா பிடி! முதலாவது துண்டு என்று ஒரு துண்டை மு.கனவு
நோக்கி எறிந்தது.
5. முதலாவது குட்டிக்கதை (முதலாம் துண்டு)
இரண்டு கைகளையும் மடக்கிப்பிடித்துக்கொண்டு காதைத் திருகினார் குகனேசன்
வாத்தியார். இது அவளது பாடசாலையில் எல்லோருக்கும் பழக்கமான ஒன்று.
‘உனக்கெத்தினதரமடி சொன்னனான் கோம்வேர்க் செய்யாம பள்ளிக்கூடம் வரவேண்டாம்
எண்டு’ அவர் உரக்கக் கத்தினார். மற்றப் பிள்ளையள் நடுங்கியபடி பார்த்துக்
கொண்டிருந்தினம். இங்கிலிஸ் ரீச்சர் மிசிஸ் காதருக்கும் குகனேசனுக்கும்
நிறைய வித்தியாசம் உண்டு. ‘என்ன அழகா உச்சரிக்கிற பிள்ள சொல்லை’ என்று
உச்சுக்கொட்டாதக் குறையா வழிவார் அவர். குகனேசன் வாத்தியக் கண்டா கைகால்கள்
எல்லாம் பதறுற மாதிரி அவவைக் கண்டு யாரும் பயப்பிடுவதில்லை. ‘நீங்கள்
இங்கிலீசு படிச்சா என்ன? படிக்காட்டி என்ன? என்று மற்றவர்களும் கண்டு
கொள்வதில்லை.
குகனேசன் வாத்தியின் கதை வேறு. அவர் படிப்பிப்பது ‘மாத்ஸ்’- கணிதம்.
கணிதத்தில் வீக்கானவர்கள் துலைந்தார்கள். குகனேசன் வாத்தியிட்ட
அடிவாங்காட்டி அதிபர் பாலசுந்தரத்திட்ட வாங்கவேண்டியிருக்கும்.
சுந்தரலிங்கத்திட்ட வாங்கவேண்டியிருக்கும். ஏன் தமிழ் ரீச்சர் கூட சிலவேளை
தானும் ஒரு கைபார்ப்பார். தப்பித் தவறிப் பெயிலடித்துவிட்டால் எல்லோருமாக
சேர்ந்து ஒரு கை பார்ப்பார்கள். அது போதாதென்று வீட்டுக்குப் போனதும்
தகப்பன் ஒரு பிடி பிடிப்பார்.
இரண்டாம் தெருவில் இருக்கும் மாலதி இன்னும் பாவம். அவள் தான் அடிக்கடி
பெயில் விடுவாள். தகப்பன் ஒரு தடவை நாலு கிழுவம் தடிகளை நார் நாராய்
கிழிச்சிருக்கிறார். ஒரு கிழமைக்கும் பிறகுதான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு
போனவை மாலதியை – ‘புண்ணுக்கு மருந்துபோட’. குகனேசன் வாத்திக்கு திருப்பி
அடிக்கவேனும் எனக் கன தடைவ அவள் யோசித்திருக்கிறாள். பிடித்து திருகும்
கைகளை கடிக்கவேனும் போலிருக்கும் அவளுக்கு. காது வலியில் தலை ஒரு பக்கம்
திரும்பி நின்றதில் வாத்தியைச் சரியாகக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால்
இந்த குகனேசன் வாத்தி குடுத்த அலுப்பை பிற்காலத்தில் ‘நன்றியுடன்’
நினைத்துக்கொண்டாள்.
பிற்காலத்தில் அவள் கணிதத்தில் பட்டம் பெற்றுக் கொண்டதன் பின்- அந்த நேரம்
குகனேசன் வாத்தியிட்ட அடி வாங்கியிருக்காட்டி கணிதம் படிச்சிருப்பேனா – என்
நன்றியோடு நினைத்துக் கொண்டாள் என்று சொல்லப்போகிறேன் என்று உங்கள்
குறுக்கால போன மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.பாவம் நீங்கள். உங்களுக்கு
நான் சொல்லவரும் கதை இன்னும் விளங்கவில்லை என்று அர்த்தம்!
குமுதா கணிதத்தில் வலு கெட்டிக்காரி. அவள் போற ரியூசனுக்கு அனுப்போணுமென்டு
மாலதியைப் பெற்றோர் குகனிடம் ரியுசனுக்கு அனுப்பியிருந்தனர். அதே போல தான்;
அவளையும் மார்க்கண்டுவிடமிருந்து மாற்றிக் குகனிடம் ரியூசனுக்கு அனுப்பினர்
பெற்றோர். குகன் ஒரு சூப்பர் வாத்தி. குகனைச் சந்தித்த பின்புதான் அவளுக்கு
கணக்கில் பிடிப்பு வந்தது. குகனிடம் தான் ரியூசன் போகக் காரணமாயிருந்த
குகனேசன் வாத்தியின் ஆக்கினைகளைத்தான் நக்கலாக அவள் நன்றியுடன் நினைத்துக்
கொள்வாள்.
குகன்மேல் மாணவர்கள் வைத்திருந்தது அன்பு அல்ல –காதல். முதன் முதலாக அவள்
குகனிடம் ரியூசனுக்கு போகத் தொடங்கிய போது அவளுக்கு வயசு 11. ஏழாம்
வகுப்பில் இருந்து ஏ.எல் வரை படித்துக் கொண்டிருந்த எல்லாப்
பொட்டைகளுக்கும் குகன்மேல் காதல் இருந்தது. அவளுடய நல்ல காலத்துக்கு குகன்
அவள் வசிக்கும் அதே தெருவிலேயே வசித்து வந்தான். இதன் காரணமாகவும் அவளை
குகனிடம் ரியூசனுக்கு அனுப்ப அவர்கள் விரும்பியிருக்கவில்லை. ‘குமுதா
போறவடியாத்தான் இவள அங்க ரியூசனுக்கு விட்டிருக்கிறன். இல்லாட்டிக் கடைசி
வரையும் விடமாட்டன்’ என்று தகப்பன் அடிக்கடி சொல்லிக் கொள்வார்.
குகனைப்பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
புலி உடுப்போட வந்து பாடமெடுக்கக்கூடிய ஒருத்தனிட்ட பிள்ளைகளை படிக்க
அனுப்ப எல்லாருக்கும் நல்ல பயம். அவன் வாக்கி டாக்கியை கொண்டுவந்து
பிள்ளைகளுக்குப் பழக விடுகிறான் - அவனோட கதைக்க ஆயுதத்தோட பொடியள் வகுப்பு
வரையும் வாறாங்கள்- என்று பல குற்றச்சாட்டுகள் இருந்தது. அவன் ஒரு
இயக்கத்திலும் இல்லை. ஆனால் அவன் இயக்கத்துக்கு நெருக்கமானவன் என்பது பலர்
தெரிந்த இரகசியம். ஆனால் அவன் சரியான கெட்டிக்காரன் என்பது எல்லாருக்கும்
தெரியும்.
‘பிள்ளைகள் நேற்று இரண்டு பிளேன் வந்து போனது என்று சொல்கிறீர்கள். மூன்று
நாலு ஆமிக்காரங்கள் செத்துப் போனாங்களெண்டு செய்தியில் சொன்னதாக
சொல்கிறீர்கள்… இது என்ன தெரியுமோ? நீங்கள் போடும் கணக்குகள். நீங்கள்
உங்களுக்கு தெரியாமலே தினமும் நிறைய கணக்குகளைச் செய்து
கொண்டிருக்கிறீர்கள். புத்தகத்தில் பாத்தோன்ன மட்டும் ஏன்
பயப்பிடுகிறீர்கள்? இதெல்லாம் சின்ன விசயம்…
சரி செய்தியில் நேற்று மூன்று ஆமி செத்தது என்று தான் சொன்னார்கள். முதல்
நான் கேட்டபோது குமுதா சொல்கிறார் முன்று அல்லது நான்கு என்று! என்றால்
என்ன அர்த்தம். குமுதா வெறும் கூட்டல் கழித்தல் மட்டும் செய்யவில்லை! ஒரு
கூற்றின் முழு உண்மை தெரியாதிருக்கும் பொழுது கிட்டத்தட்ட என்னவாக
இருக்கும் என்று ஒரு கணக்கு போடுகிறார். பிள்ளைகள் அதைத்தான் நிகழ்தகவு
என்று கூறுவோம். நிகழ்தகவு நீங்கள் நித்தமும் செய்யும் வேலைதான்’ என்று
அவன் படிப்பிப்பான். பிள்ளைகள் ஆர்வமாக கேட்பார்கள்! அவர்களுக்கு பிறகு
நிகழ்தகவு மறக்காது. ஆனால் குகனேசன் வாத்தி கேட்கும் போது எப்பிடி
விளங்கப்படுத்துவது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்தது.
சில பின்னேரங்களில் அவள் மாலதியுடன் குகன் வீட்டுக்கு ஓடி விடுவாள். அவன்
கிழமை நாட்களில் ரியூசன் குடுப்பது குறைவு. குகன், பாலா அக்காவுடன் காதல்
சேட்டைகள் செய்து கொண்டிருந்த காலமது என்பது அவளுக்கு அந்த வயதிலும் நன்றாக
ஞாபகத்தில் பதிந்தது. அவளுக்:கு பொறாமை வரும். குகனின் மடியில்
இருக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்பாள். ‘இவளுக்கு நல்லாச் செல்லம்
குடுக்கிறியள் என்னென்டு படிப்பிக்கப் போறியள்’ என்று பாலா அக்கா
அந்தரப்படுவா.
சில சமயங்களில் பாலா அக்கா மதில் கட்டில் தலையைச் சாய்த்து கொஞ்சி கொஞ்சி
கதைப்பது போல் வழிய குகனும் மதிலைத் தடவித் தடவி உருகுவான்.
சறத்துக்குள்ளால் தன் பிரச்சினை வெளிப்பட்டுப் பரிகாசமாகாமல் இருப்பதற்காக
இறுக்கி ஒரு மடிக்கட்டு போட்டுக்கொண்டு நெளிவான். அந்த நேரத்தில் மடியில்
இருக்கவேண்டும் என்று அவள்; அடம்பிடிக்கும் போதுதான் குகனுக்கும்
அவளுக்கும் சண்டைவரும். வேறு வழியின்றி இருகால்களையும் இறுக்கப்பிடித்து
இருந்து கொண்டு அவளை மடியில் இருத்தவேண்டியும் இருக்கும். கீழ் உதட்டைக்
கடித்துக்கொண்டு பாலா அக்கா சிரிப்பார்.
இவள் ஒரு வித்தியாசமான பொட்டை ஒரு நேரத்தில் நல்ல கெட்டிக்காறியா வருவாள்
பாருங்க என்று பாலா அக்கா அடிக்கடி சான்றிதழ் வழங்குவா. குகனிடம்
ரியூசனுக்குப் போனதில் இருந்து அவள் கணிதம் கொஞ்சம் திருந்தத்
தொடங்கியிருந்தது குகனேசன் வாத்திக்கு சொல்லவெண்ணாக்; கோபத்தை உண்டு
பண்ணியிருந்தது. காலுக்குக் கீழ் வெழுக்கவும், புறங்கையில் அடிக்கவும்,
காதைத் திருகவும் அவர் ஓடி ஓடி பிழைகளைக் கண்டு பிடிப்பார். அவளுக்கு விசர்
விசராய் வரும். ஆனால் அந்த வாத்தியிடம் அடி வாங்கி எல்லோருக்கும் பழகிப்
போய்விட்டது.
பிள்ளைகள் வகுப்பில் பேசிக் கூத்தடித்துக் கொண்டிருப்பதை பூனை போல் நடந்து
வந்து கண்டுபிடித்து அடி போடுவார் அவர். கையில் பிரம்பில்லாமல் ஆளைக் காணக்
கிடைக்காது. கைகளைப் பின்னால் கட்டியபடி -பிரம்பிருக்கும் கையின்
மணிக்கட்டை மறுகை பிடிக்க- பிரம்பை ஆட்டி ஆட்டி காலடியில் தட்டியபடி அடிக்க
யார் கிடைப்பினம் என்று திரிவேர் அவர். தனது மொட்டைத் தலையை அடிக்கடி
தடவிக் கொள்ள மட்டும் அவர் ஒற்றைக் கையை சில சமயங்களில் விடுவிப்பார்.
அவரது பிரடிப் பக்கமிருந்த சொற்ப மயிருக்கு கூட எண்ணை தடவி ஒட்ட
வழித்திருப்பார். அவர் புறங்கையில் பிரம்பால் அடிக்கும் பொழுது அவள் அவர்
மொட்டையைப் பார்ப்பதுண்டு. கண்களை இழுத்து வைப்பது போல் மொட்டை
பிரகாசிக்கும்.
என்ன இருந்தாலும் மாலதி வாங்கின அடிபோல் யாரும் வாங்கியிருக்க முடியாது.
அவள்தான் வகுப்பில் கடைசிப்பிள்ளை. அத்தனை ரீச்சர்களிடமும் அடி வாங்கினாள்.
ரிப்போர்ட் நாட்களில் ‘அதிபரின் ஸ்பெசல்ஸ்’ அடியும் விழும். குகனேசன்
ஒருமுறை எரிச்சல் தாங்க முடியாமல் அவளின் ஒரு கையை இழுத்து கன்னத்தை போட்டு
மின்னிப் போட்டேர். காதை பொத்திக்கொண்டு மாலதி அப்படியே குந்திவிட்டாள்.
முன்பாவாடை முளங்காலுக்குமேல் சொருகிக்கொண்டு நின்றது. பின் பாவாடையில்
மூத்திரம் வழிந்தது எல்லோருக்கும் தெரிந்தது. குகனேசனான குகனேசனுக்கே ஒரு
கலக்கம் ஏற்பட்டுவிட்டது என்றால் பாருங்கள். மாலதியின் கையைப் பிடிச்சு
எழுப்பி அவளை வகுப்புக்கு வெளியால் கூட்டிக் கொண்டு சென்று விட்டேர். மற்ற
ரீச்சர்மார் சிலரும் ஸ்டாப் ரூம் நோக்கி நடப்பதை அவள் தன் வகுப்பறையில்
இருந்து பார்த்தாள். வகுப்பில் எல்லாரும் அமைதியாக ஒருவரை ஒருவர்
பயக்கெடுதியில் பார்த்துக் கொண்டனர்.
அன்று மாலதி வீட்டுக்கு அவள் விளையாடப்போக மாலதியின் தகப்பன் அவளையும்
திட்டித்தீர்த்தார். ஆனால் அன்று மாலதிக்கு வீட்டில் அடி விழவில்லை. சனியன்
சனியன் என்று தொடங்கி ஏராளமான திட்டுக்கள் விழுந்து கொண்டிருந்தது. தாய்
மட்டும் இடைக்கிடை வந்து அவள் தலையை தடவி விட்டு விட்டுப்போனார்.
அவளும் மாலதியும் நிறையக் கதைத்தார்கள் அன்று. படிக்கோனும் வா என்று
பெற்றோர்களின் தொல்லையின்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள். மாலதியின்
தகப்பன் அவளை வீட்ட கொண்டு போய் விடுவதாக அவளின் தகப்பனிடம்
சொல்லியிருந்தமையால் நன்றாக இருட்டிய பிறகும் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
மாலதியின் தாய் குழல் புட்டை இறக்கி வைத்து ஆறப்;போகுதெண்டு சொல்லிக்
கொண்டிருந்தார். அவர்கள் குகனைப் பற்றியும் கதைத்தார்கள். கதை இரண்டு தெரு
தாண்டியிருந்த காம்பைப் (முகாம்) பற்றியும் சென்றது. குறுகுறுப்புடன்
காம்புக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்!
அவர்கள் ஓவ்வொரு நாளும் பாடசாலை முடிந்து அந்தப் பக்கமாகத் தான் நடந்து
வருவார்கள் .அவள் கண்வெட்டாமல் காம்பையும் அங்கு நடப்பவைகளையும் கவனித்தபடி
தான் கடந்து நடப்பாள். சிலவேளை காம்படியில் நின்று பார்ப்பாள்.
உள்ளேயிருக்கும் பொடியள் கண்டு போட்டாங்கள் என்றால் துலைஞ்சுது. வெளியில
எட்டி ‘ஓடுறி’ என்று துரத்துவார்கள்.
6
அவள் முத்து முத்தாக எழுத்துப் பிழையின்றி தமிழ் எழுதுவாள்.
கையெழுத்துக்கான பரிசு எப்போதும் அவளுக்குத்தான். மேல்வகுப்பு பிள்ளைகளிற்
சிலர் கூட தமது காதற் கவிதைகளை அழகாக எழுதித்தரும்படி கேட்டதுண்டு.
அவளுக்கு பெருமையாக இருக்கும்.
‘இவள் ஆட்ஸ்தான்’ என்று தமிழ் ரீச்சர் அடிக்கடி சொல்லுவா. ஆட்ஸ் படிக்க
அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கு குகன் போல் கணிதம் படிக்க விருப்பமாக
இருந்ததுண்டு. உனக்கு மத்ஸ் வராது என்று மாலதி கிண்டலடித்தாலும் அவளுக்கு
அதில் விருப்பமாக இருந்தது.
அவளுக்கு 12 வயதிருக்கும் போது-எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்
போது அவளைப் பேசு;சுப் போட்டிக்குத் தமிழ்த் ரீச்சர்
தேர்ந்தெடுத்திருந்தார். அவளை எதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் என்பது
இன்றுவரை அவளுக்கு தெரியாது. டிஸ்ரிக் லெவலில் பரிசெடுக்க வேண்டுமென்பதில்
ரீச்சர்மார் வலு கவனமாக இருந்தார்கள். குமுதா தான் அவர்களின் இலக்கு. தலையை
நமிர்த்தி வைத்து குமுதா ஒப்பிக்கத் தொடங்கினாள் என்றால் இந்திரா காந்தி
தோத்துப்போவா. மண்டபம் கணீரென்ற குரல் நிறைந்து அதிரும். அவள் இடையே
நிறுத்தி மார்பை உயர்த்தி வசனத்தை அடித்தொண்டையில் இருந்து உச்சரிக்க
ரீச்சர் மார்களின் கைகளில் மயிர் எழுந்து நிற்கும்.
வழமையான ஆக்களையே நெடுகப் போடக்கூடாது என்று அவர்கள் அவளையும் பேச்சு
போட்டிக்கு தெரிவு செய்திருக்கலாம். தெரிவு செய்தவர்களைக் கூப்பிட்டு
ரீச்சர்மார் பயிற்சிகள் செய்தனர். முதலாவது பயிற்சி அவளுக்கு நல்ல
ஞாபகமாயிருக்கும் விசயம். சில ரீச்சர்மாரும் பிள்ளைகளும் அங்கு
கூடியிருந்தனர். ‘பிள்ளைகள் உங்களுக்கு விருப்பமான ஒன்றைப்பற்றி நீங்கள்
இப்ப பேசவேண்டும்’ என்று தமிழ் ரீச்சர் சொன்னார். குமுதாவுக்கு அது ஒரு
பிரச்சினையே இல்லை. குமுதா நிறையப் பேசு;சு போட்டிகளில் கலந்து கொண்டவள்
அவளுக்கு நிறைய பேச்சுகள் மனப்பாடமாகியிருந்தது. .‘அக்குனிக் குஞ்சொன்று
கண்டேன் அதை அங்கோர் காட்டிலே பொந்திடை வைத்தேன்;’ என்று பாடியிருக்கிறான்
நமது பாரதி.’ என்று தொடங்கி ‘ அதனால் தான் அந்த மகாகவி பாடினான் வெந்து
தணிந்தது காடு தணல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’ என்று
கணீரென்று சொல்லி முடித்து அமர்ந்தாள் குமுதா. ரீச்சர்மார் கைதட்ட அவள்
முகத்தில் பெருமிதம் ஆடியது. அடுத்து அவள்.
அக்கினிக்குஞ்சு அவளுக்கு பிடித்த பாட்டு. அதை சொல்லிவிட்டு இருப்போமோ
என்று யோசித்தாள். ‘சே அத குமுதா சொல்லிப்போட்டாள் பிறகென்னென்டு நான்
சொல்லிறது’ என யோசித்தவள் வாயில் வந்தபடி பேசத் தொடங்கினாள்.
‘எமது சமுதாயம் ஒரு நல்ல சமுதாயமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். எமது
மண்ணில் நாமெல்லாம் சுதந்திரமாகவும் நல்லாகவும் வாழ வேண்டும். நாம் அதற்காக
செய்ய வேண்டும்’ என்றவள் தடுமாறி நிறுத்தினாள். ரீச்சர்மார் தங்களுக்குள்
உயர்த்திய புருவத்துடன் பார்வையை பரிமாறிக் கொள்வதைக் கண்டவளுக்கு நாக்கு
மேலும் தடுமாறியது. ‘ஏன் நிற்பாட்டிற்றீர் தொடரும்’ என்றா ஒரு ரீச்சர்.
அவள் தட்டுத்தடுமாறி உளறத் தொடங்கிளாள். ரீச்சர்மாரின் முகங்களில் புன்னகை
பரவியது. எல்லார் மத்தியிலும் இக்கதை விரைவில் பரவியது. அவள் ‘சமுதாயம்’
பற்றிக் கதைக்கிறாளாம் என்றதன் மர்மத்தைக் குசுகுசுத்தனர்.
-இவன் குகன் பிள்ளைகளைக் கெடுக்கிறான்- என்று குகனேச வாத்தி முன்னின்று
வதந்தி பரப்பினார். ‘படிப்பிக்கிறதென்டா படிப்பிக்க வேண்டியதுதானே. பிறகேன்
அந்தக்கதை இந்தக்கதையெல்லாம் சொல்ப்பிள்ளைகளைக் கெடுப்பான்’ என்று
கதைத்தனர். அவளை சக மாணவர்களும் வித்தியாசமாகப் பார்த்தனர். நீ என்ன
இயக்கமோ என்று அருந்ததி ஒரு தடவை கேட்டாள். பிள்ளைகளுக்கு ரீச்சர்மாரின்ர
கதைகள் ஒன்றும் விளங்கவில்லை.
அவளுக்குத் தைரியமான ஒரு திருப்புமுனை இச்சம்பவம் என்று சொல்வது மிகையான
கூற்றல்ல என்றே நினைக்கிறேன். மிகுதிக் கதையைச் சுருக்கி வெட்டிப்
பின்வரும் சம்பவத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
செவ்வாயக்கிழமை காலை என்று நினைக்கிறேன். வலு வடிவாக வெளிக்கிட்டு
பள்ளிக்கூடத்துக்கு போகும் வழியில் காம்பைத் தாண்டிச் சென்று
கொண்டிருந்தவள் சட்டென்று நின்றாள். எதையோ தவற விட்டவள் போலத் திரும்பி
வந்தாள். கேற்றடியில் நின்று ஒரு பார்வை பார்த்தவள் விறு விறு என்று
கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனாள். விறாந்தையில் பாக்கை(பை) வைத்து
விட்டுச் சிரித்துக் கொண்டு நின்ற பொடியனிடம் சொன்னாள்.
‘அண்ணா நான் இயக்கத்தில சேர வந்திருக்கிறன்.’
‘பாக்கைத் தூக்கிக்கொண்டு ஓடு’ என அவன் கையைத் தூக்கினான் அடிக்க. அவள்
அழத்தொடங்கிளாள். ‘அண்ணா... அண்ணா நான் இயக்கத்தில சேரப்போறன்’ என்று
உரத்து அழுதாள். நித்திரையில் கிடந்தவர்கள் பின் வளவுக்க கிணத்தடியில்
பல்லு மினுக்கிக் கொண்டு நின்றவர்கள் என்று எல்லாரையும் விழுந்தடிச்சு
விறாந்தைக்கு வரப்பண்ணியது அவள் அழுகை.
‘கிளியக்கூப்பிடு’ என்று தன் சகாவைப்பார்த்து சொன்னான் கண்ணண். கிளியக்கா
வாறதுக்கிடையில் அவளது கைளைப்பிடித்து இழுத்து கேற்றடிக்கு கொண்டு போக
முயற்சித்தான் கண்ணண். அவள் அவனை உச்சிக்கொண்டு ஓடி வந்து கண்ணாடி
உடைந்திருந்த ஜன்னலின் நிலையை கட்டிப்பிடித்துக்கொண்டாள். விடமாட்டன் என்று
அடம்பிடித்தாள். இறுக்கி இழுத்தாள் கண்ணாடி கையை வெட்டிவிடும் போலிருந்தது.
கிளியக்கா வந்து சேர்ந்த பொழுது பொடியள் எல்லாம் குதிப்பும் கும்மாளமுமாக
இருந்தார்கள். ‘இஞ்சபாரக்கா இதின்ட விளையாட்ட’ என்று விசயத்தை
அறிமுகப்படுத்தினர். கிளியக்காவுக்கும் முகம் சிரிப்பால் மலர்ந்தது. ‘உள்ள
வா’ என்று அவள் கையைப்பிடித்து உள்ளே கூட்டிச் சென்றார் கிழியக்கா. ‘இதில
இரு’ என்று நிலத்தில் இருத்திவிட்டார்.
அந்த வீடு பல அறைகள் உள்ள பெரியவீடு. முன்னால் விதானையுடயது. முன்னால்
இருந்த விறாந்தையை ஒட்டி இருபக்கங்களிலும் ஜன்னலைக்கொண்ட அடைப்புத்தூன்கள்
இருந்தன். அந்த ஜன்னல்களின் கண்ணாடிக் கதவுகள் உடைந்திருந்தது.
அறைகளுக்கும் கதவுகள் இருக்கவில்லை. பின்வளவுக்கு போகும் கதவும்
உடைந்திருந்தது. கதவிருந்த ஒரு அறை மட்டும் எப்போதும் பூட்டப்பட்டிருந்தது.
ஆயுத அறையாக இருந்திருக்கவேண்டும். பெரிய கோலில் படுப்பதும் சாப்பிடுவதும்
என்று அனைத்து வேலைகளையும் அங்கேயே செய்தார்கள். ஆட்கள் அதிகமானால் தான்
அவர்கள் அறைகளுக்குள் படுத்தார்கள். யாருக்கும் கட்டில் இல்லை. ஒரு
துண்டைத் துணியை விரித்து படுக்க வேண்டியது தான். ஒரு சில கதிரைகள்
இருந்தாலும் வெறும் நிலத்தில் இருந்துதான் கதைத்தார்கள்.
கதவில்லாத அந்த அறையின் நிலையில் கையை முண்டு குடுத்தபடி பொடியள் வேடிக்கை
பார்த்தார்கள். கிளியக்காவும் அவளும் உள்ளே குந்தியிருந்தார்கள்.
‘என்னம்மா உனக்கு நேற்று வீட்ட நல்ல அடியோ’ என்று விசாரித்தார் கிளியக்கா.
‘இல்ல’ என்றபடி அவள் மூக்கை துடைத்தாள்.
‘அப்ப என்னத்துக்கு ஓடி வந்தனி?’
அவள் பதிலளிக்கவில்லை.
‘படிக்கிற வயசில படிக்கோனும் பிள்ள’ என்றார் கிளியக்கா.
‘நான் இயக்கத்தில சேரவேணும்’ என்று சிணுங்கினாள் அவள்.
‘அது நல்ல விசயம். ஆனால் உன்ர வயசில சேர ஏலாது. எங்கட நாட்டுக்கு நல்லா
படிச்ச ஆக்கள் தேவை. நீ போய் நல்லாப் படிக்கோணும்’ என்று சொல்லிப்
பார்த்தார் கிளியக்கா.
‘உனக்கேதும் பிரச்சினையெண்டாச் சொல்லு. நாங்க வீட்ட வந்து கதைக்கிறம். உன்ன
அடிக்கவேணாம் எண்டு உங்கட அப்பாட்டச் சொல்லுறம் என்ன’ என்றார் கிளியக்கா.
அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. ‘நான் போகமாட்டன்’ என்று விக்கி விக்கி
அழுதாள். ‘சொன்னாக் கேக்கோணுமென்ன’ என்று கிளியக்கா வலு சீரியசாக விதிகள்
வழிமுறைகள் எல்லாம் விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார். பொடியள் சாறத்த
மாறி மாறிக் கட்டிக்கொண்டு கிளுக் கிளுக் என்று சிரித்தார்கள். சில
சமயங்களில் கிளியக்காவும் புன்னகையை உதட்டை மடக்கி கடித்து
மறைத்துக்கொண்டார்.
‘என்ன பிள்ள இது. சொல்வழி கே;ககேல்ல எண்டா நீ என்னன்டு இயக்கத்தில சேருறது?
ஓ எல் எடுத்துப்போட்டு வா பேந்து சேரலாம் என்ன’ என்று சொன்ன கிளியக்கா அவளை
அப்படியே குண்டுக்கட்டாய் தூக்கினாள். கால்களை உதைச்சும் கைகைளை
கிளியக்காவின் மார்பில் வைத்து தள்ளியும் அவள் திமிறித் திணறியபோது
திடகாத்திரமான கிளியக்காவுக்கே கஸ்டமாக இருந்தது. தட்டித்தடுமாறி
-நிலையடியில் தலையில் ஒரு அடிவாங்கி- ‘தள்ளுங்கடா’ என்று பொடியளுக்கு ஒரு
கத்துக்கத்தி தனது பிடியை விடாது அவர் விறாந்தையை நோக்கி நகர்ந்தார்.
அவளது கதறலும் திமிறலும் இன்னும் அதிகரித்தது. கிளியக்காவுக்குக் குனிந்து
நிலம் பார்க்க முடியவில்லை. காலால் தட்டித்தடவி மெதுவாக படிகளில்
இறங்கினார். தடம் புரளாமல் இருக்க அவர் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
ஒருபடியாக படியால் இறங்கினார். பிடியை விடாது மூச்சு வாங்கியபடி கேற்றை
நோக்கி நடந்தார். அவளின் பாக்கை எடுத்துக்கொண்டு கண்ணன் சிரிப்பு
முகத்துடன் பின்னால் நடந்து வந்தான்.
கேற்றடிக்கு வந்ததும் அவள் பட்டென்று சரிந்து கேற்றுக் கம்பிகளை இறுக்கிப்
பிடித்துக் கொண்டாள். கிளியக்கா மூச்சுத் திணறத் திணற இழுத்துப்
பார்த்தார். முடியவில்லை. பொத்தென்று அவளை கீழே விட்டுவிட்டு இரண்டு
கைகளையும் நாரியில் வைத்தபடி முறைத்த முகத்துடன் மூச்சு வாங்கினார்.
மூச்சுவர அவருக்கு சிறிது நேரம் பிடித்தது. பாக்கை நிலத்தில் போட்டுவிட்டு
கேட்டில் கையை முண்டுக் கொடுத்தபடி கண்ணன் வேடிக்கை பார்த்தான்.
சிறிது நேரம் நெற்றியில் தன் கையை வைத்தபடி நின்ற கிளியக்கா அப்படியே
வேர்வையைத் துடைத்துவிட்டபடி அவளை நோக்கி மிகவும் கோபமான குரலில்
கத்தினார்.
‘இஞ்சபார் உன்ர வயசில நீர் இயக்கத்தில் கடைசி வரையும் சேரேலாது.
எங்களுக்கிருக்கிற பிரச்சினையில உம்மையும் நாங்கள் பார்க்கேலாது மரியாதையா
இப்ப இந்த பாக்கை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போகப்போறீரோ அல்லது நல்ல
சாத்துச் சாத்தி வீட்ட கொண்டு போய் விடுறதோ’ என்று கத்தினார்.
அவளது அழுகை தற்போது விக்கல்களாக மாறியிருந்தது. மூச்சை இழுத்து இழுத்து
விக்கிக் கொண்டிருந்தாள் அவள். கம்பியைப் பிடித்திருந்த கையை மட்டும்
விடவில்லை. ‘என்னடா செய்யிறது இவள?’ என்று கண்ணணுக்கு பக்கத்தில் போய்
தானும் கேற்றில் முண்டு குடுத்தபடி கேட்டார் கிளியக்கா.
‘நாங்க ஒண்டும் செய்யேலாது. இழுத்துக்கொண்டு போனா எங்களில தான் பழி வரும்
வீட்டபோய்ச் சொல்லுவம். அவைவேணுமென்டா வந்து அடியப் போட்டு இழுத்துக்கொண்டு
போகட்டும்.’ என்றான் கண்ணண்.
சற்றுநேரம் பொறுமையாக மூச்சு வாங்கிய கிளியக்கா ‘வேறுவழியில்லை’ என்றார்.
‘சரி இனி இதில நிண்டு பிரியோசனமில்ல. உள்ள போய் இரும் வாறன்.’ என்று
அவளைப்பார்த்து முறைத்தபடி கிளியக்கா ரோட்டில் இறங்கி அவள் வீடு நோக்கி
நடக்கத ;தொடங்கினார். அவள் ஆற்ற பிள்ளை என்பது அவர்களுக்கு
தெரிந்திருந்தது.
பதறியடித்துக் கொண்டு முதலில் ஓடி வந்தார் தகப்பன். தகப்பனின் சைக்கிளை
தூரக்கண்ட அவள் ஓடிப்போய் அறைக்குள் புகுந்துகொண்டாள். அவருக்குப் பின்னால்
கண்ணீரும் கபலையுமாக ஓடிவந்தார் தாய். அடுப்பில இருந்த கறியை அப்பிடியே
நிலத்தில் தூக்கி எறிந்து போட்டு பதறியடித்து ஓடிவந்திருந்தார் அவர்.
பிள்ளை பள்ளிக்கூடம் என்று நினைத்தபடி தோட்டத்துக்கு போக அலுவல்
பாத்துக்கொண்டு நின்ற தகப்பன் கிளியக்காவின் கதையை கேட்டதும் பதறிப்
போய்விட்டார்.
ஓடிவந்த இருவரும் வீட்டுக்குள் போக தயக்கத்தில் வெளியில் நின்றபடி அவளது
பெயரைச் சத்தமாக கூப்பிட்டார்கள். ‘பிள்ள பிள்ள வாம்மா என்ர ராசாத்தி’
என்று கதறிக் கதறிக் கூப்பிட்டார் தாய். பொடியள் முகத்தில் சிரிப்பு போய்
விட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் மூலைக்கொருவராக நின்று
பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிளியக்கா வந்து சேர்ந்தபின் ‘உள்ள
வாங்கம்மா’ என்று தாயை உள்ளே கூப்பிட்டார். ‘அடிகிடி போடாம கதைச்சுப்பேசி
கூட்டிக் கொண்டு போங்க’ என்றான் கண்ணண்.
‘என்ர ராசாத்தி’ என்று தாய் உள்ளே ஓடி வருவதற்குள் தனது கையில் இருந்த ஒரு
காப்பையும் இரண்டு தோடுகளையும் கழற்றி விட்டிருந்தாள் அவள். ‘இத
எடுத்துக்கொண்டு போங்க’என்று நிலத்தில் வைத்துவிட்டு மூலைக்குள்
முடங்கினாள் அவள். மனிசி ஏங்கிப்போய்விட்டது. முந்தானையால் முகத்தைத்
துடைத்துக்கொண்டு ‘என்ர குஞ்சல்லோ. வா பிள்ள வீட்டபோவம்’ என்று அழுதார்.
அவள் எந்த அழுகைக்கும் அசையவில்லை. ‘என்ன இது படிச்சு முடிச்ச பிறகு நீ
செய்யிறதச் செய். இப்ப வா.’ என்றும் ‘ அக்கா சொல்லிறத கேக்கோணும் என்ன’
என்று கிளியக்காவை பார்த்தும் அவர் கதைத்தார். கிளியக்கா ஆமோதிப்புடன்
தலையாட்டினார். இந்த இழுபாடு கொஞ்சநேரம் நடந்தது. தாயாருக்கு என்ன செய்வது
என்று தெரியாமல் மனம் பதறியது.
‘என்ர பிள்ளைய விட்டுப்போட்டு போகமாட்டன்’ என்றவர் கலை வந்ததுபோல் பாய்ந்து
அவள் கைகளைப் பற்றி தரதரவென்று இழுக்கத் தொடங்கினார்.
‘அக்கா அக்கா இப்பிடி இழுக்க வேணாம். கையுக்க நொந்து போயிரும்’ என்று
கிளியக்கா தடுத்தபடியால் அவளைக் கைவிட்டாள் தாயார். ‘என்ர குஞ்சு நீ
வரும்வரையும் நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டன்’ என்று குந்தி
விட்டார் தாயார். பின்பு தலையில் அடித்து அடித்து ஒப்பாரி வைக்கத்
தொடங்கினார். எல்லோரும் விறைத்துப் பார்த்தபடி நின்றார்கள். ஒரு
செத்தவீட்டு அமைதி நிலவியது. கொஞ்சம் செல்ல ஒருவன் தேத்தண்ணி
போட்டுக்கொண்டு வந்தான். தாயும் மகளும் குடிக்க மறுத்து விட்டனர்.
மதியம் தாண்ட அழுத களைப்பில் அப்படியே படுத்து மூலைக்குள் நித்திரை கொண்டு
விட்டாள் அவள். உள்ளே வந்த தகப்பன் அவளது நித்திரையைக் குழப்பாமல் மெதுவாக
அவளைத் தூக்கி தோளிற் போட்டு வீடு கொண்டுபோய்ச் சேர்த்தார்.
இரவு திடுக்கிட்டு முழிச்சவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. தாயார்
இறுக்கி கட்டிப் பிடிச்சுக் கொண்டார்.
பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்") - பகுதி 1
பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்") - பகுதி
2
|
|