|
|
புத்தக வெளியீட்டுக் கலை!
புத்தக வெளியீடு விழாவாக நடப்பது நமது இலக்கிய காரியங்களில் ஒன்றாகவே
கருதவேண்டியுள்ளது. அதில் கலந்து கொள்வது இலக்கிய நுகர்வாலர்களின் கடமை
என்ற புரிதலும் நம்மிடையே அழுத்தமாக உள்ளது. புத்தக அறிமுக நிகழ்வாக
மட்டும் அல்லாமல், வேறு பல தேவைகளையும் இந்த நிகழ்வில் பூர்த்திசெய்துகொள்ள
முடியும்.
தமிழ் நாட்டில் நடந்த சில 'பின்னவீனத்துவ' புத்தக வெளியீடுகள் பெருத்த
சர்ச்சையை உண்டு பண்ணியிருக்கின்றன. மது விடுதிகளிலும், ஓடும் இரயிலில்
புத்தக ஏடுகளைக் கிழித்து வீசியெறிந்து (?) புத்தக அறிமுகம்
நடைப்பெற்றதையும் நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். மேலை நாட்டின் புகழ் பெற்ற
எழுத்தாளர்களின் புத்தக வெளியீடு உலகலாவிய அளவில், விமரிசையான, முன்
பதிவுகளுடனும், பெரும் விளம்பரங்களுடனும் விளங்கும். ஹெர்ரி போர்ட்டர்
கதைத் தொடர்களும், டேன் ப்ராவ்னின் நாவல்களும் ஏற்படுத்திய உலகலாய
எதிர்பார்ப்பு அதிகமும் புத்திசாலித்தனமான விற்பனை யுக்தியால் சாத்தியமானது
என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டு புத்தக வெளியீடுகள் எப்படி இருக்கின்றன?
நான் கலந்து கொண்ட (அழைப்பிதழ் இல்லாமலும் போகலாம்; ரொம்ப சந்தோஷப் படுவார்
எழுத்தாளர்) நிகழ்ச்சிகளில் அனுபவித்து தெரிந்த விஷயங்கள், கிசு கிசுக்கள்
கீழ்வருமாறு: (குறிப்புகள் தர வரிசையில் கொடுக்கப்படவில்லை!)
அ) முதல் வேலையா, சூடா ஒரு கப் காப்பி, சில பல கேசரிகளும், வடைகளும்
(பத்துமோ, பத்தாதோ... அது எழுத்தாளரின் தலைவலி. பெரும்பாலும் இதுவொரு
தேவையற்ற கவலை... நம் மக்களுக்கு வடையின்பால் கொண்ட ஈர்ப்பைவிட
புத்தகத்தின் மேல் கொண்டுவிட்ட அலர்ஜி அதிகம்!
ஆ) ஆச்சா, சரி, அடுத்ததாக கூட்டு சேர கூட்டாளி தேடவேண்டும். தொடர்ந்து
வரும் 120 நிமிடங்கள் (முக்கிய பிரமுகர் மேடையில் அமரும் நொடியில் இருந்து
இந்த 'count-down' ஆரம்பமாகும்) எப்படிப் போகும் என்பது சேரும்
கூட்டாளியைப் பொருத்தே அமையும். அதாவது, (i) நிகழ்ச்சியின் நடப்புகளைப்
பகுப்பாய்வு செய்யவோ, அல்லது (ii) தென் துருவத்தில் என்னென்ன மாதிரியான
ஆய்வுகள் நடக்கின்றன(?) என்பது பற்றிப் பேசவோ ஒத்த கருத்துள்ள 'கைகள்'
அவசியம்.
இ) தேர்வு (i) ஆக இருப்பின், அதன் நீட்சி எப்படி இருக்கும்?
* பேசுகிற எல்லோரையும் நக்கலிடித்து, விதண்டா வியாக்கியானம் செய்து
களிப்படைதல்.
* 'எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்து' என்பதை இஷ்டத்துக்கு நீட்டி,
வளைத்து பேச்சாளர்களை கருத்துகளை கட்டுடைத்து கழுவேற்றுதல்.
ஈ) தேர்வு (ii) ஆக இருப்பின், அதன் நீட்சி எப்படி இருக்கும்?
* இது வேதாந்தம் மாதிரி. இஷ்டத்துக்குப் பேசலாம். எதைப் பேசினாலும் `main
topic` க்குள் வந்துவிடும். ஆனால், நம்புகிற மாதிரி பேசணும். பழகப் பழக
நன்றாக வந்துவிடும். முக்கியமாகச் செய்யக்கூடாத ஒரு காரியம் இதில்
இருக்கிறது. ஆம், தவறியும் அங்கு நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சி பற்றி
பேசிவிடக்கூடாது.
* வந்திருப்பது ஒரு 'புத்தக வெளியீடு', எழுத்தாளர் ரொம்ப சிரமப்பட்டு இதை
நடத்துகிறார் என்ற சிந்தனையெல்லாம் அறவே கூடாது.
* முடிந்தால்- பக்கத்தில், எதிரில், பின்னால் வரிசைகளில் உள்ளவர்களுக்குக்
கேட்கும்படியாகப் பேசினாலும் சரிதான்!
* மற்ற வருகையாளர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்றெல்லாம்
தேவையில்லாமல் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது.
உ) மேடையில் என்ன நடக்கும்? என்னென்னமோ... ஒரு சில உதாரணங்கள்...
* ஆயிரம் வெள்ளி கொடுத்து முதல் நூல் வாங்க வந்திருக்கும் பிரமுகர்
கசாப்புக் கடையில் விட்ட கிடா போல தனக்கு நேர்ந்துவிட்ட நிலையை எண்ணி எண்ணி
அழுவது முகத்தில் தெரியும். (காசைக் குடுத்திட்டு ஜோலியப் பாத்திருக்கலாம்ல
தலைவா... தேவையா உனக்கு இது?)
* நூல் அறிமுகம் செய்ய ஒருத்தர் 'ஏற்பாடு' செய்யப்பட்டிருப்பார். கதைகளை
நாலு பக்கம் புரட்டிப் பார்த்த மிதப்பில், முளைத்து மூணு இலை விடாத
எழுத்தாளரிடம் புதுமைப்பித்தனும், அசோகமித்திரனும் சம வீதத்தில் தெரிவதாகக்
கூறி என்றென்றைக்கும் வளரவிடாதபடி அந்த எழுத்தாளர் மண்டையில் 'நெனப்பை'
ஏற்றிவிடுவார். அல்லது, அப்படித்தான் பேசணும்னு 'கேட்டுக்
கொள்ளப்பட்டிருப்பார்'.
* சமயங்களில் ஆசியுரை அல்லது வாழ்த்துரை அல்லது இரண்டும் நிகழ்வில்
இடம்பெறும். இதைப் பொருத்துக் கொள்ளலாம். நமக்குதான் வேற அஜெண்டா இருக்கே!
சரி, நல்ல வாழ்த்தைக் கேட்டாவது அடுத்து நல்ல படைப்பாக தர முயலலாம் அல்லவா!
* தொடர்ந்து வருவது 'grand finale' - விற்பனை. கையை பிசைந்து கொண்டு
எழுத்தாளர் ரொம்பவும் தவிப்புடன் காத்திருந்த தருணம், கற்பூர வாசனையோ,
கழுதையோ, எதையும் பொருத்துக் கொள்ளலாம். பெரிய தொகையில் ஆரம்பித்து,
படிப்படியாகக் குறைந்து, நூலின் அடக்க விலையைக் கொடுத்து வாங்குவது ஏதோ
சடங்கு போல நடக்கும். புத்தகத்தை வாங்க ஒரு பாரத்தை வேறு பூர்த்தி செய்து
தர வேண்டும். அதைக் கேட்டு வரும் நபரிடம் அதைக் கொடுக்காவிட்டால், ஒரு
பூச்சியைப் பார்ப்பது போல நம்மைப் பார்த்துவிட்டுப் போவார். அவரது வாய்
எதையோ முணுமுணுக்கும். ஓசி டீ, வடை, கேசரி..என்று இருக்கலாம்!
* அப்புறம், நிகழ்ச்சி முடிந்தபின் அடுத்த ரவுண்டு ஆரம்பமாகும்.
'நல்ல காசு பாத்துட்டான்ல் மச்சான்.'
'எப்டியோ ஆள சேத்துடறான்ல...மச்சம்டா'
'சொத்தையெல்லாம் கதைனு சொல்லி புக்கு போட்டு காசு பாக்குது. என் எழுத்து
கிட்ட இவனெல்லாம் நிக்கமுடியுமா, கா.கீ. (பெரிய எழுத்தாளர்லாம் இப்படி
குறியீட்டில்தான் பேசிக்கொள்வார்களாம்!!)
'அப்பாடா... இப்பவாச்சம் முடிச்சாங்களே... என்னலா இந்த ரம்பம் போடறாங்க...
எப்பிடிடா இந்த மாதிரி கூட்டத்துக்கெல்லாம் வரயோ போ. இன்னொரு தரம்
கூப்பிட்ட உனக்கு சங்குதான்!
அமைதியாக அமர்ந்திருப்பார் எழுத்தாளர். 'ஏங்க, இருந்த காசையெல்லாம் போட்டு,
பத்தாதற்கு என்னோட ரெண்டு காப்பையும் வித்து, இப்படி தலைய தொங்கப்
போட்டுக்கிட்டு உக்காந்துருக்கீங்களே..
உங்களுக்கே இது சரியாத் தெரியுதா..?'
நண்பர்களே... இவர் அவரல்ல!!
|
|