முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 35
நவம்பர் 2011

  மனிதம் மிஞ்சும் உலகம் ...5
நித்தியா வீரராகு
 
 
       
நேர்காணல்:

“தமிழ் இங்குப் பெயரளவில் தேசிய மொழிதான்” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 2
ம. நவீன் - கே. பாலமுருகன்



கட்டுரை:

அப்சரா
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”
கே. பாலமுருகன்

சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி

ஓர் இலக்கியச் சர்ச்சை

ஷம்மிக்கா

விவேகமான காயம்
செல்மா பிரியதர்ஷன்

யாதும் இசையே யாவரும் கேளிர்
அகிலன்



பத்தி:

புலம்பெயர் முகங்கள் ...3
வி. ஜீவகுமாரன்



புத்தகப்பார்வை:

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்
கருணாகரன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

தர்மினி பக்கம்
தர்மினி

தர்மினி பக்கம்
தர்மினி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...25

அசரீரி

ந. பெரியசாமி

ம. நவீன்

'அனைத்தையும் சாத்தியமாக்கும் ஆழ் மன அமைதி'

நாம் ஒருநாள் நமது மகிழுந்தைச் செலுத்தி கொண்டிருக்கும் பொழுது முன் கண்ணாடியில் வந்து விழுகிறது ஒரு இலை சருகு. அது நம் மனதில் ஆயிரம் எண்ணங்களை உருவாக்குகிறது. ஓர் இலையுதிர் காலத்தில் படித்தக் கவிதையை நினைத்துக் கொள்கிறோம்; அந்நேரம் அருகில் இருந்த காதலியின் விரல் நகங்களின் வண்ணத்தை நினைத்துக் கொள்கிறோம். திடீரென ஒரு ‘ஹார்ன்’ சத்தம் கேட்டு திடுக்கிடுகையில் சென்ற முறை கைப்பேசியை உபயோகித்தப்படி வாகனம் ஓட்டியதில் போக்குவரத்துக் காவல் அதிகாரியிடம் பிடிப்பட்டதை நினைக்கிறோம். பின் அதன் தொடர்பான அத்தனைச் சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நினைக்கத் தொடங்குகிறோம். இப்படியே இடைவிடாமல் நாம் நமது ஐம்புலன்கள் வழியாக அனுபவிக்கும் அத்தனையையும் எண்ணங்களாக பதிவு செய்து கொண்டே இருக்கிறோம். ஒரு மனிதன் ஒரு நாளில் சுமார் 60000 எண்ணங்களைச் சிந்திப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அறிவியல், சிந்தித்தலை மூளையின் செயல்பாடு என்றபோதும் பலவித எதிர்மறை எண்ணங்கள் நம்மை அழுத்தும்போது நாம் என்னவோ ‘மனம் சரி இல்லை’ என்றுதான் குறிப்பிடுகிறோம். மூளை என்ற உறுப்பு நமது உடலின் அத்தனை செயல்பாடுகளையும் நிகழ்த்தும் மையச் செயலகம் என்று எளிதாக விளக்கி விடக்கூடும். ஆனால் மனம் என்பதன் விளக்கமோ இன்றுவரை எல்லைகளற்று விரிந்துகொண்டே இருக்கின்றது.

இப்படி மனித மனதைப் பற்றிய முடிவில்லா அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்க, இந்து மதம், பௌதம், கிறிஸ்துவம், யூத மார்க்கம், இஸ்லாம், ஹெர்மடிக் சாஸ்திரங்கள் போன்ற அனைத்து மதங்களும் கோட்பாடுகளும் மனதை அடக்குதல், அமைதிப் படுத்துதல், ஆளுதல் போன்ற விடயங்களைக் காலம் காலமாய் உலகுக்கு அறிவுறுத்தி கொண்டே வருகின்றன. இவைகளைத் தவிர்த்து யோக மார்க்கங்களும் சிலம்பம், குங் ஃபூ, சீலாட் போன்ற தற்காப்புக் கலைகளும் கூட உள் அமைதி, மனதை ஒருமுகப்படுத்துதலுக்கான பலவித தியானமுறைகளையும், சுவாசப் பயிற்சிகளையும் போதித்து வருகின்றன.

ஓர் ½ மணிநேரம் நம்மால் உதடுகளைப் பூட்டிக் கொண்டு பேசாமல் இருந்துவிட முடியும் என்றாலும் நமக்குள்ளே நிகழ்ந்து கொண்டே இருக்கும் பேரிரைச்சலையும் சலசலப்பையும் எளிதில் நிறுத்திவிட முடிவதில்லை. இன்றைய இயந்திரத் தன்மையான வாழ்க்கைமுறையில் அலுவலக மற்றும் வீட்டுப் பணிகள், குழந்தைகள் படிப்பு, சமூகப் பணிகள் என நீளும் பொறுப்புகளினாலும் பல அன்றாட பிரச்சனைகளாலும் நம் மனம் ஒரு கொந்தளிக்கும் கடலாகவே மாறிவிட்டிருக்கின்றது. ஆனால் இந்தக் கொந்தளிப்பின் இடையிடையே இந்தக் கடல் பேரமதியை அடையும் வல்லமையும் பெற்றிருப்பதை நாம் அனைவரும் ஏதாவதொரு கணத்தில் உணர்ந்திருப்போம். எந்தவித மத யோக பயிற்சிகள் இல்லாமலேயே. நமக்குள் என்ன நிகழ்கிறது என்ற விழிப்பில் இல்லாதபோதும் இது நிகழ்ந்திருக்கும்.

சலனங்களற்ற ஒரு குட்டி புத்தனைப் போல் ஒரு குழந்தை உறங்குவதைப் பார்க்கும் போதும், செய்வதற்கு எல்லா வேலைகளும் இருக்கும்போதும் கூட ஒரு காலை பொழுதில் எனது கடிகாரத்தை நிறுத்திவிடும் ஆற்றலுடைய ஓர் அடர் மழையும் என்றுமே என் மனதுக்குள் ஒரு பெரும் சூன்யத்தையும் அமைதியையும் உருவாக்கும். இந்தத் தருணங்களில் ஒரு படைப்பிற்காக என் மனம் தயாராகி இருக்கும். இதுவரை செய்து முடிக்கமுடியாத அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கும் அத்தனை வல்லமையையும் பெற்றிடும் தருணமாக அது அமையும்.

அண்மையில் உலகெங்கும் திரையீடு கண்ட குங் ஃபூ பண்டா என்ற திரைப்படத்தில் இதுபோன்று உள் அமைதி (Inner Peace) தொடர்பான வசனம் ஒன்று இடம்பெறுகிறது.

“Remember, Dragon Warrior: Anything is possible when you have inner peace.” — Shifu to Po, (Kung Fu Panda 2) என்னும் இந்த வசனம் மன ஒருமையையும் உள் அமைதியையும் பெற்றவர்களுக்கு எதுவும் சாத்தியமாகும் என்று பொருள் கொள்கிறது. இத்தகைய உள் அமைதியை உணர்ந்தவர்கள்தான் நம் உலகுக்கு அரிய கண்டுபிடிப்புகளையும் படைப்புகளையும் கொடுத்துள்ளனர். William Shakespear- இன் எழுத்துக்கள் Ludwig van Beethoven-இன் மந்திர இசை Leonardo da Vinci-இன் உயிர் ஓவியங்கள், Socrates-இன் தத்துவங்கள் Pythagoras-இன் கோட்பாடுகள் போன்ற அனைத்துக்கும் பின்னால் இந்த மகத்தான மனிதர்களின் இரைச்சல்களற்றுத் தெளிந்த , இயற்கையோடு முரண்படாத, உள் அமைதியடைந்த மன அமைப்புகள்தான் செயல்பட்டிருக்கின்றன. இவர்களின் மனம் ஒருமை தன்மையை அடைய ஒரு குழந்தையோ, ஒரு மழைநாளோ, இவைப் போன்ற பிற புறக்கூறுகளோ காரணமாக அல்லாமல் இவர்களின் உயர்ந்த இலட்சியங்களே கூட இவர்களை வழிநடத்தியிருக்கும்.

இவ்வாண்டு மே மாதத்தில் (May 26th 2011) வெளிவந்த குங் ஃபூ பண்டா 2 (KungFu Panda 2) என்ற முழுநீள சிறப்பு பண்பியலுடைய இயக்கவூட்டத் திரைப்படம் பல இன்னல்களைக் கடந்து இது போன்று உள் அமைதி பெறும் ஒரு பண்டாவைப் பற்றிய கதையே ஆகும். இந்தப் படம் 2008ஆம் ஆண்டு வெளிவந்த குங் ஃபூ பண்டா-வின் தொடர்ச்சியாகும். Dreamworks ஒளிப்பட நிலையத்தில் தயாரிக்கப் பட்டு முப்பரிமாணப் படிம தொழிற்நுட்பத்தின் (stereoscopic 3-D technology) மூலம் வடிவமைக்கப்பட்ட மாந்தவுருவக (anthropomorphism) விலங்குகள் நடித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர் ஜெனிப்ஃபர் (Jennifer Yuh Nelson) என்பவர் ஆவார். கொரிய அமெரிக்கரான இவர் இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் ஒரு முழுநீள இயக்கவூட்டத் திரைப்படத்தை இயக்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை அடைகிறார்.

இவரின் முதல் படமே இந்த ஆண்டின் வசூலில் சாதனை நிகழ்த்திய படங்களின் வரிசையில் 9ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதன் திரைக்கதை முழுக்க முழுக்க சீன கலாச்சாரங்களுடன் ஒரு பழமையான சீனாவில் நிகழ்வதாக இயக்கப் பட்டிருக்கின்றது. இத்திரைப்படத்தின் தொடக்கத்தில் ஒரு புனைவு நகரான சீனாவின் கோங்மென் நகரத்தை (Gongmen City ) மயில்கள் ஆட்சி புரிந்து வருகின்றன. அப்போதுதான் சீனாவில் பட்டாசு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாடே செல்வ செழிப்போடு இருக்கின்றது. அந்த நேரம் லார்ட் சென் (Lord Shen) என்னும் இளவரசன் இந்தப் பட்டாசுகளின் மூலம் மிக அபாயகரமான ஆயுதங்களைக் கண்டுபிடிக்கிறான். அவனின் செயல் அவனின் பெற்றோர்களுக்கு பயத்தைக் கொடுக்கவே, எதிர்காலத்தை ஊகித்துக் கூறும் ஞானம் பெற்ற சூத்சேயர் (SoothSayer) என்னும் அரண்மனை சோதிடரின் உதவியை நாடுகிறார்கள். ஒரு பெண் செம்மறியாடான சூத்சேயர், இளவரசன் சென், சீன சமய தத்துவக் கோட்பாடான தாவோயிசத்தைக் (Taoism) குறிக்கும் கருப்பு-வெள்ளை நிறத்தைக் கொண்ட ஒரு மாவீரனால் (Warrior of black-and-white) கொல்லப்படுவான் என்று கூறுகிறாள். இதனைத் தொடர்ந்து சென் கோங்மென் நகரில் கருப்பு- வெள்ளை நிறத்தில் வாழும் அத்தனை பண்டா விலங்குகளையும் மூர்க்க நரிகளின் உதவியுடன் கொன்று குவிக்கிறான். தன் மகனின் பயங்கரவாதத்தைப் பார்த்து மிரண்டிடும் மன்னனும் அவன் மனைவியும் சென் இளவரசனை நகரை விட்டே தள்ளி இருக்கும்படி உத்தரவிடுகின்றனர்.

திரைப்படத்தின் அடுத்தக் காட்சி 30 ஆண்டுகள் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. குங் ஃபூ பண்டா 1 திரைப்படத்தில் தற்காப்புக் கலைகளை மிகுந்த சிரமங்களுக்கிடையே கற்றுக் கொள்ளும் மாந்தவுருவக பண்டா விலங்கான கதைநாயகன் போ இப்படத்தில் தான் வாழும் ‘Valley of Peace’ என்னும் சீன கிராமத்தில் ஒரு பெரிய குங் ஃபூ குருவாகத் திகழ்கிறான்; கருப்பு வெள்ளை மாவீரன் (warrior of black and white) என்ற அடைமொழியாலும் குறிப்பிடப்படுகிறான். இவனின் குரு மாஸ்டர் சீஃபூ (Master Shifu) என்பவர் ஒருவகை சிவப்பு பண்டா இனத்தைச் சேர்ந்தவர். தற்காப்புக் கலையில் கைத்தேர்ந்த குருமார்களுள் இவரும் ஒருவர். ஒருமுறை மாஸ்டர் சீஃபூ ஒரு மலை உச்சியிலிருந்து சொட்டும் ஓர் உருண்டையான நீர்த் துளியை ஒரு வகை தாய் ச்சீ (Tai chi) அசைவுகளால் அதன் உருவம் கலையாமல் தன் கைகளிலும் தோள்களிலும் படரவிட்டு அதனை அப்படியே ஒரு சிறு இலையில் இடுகிறார். இதனைப் பார்த்துப் பிரமித்தப் போவிடம், உள் அமைதியை (inner peace) உணர்ந்த குருமார்களுக்கு மட்டுமே இத்தகைய சாகசங்கள் சாத்தியம் என்கிறார் சி ஃபூ. சில குருமார்கள் 50 ஆண்டுகள் நீரும் உணவும் இல்லாமல் கடும் தவமிருந்தும் இன்னும் சிலரோ வாழ்க்கையில் பல சோதனைகளையும் வலிகளையும் கடந்து வந்த பிறகும் இந்த நிலையை அடைகிறார்கள் எனத் தொடர்கிறார்; ஒவ்வொரு குங் ஃபூ குருமாரும் அடைய வேண்டிய இந்நிலையை அடைவதே போவின் அடுத்தக் கட்டப் பயிற்சியாகும் என்றும் விளக்குகிறார். இயல்பில் விளையாட்டுத்தனமாகவே இருக்கும் போ ஆரம்பத்தில் தன் குருவின் வார்த்தைகளை அவ்வளவாக கருத்தில் கொள்ளாமல் இருக்கிறான்.

ஒரு முறை ‘Valley of Peace’ கிராமத்தில், இரும்புகளைத் திருடவரும் மூர்க்க நரியிடம் சண்டையிடுகையில் அந்த நரியின் நெற்றியில் இருக்கும் ஒரு சிவப்பு நிற சின்னம் போவின் கவனத்தைச் சிதைக்கிறது. எதிர் தாக்குதல் செய்ய இயலாமல் போ வீழ்கிறான். குழப்பமடைந்த நிலையில் தனது தந்தையான பிங்-இடம் (Mr.Ping) தனது பிறப்புப் பற்றிய ரகசியத்தைக் கேட்டறிய முற்படுகிறான். ஆனால் பிங்கிற்கோ 30 ஆண்டுகளுக்கு முன்னால் குழந்தை போவை ஒரு முள்ளங்கி கூடையில் கண்டெடுத்ததைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

இதற்கிடையில் போ ஓர் அவசரப் பணிக்காக மாஸ்டர் சிஃபூவால் அழைக்கப் படுகிறான். அங்கே மேலும் ஒரு பெரிய குங் ஃபூ குருவான காண்டாமிருக இனத்தைச் சேர்ந்த மாஸ்டர் ரைனோ (Master Thundering Rhino) கொல்லப்பட்டச் செய்தியை அறிந்து திடுக்கிடுகிறான் போ. பல ஆண்டுகளுக்கு முன்னால் நகரை விட்டு தள்ளிவைக்கப்பட்ட லார்ட் சென் இளவரசன் மூர்க்க நரிகள் மற்றும் கொரிலாக்களின் உதவியுடன் அபாயகரமான பீரங்கி போன்ற ஆயுதங்களைக் கண்டுபிடித்து நாடு திரும்பி இருப்பதாகவும், கோங்மென் நகரை மீண்டும் வலுகட்டாயமாகக் கைப் பற்றி விட்டதாகவும் சி ஃபூ போவிடன் வருத்தத்துடன் தெரிவிக்கிறார். இதுபோன்ற ஆயுதங்கள் தற்காப்புக் கலைகளைத் தோற்கடித்து உலகை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என பயப்படும் சீ ஃபூ, குங் ஃபூவைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பை மாவீரன் போவிடம் ஒப்படைக்கிறார். போவும் தனது நண்பர்களான பெண்புலி மாஸ்டர் டைகிரஸ் (Master Tigress) ஒரு குரங்கான மாஸ்டர் மங்கி (Master Monkey) ஒரு வெட்டுக்கிளியான மாஸ்டர் மெண்டிஸ் (Master Mantis) பாம்பு குரு, மாஸ்டர் வைப்பர் (Master Viper) மற்றும் பறக்கும் நாரையான மாஸ்டர் கிரேன் (Master Crane) எனும் ஐவர் அடங்கிய ஃபூரியஸ் பைஃப் (Furious Five) குழுவுடன் குங் ஃபூவைக் காப்பாற்றக் களம் இறங்குகிறான்.

போவும் ஃபூரியஸ் பைஃப் குழுவினரும் கோங்மென் நகரத்தை அடைய மலைகளையும் நீர்நிலைகளையும் கடந்து நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றனர். பயணத்தின் இடையே போவிற்கு தன் குழந்தை பருவத்து நினைவுகளும் ,மூர்க்க நரியின் நெற்றியில் பார்த்த சிவப்புச் சின்னமும் அரையும் குறையுமாக கனவுகளில் தோன்றி அலைக்கழிக்கின்றன. போ அந்த நினைவுகளை மறக்கவும் மறுக்கவும் நினைக்கிறான். அப்படியொன்று அவனுள் நிகழாததுபோல் நடந்து கொள்கிறான். தன் உண்மை நிலையைத் தன் நண்பர்களிடம் அறிந்து கொள்வதையும் தவிர்க்கிறான்.
கோங்மென் நகரத்தை வந்தடையும் போவும் அவன் நண்பர்களும் பல தந்திரங்களுக்குப் பின்னால் இளவரசனை அவன் மாளிகையில் சந்திக்கிறார்கள். சென் இளவரசன் பார்வைக்கு ஓர் அழகிய வெள்ளை மயிலாக இருப்பினும் கடும் குரூரத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறான். அவனது தோகைகள் கத்தி போன்று கூர்மையான ஆயுதங்களாக இருக்கின்றன. சூத்சேயர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறி இருப்பதால் கருப்பு வெள்ளை மாவீரன் தன்னை அழித்து விடுவான் என்ற பயம் உள்ளூர இருந்தும் மிக விளையாட்டுத் தனமான போவைப் பார்த்ததும் பயம் தெளிகிறான் சென். இருவருக்கும் மூளும் ஒரு சண்டையில் சென்னை வீழ்த்திவிடும் ஒரு தருவாயில் அவன் வெள்ளைத் தோகையின் முடிவில் மின்னும் சிவப்பு நிறச் சிறகுகளைப் பார்க்க நேர்கையில் மீண்டும் பழைய நினைவுகளால் சூழப்பட்டு போவின் கவனம் சிதைகிறது. இதன் விளைவாக சென் போவின் பிடியிலிருந்து தப்பி விடுகிறான். தப்பிச் செல்லும் சென், போவும் அவன் நண்பர்களும் இருக்கும் தனது அரச மாளிகையையே தன் ஆயுதத்தால் தாக்கி தகர்க்கிறான். இந்த கடுமையான தாக்குதலை எதிர்கொண்டு போவும் ஃபூரியஸ் பைஃப் குழுவினரும் மயிரிழையில் உயிர்ப் பிழைக்கின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பின் போ தன் இறந்தகாலத்துக்கும் சென் இளவரசனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை உணர ஆரம்பிக்கிறான். தனது இறந்தகாலத்தில் சென்னும் இடம் பெற்றிருக்கக்கூடும் என யூகிக்கிறான். தனது பிறப்பிடம் எது? தாய்தந்தையர் யார்? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? போன்ற தன் மூளையைத் துளைத்த அத்தனைக் கேள்விகளுக்குமான விடைகள் சென்னிடம்தான் கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறான். போவின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்ட மாஸ்டர் டைகிரஸ் எவ்வளவு தடுத்தும் மீண்டும் சென்னை நேருக்கு நேர் சந்திக்க முடிவெடுத்து சென்னின் ஆயுதத் தொழிற்சாலைக்குள் நுழைகிறான்.

போ குழப்பத்தில் இருப்பதை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயலும் சென், போவின் பெற்றோர்கள் அவனை நேசிக்காமல் கைவிட்டவர்கள் என பொய் உரைத்துப் போவைப் பலவீனமாக்குகிறான். பின் தன் ஆயுதத்தால் போ நிற்கும் இடத்தையே வெடித்துச் சிதறச் செய்கிறான். இந்தப் போராட்டத்தில் போ உயிர்த் தப்பினானா? போ தன் பிறப்பின் உண்மையை அறிந்து கொண்டானா? மாஸ்டர் சீஃபூ எடுத்துரைத்தது போல் தன் குழப்பங்களிலிருந்து தன்னை விடுவித்து உள் அமைதி பெற்றானா? சென்னின் ஆயுத பலத்தை வீழ்த்தி குங் ஃபூ கலையை நிலைநிறுத்தினானா? என்ற கேள்விகளுக்கான விடைகளுடன் திரைப் படம் முடிவடைகிறது.

இந்தப் படத்தில் கோங்மென் நகரம் அறிமுகப்படுத்தப்படும் முதற்காட்சிகள் பின்னணியில் ஒருவர் கதை சொல்லச் சீனத் தோல்ப்பாவை கூத்துப் போல படமாக்கப் பட்டிருப்பது மிக புதுமையான முயற்சியாகும். சீனக் கலாச்சாரத்தில் நிழல் கூத்து (Shadow Play) என்பது மிக முக்கியமானதாகும். சீன பாரம்பரியத்துடன் மேற்கொள்ளப்படும் இறுதி சடங்குகளில் நிழல் கூத்துக் கட்டுவது இன்னமும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. சீன வரலாற்றில் ஹான் அரச மரபு (Han Dynasty) வழிவந்த ‘வூ’ மன்னன் (Emperor Wu) தனது காதலுக்குரிய வைப்பாட்டி நோய்வாய்ப்பட்டு இறந்துபோகையில் மிகவும் துவண்டு போய், இறந்தவளை எப்படியும் உயிர்ப்பித்துத் தர தனது அரசவையை ஆணையிட்டார். அரசவை அதிகாரிகள் ஒரு கழுதை தோலைக் கொண்டு வைப்பாட்டியின் உருவத்தைச் செய்து அதன் மூட்டுகளை ஒரு எண்ணெய் விளக்குக்கு முன்னால் கட்டப்பட்ட திரையில் அசைவூட்டிக் காட்டி அரசனின் காதலியை உயிர்ப்பித்தனர். அப்போதுதான் சீனாவில் நிழல் கூத்து முதன்முறையாய் அரங்கேற்றப்பட்டது. சீனக் கட்டட அமைப்பில் உள்ள வீடுகள், அரண்மனை, அந்நிலத்தில் வாழும் விலங்குகள், தாவரங்கள், கதைப்பாத்திரங்களின் பெயர்கள், பாத்திரப்படைப்பு, உடைகள் போன்றவை ஒரு சீனச்சூழலை திரையில் காண்பிக்க போதுமானதாக இருப்பினும், இது போன்று சுவாரிஸ்யமான வரலாற்றுத் தன்மை மிகுந்த சீன நிழல்க்கூத்தைத் திரைக்காட்சிகளில் பயன்படுத்தியிருப்பது சீனாவின் பழமையை உணர வைத்து, இத்திரைப்படத்திற்கு வலிமை சேர்க்கிறது. இதுவரை எந்த இயக்கவூட்டத் திரைப்படத்திலும் இது போன்ற உத்தி பயன்படுத்தப்படவில்லை என்றே கூறலாம்.

மேலும் ஒரு மயிலை எதிர்மறை பாத்திரமாக வடிவமைத்திருப்பது இந்தத் திரைப்படத்தின் தனி சிறப்பு. மயில், அழகின், வளத்தின் சின்னமாகவே கால காலமாய்க் கருதப்படுவதால், அந்தப் பறவையைப் பேரழிவின் பிரதிபலிப்பாக காட்டவேண்டியதே இத்திரைப்படக்குழுவினர் ஏற்றுக் கொண்ட பெரும் சவால். அழகிய வெண்தோகைகளில் கத்திகளை ஏந்தி, வெண்ணிறச் சீனப்பட்டாடை உடுத்தி கண்களில் என்றும் குரூரத்தை வெளிப்படுத்தும், ஒரு ஜேம்ஸ் பாண்ட் (James Bond) பட வில்லனைப் போல் மிடுக்காக வளம் வருகிறான் அந்த மயில் அரசன். மேலும் படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் மிகுந்த சிரமத்திற்குப் பின் உள் அமைதியை உணரும் கதைநாயகன் போ சென்னின் ஆயுதம் கக்கிடும் தீயை பந்துகளாக உருட்டி நீரில் விடும் காட்சியும் படத்தின் விறுவிறுப்பான சண்டை காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. இவற்றை எல்லாம் சாத்தியமாக்கியது இந்தத் திரைப்படத்தின் பின்னால் செயல்பட்ட தொழிற்நுட்பக் கலைஞர்களே.

இந்தப் படத்தின் குரல் நடிகர்களும் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களாவர். பிரபல அமெரிக்க நகைச்சுவை நடிகரான Jack Blackதான் போவிற்கு குரல் வழங்கியுள்ளார். மாஸ்டர் டைகிரெஸுக்கு நடிகை Angelina Jolie, லார்ட் சென்னுக்கு Gary oldman மற்றும் மாஸ்டர் சீஃபூவிற்கு அறுபதுகளில் ஹாலிவூட்டில் கொடிகட்டி பறந்த நடிகர் Dustin Hoffman-உம் குரல் கொடுத்துள்ளனர். உலக புகழ்ப் பெற்ற ஹாங் கோங் (Hong Kong) நடிகரான Jackie Chan மாஸ்டர் மங்கிக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இவரைத் தொடர்ந்து மற்றொரு ஹொங் காங் நடிகையான Michelle Yeoh தான் சூத்சேயருக்குக் குரல் வழங்கியவர். இவர்களோடு இணைந்து இன்னும் பல குரல் நடிகர்கள் பின்னணியில் குரல் கொடுத்து அனைத்துக் கதைப்பாத்திரங்களுக்கும் உயிரூட்டியுள்ளனர். மேலும் இத்திரைப்படத்தைப் பற்றி குறிப்பிடுகையில் இதன் இசை இயக்குனர்களான Hans Zimmer மற்றும் John Powell ஆகிய இருவரையும் மறந்துவிட முடியாது. சீன இசைக்கருவிகளில் பிப்பா (Pipa) என்னும் ஒரு வித நரம்பிசைக் கருவியிலிருந்து வரும் இசையானது மகிழ்வுக்கும் துயருக்கும் இடையே ஒரு புள்ளியில் நம்மை நிறுத்திவிடும் தன்மையுடையது. இதன் ஒலியைக் கேட்கும் போதெல்லாம் பரவசம் கொள்ளும் என் மனம் அதே நேரத்தில் உருகி அழவும் செய்யும். ஒலியில் அடர்த்தியையும் மென்மையையும் ஒருங்கே பெற்ற இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த இசையைச் சண்டை காட்சிகளுக்கும் ஏற்றவாறு மிக இலாவகமாய்க் கையாண்டு இருக்கும் இந்த இசை இயக்குனர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இவற்றை எல்லாம் தவிர்த்து இந்தத் திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது இப்படத்தின் வசனங்களே. இதன் வசனங்களில் பெரும் தத்துவங்கள் புகுத்தப்பட்டு மிக எளிமையான நகைச்சுவை உணர்வோடு எழுதப் பட்டிருக்கின்றன.

“போ(Po)! எந்த நாளில் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொண்டேனோ அந்த நாள்தான் என் வாழ்விலே மிக மோசமான நாள். அதன் பிறகு நன்மை ஏதும் என்னை நெருங்கவே இல்லை. அதுவே எனக்கு மிகுந்த வலியையும், மனம் வதையையும் கொடுத்தத் தருணம். ஆனால், பிரச்சனை நீ இல்லை, என்னுள் தான் முரண்கள் இருப்பதை நான் உணரும் போது நான் உள் அமைதியை உணர்ந்தேன்” , என மாஸ்டர் சீஃபூ கூறுவதும், “உன் கதையின் ஆரம்பம் மகிழ்ச்சியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீ யார் என்பதை நிர்ணயிப்பது அதுவல்ல. இனி நீ யாராக இருக்க வேண்டுமெனத் தேர்வு செய்கிறாயோ அதுவே உன் கதையின் அடுத்தக் அத்தியாயத்தை நிர்ணயிக்கும்” என சூத்சேயர் போவிடம் கூறுவதும் ஆழமான ஜென் தத்துவங்கள்.

இத்தனை சிறப்புகளுக்குரிய இத்திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க சில குறைபாடுகளும் இருக்கின்றன. பூரியஸ் பைஃப் கதை பாத்திரங்களான மாஸ்டர் டைகிரஸ் ,மாஸ்டர் மெண்டிஸ், மாஸ்டர் வைப்பர் மற்றும் மாஸ்டர் கிரேன் ஆகிய பாத்திரங்கள் முதல் படத்தைவிட இப்படத்தில் மிக குறைவாக பயன்படுத்தப் பட்டு வீணடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சில காட்சிகள் தேவைக்கு அதிகமாய் நீடிக்கப்பட்டிருக்கின்றன. போ, கோங்மென் நகரத்தை அடைந்த பிறகு ஒரு நரியுடன் நிகழும் நீண்ட துரத்தல் காட்சி பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பினும் ஒருவித சலிப்பைத் தருவதை மறுப்பதற்கில்லை.

பொதுவாக பெரும் வெற்றியடையும் படங்களின் தொடர்ப் படங்கள் பெரும்பாலும் முதல் படங்களின் சிறப்புத் தன்மையை மீறி இருப்பதில்லை. சில படங்கள் முதல் படமளவுக்குப் பார்வையாளர்களைச் சென்றடைவதுமில்லை. ஆனால் குங் ஃபூ பண்டா 2 கதையிலும், உணர்வுப்பூர்வமான காட்சியமைப்பிலும் மற்றும் நகைச்சுவையிலும் முதல் படத்தைவிட இரட்டிப்பாக மேம்பட்டு நிற்கின்றது. இத்திரைப் படத்தில் தொழிற்நுட்பத்தின் பயன்பாடு திரையில் மயாஜாலங்களைக் காண்பிப்பதையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் அழகியல் பண்புகளைக் கூட்டுகிறது. அந்த வகையில் குங் ஃபூ பண்டா 2 இயக்கவூட்ட வரலாற்றில் மற்றுமொரு முக்கிய திரைப்படமாகும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768