கதவடைப்பு
வீட்டின் கதவை
நிரந்தரமாக அடைப்பது பற்றி
இன்று முடிவெடுத்தேன்
வீட்டின் கதவை நிரந்தரமாக அடைப்பது
வீட்டையும் சேர்த்து அடைப்பது போலதான்
வீடு இருந்தும் இல்லாதது போன்ற
மறைவை
அது உருவாக்கும்
அடைக்கப்பட்டிருக்கும் வீடுகள்
தன்னகத்தே கொண்டுள்ள வினோத
கதைகளில் ஒன்றினை
என் வீடும் கால ஓட்டத்தில்
சுயமாக உருவாக்கிக்கொள்ளும்
சூனியத்தை மட்டுமே
கக்கும் வீட்டைக் கொண்டிருக்கப்போகும்
நான்
இனி
தெருவில் நடப்பவருக்கு நிரூபிக்க எதுவும் இல்லை
வீட்டின் உள்ளே உள்ள கண்ணாடித்தொட்டியில்
மீன் உயிர்த்திருக்கிறதா என்றும்
சுழலும் போது மின்விசிறி
சப்தமிடுகிறதா என்றும்
அன்புள்ள மனிதர்களின்
நடமாட்டம் இருக்கிறதா என்றும்
இனி நிரூபிக்க ஒன்றும் இல்லை
பூட்டிய வீடுகள்
வீட்டின் கதவை பூட்டுதல்
அதை திறந்து வைத்திருப்பதைவிட
பாதுகாப்பற்றது
பூட்டியிருக்கும் வீடுகளில்
மர்மக்கதைகள் உலாவுகின்றன
தெருவில் போகும் மனிதர்கள்
நினைக்கும் உருவங்களின் நிழல்கள்
பூட்டியிருக்கும் வீட்டில் படிகின்றன
பூட்டிய வீடுகளின் வரலாற்றை
சுமப்பது சிரமம்
அது காலத்துக்குக் காலம் மாறுகின்றன
பூட்டிய வீட்டின்
பூட்டின் அளவைப் பொறுத்து
அதன் உள்ளுள்ள பிரமாண்டம்
முளைத்தெழுகிறது
பூட்டப்பட்ட வீடுகள் பாதுகாப்பற்றவை
அவை
பலநூறு வாசல்களை
சுயமாக உருவாக்கிக்கொள்கின்றன.
|