இதழ் 10
அக்டோபர் 2009
  ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்
சீ. முத்துசாமி
 
     
  பத்தி:

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்

சீ. முத்துசாமி

எனக்குத் தெரிந்த மழை
யோகி


மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்


கட்டுரை:

கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்


சிறுகதை:

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ.ரெங்கசாமி


மண் மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
கோ.முனியாண்டி


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...3
"தமிழ் எங்கள் ...யிர்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...1


ஜி.எஸ். தயாளன்


எம். ரிஷான் ஷெரீப்

ஷிஜூ சிதம்பரம்

புனிதா முனியாண்டி

சேனன்

ரேணுகா


பதிவு:

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்


விமர்சனம்:

வல்லினம் கவிதைகள்

ஜாசின் ஏ.தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்

சு. யுவ‌ராஜ‌ன்

"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)

கவின் மலர்


புத்தகப்பார்வை:

மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன்


எதிர்வினை:

புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி

     
     
 

புதியதொரு தொடக்கமாகவும் -- புதியதொரு அணுகுமுறை ஆகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இருந்தது நமது புதிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் பதவியேற்பு.

தனது புதிய தலைமைத்துவ அணுகுமுறையாக அவர் முன் வைத்திருக்கும் தாரக மந்திரம் 1மலேசியா.

அதனை நிரூபிக்க அவர் இறங்கி நடந்து கைகுலுக்கி மகிழ்ந்தது நமது பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா. அதனை ஆனந்தக் கூத்தாடி பிரசுரித்து மகிழ்ந்தன நமது தமிழ் தினசரிகள்.

அதன் நீட்சியாக இன்னுமொரு திருவிழா. இந்த முறை அதன் மையம் நமது பத்து கேவ்ஸ் வளாகம். கோவில் தலைவர் நடராஜா கைங்கர்யம். பிரதமருக்கு ஆளுயர மாலை -- நமது பாரம்பரியமாகிவிட்ட பொன்னாடை - ஆடல் பாடல் என அமர்க்கள ஒற்றுமை விழா.

அந்த நினைவுகள் அதன் பசுமை வாடும் முன்பே கோலாலம்பூர் மாநகர மையத்தில் -- அதனைச் சிதைக்கும் விதமாக ஒரு நிகழ்வு.

50க்கும் குறையாத ஒரு குழு 28.8.09 அன்று வெள்ளிக் கிழமை பிற்பகல் மாநில பள்ளிவாசலிலிருந்து, தொழுகை முடிந்து, 300 மீட்டர் தொலைவுக்குள் இருந்த மாநில அரசாங்க அலுவலகம் நோக்கி ஓர் ஊர்வலம் போனது.

அவர்களின் நோக்கம் -- ஓர் இந்துக் கோவிலின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிப்பது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஷாஆலாம் செக்ஸன் 19ல் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயம். இடமாற்றத்துக்கு தேர்வுற்ற இடம் செக்ஸன் 23 ஷாஆலாம். எதிர்ப்பணியில் பங்குபெற்றோர் செக்ஸன் 23 குடியிருப்புவாசிகள்.

அங்கே, மாநில அரசாங்கக் கட்டிடத்தின் முன்பு -- திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட -- ரத்தம் சொட்டிய நிலையில் ஒரு மாட்டுத்தலை -- தரையில் வீசப்பட்டு உதைத்தலுக்கும் மிதித்தலுக்கும் ஆளானதோடு அதன் மேல் காறி உமிழ்ந்தும் வசைபாடியும் ஆரவாரித்தது அந்தக் கூட்டம். அதனை வேடிக்கை பார்த்து நின்றது காவல்துறை.

இதுவரை சொல்லப்பட்டது நாடகத்தின் தொடக்கக் காட்சிகள். இனி வருவது சுவாரஸ்யமிக்க அதன் தொடர் காட்சிகள்.

ஏறக்குறைய ஒருவார கால அவகாசத்தில் நடந்து முடிந்த இந்த நாடகத்தின் பிரதான கதாநாயகனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர் -- நமது புதிய உள்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ ஹிசாமுடின் துன் ஹுசேன். ஒரு கதாநாயகனுக்குரிய சகல வீரப் பிரதாபங்களோடு சேர்த்து -- பல்டி அடிக்கும் ஸ்டன்ட் காட்சிகளிலும் தன்னால் பிரமாதமாக சோபிக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபித்துள்ளார், இந்த மாட்டுத்தலை விவகாரத்தின் வழி.

இதற்கான ஆதாரங்கள் நமது தினசரிகளில் நிறையவே வந்துவிட்டன. உதாரணத்திற்கு அவர் திருவாய் மலர்ந்தருளிய பொன்னான வாசகங்களில் ஒன்று மட்டும் -- அந்த பேரணியில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டுள்ளனர். அது அமைதியான முறையிலேயே நடந்துள்ளது. அவர்களிடம் ஏதோ மனக்குறை இருந்துள்ளது. அவர்களில் எவரும் மாநில சுல்தானை இழிவுப்படுத்தவில்லை. அந்த மாட்டுத் தலை யாரோ பேரணிக்கு சம்பந்தமில்லாத ஒருவரால் அங்கே கொண்டுவரப்பட்டுள்ளது....

பல்லின சமுதாயத்தில் -- ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் நம்பிக்கைகளை மிகவும் கொச்சையாக நடுத்தெருவில் எள்ளிநகையாடிய ஒரு சிறு கும்பலின் அவதூறான நடவடிக்கைகளை -- பூசி மெழுகி மறைக்க முயற்சிக்கும் ஒருதலை ராகமான பேச்சே அன்றி -- பொறுப்புள்ள ஒரு உள்துறை அமைச்சரின் சார்புநிலை அற்ற, நடுநிலை காக்கும் பேச்சாக அவை இல்லை என்பது -- இந்த மாட்டுத் தலை விவகாரத்தை -- முதன்முதலில் மக்கள் பார்வைக்கு துணிந்து கொண்டு சென்ற -- மலேசியாகினி (www.malaysiakini.com) போன்ற இணையச் செய்தி ஊடகங்களில் மிக மிக கடுமையாக -- சில சமயம் அதிர்ச்சியூட்டும் வரிகளுடன் [அவற்றை நிச்சயம் இங்கே பதிவு செய்ய இயலாது] அமைச்சரின் செயல்பாடு விமர்சிக்கப்பட்ட விதம் உணர்த்தியது.

அதுமட்டுமல்லாமல், இந்த இழி செயலில் ஈடுபட்ட அந்தக் குடியிருப்புவாசிகளை தன் அலுவலகத்திற்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து வந்து -- அவர்களோடு சரிசமமாக உட்கார்ந்து குசலம் விசாரித்து வழியனுப்பி வைத்தபோது -- அவர்களின் குறைபாடுகளை கேட்டறிய அவர் மேற்கொண்ட முயற்சியாக முன்னிறுத்தப்பட்ட சந்திப்பு -- பல்வேறு தரப்பினரிடமிருந்தும் -- குறிப்பாக இணையத் தளங்களின், கடுமையான எதிர்ப்பையும் -- அந்தச் சந்திப்புக்கு பல்வேறு அரசியல் உள்நோக்கங்களையும் கற்பிக்க வழி வகுத்தது.

இந்தப் பிரச்னைகளைக் கண்டறியும் நோக்கத்தோடு நடந்ததாக கூறப்பட்ட அந்த குடியிருப்புவாசிகளுடனான சந்திப்பில் நிலவிய அந்த நல்லிணக்கத்தோடு -- இதற்கு அடுத்து மாநில மந்திரிபுசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுடன் நடந்த சந்திப்பில் -- அதே ஊர்வலக்காரர்கள் நடந்து கொண்ட விதமும் ஏற்படுத்திய அமளியும் வெளிப்படுத்திய ஆக்ரோசமும் -- பல எளிதில் பிடிபடாத பல ரகசியங்களை நமக்குச் சொல்லிய வண்ணம் உள்ளது.

நடு ரோட்டில், ஓர் இனத்தின் கலாச்சார வெளியில் புனிதச் சின்னமாக கருதி வணங்கப்படும் ஒரு பிராணியின் துண்டிக்கப்பட்ட தலை மேல் ஏறி மிதித்து -- காறி உமிழ்ந்து வசைபாடி -- அசிங்கப்படுத்திய சிலரோடு கைகுலுக்குவது எத்தகைய புண்படுத்தும் செயல் என்பதை எண்ணிப் பார்க்க இயலாத ஒருவர் -- உள்துறை அமைச்சராக இருப்பதற்கே லாயக்கற்றவர் -- அவர் ராஜினாமா செய்வதே இதற்கான தீர்வு என்கிற குரல்களும் உரக்க தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கின.

இந்த விவகாரத்தின் விபரீத திசை மாற்றத்தை கடைசி நேரத்திலேனும் புரிந்துகொள்ளத் தொடங்கிய அரசு -- தன்னை சுதாரித்துக் கொண்டு சூழலை சாந்தப்படுத்தும் முயற்சியாக -- மாட்டுப் பேரணியில் கலந்து கொண்ட ஐம்பது பேரில் ஒரு 12 பேரை சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது.

அதே வேளையில், இந்த அவமதிப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தோடு -- ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியை நமது காவல்துறை வழியிலேயே இடைமறித்து 16 பேரை உடனடியாக கைது செய்த விவகாரம் -- காவல்துறையின் பாரபட்ச சட்ட அமுலாக்கத்தை உறுதிப்படுத்தியதோடு -- கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

அவமதிப்பு பேரணியை தள்ளி நின்று வேடிக்கை பார்த்தவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் -- அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பேரணியை வலிந்து தடுத்து நிறுத்தியதாடு -- கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டது -- சட்ட ஒழுங்கு அமுலாக்கத்தில் அவர்கள் தேர்வு செய்யும் வழிமுறையில் உள்ள சார்பு நிலையை தெள்ளத் தெளிவாக்கியது.

மேலும், இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்த வேளையில் -- அதில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்றாக விளங்கியது -- அந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட -- மலாய்க்கார பெரும்பான்மை -- என்கிற சொல்லாடல்.

அண்மைய காலமாகவே அது புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்றாலும் அதன் வீரியம் இந்த விவகாரத்தின் வழி பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதுதான் அதன் கொடுமை. மலாய்க்கார பெரும்பான்மை -- என்கிற இந்தச் சொல்லாக்கம் பல்வேறு சூழல்களிலும் இனி இனங்களுக்கடையிலான பொதுவான பிரச்னைகளை அணுகும் நடைமுறைகளிலும் -- வரும் காலங்களில் தலைதூக்கலாம் என்கிற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தின பின்புலத்தில் இந்தப் பதச் சேர்க்கையின் பிரயோகம் நமக்கு வழங்கும் அர்த்தப்பாடுகள் மிகுந்த வேதனைக்குரியது. தூரநோக்கில் இதன் நீட்சியும் விளைவுகளும் அபாயகரமானவை.

ஒரு பல்லின சமூகத்தில், இது போன்ற -- எண்ணிக்கை பலத்தில் -- தீர்வுகள் நிர்ணயம் செய்யப்படுவது -- இனங்களுக்கு இடையிலான விரிசலை அதிகரிக்கவே செய்யும். அதிலும் ஓர் இனத்தின் இறை நம்பிக்கை வழிபாட்டு ஸ்தலங்கள் போன்ற மிகவும் உணர்ச்சிகரமான (சென்சிடிவ்) ஒரு பரப்பில் இதன் தாக்கம் -- மிக கடும் அதிர்வுகளை உண்டாக்கலாம்.

இந்த நாடகத்தின் இன்னுமொரு காட்சியும் அதிர்ச்சியளிப்பதுதான்.

மாட்டுத்தலை பேரணி குறித்த சர்ச்சை நமது இணையத் தளங்களில் பொறி பறக்க இன்னொரு பக்கம் அதனை அணைக்கும் தீவிர முயற்சியில் அதிகாரவர்க்கத்தின் கருவிகள் இயங்கத் தொடங்கின. தங்களது எஜமான விசுவாசத்தைக் காட்டும் வழக்கமான முனைப்புடன் -- குறிப்பறிந்து -- செயலில் இறங்கின.

இந்த முறை கிடைத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்த முற்பட்டது -- எம்.சி.எம்.சி. எனப்படும் மலேசிய இணையதள ஊடகத்தின் கண்காணிப்புப் பிரிவு. அதன் விளைவு -- ஆகக் கடைசி நிலவரப்படி (12.09.09), ம.சீ.ச தகவல் தொழிற்நுட்ப பிரிவின் பேச்சாளர் லீ வெய் கியாட் அளித்துள்ள தகவல்படி -- இதுவரை அமலாக்க அதிகாரிகள் மூன்றுமுறை மலேசியாகினி அலுவலகம் சென்று -- அதன் 12 ஊழியர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இதனை ஒரு அச்சுறுத்தும் நடவடிக்கை என்றும் உண்மையை பகிரங்கப்படுத்தும் அவர்களின் மனோதைரியத்தை ஊனமாக்கவும் -- அதிகார வர்க்கம் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு தவறான நடவடிக்கை ஆகும் எனவும் பரவலாகப் பேசப்பட்டது. இதில் உள்துறை அமைச்சருக்கு நேரடி தொடர்புண்டு என்கிற குற்றச்சாட்டு எழ அவர் அதனை மறுத்து வழக்கம்போல் அறிக்கையும் விட்டார்.

இன்றைய நிலவரப்படி -- செக்ஸன் 23 ஷாஆலாமில் நிர்மாணிக்கப்பட இருந்த மாரியம்மன் கோயில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிச்சயம் இது அந்தப் பேரணியை திட்டமிட்டு முன்னின்று நடத்தியவர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. எல்லோருக்கும் ஏற்புடைய ஒரு புதிய இடத்தை கண்டடையும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதே நடைமுறை, அனைத்து மதங்களின் வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் இனி நீட்டிக்கப்படுமா அல்லது குறிப்பிட்ட மதத்தவரின் -- சிறுபான்மை என்று வாசித்துக்கொள்க -- வழிபாட்டு ஸ்தலங்களுக்கு மட்டுமே இம்முறை நடைமுறைப்படுத்தப்படுமா என்கிற கேள்வி எழுவது நியாயமே. நியாயமான கேள்விதான். பதில் நியாயமானதாக இருக்குமா என்பதைக் காலந்தான் சொல்ல வேண்டும்.

மலேசியா போன்ற ஒரு பல்லின, பல சமய, பன்முக பண்பாடு கலாச்சார, பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாட்டில் -- நல்லிணக்கம் என்பது -- சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகள் கடந்த நிலையிலும் -- சகிப்புத்தன்மை -- என்கிற ஒரு சிறு கூட்டுக்குள்ளேயே -- அடைக்கப்பட்டு மூச்சுத் திணறிக் கிடக்கிறது என்பது கவலைக்குரிய நிலையே. அரசியல்வாதிகளும் தங்களின் சுயநல வேட்கைக்கு ஏதுவாக -- வெற்று ஸ்லோகங்களை மட்டுமே அதற்கு அவ்வப்போது உணவாக அளித்து -- அதை அங்கேயே தக்கவைத்து பராமரிப்பதில் கண்ணுங்கருத்துமாக செயல்படுகின்றனர்.

சகிப்புத்தன்மை என்பதே ஒருவித வலிந்து திணிக்கப்பட்ட -- சமூக ஒழுங்கு -- என்கிற பெயரில் கட்டமைக்கப்பட்ட -- எதிர்மறை மனித உணர்வின் -- மறுவடிவமே. நீ செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், சகித்துக்கொள்கிறேன். வேறு வழியில்லை? -- என்பதிலிருந்து, எங்கனம் பல்லினங்களிடையே, சகலவித மனத் தடைகளையும் உடைத்தெறிந்த -- ஒரு பரஸ்பர நிஜமான புரிந்துணர்வும், மரியாதையும், அன்பும், நேசமும் கொண்ட உறவு மலரக் கூடும்?

மிக சமீபத்திய நிகழ்வொன்று -- நேரடியாக அல்லாமல் மறை பொருளாக -- நமது கவனத்திற்குட்பட்டுள்ள இந்த விவகாரத்தோடு சம்பந்தப்படுவதால் -- அதனையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். மாண்புமிகு சாமிவேலு அவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடும் தனது சொந்த கோயில் தேர்(தல்) திருவிழாவுக்கு வீட்டிலேயே மொட்டை போட்டுக் கொண்டு கோலாலம்பூர் வந்திருந்தனர் அன்னாரது பக்தகோடிகள் பலர்.

அதில், ஒரு பக்தர், 'சாமி' மேல் கொண்ட அதீத பக்தியில் அருள் வந்து ஆடி -- அருள் வாக்கு வழங்கிய தருணம் -- எசகு பிசகாக ஆளுயர ரோஜா மாலைக்குப் பதிலாக 'செருப்பு மாலையை' -- நமது முன்னாள் தெய்வத்துக்கு போடச் சொல்லிவிட்டு -- மலையேறிவிட்டது.

இது சனிப் பெயர்ச்சியின் தொடக்க அறிகுறி -- அதிலும் மிக மோசமான ஏழரைநாட்டுச் சனி -- என்பது திருவிழா குஷியில் இருந்த கோயில் தலைவருக்கோ அல்லது அவரது சீடர்களுக்கோ அப்போது தெரியவில்லை. ஆனாலும், கடந்த சில நாட்களில் -- அன்று அந்த சுகுமார ஸ்வாமிகள் என்கிற பக்தரின் தலையில் ஏறி உட்கார்ந்து அருள்வாக்கு சொன்னது சாட்சாத் அந்த சனீஸ்வரன்தான் என்பதை கோயில் தலைவரே இப்போது புரிந்துகொண்டிருப்பார்.

இங்கே நான் பேச வந்தது அதுவல்ல. அதன் தொடர்ச்சியான -- அந்த அவமதிப்புக்கு உள்ளான நமது முன்னாள் பிரதமரின் ஒரு எதிர்வினை குறித்த எனது அவதானிப்பு. உண்மையில், மிக மோசமான அவமதிப்பு அந்த அதீத பக்தரின் அருள்வாக்கு. கோயில் தலைவர் விழா தந்த வெற்றி போதையில் அதனைக் கண்டுகொள்ளாமல் போனதும் பெருந்தவறு. பிறகு தொடுக்கப்பட்ட நெருக்குதலில், அவர் இறங்கி வந்து தானே அவரை (துன் மகாதீர்) நேரடியாகச் சந்தித்து மன்னிப்புக் கேட்க இருப்பதாகவும் -- அருள் வாக்கு தந்த சுகுமார பக்தரும் ஹரிராயா பெருநாள் அன்று முன்னாள் பிரதமரின் திறந்த இல்ல விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு -- மன்னிப்புக் கேட்க இருப்பதாகவும் அறிக்கைகள் விடப்பட்டுள்ளன.

இதுவரை சரி. அடுத்து, இந்த மன்னிப்பு விவகாரம் குறித்து நமது முன்னாள் பிரதமரிடம் கருத்து கேட்கப்படுகிறது. அதற்கு அவரது பதில் இப்படி அமைகிறது -- மன்னிப்பு கேட்டால் ஓகே. கேட்காவிட்டாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல. எனது இன மக்கள் என்னை அவமதிக்கும் போதுதான் நான் புண்படுகிறேன்..

ஒரு மாபெரும் உலகத் தலைவர். இந்நாட்டை 22 ஆண்டுகள் வழிநடத்தி வளப்பம் சேர்த்தவர். மலாய்க்காரர்களின் சிந்தனையைச் செதுக்கி புத்தாக்கம் செய்த நிஜமான சமுதாயச்சிற்பி. அனைத்து இன மக்களையும் ஒரு குடையின் கீழ் வைத்து சமமாக பார்க்க வேண்டிய முதியவர். ஆனால், அவரே ஒரு சாதாரண பாமர குடிமகனைப் போல -- சாதாரண ஒரு மன்னிப்பு விவகாரத்தில் கூட -- என் இனம், உன் இனம் -- என வேற்றுமைப்படுத்திப் பேசுகிறார். மனம் புண்படுகிறது.

புண் வெகு ஆழத்தில் புரையோடிக் கிடக்கிறது. சந்தேகமில்லை. 1மலேசியா என்கிற புதிய ஸ்லோகம் நனவாக வெகுதூரம் நாம் கடக்க வேண்டி இருக்கும். இன்னமும், அந்தப் பயணத்திற்கான சரியான தெளிவான திசையை நாம் கண்டடையவில்லையோ என்கிற அச்சத்தை -- மாட்டுத் தலையோடு வாழ்ந்த இந்த ஒருவார கால நடப்புகள் -- அதிலும் அதைக் கையாண்ட அதிகார வர்க்கம் வெளிப்படுத்திய -- இரட்டைநிலை -- ஏற்படுத்துகிறது.

எனவே, யாரோ சொன்னது போல -- இது 1மலேசியா அல்ல. இன்னமும், இது 2 மலேசியாதான். ஒன்று சிறுபான்மை இன்னொன்று பெரும்பான்மை.

அதனை போதிய ஆதாரங்களுடன், மீண்டும் நிரூபித்துள்ளது -- இந்த ஒரு வார கால மாட்டுத் தலை விவகாரம். 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768