இதழ் 10
அக்டோபர் 2009
  செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
அபத்தம் எனுமொரு கற்பிதம்
சீ. முத்துசாமி
 
     
  பத்தி:

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்

சீ. முத்துசாமி

எனக்குத் தெரிந்த மழை
யோகி


மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்


கட்டுரை:

கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்


சிறுகதை:

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ.ரெங்கசாமி


மண் மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
கோ.முனியாண்டி


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...3
"தமிழ் எங்கள் ...யிர்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...1


ஜி.எஸ். தயாளன்


எம். ரிஷான் ஷெரீப்

ஷிஜூ சிதம்பரம்

புனிதா முனியாண்டி

சேனன்

ரேணுகா


பதிவு:

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்


விமர்சனம்:

வல்லினம் கவிதைகள்

ஜாசின் ஏ.தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்

சு. யுவ‌ராஜ‌ன்

"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)

கவின் மலர்


புத்தகப்பார்வை:

மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன்


எதிர்வினை:

புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி

     
     
 

இப்போதெல்லாம், ஒரு வேலை நிமித்தமாக அன்றாடம் போகிற வருகிற வழியில்தான் அதனை தினமும் கடந்து போக வேண்டி உள்ளது.

அதனை நெருங்கும் முன்பே ஒரு இருநூறு மீட்டர் தொலைவில் வலது பக்கம் திரும்ப உயரத்தில் மலைச்சரிவில் தென்படும் சிறு கோயில். சொர்க்காம் என்கிற தோட்டம் சிதறுண்டபோது தப்பிப் பிழைத்து மலையில் ஏறி உட்கார்ந்துகொண்டது. அதனை திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் ஏதேனும் ஒரு வேண்டுதல் மனதில் ஓடும். பெரிதாக வேண்டுதல் வைக்க இப்போதெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை.

அது மிக அற்பமான ஒரு ஆசையாகவும் இருக்கலாம். அடுத்த வளைவில் உள்ளொடிங்கி மலைச்சரிவில் விரிந்து பரந்து படுத்து மெளனத்தில் ஆழ்ந்திருக்கும் சீனர் கல்லறையை கடக்கும் பொழுதில், அந்த ஆள்அரவமற்ற வெளியில், மனதில் நிறையும் ஒருவித இனமறியா பயம், இன்று வராமல் பார்த்துக்கொள் என்பதாக ஏதோ ஒன்று.

ஆனாலும், இன்றுவரை அதனைத் தவிர்த்து மேல் செல்ல முடிந்ததில்லை. சீனர் கல்லறைகளைக் கடக்க வந்துவிடுகிறது, அதே மண்சாலை. இருமருங்கிலும் நிறைந்து நிற்கும் ரப்பர் மரங்கள். மதிய பொழுதின் நிசப்த வெளி. விட்டு விட்டு தொடரும் மணிப்புறா ஒன்றின் குக்குக்கூ. மரங்கொத்தி பறவையின் அலறல்.

எனது பால்யகால அனுபவங்களில் என்னோடு இன்றுவரை தொடரும் மிக முக்கியமானவை இறப்பும், அதன் தொடர்பான சில பயங்களும்.

ஒவ்வொரு சாவிலும் புதுப்புது பயங்கள் உருவாகிகப்பட்டு, தோட்டம் முழுக்க பல நாட்கள் உலவிக் கொண்டிருக்கும். கித்தாதோப்பு வாளிக்கடையிலும், பால்கொட்டாய் மரநிழலிலும், திக்குவாயர்கடை வேப்பமரத்தடியிலும், கிணத்தடியிலும், விளக்கு வைத்து அஞ்சடியில் உட்கார்ந்து ஊர்க்கதை அளப்பிலும் - ஒவ்வொரு இறப்பும் ஒவ்வொரு விதமான அலங்கார ஜோடனைகளுடன் புத்துரு பெறும்.

இப்போது தினமும் கடக்க நேரும் இதே சீனர் கல்லறையின் நிலக்காட்சியுடன் இருந்தது தோட்டத்து இடுகாடும் - சிறிய அளவில். தோட்டத்து முகப்பில் மாரியம்மன் கோயில் முச்சந்தியில் வலதுபுறம் கிளை பிரியும் மண்சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில், வலதுபுறம் நிற்கும் வெள்ளைக்கார துரைமார்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த அந்த பங்களாவைக் கடக்க, சரிந்து இறங்கும் பள்ளத்தில் ஒரு நூறு மீட்டர் தொலைவுக்குள் இடதுவாக்கில் ரப்பர் மரங்கள் சூழ ரோட்டைப் பார்த்து இருந்தது.

புல்பூண்டு செடி கொடிகள் முளைத்து சில மண் மேடுகள். நாள்பட்ட புதைகுழியின் அடையாளம். புதிதாய் தோண்டிய குழிகள் ஈர மண் வாசனையுடன். வாடத் தொடங்கி இருக்கும் மலர் மாலை. உடைந்த மண்சட்டி. தலைமாட்டில் புதிதாய் ஊன்றிய செடி. அப்போதெல்லாம் கல் சமாதிகள் ஏதும் இருந்த நனைவில்லை. இப்போது உண்டு.
சில அசத்தலாய். அதில் நடுவாய் இறந்தவரின் படம் பொறித்து பிறப்பு இறப்பு விபரங்களுடன்.

அதனையொட்டி, கூப்பிடு தொலைவில் ஓடியது எங்கள் தோட்டத்து பெரிய ஆறு. குச்சிக்காட்டிலிருந்து குளிக்கப் போக வர எங்களுக்கு இடுகாட்டை ஒட்டி ஓடிய ஒத்தையடி பாதைதான் சுருக்கு வழி. சில நாட்களில் நடுப்பகலைக் கடந்த நிசப்தம் நிறைந்த வேளையில், தனியனாய் ஒத்தையடி பாதையில் குளிக்கப் போவதுண்டு. அவை மிக இறுக்கமான பொழுதுகள். பார்வைக்குள் இடுகாடு வர பயத்தில் கால்கள் பரபரக்கும். நடை ஓட்டமாகிவிடும்.

இறப்பும் அதன் தொடர்பான சடங்குகளும் இன்ன பிற அடையாளங்கள் என யாவுமே சுய மரணம் குறித்த மர்மமும் அதனை எதிர்கொள்ளும் தருணம் குறித்த அச்சமுமே காரணம் என்பதை உணர இயலாத வயது அப்போது.

தோட்டத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு இறப்பும் ஒரு மர்ம தேசமாக மனதில் உருக்கொண்டு பலநாட்கள் கூடவே திரியும். அதிலும் மரணம் நிகழும் இரவு பொழுதுகள் முற்றிலும் வேறோர் உலகம். ஒருவித அச்சம் அதன் சூழலில் கலந்துவிட்டிருக்கும். இருளின் அடர்த்தி மிகுந்து காணும். இறந்தவர் உயிர்பெற்று ஒவ்வொரு வீட்டினுள்ளும் உலவிக் கொண்டிருப்பார்.

அன்றைய இரவு அம்மா எங்களை வெளியே அனுப்பமாட்டார். செத்தவன் ஆவி குச்சிகாட்ல சுத்துன்டா. சின்ன புள்ளங்கள கண்டா புடிச்சுக்கும் என சொல்லி வெள்ளன படுக்கவைத்து விடுவார். வழக்கமாய் நடுஇரவில் கூட எழுந்து ஒன்னுக்குப்போக குசினிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே தடுப்புக்குள் ஒதுங்குவதுண்டு. ஆனால், சாவு விழுந்த இரவுகளில் அம்மா அதற்கு தடை உத்திரவு போட்டிருந்தார். அம்மாவையோ தம்பிகளில் யாரையோ எழுப்பி துணைக்கு வைத்துக் கொண்டுதான் வெளியே கால் வைக்க வேண்டும்.

வெளியில் கால் வைக்க வந்து மோதும் பனிக் காற்று மயிர்க்கால்களை குத்திட வைக்கும். மரண வாடை சுமந்து திரியும் காற்று. இறந்தவர் பக்கமே நிற்பது போன்றதொரு பிரமை. இரவின் அமைதியை நிர்மூலமாக்கி வெளியெங்கும் நிரம்பி வழியும் டன்டனக்க டன்டனக்க. பக்கத்து டிவிஷனிலிருந்து சேதி சொல்லி தப்போடும் சாராய பாட்டிலோடும் வந்திறங்கிய புதூரானின் கைவரிசை.

சின்ன உருவம். பெரிய மீசை. நரைகண்ட தலைமுடி. எப்போதும் சிவந்திருக்கும் கண்கள். மடித்துக் கட்டிய வேஷ்டி. சாராய போதையின் அளவைப் பொறுத்து நிர்ணயமாகும்
அடியின் வீரியம். தப்புக்கு ஏற்றப்படும் சூடும் அதனை உறுதிசெய்யும். அதற்காகவே சாவு வீடுகளில் ஒரு பக்கம் மூட்டம் போடுவதுண்டு. சுள்ளி விறகுகளை அடுக்கி நெருப்பு மூட்டம். விடியும் வரை கனன்று கொண்டிருக்கும். அதில் தப்புக்கு சூடேற்றிக்கொண்டுதான் புதூரான் அடிக்கத் தொடங்குவார்.

சாவு வீடுகளில் இந்த மூட்டத்துக்கு வேறொரு பணியும் உண்டு. இரவு நீண்டு போக குளிர் காற்றில் உடல் சூடு தேடும். குளிர்காய தோதாக அந்த மூட்டம். சுற்றி நாலைந்துபேர் கைகளை அதன் அருகே வைத்து சூடேற்றி கதையளந்து கொண்டிருப்பதைக் காண முடியும். புதூரான் தப்பை அடிக்கத் தொடங்கியதும் தோட்டம் உள் ஒடுங்கி அந்த ஓசைக்குள் ஐக்கியமாகிவிடும். அதன் அச்சுறத்தலில் ஒடுங்கிவிடும் இரவு நேர ஓசைகள் -- குழந்தைகளின் அழுகை, அம்மாக்களின் தூக்கம் கலைந்த முணுமுணுப்பு, கோட்டான்களின் அலறல், குடிகாரர்களின் முணகல், சில்வண்டுகளின் ரீங்கரிப்பு. இதற்கு நேர்மாறாக, முச்சந்தியில் படுக்கைப் போட்டிருக்கும் குச்சிக்காட்டு நாய்கள் மட்டும் புதூரான் தப்படிக்கு எதிர்க்குரல் எழுப்பி ஊலையிடும். அதில் கூடுதல் அச்சம் ஒலிக்கும். நாய் கண்ணுக்கு பேய் தெரியுதுடா.. அதான் இப்படி ஊல இடுதுங்க.. அம்மா மெதுவான குரலில் சொல்லிக் கொண்டிருப்பார்.

படுக்கைக்குள் முடங்கி பயத்திற்கு இதமாய் போர்வையை தலைவரை இழுத்து மூட, பெரியான் சொன்ன பேய்க் கதைகளோடு அசைபோட்டபடி தூங்கிப்போவதுண்டு. பெரும்பாலும் அதனைத் தொடரும் கனவுகள் அந்த தோட்ட மண்ணில் அதுவரை இறந்திருக்கும் யாரேனும் ஒருவராய் இருப்பதுண்டு.

சென்ட்ரோல் ஸ்கூல் சட்டாம்பிள்ளை ராமலிங்கம் லாலான் பாசானத்தை குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட அந்த இரவிலும் அவன் கனவில் வந்து கலைந்த முடியும் முகம் மறைத்த தாடியுமாய் வாயில் எச்சில் ஒழுக நின்றதும் அலறியடித்து நான் எழுந்து உட்கார்ந்ததும் கோட்டோவியமாய் நிலைத்திருக்கிறது. குடிகார அப்பாவோடும் நரசம்மா அக்காவோடும் ஏற்பட்ட பிணக்கில் அவனுக்கு கைகொடுத்தது வெளிக்காட்டு வேலைக்கு அப்பா வைத்திருந்த கோப்பிஓ பாசானம். பத்தாம் நம்பர் தீம்பாரில் மயங்கிக் கிடந்தவனை வெளிக்கு போன யாரோ ஒருவர் பார்த்து தோளில் தூக்கி வர, வீடு வந்து சேர உயிர் போயிருந்தது.

எட்டி நின்று பயப்பிராந்தியுடன் அவனது உயிரற்று அசைவற்று கிடந்த உடலை பார்த்திருக்க நிலைகுத்தி நின்ற அவனது அகன்ற பெரிய கண்கள் மனதில் ஒட்டிக் கொண்டது. நீண்ட கால்களும் நீண்ட கைகளும் நல்ல உயரமும் வலிமையும் கொண்ட அவனது உடலில் மிகுந்த விஷேசத்துடன் எவரையும் பார்திதவாக்கில் தன்வசப்படுத்தும் சக்தி கொண்டிருந்தது அவனது இரு கண்கள்தான். சதாசதா துறுதுறுவென்று அலைந்தபடி உயிர்ப்போடு இருக்கும். எந்த நொடியிலும் ஓரிடத்தில் நிலைக்காத ஏதோவொரு பரபரப்பு அதனுள் தொக்கி இருக்கும். அப்போது அது அடங்கி அசைவற்று இருப்பதைக் காண விசித்திரமாய் இருந்த நினைவு.

இதனோடு இணைந்துகொள்ள இன்னுமொரு இறப்பும் வந்து நிற்கிறது. அதுவுமொரு அகால மரணம். ஒரு மாலை வேளை.வழக்கமான கலகலப்புடன் குச்சிக்காடு. அதில் கல்லெறிந்து கலைத்துவிடும் ஒரு அலறல் -- சுப்பிரமணி பொஞ்சாதி அங்க தொங்க லயத்து பின்னால மரத்துல தூக்கு மாட்டி நாண்டு கெடக்கறா. மேட்டுக்கச்சி தொங்க லயத்தை ஒட்டி பின்புறமாக நீண்டுக் கிடந்த ரப்பர்க்காடு. அலறியடித்து ஓடிய சனங்களோடு, திடலில் எடுத்தடிச்சான் பந்து ஆடிக்கொண்டிருந்த நாங்களும் ஓடிப்போய் நின்று பார்த்தோம். சன்னமான மரம். அதிகமும் கிளைகள் இல்லாத சற்றே வளைந்த கிளையொன்றில் தரைக்கு சற்றே மேலே கால்கள் அந்தரத்தில் அசைந்திருக்க சடம்புநார் கயிற்றில் தொங்கயது அந்த மெலிந்த உடல். ஐந்தடி உயரத்தில் மெலிந்த சிவந்த தேகம்.

நீண்ட நாட்கள் போகும் இடங்களுக்கெல்லாம் அந்தக் காட்சி என்னைத் துரத்தி வந்தது. அதிலும் பெரிய ஆத்துக்கு குளிக்கப்போகும் அந்த ஒத்தையடிப் பாதை, பிணம் தொங்கிய அந்த மரத்தை சுமார் இருபதடி தூரத்தில் விலகி நகர்ந்தது.அது கண்ணில் படாமல் அதனைக் கடப்பது இயலாது. வேறு பக்கம் திரும்பிப் பார்த்தபடி நடந்தாலும், கூட வரும் எவனாவது -- டே அதோ நிக்குது பார்ரா அன்னக்கி அந்த அக்கா நாக்க தள்ளிகிட்டு தொங்கன மரம் என்பான். அதுமுதல், ஆத்தங்கரையை அடையும்வரை எல்லா மரங்களிலும் அக்கா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பார்.

நிசப்தம் மண்டிக் கிடக்கும் பிற்பகல் வேளையில் அந்த ஒத்தையடிப்பாதையில் எப்போதேனும் தனியனாய் ஆத்துக்குப் பயணிப்பதுண்டு. அக்காள் கூடவே பின் வருவது போன்றதொரு பிரமை. பயத்தில் பார்வை நாலாபுறமும் அலைய கால்கள் வேகமெடுத்திருக்கும். ஏதேனும் ஒரு புதருக்குள்ளிருந்து இலைச் சருகுகளை சரசரக்க வைத்து ஓடும் ஒரு காடையின் காலடியோசையில் இதயப் படபடப்புக் கூடி உள்ளங்கை வேர்த்து ஒழுகும். ஆத்தங்கரையில் போய் நின்று கூட்டாளிகளைப் பார்க்கும் வரை அது அடங்காது.

அப்போதெல்லாம், பெரியான் அந்த இரவில் சொன்னது நினைவுக்கு வந்துவிடும் -- டே பெரியவனே.. ஆயுசு முடியாம அல்பாயுசுல இப்படி தூக்கு மாட்டி செத்தவங்க உசுரு அவங்க ஆயசு முடியற வரக்கும் அங்கயேதான் சுத்திகிட்டு இருக்குன்டா.. தனக்கு தொணயா இருக்க யாரயாவது தேடி அலஞ்சுகிட்டிருக்கும்.. யாராவது கெடச்சா அவங்கள புடிச்சுக்கும்.. உச்சி நேரத்துல அந்த தீம்பாருக்குள்ள போயிராதடா. அப்புறம் நீயும் பேயடிச்சு மூக்குல வாயில ரத்தம் கக்கி செத்துரவே..

முன்பே ஒருமுறை இதே போன்றதொரு கதையைச் சொல்லி அவர் பயமுறுத்தியது அப்போது நினைவில் வந்திருக்கக் கூடும் -- டே நீ பொறக்கறதுக்கு முன்னாடி இங்க இதே போல ஒன்னு நடந்திருக்குடா.. ஒருநா உச்சிபொழுதுல நம்ம முத்துவேலு அண்ணன் அப்பங்காரன் ஒத்த ஆளா நம்ம ரெட்டமல சந்துல சைக்கில முதிச்சுகிட்டு வந்திருக்காரு.. அப்ப அந்த பக்கமா சுத்தன ஜின்னு பேய் அவர அடிச்சிட்டு போயிருச்சு. சடக்கு ஓரத்துல மயக்கமா வுழுந்து கெடந்தவர யாரோ பாத்து தூக்கியாந்து வூட்டுல போட.. கொஞ்ச நேரத்துல மூக்குல வாயில ரத்தமா கொட்டி மூச்சு நின்னு போச்சு.

சாவு வீடுகளுக்குப் போவதும் கிடத்தி வைத்திருக்கும் பிணங்களைப் பார்ப்பதும் ஒரு திகில் அனுபவமாக இருந்தது.அதுவரை நம்மிடையே உலவி பேசி சிரித்து இருந்த ஒரு மனிதர் அசைவற்று படுத்துக் கிடப்பது வினோதமாக இருந்தது. ஒருவித அச்ச உணர்வும், இனி இவர் நம்மில் ஒருவர் அல்ல என்கிற புரிதலும் அவரை அந்நியப்படுத்தி இருந்தது.அதில் அந்தப் பூக்களுக்கும் சிறு பங்கு இருந்தது.

பிணங்களை அலங்கரிக்கும் பூக்களாக அப்போதெல்லாம் அந்தப் பூக்கள்தான் இருந்தன.மடல்கள் முதுக பின்னால் வளைத்து சுத்தமான வெள்ளை அல்லாத பழுப்பு நிறத்தில். தோட்டத்து ஆபீஸ் வளாகத்துள் இரண்டும் -- நேரதிரில் குறுக்கு ஓடிய சடக்குக்கு அந்தப்புறம் பெரிய கிராணி சுப்பையா பங்களா காம்பெளண்டுக்குள் இரண்டு மரங்களும் இருந்த நினைவு.பூப்பதற்கு குறிப்பட்ட இடைவெளி ஏதுமின்றி வருடம் முழுக்கவும் பூக்களைச் சுமந்திருக்கும். உதிர்ந்த பூக்கள் சட்க்கோரம் நிறைந்திருக்கும். அதனை மிகுந்த எச்சரிக்கையுடன் தவிரித்து ஒதுங்கிப் போவதுண்டு. அம்மா சொல்லியிருந்தாள் -- அது சாவு பூவுடா.. பொணத்து மேலதான் போடுவாங்க.. சாப்டா செத்துடுவாங்க.

தோட்டத்து ஆஸ்பத்திரி வளாகத்திலும் இவை நிறைந்திருப்பதை, காதில் சீழ் வடிந்த நாட்களில், பலமுறை அதில் தங்கி சிகிச்சை பெற்றபோது பயத்துடன் தள்ளி நின்று பாரித்திருந்ததுண்டு. படுக்கையில் தலை சாய்த்தபடி சன்னல் வழி தெரிந்த நீல ஆகாயத்தை பார்க்க வழியை அடத்து நின்றன சாவுப் பூக்கள். வார்டுகளை ஒட்டி வரிசை பிடித்து நின்ற மரங்கள். ஒருவித சங்கடம் மேலிட அதனைப் பார்த்திருந்ததுண்டு. பூக்கள் மறைய அங்கே காசநோய் வார்டிலும் பிரசவ வார்டிலும் செத்து பிணமாக தோட்டத்து லாரியில் பயணப்பட்ட முகங்கள் வந்து நின்று பயங்காட்டும்.

ஏதோ ஒரு நாளில், நடுநிசி தாண்டிய நிசப்த வேளையில், படுக்கையில் எழுந்து உட்கார்ந்து -- அம்மா என்றோ சொன்னதை நம்பி -- சாயங்காலம் ஆபீஸ் பக்கமாய் நடந்து, சடக்கோரம் உதிர்நிது கிடந்த பூக்களை பயத்துடன் எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்து, ஏதோ கோபம் தீராத நிலையில் -- பாக்கெட்டில் இருந்த பூக்களை எடுத்து, உள்ளங்கையில் வைத்து நீண்ட நேரம் ஏதேதோ நினைவுகளில் தொண்டைக்குள் துக்கம் முட்டி நிற்க -- தின்பதற்கு தைரியமற்று வெறுமனே பார்த்திருந்து -- பின் தூங்கிப்போன நினைவுண்டு.

ஒரு கட்டத்தில் சாவு வீடுகளுக்குப் போவதும் அங்கே அந்த அடர்ந்து இறுகிய துக்கச் சூழலில் நின்று கொண்டிருப்பதும் ஒரு தண்டனையாக உணர -- சுயமாய் அந்தச் சூழலிலிருந்து என்னைக் கத்தரித்துக் கொண்டு ஒதுங்கிப்போனேன். அம்மா அது குறித்து கேட்டபோது -- பிடிக்கலே -- என்று தலையைக் கவிழ்ந்து சொல்ல முடிந்தது. அம்மா சற்றே குழப்பத்துடன் -- என்னடா சொல்ர?-- என்றதைக் காதில் வாங்கி பதிலேதும் சொல்லாத நினைவு.

சாவு குறித்த எனது அனுபவங்களில் புதிய சேர்க்கைகள் வந்து கலந்து அதன் நிறம் மாறிக்கொண்டிருந்த வேளையில் -- எனது சாவை நானே எதிர்கொள்ளும் ஒரு தருணமும் வந்து சேர்ந்திருந்தது.

குச்சிக்காடு கல்யாணக் கோலம் பூண்டிருந்த ஒரு நாளின் மயங்க வைத்த மாலைப்பொழுது அது. சற்று முன்புவரை நல்ல மழையில் குளித்து குளிர்ந்து பளிச்சென இருந்தது. மேட்டுக்குச்சி தொங்கல் லயத்து முத்துவேலு மகள் -- மொட்டை என்கிற செல்லப் பெயரால் மட்டுமே அறியப்பட்ட -- கல்யாண நாள். அம்மாவோடு போனவன், டவுனிலிருந்து முத்துவேலு மாமா வாடகை பேசி சின்னக் காடியில் கொண்டுவந்து இறக்கி இருந்த பாட்டுப் பெட்டிக்குப் பக்கமாய் போய் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்தேன்.

வட்டத் தட்டில் ஊசிமுனை சுழல மேலே இரு பக்கம் பந்தக்காலில் வைத்துக் கட்டப்பட்டிருந்த அகண்ட குழாய் வழி பாடல் அலறியதைப் பார்க்க வியப்பாய் இருந்தது. அப்போதுதான் எங்கிருந்தோ புறப்பட்டு வந்த அது என்னைத் தாக்கி இன்ப அதிர்ச்சியில் தள்ளாட வைத்தது. குழாயிலிருந்து ஒரு மதுரக் குரல் புறப்பட்டு, குச்சிக்காடு முழுக்க இன்ப அலைகளை அலையவிட்டு அல்லாடவைத்தது -- மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா.. -- ஜிக்கி என்கிற பாடகி எனக்கு அறிமுகமான இன்பநாள்.

இன்றும்கூட, அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் சிறிது நேரம் நிலைகுத்தி நிற்க வைத்துவிடுகிறது. மீண்டும், நாட்களை பின் நகர்த்தி -- அந்த மாலைப் பொழுதின் ரம்மிய பிரதேசத்துக்குள் சஞ்சாரம் செய்ய பயணித்துவிடுகிறது மனம் -- அதோ எதிரில் விரிந்து பரந்து கிடக்கிறது குச்சிக்காடு. சூழ நின்று தலையாட்டும் ரப்பர் மரங்கள். எப்போதும் மடித்துக் கட்டிய வேட்டியோடும் நரைத்த முடி நிறைந்த திறந்த மார்போடும் பந்தலுக்குள் உலாவரும் முத்துவேலு மாமா. பந்தலுக்கு மேல, குழாயிலிருந்து ஜிக்கியின் கிறங்கடிக்கும் குரல் புறப்பட்டு குச்சிக்காடு முழுக்க பரவச அலைகள் -- பந்தலுக்குள் அரை சிலுவாருடன் இன்னமும் நின்றுகொண்டு -- அதே முதல்முறை கண்டடைந்த பரவசம் சற்றும் குறையாத போதையில் நானும்.

பாட்டுப் பெட்டிக்குப் பக்கமே இருந்தது வெற்றிலைத் தட்டு. அம்மா சாவகாசமாய் உட்கார்ந்து வெற்றிலைப் போட்டு பேச்சு சுவாரஸ்யத்தில் என்னைக் கவனியாமல் இருந்த நேரம் பார்த்து, சுண்ணாம்புக் குவளைக்குள் விரலை விட்டு நாவில் வைத்து ருசி பார்க்க, வெந்து நாவில் நீர் வழியத் தொடங்கியது. கண்களில் நீர் முட்டி வந்தது. அடக்கிக் கொண்டு -- அம்மாவிடம் சொல்ல பயந்து வீட்டுக்கு நடையைக் கட்டினேன். குறுக்கு வழிதான் வீட்டுக்கு சுருக்கு வழி. அனுமந்தன் வீட்டு கொல்லைப்புற ஒத்தை பாலம்.

மதியம் கொட்டிய மழையில் சிற்றாறு நீர்மட்டம் உயர்ந்து செம்மண் கலந்து புரண்டோடியது. வாய்க்குள் வேதனை அதிகரிக்க பதட்டத்துடன் ஒத்தை பாலத்தில் அடி வைத்து நகர -- கால்களில் ஏதோ தடுமாற்றம். அடுத்த வினாடியில் நீருக்குள். வேகமெடுத்திருந்த நீரின் அசுரப் பிடிக்குள் சிக்கி, கீழ் நோக்கி உடல் அமிழத் தொடங்கிவிட்டது. உயிருக்கான போராட்டம்.

தலைக்கு மேலே இரண்டு கரங்களின் பரிதவிப்பு. வினாடிப் பொழுதில், ஏதோவொன்று அதன் பிடிக்குள். என்ன ஏதென்று தெரியாது. பிடி இறுக, உடல் நீரோட்டத்தை எதிர்கொண்டு நின்றது. மெல்ல தலையை உயர்த்திப் பார்க்க, கைக்குள் ஆற்றங்கரை கோரைப்புல். அசுர பலம். வயதுக்கும் எனது நோஞ்சான் உடலுக்கும் சம்பந்தமில்லாத பலம். மல்லுக்கட்டி, மெல்ல உடலை நீரிலிருந்து விடுவித்து கரையில் ஏறி உட்கார்ந்து -- படபடப்பும் பயப்பிராந்தியும் அடங்கக் காத்திருந்து -- கால்களின் அடியில், இரண்டடி இடைவெளியில், ஆக்ரோசத்துடன் சுழித்தோடும் அந்த நீரைப் பார்க்க -- அழுகை முட்டி மோதி கரை கடந்தது.

சாவை தற்செயலாய் நேரெதிர்கொண்டு மீண்டிருந்தேன்.

இப்படி, தற்செயலாய் அல்லாமல் -- திட்டமிட்டு நடந்த சாவோடுடனான எனது நேரடி அனுபவம் -- அதன் பின் பதின்ம வயது கடப்பதற்குள் -- இருமுறை நான் மேற்கொண்ட தற்கொலை முயற்சிகள்.

இதில் குறிப்பாக ஒரு முயற்சியின்போது, இரண்டாவது முயற்சியென நினைக்கிறேன் -- தந்தைக்கும் அப்பனுக்குமான ஒருவித விரிசல் கண்ட உறவில், எனக்கான புதியதொரு புரிதல் காத்திருந்ததை இப்போது எண்ணிப் பார்க்க வியப்பாக உள்ளது.

அது மதிய நேரம். தாழிடப்பட்ட அறை. நினைவுகள் மெல்ல கரையத் தொடங்க நான் வேறொரு உலகத்துள் காலடி வைக்க நகர்வது உணர்ந்தது. கதவு தட்டப்படும் சத்தம். கலவையான கலவரக் குரல்கள். கதவு உடைத்து திறக்கப்படுவது மங்கலாய் நிழலாடுகிறது. அடுத்து, பச்சைக் குழந்தையை இரண்டு கைகளாலும் வாரி எடுத்து அணைக்கும் தாயின் கருணை. அப்பாவின் இரு கைகளுள் நான் -- ஆஸ்பத்திரிக்குப் போக சடக்கோரம் நின்ற சின்னகி காடி வரை. வயதான அந்த உடல் என்னைச் சுமந்து மூச்சு வாங்க தள்ளாடி கதறி ஒரு நூறு மீட்டர் தூரம் ஓடியதை -- அதன் படபடத்த இதயத் துடிப்புக்கு மிக அண்மையிலிருந்து அதன் துயர ஓலத்தைக் கேட்ட அந்தக் கணம் எனக்கு புதியதொரு அப்பா கிடைத்திருந்தார்.

இங்கு சில கேள்விகள் எழலாம். இறப்பு குறித்த சகலவிதமான எதிர்மறை கற்பிதங்கள் நிறைந்த ஒரு சூழலில் -- அதனை முழுமையும் உட்கொண்டு ஜீரணித்து தன்மயமாக்கிக் கொண்டிருந்த ஒரு பதின்ம வயதுச் சிறுவன் -- மரணத்தை அதன் சகல பரிமாணங்களோடும் எதிர்பாராதவிதமாய் எதிர்கொள்ள நேர்ந்த ஒரு தருணத்தில் -- அதனோடு மூர்க்கமாய்ப் போராடி வென்று இவ்வுலகில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டவன் -- பின் எப்படி திட்டமிட்டு, மர்மமும் திகிலும் நிறைந்த அந்த இருண்ட பிரதேச பரப்புக்குள் தன்னை வலிய நுழைத்து -- அந்த மரண தேவதைய அணைக்க முற்பட முடிந்தது? இது ஒரு முரணல்லவா? தற்கொலை என்பதே ஒரு அபத்தமல்லவா?

யாவருக்கும் பொதுவாய் -- மனித வாழ்வு என்பது எதற்கும் எத்தருணத்திலும் -- அதன் மேன்மைகள், கீழ்மைகள், அபத்தங்கள் என சமூகம் கற்பித்து வத்திருப்பவை -- என அனைத்திற்கும் இடம் வைத்தே நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதே -- அதற்கான ஒரே பதிலாக இருக்கக் கூடும்.

அதிலும், வாழ்வின் இறக்கமற்ற முகத்தை ஏதேனும் ஒரு திருப்பத்தில் நேரெதிர்கொள்ளும் அச்சந்தர்ப்பத்தில் -- அதன் தாக்கம் நுண் உணர்வின் உட்சபட்ச கிளர்த்தலை நிகழ்த்திவிட -- அதற்கு ஒருவித மூர்க்கத்துடன் எதிர்வினையாற்ற முனையும் மனிதனின் இயல்பான குணத்திலும் செயல்பாட்டிலும் -- அபத்தம் என்றோ முரண் என்றோ முத்திரைக் குத்த ஏதுமில்லை -- தற்கொலை உட்பட.

- தொடரும்

o செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...1
o செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...2
o செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...5
o செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...6
o செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...7

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768