இதழ் 23
நவம்பர் 2010

இளங்கோவன் : தீ முள்
ம. நவீன்

 
 
  நேர்காணல்:

“எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.”

இளங்கோவன்



இளங்கோவன் சிறப்பிதழ் பத்திகள்:


அக்னிக் குஞ்சு

சீ. முத்துசாமி

இடம்பெயராத இளங்கோவன் எனும் ஆளுமை!
கோ. முனியாண்டி

நிஷா : காலமும் வெளியும்

இராம. கண்ணபிரான்

FLUSH - வெறுப்பின் குருதி
சு. யுவராஜன்

இளங்கோவன் : தீ முள்

ம. நவீன்

இலக்கிய வானில் ஓர் விடிவெள்ளி
முனைவர் ஸ்ரீலஷ்மி



த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!
யோகி



அஞ்சலி:


ரெ. ச‌ண்முக‌ம் : க‌லையின் குர‌ல்
ம. நவீன்



கட்டுரை:


மலேசியக் கல்விச் சூழலில் தமிழாளுமையின் சரிவும் இழந்தே பழகிய அரைநூற்றாண்டுச் சுரணையும்!
ஏ. தேவராஜன்

அயராது உழைக்கும் ஜப்பானியர்கள்
சந்தியா கிரிதர்



சிறுகதை:


சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
கே. பாலமுருகன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...5
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...11
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



கவிதை:


இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...13

பா. அ. சிவம்

ரெ. பாண்டியன்


ஏ. தேவராஜன்




அறிவிப்பு:

வ‌ல்லின‌ம் ச‌ந்திப்பு 1
     
     
 

இளங்கோவன் அறிமுகம் ஆகும் முன்னரே அவர் பெயர் நன்கு அறிமுகமாகியிருந்தது. சில சிங்கை நண்பர்கள் மூலமாக அவர் சிங்கப்பூரில் மிக முக்கிய படைப்பாளி என்பதையும் அறிந்துகொண்டேன். மேடை நாடகம், கவிதை, மொழிப்பெயர்ப்பு என பலவற்றிலும் அவரது ஆளுமையை சிங்கை நண்பர்களுடனான உரையாடலின் மூலம் அறிய முடிந்தது. கூடவே அவர் யாரையும் பார்க்கவும் உரையாடவும் விரும்பமாட்டார் எனவும் தொடர்ந்தார் போல தகவல்களும் வந்து கொண்டிருந்தன.

அப்போது தமிழகச் சிற்றிதழ்களில் தலித் இலக்கியம் பற்றிய விவாதங்கள் வந்து கொண்டிருந்தன. எளிய மனிதர்கள், அவர்கள் வாழ்க்கை, அவர்களின் பால் செலுத்தப்படும் சுரண்டல்கள் போன்றவற்றை வாசித்துக் கொதித்துப் போயிருந்தேன். மலேசியாவில் அம்னோ அரசால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தின் ஓர் அங்கமான நான், எல்லா அரசியல் செயல்பாடுகளையும் ஒரு தலித் மன நிலையில் இருந்தே சிந்தித்தேன். சிந்திக்கிறேன். முதிர்ச்சியடையாத ஒரு சிந்தனை காலக்கட்டத்தில் சுற்றி நடக்கும் அனைத்திற்குமே அரைகுறையான அரசியல் பார்வையோடு சிந்திக்கும் தன்மை மட்டுமே அப்போது வாய்த்திருந்தது.

இளங்கோவன் யாரையும் சந்திக்க விரும்பமாட்டார் என்பதை நான் இந்த அரைகுறை சிந்தனையில்தான் முதலில் புரிந்துகொண்டேன். ஒரு சக மனிதனை சந்திப்பதிலும் கருத்து பரிமாறுவதிலும் என்ன தயக்கம் வேண்டி கிடக்கிறது? சந்திக்கும் மனிதன் யாராகத்தான் இருந்தால் என்ன? அவன் மனிதன். அந்த ஒரு தகுதி போதுமே என மனதிற்குள் குமைந்துகொண்டேன். முதன் முதலில் சிங்கப்பூர் சென்றிருந்த போது நானும் அகிலனும் தங்கியிருந்த விடுதிக்கு, லண்டனிலிருந்து வந்திருந்த என். செல்வராஜாவை சந்திக்க இளங்கோவன் வந்திருப்பது தெரிய வரவே லதாவின் மூலமாக அவரை சந்திக்க விரும்புவதாக தகவல் கொடுத்தேன். கேட்டுவிட்டு பதில் சொல்வதாகச் சொன்ன லதாவிடமிருந்து அழைப்பு வராததால் என் எண்ணம் உறுதியானது. நிச்சயமாக அவரைச் சந்திக்கவே கூடாது என உறுதி செய்து கொண்டேன்.

பின்னொரு நாளில் சிங்கை இலக்கியங்களை வாசிக்கும் எண்ணம் வந்த போது சில புத்தகங்களோடு இளங்கோவனின் 'விழிச் சன்னல்களின் பின்னாலிருந்து' மற்றும் 'மௌன வதம்' கவிதைத் தொகுதிகள் கிடைத்தன.

பூமித் தோலில்
அழகுத் தேமல்

பரிதி புணர்ந்து
படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ

இருளின் சிறகைத்
தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி (விடிவு)

என்ற பிரமிளின் கவிதையையே அக்காலக் கட்டத்தில் படிப்பதற்கு அலுப்பாக இருந்தது. எதற்கு இத்தனை படிமம் என நொந்துக்கொண்டேன். எனது ரசனை ஆத்மாநாம், சுகுமாரன், மனுஷ்ய புத்திரன் என வேறொரு பட்டியல் மீது இருந்தது. இந்நிலையில்,

எனது மௌனப் பூட்டுக்களை
திராட்சைப் பழச் சாவிகள்
திறக்கும்போது...
'டிராய்' நகர மரக்குதிரையான
மன வியூகத்தின்
சிந்தனை வீரர்கள்
வெளியே
அமர்க்களமான பாடல்வரிகளாய்
அடியெடுத்து வைக்கின்றனர். (கருந்திராட்சைப் பழங்களும் கனவுகளும் - விழிச் சன்னல்களின் பின்னாலிருந்து)

என்ற இளங்கோவனின் கவிதை வரிகள் என் வாசிப்புக்கு உகந்ததாய் இல்லை. புத்தகத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்த நா. கோவிந்தசாமியின் 'எண்ண அதிர்வுகளை' படித்த போது இதுவே மலேசிய - சிங்கை சூழலில் வெளியிடப்படும் முதல் புதுக்கவிதை தொகுதி என்றும் புரிந்தது. காலக் கட்டத்தைக் கணக்கில் கொண்டு (ஏப்ரல் 1979) வாசித்த போது சில கவிதைகள் முக்கியமானதாகப் பட்டது. ஏறத்தாழ இதே மன நிலையில் 'மௌன வதத்தை' வாசித்த போது ஆச்சரியமாக இருந்தது. சுமார் 5 ஆண்டுகள் இடைவெளியில் (ஜூன் 1984) அவர் கவிதைகள் வேறொரு திக்கில் பயணித்திருந்தது.

வானம் முடிந்த
மேகக் குடுமியை
காற்றுவாள் அரிந்ததும்
மயிர் மயிரென மயிராய்
மண்ணில் சிதறும். (உள் வரவு) என முதல் கவிதையே உஷ்ணத்தோடு வரவேற்றது.

மௌனவதத்தில் இளங்கோவனை அடையாளம் காண முடிந்தது. ஒரு கவியின் கர்வம் அதன் எல்லா புறங்களிலும் விரவி கிடந்தது. ஒரே துள்ளலில் அக்னியாய் மாறி ஆறுதல்களை, அவமானங்களை, துரோகங்களை, இரக்கங்களை பொசுக்கி எரிந்துவிட்டு மீண்டும் மௌனத்திற்கு செல்லும் தீபம் போல பல கவிதைகள்.

'ப்ப்...பூட்டுக்களை
உடைப்பதற்கு நீ யார்?
சாவிகளை நானே
விழுங்கிய பிறகு!' (ஆறுதலோசை)

என்பவர்தான் இளங்கோவன் என அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு கவிதைகளில் அதிரடியாய் கிண்டல். 'டேய் தமிழன்', 'கோமாளி வெடி', 'நீயும் புச்சுக்கவ்வுஞனா?', 'அண்டர்வியூ' என தொடர்ச்சியாய் போகிறது. இந்த எல்லா கிண்டல்களும் மீண்டும் மீண்டும் தமிழ் எழுத்தாளனின் அல்லது தமிழ் கோமாளிகளின் செயல்பாடுகளை சீண்டுவதாகவே உள்ளது.

முதல் வாசிப்பில் கவிதை எனக்கு சிறு அதிர்ச்சியைக் கொடுத்தது உண்மை. கவித்துவத்திற்கான அடையாளங்கள் அதில் குறைந்திருந்தாலும் அவை சதா மனதின் ஏதோ ஒரு பகுதியைச் சீண்டும் தன்மையைக் கொண்டிருந்தன. கவிதை சொல்லப்படும் மொழி எனக்கு புதிதாக இருந்தது. மலேசியா சிங்கப்பூரில் அதுகாறும் நான் வாசிக்காத மொழி. ஆனால் ஒன்றை மட்டும் அவர் கவிதைகளின் வழி உறுதி செய்து கொண்டேன். 'இளங்கோவன் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரானவர் அல்ல.'

* * *

2009-ல் ஷோபா சக்தி மலேசியா வந்த போது ஒரு நிகழ்வைத் தயார் செய்திருந்தேன். ஏறத்தாழ 20 பேர் வருவதற்கு மட்டும் ஏற்பாடு. கோ.முனியாண்டி திடீரென "இளங்கோவன் இந்த நிகழ்விற்கு வருகிறார்" என்றார். எனக்கு அவர் வருகையில் அவ்வளவு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஒரு கலகக்காரனின் தோற்றத்திலேயே காட்டப்பட்டு வந்த அவர் பிம்பம் நிகழ்வில் இடையூறுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற தயக்கம் இருந்தது. அதுவரை நான் இளங்கோவன் பற்றி கேள்விப்பட்டதைக் கோ. முனியாண்டியிடம் கூறினேன். கோ. முனியாண்டி "இளங்கோவனிடம் இருப்பது ஞானம். எனவே செருக்கு இருப்பது இயல்பே. அதன் பெயர் ஞானச்செருக்கு..." என்று கூறி வழக்கமான சிரிப்பை சத்தத்தோடு கொடுத்தார். நான் சிங்கப்பூரில் அவரை சந்திக்க முயன்று முடியாமல் போன கதையைக் கூறினேன். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சந்திப்பதற்கு என்ன தடை? எவ்வளவு பெரிய படைப்பாளியாக இருந்தால் என்ன? என்று கேட்டேன். கோ. முனியாண்டி ஏதோ சொல்ல வந்தார். நான் அறையை விட்டு வெளியேறி விட்டேன்.

நிகழ்வுக்கு இளங்கோவன் வரவில்லை. மறுநாள் ஹோட்டலிலிருந்து என் வீட்டில் மதிய உணவு உண்பதற்கு ஷோபா சக்தி, சீ. முத்துசாமி, கோ. முனியாண்டி, மஹாத்மன் என புறப்பட்ட போது பிரான்ஸிஸ் செல்வனோடு எதிர்க்கொண்டவர் இளங்கோவன் என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்துவிட்டது. கழுத்துவரை மூடிய காலர் இல்லாத அரைக்கை சட்டை. நல்ல உயரம். கம்பீரமான தோற்றம். எல்லா அம்சங்களிலும் வெளிப்படும் நேர்த்தி. கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தார். நிச்சயம் அவர் இளங்கோவன்தான் என உறுதி செய்துகொண்டேன். வழக்கமான அறிமுகத்துக்குப் பின் வீட்டிற்குச் சென்றோம். "நேற்று உறக்கம் இல்லாததால் கண்கள் சிவந்துள்ளன. அதனால்தான் கறுப்பு கண்ணாடி அணிந்துள்ளேன்... ஒன்றும் தவறாக எண்ண வேண்டாம்" என்றார். உணவுக்குப் பின் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம்.

எல்லோரும் பேச்சில் தத்தம் பங்குகளை வகித்துக் கொண்டிருந்தபோது திடீரென இளங்கோவன் காணாமல் போயிருந்தார்.

வீட்டின் வெளியே எட்டிப்பார்த்த போது காலுடைந்து அப்போதுதான் அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு தனியாய் அமர்ந்திருந்த என் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிக்கொண்டிருந்தார். அந்த நிமிடம் எனக்கு இளங்கோவன் மீது இருந்த அத்தனை தடைகளும் உடைபட்டு போனது. நான் இறுக்கத்திலிருந்து இயல்பான நிலைக்கு வந்திருந்தேன். உயிர்த் துயரங்கள் ஒரு படைப்பாளியின் கண்களுக்கு வெகு எளிதில் அகப்பட்டுவிடுகின்றன. இளங்கோவனுக்கு மனிதத்தின் மீது உள்ள நம்பிக்கையும் அதிலிருந்து பீறிட்டு எழும்பும் அவர் படைப்புலகையும் அடையாளம் காண முடிந்தது.

நான் தொடர்ந்து இளங்கோவனிடம் உரையாடுவதில் விருப்பம் காட்டினேன். அன்று இரவு மீண்டும் தங்கும் விடுதியில் பேசிக்கொண்டிருந்தோம். இளங்கோவன் திடீரென "நவீன் உங்களை நான் சிங்கையிலேயே சந்திக்க வேண்டியது. உங்கள் வருகை குறித்து லதா சொன்னவுடன் செல்வராஜாவிடம் பேசிவிட்டு உங்கள் அறை நோக்கி வந்தேன். அப்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டிருந்ததால் கதவை தட்டுவது உங்களுக்கு தடையாக இருக்குமோ என சற்று நேரம் காத்திருந்துவிட்டு சென்றுவிட்டேன்" என்றார். நான் பேந்த பேந்த விழித்தேன். அவரை நான் தவறாகப் புரிந்துகொண்ட அத்தருணம் குறித்து கூறினேன். எல்லாவற்றுக்கும் மென்மையாகச் சிரித்தார். ஷோபா சக்தி மெதுவாக "என்ன நவீன் உங்களுக்கும் இளங்கோவனுக்கும் இடையில் இருந்த புகைமூட்டம் அகன்றுவிட்டதா" என்று கேட்டார். "விட்டது" என்றேன்.

அன்றிரவு இளங்கோவன் பேச பேச அறை முழுதும் ஓர் அதிர்வலை வெளிப்படத் தொடங்கியது. அரசாங்கத்துக்கும் அதன் அதிகாரத்துக்கும் எதிராக தனி ஒரு படைப்பாளியாகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் அவருக்கு நிகழும் கீழறுப்புகளும் புறக்கணிப்புகளும் தடைகளும் அவர் உதடுகளில் வெளிப்படும் மெல்லிய அலட்சிய சிரிப்பில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஏற்கனவே வாசித்திருந்த அவர் கவிதைகளின் சில வரிகள் அவ்வப்போது எதிர்க்கொண்டது...

நாய்வளர்ப்புக் கலைபற்றி
நானொரு நூலெதினால்
ஞாபகத்தில் வைத்துக்கொள்வேன்...
எச்சிலெலும்பைப் போட்டாலேபோதும்
தன்னினத்தின்
முதுகெலும்பையே திருடிவரும்
பொன்னாய் தமிழ்நாய். (வெள்ளையன் குறிப்பேடு)

* * *

அதற்கு பிறகு இளங்கோவனின் ஒரு சில நாடகங்களை பார்க்கவும் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக அவரின் 'தலாக்' நாடகத்தைப் பார்த்த போது அவசரமாக அவரை அழைத்தேன். "ஒரு சம காலத்தில் வாழ்கின்ற மிகப்பெரிய படைப்பாளியோடு பழக வாய்ப்பு கிடைத்துள்ளது எவ்வளவு பெரிய விஷயம்" என்றேன். சிரித்துக்கொண்டே "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நவீன்" என்றார். அதற்கு பின் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவர் கவிதைகள் போலவே நாடகங்களும் மனிதனுள் மறைந்து கிடக்கும் அபத்தமான பிரதிகளையும், வெளிக்காட்டாதப் பகுதிகளையும் மையத்தில் போட்டு உடைத்து அதன் மூலம் 'பாதுகாப்பு வளையம்' என்ற தமிழர்களின் கற்பனையான போலியான ஒரு நிம்மதியை அசைக்கிறது. அவ்வசைவின் மூலம் அவர்கள் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது சில சமயம் கேலிக்குள்ளாக்குகிறது. தொடர்ந்து பார்வையாளர்களை அமைதியிழக்கச் செய்து சிந்திக்கத் தூண்டுகிறது.

மலேசியா வரும்போதெல்லாம் இளங்கோவனுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடந்துகொண்டே இருந்தன. எந்த உரையாடலும் அதிகாலை 2 மணிக்குக் குறைந்ததில்லை. பேசி முடிக்கும் ஒவ்வொரு இரவும் உடல் முழுதும் தீ ஜுவாலைகள் கொழுந்துவிட்டெரியும். ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய அறச்சீற்றமும் சமரசங்கள் அற்றத் தன்மையும் மனதில் விரவி, இறுதியில் பயணிக்க வேண்டிய தனிமை பாதைக்கான தயார் நிலைக்கு மனம் பக்குவப்பட்டிருக்கும்.

அப்படி ஒருதரம் சந்திக்கும் போதுதான் 1988 அவர் வெளியிட்ட 'transcreation' எனும் புத்தகத்தை வழங்கினார். ஏற்கனவே எழுதப்பட்ட சில கவிதைகளோடு புதிய கவிதைகளையும் ஆங்கிலத்தில் மீள்மொழியாக்கம் செய்திருந்தார். மௌனவதத்தில் நான் விரும்பிய சில கவிதைகள் அதில் இணைந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். மொத்தமாக அந்த புத்தகம் வேறொரு பரிணாமத்தில் இருந்தது. 'உயிர்மை' வெளியீடாக வந்திருந்த எனது கவிதை தொகுதியைக் காட்டியதும் அவருக்குச் சட்டென கோபம் வந்தது. "என்ன இது குப்பை மாதிரி போட்டிருக்காங்க" என்றார். மனுஷ்ய புத்திரனுக்கு என் கவிதைகள் குப்பையாகத் தோன்றியிருக்கலாம் என்றுகூறி சிரித்தேன். உண்மையில் மனுஷ்ய புத்திரன் கேட்டதினால்தான் 'உயிர்மை'க்குக் கவிதைகளை வழங்கியிருந்தேன். அது எவ்வகையான அக்கறையும் இல்லாமல் எழுத்துகள் குவிக்கப்பட்டு புத்தகமாய் வந்திருந்தது.

இளங்கோவன் அன்று என் கவிதை தொகுதி பற்றியே பேசிக்கொண்டிருந்தார். உங்களின் ஒரு புதிய கவிதைத் தொகுதியை உடனே வெளியிட வேண்டும் என்றார். அது வெறும் தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் இருக்கவேண்டும் என்ற திட்டத்தை அவர்தான் முதலில் கொடுத்தார். அதன்பின், என் கவிதைகளை அவரே அதனதன் அவசியம் கருதி வரிசை படுத்தி மொழிப்பெயர்த்தார். குறிப்பிட்ட தினத்தில் மொத்தக் கவிதையும் மொழிப்பெயர்த்து கிடைத்தது. எனது முன்னுரையில்கூட அவருக்கு நான் தெரிவித்த நன்றிகளை சுருக்கும்படி கூறிவிட்டார். "இது அன்பினால் உருவானது... நன்றிக்கு இடமில்லை" என்றார். கலை இலக்கிய விழாவில் என் கவிதைத் தொகுதியைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். "இதுதான் உங்கள் கவிதை தொகுதி" என அழுத்தமாகக் கூறினார். என் கவிதை தொகுதி இரு மொழிகள் அடங்கியதாக வெளியீடு கண்டதற்கு இளங்கோவனே முழு காரணம் என்பதை இவ்வேளையில் குறிப்பிட்டுதான் ஆகவேண்டும்.

அதன் பின்னும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடன் பேசிக்கொண்டிருந்த இரவுகள் உண்டு. ஆனால், எத்தனை தீவிரமான பேச்சின் தொடர்ச்சியிலும் இளங்கோவன் மறக்காமல் "பாட்டியின் கால்கள் குணமாகிவிட்டதா?" என்று கேட்பது மட்டும் ஆச்சரியமாக இருக்கும்.

(குறிப்பு: இளங்கோவனின் கவிதை தலைப்பு கட்டுரைக்கு தலைப்பாக்கப்பட்டுள்ளது)

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768