இதழ் 23
நவம்பர் 2010

அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...5
எம். ஜி. சுரேஷ்

 
 
  நேர்காணல்:

“எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.”

இளங்கோவன்



இளங்கோவன் சிறப்பிதழ் பத்திகள்:


அக்னிக் குஞ்சு

சீ. முத்துசாமி

இடம்பெயராத இளங்கோவன் எனும் ஆளுமை!
கோ. முனியாண்டி

நிஷா : காலமும் வெளியும்

இராம. கண்ணபிரான்

FLUSH - வெறுப்பின் குருதி
சு. யுவராஜன்

இளங்கோவன் : தீ முள்

ம. நவீன்

இலக்கிய வானில் ஓர் விடிவெள்ளி
முனைவர் ஸ்ரீலஷ்மி



த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!
யோகி



அஞ்சலி:


ரெ. ச‌ண்முக‌ம் : க‌லையின் குர‌ல்
ம. நவீன்



கட்டுரை:


மலேசியக் கல்விச் சூழலில் தமிழாளுமையின் சரிவும் இழந்தே பழகிய அரைநூற்றாண்டுச் சுரணையும்!
ஏ. தேவராஜன்

அயராது உழைக்கும் ஜப்பானியர்கள்
சந்தியா கிரிதர்



சிறுகதை:


சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
கே. பாலமுருகன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...5
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...11
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



கவிதை:


இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...13

பா. அ. சிவம்

ரெ. பாண்டியன்


ஏ. தேவராஜன்




அறிவிப்பு:

வ‌ல்லின‌ம் ச‌ந்திப்பு 1
     
     
 

மொத்த மேற்கத்தியத் தத்துவ வரலாற்றையும் புரட்டிப் பார்க்கும் போது, சாக்ரட்டீஸ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தத்துவவாதியாகத் தோன்றுகிறார். அவர் தன் வாழ்நாளில் ஒரு வரி கூட எழுதியதில்லை. ஆனால், அவரைப் பற்றி ஆயிரக்கணக்கான பேர் பல்லாயிரக் கணக்கான வரிகள் எழுதி இருக்கிறார்கள் என்பது ஒரு நகை முரண். இந்த விஷயத்தில் சாக்ரட்டீஸை புத்தரோடு ஒப்பிடலாம். புத்தரும் தன் வாழ்நாளில் ஒரு வரி கூட எழுதியதில்லை. வாய்மொழியாக அவர் உபதேசித்ததை அவர் சீடர்கள் எழுதி வைத்தார்கள். சாக்ரட்டீஸின் கருத்துகளை அவரது சீடரான பிளேட்டோ எழுதி வைத்தார். பிளேட்டோவின் எழுத்துகளின் மூலம்தான் நாம் சாக்ரட்டீஸ் என்ற மனிதரைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

சாக்ரட்டீஸின் முக்கியமான கொள்கையே, ஒருவர் தனது கொள்கையை யார் மீதும் திணிக்கக் கூடாது என்பதுதான். ‘மக்களுக்கு எதையும் கற்பிக்கக் கூடாது; நான் பேசுவதை வைத்து அவர்களாக எதையாவது கற்றுக் கொள்ள நேர்ந்தால் அது நல்லதே’ என்றார் சாக்ரட்டீஸ். தனது காலத்தில் நிலவிய பிற்போக்கான கருத்துகளுக்கு எதிராக இயங்கியவர் சாக்ரட்டீஸ். இதனாலேயே பிற்போக்குவாதிகளின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளானார். அவரை இன்றைய பின் நவீனத்துவவாதிகளுடன் ஒப்பிடலாம். கருத்துகளை முன் வைப்பதில் ஜனநாயகத்தன்மை, தனது எதிரிகளைக் கூட அவர்களின் போக்கிலேயே போய்த் தன் வழிக்குக் கொண்டு வருதல் ஆகிய தன்மைகளில் அவரிடம் ஒரு பின் நவீனவாதியின் தன்மை இருந்தது. இதே குணத்தை புத்தரிடமும் காணலாம். இதை ‘உபாய கௌசல்யா’ என்று சொல்வார் புத்தர்.

சாக்ரட்டீஸ் காலத்தில் இருந்த ‘சோஃபிஸ்ட்’கள் எந்தப் பொருளாக இருந்தாலும் பலர் முன் நின்று சொற்பொழிவாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். சாக்ரட்டீஸோ அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அவர் தான் பேசுவதை விட பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்பதை பெரிதாக நினைத்தார். இன்றைக்குப் பின் நவீனத்துவவாதிகள் சொல்லும் உரையாடல் என்ற விஷயத்தை அவர்தான் சாத்தியமாக்கினார்.

ஏதென்ஸ் நகரத்தின் தெருக்களிலும், மக்கள் கூடும் சந்தை போன்ற இடங்களிலும் அவரைப் பார்க்க முடியும். தன் முன்னே எதிர்ப்படும் மக்களிடம் அவர் அப்பாவித்தனமாகக் கேள்விகள் கேட்பார். தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் ஆர்வம் அவரது கேள்விகளில் தொனிக்கும். எதிராளியை பேச்சில் சிக்க வைக்கும் முயற்சி அது. பேச்சு-மறுபேச்சு என்று அந்த நிகழ்ச்சி ஒரு உரையாடலாக மாறும். அந்த உரையாடல் நல்லது, கெட்டது, மனிதன், சமூகம், அரசு என்று பல விஷயங்களை அலசும். உரையாடல் சாக்ரட்டீஸின் அடையாளம். இதனால்தான், சாக்ரட்டீஸின் மாணவரான பிளேட்டோ தான் எழுதிய நூலுக்கு ‘உரையாடல்கள்’ (Dialogues) என்று பெயரிட்டார். அந்த நூலில் தனக்கும் சாக்ரட்டீஸுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள், சாக்ரட்டீஸுக்கும் பிறருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் என்று பல உரையாடல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

‘தத்துவவாதி என்பவன் ஞானத்தை நேசிப்பவன்’ என்பது சாக்ரட்டீஸின் கொள்கை. அவரும் அவ்விதமே இருந்தார். சாக்ரட்டீஸைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கையும், கொள்கையும் ஒன்றாக இருந்தன. அர்த்தமற்ற பேச்சு அவருக்குப் பிடிக்காது. ‘பகுத்தறிவை விடப் புனிதமானது எதுவும் இல்லை; சரியாகச் செயல் புரிய, சரியாகச் சிந்திக்க வேண்டும்’ என்பது அவரது கோட்பாடு. உலகம் எப்படி இயங்குகிறது? இந்தப் பிரபஞ்சம் எப்படிப்பட்டது என்பது போன்ற ஆராய்ச்சிகளில் சாக்ரட்டீஸ் ஈடுபடவில்லை. சமூகம், மனித வாழ்க்கை போன்ற லௌகீக விஷயங்கள் மட்டுமே அவரை ஈர்த்தன. அவர் தனது காலத்திய கடவுள், மதம் போன்ற மூட நம்பிக்கைகளை விமர்சித்தார். அது அவரது காலத்திய பிற்போக்குவாதிகளுக்கு உவப்பானதாக இல்லை. இன்றைக்கும் பழைய குப்பைகளைத் மண்டைக்குள் சுமந்து கொண்டு, பிணமாகி விட்ட மரபை முதுகில் கட்டித் தூக்கிக் கொண்டு அலைந்து திரிந்து, போகும் வழியெல்லாம் நாற்றத்தைப் பரப்பிக் கொண்டு திரியும் பழமைவாதிகள் போல் அன்றைக்கும் மனிதர்கள் இருந்தனர். இன்று இவர்களிடம் பின் நவீனத்துவ வாதிகள் படும் பாட்டை அன்றைக்கு சாக்ரட்டீஸ் பட்டார். நல்ல வேளையாக, நமது காலத்தில் பின் நவீனவாதிகளுக்கு ஹெம்லாக் விஷம் தர வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி.

சாக்ரட்டீஸைப் போலவே புத்தரும் தனது காலத்திய நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கியவர். பூஜை, யாகம் போன்ற விஷயங்களை எள்ளி நகையாடியவர். ஒரு சமயம் ஓர் இடத்தில் யாகம் நடந்து கொண்டிருந்தது. அந்த யாகத்தில் குடம் குடமாக நெய்யை ஊற்றி, தீ வளர்த்து அந்தத் தீயில் விலை உயர்ந்த பொன், வெள்ளி ஆபரணங்கள், பட்டுப் புடவைகள் ஆகியவற்றைப் போட்டனர். ‘ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டார் புத்தர். அதற்கு அவர்கள், ‘இவை எல்லாம் மேல் உலகத்தில் இருக்கும் எங்கள் தாத்தா பாட்டிக்குப் போய்ச் சேரும்’ என்றார்கள். ‘யாகத்தில் போடப்படும் இந்தப் பொருட்கள் யாவும் உங்கள் முன்னோர்களிடம் போய்ச் சேரும் என்றால், நீங்கள் குதித்தால் கூட அவர்களிடம் போய்ச்சேர முடியுமே? ஏன் முயற்சி செய்யக் கூடாது?’ என்று கேட்டு அவர்களைத் திடுக்கிட வைத்தார். இதே ரீதியில் பகுத்தறிவுக் கேள்விகளை சாக்ரட்டீஸ் கேட்டதற்கு ஏதென்ஸ் மரணதண்டனை விதித்தது. புத்தரை இங்குள்ளவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அதற்குக் காரணம் சாக்ரட்டீஸுக்கு அந்த அரசு எதிராக இருந்தது. புத்தருக்கு அன்றைய அரசுகள் சாதகமாக இருந்தன. அவ்வளவுதான்.

சாக்ரட்டீஸுக்குப் பிறகு வருபவர் அவரது மாணவரான பிளேட்டோ. ஏதென்ஸ் நகரத்தில் பிறந்து வளர்ந்த பிளேட்டோ தனியே கல்வி கற்றுப் பின்னர் தனது இருபதாவது வயதில் சாக்ரட்டீஸால் கவரப்பட்டு அவரிடம் வந்து சேர்ந்து கொண்டார். சாக்ரட்டீஸ் யதார்த்தவாதி என்றால் இவரைப் பகுத்தறிவுவாதி எனலாம்.

தனக்கு முந்தைய மூன்று கொள்கைகளை இணைத்தவராக பிளேட்டோவைக் கருதலாம். ‘சரியாகச் செயல் புரிய, சரியாகச் சிந்திக்க வேண்டும்’ என்ற சாக்ரட்டீஸின் கொள்கையையும், நாம் பார்க்கும் பொருட்கள் யாவும், சதா மாறிக் கொண்டே இருக்கின்றன’ என்ற ஹெராக்ளிடஸின் கருத்தையும், பித்தாகோரஸின் ‘உருவம்’ என்ற கோட்பாட்டையும் ஒன்றிணைத்துத் தன் கோட்பாட்டை பிளேட்டோ உருவாக்கினார். ‘மாறிக் கொண்டிருக்கும் பொருட்களைப் பற்றி நாம் அறியும் உண்மையும் மாறிக் கொண்டுதானே இருக்க முடியும்? எனவே, யதார்த்தமான அறிவு என்பது இப்படி சதா மாறிக்கொண்டிருக்கும் உலகையோ அல்லது அதில் உள்ள பொருட்களைப் பற்றியோ இருக்க முடியாது. அதைக் கடந்ததாக, என்றும் மாறாமல் நிலையானதாக மட்டுமே இருக்க முடியும். நிலையானவை நமது புலன்களுக்கு எட்டாதவை’ என்பது பிளேட்டோவின் கருத்தியல்.

புலன்களால் பெறப்படும் அறிவை பிளேட்டோ பொருட்படுத்தவில்லை. அத்தகைய புலனறிவு பொருட்களின் யதார்த்த நிலையைத் தெரிவிப்பதில்லை. அது நமக்கு ஒரு பொருளின் வெளித்தோற்றத்தை மட்டுமே தெரிவிக்கிறது. எனவே, அந்த யதார்த்தம் போலி யதார்த்தம் என்பது பிளேட்டோவின் அனுமானம்.

தவிரவும், அறிவு இரு வகைப்படும். மனத்தில் சிதறிக் கிடப்பது அறிவு. அந்த அறிவைத் தொகுக்கும் போது, ‘பொதுவான அறிவு’ மற்றும் ‘சிறப்பான அறிவு’ என்ற இரு வகையாக மாறுகிறது. இந்தப் பாகுபாடு இந்திய ‘நியாய’ மற்றும் ‘வைசேஷிக’ தத்துவ இயலில் இருக்கின்றன. ‘யதார்த்தமும் விஞ்ஞானமும் இணைந்ததே அறிவாகும்’ என்று அறிவைப் பற்றிக் கூறும் பிளேட்டோ, எண்ணம் என்பது பற்றிப் பேசும் போது, ‘எண்ணம் என்பது மாற்றமில்லாதது; நிலையானது. எனவே, உண்மையான அறிவைப் பெற வேண்டுமானால் நாம் மாறும் பொருட்களின் மாறாத சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

அதாவது ஒரு குதிரையை ஒரு பொருள் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குதிரையை நாம் கையால் தொடுகிறோம். புலன்களால் உணர்கிறோம். அந்தக் குதிரைக்கு முன்னால் லட்சக்கணக்கான குதிரைகள் இருந்தன. அதற்குப் பின்னாலும் எதிர்காலத்தில் லட்சக்கணக்கான குதிரைகள் வந்து கொண்டே இருக்கும். எத்தனை குதிரைகள் வந்தாலும், ‘குதிரைத்தன்மை’ மாறாமல் இருந்து கொண்டே இருக்கும். இதில் குதிரை என்பது மாறுவது. குதிரைத்தன்மை என்பது மாறாதது. குதிரை இனமே அழிந்து விட்டாலும், குதிரைத்தன்மை மாறாமல் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கருத்தை மறு வாசிப்பு செய்து பார்க்க முடியும்.

பிளேட்டோ சொல்லும் இந்தக் கருத்தில் ஒரு அபாயம் இருக்கிறது. பிளேட்டோ வாழ்ந்த காலம் அடிமைச் சமூகம் நிலவிய காலம். அந்தக் காலத்தில் ஆண்டான்களுக்கும் அடிமைகளுக்கும் இடையே சிடுக்கு முடிச்சுகள் இருந்தன. பிளேட்டோ சொல்லும் ‘குதிரைத்தன்மை’ என்ற கருத்தை ‘ஆண்டான் தன்மை’ ‘அடிமைத் தன்மை’ என்றும் நீட்டிப் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும் போது அந்த இரண்டு தன்மைகளுமே நிரந்தரமாக மாறாமல் இருந்து கொண்டே இருக்கும் என்ற கருத்தை அடையலாம். இது நமது இந்திய மரபில் இருந்து வரும் வருணாசிரமக் கொள்கையோடு ஒத்துப் போவதையும் கவனிக்கலாம். குதிரைத் தன்மையைப் போலவே பிரம்மத்தன்மை, சத்திரியத்தன்மை, வைசியத்தன்மை, சூத்திரத்தன்மை போன்ற தன்மைகள் நிரந்தரமானவ என்று இந்து மதம் சொல்லவில்லையா?

பிளேட்டோ இரு உலகங்கள் பற்றியும் பேசுகிறார். ஒன்று அக உலகம். இன்னொன்று புற உலகம். இவ்விரண்டில் அக உலகமே யதார்த்தமானது. அதுவே நம்பத்தக்கது என்கிறார். இதுவும் நமது வேத கால ரிஷிகளின் கருத்தியலோடு ஒத்துப் போகிறது. அவர்களும் லௌகீக வாழ்க்கையைத் துறந்து, அகத்தைத் தோண்டி தவம் செய்வதையே பெரிதாகக கருதினார்கள் அல்லவா?

சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டதில் பிளேட்டோ மிகவும் வருத்தத்தில் இருந்தார். அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்த தனது சமூகம், அரசு ஆகியவற்றின் மேல் கோபம் கொண்டிருந்தார். இத்தகைய தவறுகள் நிகழாமல் இருக்க வேண்டுமானால், அரசு அதிகாரம் தத்துவாதிகளின் கைகளில் இருக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே, தத்துவவாதிகளை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் விளைவாக ஒரு அகடமியை உருவாக்கினார். அந்த அகடமியில் நிறைய மாணவர்கள் சேர்ந்து படித்தனர். அந்த மாணவர்களில் ஒருவர்தான் பின்னாளில் அலெக்ஸாண்டரின் குருவாக மிளிர்ந்த அரிஸ்ட்டாட்டில்.

‘ஏதென்ஸில் நிலவும் ஜனநாயகம் அநீதிக்கு ஆதரவான ஜனநாயகம். இந்த ஜனநாயகத்துக்கு மாற்றாக ஒரு புதிய ஜனநாயகம் உருவாக்கப்பட வேண்டும். உண்மையான தத்துவ அறிஞர்கள் கைக்கு அரசியல் அதிகாரம் வரும் போதுதான் அது சாத்தியப்படும்’ என்றார் பிளேட்டோ. பிளேட்டோவைப் பொறுத்த வரை ஒரு கொள்கையாக மட்டுமே இருந்த அந்தக் கனவை ஒரு மனிதர் நனவாக்க முயன்றார். அவர்தான் அரிஸ்டாட்டில். தனது மாணவன் அலெக்ஸாண்டரை பேரரசனாக உருவாக்கி அவன் மூலம் ஒரு உலகளாவிய ஜனநாயக அரசைக் கட்டமைக்க வேண்டும் என்பது அவரது வேலைத்திட்டமாக இருந்தது.

(தொடரும்)

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768