இதழ் 23
நவம்பர் 2010

இலக்கிய வானில் ஓர் விடிவெள்ளி
முனைவர் ஸ்ரீலஷ்மி

 
 
  நேர்காணல்:

“எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.”

இளங்கோவன்



இளங்கோவன் சிறப்பிதழ் பத்திகள்:


அக்னிக் குஞ்சு

சீ. முத்துசாமி

இடம்பெயராத இளங்கோவன் எனும் ஆளுமை!
கோ. முனியாண்டி

நிஷா : காலமும் வெளியும்

இராம. கண்ணபிரான்

FLUSH - வெறுப்பின் குருதி
சு. யுவராஜன்

இளங்கோவன் : தீ முள்

ம. நவீன்

இலக்கிய வானில் ஓர் விடிவெள்ளி
முனைவர் ஸ்ரீலஷ்மி



த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!
யோகி



அஞ்சலி:


ரெ. ச‌ண்முக‌ம் : க‌லையின் குர‌ல்
ம. நவீன்



கட்டுரை:


மலேசியக் கல்விச் சூழலில் தமிழாளுமையின் சரிவும் இழந்தே பழகிய அரைநூற்றாண்டுச் சுரணையும்!
ஏ. தேவராஜன்

அயராது உழைக்கும் ஜப்பானியர்கள்
சந்தியா கிரிதர்



சிறுகதை:


சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
கே. பாலமுருகன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...5
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...11
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



கவிதை:


இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...13

பா. அ. சிவம்

ரெ. பாண்டியன்


ஏ. தேவராஜன்




அறிவிப்பு:

வ‌ல்லின‌ம் ச‌ந்திப்பு 1
     
     
 

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை வாய்ந்த பன்முகப்படைப்பாற்றல் மிக்கவர் இளங்கோவன். திறமான புலமை கொண்டவர், திறம்பாத நெஞ்சம் கொண்டவர்; தீட்சண்யமான பார்வை உடையவர்; அபாரத்துணிச்சல் வாய்ந்தவர். சமரசங்களுக்கு உடன்படாதவர். உரத்த சிந்தனைகளை வீரியம் வாய்ந்த படைப்புகள் மூலம் வெளிப்படுத்துபவர்; எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தும் படைப்பு உலகில் தடம் பதித்த பன்முக ஆளுமை. தற்போது தமிழ் இலக்கியத்தைத் தலைமுழுகிவிட்டாலும் கூடச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவருக்கெனச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு. இளங்கோவனின் படைப்பு முயற்சிகள் பலவிதத் தடைகளை எதிர் கொண்டாலும் அவரது படைப்புகள் புதுமைத்தாகமுடைய இலக்கிய ஆர்வலர்களின் (தமிழ்க்குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் பரிணாமக்கொள்கைக்குத் தமிழ்ச் சாயம் பூசி மகிழும் உளுத்துப்போன பழம்பெருச்சாளிகள் அல்லர்) கவனத்தை ஈர்க்காமல் இல்லை. புனைகதை, கவிதை, நாடகம் எனப் பலவகை இலக்கியங்களைப் படைக்கும் இவர் ஆழ்ந்தகன்ற படிப்பறிவு உடையவர். சர்வதேச இலக்கியப் பரிச்சயம் நன்கு உடையவர்; ஆகவே இவரது சிந்தனைத்திறனின் வீச்சு கதிர்வீச்சுப் போன்று ஆற்றல் மிக்கது. நாடக இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தம் இயக்கத்தின் மூலம் கொடுத்துவரும் இளங்கோவனை ‘அக்கினிக்கூத்தின்' நாடக இயக்குநராக மட்டுமின்றி நாடகக்கலை நிபுணராகவே உலகம் நன்கறியும். ‘படைப்புப் பல' படைத்துவரும் இப்படைப்பிலக்கியவாதி மற்றவர்களின் படைப்புக்களைத் தமிழாக்கமும் செய்துவருகிறார். மேலும் இவர் சிறந்த ஆய்வாளர். இப்படி அபாரமான ஆற்றல்கள் பல கொண்ட இலக்கிய ஆளுமையின் கவிதைப் படைப்புக்களைப் (கவிதை நூல்கள்) பற்றியது இக்கட்டுரை.

மாணவப் பருவத்திலேயே கவிதை எழுதும் ஈடுபாடு கொண்டு சுயமாக யாப்பிலக்கணம் கற்றுத் தேர்ந்து மரபுக்கவிதைகள் எழுதியவர் இளங்கோவன். இவருடைய ஆரம்பகாலக் கவிதைகள் தமிழ்மலர் போன்ற நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. இவருடைய கவிதைப்பயணம் அல்லது கவிதைப்பிரவேசம் பல மரபுக்கவிஞர்களுக்கு அதிர்ச்சியையே தந்தது. ‘ஒரு வாய்பாட்டை' உருவாக்கிக் கொண்டு அதன் அடிப்படையிலேயே கவிதைத்தொகுப்புக்களை வெளியிட்ட மரபுக்கவிதைச் சூழலில்தான் இளங்கோவனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘விழிச்சன்னல்களின் பின்னால் இருந்து' என்னும் புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1979 இல் வெளிவந்த இந்நூல் சிங்கப்பூரில் ‘புதுக்கவிதை முன்னோடி' என்னும் தனித்துவ அடையாளத்தை இளங்கோவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. தனது இருபத்தோராம் வயதில் இத்தொகுப்பை வெளியிட்டார் இளங்கோவன்.

காலத்துக்குக் காலம் வாழ்க்கை முறை மாறும்போது சிந்தனையின் அடிப்படையில் பிறக்கும் கலை வடிவங்களும் மாறுவதும் இயற்கையன்றோ? இவ்வடிப்படையில் நாம் சிந்தித்துப் பார்த்தால் இளங்கோவனின் புதுக்கவிதைத் தொகுப்பு காலமாற்றம், சிந்தனைமாற்றம் போன்றவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இத்தொகுப்பில் இளங்கோவன் தன் இயல்பு தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப வடிவச்சோதனை செய்துள்ளார். இவரது புதுக்கவிதை ‘யாப்புடைத்த கவிதையாய், அணையுடைத்த காவிரியாய் முகிலுடைத்த மாமழையாய்ப்' பிரவாகம் எடுக்கிறது.

புதுக்கவிதையின் உயிராகவும் உடலாகவும் இயங்கும் படிமம் என்னும் உத்தி நிறையக் கவிதைகளில் (ஒரு சில தவிர) பெரும்பாலானவற்றில் இடம் பெறுவது இத்தொகுப்பின் பிரதானச் சிறப்பு அம்சம் என்று கூறுவதில் தவறிருக்க முடியாது. நூலின் உள்ளே நுழையுமுன் நூலை அர்ப்பணிக்கும் வேளையில் கூடப் படிமத்தைக் கையாள்கிறார்.

'கனவுக் கரிபிடித்த
இதய வீட்டை
வெள்ளையடிக்க வந்து
கொள்ளையடித்துச்
சென்றவளின் நினைவாக'

என்னும் பகுதி புதுமையான முறையில் வாசகர்களுக்கு அறிமுகமாகிறது.

‘ஓர் இலக்கிய முகமன்' என்னும் முதற்கவிதை படிமக்காட்சியாய் அமைந்து கவிஞனையும், அவனது கவித்துவத்தையும் அடையாளம் காட்டுகிறது.

“நான்
மொழி அடுப்பை மட்டும்
மூட்டி வைத்துக் கொண்டும்
தேச வரைபடத்தில்
வார்த்தைக் கோடிட்டும்
கவிதைத் தளத்தில்
காலூன்ற நினைக்கும்
நொண்டியல்ல'

எனத் தொடரும் படிமக்காட்சியில் இளங்கோவன் என்னும் கவிஞர் மரபறிந்த மரபுமீறிய கவிஞராக அடையாளம் பெறுகிறார்.

தமிழகத்துப் படிமக்கவிஞர்களுள் அபி, அப்துல் ரகுமான் ஆகியோரைச் சிறப்புடையோராக அடையாளம் காட்டுவது போல் மலேசிய, சிங்கப்பூர்க் கவிஞர்களுள் தலைசிறந்த படிமக் கவிஞராக இளங்கோவனைத் துணிந்து கூறலாம். படிமத்தின் பல்வேறு வகைகளையும் இளங்கோவன் இத்தொகுப்பில் கையாண்டுள்ளார். தனிப்படிமம், தொடர் அல்லது அடுக்குப் படிமம், கொள்கை முழக்கப்படிமம் (ஓர் இலக்கியமுகமன்), அங்கதப் படிமம், தொன்மவியற்படிமம், மிகை நவிற்சிப்படிமம், முரண்பொருட்படிமம் எனப் படிமங்கள் பலதிறத்தன. கற்பனையும் சிந்தனையும் கைகோர்த்துச் செல்லும் அழகைப் படிமக்கவிதைகள் தரும். மேலும் இக்கவிதைகள் அறிவு, உணர்வு,உணர்ச்சி (intellectual, sensuous, emotional) ஆகிய மூன்று தளங்களிலும் வாசகனை மாற்றுகின்றன வாசக மனங்களில் விளைவுகளை உண்டாக்குகின்றன. ‘விளக்குகள் எரிவது யாருக்காக' என்னும் ஒரு நீண்ட கவிதை ஏழு பகுதிகளைக் கொண்டதாய் அமைகிறது. இதன் பாடுபொருள் நட்பு, காதல், உறவு எனப்பலவாய் விரிகிறது. பல விளக்குகள் பல நோக்கங்களுடன் பலருக்காக எரிவதை ஒரு புதுக்கவிதைக் காவியமாய் வடித்திருக்கிறார்.

குகன்- இராமன்; குசேலன்- கிருஷ்ணன்; மெடூஸா, மன்மதன், முருகன், கார்த்திகைப் பெண்டிர் எனப் பல புராண மாந்தர்களைப் படிமக் காட்சியாக்கும் தொன்மவியற்படிமம், மரணத்தை ‘காராங்கோணி'யாகக் காணும் நிகழ்ச்சிப்படிமம், 'மரணம்-சில வரிகள்' 'நிம்மதி' போன்ற கவிதைகளில் தத்துவப்படிமம் 'சிதறியபோதைக் கண்ணாடியில்' 'ஒரு வானவில் போலே' 'ஆஹ் அமாவாசையின் அறுவடைகளே' 'தேவை என்ன இந்தச் சமுதாயச் சந்தையில்?', 'சமூக சேவகன்', 'அரைப்பறவைகள்' , 'ஆலயக்காலண்டரில் அதர்மத் தேதிகள்', 'ஏண்ணா மவனைப் பாத்தியாண்ணா?', 'முகங்களைத் துறந்த உயர்திணைகள்', 'இது போல் நாமும் கிருஷ்ணாவதாரங்களே', 'பொழுது போக்கலாம் வாரீயா?' ஆகிய கவிதைகள் பல்வேறு வகையான சமுக அவலங்களைக் காட்டும் அங்கதப் படிமமாக அமைகின்றன. இக்கவிதைகள் காட்டும் சமூகப் பிரச்னைகளின் வீரீயத்தை மரபுக்கவிதைகள் தாங்கமாட்டா என்பதனால் புதுக்கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார் கவிஞர். இஃது அவருடைய சுதந்திரம். இந்தச் சுதந்திரத்தை இலக்கணம் தடை செய்யவில்லை. எனவே இலக்கணம் மீறிய கவிதையாக மலர்ந்தது. மேலும் சிங்கப்பூர்த்தமிழனுடைய வாழ்வின் நிதர்சன உண்மைகளை இக்கவிதைகள் முன்வைக்கின்றன. மரபுக்கவிஞர்களின் பார்வைக்குத் தப்பிய அல்லது அக்கவிஞர்கள் காணவோ, காட்டவோ விரும்பாத பல பிரச்சினைகளை-யதார்த்தங்களை இக்கவிதைகள் நுட்பமான பார்வையினால் தரிசனப்படுத்துகின்றன. மரபுக்கவிஞர்கள் தமிழ்ச் சமூகத்தை முகஸ்துதியாகவே பாட, இளங்கோவனோ வெகுண்டு எழுந்து 'எனக்கொரு நெற்றிக்கண் இருந்தால்' என்ன செய்வேன் என்பதாகத் தமது தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துகிறார். அவர் சமூகத்தை நிந்தாஸ்துதி பாடவில்லை, சமூக அவலங்களைத் தோலுரித்து அம்பலப்படுத்துகிறார்.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பல சமூக விமர்சனங்கள். பொய்ம்முகங்களின் முகத்திரைகளை இளங்கோவனின் படிமங்கள் அப்படியே நம் கண்முன் நிறுத்துகின்றன. நம்முள்ளும் தார்மீகக் கோபம் தலையெடுக்கிறது. ஆகவே இளங்கோவன் கையாளும் சொற் பிரயோகங்கள் தாமாகக் கவிதைக்குள் விழுவன போல நம் மனத்துள்ளும் விழுகின்றன. ஆனால் இளங்கோவனின் சொற்பிரயோகங்களைக் குறை கூறும் பலரும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். இவர்கள் அறியாமையால் கூறும் குறைகளை எண்ணிப்பார்க்கும் போது,

வாய்களே
எந்த இலக்கணப்புலவனும் சட்டம் இயற்ற முடியாத
புதிய மொழியை மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான்

எனக் கூறிய ஒரு பிரெஞ்சுக் கவிஞனின் கூற்றே நினைவுக்கு வருகிறது. பேச்சுத்தமிழ்ச் சொற்கள், மலாய்ச்சொற்கள், சீன மற்றும் ஆங்கிலச் சொற்கள் சிங்கப்பூர்த் தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஊடாடுபவை. தமிழர் வாழ்வைப் பிரதிபலிப்பவையாய் அவை கனவீச்சுடன் கவிதையில் இடம்பெறுகின்றன. இச்சொற்பிரயோகங்கள் நடப்பியல் வாழ்வை அசலாக்குகின்றன.

தமிழகத்தில் கட்டிலப்படிமம் என்னும் பெயரில் சர்க்கஸ் வித்தை போல எழுத்துகளை வேறுபாட்டுடன் எழுதினர். உதாரணமாக

கி
யு
வி
லே
ஒரே கூட்டம்

என்னும் கவிதையைக் கூறலாம். இதனைப் போல இளங்கோவனும் 'பார்வை' என்னும் கவிதையில்

தி
க்
கெ
ங்
கு
ம்
தி சூ மா
ரி ல ய்

என்று எழுதுவதைப் பார்க்கலாம். இதனை வடிவச்சோதனை செய்து பார்த்துள்ளார் என்று கொள்ளலாம்.

‘மனித உரிமை' என்னும் தலைப்பிலும், ‘காதல்', ‘அவதி' போன்ற கவிதைகளையும் ‘ஹைகூ' பாணிக் கவிதைகளை மனத்துட்கொண்டு எழுதியிருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது இதனைப் போல ‘ஒற்றுமை' என்னும் கவிதையில், கூட்டல் குறியைப் பயன்படுத்துவது (போடுவதும் + சேர்வதும்) புதுமையாக உள்ளது. இவ்வாறான போக்கும் தமிழகத்தில் நிலவியது தான்.

‘விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து' என்னும் கவிதைத் தொகுப்பின் வழியே இளங்கோவன் என்னும் கவியாளுமையின் மேதைமை புலனாகிறது.

மௌனவதம்

மௌனவதம் என்னும் தொகுப்பு 1984 இல் அகரம் (சிவகங்கை, தமிழ்நாடு) வெளியீடாக வந்தது. இந்நூலும் முந்தைய கவிதைத்தொகுப்பைப் போல வீரியம் மிக்க தொகுப்பாக வெளிவந்தது. முன்னர்க் குறிப்பிட்டபடி கவிஞனின் வாழ்நிலை, சூழ்நிலை ஆகியவை அவனது சிந்தனைக்குக் காரணமாகின்றன. எனவே வாழக்கையின் பிழிவாகவும், அதன் எதிர்விளைவாகவும், வாழ்க்கையின் திறனாய்வாகவும் கவிதைகள் அமைவதில் வியப்பொன்றும் இல்லை. இந்த அடிப்படையில் சிங்கப்பூர்த்தமிழ் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக விளங்கும் பெரும்பாலான கவிதைகளைப் புரிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் பக்குவப்படாத சிலர் இந்நூலை நூலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டும் என முயன்று வெற்றியும் பெற்றனர். ஆனால் உண்மை நிரந்தரமானது, அழிவதில்லை என்பதனால் மீண்டும் அந்நூல் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. கவிஞனின் உணர்வு நிலைக்கேற்பச் சொற்கள் கவிதைகளில் தாமே வந்து விழுகின்றன என்பதால் ‘மௌனவதம்’ கவிதைத்தொகுப்பில் இடக்கரடக்கரச் சொற்கள் இடம்பெறுகின்றன. பொதுவாக இளங்கோவன் நாடகங்களில் கூட இடக்கரடக்கரச் சொற்கள் இடம்பெறுவது தவிர்க்க இயலாத ஒன்றுதான். இவற்றை இளங்கோவன் வலிந்து புகுத்துவதில்லை. கதையமைப்பு, பாத்திரப்பண்பு ஆகியவற்றுக்கு ஏற்பவே அவற்றைப் பயன்படுத்துவார். அதிலும் குறிப்பாகப் பிறமொழி பேசும் நாடக ஆர்வலர்களுக்கு இடக்கரடக்கரச் சொற்கள் சர்வசாதரணமானவை. ஆனால் தமிழ்க் கலாச்சாரச் சூழலில் இன்னும் இவற்றைத் தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கும்போக்கு நிலவுகிறது. தமிழக எழுத்துக்களில் இடக்கரடக்கரச் சொற்கள் கதையமைப்பு, பாத்திரத்தின் குணாதிசயங்கள், கதை நிகழும் சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் கையாளப்படுகின்றன. வீரியம் மிக்க சொற்கள் என்று இவற்றை அணுகினால் இவற்றை இடக்கரடக்கரச் சொற்கள் என்று கருதத் தேவையில்லை. இவ்வாறே இளங்கோவன் என்னும் கவிஞனின் தார்மீகமான கோபத்தை வெளிக்காட்டுவனவாக இச்சொற்களை ஏன் கொள்ளக்கூடாது? “டேய் தமிழன்”, “வெள்ளையன் குறிப்பேடு”, “சீனச் சிங்க நடனம்”, “அன்டர் வியூ”, “நீயும் புச்சுக்கவ்வுஞனா” (நீயும் புதுக்கவிஞனா), “ஹச்ச்” போன்ற கவிதைகளில் காட்டப்பட்டுள்ள தமிழ்ச்சமூக நிலை இன்றளவும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

தமிழ்ச் சமூகத்தில் சமயத்தின் பெயராலும், கோவிலின் பின்னணியிலும் பணத்தைக் கையாடும் சமூகவிரோதிகளை,

“சாமிக்கு சேர்த்த பணம்
தமிழ்நாட்டு நிலத்தினிலே
ஆசாமிக்கு மாளிகையாய்
நீச்சல்குளமாய் நிலபுலனாய்
நீள்வதைச் சொன்னால்
போங்கடா போக்கத்த பசங்களா”

என அடையாளம் காட்டுகிறார் இளங்கோவன்.

மரபுக்கவிஞர்களைக் கேலி செய்யும் கவிதை வரிகள் கீழ்வருமாறு,

“எங்க மரபுக் கவுஞரு
எஃகுத் தலையரைப் பார்த்து
கவுதை புடிக்கோணும்னேன்
காரிகை கற்றுக் கவிபாடுவதிலும்
‘சாரியை’க் கட்டும் பதியாவது மேல்னு
சொல்லிப் புட்டாரு……………………
……………………………………….
மரபுன்னா என்னாங்கோ
இலக்கணந்தான………?
புதுமைன்னா என்னாங்கோ
வாக்கியம் மடிச்சு போடுறது தான
கற்பனை, சிந்தனை, கவித்துவமுன்னு
பிரிச்சுப் பார்த்தா பயமாயிருக்கு”

என மரபுக்கவிஞர்க்கும் புதுக்கவிஞர்க்கும் இடையே ஏற்பட்ட பூசல்களை (எண்பதுகளில் நிலவிய இப்பபூசல் இன்றும் ஓயவில்லை) இக்கவிதையில் எள்ளற்சுவையோடு பதிவு செய்துள்ளார் இளங்கோவன்.

“மௌனவதங்கள்”, “கதவைத்திறப்பதா? கனவில் மிதப்பதா”, “எங்கிருந்து இன்றாய் நீ”, “சதுரங்கராஜ்யம்” போன்ற பல கவிதைகள் இளங்கோவனின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுவன.

தொன்மங்கள், படிமங்கள், குறியீடுகள் போன்றவற்றை இத்தொகுப்பில் சிறப்பாகக் காணமுடியும். “மனோயாத்ரீகன்” என்னும் கவிதை கட்புலப் படிமம் கொண்ட கவிதை. ‘அன்டர்வியு’ உரையாடல் பாணியில் அமைந்த கவிதை. இதில் கிண்டலும் கேலியும் கவிதை முழுவதும் எதிரொலிக்கின்றன. தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், தமிழ்ப்பத்திரிகை என இளங்கோவனின் எள்ளல் ‘மௌனவதம்’ தொகுப்பு முழுமையும் வியாபித்துள்ளது. சிங்கப்பூரின் வாழ்க்கையையும், இங்குள்ள பிரச்சினைகளையும் கிண்டலாகக் காட்டியுள்ள தொகுப்பு மௌனவதம் என்பதில் ஐயமென்ன?

இளங்கோவனின் இருமொழிப்படைப்பில் முன்னர்க் கூறப்பட்ட இரு தொகுப்புக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளும், வெவ்வேறு தொகுப்புக்களில் (பன்மொழித்தொகுப்பு) இடம் பெற்ற சில கவிதைகளும் ஆங்கில மொழியாக்கத்துடன் வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பில் வல்லுநரான இளங்கோவனின் மொழியாக்கப் புலமைக்கு இந்நூல் (Transcreations) ஒரு கட்டளைக்கல்.

மேற்கூறப்பட்ட மூன்று கவிதைத் தொகுப்புகளும் இளங்கோவனின் பன்முக ஆளுமையையும், அவருடைய நுட்பமான சிந்தனையாற்றலையும், இதற்கு அடிப்படையான கூர்மையான நோக்கையும் காட்டுவன. இக்கவிஞர் முற்றிலும் தமிழ்த் தளத்தில் இயங்காமல் ஒதுங்கிப்போனது தமிழர்க்குத் தனிப்பெரும் இழப்பு. என்றாலும் அனைத்துலக அளவில் ஒரு தமிழனாகத் தனித்துவங்களை இழக்காமல், சமரசங்களுக்கு இரையாகாமல் இருப்பது பாராட்டப்படவேண்டிய செய்தியாகும். இவருடைய இலக்கியப்புலமையும், கலைப் புலமையும் இவரைத் ‘துருவநட்சத்திரமாக’ ஒளிரச்செய்யும் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768