இதழ் 9
செப்டம்பர் 2009
  பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன்
 
     
  பத்தி:

சை. பீர் என்ற......

யுவ‌ராஜ‌ன்

சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன்


நிறைய‌ க‌ண்க‌ளுட‌ன் ஒருவ‌ன்...
வீ.அ. ம‌ணிமொழி

பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன் 

வசூல்
சீ. முத்துசாமி 


கட்டுரை:

HOW TO FIGHT BACK
சேனன்

ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்

உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!
விக்னேஷ்வரன் அடைக்கலம்


சிறுகதை:

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
முனிஸ்வரன்


தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...2
"மலேசியத் தரகர்கள்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...2
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...2
இளைய அப்துல்லாஹ்


லும்ப‌ன் ப‌க்க‌ம்:

ஏய் ட‌ண்ட‌ன‌க்கா... ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா


கவிதை:

தர்மினி


சந்துரு

லதா

தினேசுவரி

யோகி


தோழி

ரேணுகா

இளங்கோவன்
 
     
     
 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. சோம்பேறித்தனம் எப்போதும் போல வென்றுவிட்டது. பொதுவாக அகடெமி விருது பெறும் படங்கள் என்னை அதிகமாக கவர்வதில்லை. அமெரிக்க கலைப் படங்களாக முன் வைக்கப்பட்டாலும் ஹாலிவூட்டின் மிகை வெளிச்சம் நெருடலாகவே இருக்கும்.

தம்பி காளிதாஸ் தேடி குவித்த உலகத் திரைப்படங்களின் குவியலில் ‘பியானிஸ்ட்’ டிவிடியும் இருந்தது. இப்படத்தின் இயக்குனர் ரோமான் போலான்ஸ்கி விருது வாங்கும் விழாவிற்கு வரவில்லை. சிறுவனோடு பாலியல் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டின் காரணமாக ஐரோப்பாவில் இருந்தார்.

இப்படத்தை காண்பதற்கான இன்னொரு மனத்தடையைப் பிறகு சொல்கிறேன். இரண்டாம் உலகப் போர், ஜெர்மனியர் போலந்தைக் கைப்பற்றுவதிலிருந்து தொடங்குகிற படம் விலாடிஸ்லாவ் ஸ்பில்மன் என்ற பியானோ கலைஞனின் நினைவலைகளைப் பின்பற்றி தொடர்கிறது. நாஜிக்கள் யூதர்கள் மீது திட்டமிட்டு நடத்திய களையெடுப்புகளை மிக அடங்கிய தொனியில் சொல்லி நகர்கிறது படம். உணவைத் திருடிக் கொண்டு யூதர் பகுதிக்கு சந்து வழியாக தப்ப முயலும் யூத சிறுவன் பாதி நுழைவிலேயே ஜெர்மன் ராணுவத்திடம் அடி வாங்கி கதறுகிறான். ஸ்பில்மன் அவனை யூத பகுதிக்கு இழுக்கும்போது பிணமாக விழுகிறான். கடுமையான வேலைக்குப் பிறகு, தங்கள் பகுதிக்கு மெதுவாக திரும்பி கொண்டிருக்கும் யூதர்கள் ராணுவ உயரதிகாரியால் நிறுத்தப்படுகிறார்கள். வயதானவர்களை வரிசையாக நெடுஞ்சாண்கிடையாக படுக்கச் சொல்கிறான். படுத்தவர்களின் தலையைத் தோட்டா பதம் பார்க்கிறது. மீந்தவர்கள் அமைதியாக நடந்து செல்கின்றனர்.

இந்தச் சூழலில் ஸ்பில்மனை காப்பது அவர் இசைதான். அவர் குடும்பமே இரயிலிலேற்றி சென்று கொல்லப்படும்போது, அவரை மட்டும் காப்பாற்றுகின்றனர் ஜெர்மனியர்களிடம் வேலைச் செய்யும் யூத போலீசார்கள். அவர் பதுங்கி வாழ இருப்பிடமும் உணவும் தருகின்றனர் அவருடைய போலந்து நண்பர்கள். அவர் மறைந்து வாழும் இடமும் ராணுவத்தால் குண்டு வீசி அழிக்கப்படுகிறது. பசியிலும் குளிரிலும் நடுங்க, கைவிடப்பட்ட மருத்துவமனையில் உணவு தேடி அலைகிறார். ஒரு உணவடைக்கப்பட்ட டின்னைத் திறந்துக் கொண்டிருக்கும்போது ஜெர்மன் உயரதிகாரியிடம் சிக்கிக் கொள்கிறார். அதிகாரி யாரென்று கேட்கும்போது தட்டு தடுமாறி ‘பியானோ கலைஞன்’ என்கிறார். அதிகாரி அவரை பியானோ வாசிக்கச் சொல்கிறான். விரல்கள் நடுநடுங்க அபாரமாக வாசிக்க தொடங்குகிறார் ஸ்பில்மன். நெடுநாட்களாக பியானோ வாசிக்காததால் தன்னிச்சையாய் தந்தியடிக்கும் ஸ்பில்மனின் விரல்கள் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மனதைத் தொடுபவை. இசையை நேசத்தின் குறியீடாக வைத்துக் கொள்வோமென்றால் தன்னிச்சையாய் தந்தியடிக்கும் விரல்களைப் போல வன்முறை மூடுண்ட மனங்களிலும் நேசம் இழையாய்த் துடிக்கும்.

இயக்குநர் வன்முறை நிறைந்த காட்சிகளைத் தூரக் காட்சிகளாகவே எடுத்திருக்கிறார். வயதான யூதரைச் சக்கர நாற்காலியுடனேயே மூன்றாவது மாடியிலிருந்து கீழே போடுவது, மண்டியிட்ட நிலையிலேயே சாலையில் இறந்து கிடக்கும் பெண், டேங்கர் மூலம் மருத்துவமனையை நிர்மூலமாக்கும் காட்சி போன்ற இவையெல்லாம் உதாரணங்கள். விரல்கள் காற்றில் தந்தியடிக்கும் காட்சிகள் மூன்று முறை அண்மை காட்சியாகவே காட்டப்படுகிறது. ஸ்பில்மனின் உயிரைக் காப்பதற்காக இருப்பிடங்களை மாற்றும் காட்சிகளும், கிடைக்கும் உணவை வாயில் திணிக்கும் காட்சிகளும் கூட அண்மை காட்சிகளாகவே இருக்கின்றன. குளிர் உறைப் பனியில், பசியும் தனிமையும் சூழ மனிதர்கள் மனதால் உறைந்த ஓர் அழிவு வரலாற்றைப் பதிவு செய்வது மட்டும் இயக்குனரின் நோக்கமில்லை. கடைசி காட்சியில் தோற்ற ஜெர்மனி ராணுவத்தினர் முட்கம்பிகள் சூழ அடைத்து வைக்கப் பட்டிருக்கின்றனர். உயிர் பிழைத்திருக்கும் யூதர்கள் அவர்களை நோக்கி காறி உமிழ்கின்றனர். ஸ்பில்மனுக்கு உதவிய ராணுவ அதிகாரி அவர்களிடம் ‘ஸ்பில்மனைத் தெரியுமா?’ என வினவுகிறான். தான் அவருக்கு உதவியதைச் சொல்கிறான். காறி உமிழ்ந்தவர்கள் வாயடைத்து நிற்கின்றனர். இனம், மதம், போன்ற அடையாளங்களைக் கடந்த நேயம் இயக்குனரின் சிந்தனையாக உள்ளது.

இரண்டாவது காரணத்திற்கு வருகிறேன். வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வதில்லை என்று இங்கும் அங்குமாக படித்திருக்கிறோம். இது யாருக்கு உண்மையோ, யூதர்கள் விஷயத்தில் நிச்சயம் உண்மை. நாஜிக்கள் யூதர்களுக்குச் செய்த கொடுமையை, யூதர்கள் பாலஸ்தீனர்களுக்கு செய்துக் கொண்டிருக்கின்றனர். ஒடுக்கப் பட்டவர்கள் அடக்குமுறையாளர்களாக பரிணமித்திருப்பது எத்தகைய முரண்நகை. அடக்குமுறையாளர்களாக மாறி விட்டவர்கள் தொடர்ந்து தங்கள் பழைய வலிகளையே பெரிதுப்படுத்தி காட்டிக் கொண்டிருப்பதை நாம் எச்சரிக்கையாகத்தான் அணுக வேண்டியிருக்கிறது. முக்கியமாக ஹாலிவூட் யூத இயக்குனர்களை. போலன்ஸ்கி நிச்சயம் ஹாலிவூட் வகையினர் அல்ல. இன்றைய ஈழச் சூழலை முன்வைத்து இப்படம் தரும் முக்கியத்துவத்தை யோசித்து பார்க்கலாம். அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டே அடையாளம் கடந்த நேயத்தையும் தக்க வைப்பதை முன்வைப்பது சிலருக்கு அபத்தமாக தோன்றலாம். விழுமியங்கள் மீதான நம்பிக்கைகள் முற்றிலும் சிதறுண்டு கொண்டிருக்கும் இந்த இருண்ட காலத்தில் மேற்க‌ண்ட வரிகளை எழுதுவதற்கு விரல்கள் நடுநடுங்குகின்றன‌. வேறு வழியில்லை.

 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768