இதழ் 9
செப்டம்பர் 2009
  ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்
 
     
  பத்தி:

சை. பீர் என்ற......

யுவ‌ராஜ‌ன்

சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன்


நிறைய‌ க‌ண்க‌ளுட‌ன் ஒருவ‌ன்...
வீ.அ. ம‌ணிமொழி

பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன் 

வசூல்
சீ. முத்துசாமி 


கட்டுரை:

HOW TO FIGHT BACK
சேனன்

ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்

உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!
விக்னேஷ்வரன் அடைக்கலம்


சிறுகதை:

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
முனிஸ்வரன்


தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...2
"மலேசியத் தரகர்கள்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...2
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...2
இளைய அப்துல்லாஹ்


லும்ப‌ன் ப‌க்க‌ம்:

ஏய் ட‌ண்ட‌ன‌க்கா... ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா


கவிதை:

தர்மினி


சந்துரு

லதா

தினேசுவரி

யோகி


தோழி

ரேணுகா

இளங்கோவன்
 
     
     
 

இலக்கியம் என்பது என்ன? ஓர் இலக்கு நோக்கி பாய்வதா? வாழ்க்கையியலை கற்பிப்பதா? அழகியலோடு ஒரு பார்வையா? அறங்களை போதிக்கும் பல்கலைக்கழகமா? அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆய்வரங்கமா? வெறும் கற்பனையா? நினைவுகளை நிழலாகப் பதிவு செய்யும் காட்சிக்கூறுகளா? நிஜங்களை நிர்வாணமாக்கும் கலைப்படைப்புகளா? மின்னலாகத் தோன்றி மறையும் கனவுகளா? வறட்டு வேதாந்தம் பேசி உலகை மாயமாக்கும் சித்தாந்தமா? வேடிக்கை விளையாட்டுக் காட்டி நிற்கும் தோழமையா? வாழ்க்கை வலிகளை உணர வைத்த தனிமையா? இப்படி ஒவ்வோர் இலக்கியத்தைப் படிக்கும் போதும் நம்முள் பலவித கேள்விகள், அனுமானங்கள், தத்துவங்கள், விரக்திகள், ஆறுதல்கள், கண்ணீர், கவலை, குழப்பம் போன்ற பலவித உணர்ச்சிகள் ஒரு கோலாஜ் உருவமாக விரிகிறது.

சின்ன சின்ன காகிதங்கள், பலவித குழப்பமான வடிவங்கள், எந்த கலைக்கும் கட்டுப்படாத வண்ணச் சிதறல்கள் இவை எல்லாம் சேர்ந்து ஓர் அற்புதமான உருவத்தை உருவாக்கும். ஆனால் இது எப்போது? ஒரு கற்பனைத் திறனும் கைத்திறனும் கொண்ட ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடியும். அதே போல் பலவித எண்ணக் கலவைகள் சேர்ந்து மனமுதிர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் சேர்ந்த ஒருவனால் அற்புதமான ஓர் இலக்கியத்தை நுகர முடியும். இது வரை பேசியவர்கள் இலக்கியத்தை எப்படியோ ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து அதற்கு வண்ணம் தீட்ட முயன்றார்கள். ஆனால் இலக்கியம் என்பது நமது வகுக்கும் வரையறைக்குள்ளோ நாம் எதிர்பார்க்கும் நிறச்சேர்க்கையிலோ அடக்க முடியாது என்பது தான் உண்மை. முதலில் சிறு காகிதத் துண்டுகள் சேர்ப்பது நவீனத்துவம் என்று வகுத்துக் கொண்டால் அதற்குள் வண்ணச் சிதறலை பரவ விடுவது பின் நவீனத்துவம்.

என் பெண் சிறுவயதில் வெளிநாடு சுற்றுப் பயணம் போன போது ஓர் அழகான முழுநிலா! காரில் எங்களுடனே அதுவும் பயணித்தது. ஜன்னல் வழியே அதை ரசித்த என் பெண், "அம்மா நிலாவைப் பாரேன்" என்று இரண்டு மூன்று முறை சொன்னாள். எப்படியாவது அந்த அற்புத கணத்தை அவளுக்குப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில், "அம்மா இதை அப்படியே கிளிக் செய்து ஸ்கிரீன் சேவரில் போட்டு விடலாம்" என்றாள். அந்த இயற்கை காட்சியை அவள் அனுபவித்த விதம் அப்படியானது. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் இதையே, என் பெண் வயதுடைய‌ பாரி மகளிர் நிலாவைப் பார்த்ததும் 'இதே நிலாவை போன முறை நாங்கள் பார்த்த போது முரசு முழங்கும் எங்கள் நாடும் எங்களிடம் இருந்தது; எம் தந்தையும் எங்களுடன் இருந்தார்' என்று இந்த காட்சியை முடித்து விடுகின்றனர்.

காதலனை சந்திக்கத் துடிக்குமொரு காதலி. கண்ணதாசன் காலத்தில் இருந்திருந்தால் "தூது செல்ல ஒரு தோழி இல்லையென்று துயர் கொண்டாளோ தலைவி. தென்றல் காற்று வந்து மெல்ல சேலைத் தொட சுகம் கண்டாளோ தலைவி. அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி!" என்று காதலின் ஏக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கண்கள் கிறங்கி நீச்சல் குளத்தில் சேலையோடு நீந்தி தோழியோடு காதலின் தாபங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இன்று அந்தக் காட்சியை ஓர் இளம் பெண் பார்த்தால் பல்லைக் கடித்துக் கொள்வாள். ஏன்? இன்று காதல் இல்லையா? காதலை தோழியரோடு பகிர்ந்து கொள்வதில்லையா? காதலனுக்காகக் காத்திருக்க நேர்வதில்லையா? எல்லாம் இன்றும் இருக்கிறது. ஆனால் அவர்கள் ஆட்சேபிக்கும் விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகள், இயல்பான விஷயங்களை யதார்த்த நோக்கில் பார்க்காதது. "யாராவது நீச்சல் குளத்தில் புடவையோடு இறங்குவாங்களா? இப்படி நின்னு பாடறதுக்குப் பதிலா மொபைல் போன்ல அவன் எங்க இருக்கான் என்று தெரிஞ்சுக்க வேண்டியதுதானே" என்று அதிலுள்ள முரண்பாடுகளை பட்டியலிடுவார்கள். இதே விஷயம் கிட்டத்தட்ட ஆயிரம் வருடத்துக்கு முன்பாக எப்படி பேசப்பட்டிருக்கிறது? காதலனும் காதலியும் சந்தித்து விட்டார்கள். பிறகு தோழியிடம் அதை பகிர்ந்து கொள்கிறாள். அந்தத் தோழி அந்தப் பெண்ணிடம் "என்ன உன் தலைவனை சந்தித்து விட்டாய். இப்போது கூட ஏன் ஒரு மாதிரியாகவே இருக்கிறாய்" என்று கேட்டிருக்கக்கூடும். "என்ன... சந்தித்தபோது பொழுது இன்பமாக இருந்ததா?" என்று விசாரித்து இருக்கக்கூடும். அதற்கு அந்தத் தலைவி என்ன பதில் சொன்னாள் என்பதைப் படித்தபோது இலக்கியத்தின் நுண்மை புரியும்.

"ஆமாம் சந்தித்தேன். இன்பமாகக் கழிந்தது .ஆனாலும் பசியோடு ஒரு யானை காட்டுக்குள் புகுந்து கண்ணில பட்ட மரங்களின் கிளைகளையெல்லாம் பிடுங்கி அதை உண்டு பசியாறி விட்டுச் சென்றது. அப்போது ஒரு மரக்கிளை மரத்திலிருந்து பிடுங்கப்பட்டது. ஆனால் முழுவதுமாக பிடுங்கப்படாமல் சிறு பகுதி மட்டும் மரத்தோடு ஒட்டிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்த மரக்கிளையின் நிலைதான் என் காமமும்!" என்று சொல்கிறாள். காமம் தணிந்தும் தணியாத நிலையை இதை விட பூடகமாக பெண்ணொருத்தி சொல்ல முடியுமா? இதையே இன்றைய பெண் கவிதாயினிகள் சொல்ல முற்படும் போது அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் நவீனத்துவம் என்பது வெறும் பெயரளவில் அதுவும் ஆண்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு பொருள் போல் தோன்றுகிறது.

செவ்விலக்கியம், வட்டார மொழி இலக்கியம், புனைவிலக்கியம், யதார்த்த இலக்கியம், மாய யதார்த்த இலக்கியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற வகைப்படுத்தல்கள் ஆங்கில இலக்கியங்களுக்கே பெரும்பாலும் பொருத்தமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் உலகமயமாதலில் நாம் ஆங்கிலேயரின் சாப்பாடு, உடை, வாழ்க்கைமுறை எல்லாவற்றையும் பின்பற்ற நேரிடும் போது இலக்கியத்திலும் ஆங்கில மொழியில் எத்தகைய வகைப்படுத்தல்கள் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றனவோ அதையே நவீன தமிழ் இலக்கியவாதிகளும் பின்பற்றுகின்றனர். ஆங்கில இலக்கியம் கற்றவர்கள் கிளாஸிக்ஸ், ரொமாண்ட்டிஸம், ரியலிஸம், மேஜிக்கல் ரியலிஸம், எக்ஸிஸ்டன்ஷியலிஸம், மாடர்னிஸம், போஸ்ட் மாடரின்ஸம் போன்ற வார்த்தைகளைக் கையாண்டு அது, தான் படிக்கும் இலக்கியங்களில் எப்படி கையாளப்பட்டிருக்கின்ற‌ன‌ என்று வரையறைப்படுத்துவார்கள். ஏனென்றால் அவர்கள் மொழி சமீபத்தில் உருவான மொழி. கிட்டத்தட்ட எட்டு நூற்றாண்டுகளாக பயன் பாட்டில் உள்ள மொழி. அதுவும் பல்வேறு மாறுதல்களுக்குப் பிறகு இன்று வளர்ந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் காலத்து இலக்கிய வரலாற்றை எண்ணூறு ஆண்டுகளுக்குள் அடக்கி விடலாம்.

ஆனால் தமிழ் இலக்கியம் படிப்பவர்கள் இப்படிப்பட்ட வரையறைகளைக் கொண்டு தமிழ் இலக்கியத்தைப் படிக்கவில்லை. அகம், புறம் என்ற வகைப்படுத்தல்கள் இருக்கின்றன. பக்தி இலக்கியம், காப்பியங்கள், இதிகாசங்கள் போன்ற வகைப்படுத்தல்கள் இருக்கின்றன. இதையெல்லாம் படித்து முடித்து இதற்கிடையில் தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என‌ இலக்கணத்தைக் கரைத்துக் குடித்து, ந‌வீன‌ காலத்துக்கு வரும் போதே தமிழ் இல‌க்கிய‌ம் எல்லைக‌ளைக் க‌ட‌ந்திருக்கும். 13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்த இலக்கியங்கள் என்று ஒரு பார்வை பார்த்து விட்டு இருபதாம் நூற்றாண்டிற்குள் நுழையும் போதே பரீட்சை முடிந்து தமிழ் இலக்கியப் படிப்பை முடித்திருப்பார்கள். நவீன புனைவிலக்கியம் என்று 1900 களில் ஆரம்பித்த நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மு .வரதராசனார் காலத்துடன் முடிந்து விடும். contemporary literature என்று சொல்லப்படும் தற்கால இலக்கியத்தைப் பற்றிய புரிதல்கள் இல்லாமல் தமிழ் அறிஞர்கள், தமிழ் வாசகர்கள் இருப்பது 21 ஆம் நூற்றாண்டின் அதிசயம் தான்.

நவீனத்துவத்துவ‌த்தை இலக்கியத்தில் எப்போதோ நாம் அடைந்து விட்டோம். அதைப் பற்றிப் பேசாமல் உணராமல் இருப்பதுதான் தமிழனின் தனிக்குணம். ஆவணப் படுத்துவது, வகைப் படுத்துவது போன்ற விஷயங்களை இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு எட்டாக் கனவாகவே இருந்து வருகிறது. மற்ற ஊடகங்கள் இதை இன்னும் தெளிவாக, இன்னும் சொல்லப் போனால் துல்லியமாக செய்கிறது. திரைப் படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைப்பட பாடலாசிரியர்க‌ள், இயக்குனர்கள், மற்றும் நடிக நடிகையரைப் பற்றிய அந்தரங்கக் குறிப்புகள் இவற்றை பற்றி யாரிடம் கேட்டாலும் நமக்கு விவரம் கிடைக்கும். "எந்திரனுக்கு மியூசிக் யாருங்க" என்று கேட்டால் உடனே பதில் கிடைக்கும். இதற்கு ரொம்ப படிப்பாளியாக இருக்க வேண்டாம். தொடக்க நிலை ஒன்று இரண்டு மாணவர்கள் கூட எந்த முன் ஏற்பாடும் இல்லாமல் உடனே இது போன்ற புதிர்ப்போட்டிக்குத் தயாராகி விடுவார்கள். அதே போல் தொடர்ந்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக நான் புனைவிலக்கியம் படித்து வருகிறேன் என்று சொல்லும் ஒரு தமிழ் வாசகரிடம் 'ஜே ஜே சில குறிப்பு'களில் வரும் கதாநாயகன் யாருடைய பாதிப்பில் உருவானவர் என்றால் எத்தனை பேர் பதிலளிக்க முடியும்? தமிழ் படிக்கிறோம். கண்டிப்பாக வள்ளுவரை அனைவரும் அறிவோம். அறநெறிகளை போதிக்கும் ஔவையின் நீதி நூல்களிலிருந்து தொடங்கி பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், இன்றைய வைரமுத்து வரை ஓரளவிற்கு அறிவார்கள். ஆனால் இவர்களைப் பற்றியப் புரிதல் அவர்களுக்கு எந்த அளவில் இருக்கிறது என்ப‌தே கேள்வி.

நவீனத்துவம் என்பது எந்தக் காலக்கட்டத்திலிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கிட்டத்தட்ட 1860களுக்குப் பிற‌கு, வரத்தொடங்கிய இலக்கியங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னால் சிறுகதைகள், நாவல்கள் ஆங்கிலத்தில் வரவில்லை. இந்தக் காலகட்டத்தில் செவ்விலக்கியங்கள் மட்டுமே இலக்கியங்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் மொழியில் எழுதப்படும் எவையுமே இலக்கிய அந்தஸ்து பெறாமல் இருந்து வந்தன. இதையும் மீறி அதன் எளிமை, உண்மை, புதுமை, மரபுகளை உடைத்தெறிந்த துணிவு இவை எல்லாம் சேர்ந்து ந‌வீன‌ எழுத்துக்களும் ஒர் இலக்கிய அந்தஸ்து பெற்றது. மரபிலக்கியம் ஏற்கெனவே சமூகத்தில் இருந்த நம்பிக்கைகளையும், கருத்துகளையும் வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. சற்று மிரட்டலாக இதைச் செய்தால் இத்தகைய நன்மைகளை அடையலாம் என்று சொல்வதை விட இதைச் செய்யவில்லையென்றால் இப்படியெல்லாம் தவறுகள் நிகழக்கூடும் என்ற மிரட்டல்கள், பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தி விடும் ; பத்தினிப் பெண்கள் இல்லையென்றால் வானம் பொய்த்து விடுமென்று மிரட்டி விட்டு பொய்யே சொல்லாத மெய் மன்னன் அரிச்சந்திரன் வாழ்க்கையில் நேர்ந்த அவலங்களையும், பத்தினி என்று நிரூபிக்க சீதை பட்ட இன்னல்களையும் எடுத்தியம்பும்.

நவீன இலக்கியமும் வாழ்க்கையின் முரண்பாடுகளை சில சமயம் அழுது புலம்பிச் சொல்கிறது. விட்டு விலகி நின்று தத்துவமாகச் சொல்கிறது. தானும் உள் புகுந்து அடி வாங்கி வலிகளைத் தடவி விடுகிறது. புன்னகையோடு ரசிக்கிறது. எள்ளி நகையாடுகிறது. இதற்கு முடிவே கிடையாதா என்று சாபமிடுகிறது. இப்படி பல்வேறு நிலைப்பாடுகளில் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. படிக்கும் வாசகனும் வாழ்க்கையின் முரண்பாடுகளில் சிக்கித்தவிக்கும் மனிதனாக, தான் உள் வாங்கும் உணர்ச்சிகளையே, தான் படிக்கும் இலக்கியமும் வெளி காட்டும் போது வாசகனுக்கும் இலக்கியதிற்குமான இடைவெளிகள் குறைகின்றன. இதைப் படித்து புரிந்து கொள்ள எனக்கு உரையாசிரியர் தேவையில்லை. இதை உணருவதற்கு பண்டிதனாக இருக்க வேண்டாம். சாதாரண மனிதனாக இருந்தால் போதும் என்ற உணர்வும் வாசகனை மேலும் பண்பட்ட வாசகனாக்கியது. தொடர்ந்து படித்துக்கொண்டே வளரும் வாசகன் குறிப்பால் உணர்த்தப்படும் நுட்பங்களையும் கற்பனை செய்து அதில் பங்கேற்கிறான். அவனுக்கும் கதாசிரியருக்கும் இருக்கும் கற்பனைகள் ஒத்து போகவில்லையென்றாலும் கூட வாசகனுக்குக் கதாசிரியர் சொல்லாமல் விட்டுச் சென்ற இடைவெளியை, தான் கற்பனை செய்து நிரப்பும் பணி திருப்தியளித்தது என்று கூடச் சொல்ல முடியும்.

நவீனத்துவம் என்பதை இலக்கியம் என்ற ஒன்றில் மட்டுமே அனுமானிக்க முடியாது. வாழும் வாழ்க்கையில், எண்ணங்களில், சமுதாயத்தில், அறிவியலில், கலைகளில் இப்படி எல்லா இடங்களிலும் தலை காட்டத் தொடங்கிய 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தமிழிலும் உரைநடையாக கதை எழுதும் பழக்கம் தோன்றியது. முதலில் சில பல கதைகள் அக்கால சமூக வழக்கங்களிலிருந்து எப்படி நவீனத்துவம் புகுந்து கொண்டு மனிதர்கள் மாறுகிறார்கள் என்பதை பகடி செய்யும் கதைகள். 'குளத்தங்கரை அரசமரம்' சொல்லும் குழந்தை ருக்குமணியின் கதையும் மனைவியை தள்ளி வைத்து விட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டு ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய அக்கால வழக்கத்தை கூறியது. மேலும் கிராம வாழ்க்கை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை, பெண்கள் படிப்பறிவு பெறுவதால் ஏற்படும் பாதகங்கள், பட்டண வாழ்க்கையில் கைவிடப்பட்ட சில வாழ்க்கை முறைகள், இவற்றையெல்லாம் பற்றி சற்று எதிர்மறையான கருத்துக்களைக் கொண்ட கதைகள் அதிகம் தோன்றின. வாரப் பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள், போன்றவற்றில் இதைப் போன்ற நாவல்கள் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன.

பெண்கள் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு கலாசாலையில் படித்து, உல்லாச கேளிக்கைகளில் கலந்து கொண்டு, புடவை தலைப்பை விசிறியாக்கிக் கொண்டு, நாட்டிய நிகழ்ச்சிகளைக் கண்டு சந்தோஷித்து, கிராமாந்திரப் பெண்களைப் போல் சம்பிரதாயக் கட்டு கட்டிக் கொள்ளாமல், மஞ்சள் தேய்த்துக் குளிக்காமல்,ஸ்நோ பூசிக் கொண்டு, பவுடர் பூசிக் கொண்டு நாசூக்காய் பேசிக்கொண்டு வரும் உறவினர்களையும் விருந்தினர்களையும் அகமும் முகமும் மலர வரவேற்காமல் முகஞ் சுளித்து, புருஷாளுக்கு சமமாய் நின்று சம்பாஷித்துக் கொண்டு, ஸ்திரீகள் அதிகம் கூடும் வம்புமடமான லேடீஸ் கிளப்புக்கு போய்க்கொண்டு இரவு நேரங்கழித்து வீடு திரும்பி, இராப்போஜனத்தை வெளியில் டீ பார்ட்டிகளில் முடித்துக் கொள்வ‌து போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் அன்றைய ஆண்களுக்கு சற்று பீதியைக் கிள‌ப்பியிருக்க‌லாம்.ஆகையால் அப்படிப்பட்டப் பெண் அப்போது அத்தகைய விமர்சனத்துக்கு உள்ளானாள். அப்போதைய‌ பெண்ணியத்தையும், பெண் விடுதலையையும் பற்றி இலக்கியங்களில் படித்தால் இன்றையப் பெண்களுக்கு பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட முடியும். நான் சொன்ன மேற்கூறிய விஷயங்களை இன்றையப் பெண்கள் இயல்பாகச் செய்கிறர்கள். நன்றாக உடை அணிந்து கொள்ளுதல், யாரையும் சாராமல் சுதந்திரமான போக்கு கொண்டவளாக, படித்து பட்டம் பெற்று, பொருளாதார ரீதியாகவும் ஆணை விட மேம்பட்டவளாக இருக்கிறார்க‌ள். ஆனால் இன்றும் கிட்டத்தட்ட அதே விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடுகிறது என்பது நவீனத்துவம் வாழ்க்கையில் ஸ்விட்ச் போட்டால் மின்சாரத்தின் மூலம் விளக்கெரியும் என்பதைப் போன்ற வாழ்க்கை வசதிகளால் மட்டும் அளவிட முடியாத விஷயம் அல்ல என்பது மட்டும் புரிகிறது.

பெண்கள் மட்டுமே இலக்கியத்தில் கொண்டாடப்படுகிறர்கள். எப்போது? ஆண்கள் கிழித்த கோட்டைத் தாண்டாத போது! பெண்கள் மட்டுமே தாய்மை என்ற பேறினைப் பெறுகிறார்கள். எப்போது? தாய்மையடைதலின் வலியை வெளியில் சொல்லாமல் கண்ணே கண்மணியே என்று சீராட்டிய மகன் தன் இதயத்தைக் கொண்டு போகும் போது கூட மகனின் நலத்தையே நினைக்கும் இதயம் கொண்டவளாக இருக்கும் போது. கருத்தடை மாத்திரைகளைக் கண்டுபிடித்தபோதுதான் முதன் முதலில் பெண் விடுதலை தோன்றியது என்று சொன்னவ‌ள் தாய்மையெனும் பேறினைக் கண்டறியாதப் பேதையா? கொண்டவனுக்கு எது பிடிக்கும்? குழந்தைகளுக்கு எது பிடிக்கும்? வயதான மாமன் மாமிக்கு எது பிடிக்கும் என்று சமைக்கும் காய்கறிகள் தோறும் அவர்கள் முகம் பார்க்கும் குடும்ப விளக்குப் பெண்களே ஆண் மனதின் விருப்பங்கள்! இப்படிப்பட்ட பெண்ணாக இருந்தால் உன் வாழ்க்கை வானுறையும் தெய்வத்துள் வைத்து வணங்கப்படும் என்று பெண்களுக்கு மூளைச்சலவை செய்தன‌ சாஸ்திரங்கள். பின்னர் அதை ஒரு வசீகர உறைக்குள் போட்டு பெட்டிக்கடையில் கூட கிடைக்கும் அளவிற்கு செய்தது நம் நாவல் இலக்கியம். அழகான பண்புள்ள முடிந்தால் நன்றாக படித்து வேலைக்கும் போய் கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு பெரியவர்களை மதிக்கும் இப்படிப்பட்டப் பெண் கதாநாயகியர்க‌ளே எல்லாப் பெண்களின் அடி மனதிலும் உறங்கிக் கிடக்கும் கனவுப் பெண்மணி. வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்த்தல் போன்றவை சொல்லாமலேயே பெண்ணின் கடமைகள் ஆகின்ற‌ன‌. அதை எந்த வித கேள்விகளும் இல்லாமல் இயல்பாக பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும். காலந்தோறும் பெண்கள் மறுவார்ப்பு செய்யப்படுகிறார்கள். பெண்களுக்கான இலக்கணம் மாற்றி எழுதப்படுகிறது. என்ன மாற்றமென்றால் ஆண்களின் தேவைகளுக்காக மாற்றப்படும் விழுமியங்கள். பெண்ணை வீட்டில் பூட்டி வைக்காமல் படிப்பறிவு பெற வெளியில் அனுப்பினார்கள். எதற்காக? அவள் பொருளாதாரச் சுதந்திரம் பெறவா? கூடுதலாக வருமானம் வந்தால் இன்னும் வசதியாக வாழலாமே என்ற நல்லெண்ணம்தான்!

எந்தப் பெண்ணும் தன்னிடம் எல்லாம் இருக்கும் போது எதற்காக நம் வாழ்க்கையை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று யோசித்திருந்தால்... பல நாவலாசிரியர்களின் பெயர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் விடுபட்டுப் போயிருக்கக்கூடும். 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்த புரட்சிகளும் புதுயுக மாற்றங்களும் மறந்து மறைந்து மீண்டும் மிளகாய் வேள்விகளும், மஞ்சள் சால்வையுமாக வலம் வரும் பகுத்தறிவாளர்களும், பலவித தொல்லைகளுக்கு தினந்தோறும் ஆளாகும் தொலைத்தொடர் பெண்களும் வேண்டாம் என்று புதைத்த எலும்புக்கூடுகளை மீண்டும் தோண்டியெடுத்து வலம் வருகின்றன. இத்தகைய நிலைப்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டுப் பெண்களை மட்டுமல்ல, யாரையுமே மாற விட மாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

உரைநடை புனைக்கதைகளையும் எளிதில் அனைவரும் படித்து விடக் கூடிய சாத்தியக்கூறுகளினால் வெறும் பொழுது போக்குவதற்காக மட்டும் ஓர் இரவு நேர இர‌யில் பயணத்தில் படித்து விட்டு புத்தகத்தைக் வீசியெறிந்துவிடுவார்க‌ள். எழுத்துக்கள் எப்போதுமே உன்னதமான ஒன்றை மட்டுமே கூற முற்பட வேண்டும். பாட்டுடைத் தலைவனாக இறைவன், அல்லது இறைவனுக்குச் சமமான மன்னன், வீரதீரங்கள் கொண்ட மாமனிதன் போன்றவர்களையே பாடி வந்த தமிழ் மரபு ,சிலப்பதிகாரத்தில் ஒரு சாதாரண வணிகனை தலைவனாக்கியது. குண்டலகேசியில் ஒரு திருடன் மேல் காதல் கொண்டாள் குண்டலகேசி. இப்படிப்பட்ட கட்டுடைப்புகளை உடைப்பது தானே நவீனத்துவத்தின் மூலக்கூறு!

சரி! இனி என்ன? நவீனத்துவத்தை அடைந்து விட்டோம். அது எங்கள் வாழ்க்கையில், எண்ணங்களில், இலக்கியங்களில் இருக்கிறது. இனி அடுத்தது என்ன? பின் நவீனத்துவமா?நவீனத்துவம் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது என்று அவ்வளவு எளிமையாக பின் நவீனத்துவத்தை வரையறைப் படுத்திவிட முடியுமா? இலக்கிய வரலாறு எப்போதுமே ஒரு நாட்டின் அல்லது ஒரு காலகட்டத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒன்று. சமுதாய மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்கள் இவற்றைப் பின்புலமாகக் கொண்டே இலக்கியங்களிலும் மாற்றங்கள் நிகழும்.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்திலும் அந்த காலகட்டத்துக்கு பின்பு பிறந்தவர்களின் வாழ்க்கையும் எத்தகைய சூழலைக் கொண்டிருந்தது? போர் நடக்கும் போது இருக்கும் வாழ்க்கை ஒரு வகைப் போராட்டமென்றால் அதற்குப் பிந்தைய வாழ்க்கை இன்னும் அதை விடக் கொடுமையான மனதளவில் பாதிக்கும் ஒரு பெரிய போராட்டமாகவே இருந்து வருகிறது. போர் முடிந்த பிறகு அசோக சக்ரவர்த்தி போர்க்களத்தை வலம் வருகிறார். அப்போது தான் அந்தக் கலிங்கத்துப் போரின் உச்சகட்ட இன்னல்களை உணர்கிறார். அதன் பிறகு அவர் நல்லவராகி சாலைகள் கட்டி மரம் நட்டக் கதைகள் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய உலகமும் அசோகரின் மனநிலையில் இருந்திருக்க வேண்டும்.எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கைகள் அவர்களுக்கு வாழ்க்கையை கேலிகூத்தாகப் பார்க்கும் ஒரு பார்வையைத் தந்தது. வாழ்க்கையைப் பற்றிய இறுக்கமான உணர்வு. அந்த இறுக்கத்திலிருந்து மீள இலக்கியத்தின் மூலம் அவர்கள் கண்ட irony, கேலி, blackhumour இருண்மைபகடிகள், meta narrative techniques metafiction பழைய கதைகளையே வழக்கமான கதை சொல்லும் பாணியை விட்டு புதிதாக உருவாக்குதல், existensialism,இருத்தலியல் தத்துவங்கள், pastiche, ஒருவருடைய பாணியில் விரும்பி உருவாக்கப்படுவது திருக்குறளைப் பின் பற்றி புதுக்குறள் எழுதுவது பாரதியின் புதிய ஆத்திச்சூடி, மிக முக்கியமான தீவிரமான விஷயங்களைக் கூட விளையாட்டுப்போக்கில் சொல்வது போன்றவை பின் நவீனத்துவக் கூறுகளாக கொள்ளலாம். இதன் மூலம் நிறைய அதிர்ச்சிகள் கிடைத்தன. புனிதங்கள் போட்டு உடைக்கப்பட்டன, கட்டிக் காப்பாற்றி வந்த கற்பெனும் வேலிகள் அகற்றப்பட்டன. காதல், காமம், திருமணம் போன்ற ஏற்பாடுகள் கேள்விக்குறியான‌து.

நவீனத்துவம் பின்பற்றிய யதார்த்தவியல் முப்பரிமாணத்தை காட்டியது என்றால் பின் நவீனத்துவமும் யதார்த்தவியலை இன்னும் வேறு பல பரிமாணங்களில் காட்டியது. சற்று சிக்கலான மொழி நடை, மாய யாதார்த்தவியல், சார்பியல் தத்துவங்கள், இருத்தலியல், de-construction என்ற ஒரு வார்த்தை பின் நவீனத்துவத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டது. அதாவது இதுவரை உருவாக்கிய அல்லது உருவாக்கப்பட்ட கட்டமைத்தலை உடைத்தல் போன்றவை. இப்போது தொடக்கப்பள்ளிகளில் கூட unlearn என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதுவரை நாம் கற்றவற்றை நிராகரித்து புதியதாக ஒன்றை கற்றல் என்று தமிழில் சொல்லலாம். அது போல் இதுவரை நாம் கட்டமைத்த ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஆனால் அதை கட்டுடைத்து மீண்டும் ஆக்குதல் என்று பொருள் கொள்ளலாம். பின் நவீனத்துவத்தில் non-linear என்று வகைப்படுத்தலாம்.

நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த வாசகனுக்கும் இன்று இருக்கும் வாசகனுக்கும் வாழ்க்கை முறையில், செயல்பாட்டில், அறிவு வளர்ச்சியில் எத்தனையோ மாறுதல்கள். ஆனால் கதை சொல்லும் பாணியில் மட்டும் இன்னும் பாட்டி வடை சுடுவதும், காக்கா குள்ள நரியிடம் ஏமாந்து போவதுமான எளிமை ஏன்? இன்னும் கொஞ்சம் குறுக்கும் நெடுக்குமாக கதை சொல்வோம். தான் சொல்ல வந்ததை மையப்படுத்தாமல் கதைக்குப் பின்னால் நிற்கும் கதைகளைச் சொல்லுதல் அதாவது metanaration, metafiction முறையில் அமைத்தல். புனைவுகளுக்குள் இருக்கும், புனைவுகளுக்கு அப்பால் இருக்கும் விஷயங்களைச் சொல்லுதல், புது படிமங்களை உருவாக்குதல், விளையாட்டுப் போக்கில் கதை சொல்லுதல், தொடர்பில்லாதவற்றை தொடர்புபடுத்துவது என‌ இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

குறிப்பு :

டோ டோ பறவைகள் மொரிஷியஸ் தீவில் மட்டும் வாழ்ந்த புறாவைப் போன்ற ஒரு பறவை. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவை காணாமல் போயின. இதற்குக் காரணம் நவீனத்துவம். இவற்றோடு சப்போட்டா மரங்களைப் போன்ற ஒரு மரத்தையும் டோ டோ மரம் என்று பெயர் கொள்ளலாம். இவையும் இந்தத் தீவில் இல்லாமல் போயின‌. இதை பின் நவீனத்துவத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.

இன்றும் வழக்கொழிந்த‌ பல விஷயங்களுக்கு டோடோ பறவையை உதாரணமாகக் காட்டலாம். டோடோ பறவை ஒரு முட்டாள் பறவை. மனிதர்களைப் பார்த்து பயப்படாமல் மொரிஷியஸ் தீவில் அலைந்து கொண்டிருந்தது. அதற்கு பறக்கவும் தெரியவில்லை. கோழியைப் போன்ற ஒரு பறவை இப்படி குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த மனிதன் அதைப் பிடித்து தின்ன ஆரம்பித்தான். அதுவரை ஆளில்லாத மொரிஷியஸ் தீவில் முதலில் டச்சுக்காரர்கள் வாழ ஆரம்பித்ததும் டோடோ பறவைகள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்தன. டச்சுக்காரர்கள் வந்த கப்பலில் உடன் வந்த குரங்குகள், பன்றிகள், நாய்கள் இவை டோடோ பறவையின் முட்டைகளை அழித்தன. அவை முட்டைகளைக் கூட பாதுகாப்பான இடத்தில் வைத்துக் காப்பாற்றத் தெரியாத அப்பாவிப் பறவைகள். சும்மா மரத்தடியில் முட்டையை வைத்து விட்டுச் சென்றுவிடும். இவை குரங்குகளுக்கு உணவாயின. இப்படி மனிதனும் மிருகங்களும் மாறி மாறி இந்தப் பறவைகளை வேட்டையாடி 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு பறவைக் கூட இல்லாது அழிந்த இனமாகி விட்டது. இது நவீனத்துவத்துக்கு ஒரு உதாரணம்.

ஒரு பறவையினம் அழிந்ததன் காரணமாக எப்படி ஒருவகை மரங்களும் அழியும்? தொடர்பில்லாத ஒரு விஷயங்களை தொடர்புப்படுத்திப்பார்ப்பது? டோடோ மரத்தின் பழங்களைச் சாப்பிட்ட டோடோ பறவை அவற்றின் விதைகளை தன் கழிவுகளாக வெளியேற்றியது. டோடோ மரத்தின் விதைகள் செடியாக முளைக்க டோடோ பறவையின் குடலில் பயணம் செய்தால் தான் முளைவிட முடியும். எனவே டோடோ பறவைகள் இல்லாமல் விதைகள் முளைக்கவில்லை. டோடோ மரமும் அழிந்த இனமாகி விட்டது.

இதைப்போல் தொழில் புரட்சியின் காரணமாக பல தொழில்கள் வழக்கொழிந்து போயின. நம் சிங்கப்பூரைக் கூட இதற்கு உதாரணமாகக் காட்டலாம். நவீன நகரமாக்கும் முயற்சியில் பல கிராமங்கள் மறைந்து பலமாடிக் குடியிருப்புகள் வந்தன. அன்று அந்த கிராமவாசிகள் அதுவரை செய்து கொண்டிருந்த வேலைகள் மாறி இன்று கிராம வாழ்க்கை என்பதே அரும் பொருள் கண்காட்சியில் பார்க்க வேண்டிய ஒன்றாகிவிட்டது. வாழ்க்கைமுறைகள் மாறிவிட்டன. இருபது வருடம் தொடர்ந்து பார்க்கும் அடுத்த வீட்டுக்காரரிடம் புன்னகைக்காமல் இருப்பதும் யார் என்பதே தெரியாமல் இருப்பதும் நவீனத்துவம் அடைந்துவிட்டதன் அதிகபட்ச நாகரிகம்.

இன்னும் இனம், நிறம், மொழி இவற்றின் பெயரால் சிறுமைப்படுத்துவதும், போர்களும் அறிவால் மேம்பட்டவர்கள் மட்டுமே வாழ முடியும் போன்ற எண்ணங்களும் நவீனத்துவத்துக்கு நாம் கொடுக்கும் விலை. வழக்கொழிந்து போகும் என்று நினைத்தவை இன்று நன்றாக வேர் பிடித்து ஆழமாக நிற்பதும், இவை ஏன் இல்லாமல் போயின என்று நாம் ஏங்குபவை மறைந்து போவதும் விசித்திர முரண்பாடுகள்.

 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768