இதழ் 10
அக்டோபர் 2009
  மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்
 
     
  பத்தி:

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்

சீ. முத்துசாமி

எனக்குத் தெரிந்த மழை
யோகி


மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்


கட்டுரை:

கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்


சிறுகதை:

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ.ரெங்கசாமி


மண் மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
கோ.முனியாண்டி


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...3
"தமிழ் எங்கள் ...யிர்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...1


ஜி.எஸ். தயாளன்


எம். ரிஷான் ஷெரீப்

ஷிஜூ சிதம்பரம்

புனிதா முனியாண்டி

சேனன்

ரேணுகா


பதிவு:

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்


விமர்சனம்:

வல்லினம் கவிதைகள்

ஜாசின் ஏ.தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்

சு. யுவ‌ராஜ‌ன்

"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)

கவின் மலர்


புத்தகப்பார்வை:

மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன்


எதிர்வினை:

புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி

     
     
 

நாட்டின் வடக்கு எல்லையைக் காக்கும் நோக்கில் முதன்முதலில் வடிவமைக்கப்பெற்ற சீனப்பெருஞ்சுவர் உருவாகி, படிப்படியாக பலநூறாண்டு காலத்திற்கு 2400 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட வரலாறு மிகவும் சுவாரஸியமும் செரிவும் கொண்டது. இதை 'பத்தாயிரம் லீ நீளம் கொண்ட சுவர்' என்ற பொருளில் 'வான் லீ ச்சாங் ச்செங்' என்றும் குறிப்பிடுவார்கள். 10000 லீ என்பது சுமார் 5000 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈடாகும். செங்கற்கள் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு மண், கல், பாறை மற்றும் மரம் பயன்படுத்தியிருக்கிறார்கள். பாறைகளும், மண்ணும் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இச்சுவர் பெய்ஜிங்கிற்கு வடக்கிலும் வடமேற்கிலுமாக, வடசீனத்து மலைகளில் பெரும்பாம்பெனக் கிடக்கிறது. தொடர்ந்து இருந்த பல போர் முயற்சிகள், தற்காப்புப் போர்களுக்கிடையே சுவர் இன்றைய நிலைக்கு எழும்பி நிற்க கால இடைவெளிகளுடன் கூடிய சுமார் ஆயிரமாண்டு கட்டுமானப்பணி நடந்திருக்கிறது.

எண்ணற்ற கணவாய்களும், கண்காணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்களும், சிற்றூர்களும், தொகை வீடுகளும் கொண்டு விளங்கிய பெருஞ்சுவரானது என்றைக்குமே உண்மையில் ஒற்றைச் சுவராக இருந்ததில்லை. சின்னச்சின்ன சுவர்களின் தொகுப்பான இந்தப் பெருஞ்சுவர் தெற்கு மங்கோலியச் சமவெளியை ஒட்டி மலையின் மீது கட்டப்பட்டுள்ளது. ச்சின் முடியாட்சி (கி.மு208), ஹ்ஹன் முடியாட்சி (கி.மு முதல் நூற்றாண்டு), ஐந்து முடியாட்சி மற்றும் பத்து நாடுகள் காலம் (கி.பி1138-1198) மற்றும் மிங் பேரரசர்கள் (கி.பி1368-1620) ஹோங்வூ மற்றும் வான்லீ கட்டியது என்று நான்கு முக்கிய சுவர்கள் குறிப்பிடத்தக்கவை. சுவரைச் சுற்றி வந்தும் நாட்டை முற்றுகையிட முடிந்ததால், மங்கோலியர்கள் நாட்டுக்குள் புகுந்து வர எந்தத்தடையும் அமையவில்லை. எதிர்பார்த்ததைப் போல சுவர் வெற்றியடையாததால், அது அலட்சியப் படுத்தப்பட்டது. அதுவுமில்லாமல், அடுத்து வந்த ச்சிங் பேரரசர்கள் செய்த மங்கோலியத் தலைவர்களுடனான மதமாற்று ஒப்பந்தம் சுவருக்கு அவசியமில்லாத ஒரு தற்காலிக நிலையை ஏற்படுத்தி விட்டிருந்தது.

மேற்கு ஜோவ் முடியாட்சியின் (கி.மு11ஆம் நூற்றாண்டு முதல் கி.மு771 வரை) போதே பெருஞ்சுவரின் வரலாறு துவங்கியிருக்கிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வாரிங் பிரிவுகளும் இணைந்த போது சீன அரசர் ஏற்கனவே கி.மு700 வாக்கில் கட்டப்பெற்ற பழைய சுவர்கள் நான்கையும் மேலும் நீட்டிக் கட்டினார். முக்கிய நோக்கமே தற்காப்பு தான். அவரவர் எல்லைகளைக் காக்க வாள், ஈட்டி போன்ற சிறிய ஆயுதங்கள் துளைக்காததுமான சுவர்களை ச்சீ, யான் மற்றும் ஜாவ் நாட்டு அரசர்கள் எழுப்பிக் கொண்டனர். இச்சுவர்கள் மிதி மண்ணும் கரளை நிரப்பிய இடைவெளிகளும் கொண்டிருந்தன. வடக்கில், ஹ்ஸியுங் நூ என்ற பழங்குடிகள் உள்ளே நுழைந்து நாட்டைக் கைப்பற்றிவிடாதிருக்கவென்று ஆங்காங்கே படைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அத்துடன், குதிரை மீதேறி வரும் அவர்கள் சுவர்மீது ஏறி இப்புறம் வரவோ, திருடிய பொருட்களுடன் அப்புறம் தப்பிப்போகவோ முடியாதபடி சுவரைக் கட்ட நினைத்தனர். சுவர் பகுதியிலிருந்து தீப்பந்தத்தினால் இராணுவத்தினருக்கு சமிக்ஞைகள் கொடுத்து அழைப்பதன் மூலம் ஆக்கிரமிப்புகளை தடுக்கப்பட்டன.

ச்சின் முடியாட்சியின் (கி.மு. 221-206) போது சீனத்தின் முதல் பேரரசர் என்றறியப்படும் ச்சின் ஷி ஹுவாங்தீ, சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து கிடந்த சீனத்தை இணைத்தார். சீனாவுக்குள் மங்கோலியர் நுழைந்து விடாமல் தடுப்பதற்கு சுவர்கள் மீண்டும் கவனிக்கப்பட்டன. சுவரின் சில பகுதிகளை எல்லை விரிவாக்கத்துக்கு ஏற்றாற்போல இடிக்கவும் பேரரசர் ஆணையிட்டார். நான்கு திக்கிலும் பல்வேறு உயரங்களிலும் அளவுகளிலும் ஆயிரக்கணக்கான மைல்களுக்குக் கட்டப்பட்டிருந்த சுவரை மத்திய மற்றும் வடசீனத்தின் தொடர்ச்சியான ஒரே சுவராக ஆக்கினார். புதுச்சுவர்கள் வடஎல்லையில் மண்ணாலும் கற்களாலும் மரச்சட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் கட்டப்பட்ட சுவர்ப்பகுதிகளில் மிகப் பிரபலமானதும் இவை தான். இருப்பினும், தற்காலச் சுவரிலிருந்து தள்ளி மேலும் வடக்கில் அமைந்த இந்தப் பகுதியின் பெரும்பாலானவை இன்றைக்கு மிச்சமில்லை.

கட்டுமானப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு போவது அக்காலத்தில் எளிய காரியமாக இருக்கவில்லை. ஆகவே, மலைப் பிரதேசங்களில் பாறைகளும் கற்களும் சமவெளிகளில் மண்ணும் பதப்படுத்தப்பட்ட மண்ணும் பயன்படுத்தப்பட்டன. கடுமையான வேலைகளில் ஈடும்பட்ட சுமார் 2-3 மில்லியன் கட்டுமானப்பணியார்கள் உயிரை விட்டிருக்கின்றனர். பணியின் போது இறந்த விவசாயிகளும் பணியாளர்களும் சுவருக்குள்ளேயே புதைக்கப்பட்டிருக்கின்றனர். அகழ்வாய்வாளர்கள் இதற்கான துல்லிய சான்றுகளைத் தோண்டியெடுத்துள்ளனர். பிற்காலத்தில், ஹ்ஹன், ஸ்யூ, வட/தென் ஜின் முடியாட்சிகளிலும் தொடர்ந்து சுவரைப் பழுது பார்க்கும் பணிகளும், புதிய கட்டுமானங்களும் வடக்கிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு நடந்திருக்கின்றன.

மீண்டும் 1449ல் ‘துமு’ போரில் மிங் படை தோல்வியுற்ற பிறகு பெருஞ்சுவர் திட்டம் உயிர் பெற்று இன்றைய நவீன சீனப்பெருஞ்சுவரின் பெரும்பகுதி அப்போது (கி.பி1388-1644) தான் கட்டப்பெற்றது. பல போர்களுக்குப் பிறகும் மங்கோலியரை ஒடுக்கத் தவறிய மிங் முடியாட்சி லேசாக ஆட்டம் காண ஆரம்பித்தபோது அவர்களை அண்ட விடாது தூர வைக்க சிறந்த வழி சுவரே என்று நினைத்து பெருஞ்சுவரின் சிற்சில மாற்றங்களும் இணைப்புகளும் செய்யப்பட்டன. ச்சின் முடியாட்சியின் போது கட்டப்பட்ட இடத்திலிருந்து சற்று விலகியே இந்தக் கட்டமைப்பு துவங்கப்பட்டது. 25 அடி உயரமும் கீழ்ப்பகுதியில் 15-30 அடி அகலமும் மேல்பகுதியில் படைவீரர்கள் நடக்கவும் ஆயுதமேந்தும் வண்டிகள் நகரவும் உகந்ததாக 9-12 அடி அகலமும் கொண்டிருந்தது. சீரான இடைவெளிகளில், கண்காணிப்பு கோபுரங்களும் தொலைத் தொடர்பு மற்றும் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டன. 6,400 கிலோமீட்டர் நீளம் வரை வளர்ந்த சுவர் மிக உயரமாக அதிக செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு குறுகியகாலத்திற்குள் கட்டப்பட்டிருக்கிறது. செங்கற்கள் மண்கட்டிகளைக் காட்டிலும் உறுதியாக இருந்தன. பாறைகளும் கற்களும் அதை விட உறுதியானவை என்றாலும் கட்டுமான வேலையைக் கடினமாக்கின. செங்கற்கள் வேலையைச் சுலபமாக்கின. மிங் தலைநகராய் விளங்கிய பேய்ஜிங்கின் சுவர்கள் இன்றும் மிகவும் உறுதி வாய்ந்தவை. இதற்கு முக்கிய காரணமே செங்கற்களின் பயன்பாடு தான். இன்றைக்குக் காணக் கிடைக்கக்கூடிய சுவரின் பெரும்பகுதி இந்தக்காலகட்டத்தில், முன்னெப்போதும் விட உறுதி வாய்ந்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. அப்போது சுவரின் மேல் பகுதியில் இருந்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வீரர்கள் காவல் காத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கடந்தும் மங்கோலியர்களின் படையெடுப்பு அவ்வப்போது நடந்தபடியே இருந்து வந்ததால் தற்காப்புக்கென்று மிங் அரசாங்கம் ஏராளமாகச் செலவிட்டிருக்கிறது. ச்சின் கட்டுமானத்தைப் போலில்லாமல் மிங் கட்டுமானம் உறுதியாகவும் விரிவாகவும் அமைந்திருக்கிறது.

பெருஞ்சுவர் குறித்து ஏராளமான சுவாரஸியக் கதைகள் சீனத்திலுண்டு. அதில் ஒன்று தான் ஷான்ஹாய்குவான் கணவாயில் இருக்கும் 'மனைவி கோபுரம்' என்றறியப்படும் தொலைத் தொடர்பு கோபுரம் பற்றியது. யாங்தி என்ற மிங் பேரரசர் காலத்திலிருந்து வழக்கிலிருக்கும் ஒரு கதை. நாட்டுப்பற்றாளரும் அறிவாளியுமான ச்சீ ஜீகுவாங் இந்த கோபுரத்தில் காவலுக்கு நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது, ஷாந்தோங் மாநிலத்தில் வாங் என்ற முதியவர், அவரது மகள் ஸ்யூலன் மற்றும் இளைஞன் வூ சன்ஹா ஆகியோர் அடங்கிய மூவர் ஒரு குடும்பம் வசித்து வந்தது. இவர்கள் வீதியில் தெருக்கூத்து போல ஆங்காங்கே நிகழ்த்தி தம் வாழ்க்கையை நடத்திவந்தனர். பல்வேறு தற்காப்புக்கலைகள் முதியவரால் மற்ற இருவருக்கும் கற்பிக்கப்பட்டன. மூவரும் நாடெங்கும் பயணித்தனர். அப்போது ஸ்யூலன் மற்றும் வூ சன்ஹா காதலில் விழுந்தனர். இலையுதிர்கால மத்தியில் எல்லையிலிருந்து ச்சீ ஜீகுவாங் அனுப்பிய ‘இராணுவப்படைக்கு புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்’ என்ற செய்தி கிடைத்தது. ஆர்வ மிகுதியால், தான் இராணுவத்தில் சேரப் போவதாக வூ சன்ஹா சொன்னதைக் கேட்டதுமே ஸ்யூலன் தன் தந்தையிடம் போய்ச் சொன்னாள். வூ சன்ஹாவைத் தன் மகனைப் போல நினைத்திருந்த முதியவருக்கு அவன் இராணுவத்துக்குப் போவது பிடிக்கவில்லை. திருமணம் செய்வித்தால் குடும்பஸ்தனாகி அவன் தன் யோசனையைக் கைவிடுவான் என்றெண்ணினார். "இளமையிருக்கும் போதே மணம் முடிப்பது நல்லது", என்று வூ சன்ஹாவுக்கு அறிவுரைகூறி, இருவரையும் அன்றைக்கே திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியதில் எளிய திருமணமும் நடந்தேறியது. ஆனால், அடுத்த தினம், வூ சன்ஹா தான் நினைத்தபடியே படையில் சேரக் கிளம்பியதும் வேறு வழியில்லாமல் தந்தையும் மகளும் அவனுக்கு விடை கொடுத்தனுப்பினர். இராணுவத்தில் வூ சன்ஹா தன் தற்காப்புக்கலைகளை நிகழ்த்திக் காட்டியதும் எல்லைக் காவலுக்கென அவன் தோங்ஜியாகோவ் என்ற தொலைத் தொடர்பு கோபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இரவு பகல் பாராமல் தன் பணியை மேற்கொண்டான். முதியவரும் மகளும் அவனை நினைத்து ஏங்கினர். கொஞ்ச காலத்துக்குப் பிறகு முதியவர் நோயுற்று படுக்கையில் விழுந்தார். இறக்கும் முன்பு மகளிடம் ஒரு கணவனைத் தெடிக் கொள்ளச் சொன்னார். ஆனால், கண்ணீரை அடக்கிக் கொண்ட ஸ்யூலன் இறுதிக் கிரியைகளைச் செய்து முடித்துவிட்டு வூ சன்ஹாவைத் தேடிப் புறப்பட்டாள். பல துன்பங்களுடனான நீண்ட பயணத்திற்குப் பிறகு தோங்ஜியாகோவ்வில் சன்ஹாவைச் சந்தித்தாள். அப்போது இரவு நேரம். சந்தித்த இருவருக்கும் பேசிப்பகிர ஏராளம் இருந்தது. இருவரும் பேசிக் கொண்டிருந்த போது எதிரிகள் உள்ளே நுழைந்து விட்டனர். அதைக் கண்டுபிடித்த வூ சன்ஹா தீப்பந்தத்தைக் கொண்டு இராணுவப்படைக்கு சமிக்ஞை செய்ய நினைத்தான். நெருப்பு எரிய முடியாமல் அப்போது மழை பெய்தது. நெருப்பை உயிர்ப்பிக்க நினைத்து அவன் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகின. அப்போது எதிரிகள் அவனை அம்பெய்திக் கொன்றனர். அங்கு வந்த ஸ்யூலன் தன் கணவன் இறந்திருக்கக் கண்டு அதிர்ந்தாள். சோகத்தையும் கோபத்தையும் அடக்கிக் கொண்டவள் உலர்ந்திருந்த தன் உள்ளாடையை எரித்து நெருப்பை உயிர்ப்பித்தாள். கனலைக் கண்ட இராணுவப்படை விரைவில் அங்கு வந்து சேர்ந்தனர். எதிரிகள் துரத்தப் பட்டனர். இருப்பினும், ஒரே ஒரு எதிரி மட்டும் தப்பித்து மீண்டும் உள்ளே நுழையப் பார்த்தான். ஸ்யூலன் தன் கையிலிருந்த ஈட்டியை அவன் முன்ன்னால் காட்டினாள். அவள் அவனைத் தாக்கும் முன்னர் அவன் தன்னிடமிருந்த ஈட்டியை அவளது உடலில் குத்திவிட்டான். அடிபட்ட அவளோ, அவனைத் தப்பவிடாமல் தொடர்ந்து போரிட்டு அவனை வீழ்த்தினாள். நாட்டைக் காத்ததால், சட்டப்படி அவளுக்கு ஒரு பெரும் பரிசு காத்திருந்தது. ஆனால், அவளோ அதை மறுத்து விட்டதுடன் தொடர்ந்து கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தன் கணவனின் பணியைச் செய்ய ஆசைப்பட்டாள். ச்சீ ஜீகுவாங்கிடம் அனுமதி பெற்று அன்றிலிருந்து எல்லையில் கண்காணிப்புப் பணியைச் செய்தாள். அப்போதிலிருந்து அவளைப் போற்றும் விதமாக அவ்வட்டார மக்கள் அந்த கோபுரத்துக்கு 'மனைவி கோபுரம்' என்ற பெயரைச் சூட்டி அழைக்க ஆரம்பித்தனர்.

மிங் முடியாட்சி மற்றும் ஸுன் முடியாட்சிகளின் இறுதியில், பெருஞ்சுவர் 1600ல் துவங்கிய மஞ்சூஸ் படைகளின் ஆக்கிரமிப்பு முயற்சிகளிலிருந்து நாட்டை தற்காக்க உதவியிருக்கிறது. ஷான்ஹாய் குவான் கணவாய் வழியாக உட்புக முயன்ற படைகளை மிங்க் படைகள் தடுத்தன. 1644ல், இவ்வழியாக நுழைவதில் மஞ்சூஸ் படைகள் வெல்ல வூ ஸன்குய் என்ற எல்லைத் தளபதி உதவினார். புதிதாய் உருவாகியிருந்த ஸ¤ன் முடியாட்சியின் மீது இவருக்கு அதிருப்தி இருந்து வந்திருக்கிறது. பெய்ஜிங்கைக் கைப்பற்றிய மஞ்சூஸ் மிங் மற்றும் ஸ¤ன் முடியாட்சிகளைத் தகர்த்து, ச்சிங் முடியாட்சியை நிறுவியது. ச்சிங் அரசாட்சியின் போது சீனத்து எல்லைகள் சுவரைத் தாண்டியும் விரிந்தன. மங்கோலியா சீனத்துடன் இணைந்து விட்டது. சுவர் கட்டும், பழுது பார்க்கும் பணிகள் நின்று போயின. ஆனால், மியாவ் என்றறியப்படும் காட்டுமிராண்டிகளிடமிருந்து தற்காக்க அதே போன்ற ஒரு சுவர் தெற்கில் எழுப்பப்பட்டது.

பெருஞ்சுவரில் ஏறும் படிகள் மிக உயரமும் செங்குத்தானவையும் கூட. ஏறும் யாருமே சட்டென்று சோர்வடைவது தவிர்க்கவியலாதது. ஏறிய பிறகும் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டியதிருக்கிறது. 'பெருஞ்சுவர் ஏறாதவன் மனிதனேயில்லை', என்று சீனத்தில் சொல்வதுண்டு. பெருஞ்சுவரின் தோற்றம் மனிதனுக்குள் ஏற்படுத்து எழுச்சி அசாத்தியமானதாக இருக்கிறது. மலை கடல் தவிர மனிதன் உருவாக்கியவற்றுள் நிலவிலிருந்து சீனப்பெருஞ்சுவரை மட்டும் தான் பார்க்க முடியும் என்ற ஒரு கருத்து உண்டு. மனிதன் நிலவில் காலடி பதிப்பதற்கு முன்பே ரிச்சர்ட் ஹாலிபர்ட்டன் என்பவர் 1938ல் எழுதிய ஒரு நூலிலும் இக்கூற்றை முன்னுரைத்திருந்தார். இருப்பினும், கண்டங்களே நிலவிலிருந்து தனித்தனியாக அடையாளம் தெரிவதில்லை எனும் போது நிலவிலிருந்து சீனப் பெருஞ்சுவரைக் காண முடியாது என்பதே உண்மை.

சுற்றுப்பயணிகள் போய்ப் பார்க்கும் பாறை மற்றும் செங்கற்களால் உருவான 7.8மீட்டர் உயரமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட 'படாலிங்', முடியான்யூ, ஷான்ஹாய்குவான் ஆகியவை பேய்ஜிங் முனிஸிபாலிடி தொடர்ந்து சீர்படுத்தியும் பராமரித்தும் வரும் மூன்று முக்கிய சுவர்ப் பகுதிகள். படாலிங்கை ஜின்ஷான்லிங் என்றும் அழைப்பர். 11 கிலோமீட்டர் நீளமும் 5-8மீட்டர் வரையிலான உயரமும் 6 மீட்டர் கீழ்த்தள அகலமும் 5 மீட்டர் மேல்பகுதி அகலமும் கொண்டது. இதன் மேலிருக்கும் 67 கண்காணிப்பு கோபுரங்களில் ஒன்று வாங்ஜிங்லோவ்.

ஆக அதிக பிரபலமும் முக்கியத்துவமும் கொண்டு மிகவும் கம்பீரமான படாலிங் பகுதி பெய்ஜிங்கிற்கு அருகில் இருக்கிறது. அரசாங்கத்தின் கவனமும் பராமரிப்பும் கொண்டிருக்கும் இப்பகுதியில் சுற்றுப்பயணிகள் மற்றும் வியாபாரிகளின் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கிறது. இயற்கையின் பின்னணியை அதிகம் விரும்புவோர் இப்பகுதிக்குச் செல்வதில்லை. அவர்களுக்கேற்றவை முடியான்யூ மற்றும் ஸிமதாய் ஆகியவை. அதே போல ஷான்ஹாய்குவான் மற்றும் ஹ¤வாங்ஹ¤வாசெங் போன்ற பகுதிகளிலும் நடமாட்டம் குறைவாக இருக்கும். ஸிமதாய் மிகக்குறைவான பராமரிப்பிருந்தும் அதிக மாற்றங்களின்றி இருக்கும் ஒரு பகுதி. இதன் கிழக்குப் பகுதியில் ஏறுவது மிகவும் கஷ்டம். உல்லாசிகளை இங்கே சந்திக்க முடியாது. கரடுமுரடும் செங்குத்தானுமான ஏற்றமாக இருப்பதால் முதியோரும் உடல்நலப் பிரச்சனையிருப்போரும் இப்பகுதியைத் தவிர்த்தல் நல்லதென்று சொல்வார்கள். அதை ஒப்பு நோக்க, மேற்கில் ஏறுவது சற்று சுலபம்.

ஜின்ஷான்லிங் கொஞ்சமும் பராமரிப்பற்றிருக்கிறது. சுற்றுப்பயணிகளோ, வியாபாரிகளோ இல்லாமல் மேலும் அதிக செங்குத்தாக இருக்கும் இந்தப்பகுதி மலையேறும் ஆர்வலர்களுக்கேற்றது. ஜின்ஷான்லிங்கின் தென்கிழக்கில் இருப்பது முடியான்யூ. இது, தென்கிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி சுமார் 2.25கிலோமீட்டர் தூரத்துக்கு கரடு முரடான மலையில் மேற்கில் ஜுயோங்குவான் கணவாயிலும் கிழக்கில் குபேய்கோவ் கணவாயிலும் இணைக்கப் பட்டதைப் போல அமைந்திருக்கிறது. ஸோங் காலத்து ஆலயமான மெங் ஜியாங்-நூ இங்கிருப்பதால் முடியான்யூ சீனப்பெருஞ்சுவரைக் குறித்த அருங்காட்சியகம் என்றும் அறியப்படுகிறது. ஜியாஷான், ஜ்யூமென்கோவ் போன்ற பகுதிகளும் பெருஞ்சுவரில் இருக்கின்றன. ஜ்யூமென்கோவ் மட்டும் தான் பாலத்தின் மீது அமைந்துள்ள ஒரே பகுதி.

உலகிலேயே மனிதன் உருவாக்கி ஆகப் பெரிய கட்டுமானமான பெருஞ்சுவரின் அவ்வந்த பகுதி சுவரும் அவ்வந்த இடத்தில் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்தே கட்டப்பட்டிருக்கிறது. பெய்ஜிங்கிற்கு அருகில் கட்டப்பட்ட சில பகுதிகளில் சுண்ணாம்புக் காளவாயிலிருந்து பெறப்பட்ட பெரிய சுண்ணக் கட்டிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். வேறு சில இடங்களில் சூளைச் செங்கலும் மற்றும் சில இடங்களில் கடப்பைக் கற்களும் பயன்பட்டிருக்கின்றன. இரண்டு மண்சுவர்களை அருகருகில் எழுப்பி, பின்னர் அவற்றுக்கிடையில் கரளைக் கலவையை நிரப்பி ஒரே சுவராக உருவாக்கியுமிருக்கிறார்கள். வேறு சில இடங்களிலோ கற்களுக்கிடையில் முட்டையின் வெள்ளைக்கருவும் பசைத் தன்மையுடைய அரிசி நுணுக்கலையும் கலந்து பூசியிருக்கிறார்கள். மேற்கு கோடியிலுள்ள பாலைநிலத்தில் நல்ல கட்டுமானப் பொருட்கள் மிக அரிது. ஆகவே, மரச்சட்டத்தினால் சுவர் எழுப்பி, கிடைத்த சொற்ப மண்ணைக் கொண்டு ஒட்டி நெய்யப்பட்ட பாய்களால் சேர்த்திணைத்திருக்கிறார்கள்.

ஷான்ஹாய்குவான் கணவாயில் கிழக்கு வாயிலில் 'சொர்க்கத்தின் கீழிருக்கும் முதல் கணவாய்' என்ற பொருளில் ஐந்து சித்திர எழுத்துக்கள் கொண்ட சின்னம் ஒன்று இன்றும் தொங்கிக் கொண்டிருக்கக் காணலாம். இது அவ்விடத்துக்கே ஒரு கம்பீரத்தையும் மதிப்பையும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. அதை எழுதியது யார் என்பதற்கு சுவாரஸியமான நிகழ்வு ஒன்றைச் சொல்வார்கள். மிங் காலத்தில் (1368-1644) ஸியாவ் ஸியேன் என்ற ஒரு தூரிகையெழுத்துக்கலை நிபுணர் இருந்திருக்கிறார். அவர் மிகவும் நேர்மையானவர். அதுவே மற்ற ஊழல்மிகுந்த அரச ஊழியர்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை வெறுத்தனர். ஆகவே, தன் பதவியைத் துறந்து தன் கிராமத்துக்கே திரும்பினார் ஸியாவ் ஸியேன். ஷான்ஹாய்குவான் கணவாயில் கிழக்கு வாயிலுக்கேற்ற சின்னத்தை உருவாக்க பேரரசர் ஆணையிட்டார். ஸியாவ் ஸியேன் தவிர வேறு யாருக்கும் இந்தப்பணியைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்று கணவாயின் பொறுப்பில் இருந்த அதிகாரிக்குத் தெரியும். தூரிகையெழுத்துக்கலையில் அவர் தான் சிறந்தவர் என்று நாடே அறிந்திருந்தது. ஆகவே, ஸியாவ் ஸியேனை அணுகி வேண்டியதும் அவரும் செய்து தர மனமுவந்து ஒப்புக் கொண்டார். அவர் உடனே தன் வேலையைத் துவங்கவில்லை. அடுத்து வந்த நாட்களில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டதுடன், விவசாயப்பணிகள் அனைத்தையும் செய்தார். இட்ட பணியைத் துவங்காது தாமதம் செய்த ஸியாவ் ஸியேனைப் புரிந்து கொள்ள முடியாது தவித்தார் அதிகாரி. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, சின்னம் உருவாகும் பணியை மேற்பார்வையிட அரச அதிகாரி வந்தார். ஸியாவ் ஸியேன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்ட அந்த அதிகாரி, "எப்போது சித்திர எழுத்துக்களை எழுதப் போகிறீர்கள்?", என்று வினவினார். அதற்கு ஸியாவ் ஸியேன், "அவ்வாறான எழுத்துக்களை எழுதுவதொன்றும் எளிதல்ல. எனக்கு கொஞ்ச காலத்துக்கு பயிற்சி தேவை என்றார். தன் ஆன்மபலத்தையும் வளர்த்தெடுத்த ஸியாவ் ஸியேன். ஒருநாள், "ம்,.. இனி எழுதலாம்", என்றார். தன் தூரிகையையும் காகிதத்தையும் எடுத்து 'சொர்க்கத்தின் கீழிருக்கும் முதல் கணவாய்' எனும் பொருளில் ஐந்து எழுத்துக்களையும் தீட்டினார். அதிகாரி ஓடிச்சென்று அவ்வெழுத்துக்களைச் சின்னத்தின் மீது பிரதியெடுத்து ஒட்டினார். வாயிலில் மாட்டப்பட்டதும் தான் எழுத்துக்களில் இருந்திருக்க வேண்டிய ஒரு சிறு கீற்றைக் காணோம் என்றுணர்ந்தனர் எல்லோரும். ஸியாவ் ஸியேன், சட்டென்று தன் கைக்குட்டையை எடுத்து அதை கெட்டியான சீன மையில் தோய்த்தெடுத்து பிழிந்து மேலே தொங்கிக் கொண்டிருந்த சின்னத்தின் மீது எறிந்தார். சரியான இடத்தில் சரியான அளவில் ஒரு கீற்று திருத்தமாய் உருவானது. சித்திர எழுத்துக்கள் முழுமையும் அழகும் கொண்டு திகழ்ந்தன. ஸியாவ் ஸியேனுக்கு அமானுஷ்ய கைகள் இருப்பதாக எல்லோரும் சிலாகித்தனர். ஆனால், ஸியாவ் ஸியேன் செய்ததெல்லாம் கையின் பலத்தையும் கையசைவுகளின் நுட்பங்களையும் அன்றாட வேலைகளில் பழகினார். தூரிகையெழுத்துக்கலையை அவர் தினமும் பயிலவில்லை. தோளில் தொங்கிய மூங்கில் கட்டிய நீர்வாளிகளைச் சுமப்பது, ஏர் ஓட்டுவது, கிணற்றில் நீர் இறைப்பது போன்ற எல்லா வேலைகளையும் செய்தே அவ்வரிய கலையைத் தன் வசமாக்கினார். முக்கியமாக, ஆன்மபலத்தில் தன் முழுக்கவனத்தையும் குவித்தார். 'மையத்தை மனதில் பிடித்துக் குவித்து ஆன்மபலத்தைக் கூட்டும்' முக்கிய பாடத்தை உலகுக்குக் கற்பித்தார்.

சீனாவுக்கு 17-20ஆம் நூற்றாண்டுகளில் மேலைத் தொடர்புகள் ஏற்பட்ட போது சீனப்பெருஞ்சுவரின் மகத்துவமும் சிறப்பும் சுற்றுப்பயணிகளால் வெளியுலகுக்கு தெரிய வந்தது. 20ஆம் நூற்றாண்டில் மறுநிர்மாணமும் புனரமைப்பும் நடந்தன. உலக அதிசயங்களுள் ஒன்றாக கிரேக்கர்களால் அங்கீகரிக்கப்பட்ட இச்சுவர் யுனெஸ்கோவால், 1987ல் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் இச்சுவரின் 80கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பகுதி மட்டுமே அன்றாடம் ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகளை ஈர்க்கிறது. அரசாங்கமும் சுற்றுப்பயணிகளுக்கென்றே சுவரின் மேலும் சில பகுதிகளான தியான்ஜினின் ஹ¤வாங்யாகுவான், ஹீபேய்யின் ஷான்ஹாய்குவான் மற்றும் கான்ஸ¤வின் ஜியாய்யுகுவான் போன்றவற்றைத் திறந்துள்ளது. பெருஞ்சுவரின் அனைத்துப் பகுதிகளையும் காண்பதென்பது நடக்கக் கூடியதல்ல. அதற்கு அதிக காலமும் செலவும் பயணமும் தேவைப்படும்.

சுவரின் பகுதிகளில் மீதமிருப்பது எத்தனை என்றும் எத்தனை முற்றிலும் சிதைந்துள்ளன என்றும் தெரியாமலே இருக்கிறது. ஏனெனில், இதற்கு முறையான துறையோ, ஆய்வோ, பதிவேடோ இல்லாமலே இருக்கிறது. சுற்றுப் பயணிகளுக்கென்று பாதுகாக்கப்பட்டிருக்கும் தலைநகரை அடுத்திருக்கும் மிகச்சின்ன பகுதியைத் தவிர உள்ளடங்கிய ஊர்களிலிருக்கும் மற்ற பெரும்பகுதிகள் கவனிக்கப் படாதிருக்கின்றன. சில இடங்களில் சுவரை கிராமத்துப் பிள்ளைகள் விளையாடும் தளமாகப் பயன்படுத்துகிறார்கள். வேறு சில இடங்களில் சாலையைச் செப்பனிடவும் தம் வீடுகளைச் செப்பனிடவும், தொழுவம் கட்டவும், கழிவறை கட்டவும் பொதுச்சொத்து என்ற பிரக்ஞையில்லாத கிராமத்தினர் பெருஞ்சுவரின் செங்கற்களையும் பிற கற்களையும் உறுவி எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். கல், மண், செங்கல் போன்றவற்றைச் சுவரிலிருந்து எடுப்பதும், நவீன சீனத்தின் விரைவுச்சாலைகள் உருவாவதும், சுற்றுப்பயணிகள் அதிகரிப்பும் பெருஞ்சுவர் சிதைவுக்கு வழிவிட்டாலும் உள்ளூர் மக்கள் சமீப காலங்களில் சுவரைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் விளைவாக சிலர் தாம் அறிந்தவரை கையில் கிடைத்த பொருளை வைத்து சுவரின் சின்னச் சின்ன பழுதுகளைச் சரி செய்ய முயல்கிறார்கள். உண்மையில் இதுவுமே வரலாற்று முக்கியத்துவத்திற்கும் சுவரின் பழமையைக் கண்டறிவதற்கும் அதன் தனித்துவத்துக்கும் அவர்கள் செய்யும் இடையூறு தான் என்பதை அவர்கள் உணராதிருக்கின்றனர்.

அழகிய மலைகளில் மீது சுதந்திரமாகப் பறக்கும் ஒரு பிரமாண்ட டிராகனை நினைவுபடுத்தும் பெருஞ்சுவரின் நிலை இன்று பழங்காலம் போலில்லை. பிரமாண்டமும், மிகமிக நீளமும் பல்வேறு கட்டுமான முறைகளும் கொண்ட பெருஞ்சுவரைப் பராமரித்துக் காப்பதென்பது எளிதான காரியமில்லை. இயற்கையும் மனிதனும் சேர்ந்து செய்யும் செயல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது. புயல்கள் தவிர பூகம்பங்களும் நில அதிர்வுகளும் கூட சேதத்துக்கு துணைபோகின்றன. பராமரிப்புக்குட்பட்ட மிகச்சில பகுதிகள் தவிர மற்ற எல்லாப் பகுதிகளுமே மிகப்பெரிய புல்வெளிகளிலும் பிரமாண்ட பாலைநிலங்களிலும் காற்று, உறைபனி மற்றும் மழையில் கிடக்கின்றன. உலகம் அறியும் முன்னரே பலபகுதிகள் மண்ணில் புதைந்து போயின. அடுத்த 20 ஆண்டுகளில் கான்ஸு மாநிலத்தில் இருக்கும் சுவரின் 60 கிலோமீட்டர் பகுதி புயல்காற்று மணல் காற்றுகளால் முற்றிலும் மறைந்து போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐந்திலிருந்து இரண்டு மீட்டராக உயரம் குறைந்து போயிருக்கும் இப்பகுதிச் சுவர்களிலிருந்த பழமை வாய்ந்த கண்காணிப்பு கோபுரங்கள் எல்லாம் ஏற்கவே சிதைந்து மறைந்தாயிற்று. மேற்கின் பெரும் பகுதிகள் மண் மற்றும் செங்கல், பாறைகளால் உருவாகியிருப்பதால் இயற்கை ஏற்படுத்தும் மாற்றங்களைச் சமாளிக்கின்றன. இராணுவ மற்றும் தற்காப்புப் பயன்களை இழந்திருக்கும் பெருஞ்சுவர் தற்காலத்தில் பழந்தொழில்நுட்பத்தின் ஆதாரமாகவும், கம்பீரத்தின் குறியீடாகவும் பிரமிப்பூட்டும் பிரமாண்டமாகவும் சீனக்கலாசாரத் தொன்மையாகவும் நிற்கிறது.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768