|
(கலை இலக்கிய விழா
சிறுகதைத் திறனாய்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
கருத்துக்கள் ஈசல்கள் போலப் பெருகியும், சுய விமர்சனம் மண்புழுப் போல
அருகியும் வருகிற காலத்தில் நாம் இருக்கிறோம். எனக்கிடப்பட்டிருக்கும்
பணியினைத் தொடங்கும் முன் இலக்கியப் பிரதிகள் குறித்து விமர்சனம்
முன்வைக்கும் அளவிற்கு எனக்கிருக்கும் தகுதியினை யோசித்து பார்த்தேன்.
ஆழமாக யோசிக்காமலேயே தகுதியின்மையின் இருள் என்னைக் கவ்வி கொள்கிறது.
இலக்கிய விமர்சகன் என்பவன் அழகியல் உணர்வுள்ளவனாக இருப்பதோடு, சமூகம்
தழுவிய கூறுகளான உளவியல், சமூகவியல், மானுடவியல், அறிவியல், தத்துவம் என
விரியும் தளங்களோடு விரிந்த வாசிப்பும், சிந்தனையும் உள்ளவனாக நான்
அடையாளம் கண்டு கொண்டிருக்கிறேன். ரசனையின் அடிப்படையில் விமர்சனத்தை
முன்வைத்த க.நா.சுவாகாட்டும், மார்க்ஸிய அடிப்படையில் விமர்சனங்களை
முன்வைத்த கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, தி.க.சி போன்றவர்களாகட்டும்,
அமைப்பியல்வாதத்தின்படி விமர்சனங்களாக முன் வைத்த தமிழவனாகட்டும், பின்
நவீனத்துவ விமர்சகர்களான பிரேம் ரமேஷ் மற்றும் அ.மர்க்கஸ் ஆகட்டும், தலித்
விமர்சகர் ராஜ் கௌதமன் ஆகட்டும். ஈழ விமர்சகர்களான கைலாசபதி, க.சிவதம்பி,
M.A நுக்மான், மு.தளையசிங்கமாகட்டும் நான் மேற்கூறிய விரிவான வாசிப்பும்
சிந்தனையும் இவர்களுக்கு உண்டுயென்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
நல்ல விமர்சகனின் மற்றொரு முக்கியத் தகுதியாக நான் எண்ணுவது படைப்பின்
இடைவெட்டாக பிளந்து வாழ்வைப் பற்றிய புரிதலை புதிய உரையாடல்கள் மூலம்
மேலும் விரிவாக்குவது. இதன் அடிப்படையில் நோக்கும்கால் வல்லினத்தில்
வெளிவந்த சிறுகதைகளை பற்றி நான் முன் வைக்கும் திறனாய்வு, விமர்சனங்கள்
என்பதைவிட, படைப்பு சார்ந்த கருத்துக்கள் என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.
உண்மையில் புத்திலயக்கியங்கள் என்று நாம் நம்பும் வகைகளில் சிறுகதை
வடிவத்தை நான் மிகப் பிந்தியே வாசிக்க ஆரம்பித்தேன். அதிலும் அங்கொன்றும்
இங்கொன்றுமாக வாசித்துக் கொண்டிருந்தவனுக்கு மா. சண்முகசிவா வழங்கிய ஓர்
ஆலோசனை உறுதுணையாக அமைந்தது. அவர் சொல்லியபடி ஒரு எழுத்தாளரின்
குறைந்தபட்சம் 1 சிறுகதை தொகுதியை வாசிப்பதென முடிவெடுத்துக் கொண்டேன்.
இடையில் தமிழில் முக்கிய விமர்சகர்களின் விமர்சனங்களை வாசித்திருந்தாலும்
சிறுகதை குறித்து புதிய விமர்சனங்களை முன் வைக்கும் ஆற்றல் எனக்கில்லை.
ஆகஸ்ட் 2008 தொடங்கி மார்ச் 2009 வரையில் வல்லினத்தில் வந்த சிறுகதைகளில்
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதின் எண்ணிக்கை 14. ஜூன் - ஆகஸ்டு (1 கதை),
செப்டம்பர் - நவம்பர் (11 கதைகள்), ஜனவரி - மார்ச் (2 கதை).
செப்டம்பர் - நவம்பர் 2008 வல்லினம், சிறுகதைச் சிறப்பிதழாக வந்ததால்
அதிகக் கதைகளைக் கொண்டிருந்தது. இதில் வந்த மொழிப்பெயர்ப்பு சிறுகதைகளை
நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மஹாத்மன் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு
நூலாக வெளிவருவதும் அதற்கு சிவா பெரியண்ணன் கருத்துரைக்க இருப்பதாலும்
அவருடைய கதைகளையும் நான் கணக்கிலெடுக்கவில்லை.
ஜூன்- ஆகஸ்டு 2008
சின்னப் பொண்ணு சின்னப் பையன் சிரிச்சுக் கட்டுன தாலி - சிதனா
சிறுகதைகள் தார்மீகமான செயல்பாடுகளுக்கு முக்கியம் தருபவை. இக்கதையின்
கதைச்சொல்லி மனைவி பிரசவம் ஆகியிருக்கும்போதே பக்கத்து வீட்டுப் பெண்ணோடு
சோரம் போனவன், மனைவி ஜெயிலுக்கு போனபின் தன் கைக்குழந்தை என்ன கதி
ஆனதென்பதைக்கூட பொருட்படுத்தாதவன், கதை நெடுகிலும் அதைப் பற்றிக்
கொஞ்சம்கூட வருத்தப்படாதவன். இந்த கதை குடும்ப அமைப்பு ஏற்படுத்துகிற
பெண்கள் மீதான வன்முறையை முன் வைக்க முயல்கிறது. ஆனால் பெண்களின் உணர்வுகளை
ஆணின் பார்வையில் முன் வைக்கிறார் சிதனா. ஆதிக்க ஆண்களால் பெண்களைப்
புரிந்துகொள்ள இயலும் என சிதனா நம்புகிறார் போலும். எனக்கு இம்மியளவும்
நம்பிக்கையில்லை.
செப்டம்பர் - நவம்பர் 2008 (11 கதைகள்)
அம்மாவுக்கு மணி கிடைத்தது - ம.நவீன்
குடும்ப அமைப்பு தன்னுள் தேக்கி வைத்திருக்கும் வன்முறை மிகவும்
குரூரமானது. மேலோட்டத்தில் பாசப்பிணைப்பான குடும்பங்கள்கூட கொஞ்சம்
நெருங்கிப் பார்த்தால் பல சோகமான சொல்ல முடியாத துயரங்களைக்
கொண்டிருக்கும். அதுவும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பெண்களைப் பற்றிச் சொல்லவே
வேண்டாம். கதை ஈர்க்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின்
குரலாக மணிச் சத்தம் கதையினூடே வளர்கிறது. மணியின் ஓசை தாள முடியாத
ஒருநாளில் மணி காணாமல் போகிறது. அதன் பின் அம்மா என்னவாகிறாள்? அதைப் பற்றி
நமக்கு என்ன அக்கறை. அப்பாவுக்கு டிவிடி மல்யுத்தம் முக்கியம். மகனுக்கு
சுகுனா இருக்கிறாள். அப்பாவின் கதாபாத்திரத்தை இன்னும் விரிவாகச்
சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பான கதையாக இருந்திருக்கும். நவீனிடம்
அபாரமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. புதிதாக எழுத வரும்
எழுத்தாளர்களுக்கே உள்ள சிறுகதை வடிவத்தில் உள்ள குழப்பம் நகைச்சுவை உணர்வை
நக்கலாக மாற்றிவிடும் அபாயம் உண்டு. நவீனின் மொழி இவை இரண்டுக்கும் நடுவே
ஊசலாடும் ஆச்சரியமான மொழி. தொடர்ந்து எழுதுவதன் மூலம் இன்னும் நல்ல
சிறுகதைகள் ம.நவீனிடமிருந்து சாத்தியமாகும் என்பது என் கருத்து.
காத்திருப்பின் கரையும் கணங்களும் சில பதிவுகளும் - சீ.முத்துசாமி
சீ.முத்துசாமியின் சிறுகதைகள் கவனமான வாசிப்பைக் கோருபவை. நுனிப் புல்
மேய்பவர்களுக்கு சீ.முத்துசாமியிடத்தில் எந்த வேலையுமில்லை. வாழ்வினால்
சிதைக்கப்பட்டவர்களின் குரல்களே அவர் கதைகளாக உருமாறுகின்றன. ஆனால்
இக்கதையில் இன்றும் சில படிகள் மேலே செல்கிறார். சீனக் கிழவன் குப்பை
பொறுக்குவது நமக்குக் கேவலம். ஏனெனில் தமிழர்கள் மானமுள்ளவர்களாம்.
அம்மாவைக் கூட்டிக் கொடுக்கும் போதும், பண்டாராயாகாரனை கண்டதும் சாமி
நடுங்கும் போதும் வீடு ஏலம் போகும் போதெல்லாம் நமக்கு மானம் போவதில்லை. இது
மனப் பிரச்சனை. வெள்ளைக்கார முதலாளிகளிடமிருந்து அரசாங்க பிணாமிகளுககு
தோட்டங்கள் கைமாறிய சமயத்தில் நிகழ்ந்த பட்டணப் பிரவேசத்தின்போது இந்திய
மக்களின் நலத்தை பற்றி அரசாங்கத்திற்கு எள்ளளவும் அக்கறையில்லை. நமது
தலைவர்களுக்கு பதவி நாற்காலியை சூடேற்றுவதிலும், பணபெட்டியைக்
கையிலேந்துவதிலுமே நேரம் போதுமானதாக இருந்தது. யார் கைவிட்டாலும்
சிட்டுக்குருவிகளுக்கு இரையிடுவதை நொண்டி பாலா கைவிடப் போவதில்லை.
எங்குபோனாலும் இந்தக் கதையில் வரும் குப்பை பெருக்கும் கிழவனின் பாத்திரம்
மிக முக்கிய இடைவெட்டாக இருக்கிறது. குப்பைகளிலும் பணம் பண்ண
தெரிந்தவர்களாக சீனர்கள் இருக்கிறார்கள். நம்மை போலக் கூலிகளாய்
வந்தவர்கள்தான் அவர்களும். குப்பைப் பொறுக்குவதை கேவலமாக நினைக்கும்
கலாச்சாரம் கூட்டி கொடுப்பதை ஏன் அப்படி நினைப்பதில்லை. இத்தகைய கலாச்சார
சார்ந்த முரண்பாடுகள்தான் நம் சமூகத்தின் இன்றைய பின் தங்கிய நிலைக்குக்
காரணமா? முக்கியமான கேள்வியை தொக்கி வைத்திருக்கும் கதை.
மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கன்னியம்மனும் - மா.சண்முகசிவா
மலேசியாவில் பெயரில்லாமலேயே இன்னாருடைய கதைதான் என்று உறுதியாகச்
சொல்லமுடியுமென்றால் அது மா.சண்முகசிவாவை மட்டும்தான் என்று நினைக்கறேன்.
அவருடைய கதைகளில் ஒதுக்கப்பட்டவர்களின் மீதான பரிவு, ஆங்காங்கே தெளித்து
விடும் நகைச்சுவை, அடக்கமான மொழி, கச்சிதமான அழகியல் போன்றவற்றை மையசரமாக
தொகுத்துக் கொள்ளலாம். முனியாண்டியை போல முறையான கல்வி கற்காதவர்களும்,
ஏழைகளும் மூட நம்பிக்கையில் எளிதாகச் சுரண்டட்படுவது நம்மால் புரிந்துகொள்ள
முடிகிறது.
ஆனால் சமூகத்தின் அத்தனை கேவலங்களிலும் தம்மை இணைத்துக்கொண்டு சுகவாழ்வு
வாழ்ந்துகொண்டிருக்கும் ரட்னராஜா போன்றவர்களை மெல்லிய நகைச்சுவை மூலம்
கடக்க முயல்வது எனக்கு சரியாகப்படவில்லை.
மிக சிறந்த கதைகளை எழுதக்கூடிய மா.சண்முகசிவாவின் கதைகளில் ஒரு ‘mediocre’
தன்மை இருப்பதற்கு, படைப்பை அதன் உச்சம் வரை எதிர்கொள்ள அவர் தயங்குவதே
காரணமாக சொல்வேன். சார்லி சாப்ளினின் ‘Dictator’ சினிமா பலருக்கு ஞாபகம்
இருக்கலாம். ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் படும் வேதனையை நகைச்சுவையின் மூலமே
படத்தை நகர்த்திக் கொண்டிருப்பார் சார்லி சாப்ளின். படத்தின் கடைசிப்
பகுதியில் துக்கம் தாளாது வாழ்வு தரும் வேதனைகளைப் பற்றியும், மனிதர்களின்
முட்டாள்தனம் மற்றும் பேராசைப் பற்றியும் குறைந்து வருகிற மனித நேயத்தைப்
பற்றியும் ஆவேசமாக உரையாற்றத் தொடங்குவார். அந்த தருணத்தில் அவர் முகத்தில்
தவழும் ஆவேசமும், கண்களில் தளும்பும் கருணையும், அன்பின் தழுதழுப்பும்
பார்ப்பவர்களை நிச்சயம் உலுக்கி கண்ணீர் விடச்செய்யும். படைப்பு தன்னை
திறந்துகொள்ளும் அதியற்புத கணம். மா.சண்முகசிவா இதையெல்லாம் முன்பு
சொன்னதாக ஞாபகம்.
தேரும் தேவர்களும் - கோ.முனியாண்டி
பெற்றோர்கள் இருந்தும் பாட்டி தாத்தாவோடு வளரும் குழந்தைகளின் உளவியல்
சற்று வித்தியாசமானது. பாதுகாப்பின்மையை நித்தமும் உணரும் சூழல் அது. தன்னை
நோக்கி வரும் கடுகளவு நேசத்தையும் முழுமையாகத் தனதாக்கும் திறன் இருக்கும்
குழந்தைகளாக இருப்பார்கள். மாணிக்கம் மாமா மலையளவு அன்பை தந்தவர். அவரை ஒரு
பேருந்துப் பயணத்தில் நினைவு கூர்வது விசித்திரமாக இருக்கிறது. அன்பு
எப்போதுமே விசித்திரமானதுதான்போல. கோ.முனியாண்டியின் கதை சொல்கிற பாணி
நிச்சயம் புதுமையாக இருக்கின்றது. எளிமையான மொழியில் சிக்கலான புரிதல்கள்
கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. இது கோ.முனியாண்டியின்
பிரச்சனையல்ல. முயன்று படித்து புரிந்துகொள்ள முயல்வது நல்ல வாசகனின் கடமை.
இறந்த காலத்தின் ஓசைகள் - கே.பாலமுருகன்
நினைவின் படிக்கட்டுகளில் தவறி விழும் வயோதிக காலம் குரூரமானதுதான். அப்படி
விழும்போது தடுக்க நினைப்பவர்களின் கைகளையும் தட்டிவிடும் சூழல்
அவலமானதுதான். பாலமுருகன் தேர்ந்துகொள்ளும் கதைச் சூழல் முக்கியமானதாக
நினைக்கிறேன். பொதுவாக சமூகத்தில் ஒதுக்கப்படும் அல்லது அதிகமாக
கவனிக்கப்படாத கதாபாத்திரங்கள் அவருடைய கதைகளில் இருப்பது முக்கியமானது.
ஆனால் இந்தக் கதை வாழ்வின் இருண்ட பகுதியில் உழன்று கொண்டிருக்கும்
மனிதர்களின் வாழ்வை ஒட்டியது. மனதின் ஆழத்தின் முகிழ்த்து வந்திருக்க
வேண்டிய மொழி, மேல்மட்டத்திலேயே நகர்ந்து முடிவது ஏமாற்றமே. முக்கியமான
கதையின் பலவீனமான உரையாடல் பகுதி, கதைக்குத் தந்திருக்க வேண்டிய
இறுக்கத்தைச் சிதைத்து விடுகிறது.
வழிப்போக்கன் - பா.அ.சிவம்
வழிபோக்கன் கதை தன்னுள்ளே இரண்டு சிறுகதைகளை உள்ளடக்கி வைத்திருப்பதாக நான்
உணர்கிறேன். அதில் ஒன்று நல்ல சிறுகதை. அந்த நல்ல சிறுகதை கதையின் தொடக்க
வரியில் ஆரம்பித்து ‘அவர் என்னை நிமிர்ந்துகூடப் பார்த்தது கிடையாது’ என்ற
வாக்கியத்தோடு முடிகிறது. இன்றைய தனிமனிதர்கள் ஒருவரையொருவர் சந்தேகக்
கண்களோடு அணுகி வருவதை இயல்பாக சொல்லும் கதை. இந்த சந்தேகங்கள் இயல்பான
அன்பைக்கூட பகிர முடியாத நிர்பந்தங்களை அழகாக சொல்கிறது. தங்கு தடையற்ற
இயல்பான நடை. மற்றொன்றை பற்றி வேண்டாம் என்று நினைக்கிறேன். கனியிருப்ப
காய் கவர்ந்தற்று.
தேங்கும் மழைத்துளிகள் - யோகி
கனவுகள் விசித்திரங்களால் ஆனது. மனதின் ஆழ இருளில் ஒளிந்துகொண்டும்
எரிமலையாய் கனன்று கொண்டு அவ்வப்போது வெடித்துக் கொண்டும் இருக்கும்.
சிந்தனை வெளிச்சத்தில் மூடநம்பிக்கை என்று எளிதாக ஒதுக்கித் தள்ளிக்கொண்டு
போகலாம்; ஒதுக்க முடியாத கனவுகள் பீடிக்கும் வரை. யோகி சிறுகதை எழுதுவதில்
புதியவர். பாத்திர வார்ப்புகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
முக்கியமாக கதை சொல்லியின் பின்னணி பற்றி மேலும் விரிவாகச்
சொல்லியிருந்தால் கதைக்கு கூடுதல் பலம். சிறப்பாக கதைசொல்லியின் விசித்திர
கனவுகளைப் பற்றி மின்னல் வெட்டாக முன்னமே கதையில் இங்கும் அங்குமாகக் கோடி
காட்டியிருந்தால் இறுதி முரண் வலிமையாக அமைந்திருக்கும்.
கண்டடைதல் - சுப்பிரமணியம் ரமேஷ்
‘சஞ்சிக் கூலிகள்’ என்று சற்றுப் பெருமையாக சொல்லிக் கொண்டாலும் ஆப்பிரிக்க
அடிமைகளுக்கு நிகரானவர்கள்தான் நம் மூதாதைய தமிழர்கள். வேலை குறித்து
தமிழர்களின் பார்வை இன்றும் ஓர் அடிமையின் அணுகலாத்தான் இருக்கிறது. வேலையை
மகிழ்ச்சியாய் செய்யும் மனநிலையை நாம் எப்போதும் அறிந்ததில்லை. இந்த
அடிமைப் புத்திக்கு ‘கடின உழைப்பு’ என்று புதுப்பெயர் தரக் கூடத்
தயங்கமாட்டோம். இந்த சூழலுக்கு நாம் மட்டும் காரணமில்லை என்றாலும், சூழலை
மாற்றும் செயல்பாடுகள் இல்லாதது நம் குறைதானே.
சிறுகதையின் வடிவம் குறித்து நல்ல பிரக்ஞையுடை காதிசிரியரின் இக்கதை,
செயற்கையான நடையினால் மனதில் ஆழமாக இறங்க மறுக்கிறது.
குறுணைக்கஞ்சி - அ.ரெங்கசாமி
இக்கதையில் கூறப்பட்டிருக்கும் அவலங்கள் ஐயா போலவே எனக்கும் கோபத்தை
ஏற்படுத்துகிறது. ஆனால் இது சிறுகதை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாதது
பற்றி பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு குருவி சந்தித்த எரிமலை - ஏ.தேவராஜன்
முறிவடைந்த குடும்பத்தின் குழப்பங்கள் ஊடே மனம் சிதைவடையும் குழந்தையின்
கதை. இத்தகைய குழந்தைகள் தற்கொலை செய்யுமளவுக்கு போவது மிகவும் அரிதுதான்.
கதையின் மொழி குழந்தைகள் உலகத்துக்கு மிகவும் அந்நியமான மொழி. இதுவே
இக்கதையை மேலும் நெருக்கமாக உணரத் தடையாக இருக்கிறது.
முகவரியில்லா முகம் - மஸிதா புன்னியாமீன்
கதை ஏன் மனதில் நிற்க மறுக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். கதையில்
மையப்புள்ளி தெளிவாக வரையரைக்கப்படவில்லை அல்லது நகர்த்தி செல்லப்படவில்லை
என்பது என் தாழ்மையான கருத்து. தண்ணீர் சார்ந்த சியாமாவின் பிரியமும்
சுனாமி பேரிடரின் இணைப்பும் சரியாக கதைக்குப் பொருந்த கதாசிரியரின் மொழி,
தடையாக இருக்கிறது. கதை சொல்லல் மொழி ஈர்ப்பாக இல்லை. யதார்த்த சிறுகதையாக
இருந்தும் இலங்கையில் நடக்கும் போர் சார்ந்த சூழல் கதையினூடே
எழுப்பப்பட்டிருந்தால் இன்னும் இயல்பாக இருக்கும்.
ஜனவரி - மார்ச் 2009
முன் எப்போதோ வாழ்ந்திந்த அரச மரங்களும் நகரமாகிபோன மண்ணும் -
கோ.முனியாண்டி
மலேசியாவில் கதை சொல்லிகள் என வகைப்படுத்தப்படும் எழுத்தாளர்கள் இல்லை
என்றே சொல்ல வேண்டும். ஒரு கதைசொல்லியைப் போல இக்கதையை அமைத்திருந்தாலும்
இக்கதையில் செயல்படும் உத்தி கோ.மு.வை எழுத்தாளர் என வகைப்படுத்தவே
செய்கிறது. கதைசொல்லிகளிடம் வெளிப்படும் வடிவம் மீறிய கதைகள் கோ.மு.விடம்
இல்லை. மிகப் பொறுமையான வாசகனைக் கோருகிறார் கோ.மு. 1950களுக்குப் பிறகான
சித்தியவானை சுற்றிலும் உள்ள தோட்டம் மற்றும் கடல் சார்ந்து வாழ்ந்த
இந்தியர்களின் வாழ்வின் பதிவாக இக்கதை அமைந்துள்ளது. இக்கதை
இந்தியர்களிடையே சிறுபான்மையரான தெலுங்கர் சார்ந்த வாழ்வையும், தமிழ்
சார்ந்த மைய நீரோட்டத்தோடு எப்படி அவர்களுடைய வாழ்வு இணைக்கப்பட்டுள்ளது
என்பதையும் நுட்பமாகப் பதிவு செய்கிறார். வரலாற்றில் மவுனமாக்கப்படும்
குரல்களையும் பதிவு செய்வது எழுத்தாளனுடைய கடமை. கோ.மு. இக்கதைகளை இன்னும்
விரிவான நாவலாக எழுதும்பட்சத்தில் சிறப்பாக இருக்கும்.
வனவாசம் போகும் ராமர்கள் - செ.ராஜேஸ்வரி
தோழி செ.ராஜேஸ்வரியின் கதையைப் படித்ததும் எனக்குத் தோன்றிய சில
சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். நல்ல படைப்பு என்பது மொன்னைத்தனமாக
தடித்த எருமை தோலால் சுற்றப்பட்டு சுரணை இல்லாமல் இருக்கும் சமூக நடைமுறையை
கடுமையாகக் கேள்விகளால் குத்திக் கிழிப்பது, அல்லது அதிகாரம்
கட்டமைத்திருக்கும் ஒடுக்குமுறைகளை அஞ்சாமல் கேள்வி எழுப்புவது, அல்லது
வாழ்வின் முடிவுறாத கேள்விகள் முன் நிலைகுலைந்து போகாமல் தைரியமாய்
எதிர்கொள்வது, சாத்தியமில்லாத சூழலிலும் தெறித்து விடும் அன்பு போன்றவை
உடனே எழுத முடிபவை. செ.ராஜேஸ்வரி, கதை மீறல்களை விடுத்து ஆணாதிக்கத்தின்
யதார்த்தத்தோடு தன்னை இணைத்துக்கொள்ளும் பெண்ணின் கதையை சொல்கிறார்.
யதார்த்தத்தோடு இணைத்துக்கொள்வது நல்ல படைப்பாகாது. எனக்கு நிச்சயமாக
உடன்பாடில்லை தோழி.
இச்சிறுகதைகளை எல்லாம் படித்து முடித்த போது, எனக்குத் தோன்றிய எண்ணங்கள்
இதுதான். சிறுகதையை அக்கறையுடனும், தீவிரத்துடனும் அணுகுகிற
எழுத்தாளர்களின் எண்ணிக்கை மலேசியாவைப் பொறுத்தவரை சற்று
அதிகரித்திருக்கிறது. பல தேசங்களில் விரவிக் கிடக்கும் தமிழ்
எழுத்தாளர்களின் குரல்களை ஒரு குடையின் கீழ் வாசிக்கும் வாய்ப்பு நிச்சயம்
புதுமையானது.
|
|