இதழ் 24
டிசம்பர் 2010
  தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்
 
 
 
  நேர்காணல்:

"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!"

சேனன்

தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்!
லெ. முருகபூபதி

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்... 'மலேசியா - சிங்கை 2010' நூலை முன்வைத்து'
கே. பாலமுருகன்


பத்தி:

தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்

ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்


விமர்சனம்:

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
கே. பாலமுருகன்

சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்
கே. பாலமுருகன்

ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை
கலாநிதி மைதிலி தயாநிதி

இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்'
எம். ரிஷான் ஷெரீப்

பதிவு:

வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள்
யோகி


சிறுகதை:

தங்கராசு
ஷைலஜா

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...13
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...14

ம‌. ந‌வீன்

யதீந்திரா

ஏ. தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

ரெ. பாண்டியன்


கிண்ணியா எஸ்.பாயிஸா அலி



எதிர்வினை:


சமூக போராளியின் நேர்காணல்
வெ. தனலெட்சுமி

தவறுக்கு வருந்துகிறேன்
எம். கே. குமார்


கடிதம்:

மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
     
     
 

தி பீட்டல்ஸ் (The Beatles), உலகத்திலேயே மிகவும் பிரபலமான இசை குழு என்று போற்றப்படுபவர்கள். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் ஏறக்குறைய 40 வருடங்களாக அதே புகழுடனும், விற்பனையிலும் முதல் நிலையில் இருக்கும் ஒரே இசை குழு என்றால் அது பீட்டல்ஸ் தான். எத்தனை புதிய இசை தொகுப்புகள் வந்தாலும் இந்த பழைமையை அழிக்க முடியாத அளவு உறுதியாக நிற்கும் இசை தொகுப்புகள் பீட்டல்ஸ் குழுவினுடையது. அந்த அளவு இன்னும் புதியதாகவே ரசிகர்களுக்கும், பாராபட்சமில்லாமல் எல்லா இசை கலைஞர்களுக்கும், இசைக் குழுக்களுக்கும், விமர்சகர்களுக்கும் இவர்களின் பாடல்கள் ஒலிப்பதால்தான்.

இத்தனைக்கும் 1963 இல் முதல் ஆல்பம் வெளியிடப்பட்டு 1970 அதிகாரப்பூர்வமாக அவர்களுடைய இசைக் குழுவை அவர்களே கலைத்தார்கள். 7 வருடங்கள்தான், மொத்தம் 12 ஆல்பங்கள் மட்டுமே, 200க்கும் குறைவான பாடல்கள் மட்டுமே. பிக்காசோவையும் அவருடைய ஓவியங்களையும் எப்படி விமர்சகர்கள் தவிர்க்க முடியாத கலை ஆளுமைகளாகப் பார்க்கிறார்களோ அதேபோல் பரப்பிசையில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் பீட்டல்ஸை அங்கீகரிக்கிறார்கள். அந்த அளவுக்கு அதுவரை எந்த இசை கலைஞர்களும் முயற்சிக்காத பல புதுமை உத்திகளை தங்களது ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுத்தி அதில் வியாபார வெற்றியும் பெற்றதோடு, ஆரோக்கியமான இசை விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் வந்த எல்லா இசை கலைஞர்களும், இன்று பிரபலமாக இருக்கும் அனைவரும் ஒருமித்த குரலோடு ஆமோதிப்பது, பீட்டல்ஸ் பாதிப்பு இல்லாத எந்த இசையும் இல்லை என்பதுதான். அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத அடையாளங்களையும் ஆளுமைகளையும் இசை உலகில் விட்டு சென்றிருக்கிறார்கள். பரப்பிசைக்கு புதிய தளங்களை தந்திருக்கிறார்கள்.

இந்த வருடம் (2010), 16 நவம்பரில்தான், முதல் முறையாக டிஜிட்டல் மீடியங்களில் அவர்களுடைய இசை வெளியிடப்பட்டது. முக்கியமாக iTUNES-இல். பல்வேறு காரணங்களுக்காக இதுவரை அதிகாரத்துவ டிஜிட்டல் தளங்களில் அவைகள் வெளியிடப்படாமல் இருந்தது. இப்பொழுது iTUNESஇல் வெளியிடப்பட்டு, நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த திகதி வரை (24 நவம்பர்) மொத்தம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆல்பம் மட்டும் 4.5 லட்சம். அமெரிக்காவில் மட்டும் 1.19 லட்சம் ஆல்பங்கள். பதிவிறக்கம் செய்யப்பட்ட மொத்தப் பாடல்கள் 14 லட்சம். இத்தனைகயும் ஒரே வாரத்தில். இது பில்போர்ட் (BILLBOARD) ரிப்போர்ட். அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆல்பம் ABBEY ROAD. அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல் HERE COMES THE SUN.

இந்த பாடல் பீட்டல்ஸ் குழுவில் ஒருவரான George Harrison என்பவரால் Eric Clapton உடன் இணைந்து இயற்றப்பட்டது. பீட்டல்ஸின் இசை எனக்கு அறிமுகமானது George Harrison அவர்களின் இசை மூலமாகத்தான். அதுவும் ஏறக்குறைய 90களில். அப்பொழுது நான் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் அதிக தீவிரம் காட்டி வந்தேன். அங்கு என்னை மிகவும் வசீகரித்தவற்றுள் மிகவும் முக்கியமானது George Harrison அவர்களின் கோவிந்தாம் ஆதி புருஷாம் என்ற பாடல். கோலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கெட்டாத அந்த உலகத்தின் வாசல்வரை நம்மை அழைத்துப் போகும் இசையமைப்பு. ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு ஓர் உலக இசை அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது இவரின் இசையமைப்புகள் என்று நிச்சயமாக சொல்லலாம். ஹரே கிருஷ்ணா மந்திரம் முதல் பல வைணவ வங்காள பாடல்கள் மேலை நாட்டு physchedelic இசை வடிவுடன் ஆங்கிலேயர்களை வசீகரித்தது. இவர் பண்டித் ரவிசங்கருடன் இணைந்து சில இசை தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார் குறிப்பாக Vedic Chanting. இவர் 2001 புற்று நோயால் இறந்து விட்டார்.

ஆனால் பீட்டல்ஸ் குழுவின் பாடல்களின் பிரபலத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் John Lennon மற்றும் Paul McCartney. John Lennon 1980இல் சுட்டுக் கொல்லப்பட்டார். காரணங்கள் இன்றும் மர்மமாகவே உள்ளது. பீட்டல்ஸ் குழுவினரில் இன்றுவரை உயிரோடு இருப்பவர்கள் Paul McCartney யும், Ringo Starr என்பவரும் தான். இன்றும் அவர்கள் தனி ஆல்பங்கள் வெளியிட்டு வருகிறார்கள். பீட்டல்ஸ் குழுவின் ஏறக்குறைய 75% பாடல்கள் ஜோன் லென்னனாலும் (John Lennon) பௌல் மெக்ர்த்னியாலும் (Paul McCartney) இயற்றப்பட்டது அல்லது கம்போஸ் செய்யப்பட்டது. அவற்றில் எல்லாமே பிரபலமான பாடல்கள். இவர்கள் இருவரும் சிறந்த இசை மேதமைகளுடனும் வித்தியாசமான பரிச்சார்த்த இசை முயற்சிகளை ஒவ்வொரு பாடலிலும் வெளிகொணரும் தீவிரத்துடன் இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே பல இசைக் கலைஞர்களும் செய்வதுபோல் இவர்கள் ராக் அல்லது பாப் என்று ஒரே வித இசைப் பிரிவுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் பல்வேறு இசைப் பிரிவுகளை தங்கள் வெளியீடுகளில் முயற்சித்திருக்கிறார்கள்.

இவர்களின் புகழுக்கும் பாடல்களின் பிரபலத்திற்கும் இன்னொரு முக்கியமான காரணம், பீட்டல்ஸின் இசைத் தொகுப்புகளின் தயாரிப்பாளர் George Martin. நான் முன்பு ஒரு கட்டுரையில் கூறியது போல், இசைத் துறையில் தயாரிப்பாளர் என்பது பணம் போடுபவர்கள் அல்ல, பாடலை எப்படி வடிவமைப்பது, எப்படி பாடுவது, எப்படி இசையை படைப்பது, எப்படி பதிவு செய்வது என்று முழுவதையும் முடிவு செய்யும் ஒரு கேப்டனை போன்றவர். பீட்டல்ஸின் இசை மெட்டுகளை, அதீத இசை கற்பனையை எப்படி ஒருங்கிணைத்து, பல்வேறு இசைப் பிரிவுகளின் பரீட்சார்த்த இசை முயற்சிகளை எப்படி ஒரு மெருகேறிய இசைத் தளத்திற்குள் கொண்டு வருவது, இசை ரசிகர்களின் ரசனையை எப்படி எதிர்கொள்வது போன்ற எல்லாவித கூறுகளையும் ஒருங்கிணைத்து, இது நிச்சயம் வெற்றிப் பெறும் என்று ஒரு முழுமைப் பெற்ற இறுதி வடிவை அவர்களின் பாடல்களுக்கு கொடுத்தவர் மார்த்தின் தான்.

இவர்களுடைய இசையின் புகழுக்கு அன்றைய சமூகத்தின் சிந்தனை மாற்றம் (அன்றைய ஐரோப்பிய, அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் பதின்ம வயதினர்), உலக பொருளாதரம், தொழில் மைய வளர்ச்சியும் அது சார்ந்த அடக்கு முறையும், கபிட்டலிச வெறுப்பு என்று பல ஆய்வுக் காரணங்களை முன் வைத்தாலும், ஒரு இசை விற்பதற்கும் புகழடைவதற்கும் அதன் இனிமை மட்டும்தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். மனதை கவராதா எந்தப் பாடலும் விற்காது. சுருங்கச் சொல்வதென்றால் பீட்டல்ஸின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாகவும் வித்தியாசமாகவும் இருந்ததுதான். ஒரு இசையின் அல்லது பாடலின் வெற்றியைக் கொண்டுதான் அதன் பின்னனியில் இருக்கும் காரணங்கள் என்று நமது அறிவை கசக்கி சில சமூக மற்றும் கலாச்சார காரணங்களை நாம் கண்டெடுக்கிறோம். ஆனால் இசை எப்பொழுதும் அப்படி பிறப்பதே இல்லை. அதன் காரணத்தை அல்லது தொடக்கத்தை அல்லது அதன் உருவாக்கத்தை எந்தப் படைப்பாளியாலும் விளக்க முடிவதே இல்லை. இல்லையென்றால் நான் முன்பு சொன்ன, கலையின் பிரபலத்திற்கு காரணமான அந்த சமூக மற்றும் கலாச்சார காரணங்களையோ அல்லது இதர பிற காரணங்களையோ ஆய்வு செய்து அதன் தொடர்ச்சியாக ஒரு அற்புத இசையைப் படைக்க முடியுமே? ஆய்வு மனம் படைப்பதில்லை. படைப்பு மனதிற்கு ஆய்வு தேவையே இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான், அது தவறாகக் கூட இருக்கலாம்.

இசை ரசனை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிவந்திருக்கிறது. அல்லது ஒரு சில இசை மேதைகளின் வித்தியாசமான முயற்சிகளால் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா இசையை எடுத்துக்கொண்டால், எம்.எஸ்.விக்கு பிறகு, இளையராஜா ஒரு புதிய இசை ரசனையை ஏற்படுத்தினார். அதன் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் வேறு புதிய இசை ரசனையை உண்டு பண்ணினார். அது போல் மேலை நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எல்வீஸ் ப்ரெஸ்லியால் (Elvis Presley) இசை ரசனை பெரிதும் மாறுபட்டு ராக் அண்ட் ரோல் இசை பிரபலமடைந்திருந்தது. அதன் பிறகு அந்த அலையை மாற்றியவர்கள் என்றால் அது பீட்டல்ஸ் தான். அதுவும் அதுவரை அமெரிக்கர்களால் பிரபலமடைந்து வந்த பரப்பிசை முதல் முறையாக ஐரோப்பியர்களான பீட்டல்ஸிடம் சரணடைந்தது.

Rolling Stone என்ற இசை மாத இதழ் 2003 இல் செய்த ஆய்வில் உலகின் சிறந்த 500 இசை ஆல்பங்களில் முதல் இடத்தில் இருப்பது பீட்டல்ஸின் Sgt. Pepper's Lonely Hearts Club Band என்ற ஆல்பம் என்றது. அது மட்டுமின்றி பீட்டல்ஸின் இதர ஆல்பங்கள் அதே 500 சிறந்த இசை ஆல்பங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், ஐந்தாவது இடத்திலும், பத்தாவது இடத்திலும், பதினாங்காவது இடத்திலும் என்று நீண்டுக் கொண்டே போகிறது. இத்தனைக்கும் பீட்டல்ஸ் குழு கலைக்கப்பட்டு 30 வருடங்கள் ஆகியும். அதேபோல் 2008ல் பில்போர்ட் (Billboard) என்ற இசை மாத இதழ் வெளியிட்ட சிறந்த 100 இசை கலைஞர்கள் பட்டியலில் இவர்கள்தான் முதலிடம். இந்தப் பட்டியல் அதிகம் விற்பனையான இசை தொகுப்புகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. Times இதழின் 20ஆம் நூற்றாண்டின் 100 முக்கியமான ஆளுமைகள் (The 20th Century's 100 Most Influential People) என்ற பட்டியலில் பீட்டல்ஸையும் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க இசை நிறுவனங்களின் சங்கமான RIAA, பீட்டல்ஸின் இசை தொகுப்புகள்தான் அமெரிக்காவிலேயே அதிகம் விற்பனையான இசை தொகுப்புகள், வேறு யாருடையதுமல்ல என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஏன், ஏசு நாதரை விட பீட்டல்ஸ் பிரபலமானவர்கள் என்ற ஆய்வுகள் கூட நடந்திருக்கிறது.

ஆனால் பிற மேலைநாட்டு கலைஞர்கள் போல் இவர்களும் போதை மருந்துகளுக்கு அடிமையாகியிருந்திருக்கிறார்கள். ஒழுக்கம் கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் விவாதிக்க எனக்கு இன்னும் ஞானம் போதவில்லை. காரணம் இன்னும் ஏனோ என் மனம் இசையும் இசை படைப்புத் திறனும் கடவுளால் அளிக்கப்படும் வரம் என்றே நம்பி வருகிறது. அதிலிருந்து எப்பொழுது எப்படி வெளியாகப்போகிறேன் என்று தெரியவில்லை.

மேலை நாட்டு படைப்பாளிகள் பெரும்பாலோர் இப்படி போதைக்கு அடிமையாவதும், தற்கொலை செய்துக் கொள்வதும், அதற்கு காரணமான படைப்பு மனத்தின் செயல்பாடு பற்றியும் மனோவியல் விஷயங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நல்ல கட்டுரை எழுதியுள்ளார். எங்கு படித்தேன் என்பது சரியாக இப்பொழுது நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு முக்கியமான விசயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார். நமது இந்தியப் படைப்பாளிகள் பலரும் மேலைநாட்டவர்கள் போல் ஒழுக்கம் தவறுவதும் தற்கொலை செய்துக்கொள்வதும் இல்லை. ஆனால் அதேசமயம் அவர்களும் அதே மன சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இவர்கள் ஆன்மிகத்தில் மோகம் கொள்வதால் அந்த எதிர்மறை சிந்தனைகளை எதிர்கொள்கிறார்கள் என்று நம்பகத் தன்மையுடன் எழுதியிருந்தார்.

ஜெயமோகனின் கட்டுரையில் அவர் பாரதியையும் பாரதியின் ஆன்மீக நாட்டத்தையும் உதாரணமாக கூறியிருந்தார். இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் அவர்களுடைய ஆன்மீகத் தேடலையும், ஒழுக்கத்தின் மீதிருக்கும் நம்பிக்கையையும் பார்க்கும்போது, ஜெயமோகனின் படைப்பு மனத்தின் செயல்பாடு பற்றிய அந்தக் பதிவை ஒரு சிறந்தக் கட்டுரை என்றே நினைக்கிறேன். ஜோர்ஜ் ஹரிசன் (George Harrison) போதை மருந்துகளில் இருந்து வெளிவர ஆன்மீகம் நிச்சயம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் அவருடைய ஈடுபாடு தீவிரமடைந்திருக்கலாம் என்பது இந்த இடத்தில் சிந்திக்க வேண்டிய ஒன்று. பீட்டல்ஸின் மிகப் புகழ்பெற்றப் பாடலான HERE COMES THE SUN என்றப் பாடலை ஜோர்ஜ் ஹரிசன், ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் ஸ்தாபகர் ஸ்ரீல பிரபுபாதா அவர்களை மனதில் வைத்துதான் எழுதியதாக சிலர் கூறுவதும் உண்டு.

பீட்டல்ஸின் பாடல்கள் இன்னுமும் பிரபலமாக இருப்பதற்கு பாடல்களின் இனிமை புதுமை என்பது மட்டுமல்லாமல் வேறு ஒரு காரணமும் இருப்பதாக எல்லா இசைபதிவு நிபுணர்கள் ஒத்துக்கொள்வதும் உண்டு. அது, இசைப் பதிவில் இருக்கும் அசல் இசை சப்தமும், நாதமும் என்பது. பல நிபுணர்கள் அதிலும் மாஸ்தரிங் செய்பவர்கள் பலரும் சொல்வது, ஒரு பாடல் பல வருடங்கள் தாண்டியும் நமக்கு புதிதாகத் தெரிய மற்றொரு காரணம் இசையும் அதன் ஒலியும் எத்தனை அசலாக கலப்படம் இல்லாமல் இருக்கிறது என்பதை பொருத்துதான் என்பது. இன்று பலரும் தொழில் நுட்பம் என்ற பெயரில் ஒரு இசைக் கருவியின் ஓசை, புதுமையாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாமோ மாற்றுகிறார்கள். குறிப்பாக அதன் ஒலி அதிர்வுகளை வடிவமைப்பு என்றப் பெயரில் பலவாறு மாற்றுவது உண்டு. அது கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் ஆனால் இசையின் அல்லது குறிப்பிட்ட இசைக் கருவியின் ஆயுளை குறைப்பதோடு ஆன்மாவையும் கொன்றுவிடும்.

இளையராஜா பல முறை இந்த ஒலி அதிர்வு பற்றிய விசயத்தை பேசியிருக்கிறார். நமக்கு ஒரு வயலின் அல்லது புல்லாங்குழலின் இசை, இசையாக மட்டுமே கேட்கும். ஆனால் அதன் ஒலி அதிர்வு என்று சொல்லகூடிய Frequency இல் நாம் பல மாறுதல்களை செய்யலாம். அது சில சமயம் மூளை நரம்புகளுக்கு பாதிப்பை உண்டு பண்ணும், உணர்வுகளில், ஆழ்மனத்தில், நமது எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதில் ஒரு இசையமைப்பாளர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பாடல் இனிமைக்கும் வெற்றிக்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று பல முறை சொல்லியிருக்கிறார்.

இசை நிபுணர்கள், ஒரு இசைக் கருவி இயல்பாக வாசிக்கப்படும் போது அதற்கே உரிய இசையுடனும் அதற்குறிய ஒலி அதிர்வுடனும் இருக்கும். அதில் மாற்றம் செய்யாமல் இருப்பதே, இரு இசை நீண்ட நாள் நிலைத்திருப்பதற்கு காரணமாகிவிடுகிறது என்கிறார்கள். அந்தவகையில் அத்தகைய அசல் ஒசைகளை பீட்டல்ஸின் இசையில் நாம் கேட்கமுடியும். அதுவே, அவர்கள் இசை இன்று நிலைத்திருப்பதற்கும், எல்லோரையும் வசீகரிப்பதற்கும் காரணம் என்கிறார்கள்.

விமர்சகர்களும் ரசிகர்களும் பீட்டல்ஸின் சிறந்தப் பாடல்கள் என்று சில நூறு பாடல்களை வரிசைப் படுத்தியிருந்தாலும், அதிலும் Abbey Road என்ற ஆல்பம் ரசிகர்களிடைய பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள் என்றால் Black Bird, The Fool on the hill, Norweign Wood, Im looking through you மற்றும் Dear Prudence.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768