|  | 
 | அன்புள்ள பீல்மோர் பாலசேனா,
 பீல்மோர் தோட்டத்தில் மிச்சமிருக்கும் மரங்களின் மடிகளில் உங்களின் அன்றைய 
		பால்ய காலம் இன்னமும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதாக நீங்கள் சொன்னபோது அந்த 
		வருத்தம் முகத்தில் தெரிந்தது.
 
 
  சிறுவனாக அந்தச் சிதறிக் கிடந்த நினைவுகளைக் குனிந்து எடுத்து சேகரித்த 
		வண்ணம் நடந்து செல்லும் உங்களை, இப்பொழுது அங்கே கட்டப்பட்டிருக்கும் ஐந்து 
		நட்சத்திர விடுதியின் நேப்பாள காவலாளி தடுத்து நிறுத்துவது போலவும், அல்லி 
		மலர்கள் படர்ந்திருக்கும் செயற்கை குளத்தருகே நீங்களிருவரும் வந்து 
		சேருகையில் நடுத்தர வயதின் நரைகளுடன் நீங்கள் இருப்பது போலவும் ஒரு காட்சி 
		தோன்றி மறைந்தது. நீங்கள் சொன்னவிதம் அப்படி இருந்தது. மண்ணும் காலங்காலமாக 
		அங்கே வாழ்ந்த அந்த மண் சார்ந்த மனிதர்களும் அந்நியமாகிப் போக, பன்னாட்டு 
		நிறுவன முதலாளிகளும் அவர்களைப் பாதுகாக்கும் நேப்பாளி கூர்க்காக்களுமாகச் 
		சூழல் மாறிவிட்ட நிலையில் எது உங்களது, எது அவர்களது? 
 சற்று தொலைவில் நிற்கும் செங்கல் ஏற்றிச் சென்ற கனவுந்துகள் சிதறியச் 
		செம்மண் தூசு படர்ந்த செம்பனை மரங்கள். பெயர் மறந்து போன மூதாதையர்களின் 
		செல்லரித்துப்போன புகைப்படங்களைப் போல இன்னமும் மங்கலாகவும் அழுக்காகவும் 
		அங்கேதான் நிற்கின்றன. வெளிவரவிருக்கும் உங்களது நூலில் இந்த 'ஒரு 
		காலத்தில்' பால் சுரந்த மரங்களையும், குலை தள்ளிய பனைகளையும் பற்றி 
		கொஞ்சமாவது எழுதுவீர்கள்தானே.
 
 சொல்லப்போனால் உங்களுடைய எழுத்துகளை துணுக்குகளாய் அவ்வப்போது 
		வாசித்திருக்கிறேனேயன்றி முழுதுமாக வாசிக்கக் கிடைக்கவில்லை இன்னமும் 
		எனக்கு. பீல்மோர் தோட்டத்தைப் பற்றி உங்கள் மூலமாக தெரிந்து கொண்டதால்தான், 
		'ஹையாட் சௌஜானா' ஹாட்டலின் பின்புறமாக ஓடும் அந்தச் சிற்றோடை தேடி 
		சென்றிருக்கிறேன். ஆளுயர நிற்கும் நாணல்களின் நடுவே நிதானமாக உடல் நெளிந்து 
		ஓடி மறையும் உடும்புகளைப் போலவே ஏன் என்னைப் பார்த்ததும் லெம்பா சுபாங் 
		இளைஞர்களும் மெல்ல எழுந்து சென்றனர் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. 
		அங்கே அடிக்கடி வந்துபோகும் காவல்துறையின் வேன்களை இவர்களை வைத்துதான் 
		நிரப்பிக் கொள்கிறார்களாமே.
 
 குற்றச் செயல்களை மொத்தமாக குத்தகைக்கு நம்மினம் எடுத்துக்கொண்டது 
		சமீபத்தில்தானா? படிப்பறிவில்லா அந்த 'இன்றைய இளைய தலைமுறையின்' 
		கைகளுக்குக் கஞ்சாவும் கைவிலங்கும் மாறி மாறி கிடைக்கச்செய்தது யார் செய்த 
		சதி. எங்கெல்லாமோ நடக்கும் கொள்ளைச் சம்பவங்களுக்கான முதல் வரைபடம் 
		இங்கேதான் முதலில் எழுதப்படுகிறதாமே.
 
 தோட்டங்கள் அழிந்து வாழ்வாதாரங்களை இழந்து அரசால் தலைவர்களாலும் 
		புறந்தள்ளப்பட்டு, அசுர வேகத்தில் நடந்து முடிந்த நகரமயமாதலின் விளைபு 
		என்றாலும்கூட, கொஞ்சம் சவீதமாகக் கூட அதட்டிப் பேசத் தெரியாத ஓர் 
		இனக்குழுவின் சந்ததியின் வாழ்வுதீதமான நிர்பந்தம் வன்முறையாக மட்டும் 
		மாறியது பெருந்துயரம். சமூக கட்டமைப்பின் கழிவுகளாய் தேங்கி நிற்பதன் 
		விளைவுதானே இது.
 
 ஏழு விழுக்காட்டில் நிற்கும் இந்த இந்தியர்கள் மத்தியில் ஆயிரத்துக்கும் 
		மேற்பட்ட ரகசிய குண்டர்கும்பல், ஒப்பீட்டளவில் மற்ற இனங்களைக் காட்டிலும் 
		அதிகமான தற்கொலை, கொலை, வறுமை கோட்பாட்டிற்கும் கீழான கோடு ஏதும் 
		இருக்கிறதா சொல்லுங்கள். அதில் நிறுத்தி இந்த இனத்தை நாம் அழகு பார்க்க.
 
 உங்களுடைய எழுத்துகள் இவற்றையெல்லாம் பற்றி பேசுமா?
 
 கோவில், கும்பாபிஷேகம், கும்பகோணத்து அர்ச்சகர்கள், பட்டர்களின் பட்டாளம், 
		பக்தி பரவசம், எந்திரன் திரைப்பட வெளியீட்டு கோலாகலம், இதுதான் இந்திய 
		மேல்தட்டின் இயங்குதளம். பள்ளி முடிந்த பின் கலைக்குதவாத கல்விதரும் 
		டிப்ளோமா படிப்பில் சறுக்கி விழும் மாணவர்கள், செழுமையான கட்டணத்திற்கு 
		மருத்துவமனையே இல்லாமல் தாதியர் பயிற்சி பெற்று வேலை கிடைக்காமல் 
		தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பிள்ளைகளின் கல்விக்காக வாங்கிய கடனுக்கு 
		வட்டி கட்ட முடியாமல் விழிபிதுங்கும் நடுத்தர வர்க்கம். "ஐயா முனிசாமிக்கு 
		ஆங்கர் பீர் போத்தலும், ஆட்டிறைச்சியோடு சுருட்டும் வைத்துவிட்டால் அவர் 
		எல்லாத்தையும் கவனிச்சுக்குவாரு" என்கிற அடித்தட்டும் எந்த அரசியல் 
		விழிப்புணர்வும் இன்றி இருக்கும்வரை இந்தச் சமூகம் எந்தத் திசை நோக்கி 
		நகரும்?
 
 வியப்பும், விந்தையும் என்னவென்றால் முனைவர்களும், பேராசிரியர்களும் 
		கற்றுத் தர ஆண்டாண்டுகளாய் இலக்கியம் பயின்ற பட்டதாரிகள் காணாலம் போன 
		இந்தக் காங்கரீட் காடுகளை தாண்டி, கவிதை சுரக்கும் மனதை ஏந்தி கொண்டு 
		இன்னமும் அந்தப் பீல்மோர் தோட்டத்து வண்ணத்துப்பூச்சிகளை பின் தொடர்ந்து 
		ஓடித்திரியும் உங்களைப் போன்றவர்களை பார்த்து என்ன சொல்வது என்பதுதான். 
		வாழ்வைப் பற்றிச் சொல்ல, எழுத, உங்களிடம் மொழியும் மனமும் இருக்கிறது. அதை 
		இழப்பது எப்படி என்று கற்றுத்தர எங்கள் வசம் பள்ளி முதல் பல்கலைக்கழகம் 
		வரையிலான திட்டவட்டமான பாடத்திட்டம் உள்ளது. நல்லவேளையாக இவர்களிடமிருந்து 
		தப்பித்த உங்களை போன்ற சராசரி மனிதர்களிடம்தான் 'எழுத்து' வாசம் செய்யும் 
		வாழ்வு தொலைந்துவிடாமல் இன்னமும் இந்நாட்டில் இருந்து வருகிறது.
 
 பள்ளிப்பாடத்தில் நீங்கள் சந்தித்த நா.பா, அகிலன், மு.வதான் உங்களை எழுத 
		வைத்தார் என்கிறீர்கள். அவர்கள் இன்னமும் அங்கேயேதான் இருக்கிறார்கள். 
		ஆனால் இன்றைய இளைஞனை அவர்கள் ஏன் ஈர்க்கவில்லை? மாறாத இலக்கியப் 
		பாடத்திட்டம், செய்யும் தொழிலை நேசிக்காத ஆசிரியர்கள், மலாய், ஆங்கிலம், 
		தமிழ் என எந்த மொழியிலும் ஆழம் காணாத மாணவர்கள், வாசிப்பு, பகிர்தல், 
		படைப்பு என எந்த மனக்கிளர்ச்சிக்கும் ஆளாகாத இளைஞர்கள், சரளமாக எந்த 
		உரையாடலையும் எந்த மொழியிலும் நிகழ்த்த இயலாதப் பட்டதாரிகள், தரமான 
		படைப்புகளை கண்டிராத நாள், வார, மாத இதழ்கள்... இவற்றினூடாக நீங்கள் எழுதி 
		வருகிறீர்கள் என்பதும் உங்களைப் போன்றவர்களாலும்தான் இங்கே கொஞ்சமாவது 
		கவிதை, சிறுகதை தமிழில் எழுதி வாசிக்கப்பட்டு இலக்கியம் உயிரோடு இருந்து 
		வருகிறது என்பதும்தான் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது.
 
 விளக்கின் அனுமதிக்காக காத்திருக்கும் தருணத்தில் குறுக்காக நடந்து 
		செல்லும் பாதசாரிகளின் பாதையில் கிடந்த ஒற்றைக் கொலுசை விட்டுச் சென்ற 
		சிறுமி இப்பொழுது எங்கே இருக்கிறாளோ என்று எண்ணியதைப் போலத்தான், விமான 
		ஓடுபாதைகளாலும், கட்டுமான வாகனகளாலும் காணாமல்போன பீல்மோர் தோட்டத்து 
		சிறுவர்களின் பாதங்கள் பதிந்த விளையாட்டு திடல்கள், நீந்தி குளித்து 
		கரையேறிய மீன் பிடி குளங்கள், மரத்தடி முனுசாமியின் சிலைகள் எல்லாம் 
		உங்களின் நினைவுகளிலும் வந்து போகும். அவைகள் உங்களின் கதைகளிலும் 
		வரவேண்டும். வராவிட்டால்கூட பரவாயில்லை. பீல்மோர் தோட்டத்து மக்களின் 
		நினைவுகளிலாவது வந்து போகும்தானே.
 
 வாழ்த்துகளுடன்.
 மா. சண்முகசிவா
 
 குறிப்பு : பாலசேனா உங்கள் தொகுப்புக்கு முன்னுரை கேட்டிருந்தீர்கள். 
		முழுமையாக வாசிக்கக் கிடைக்காத உங்கள் தொகுப்பிற்கு நான் முன்னுரை எழுதுவது 
		அத்தொகுப்புக்கு நான் செய்யும் நியாயமாகாது. ஆனால் உங்கள் எழுத்துக்கும் 
		எழுத்து முயற்சிக்கும் என் வாழ்த்துகள்.
 |  |