|  | 
 | Happy Feet : பாதங்களின் வேட்கை 
		 "சிறு வயதில் எனக்குக் கார்ட்டூன்கள் பார்ப்பதில் 
		அலாதி விருப்பம். கார்டூனின் கதாபாத்திரங்கள் என்னை மீளா பிரமிப்பில் 
		ஆழ்த்தியது. அந்தக் கதாபாத்திரங்கள் செய்வது சொல்வது எல்லாம் சரியே என 
		நினைத்திருந்தேன். என் பால்யத்துக்கு மிக நெருக்கமானவைகளாக இருந்த 
		கார்ட்டூன்கள் வளரும் வயதில் வாழ்க்கையின் பிறத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 
		படிக்கவும் உழைக்கவும் வேண்டிய கட்டாயத்தில் மெல்ல என்னை விட்டு தூர்ந்து 
		போயின. பிற்காலங்களில் சில இயக்கவூட்டத் திரைப்படங்களைப் பார்க்கும் அந்தச் 
		சில நிமிடங்களில்தான் மீண்டும் சிறுவனாய் ஆனது போல் உணர்கிறேன்" - 
		கே.பாலமுருகன்  ஒரு மழைத்துளி இன்னொரு மழைத்துளி போல் இல்ல... 
		பார்வைக்கு ஒன்றுபோல் இருந்தாலும்கூட. ஒரே இனத்தைச் சேர்ந்திருந்தாலும் ஒரு 
		புறா இன்னொரு புறாவிடமிருந்து வேறுபட்டே இருக்கும். ஒரே சாயலில் இருக்கும் 
		பூக்கள் அணுவில் வேறுபடும். இப்படி இயற்கையில் எதுவுமே மற்றொன்றை ஒத்து 
		இருப்பதில்லை. நாம் வாழும் உலகிலும் உலகை கடந்த வெளியிலும் இருக்கும் 
		ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் 
		வாய்ந்தவன். உடல், உணர்வு, சிந்தனை, ஆர்வம், திறமை இப்படி எல்லாவற்றிலும் 
		இன்னொருவனிடமிருந்து வேறுபட்டே இருக்கிறான். ஆனால் பெரும்பாலும் மனிதர்கள் 
		தங்கள் தனித்துவத்தைக் கொண்டாடுவதில்லை. தான் இன்னொருவர் போல் உயரமாய் 
		இல்லையே, இன்னொருவர் போல் கல்விமானாய் இல்லையே, இன்னொருவனுக்கு வாய்த்தது 
		போல் மனைவி வாய்க்கவில்லையே என்றெல்லாம் கூட எண்ணி ஏங்கிய வண்ணமே 
		வாழ்க்கையை வெறுமனே கழித்து விடுகிறார்கள். 
 சில வேளைகளில் மற்றவரிடமிருந்து மாற்றுக் கருத்தோ, செயல்பாடோ உள்ளவர்களை 
		இந்தச் சமூகமும் புறக்கணித்துவிடும். தனக்குச் சாதகமாய் இல்லாதபோது 
		வேற்றுமைகளை சமூகம் பலவீனங்களாக பார்க்கும் தன்மை உடையது. ஒரு 
		குடும்பத்தில் அண்ணன் மருத்துவராய் இருக்கும்போது தம்பியானவன் தனக்குப் 
		பிடித்த, தான் மிகச் சிறப்பாய் விளங்கக் கூடிய ஒளிப்படத்துறையில் ஈடுபட 
		நினைத்தால் அவன் உருப்படாதவன் என்று முத்திரை குத்தப்பட்டு சிறுமை 
		படுத்தப்படும் அவலம் இந்த நூற்றாண்டிலும் பல குடும்பங்களில் நடந்து 
		கொண்டேதான் இருக்கின்றது. இதை எல்லாம் கடந்து, தான் யார்? தனது பலம் என்ன? 
		தான் வாழும் உலகத்தில், தன்னைச் சுற்றி உள்ள சமூகத்தில் தனது பங்கு என்ன? 
		என்ற தேடல் பல மனிதர்களிடம் உதித்து, அதற்கு விடை காண பயணப்பட்டு, தன் 
		உண்மையை உணர்ந்து, உலகுக்கு உணர்த்தி வெற்றிப் பெற்ற சாதனையாளர்களும் 
		நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். உலகம் போற்றும் பல்துறை சார்ந்த 
		கலைஞர்கள், விஞ்ஞானிகள், அரசியல் நிபுணர்கள் யாவருமே இதில் அடங்குவர்.
 
 
  தான் 
		வாழும் சமூகம் தனது தனித்துவத்தைப் பலவீனமாக கருதி ஒதுக்கியபோது, தனக்கான 
		வாழ்வை, தன் இருப்பின் அர்த்ததைத் தேடி பயணப்படும் ஒரு பெங்குயினின் 
		கதைதான் ‘Happy Feet’ என்னும் இந்த முழுநீள சிறப்புப் பண்பியலுடைய 
		இயக்கவூட்டத் திரைப்படம் (Full Length Feature Animated Film). இந்தப் 
		படத்தை எழுதி இயக்கியவர் George Miller. அமெரிக்க- ஆஸ்திரேலிய கூட்டு 
		வெளியீடான இத்திரைப் படத்தை Warner Bros நிறுவனம் 2006-இல் தயாரித்து 
		வெளியிட்டது. இந்தப் படம் அந்த ஆண்டுக்கான சிறப்புப் பண்பியலுடைய 
		இயக்கவூட்டத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. 
 இயக்கவூட்டல் அல்லது அசைவூட்டல், இன்னும் எளிதாக ஆங்கிலத்தில் ‘Animation‘ 
		என்று சொல்லப்படுவது நம்மில் பலருக்கு மிக பரிட்சயமான ஒன்றுதான். ‘Animated 
		movie’ என்றாலே உயிற்ற பொருள்கள், விலங்குகள், கற்பனை உருவங்கள் போன்றன 
		நடிக்கும் திரைப்படம் என்ற மிகச் சாதாரன புரிதல் நமக்கு உண்டு. ஆனால் 
		இதற்கு பின்னால் இருக்கும் மிக பிரமாண்ட தொழிற்நுட்பம் அசாதாரணமானது; பல 
		கணினி தொழிற்நுட்ப நிபுணர்களின் மூளைகள் கசக்கப் பட்டு உருவானது.
 
 ஓவியத்தை நகர வைக்கும் அல்லது அசைய வைக்கும் ஆர்வம் தொன்று தொட்டே 
		மனிதனுக்கு இருந்து வந்தது. கற்கால மனிதன் விலங்குகளின் கால்கள் நடப்பதை 
		குகைச்சுவர்களில் தொடர்ப்படங்களாக செதுக்கி வைத்த தடயங்கள் இருக்கின்றன. 
		4000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் ஓவியக் கலைஞர்கள், மல்யுத்த வீரர்கள் 
		சண்டையிடும் காட்சிகளை (egyption chamber mural) மிக நேர்த்தியான 
		தொடர்ப்படங்களாக வரைந்து ஒவியங்களை இயங்க விட்டிருக்கின்றனர். இந்தத் தொடர் 
		ஆர்வம் பல ஆய்வுகளுக்கு உட்பட்டு, பல்வேறு பரிணாமங்களாய் விரிந்து இன்று, 
		கணினி உருவாக்கக் காட்சியமைப்பு (Computer Generated Imagenary, CGI) 
		என்னும் இயக்கவூட்டத் தொழிற்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தி 
		இருக்கிறது.
 
 பென்குயின்கள் மனிதர்களைப் போல் ஆடி, பாடி, பேசி உணர்ந்து நடிக்கும் ‘Happy 
		Feet’ என்ற இந்த திரைப்படத்தைச் சாத்தியமாக்கியதும் இந்த தொழிற்நுட்பமே.
 
 பென்குயின்கள் நடிப்பதால் இது சிறார்களுக்கான படம் என்று எண்ணிவிட நமக்குத் 
		தோன்றும். இந்தப் படம் வெளிவந்தபோது என் அண்ணன் பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக 
		இந்த படத்தைக் காண திரையரங்குக்கு அழைத்துச் சென்றேன். சிறுவர்களுக்கான 
		படம் என்ற நினைப்பில் நான் அவ்வளவு ஆர்வமாக இருக்கவில்லை. ஆனால் முதல் 
		காட்சியே மனதை வருடும் காதல் காட்சியாக இருந்துவிட, தொடர்ந்து மனதை 
		உருக்கும் திரைப்படத்தோடு ஒன்றிப் போனேன். அதற்கு பின்னர் இதே 
		திரைப்படத்தைப் பல முறை பார்த்து உணர்ந்தவைகளையே இங்கே பகிர்கிறேன்.
 
 பனி சூழ்ந்த தென்துருவத்தில் எம்பெரர் (Emperor) இன பென்குயின் பறவைகள் ஒரு 
		பெரிய சாம்ராஜியத்தையே நடத்தி வருகின்றன. இங்கே ஒவ்வொரு பறவைக்கும் தன் 
		உள்ளுணர்வில் ஒலிக்கும் ஒரு பாடல் (heartsong) உண்டு. ஒரு பெண் பறவை தன் 
		பாடலின் அலைவரிசையோடு ஒத்துப் போகின்ற பாடலைப் பாடும் எதிர்பாலின பறவையுடன் 
		இணையும். நோர்மா ஜீன் (Normah jean) என்னும் பெண் பெங்குயின் ‘என் உலகை ஆள 
		நீ அழகனாய் இருக்கத் தேவையில்லை’ என்று பாட மெம்பீஸ் (Memphis) என்னும் ஆண் 
		பெங்குயின் ‘என் பெண்ணாய் ஆக, நீ செல்வங்கள் கொண்டு வரத் தேவையில்லை’ என்று 
		முதல் மரியாதை சிவாஜி கணேசனைப் போல் எதிர்ப்பாட்டுப் பாடி நிறைவு செய்ய, 
		பாடல் காதலானது; காதல் முட்டையாய் உருவானது.
 
 நோர்மா ஏனையப் பெண் பறவைகளுடன் மீன் வேட்டைக்குச் செல்ல முட்டையை 
		அடைகாக்கும் பொறுப்பு மெம்பீஸுக்கு கொடுக்கப் பட்டது. அடைகாத்தல் அவ்வளவு 
		எளிதானதல்ல. கால்களுக்கு இடையில் பதுக்கப்படும் முட்டையைச் சுற்றி ஏற்ற 
		கதகதப்பு இருத்தல் வேண்டும். தென்துருவத்தின் கடும் குளிர் தாக்காமல் 
		முட்டையைப் பாதுகாக்க வேண்டும். அப்படி ஏதும் நடந்துவிட்டால், கருவிற்கு 
		அது பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடும். இப்படிப்பட்ட பெரும்பொறுப்பைத்தான் 
		மெம்பீஸ் சுமந்திருந்தான்.
 
 அப்போது பெங்குயின்கள் பிரதேசத்தில் வழக்கத்திற்கு மாறான கடும்குளிர் 
		நிலவுகிறது. அடைகாக்கும் ஆண் பறவைகள் அனைத்தும் நெருக்கமாய் அணிவகுத்து 
		நிற்கின்றன. ஒரு கட்டத்தில் தன்னை மறந்து பாட்டு பாடும் மெம்பீஸ் 
		முட்டையைத் தவறவிடுகிறான். பதற்றத்துடன் யாரும் பார்க்காதபோது முட்டையைக் 
		கால் இடுக்கில் பதுக்கிக் கொள்கிறான். அந்தத் தருணம் ஒரு பேரிடர் 
		நிகழப்போவதாய் உணர்கிறான்.
 
 முட்டைகள் அனைத்தும் குஞ்சு பொறிக்கும் நாளும் வருகிறது. முட்டைகளை 
		உடைத்துக் கொண்டு அழகிய சிறு சிறு பெங்குயின் குஞ்சுகள் வெளிவருகின்றன, 
		மெம்பீஸின் முட்டையோ அசைவற்றுக் கிடக்கிறது. சற்று முன்னர்தான் பிறந்த 
		குளோரியா (Gloria) என்னும் குட்டி பெண் பெங்குயின், உயிரற்றதாய் கிடக்கின்ற 
		முட்டை ஓட்டைத் தட்டி பார்க்க, முட்டை ஓட்டைக் கால்களால் எட்டி உதைத்தபடி 
		மம்பல் (Mumble) எனும் குட்டி ஆண் பெங்குயின் வெளியே குதிக்கிறது, 
		கால்களைத் தரையில் தட்டிக் கொண்டு ஒரு வினோத நடன அசைவுடன்.
 
 மம்பல் அடர்த்தி குறைந்த இறகுகளும், நீலக் கண்களும், பாடவே முடியாத கொடூர 
		குரலுடனும் பிறக்கிறான். பாடும் பென்குயின்களின் கூட்டத்தில் அவன் 
		வேறுபட்டு நிற்கிறான். ஆனாலும் மம்பல் தனித்துவம் வாய்ந்தவன். ‘tap 
		dancing’ என்னும் ஒரு வகை நடனத்தைப் பிறப்பிலேயே ஆடும் திறனைப் 
		பெற்றிருந்தான். மகிழ்ச்சியின் போதும் உணர்ச்சிவயப் படும்போதும் அவன் தன் 
		பாதங்களைத் தரையில் தட்டி தாளம் போட்டபடி ஆடத் தொடங்கிவிடுவான். மம்பலின் 
		இந்தத் திறமை அவனது பலவீனமாக கருதப்பட்டு தான் சார்ந்த பென்குவின் 
		சமூகத்தினரால் புறக்கணிக்கப் படுகின்றான்..
 
 இந்த சூழ்நிலையிலேயே வளர்ந்து பெரியவனாகிறான் மம்பல். அவனை அவனாக அவனது 
		தாயும் தோழி குளோரியாவும் மட்டுமே ஏற்கின்றனர். சக நண்பர்கள் பாடுவதற்கான 
		கல்வியைக் கற்று பட்டம் வாங்குகையில், மம்பலுக்கு அந்த அங்கீகாரமும் 
		மறுக்கப் படுகிறது. பட்டமளிப்பு நாளின் இரவில் வேரொரு சமுத்திரத்தில் 
		கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தோழி குளோரியா அந்தக் கூட்டதிலேயே மிகச் 
		சிறந்த பாடகியாகத் திகழ்கிறாள். அவளுடன் சேர்ந்து மற்ற பென்குவின்கள் பாடி 
		குதூகலிக்கும் போது மம்பலும் பாட முற்படுகிறான். அவனது கொடூரக் குரல் அந்த 
		நிகழ்வில் பெரும் இரைச்சலாய் ஒலிக்கவே மற்ற பென்குவின்களோடு சேர்ந்து 
		குளோரியாவும் அவனைக் கொண்டாட்டத்திலிருந்து தவிர்க்கிறாள். தான் விரும்பும் 
		பெண் பறவையைக் கூட கவர முடியாதபோது தாழ்வு மனப்பான்மையுடன் தன்னைத் தனிமை 
		படுத்திக் கொள்கிறான் மம்பல்.
 
 கதையில் மம்பலின் சோகத்தை, அவன் மீது செழுத்தப்பட்ட ஓர் உச்சக் கட்ட 
		புறக்கணிப்பை இங்கே தான் உணர முடிகிறது. அடர்த்தியான இருளுக்குள் மூழ்கும் 
		படக்காட்சி மம்பல் கண்விழிக்கும் போது மற்றுமொரு பனிப்பிரதேசத்தில் 
		விரிகிறது. மம்பலின் கண்முன்னே பெரும் அபாயம் கூரிய பற்களோடு விகாரமாய்க் 
		காட்சியளிக்கும் நீர்நாயாய் நிற்கிறது. அதனிடமிருந்து தப்பிக்கும் 
		முயற்சியாக உயிர் பயத்தைத் தவிர வேறொன்றும் உணராத நிலையில் மம்பல் 
		நீர்நிலைகளில் குதித்து எங்கெங்கோ நீந்தி செல்கிறான். அவன் தன்னிலை 
		உணர்கையில் தன் இருப்பிடத்தை விட்டு தொலைதூரத்தில் எங்கோ இருக்கிறான். 
		முதல் முறையாக எந்த ஒரு தாழ்வு எண்ணமும் இல்லாமல் தன் மனம் போல ஆடும் ஓர் 
		இடமாக அது அமைந்தது .மேலும் அங்கே எடலி (Adelie) இன பென்குவின்களாடு பழகும் 
		வாய்ப்பும் அவனுக்குக் கிட்டுகிறது. மம்பலின் புதிய நண்பர்கள் அவனின் 
		தனித்துவத்தைக் கொண்டாடுகின்றனர். இப்படி இன்பமான சூழ்நிலையில் மம்பல் 
		களித்திருக்கையில் எதிர்பாராமல் நிகழும் ஒரு பனிமலைச் சரிவு மம்பலின் 
		வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது.
 
 நகரும் பனிப்பாறையினூடே மனிதர்கள் விட்டுச் சென்ற ஒரு மண் தோண்டும் 
		இயந்திரத்தைக் கண்டு மிரளும் மம்பல் அதற்கு சொந்தமான ‘வேற்றுக் 
		கிரகவாசிகளைப்’ பற்றி அறிந்து கொள்ளும் தேடலில் முற்படுகிறான். இந்தத் 
		திரைபடத்தின் இரண்டாம் பாகத்தில், ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு படகைப் 
		பின்தொடர்ந்து துருவத்தை விட்டு நீந்தி சென்று, தான் வேற்றுக் கிரக வாசிகள் 
		என நினைக்கும் மனிதர்கள் வாழும் இடத்துக்கு வந்து சேருகின்றான். அங்கே ஒரு 
		கண்காட்சி கூடத்தில் அடைத்து வைக்கப் படுகிறான்.
 
 இதற்கிடையில் தென்துருவத்தில் கட்டுபடுத்தப்படாத மீன்பிடிப்பு 
		நடவடிக்கையினால் பனிப்பிரதேச விலங்குகளின் உணவு குறைந்து கொண்டே 
		வந்திருந்தது. நோவா (Noah) என்னும் மூத்த பென்குவின் மம்பலின் விநோத 
		ஆட்டம்தான் ஒரு சாபக்கேடாய் மீன்களை விழுங்கிக்கொள்கின்றதெனக் கூறி அதன் 
		கூற்றுக்கு ஏனைய பென்குவின்களின் நம்பிக்கையையும் பெற்றிருந்தது. 
		இதற்கெல்லாம் வேற்றுக் கிரகவாசிகள் தான் காரணமாய் இருக்கக் கூடும் என்று 
		மம்பல் எவ்வளவு எடுத்துக் கூறியும் யாரும் நம்ப மறுக்கின்றனர். இந்தத் 
		தருணத்தில்தான் மம்பல் வேற்றுக் கிரக வாசிகளைத் தேடி நகரத்திற்கு 
		வந்திருந்தான்.
 
 ஒரு தடம் அறிக்கருவி பொருத்தப்பட்டு பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருநாள் 
		மம்பல் விடுவிக்கப்படுகிறான். மம்பலின் உடலில் பொருத்தப்பட்டக் கருவியைக் 
		கண்டவுடன் தென்துருவத்தில் வேற்றுக் கிரகவாசிகள் வருகை புரிவதை மற்ற 
		பென்குவின்கள் ஏற்றுக் கொள்கின்றன. அவர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் 
		ஈர்க்க மம்பலோடு சேர்ந்து மற்ற பென்குவின்களும் ‘tap dance’ ஆடுகின்றன. 
		பென்குவின்கள் தங்களிடம் ஏதோ சொல்ல நினைப்பதை உணர்ந்த ஒர் மனித ஆய்வுக் 
		குழு பென்குவின்களின் இருப்பிடத்திற்கு வந்து அவைகளின் ஆட்டத்தைப் படமாக்கி 
		மனித உலகுக்கு எடுத்துச் செல்கின்றது. உலகத்தின் முக்கிய அரசுகளின் 
		கவனத்திற்கு இந்தச் செய்தி எடுத்துச் செல்லப்பட்டு, பென்குவின்கள் தங்களின் 
		உணவுக்கான போராட்டத்தை உணர்த்துவதாக தெளிகின்றது மனித உலகம். உடனே 
		தென்துருவத்தில் மீன் பிடிப்பது தடை செய்யப் படுகிறது. தான் சார்ந்த 
		சமூகத்திற்காக மம்பல் மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றியைப் பென்குவின்கள் 
		பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி கொண்டாடுகின்றன. மம்பலின் தனித்துவம் அவனின் 
		சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குளோரியாவும் மம்பலும் இணைகிறார்கள் 
		என திரைப்படம் கொண்டாட்டமாய் முடிகிறது.
 
 இயக்கவூட்டத் திரைப்படங்கள் நாம் தொலைத்து விட்ட பால்யத்தை மீண்டும் 
		நம்மிடம் சேர்க்கின்றன. நாம் கற்பனையிலும் போகாத மாயாஜால உலகுக்கு நம்மைக் 
		கூட்டிச் செல்கின்றன. அங்கே எல்லாமே சாத்தியமாகின்றன. நிதர்சனத்தில் என் 
		எல்லைகளை, சுற்றியுள்ள போலிக் கட்டமைப்புகளைக் கடக்க முடியாதபோது மம்பல் 
		கதாபாத்திரம், தான் ஒரு பெங்குவின்தான் என்ற எல்லையைக் கடந்து திரையில் 
		சாகசங்கள் புரிவதைக் கண்டு பிரமிக்கிறேன். அது மட்டுமல்லாமல் என்னைப் போல் 
		பென்குவின்களையே நேரில் பார்த்திடாத பலரால் அவற்றின் பேச்சும் பாட்டும் 
		ஆட்டமும் சிரிப்பும் அழுகையும் காதலும் கோபமும் காட்சிகளாக நிஜம் போலவே 
		தத்துருவமாக திரையில் காணமுடிகிறது. சிறுவர்களுடன் சேர்ந்து பெரியவர்களும் 
		இந்த திரைப்படத்தை ரசித்து பார்க்கிறோம். இதுவே happy feet திரைப்படத்தின் 
		பலமாகும். இயக்கவூட்டத் திரைப்படமாய் இருப்பதால் அது மிகப் பெரிய ரசிகர் 
		கூட்டத்தைப் பெற்று வசூலிலும் சாதனை செய்தது.
 
 இந்தக் கதையின் மற்றொரு பலம் இதன் இசையும் பின்னனிக் குரலும். இந்தப் 
		படத்தின் பின்னணி இசையைப் பிரபல பிரிட்டானிய இசை இயக்குனர் ஜோன் போவெல் 
		(John Powell) இயக்கியுள்ளார். பனிப்பிரதேசத்தை மங்கிய சூரியக் கதிர் 
		தொடும் கதகதப்பை, உயிர்ப்போராட்டத்தின் போது மம்பலின் பதைபதைப்பை, அவன் 
		கண்களில் வழியும் காதலைத் தன் இசையாலேயே அறிவித்து உயிர்த் தொடுகிறார். 
		இந்தப் படத்திற்குப் பின்னனிக் குரல் கொடுத்த பலரும் ஹொலிவூட்டின் முன்னனி 
		நட்சத்திரங்கள் ஆவர்.
 
 பொதுவாக திரைப்படங்கள் எடுக்கும்போது ஒரு கதைக்குப் பொறுத்தமான நடிகர்களைத் 
		தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சவால் நிறைந்ததாய் இருக்கும். நடிப்புப் 
		திறன், உடல் வாகு, முகபாவம், உடல் அசைவு இப்படி எல்லாமே பொறுந்த வேண்டும். 
		கதாநாயகனை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப் படும் சினிமாக்களுக்கு இந்தப் 
		பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். அது வேறு விசயம். Happy Feet போன்ற 
		அசைவூட்டப் படங்களுக்கும் அந்த அவசியம் இல்லை. இங்கே கதைக்கான 
		பாத்திரங்கள், அதற்கான பாவங்கள் அசைவுகள் யாவும் கணினி தொழிற்நுட்பத்தின் 
		உதவியோடு படைக்கப்படுகின்றன. இருப்பினும் பின்னனி குரல் கொடுக்கும் 
		கலைஞர்களை இந்தப் படத்தின் நடிகர்கள் என்றே கருதலாம். அந்த வகையில் 
		மம்பலுக்கு Elijah Jordan Wood, குளோரியாவுக்கு Brittany Murphy, 
		மெம்பீசுக்கு Hugh Michael Jackman, நோர்மா ஜீனுக்கு Nicole Kidman என பல 
		பிரபலங்கள் பின்னனிக் குரல் கொடுத்து கதாபாத்திரங்களுக்கு 
		உயிரூட்டியுள்ளனர்.
 
 1910க்கு முன்பான வரைகலை இயக்கவூட்டத் தொழிற்நுட்பத்தில் ஒரு நிமிடத்திற்கு 
		பல ஓவியங்கள் ஒளிப்படங்களாக எடுக்கப்பட்டு இயக்கப்படும். இது போன்ற படங்கள் 
		மிக கடினமான உழைப்பை உண்டு உருவானவை. ஒரு நிமிடத்தின் அசைவைக் காட்டிவிட 
		100 ஓவியங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி ஒரு கடினமான 
		காலக்கட்டத்திலும் மனிதன் தன் முயற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து உழைத்துக் 
		கொண்டே இருந்திருக்கின்றான். Happy Feet திரைப்படத்திற்குப் பின்னால் 
		இயங்கும் அபார தொழிற்நுட்பத்தைப் பார்க்கும் போது அந்த மனிதனின் விடாத 
		முயற்சியும் உழைப்பும் நூற்றாண்டைக் கடந்து நம்மை வந்து அடைந்திருப்பதாய் 
		உணர்கிறேன். இனி வருங்காலங்களிலும், எல்லைகள் உடைத்து புதுமைகள் படைக்கத் 
		துடிக்கும் மனிதனின் இந்த முயற்சியும் இயக்கவூட்டத் தொழிற்நுட்ப 
		வளர்ச்சியும் இன்னும் தொடரும்.
 |  |