|  | 
 | 'கடவு'  
		 'திலீப்குமார் ஒரு சிறந்த நாவலாசிரியர்' என்று திரு. ராஜேந்திரன், மலேசிய 
		தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், அறிமுகப்படுத்தியது இன்னும் பசுமையாக 
		மனதில் உள்ளது (ஆஸ்ட்ரோ நாவல் போட்டி பரிசளிப்பு விழாவன்று)! ஆனாலும், 
		அதைவிட முக்கியமான அபத்த நிகழ்வொன்றும் அன்று அரங்கேறியது.
 கவியரசு வைரமுத்து நடத்திய `ஓரங்க நாடகம்`தான். அவருக்குமுன் பேசிய 
		திலீப்குமார், பிரபஞ்சன் ஆகியோரின் பேச்சை `கட்டுடைத்து`, தன் 
		மேதாவித்தனத்தை முன்னிலைப் படுத்திய இலக்கிய `குங் ஃபூ' மிக சுவாரசியமாக 
		இருந்தது. எல்லா இலக்கியப் பிரதிகளையும் - அவை வேற்று மொழியில் இருப்பினும் 
		- தமிழ்த்தாயின் முலைப்பால் வாசம் அடிக்கிறதா என்று சோதிப்பதுதான் சிறந்த 
		இலக்கிய அணுகுமுறை என்று தனது திரைக் குரலால் பிரகடனம் செய்தார். பிரபஞ்சன் 
		மந்தகாசமாக சிரிக்க முயன்றார்; திலீப்குமார்... எப்போதும் போல... 
		புன்னகைத்தபடியே இருந்தார்.
 
 (கலைஞர், கவியரசு, கவிச்சக்கரவர்த்தி, பெருங்கவிக்கோ, அறிஞர் என்றெல்லாம் 
		அடைமொழியின் அவசியம் என்ன? அது இல்லாமல் அவர்களால் `நிற்க` முடியாதா?... 
		இப்படியெல்லாம் யோசிக்கலாம்தான்... சூப்பர் ஸ்டார், சூப்ரீம் ஸ்டார், மெகா 
		ஸ்டார் போலத்தானோ... அப்படியென்றால் இப்போதய சூப்பர் ஸ்டார் சாரு 
		நிவேதிதாவா, அல்லது ஜெயமோகனா... கேட்டா கடுப்பாயிடுவாங்களே! அதுசரி, ஏன் 
		மரபுக்கவிஞர்களுக்கு மட்டும் இத்தகு அடைமொழிகள் அதிகமாக இருக்கின்றன? எதன் 
		நீட்சி இது? இதன் பின்னனியில் இருக்கும் உளவியல் காரணம் என்ன? அலசினால் ஒரு 
		பி.எச்.டி வாங்கிடலாம்!)
 
 
  ஓகே, திலீப்குமாரின் `கடவு` சிறுகதை பற்றிச் சொல்ல நினைத்து, ஏதேதோ மனதில் 
		நெருடிவிட்டது. 
 ஜெயமோகனின் `மாடன் மோட்சம்` படித்தபோதும், திலீப்குமாரின் `கடவு` 
		படித்தபோதும் ஏற்பட்ட மனோநிலை ஏறக்குறைய ஒரே மாதிரிதான். அங்கதம் 
		தழும்பும், வாழ்க்கையின் நிதர்சனத் தழும்பினை தடவிப் பார்த்து மனம் 
		வெம்பாமல், புன்னகைத்து கடந்து போகும் எத்தனிப்பே விஞ்சி நிற்கும் அழகியல் 
		வெகு சிறப்பாய் அமைந்த கதைகள்.
 
 'கடவு', தொகுப்பின் முதல் கதையாகும். வாழ்வின் மொத்த வலியையும், 
		கசப்பையும், வெறுப்பையும், நிராகரிப்பையும் அங்கதத்தினாலேயே சுமந்து 
		வென்றெடுக்க இயலும் என்று கண்டுகொண்ட கங்கு பாட்டியின் கதை இது. எனக்கு 
		வாசிக்கக் கிடைத்த பெரிய எழுத்தாளர்கள் பலரும் அங்கதத்தை 
		முன்னெடுக்காமலில்லை. பலர் அதனை ஒரு நடை உத்தி என்ற அளவில் மட்டும் 
		பயன்படுத்தியுள்ளனர். விளைவு, அலாதியான ஒரு வாசிப்பின்பம். இங்கு நமக்கு 
		கிட்டுவது நெருக்கடியில் இருந்து ஒரு தப்பித்தல் மட்டுமே. ஆனால், அங்கதத்தை 
		ஒரு தத்துவ நீட்சியாக, வாழ்வின் தரிசனமாக காட்டிய எழுத்தாளர்களாக 
		புதுமைப்பித்தன், சு.ரா இவர்களோடு திலீப்குமாரும் இருக்கிறார் என்பது என் 
		கணிப்பு.
 
 'கடவு' அங்கதத் தொனியில் எழுதப்பட்ட கதையல்ல; வாழ்வின் மிகக் கடுமையான 
		அனுபவங்களை, ஒரு விடுபட்ட மனோபாவத்துடன் பார்க்கும் மன வலிமையை, அல்லது 
		வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்து கொண்ட ஓர் ஆத்மாவின் பயணக் 
		குறிப்புகளாகக் காட்டுவதுபோலத்தான் அக்கதை இருக்கிறது. கங்கு பாட்டியின் 
		உரையாடல்களில் பொங்கி வழியும் அங்கதம் அவளின் கடந்தகால கசப்பை, மூர்க்கமாக 
		சிதைக்கப்பட்ட கொடூரத்தை ஒளித்து வைக்க மட்டுமா பயன்பட்டது?
 
 'இந்த முறை கங்கு பாட்டி யாரையும் ஏமாற்றாமல் செத்துத்தான் போவாள் என்று 
		தோன்றியது..' என்று தொடங்கும் ஒரு கதை நிச்சயம் வாசகனை ஈர்த்துவிடும். 
		குஜராத்திகள் வாழும் குடியிருப்பு, கதைக்களம். தான் மூழ்கி மீண்ட புதைகுழி 
		வாழ்க்கையை அதிக சிரமமின்றி அல்லது கொஞ்ச சிராய்ப்புகளோடு மட்டும் 
		கடந்துவிட தன்னை அணுகியவர்களை கேலியும், கிண்டலுமாக கங்கு பாட்டி வழி 
		நடத்திச் செல்கிறாள். கசப்பையும், இனிப்பையும் பேதமற்றுப் பார்க்கும் 
		பக்குவம் மட்டுமல்ல பாட்டி; மனம் முழுக்க நிறைந்த மனித நேயமும்தான். 
		எல்லாவற்றையும் அவளால் அலட்டிகொள்ளாமல் அணுகமுடிகிறது. எல்லாவற்றையும் 
		வேடிக்கையாகப் பார்க்க இயலும் பற்றில்லா நிலை. இங்குதான் பாட்டியின் 
		அங்கதம் முழுமையான ஒரு வாழ்க்கைப் பார்வையாக பரிமாணம் கொள்கிறது.
 
 எனக்கு உவப்பான சில வரிகள்:
 
 • 'சாகக் கிடப்பவர்கள் செத்துதான் போக வேண்டும் என்று நியதி கிடையாது. 
		ஆனால் கங்கு பாட்டி சாகக்கிடப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தைப் 
		பல முறை மீறிவிட்டிருந்தாள்'
 
 • 'உலகத்தையே பரிகசித்த மமதை கொண்டு மினுங்கியது அவளது இளமை!'
 
 • 'கடைசியில் மனிதர்களுக்கு என்னதான் வேண்டும் சொல், அன்பைத் தவிர'
 
 • “உன் ஆசன வாயில் தீயை வைக்க,” என்று அவள் சொல்லும் போது நம் நெஞ்சை 
		தென்றல்தான் வருடியதோ என்று இருக்கும்'
 
 • 'இதோ பார், விரதங்களால் பெண்களுக்குத்தான் பாதிப்பு. உலகில் உள்ள எல்லா 
		விரதங்களையும் பெண்கள்தான் செய்யவேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு ஒரு 
		விரதமும் கிடையாது. நாய்கள் தின்றுவிட்டு ஊர்சுற்றத்தான் லாயக்கு..'
 
 • 'பொதுவாகக் கடவுளை நம்பாமல் இருப்பதில்தான் அனுகூலங்கள் அதிகம்'
 
 • 'உன்னை மாதிரி இருப்பவர்களுக்காகத்தான் இந்து மதத்தை ஒரு சூப்பர் 
		மார்க்கெட் மாதிரி அமைத்திருக்கிறார்கள். உனக்கு பிடித்த அயிட்டத்தை நீ 
		எடுத்துக்கொள்ளலாம்'
 
 கதையோட்டத்தில் இத்தகைய வரிகள் வெறும் நகைச்சுவை குறிப்புகளாக மட்டும் 
		வருவதில்லை. இன்பம், துன்பம் ஆகிய வாழ்வின் இருமையை அங்கதத்தால் கடந்து 
		போகும் இலாவகமும்தான்.
 |  |