இதழ் 24
டிசம்பர் 2010
  ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்
 
 
 
  நேர்காணல்:

"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!"

சேனன்

தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்!
லெ. முருகபூபதி

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்... 'மலேசியா - சிங்கை 2010' நூலை முன்வைத்து'
கே. பாலமுருகன்


பத்தி:

தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்

ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்


விமர்சனம்:

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
கே. பாலமுருகன்

சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்
கே. பாலமுருகன்

ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை
கலாநிதி மைதிலி தயாநிதி

இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்'
எம். ரிஷான் ஷெரீப்

பதிவு:

வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள்
யோகி


சிறுகதை:

தங்கராசு
ஷைலஜா

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...13
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...14

ம‌. ந‌வீன்

யதீந்திரா

ஏ. தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

ரெ. பாண்டியன்


கிண்ணியா எஸ்.பாயிஸா அலிஎதிர்வினை:


சமூக போராளியின் நேர்காணல்
வெ. தனலெட்சுமி

தவறுக்கு வருந்துகிறேன்
எம். கே. குமார்


கடிதம்:

மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
     
     
 

ஜே. ஜே. சில குறிப்புகள் நாவலை மூன்றாவது வாசிப்பிற்குப் பிறகு எழுந்த சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நான் இலக்கிய விமர்சகனல்ல. அதற்கான விரிவான ஆழ்ந்த வாசிப்பும் சிந்தனையும் எனக்கு எப்போதும் கை கூடுவதில்லை. ஒரு காட்டு மனிதன் காட்டின் ஆன்மாவையும் சுவாசத்தையும் அதன் அசைவுகளையும் தன்னுள் உணர்வதுபோல விமர்சகன் படைப்பை உணர்ந்து அதை பகிர வேண்டும். எனக்கோ எப்போதுமே அடிக்கடி காட்டுக்குச் செல்லும் சுற்றுப்பயணி போலவே வாசிப்பு நிகழ்கிறது. முகத்தில் சில துளி வேர்வை, காலில் கொஞ்சம் புழுதி, மனதில் ஓரளவு காட்டின் நிழல்.

ஆல்பர் காம்யூ மறைந்த மறுநாளில் ஈரல் நோயினால் இறந்துவிடுகிறார் ஜேம்ஸ் ஜேக்கப் என்ற ஜே. ஜே. அவர் உரையாற்றவுள்ள ஒரு மலையாள எழுத்தாளர் மாநாட்டிற்கு அவரை சந்திக்க வரும் அவர் பேரில் பெரும் மதிப்புடைய பாலு என்கிற தமிழ் இளம் எழுத்தாளனின் கோணத்தில் கதை தொடங்குகிறது. ஜே ஜே பற்றிய ஒரு அறிமுக நூலை தமிழில் எழுத அவரோடு நெருங்கி பழகியவர்களை சந்திக்கிறான் பாலு. அப்படி கிடைக்கப்பெற்ற தகவல்களே குறிப்புகளாக விரிகிறது.

பாலு கதாபாத்திரம் சுராவின் ஆளுமையை பலமாக நினைவுப்படுத்துகிறது. இளவயது நோய்மை, வசதியான குடும்பத்தின் பலவீனமான பிள்ளை, இந்திய மரபின் மீது இருக்கும் விலகல், அழகியல் மீதான பரவச மனநிலை யாவும் சுராவின் ஆளுமை நிழல்களே. நாவலில் வரும் எம்.கே அய்யப்பன், எம். கோவிந்தனை நினைவுப்படுத்துகிறார். பேராசிரியர் அரவிந்தாட்சமேனன், பேராசிரியர் ஜேசுதாசனாக இருக்கலாம். ஜெயகாந்தன் மீதான சுராவின் விமர்சனமே முல்லைக்கல் மாதவானாக உருக்கொண்டிருக்கலாம். இவையனைத்தும் என் ஆருடங்களே. நீங்கள் அதற்கு உடன்படத் தேவையில்லை.

2002-ல் என் முதல் வாசிப்பின்போது என்னை மிகவும் நிலைக்குலையச் செய்த ஆக்கம் இது. அப்போது நான் முக்கியமாக வாசித்திருந்தவர்களாக ஜெயகாந்தனைச் சொல்லலாம். ஒரு முதிரா வாசகனாக நான் வாசித்த முதல் முக்கிய நவீன படைப்பாக இதை கொள்ளலாம். முதலில் அதிர்ச்சியாக இருந்தது இதன் நடைதான். மரபான தமிழ் நாவலில் அம்சம் நிச்சயம் இல்லை. நேரடியான மொழியில் பேசத் தொடங்கும் நாவலில் கவித்துவமான வரிகள் ஒவ்வொரு பக்கங்களிலும் பளீரென்று வெளிப்பட்டு கொண்டே இருந்தன.

ஜே ஜே யார்? தேவாலயத்தில் தச்சு வேலை செய்பவரின் மகனாக பிறந்தவர். இயல்பிலேயே ஓவியத்திலும் சிற்பத்திலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். பொதுவாக அமைதியான சிறுவனாகவே வளரும் ஜே ஜே-வை அவரது கல்லூரி ஆசிரியர் அரவிந்தாட்சமேனன் இலக்கியத்தில் சிந்தனையை மடைமாற்றம் செய்கிறார். கல்லூரி காற்பந்தாட்ட வீரராகவும் திகழும் ஜே ஜே பெரும்பாலும் வெற்றி தோல்விகளில் ஆர்வமற்றவர். ஆட்டம் தரும் அனுபவமும் பரவசமுமே அவருக்கு முக்கியமாக இருக்கிறது. இலக்கியத்திலும் அவனது நாட்டம் உண்மை நோக்கியும் தார்மீகமாகவும் இருக்கிறது. படைப்பின் அழகியல் புதுமையையும் உண்மையையும் நோக்கியதாகவும் இருக்க வேண்டுமென்பது அவன் அவா.

ஜே ஜே-வின் அழகியல் உணர்வும் உண்மையின் தேட்டமும் உச்சமானதாக நாவலில் முன்வைக்கப்பட்டுள்ளது. நூலகங்களைப் பற்றி ஆய்வு செய்யும்போது, நூலக நூல்களின் இருப்பை நெருக்கமாக அறிந்தவர்களே நூலகத்தில் பணிப்புரிய வேண்டுமென நினைக்கிறான். எழுத்துக்களில் முக்குளித்தவர்களின் கண்களுக்கு இதமான நந்தவனம் நூலகத்தைச் சுற்றி அமைக்கப்படவேண்டுமென எண்ணுகிறான். வெண் குஷ்டம் கொண்ட ஓமனக்குட்டி அவனுக்கு உண்மையிலேயே பேரழகியாக இருக்கிறாள். அவளின் முகத்தில் விழும் முடியும், அழகான நாசியும் அவனை மயக்குகிறது.

பாலு ஓரிடத்தில் ஜே ஜேவின் ‘கொந்தளிப்பு தத்துவத்தை’ப் பற்றி சொல்கிறான். அதற்குமேல் அதைப் பற்றி எவ்வித விளக்கமும் நாவலில் இல்லை. ஆனால் நாவல் முழுதும் ஜே ஜே கொந்தளிப்பு மனநிலையில் இருக்கிறான். அழகியலையும் உண்மையையும் தேடும் பயணத்தில் கிட்டதட்ட அவனோடு நெருக்கமான அனைவரோடும் முரண்படுகிறான். பாலு சொல்லாவிட்டாலும் ஜே ஜே ஒரு இருத்தியல்வாதியாகத்தான் நாவலில் உணர முடிகிறது. அவனுக்கு கடவுள் இல்லை. பிறப்பையும் இறப்பையும் பற்றி பெரிய கேள்விகள் இல்லை. ஆனால் இருப்பைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கிறான். அதை முடிந்தவரை வாழ்வு உண்மை ஒளியில் ஒளிரவும், அர்த்தம் செறிந்ததாகவும் இருக்க முயல்கிறான். ஆனால் வாழ்வு அவனிடம் புறமுதுகு காட்டவே விரும்புகிறது. மனிதர்களின் யதார்த்தம் அவன் தார்மீகத்தைத் தொடர்ந்து கேலி செய்கிறது. மது அவன் மன உளைச்சலின் நண்பனாக மாறுகிறது. 40 வயதை அடைவதற்குள் குடல் செயலிழந்து செத்து போகிறான்.

சுரா ஜே ஜேவை எந்த தத்துவத்தினுள்ளும் கட்டுப்படுத்த விரும்பாதது புரிந்து கொள்ள முடிகிறது. கதாபாத்திரத்தின் வீர்யத்தைக் கட்டுப்படுத்த அவர் விரும்பவில்லை. வாழ்வின் எல்லா கேள்விகளையும் எதிர்க்கொள்ள ஜே ஜே விரும்பியதாலும் அவனில் பழமையின் பாரத்தை ஏற்ற சுரா விரும்பவில்லை. பழமையின் கிணற்றிலிருந்து தவளைகள் இன்னும் 30 ஆண்டுகளில் வெளியேறிவிடும் என கனவு காண்கிறான் ஜே ஜே. அந்த 30 வருடமான 2010-ல் ஜேஜேவின் கனவு இன்னும் தளர்நடையுடன் தள்ளாடி கொண்டிருப்பதன் சாட்சியாக இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நான் இருக்கிறேன். அப்படி பழமையின் கிணற்றிலிருந்து வெளியேறிய சில தவளைகள் நவீன கிணற்றில் உல்லாசமாக நீந்திக் கொண்டிருப்பதை ஜே ஜே இப்போது இருந்தால் சொல்லவும் ஆசைதான்.

ஜே ஜேவின் கதாப்பாத்திரத்தை எவ்வித தத்துவ பின்புலத்திலும் வரையரைக்காதது நாவலுக்கு ஒரு கவித்துவ வீச்சையும் தார்மீக பலத்தையும் அளித்துள்ளதென்னவோ உண்மைதான். ஆனால் ஜே ஜே வின் கால் இம்மண்ணில் கால் பதியாது அந்தரத்தில் தவழ்ந்திடவே விழைகிறது.

அப்படியென்றால் ஜே ஜே போன்றவர்களின் முக்கியத்துவம் என்ன? யதார்த்தத்தில் சகல சமரசங்களோடும் பல்லிளித்து கொண்டிருக்கும் நமக்கு ஜே ஜே போன்றவர்களின் இருப்பு கடுமையான மன நெருக்கடியைக் கொடுக்கிறது. இதற்கு மட்டும்தானா ஜே ஜே? நாவலில் வரும் சம்பத் கதாபாத்திரம். ஓரிரவு கொடுங்கனவு கண்டு விடிவதற்கு முன்பே காரை எடுத்துக் கொண்டு ஒரு மலை பிரதேசம் நோக்கி செல்கிறார். விடிவதற்கு சில கணங்களே உள்ள நேரத்தில் அதன் உச்சியை அடைகிறார். சூரிய உதயத்தின் ஒவ்வொரு படைப்பு கணமும் அவருள் பெரும் பரவசத்தை உண்டு பண்ணுகிறது. உடனே சம்பத் ஜே ஜேவை தேடி செல்கிறார். பனி படர்ந்த காலையில் ஜே ஜேவின் மனைவி கோழிகளுக்கு தீனி போட்டு கொண்டிருக்கிறார். கால்களில்லாத கட்டிலில் படுத்திருக்கும் ஜே ஜேவை கண்டதும் சம்பத் ‘இன்று நான் சூரியோதத்தைக் கண்டேன்’ என்கிறார். மனிதர்கள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கவித்துவ கணங்களின் சாட்சிகளாக எப்போதும் ஜே ஜே போன்றவர்கள் இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம்.

(வல்லினம் சந்திப்பு 1-ல் பகிரப்பட்ட கருத்துக்களின் சுருங்கிய வடிவம்)

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768