|  | 
 | அமைதியும் காற்றோற்றமும் 
		நிறைந்த சூழல். அங்கே குப்பை போடக்கூடாது, இங்கே புகைக்கூடாது போன்ற 
		கெடுபிடிகள் இல்லாத சுதந்திரம்.
 
  பயணிகளுக்கு 
		மட்டுமின்றி, நவீன மயமாக்கலுக்கு முந்தய சிங்கப்பூரின் காற்றைச் சுவாசிக்க 
		விரும்புபவர்களும் தேடி வரும் சரணாலயமாக பல ஆண்டு காலமாகத் திகழ்ந்து வந்த 
		தஞ்சோங் பகார் ரயில் நிலையம் ஜூன் 30ம் தேதியுடன் செயல்பாட்டை நிறுத்தியது. 
 பரபரப்பும் அழுத்தமும் நிறைந்த சிங்கப்பூரின் இயந்திரத் தன்மையிலிருந்து 
		முற்றிலும் மாறுபட்ட இடமாக மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்திருந்த 
		தஞ்சோங் பகார் ரயில் பழைய சிங்கப்பூரை நினைவுகூரும் சொற்ப அடையாளங்களில் 
		ஒன்று. அதிவேக வளர்ச்சியிலும் நவீன மயமாக்கலிலும் சிங்கப்பூர் தொலைத்த 
		அடையாளங்களும் நினைவுகளும் ஏராளம்.
 
 பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு தஞ்சோங் பகார் ரயில் நிலையம் 
		உட்லண்ட்சுக்கு மாற்றப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து 
		ரயில் நிலையத்தை மரபுடைமைச் சின்னமாகப் பேண ஏராளமானோர் கோரிக்கை 
		விடுத்தனர். ரயில் நிலையம் பாதுகாக்கப்பட முடிவெடுக்கப்பட்டாலும், அதன் 
		வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
 
 சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பகுதியான தஞ்சோங் பகார் 
		வட்டாரத்திலிருந்து உட்லண்ட்ஸ் வரை கிட்டத்தட்ட 15 மைல் தூரத்துக்கு 
		அமைந்திருந்த ரயில் நிலையமும் ரயில் பாதையும் இனிமேல் இருக்காது என்பது, 
		திரு அருள்தாஸ் 64, போன்ற பலருக்கு அதன் வாழ்வோடு இணைந்திருந்தவர்களுக்கு 
		மிகுந்த துயரத்தைத் தரும்.
 
 தஞ்சோங் பகார் பகுதியின் போலிஸ் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த திரு 
		அருள்தாஸ், வளர்ந்தது, வேலை பார்த்தது எல்லாமே இந்த வட்டாரத்தில்தான். 
		ஓய்வு பெற்று விட்டாலும் ரயில் நிலையம் அருகில் குடியிருக்கும் அவர் 
		பெரும்பாலும் மதிய உணவுக்கு ரயில் நிலையத்துக்குத்தான் செல்வார். “இந்தப் 
		பகுதியின் ரயில் சேவை முடிவுக்கு வருவதோடு, என் வாழ்வின் ஒரு அத்தியாயமும் 
		முடிவுக்கு வருகிறது,” என வருத்தப்பட்டார்.
 
 ரயில் நிலையம் மூடப்படுகிறது என்றதும் கடந்த ஒரு மாத காலமாக கேமிராக்களுடன் 
		குவிந்த கூட்டம் அவருக்கு எரிச்சலை ஊட்டியது. “இதுநாள் வரை எங்கே 
		இருந்தார்கள்? இப்போது வந்து போட்டி போட்டு படம் எடுப்பது வேடிக்கையாக 
		இருக்கிறது. சிங்கப்பூரர்கள் எல்லா விஷயத்திலும் இப்படித்தான் ‘கியாஸு’ 
		தனமாக இருப்பார்கள்,” என்றார்.
 
 “சாப்பிடுவதற்காகக் குடும்பத்துடன் இங்கு வருவேன். பலமுறை ரயில் பயணம் 
		செய்துள்ளேன். என் வாழ்விலும் சிங்கப்பூர் வரலாற்றிலும் இந்த ரயில் நிலையம் 
		ஒரு முக்கிய அங்கம்,” என்றார் 75 வயது திருமதி கல்யாணி.
 
 சிங்கப்பூர் ரயில் பாதை
 
 இந்த வட்டாரத்தில் தரைவழியாகவும் கடல் வழியாகவும் பரந்த போக்குவரத்து 
		கட்டமைப்பை உருவாக்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜத்தில் இலக்காக இவ்வட்டாரம் 
		எங்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
 
 சிங்கப்பூரில் முதல் ரயில் நிலையம் டேங் சாலையில் 1895ல் அமைக்கப்பட்டதாகச் 
		சிங்கப்பூரின் தேசிய ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. எனினும் ரயில் பாதை 
		1902ல் தான் அமைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. முதல் ரயில் நிலையம் போர்ட் 
		கேனிங் பூங்காவின் தெற்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1907ல் 
		இணைப்புப் பகுதி கட்டப்பட்டுள்ளது. டேங் சாலையிலிருந்து நியூட்டன் வழியாக 
		உட்லண்ட்ஸ் வரை அப்போது ரயில் சென்றுள்ளது.
 
 கெப்பல் சாலையில் 1932ல் தஞ்சோங் பகார் ரயில் நிலையம் திறக்கப்படும் வரை 
		டேங் சாலை ரயில் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது.
 
 சிங்கப்பூர் ரயில்வே மற்றும் ரயில் சேவை சம்பந்தப்பட்ட நிலங்களை மலேசியக் 
		கூட்டரசுக்கு விற்கும் சிங்கப்பூர் ரயில்வே சட்டம் 1918ம் ஆண்டு அக்டோபர் 
		25ம் தேதி கையெழுத்தானது.
 
 அதன்படி தஞ்சோங் பகார் ரயில் நிலையம், குடியிருப்புப் பகுதி, ரயில் பாதை 
		அமைந்துள்ள நிலப் பகுதிகளை மலேசியா 999 ஆண்டு குத்தகைக்கு எடுத்தது.
 
 எனினும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் 
		ஏற்பட்ட குழப்பம் இரு நாடுகளின் உறவில் பல காலமாகவே விரிசல் ஏற்பட்டு 
		வந்துள்ளது.
 
 அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் திரு லீ குவான் இயூவும் மலேசிய நிதி அமைச்சர் 
		டைம் ஜைனுதீனும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இரு சாராரும் வேறு விதமாகப் 
		புரிந்துகொண்டனர்.
 
 கடந்த ஆண்டுதான் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் 
		நஜிப் ரசாக்கும் அந்தக் குழப்பங்களைத் தீர்த்து ஒரு முடிவுக்கு வந்தனர். 
		அதன்படி மலேசியா தனது ரயில் சேவையை உட்லண்ட்சுக்கு மாற்ற இணங்கியது. 
		இதற்கான முறையான ஒப்பந்தங்கள் ஜூன் 27ம் தேதி மலேசியாவின் புத்ரஜெயாவில் 
		கையெழுத்தாகின.
 
 சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் கா.சண்முகமும் மலேசியாவின் பிரதமர் 
		அலுவலக அமைச்சர் நூர் முகம்மது யாக்கூப் இருவரும் கையெழுத்திட்டனர்.
 
 இந்த இடமாற்றத்தால் தஞ்சோங் பகார், கிராஞ்சி, உட்லண்ட்ஸ் மற்றும் புக்கிட் 
		தீமாவில் உள்ள மூன்று நிலப்பகுதிகள் சிங்கப்பூருக்குத் திருப்பிக் 
		கொடுக்கப்பட்டன.
 
 அதற்கு பதில் மரீனா சவுத்தில் உள்ள நான்கு நிலப்பகுதிகளும் ஓஃபிர்-ரோச்சோர் 
		வட்டாரத்தில் உள்ள இரண்டு நிலப்பகுதிகளும் மலேசியாவுக்கு வழங்கப்பட்டன.
 
 இந்த இடங்களில் மலேசியா சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் இணைந்து முதலீடு 
		செய்யும். இவ்விடத்தில் மலேசியாவின் கஸானா நேஷனல் நிறுவனம் 60 விழுக்காடு 
		பங்கையும் சிங்கப்பூரின் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 40 விழுக்காடு 
		பங்கையும் வகிக்கும். இந்நிலையில் எம்+எஸ் பிரைவேட் லிமிடெட்டும் இஸ்கந்தர் 
		ஜெவி கம்பனியும் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றும் ஜூன் 30ம் தேதியில் 
		தொடங்கப்பட்டது.
 
 ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டமாக மெரினா சவுத்தில் உள்ள நான்கு 
		நிலப் பகுதிகளையும் ஒபிர்-ரோச்சரில் உள்ள இரண்டு பகுதிகளையும் எம்+எஸ் 
		மேம்படுத்தும். அதே சமயத்தில் இஸ்கந்தர் மலேசியாவில் இரு மேம்பாட்டுத் 
		திட்டங்களை இஸ்கந்தர் ஜேவி மேற்கொள்ளும்.
 
 அத்துடன் சிங்கப்பூரையும் மலேசியாவின் ஜோகூர் பாருவையும் இணைக்கும் அதிவேக 
		ரயில் சேவையைத் தொடங்க இரு நாட்டு அரசாங்கங்களும் திட்டமிட்டுள்ளன.
 
 வரும் 2018ம் ஆண்டில் புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று சிங்கப்பூரும் 
		மலேசியாவும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
 
 அதிவேக ரயில் சேவையின் கடைசி நிலையங்களாக ஜோகூர் பாருவின் சென்ட்ரலும் 
		ரிபப்ளிக் பல துறைத் தொழிற்கல்லூரியின் அருகேயும் இருக்கும். அதிவேக ரயில் 
		சேவைக்கான சுங்கத் துறை, குடிநுழைவுத் துறை வசதிகள் சிங்கப்பூரிலும் இதே 
		போன்ற மற்றொரு வசதி ஜோகூர் பாருவிலும் செயல்படும்.
 
 வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சோஞ் பகார் 
		ரயில்வே நிலையம்
 
 
  பின்லாந்தின் 
		ஹெல்சின்கி பாணியின் கட்டப்பட்டுள்ள தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தின் 
		கட்டடக் கலை தனிச் சிறப்பானது. ‘டெக்கோ’ (Deco) பாணி கலை வடிவத்திலான 
		இக்கட்டடத்தை வடிவமைத்தது Swan and MacLaren கட்டடக்கலை நிறுவனம். 
 இதன் முகப்பில் உள்ள நான்கு தூண்களிலும் உள்ள சிற்பங்களை இத்தாலியைச் 
		சேர்ந்த பிரபல சிற்பி ருடோல்ஃபோ நொல்லி வடிவமைத்துள்ளார்.
 
 அவற்றின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் “FMSR” என்ற எழுத்துகளின் பொருள்: 
		Federated Malay States Railway. அதாவது மலாயா கூட்டரசின் ரயில் 
		என்பதாகும்.
 
  உயரமான 
		கூரைகளின் மோசைக் சித்திரங்கள் வண்ணம் சேர்க்கப்பட்ட ரப்பரினால் 
		வடிவமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் ரப்பர் வேர்க்ஸ் இதனை அமைத்துள்ளது. 
 இந்த ஆறு தொகுப்பு ஓவியங்களும் மலாயாவின் முக்கிய ஆறு பொருளியல்களைக் 
		குறிப்பிடுகின்றன: ஈயம் (டின்) தயாரிப்பு, நெல் விளைச்சல், ரப்பர் பால் 
		வெட்டுதல், கடல்துறை வர்த்தகம், தென்னை வளர்த்தல், விவசாயம்.
 
 மேலும் டிக்கெட் விற்கப்படும் முகப்பு முழுக்க முழுக்க தேக்கு மரத்தினால் 
		ஆனது. தற்போது வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது.
 
 இந்த ரயில் நிலையத்தின் இரண்டாம், மூன்றாம் மாடிகளில் முன்பு பயணிகள் 
		தங்கும் ஹோட்டல் செயல்பட்டது. கழிவறைகளுடன் கூடிய பெரிய தனி அறைகள் முதல் 
		பொது அறைகள் வரை இங்கு உள்ளன. பிரிட்டிஷாரால் இந்த ஹோட்டல் பெரிதும் 
		பயன்படுத்தப் பட்டது என நினைவுகூர்ந்தார் முன்னாள் ரயில்வே நிறுவன ஊழியர் 
		திரு முனியாண்டி, 72. தமது 18 வயதில் $90 சம்பளத்துக்கு ரயில் நிலையத்தில் 
		போர்ட்டராகப் பணியாற்றியத் தொடங்கியவர் திரு முனியாண்டி.
 
 மேலும் புக்கிட் தீமாவில் இன்னும் உள்ள ரயில் நிலையக் கட்டடம் சிங்கப்பூர் 
		அரசு இதழில் தேசிய மரபுடைமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 
		பெரும்பாலும் சரக்கு ரயில்கள் வந்து சரக்கு ஏற்றி இறக்கும்.
 
 ரயில்வேயும் இந்தியர்களும்
 
 
  மலேசிய 
		சிங்கப்பூர் மக்களின் குறிப்பாக இந்தியர்களின் வரலாற்றில் மலேயன் 
		ரயில்வேக்கு பெரும் பங்குண்டு. 
 காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணியில் 
		ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலும் இந்திய நாட்டவர்கள். இவர்களில் பலர் 
		அந்தமான் தீவில் கைதிகளாக இருந்தநிலையில், பிரிட்டிஷ்ஷார் அவர்களை இங்கு 
		வரவழைத்து ரயில்வே பாதைகளை அமைத்தனர்.
 
 மேலும் ரயில் போக்குவரத்து மற்றும் ரயில் நிலையங்களை நிர்வகிக்கும் 
		பணிகளில் இலங்கைத் தமிழர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் ரயில்வே 
		ஊழியத்திலும் ஏராளமான இந்திய வம்சாவளியினர் ஈடுபட்டுள்ளனர்.
 
 கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த 
		‘ஹபிப் ரயில்வே புத்தகக் கடை’யின் உரிமையாளர்களி ஒருவரான 37 வயது திரு 
		அஜிமல் நசிர் கான். முன்பு மலேசியாவிற்குப் போக அனேகமானோர் ரயிலைத் தான் 
		நம்பி இருந்தனர் எனக் கூறினார்.
 
 சிறு ‘பெட்டிக் கடையாக’ தொடங்கப்பட்ட இக்கடையில் சில ஆண்டுகளில் பணம் 
		மாற்றும் சேவையும் தொடங்கப்பட்டது. மூன்று தலைமுறையினரை இக்கடையை நடத்தி 
		வந்துள்ளனர். கடந்த 51 ஆண்டுகளாக இந்தக் கடையில் பணி புரிந்து வந்துள்ள 
		திரு பெரிய சீனி முகமது காசிம், 68, வளர்ந்தது முழுக்க முழுக்க இந்த ரயில் 
		நிலையத்தில்தான்.
 
 
  அதேபோல் 
		ரயில்வே உணவகத்தில் உணவுக் கடைகளை நடத்தி வந்தவர்களும் பெரும்பாலும் 
		இந்தியர்கள்தான். 
 ரயில் பயணிகள், தஞ்சோங் பகார் வட்டாரத்தின் வர்த்தகர்கள், அலுவலகப் 
		பணியாளர்கள், சாதாரண மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் 
		உணவங்களில் ஒன்று ரயில்வே உணவகம். அங்குள்ள இரு உணவங்களையும் கிட்டத்தட்ட 
		30 ஆண்டுகளாக நிர்வகித்து வருபவர்கள் ஹசான் சகோதரர்கள்.
 
 மூத்தவரான திரு மகமூதூல் ஹசான் 70களில் முதலில் பின்பகுதியில் இருக்கும் 
		உணவகத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்.
 
 முன்பகுதியில் முன்னர் ரயில்வே மதுக்கூடம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு 
		முன்னர் அப்பகுதியும் உணவகமாக மாற்றப்பட்டபோது, அதையும் திரு ஹசான் 
		வாடகைக்கு எடுத்தார்.
 
 சில கடைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தன.
 
 சில கடைகள் மதிய நேர உணவு மட்டும் வழங்கின. சில மதிய, இரவு நேர உணவுகளை 
		வழங்கின. இந்தக் கடைகளை நடத்தி வந்தவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்.
 
 கம்போங் பாரு முனீஸ்வரன் கோயில்
 
 
  ரயில்வே 
		இந்திய ஊழியர்களால் ரயில்வே குடியிருப்பில் முனீஸ்வரன் கோயில் 
		அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த ரயில்வே முனீஸ்வரன் 
		கேடிஎம் நிறுவன ஊழியர்கள் வாழ்ந்த, வேலை பார்த்த இடத்துக்குக் காவல் 
		தெய்வமாக இருந்ததாக அங்கு வேலை பார்த்தவர்கள் கருதினர். 
 சிங்கப்பூர் இந்து மக்கள் பல ஆண்டு காலமாக வழிபட்டு இந்த கோயில் 
		கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய அளவில் குடமுழுக்கு விழா 
		கண்டது. தற்போது அக்கோயில் ஜோகூர் பாருக்கு கொண்டு செல்லப்பட்ட விட்டது.
 
 கேடிஎம் ரயில்வே ஊழியர்களின் முதல் தங்கும் விடுதி, பிளேர் ரோடு மற்றும் 
		ஸ்பூனர் சாலை அருகே இருந்தது. பிறகு 1982ம் ஆண்டு அது இடிக்கப்பட்டு, ரூமா 
		திங்கிக்கு மாற்றப்பட்டது. தற்போது அந்த இடமும் காலி செய்யப்பட்டு விட்டது.
 
 பழைய கழிதலும் புதியன புகுதலும் காலத்தால் மாற்றப்பட முடியாதவை. எனினும் 
		வாழ்வின் தடங்கள் முற்றாக அழிக்கப்படும்போது, அடையாளங்களும் முழுதாக 
		மறைந்து விடுகின்றன.
 |  |