முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 26
பிப்ரவரி 2011

  நேர்காணல்:
எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில்,
நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது?
சஞ்சய் குமார் பெருமாள்
 
 
       
நேர்காணல்:

எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில், நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது?

சஞ்சய் குமார் பெருமாள்குறும்பட விமர்சனம்:

'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)
கே. பாலமுருகன்மலேசிய இந்தியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் 'இண்டர்லோக்' (Interlok) மலாய் நாவல் சர்ச்சை குறித்தான அலசல்கள்

"பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?"
ம‌. ந‌வீன்

காலம் கடந்த ஞானமும் தண்டனையும்: “இண்டர்லோக் சமூகத்தின் ஆழ்மனம்”
கே. பாலமுருகன்

அடையாளமற்றவர்கள்
சு. யுவராஜன்சிறுகதை:

அமென்
கிர‌க‌ம்

விட்டாச்சு லீவு
சின்னப்பயல்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...8
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...15
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனிகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...16

லதாமகன்

தவ சஜிதரன்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

ரெ. பாண்டியன்

இயக்குநர் சஞ்சய் குமார் பெருமாளின் படைப்புகள்
குறும்படம்
ஜகாட் (Jagat) - பகுதி 1
குறும்படம்
ஜகாட் (Jagat) - பகுதி 2

குறும்படம்
யார் சண்டையிட்டது? (Siapa Gaduh)
விவரணைப்படம்
தைப்பூசம் (Thaipoosam)

சஞ்சய் குமார் பெருமாள். மலேசிய திரைப்படத்துறையின் மிக நம்பிக்கைத் தரும் ஆளுமை. 2009 பி.எம்.டபிள்யு குறும்பட போட்டியில் (BMW Shorties) இவரது குறும்படம் 'மாச்சாய்' (Machai) முதல் பரிசை வென்றது. இதுவரை மாச்சாய் (Machai), ஜகாட் (Jagat), நிலவுக்கொரு கடிதம், Broken Bangles, Siapa Gaduh (யார் சண்டையிட்டது) போன்ற குறும்படங்களையும் தைப்பூசம் என்ற விவரணப்படத்தையும் சுதந்திரப் பதிவுகள், துப்பறியும் புலி, ராக ஸ்வரம் போன்ற தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். அவரின் 'ஜகாட்' (Jagat) எனும் குறும்படம் மலேசிய திரைத்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. 'ஜகாட்' குறும்படத்தை முதல் முறை பார்த்தபின் அதில் வெளிப்பட்ட அவரின் மாற்று ஒழுங்கின் மீதான பதிவு மலேசியாவில் அவர் நிச்சயம் வித்தியாசமான இயக்குநர் என்ற அடையாளத்தைக் கொடுத்தது. நேர்காணல் என்றதும் 30 வயது மலேசிய இளைஞரான சஞ்சய், தான் திரைப்படத்துறையில் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லையென்றும் கருத்துகள் கூறும் அளவிற்கு வளரவில்லை என்றும் முதலில் மறுத்தார். 'எனக்குத் தெரிந்த சில விஷயங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' எனத் தொடங்கினார்.

திரைத்துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

ஆறு வருடமாக இத்துறையில் இயங்கி கொண்டிருக்கிறேன். படிவம் இரண்டு படிக்கும் போதே இயக்குநராவது தொடர்பான ஆர்வம் எனக்குள் துளிர் விட்டிருந்தது. அதற்கான வழியை ஆராய்ந்து முறையே யு.எஸ்.எம் பல்கலைக்கழகத்தின் தொடர்புத்துறையில் மேற்படிப்புக்குச் சென்றேன். அதன் பின்னர் எனது வாழ்வு இத்துறையை ஒட்டியே பயணித்துக் கொண்டிருக்கிறது.

படிவம் இரண்டில் படிக்கும் போதே உங்களுக்கு இத்துறையில் ஆர்வம் எழுந்தது ஆச்சரியமாக உள்ளது.

எனது இளம் வயதிலேயே மேடையில் ஆடுவதற்கும் நகைச்சுவை நாடகம் நடிப்பதற்குமான எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. நிறைய போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு சமயத்தில் எனது வாழ்வை எதை நோக்கி செலுத்தப் போகிறேன் என்ற கேள்வி எனக்குள் வலுவாக எழுந்தது. அப்போதுதான் ஒரு திரைப்பட இயக்குநரால் மட்டுமே பல்வேறு கலைகளை ஒருங்கிணைக்க முடியும் என கண்டுக்கொண்டேன். எனக்கு பல்வேறு கலை வெளிப்பாட்டில் ஆர்வமும் ஓரளவு அனுபவமும் இருந்ததால் என்னால் அதில் மிளிரவும் முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

பொதுவாக அந்த வயதில் தரப்படும் புறத் தூண்டல்களும் ஒருவரின் வளர்ச்சிக்கு அவசியமானதல்லவா?

புறத்தூண்டல் என்பதைவிட என் குடும்பத்தில் எனக்கு வழங்கப்பட்ட சுதந்திரமே எனது மிகப்பெரிய பலம். எனது சுய சிந்தனையிலும் தேர்விலும் அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது. அதற்கு ஆதரவும் அளித்தனர்.

கலைவெளிப்பாட்டிற்கான தொடக்கக்கால ஆர்வம் நம்மை தொடர்ந்து இயக்கி அதை நோக்கி தீவிரமாக நகர வைக்கும். அவ்வாறான நேரங்களில் முழு பயிற்சி இல்லாமலேயே நாம் சில முயற்சிகளைச் செய்து பார்ப்பதுண்டு. உங்களுக்கு அவ்வாறு நிகழ்ந்ததா?

இன்றைய சூழல் போல அன்று வீடியோ கேமரா வாங்குவது அவ்வளவு எளிதானதாக இல்லை. நிழற்பட கருவி வாங்குவதே சிரமமான காரியம். எனவே ஆர்வம் என்னைத் தூண்டினாலும் எவ்வகையான குறும்பட முயற்சியிலும் ஈடுபடவில்லை. பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாம் பருவத்தில்தான் முதல் குறும்படமே இயக்கினேன். எதார்த்த வாழ்வு எனது படங்களில் தொடர்ந்து வெளிப்படுவது போலதான் என் முதல் படத்திலும். '019' என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட அக்குறும்படம் கல்லூரி வாழ்வின் நினைவுகளைப் பதியமிட்டிருக்கும். 019 என்பது ஓர் அறையின் எண். மாணவர்கள் தங்கும் விடுதியில் பல அறைகள் இருந்தாலும் 019 எனும் அறையில்தான் நண்பர்கள் கூட்டம் குழுமியிருக்கும். சாதாரணமாக எல்லா கல்லூரிகளிலும் நிகழும் விஷயம்தான் இது. ஏதோ ஓர் அறை நண்பர்கள் குழும ஏற்ற இடமாய் தற்செயலாய் அமைந்துவிடுகிறது. மாணவர்களும் விஷேச மோப்ப சக்தியுடன் அவர்களுக்கான பொது இடத்தை கண்டடைகின்றனர். அங்கு கூடி உணவு உண்பது, சண்டையிட்டுக் கொள்வது, பிரிவது என சகலமும் அரங்கேறுகிறது. இது போன்றதொரு வாழ்வைதான் நான் அக்குறும்படத்தில் பதிவுசெய்துள்ளேன்.

ஒரு வாழ்வு முறையை பதிவு செய்தல் என்பதை கடந்து சமூகம் சார்ந்த நிகழ்வுகளின் எதிர்வினையை நீங்கள் உங்கள் குறும்படங்களில் எப்படித் தருகிறீர்கள்?

இதற்கு எனது 'நிலவுக்கு ஒரு கடிதம்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்ட குறும்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஒரு சமயம் நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றபோது, ஒரு போதைப்பித்தன் உடனிருந்த சிறுவனிடம் தான் ஒரு சிறுமியுடன் கொண்ட பாலியல் வல்லுறவு குறித்து விவரித்துக்கொண்டிருந்தான். இது எனக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்பிரச்சனை நம் சமூகத்தில் மிக ஆழமாக வேர் விட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. ஆனால் இது குறித்து யாரும் பேசுவதில்லை. இப்பிரச்சனை குறித்து நான் ஆராய்ந்து பார்த்த போது இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களுக்கு நிகழும் கொடுமையை யாரிடம் சொல்லுவதென தெரியாமல் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கின்றனர் என்பதை உணர்ந்தேன். அவ்வாறு ஒரு சிறுமி தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை ஒரு நிலவுக்குக் கடிதமாக எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். சமூகம் நடக்கும் அவலங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் போது அதை கலையின் மூலம் வெளிப்படுத்துவதும் எதிர்வினைதானே.

உங்கள் குறும்படங்களை பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லும் ஊடகமாக எது இருக்கிறது?

முன்பு நான் சொன்ன '019' மற்றும் 'நிலவுக்கு ஒரு கடிதம்' போன்றவை கல்லூரிக்குள் விநியோகிக்கப்பட்டவை. எப்போது 'யூ தியூப்' (You Tube) பரவலான பயன்பாட்டிற்கு வந்ததோ, என் போன்ற பலரும் அதைப் பயன்படுத்தி குறும்படங்களைப் பதிவிடுவதற்கு பெரும் வாய்ப்பாக இருக்கிறது. குறுந்தட்டாக வெளியிடுவது கூட மிகச்சிறிய வட்டத்தையே சென்றடையும் சூழலில் 'யூ தியூப்' உலகமெங்கிலும் நம் படைப்பைக் கொண்டுச் செல்கிறது. இது தவிர்த்து திரைப்பட விழாக்களில் குறும்படங்களை அரங்கேற்றுவதும் நல்ல அறிமுகத்தைக் கொடுக்கிறது. எனக்கு என் குறும்படங்களை சந்தை பொருளாக்க எண்ணம் எழுந்ததில்லை. தகுந்த ஓர் படைப்பு தகுதியானவரை சென்றடையும் என நான் நம்புகிறேன். கொஞ்சமாவது சிந்திப்பவர்கள் என் படத்தில் நான் முன்வைக்கும் மாற்று கருத்துகளை அறிவார்கள். அவ்வாறு இல்லாதவர்கள் என் படத்தை பணம் கொடுத்து வாங்கிதான் பயன் என்ன? அக்குறுந்தட்டுகள் ஓர் இருட்டறையில் தூசி படிந்து கிடப்பதற்கு சமம். எனக்கு என் குறும்படம் என்பது மனதின் ஆழத்தில் எழும் பெரும் பிரளயத்தால் உருவாவது. அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த தொலைக்காட்சிக்கான இயக்கங்களில் என்னால் செய்ய இயலாததை நான் குறும்படங்களில் வழங்குகிறேன். இன்னும் தீவிரமாக.

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு படங்களுமே உங்கள் அனுபவம் அல்லது உங்களை பாதித்த அனுபவத்தைப் பேசுகின்றன. ஒரு படத்தின் கதை உருவாவதற்கு இவ்வாறான அனுபவம் மட்டும் போதுமா?

அவை ரியலிச (Realism) கோட்பாடு சார்ந்தவை. போர்மலிசம் (Formalism) எனப்படும் அதிகற்பனையாகவும் பேண்டசியாகவும் படம் இருக்கலாம் தவறில்லை. அதிகற்பனையிலிருந்து யதார்த்த வாழ்வுக்கும், யதார்த்த வாழ்விலிருந்து பேண்டசிக்கும் படம் தாவலாம். வாழ்வும் அவ்வாறுதானே இருக்கிறது.

இல்லை. நான் கேட்க வந்தது வேறு. மலேசியாவில் இயக்கப்படும் பெரும்பாலான படங்கள் இது போன்ற அனுபவங்களைப் பேசுகின்றன. அவற்றுக்குப் பின்னால் எவ்வகையான அரசியலும் இல்லை. நீங்களும் அதையே செய்கிறீர்கள். இதில் நீங்கள் அவர்களைக் காட்டிலும் எவ்வாறு வித்தியாசப்படுகிறீர்கள்?

நான் யூனிவர்சல் (Universal) என்பதை நம்புகிறேன். மனித இயல்புகளை என்னால் இரண்டாகத்தான் பார்க்க முடிகிறது. ஒன்று அன்பின் வழி. மற்றது வெறுப்பின் வழி. எல்லா மனிதர்களுமே இவ்விரண்டு பாதைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கவே செய்கின்றனர் என நம்புகிறேன். Siapa Gaduh (யார் சண்டையிட்டது) எனும் குறும்படம் இவ்வாறு அன்பின் வழி எடுக்கப்பட்ட படம். இதை காலம்சென்ற யாஸ்மின் அ‹மாட் (Yasmin Ahmad) அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். அதே போல வெறுப்பின் வழியில் செல்லும் வாழ்வை மையப்படுத்தியே ஜகாட் (Jagat) எனும் குறும்படம் உருவானது.

எவ்வாறான முன் பயிற்சிகள் எடுத்துக்கொண்டீர்கள்?

எனது மேற்கல்வியின் மூலம் இயக்குவதற்கான அடிப்படை சூத்திரங்களை கற்றறிந்திருந்தேன். உண்மையில் சொல்லவேண்டுமென்றால் அது எனக்குப் போதுமானது இல்லை. சூத்திரங்களை யார் வேண்டுமானாலும் சொல்லித்தர தயாராக இருக்கிறார்கள். ஆனால், கலையைக் கற்றுத்தர இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை. இயக்குனராக விரும்பும் ஒருவனின் மன அமைப்புக்கான பயிற்சிகளுக்கும் அறிவு ரீதியான தயார் நிலைக்கும் எவ்வகையான சாதகமான சூழ்நிலையும் நம் நாட்டில் இல்லை. எனவே என்னை நானே தயார் செய்ய தத்துவங்களையும் ஆன்மீகத்தையும் தொடர்ந்து பயின்றபடி இருந்தேன். அதை ஒட்டிய கேள்விகள் எனக்குள் எழும். நண்பர்களுடன் விவாதிப்பேன். இரண்டாவது, ஸ்கிரிப்ட் ரைட்டிங் தொடர்பாகவும் அதிகம் கற்றேன். இன்னும் கற்க வேண்டியது எவ்வளவோ உள்ளது. ஒரு படத்துக்கு அதுதான் முதுகெலும்பு. எல்லா கதைகளும் 99 விதமான கதை அமைப்புகளுக்குள் அடங்கிவிடும் என்பார்கள். ஏழு சுரங்களில் எல்லா ராகமும் இருப்பது போலதான் இதுவும். நீங்கள் எந்தக் கதையைச் சொன்னாலும் இது இக்கதையின் வகை என சொல்லிவிடுவார்கள். எனவே கதையை எப்படி சொல்கிறோம் என்பதுதான் முக்கியமானது. அது ஒரு வித்தை. நான் ஒரு கதையை ஒருவரிடம் கூறும்போதே அவரை அக்கதையைக் கேட்க வைக்க என்னால் முடியவில்லையென்றால் நான் ஒரு நல்ல இயக்குநர் இல்லை என்றே அர்த்தம். இவற்றோடு மட்டுமல்லாமல் தொடர்ந்த வாசிப்பிலும் தேடலிலும் இத்துறை சார்ந்து இதற்கு முன் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அது நம்மை புதியதொரு தளத்தில் சிந்திக்க உதவும். குறைந்த பட்சம் தன்னடக்கத்தையாவது கொடுக்கும்.

ஒரு இயக்குநருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணாதிசயமாக எதைக் கருதுகிறீர்கள்?

இரசிப்புத்தன்மைதான். அது இயக்குநருக்கு மட்டுமல்ல. பொதுவாகவே எல்லா கலைஞனுக்கும் அது அவசியம்தான். அக, புறச் சூழலை கூர்ந்து பார்த்து அவதானிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு திரைப்பட ரசிகராக எவ்வகையான படங்களை விரும்பி பார்க்கிறீர்கள்?

பொதுவாகவே ஆங்கிலப்படமோ அல்லது தமிழ்ப்படமோ குறிப்பிட்ட •பார்முலாவின் கீழ் வெளிவரும் எதையும் நான் பார்ப்பதில்லை. அப்படங்கள் கொண்டுள்ள •பார்முலாவின் வழி அதன் முடிவை நான் அறிந்துகொள்ள முடியும். இந்த •பார்முலாவில் சேராத எல்லா படங்களையும் நான் பார்ப்பதுண்டு.

கலைப்படங்கள் மீது உங்களுக்கு எவ்வாறான மதிப்பீடுகள் உண்டு?

கலைப்படங்களை நான் இரண்டாகப் பார்க்கிறேன். ஒன்று வாழ்வின் மிக நுண்ணிய தருணங்களை படம் முழுக்கவே ரசிகனிடம் சொல்லாமல் உணர்த்துவது. இது போன்ற படங்களை நான் பெரிதும் விரும்பிப் பார்க்கிறேன். மற்றது கலைப்படம் என்றால் மெதுவாக நகர்வது எனவும் மௌனமாக இருப்பது எனவும் நினைத்துக்கொண்டு காட்சியமைப்பது. இது போன்ற படங்களைப் பார்த்தவுடன் தெரிந்துவிடும். இன்று கலைப்படங்கள் என்பது வேறொரு பரிணாமம் எடுப்பதை பார்க்கமுடிகிறது. ஹாலிவுட் கூட 'இண்டிபெண்டன்ட் மூவி' (Independent Movies) என சில படங்களுக்கு முத்திரைகள் வழங்கி பரவலாக வினியோகிக்கத் தொடங்கிவிட்டது. கலைப்படங்களுக்கு இன்று கமர்ஷியல் படங்களுக்கான விலை உண்டு. ஆனால், கலைப்படங்கள் என்பதை வெறும் முத்திரை என்ற அளவில் மட்டுமே உபயோகிக்கும் அபாயமும் இப்போது உள்ளதாக எனக்குப்படுகிறது. சில இயக்குனர்கள் வியாபார காரணங்களுக்காக கலைப்படங்களில் வெகுஜன ரசனைச் சார்ந்த காட்சிகளையும், சம்பவங்களையும் இணைக்கின்றனர். அதே சமயம், பிலிம் பெஸ்திவல் (film festival) காரணங்களுக்காக கமர்ஷியல் படங்களில் கலைப்படங்கள் சார்ந்த அம்சங்களும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. இந்நிலை சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. மொத்தத்தில், கலைப்படங்கள் என்பவை இன்று முழுமையான கலைப்படங்களுக்கான உணர்வைத் தருவதில்லை.

பொதுவாகவே திரைப்பட இயக்குனர்களின் நேர்காணல்களைப் படிக்கும் போது அவர்களுக்கு யாரோ ஒருவர் மானசீக குருவாக இருப்பார்கள். உங்களுக்கு அப்படி யாராவது உண்டா?

நான் அப்படி கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதன் விளைவாக அவர்களை மிஞ்சமுடியுமா என்ற சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும். ஆனால் சில இயக்குனர்கள் எனக்கு பாதிப்பைக் கொடுத்துள்ளனர் அவர்களின் படங்கள் மூலமாக. அப்படங்கள்தான் என் குரு. சிட்டி ஆப் கோட் (City of God), சினிமா பாராடைஸோ (Cinema Paradiso) இவை இரண்டையும் அப்பட்டியலில் உடனே சேர்த்துக்கொள்ளலாம்.

மலேசியாவில் இயக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் குறுவட்டுகள் தொடர்பான உங்கள் கருத்து என்ன?

நம்மை ஆழமாக பாதித்த ஒன்றை திரைப்படமாக மாற்றும்போது அது நிச்சயம் மக்களைச் சென்று சேரும் என நான் நம்புகிறேன். பேய் படமாக இருந்தாலும் அவ்வாறுதான். முதலில் இயக்குநர் இருட்டுக்கும், அதிர்வு தரும் ஓசைக்கும் பயப்படக்கூடியவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் அதை திரையில் காட்ட முடியும். தானே உணராத ஒரு பயத்தை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம்? நம்மை பாதித்த ஒன்றை நேர்மையாகத் திரையில் காட்டினாலே போதும். அப்படம் எடுபடும். அல்லது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றை படமாக எடுக்க நமக்கு பணமும் கூடவே கற்பனையும் வேண்டும். இவை இரண்டுமே இல்லாமல் வெளிவந்து மக்களிடயே எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் மறைந்துவிட்ட படங்களும், மறைந்து கொண்டிருக்கும் படங்களும், மறையப் போகும் படங்களும் மலேசியாவில் நிறையவே இருக்கின்றன.

மூத்த இயக்குநர்கள் உங்களைப் போன்ற வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு எவ்வாறு வழிகாட்டுகிறார்கள்?

ஆதரவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிலர் காட்டுவதுண்டு. உள்ளே கூர்ந்து பார்த்தால் அவர்களின் சுயநலம் பல்லிளிக்கும்.

நமது நாட்டு இயக்குநர்கள் பற்றி கூறுங்கள்?

யஸ்மின் அ‹மாட் மலேசியாவில் குறிப்பிடத்தக்கவர். அவரின் படங்கள் அனைத்தும் என்னைக் கவர்பவை. வூ மின் ஜின் எனும் சீன இயக்குனரும், 'புத்ரி கூனுங் லேடாங்' (Puteri Gunung Ledang) எனும் திரைப்படத்தை இயக்கிய சீன இயக்குனர் சோத் யோ ¦†ங்-ம் குறிப்பிடத்தக்கவர்கள். 'புத்ரி கூனுங் லேடாங்' நல்ல படமாக இருந்தும் நமது நாட்டில் வெற்றிபெறாதது வருத்தமே. இவர்களைத் தவிர்த்து பாடா என்பவரும் முக்கியமான இயக்குனர். 'பாலோ' (Paloh) எனும் திரைப்படத்தின் வழி அத்மான் சாலே‹வும் (Adman Salleh) எனக்கு முக்கியமான இயக்குனராகப்படுகிறார்.

ஜகாட் குறும்படத்தை ஒட்டிய ரசிகர்களின் பார்வை எவ்வாறு இருந்தது?

பலர் நல்லவிதமாகச் சொன்னார்கள். அதன் காட்சியமைப்பைப் பாராட்டினார்கள். பலரும் கதை புரியவில்லை என்றார்கள். நமது திரைப்படங்கள் போல, நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பின்னால் காரணம் இருக்கவேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். நான் எக்காட்சிக்கும் காரண காரியங்களை அப்படத்தில் விளக்கவில்லை. ரசிகர்கள் காரணங்களை யோசித்துக்கொள்ளட்டும். நான் ரசிகனுக்கு சிந்திப்பதற்கான இடைவெளியை அளிக்க விரும்புகிறேன்.

ஒரு கலைப்படைப்பு என்றால் அதில் கண்டிப்பாக கருத்து கூற வேண்டும் என நமது நாட்டில் பலராலும் பேசப்படுகிறது. உங்களின் 'ஜகாட்' திரைப்படத்தில் அவ்வாறான கூறுகள் எதுவும் இல்லை. படைப்பில் கருத்து கூறுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கருத்து சொல்ல நான் யார்? நான் மகாத்மா இல்லை. எளிய மனிதன். எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில் நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது? ஆனால் வாழ்வை பகிர்ந்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அது மட்டும்தான் என் பணி. இவ்வாறு செய்ததால் இது நடந்தது என்று சொல்கிறேன். ஆனால் என் ஒருவனுக்கு நடந்த சாதகமான அல்லது பாதகமான ஒன்று உலக மொத்தத்துக்கும் பொதுவானது என சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

அப்படியானால் உங்கள் படைப்பு ரசிகனை என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

அனுபவங்களால் உருவான தற்காலிகமான ஒரு வாழ்விற்குள் நான் அழைத்துச் செல்லும்போது முழு ரசனையுடன் பின்தொடர்ந்து வந்தால் போதும். என் படைப்பு தரமானது என்றால் அது ரசிகனைத் தொல்லைப்படுத்தும்.

நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதையே படமாக்குகிறீர்களா? அல்லது ரசிகர்களுக்காக சமரசம் செய்துக் கொள்கிறீர்களா?

இதற்கான பதிலைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். 'துப்பறியும் புலி' போன்று முழுக்க முழுக்க ரசிகர்களுக்காய் இயக்கியதும் உண்டு. 'ஜகாட்' போன்று எவ்வித சமரசமும் செய்யாமல் இயக்கியதும் உண்டு. தயாரிப்பாளருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் போது இவ்வாறான சமரசங்களைச் செய்ய வேண்டியுள்ளது. நான் ஒரு பார்வையாளனாக இருந்து இந்தச் சிக்கலை எதிர்கொள்ள நினைக்கிறேன்.

அப்படியானால் தீவிரமான சிந்தனை கூட நம் படைப்பை பாதிக்கும் என்கிறீர்களா?

நான் இதற்கு திட்டவட்டமான பதில்களைக் கொண்டிருக்கவில்லை. நான் எனது வாழ்வின் மூலமான அனுபவத்தை மட்டுமே சொல்கிறேன். அதன்படி ஒரு கலைஞன் குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது என நினைக்கிறேன். இதில் சரி தப்பு என்பதெல்லாம் கிடையாது. நான் எதை செய்யும்போது நிறைவடைகிறேனோ அதை செய்ய வேண்டும். திருப்தி தராத ஒன்றை செய்து கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இது 'ஜகாட்' படம் போல நானே என் திரைப்படத்துக்கு தயாரிப்பாளராக இருக்கும் போது. அதுவே வேறொருவர் தயாரிப்பில் என் நிலையில் சில சமரசங்கள் இருக்கும். அதுவும் கதையைப் பாதிக்காமல் இருக்கும்.

நம் நாட்டில் நடைபெறும் ஆஸ்ட்ரோ குறும்பட போட்டிகள் குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன?

நிச்சயம் வரவேற்கத்தக்கது. குறும்படம் தொடர்பான பிரக்ஞை இந்தியர்களிடம் பரவலாகச் சென்றடைய அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது. மற்றுமொரு முக்கியமான விடயம் இதுபோன்ற போட்டிகள் மூலம் நாம் நமது சம தளத்தில் இயங்கும் ஒருவரை அடையாளம் காண முடிகிறது. இது கருத்துப் பகிர்வுக்கு வழிவகுப்பதோடு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கும் சாதகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வெற்றிப்பெற்ற படங்கள் தமிழகம் வரை அறிமுகமாகிறது. அதே சமயத்தில் எனக்கு சில மாற்று கருத்துகளும் உண்டு. முதலாவது குறும்படத்துக்கு நேர ஒதுக்கீடு தேவையில்லை என நினைக்கிறேன். 5 நிமிடத்தில்கூட நல்ல குறும்படங்கள் உருவாக முடியும். கதைக்கு ஏற்ப நிமிடங்களே தவிர நேரத்தை நிர்ணயித்துக்கொண்டு தேவையில்லாத காட்சிகளை ஒரு குறும்படத்தில் புகுத்துவதால் படம் பலவீனமாகும். ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் அது உருவாக வேண்டும். மேலும் அறிவுரை சொல்லும் படங்கள்தான் நல்லப் படங்கள் எனும் கட்டுப்பாட்டிலிருந்து நாம் வெளியேற வேண்டும். அறிவுரை சொல்ல வேண்டுமானால் நாம் ஒரு பதாகையை ஏந்தி நின்று சொல்லிவிட்டுப் போகலாம். அதற்கு ஏன் குறும்படம்? கலைப்படைப்பின் வெற்றி உணர்த்துவதில் உள்ளதே தவிர சொல்வதில் இல்லை.

மலேசியாவில் தமிழ்த் திரைப்படத்துறையை நம்பி இயக்குநராகும் ஒருவனுக்கு எவ்வாறான எதிர்காலம் உண்டு?

நிச்சயம் பிரகாசமானதுதான். எனக்கு அந்த நம்பிக்கை இருப்பதால்தான் இன்னமும் நான் அதில் இயங்கி கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு துறையும் மிளிர அதில் முதலில் சிலர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் உழைப்பின் மேல் ஏறி நின்றே அடுத்தடுத்த தலைமுறைகள் தங்களை வெளிப்படுத்துகின்றனர். அவ்வகையில் என் காலத்தில் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு தலைமுறையும் இத்துறையில் இயங்குவதால் ஒரு காலக்கட்டத்தில் அதன் நிலை மேம்பாடடையும். இந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட மலேசிய இசைத்துறை ஒரு முக்கியக் காரணம். பல காலமாக நம் நாட்டில் இருந்து வந்த இத்துறை 'தி கீய்ஸ்' (The Keys) குழுவினாரால் மீண்டும் மறு அவதாரம் எடுத்து இன்று நமது பாடகர்கள் தமிழ் சினிமாவில் பாடும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். நமது கலைஞர்களின் ஆக்கங்களுக்கு ரசிகர்களிடமும் ஆதரவும் கிடைக்கிறது. அது போன்றதொரு திறப்பு மலேசிய தமிழ்த்திரைப்பட துறைக்கு நிகழும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே நினைக்கிறேன்.

ரசிகர்களைப் பற்றி சொல்வதால் கேட்கிறேன். மலேசிய ரசிகர்களின் இரசனை உயர்ந்துள்ளதாகக் கருதுகிறீர்களா? அல்லது அவர்களும் தமிழக இரசிகர்கள் போல ஜனரஞ்சக படங்களையே எதிர்ப்பார்க்கின்றனரா?

ஒன்றை நான் இங்கு தெளிவுப் படுத்திக்கொள்கிறேன். தமிழ்த் திரையுலகைப் பற்றி எனக்கு தவறான அபிப்பிராயம் கிடையாது. நகைச்சுவை, கமர்சியல், கலைப்படங்கள், ஆக்க்ஷன் என பலதரப்பட்ட படங்கள் வருவதால்தான் இன்னமும் அது நிலைத்து நிற்கிறது. ரசிகனின் ரசனையும் பலவாறானதுதானே. இன்று தமிழகத்தில் பல நல்லப் படங்கள் வரத்தொடங்கியுள்ளன. இவை இரசிகனை உயர்ந்த ஓர் இரசனைக்குப் பழக்கப்படுத்துகின்றன. அது போன்ற முயற்சிகள் இங்கு நடக்காதவரையில் நாம் இரசிகர்களை குறை சொல்ல முடியாது.

அதை அறிமுகம் செய்யாதது யாருடைய தவறு... அல்லது யாருடைய பொறுப்பு?

என்னைக்கேட்டால் இன்று அந்த பலம் ஆஸ்ட்ரோ வானவில்லுக்கு உள்ளது. மிகப்பெரிய மக்கள் தொடர்பு சாதனமாக இருக்கும் அவர்கள் இது போன்ற மாற்று முயற்சிகளில் ஈடுபடலாம். அவர்கள் தொடங்கியுள்ளார்கள். தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இன்று குறும்படங்களில் இயங்கி கொண்டிருக்கும் பல இளைஞர்களையும் நான் பார்க்கிறேன். எல்லோரிடமும் ஒரு தீ எரிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்குமான தனித்தனி தீ. இந்தத் தீ ஒன்றாகச் சேரும் போது சகல ஊடக பலங்களைவிடவும் பெரிதாக ஒளிரும். அத்தினத்தில் பெரும் பாய்ச்சல் நிகழும்.

உங்களின் அடுத்த நடவடிக்கைகள்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். அது பிழைப்புக்காக. நிறைய குறும்படங்களுக்கான வேலை உள்ளது. அதுவே எனக்கு ஆத்மார்த்தமான பணி. மேலும், முதல் முழுநீள திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கனிந்து வருகிறது. விரைவில் அம்முயற்சி கைக்கூடும் என எதிர்பார்க்கிறேன். மிகவும் தரமாக அப்படைப்பை உருவாக்கும் பொருட்டு அடிப்படை வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன்.


சஞ்சய்-யுடன் தொடர்பு கொள்ள:

Facebook ID:
http://www.facebook.com/shanjhey

Gmail ID:
shanjhey.kumar@gmail.com


2009 பி.எம்.டபிள்யு குறும்பட போட்டியில் (BMW Shorties) முதல் பரிசை வென்ற 'மாச்சாய்' (Machai) குறும்படத்தை இந்த சுட்டியில் காணலாம்.

நேர்காணல்: ம. நவீன், சிவா பெரியண்ணன்
எழுத்து: ம. நவீன்

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>