முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  சாரு பதில்கள்
சாரு நிவேதிதா
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலை



கட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.



பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்




சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு சாரு நிவேதிதா எழுதும் பதில்கள். உங்களின் கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.


சுகுமார்


அன்புள்ள சாரு, இலக்கியத்தைப் புதிதாக வாசிக்கத் தொடங்கி இருப்பவன் நான். அறிவுஜீவி எனப்படுபவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்னவென்று கூற முடியுமா?

இன்றைய காலகட்டத்தில் அறிவுஜீவி என்பவன் தான் ஆகக் கடைந்த அயோக்கியனாக இருக்கிறான். நல்லவனாக வாழ்வதற்கு அறிவுஜீவியாக எல்லாம் இருக்க வேண்டியது இல்லை. இலக்கியப் பரிசுகளை வாழ்நாள் பூராவும் திட்டி விட்டு, பிறகு அதே பரிசுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் எத்தனையோ எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு கனிமொழியை 20 ஆண்டுகளாகத் தெரியும். உலக சினிமா, உலக இலக்கியம் எல்லாம் படித்தவர். அவரும் நானும் எத்தனையோ மணி நேரம் ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகளைப் பற்றிப் பேசி விவாதித்திருக்கிறோம். பிறகு அரசியலில் நுழைந்தார். இப்போது 60,000 கோடி ஊழலில் அவர் பெயர்தான் பெரிதாக அடிபடுகிறது. ஆ. ராசாவை தொலைத் தொடர்புத் துறை மந்திரியாக ஆக்க நீரா ராடியாவுடன் அவர் பேசிய பேச்சு பொதுமக்களின் பார்வைக்கு வந்து அவர் பெருமை சிரிப்பாய் சிரிக்கிறது.

படிக்காதவன் வெறும் பேட்டை ரவுடியாக மாறுகிறான். ஆனால் படித்தவன் தேசத்தையே கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் போடுகிறான். எனவே படிப்புக்கும் தர்மத்துக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஏற்கனவே பலமுறை எழுதியிருப்பது போல் அறிவு வேறு; ஞானம் வேறு. ஆங்கிலத்தில் knowledge, wisdom என்று சொல்லலாம். நம் சமகாலத்திய உதாரணம் வேண்டுமானால் பாரதி ஞானி; ஜெயமோகன் அறிவாளி. அறிவைக் கொண்டு நீங்கள் எவ்வளவு துர்க்காரியங்களும் செய்யலாம். சமீபத்தில் நவீன் கொடுத்த பேட்டி ஒன்றில் ஜெயமோகனைப் பற்றிச் சொல்லியிருந்த சில விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. ஆ.ராசா எவ்வளவு நியாயமான பேர்வழி, தர்மவான் என்று சென்னை புத்தகவிழாவில் பிட் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் இமயம் என்ற எழுத்தாளர். நவீனின் பேட்டி வாசகங்கள் அதைத்தான் எனக்கு ஞாபகப்படுத்தின.

ஜெயமோகன் படிக்காத புத்தகமா? அவர் கற்றுத் தேராத ஆன்மீகமா? ஒருவரை வியக்க வைப்பவை அவர் படித்துள்ள புத்தகங்களும் எழுதியுள்ள அளவும். மூன்று ஜென்மம் எடுத்தால்தான் அந்த அளவுக்கு ஒருவர் புத்தகங்களை உற்பத்தி செய்ய முடியும். என்னால் எல்லாம் கற்பனையே செய்ய முடியாது. விஷ்ணுபுரத்தில் இந்தியத் தத்துவம் பற்றிய அவரது பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் தெரிகிறது. ஆனால் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மனுஷ்ய புத்திரன் ஊனமாக இருப்பதால்தான் அவர் கவிதைகளும் ஊனமாக இருக்கின்றன என்று எழுதுகிறார். ஒரு இடத்தில் அல்ல; அந்தக் கட்டுரை முழுவதுமே இப்படித்தான். அபிலாஷ் என்ற எழுத்தாளர். அவருடைய ஒரு காலில் ஏதோ பிரச்சினை. விந்தி விந்தி நடப்பார். அவருக்கு இரண்டு கால்களும் கிடையாது; அவர் தன்னைப் பார்க்க வரும்போது அவருடைய அம்மாதான் தூக்கிக் கொண்டு வருவார் என்று எழுதுகிறார் ஜெயமோகன். ஆனால் ஜெயமோகன் யாரைப் பற்றியும் எந்த முறையிலும் தீங்கு சொல்லாதவர் என்று நமக்கு வல்லினம் ஆசிரியர் நவீன் சான்றிதழ் தருகிறார். காண்போரையெல்லாம் ஊனமுற்றவர்களாகவே பார்ப்பது நம்முடைய மனதில் இருக்கும் ஊனம் அல்லவா?

ஜெயமோகனைப் பற்றி எதுவுமே எழுதக் கூடாது என்பது என் நோக்கம். ஆனால் நவீனின் சான்றிதழைக் கண்டு மனம் பதைத்து இதை எழுதுகிறேன். நரேந்திர மோடி ரொம்ப நல்லவர்; எந்தத் தப்பும் செய்யாதவர் என்று சொல்வதைப் போல் இருக்கிறது நவீனின் பேச்சு. இது நவீனின் சொந்தக் கருத்து என்றெல்லாம் விட்டுவிட முடியாது. ஏனென்றால், காண்போரையெல்லாம் அவருக்குக் கால் கிடையாது, காது கிடையாது என்று எழுதிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி இப்படி நற்சான்றிதழ் அளிப்பது தனிப்பட்ட விஷயம் அல்ல. அறிந்தோ அறியாமலோ அந்த சமூக விரோத நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகும். இரண்டு கால்களும் உள்ள ஒரு நபரைப் பார்த்து, இவருக்குக் கால்கள் இல்லை; இவர் என்னைப் பார்க்க வரும்போது இவருடைய அம்மாதான் தூக்கிக் கொண்டு வந்தார் என்று சொல்லும் ஒரு எழுத்தாளனின் செயலை நவீன் போன்றவர்கள் கண்டிக்கக் கூட வேண்டாம்; குறைந்த பட்சம் நற்சான்றிதழாவது அளிக்காமல் இருக்கலாம் அல்லவா?

எனவே சுகுமார், புத்திஜீவி ஆவது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லாத் துறைகளிலும் அயோக்கியர்களும் நல்லவர்களும் உள்ளனர். இஸ்ரோவில் நடந்திருக்கும் ஊழல் இரண்டு லட்சம் கோடி என்கிறார்கள். அதில் ஈடுபட்டுள்ள எல்லோரும் வானளாவப் படித்தவர்கள். வாசிப்பு என்பது நெருப்பைப் போன்றது. நல்லவனிடம் கிடைத்தால் அகல் விளக்கை ஏற்றி இருட்டில் ஒளி ஏற்றுவான்; தீயவனிடம் கிடைத்தால் அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி நாட்டையும் வீட்டையும் கொளுத்துவான்.


செந்தில்குமார்


நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் இன்னும் கிடைக்காமல் இருப்பது பற்றி உங்கள் கருத்து?

ஒரிஜினல் நடிப்பு, ஒரிஜினல் படம் ஆகியவற்றுக்குத்தான் ஆஸ்கர் கொடுக்கிறார்கள். காப்பி அடிப்பவர்களுக்கும், மிமிக்ரி கலைஞர்களுக்கும் இன்னும் ஆஸ்கரில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படவில்லை. ஏற்படுத்தப்பட்டால் கமலுக்குத்தான் முதல் ஆஸ்கர். அதுவரை கலைஞர் என்றும், புரட்சித் தலைவி என்றும் சொல்வது போல் உலக நாயகன் என்று சொல்லி ஒன்றுமறியாத அப்பாவிகளான தமிழ் ஜனங்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.

நாயகன் பற்றி நீங்கள் விமர்சனம் எழுதினால் இப்பொழுது என்ன எழுதுவீர்கள்? உங்கள் எழுத்துக்களில் விமர்சனம் படிக்க ஆவல்?

எப்போது எழுதினாலும் நாயகன் பற்றி முன்பு எழுதியதைத்தான் எழுதுவேன். நாயகன் மணி ரத்னத்தின் முக்கியமான படைப்புகளில் ஒன்று.


எஸ். விஜயராகவன்


அன்புள்ள சாரு, தமிழர்களிடம், (குறிப்பாக நகரங்களில் ஆங்கில வழிப் பள்ளிகளில் ’படித்தவர்களிடம்’ உள்ள தமிழ் இலக்கியம் பற்றிய அறியாமையைக் குறித்து பலமுறை விசனப்பட்டு எழுதியுள்ளீர்கள். இதற்கு நமது கல்வி முறை ஒரு பெரிய காரணம்.

1. இந்தக் கல்வி முறை எவ்வாறு மாற்றப்பட வேண்டும்?

2. பள்ளியுடன் தமிழை ஓரங்கட்டியவர்கள் இப்பொழுது (பல ஆண்டுகள் கழித்து) தமிழ் இலக்கணம் பற்றும் இலக்கியத்துடன் மறுபரிச்சயம் செய்துகொள்ள specific tips மற்றும் புத்தகங்களைப் பரிந்துரை செய்யுங்கள்.


படித்தவர்களுக்குத் தமிழ் மட்டும் இல்லை; பண்பாடு கலாச்சாரம் இலக்கியம் என்று எதுவுமே தெரியவில்லை. மிக மோசமான, கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு முட்டாளாக இருக்கிறார்கள். ஒரு விஞ்ஞானியிடம் உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார் என்று கேட்டால் வைரமுத்து, பா. விஜய் என்கிறார். அவருக்கு சினிமாப் பாடலுக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசம் கூடத் தெரியவில்லை. தமிழ்க் கலாச்சாரமே இப்படித்தான் இருக்கிறது. படித்தவர்களைப் பார்த்தால் அவர்கள் அதிகார வர்க்கத்தினரின் பாதங்களை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே விதிவிலக்கு. இந்த அவலநிலைக்குக் காரணம், தமிழ்நாட்டின் கல்வி முறைதான். இதில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கல்வித் துறையைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் துரத்தி அடிக்கப்பட வேண்டும். அவர்கள் கொள்ளையடிப்பதற்கு வேறு எத்தனையோ துறைகள் உள்ளன. அதனால் கல்வித்துறையை மட்டுமாவது அந்த அயோக்கியர்களிடமிருந்து மீட்க வேண்டும். வசந்தி தேவி, கல்யாணி, அ. மார்க்ஸ் போன்ற சுதந்திரமான சிந்தனையாளர்கள் கல்வித்துறையில் நுழைய வழி செய்ய வேண்டும். இன்றைய நிலையில் முன்னாள் ரவுடிகளே கல்வித் தந்தைகளாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் அவர்களை நியமிக்கும் அதிகாரம் படைத்த முதல்மந்திரிகளுக்கு எடுபிடிகளாகக் குற்றேவல் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மிகக் கீழான, கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கைகளில் சிக்கியிருக்கிறது கல்வித்துறை. ஏதோ பிராத்தல் நடத்துவது போல் பள்ளிக்கூடங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் படம் பார்த்தீர்களா? அதே படத்தை கல்வித்துறையை வைத்து யோசித்துப் பாருங்கள். அதுதான் தமிழ்நாட்டின் நிலை. கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடம் பற்றி எரிந்து 95 குழந்தைகள் தீயில் கருகின. அதுதான் தமிழகக் கல்வியின் இன்றைய குறியீடு. பள்ளிக்கூடங்கள் விலங்குகளை அடைக்கும் கொட்டடிகளைப் போல் இருந்து வருகின்றன. வங்கிக் கொள்ளையர்களுக்கும் இன்றைய பள்ளிக்கூட முதலாளிகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

ஒட்டு மொத்தமான மாற்றம் வேண்டும். அதற்கு கல்வித்துறை வழிப்பறிக் கொள்ளையர்களான தனியாரிடமிருந்தும், முட்டாள் அரசியல்வாதிகளிடமிருந்தும் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுதான் கல்விச் சீர்திருத்தத்திற்கான முதல் படி.

இலக்கியத்துடன் மறு பரிச்சயம் செய்து கொள்ள நீங்களேதான் முயற்சி எடுக்க வேண்டும். ஒரு அற்புதமான நதிக்கரையில் நின்று கொண்டு குடிக்கத் தண்ணீர் வேண்டும்; அதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு சாரு நிவேதிதாவைக் கேட்பதை நிறுத்துங்கள். நீங்களாகவே கண்களைத் திறந்து பாருங்கள். எதிரே அற்புதங்கள் தெரியும். நதிகள் தெரியும். நீர் வீழ்ச்சிகள் தெரியும்.


சீனிவாசன் நாயுடு


சாரு, உங்கள் புத்தகத்தை முதன் முதலாகப் பதிப்பித்தது எந்த நிறுவனம்? தமிழ் நாட்டில் எழுத்தாளனுக்கு உண்மையில் ராயல்டி தரப்படுகிறதா?

பெரியாரின் சிந்தனைகளுக்குப் பிறகும் சாதிப் பெயரை பெயரோடு இணைத்துக் கொண்டிருப்பதால் தங்களுடைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சாதிப் பெயரை வைத்துக் கொள்வது உங்களின் தனிப்பட்ட உரிமை. அதேபோல் பதில் சொல்ல மறுப்பதும் என்னுடைய உரிமை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.


கெ. மஹேந்திரன், கன்னியா குமாரி


சாரு, சமயத்தில் உலகத் தரம், உலகத் தரம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் சினிமாவிலும் இலக்கியத்திலும் நீங்கள் பல மொழிகளில் வெளிவரும் ஆக்கங்களை பார்த்து, படித்திருக்க வேண்டும். உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்? உலகத் தரம் என்று சொல்ல உங்களுக்கு என்ன மாதிரியான தகுதிகள் உண்டு?

பிரியமுள்ள மஹேந்திரன், இப்போதுதான் ஒரு சர்வதேச இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக என்னுடைய பயோடேட்டாவை அனுப்பினேன். உடனே மறுபடியும் என்னை பயோடேட்டா எழுதச் சொல்கிறீர்கள்.

முதலில் ஒரு விஷயத்தை உங்களுக்குப் புரிய வைக்க முயல்கிறேன். சச்சின் டெண்டூல்கரிடம் சென்று கிரிக்கெட் பற்றிக் கருத்துச் சொல்ல உங்களுக்கு என்ன மாதிரியான தகுதிகள் உண்டு என்று கேட்பீர்களா? அது ஏன் எழுத்தாளன் என்றால் மட்டும் கையில் ஒரு சவுக்கோடு கிளம்பி விடுகிறீர்கள்? ஒருமுறை அவந்திகாவுக்காக ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்தது. போனில் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கினேன். அதாவது, நான் போன் செய்ததிலிருந்து ஒரு வாரம் கழித்துத்தான் நேரம் கொடுத்தார்கள். அந்த அளவுக்கு டாக்டர் பிஸி. வெறும் டாக்டராக இருந்தால் ஒரு மணி நேரம் காத்திருந்தால் பார்த்து விடலாம். இவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஒரு வாரம். குறிப்பிட்ட தினத்தில் காலை பத்து மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட். ஆனால் எங்களுக்கு அவரைப் பார்க்க மதியம் ஒரு மணி ஆயிற்று. மூன்று மணி நேரம் காத்திருந்தோம். ஐந்து நிமிடம் சோதித்தார். அதற்குக் கட்டணம் 500 ரூ. அந்த டாக்டரிடம் போய் நான் “இப்படியெல்லாம் மருத்துவம் செய்ய உங்களுக்கு என்ன தகுதிகள் உண்டு?” என்று கேட்க முடியுமா? கேட்டால் உதை கொடுத்து வெளியே அனுப்புவார்கள் அவருக்குக் கீழுள்ள ஊழியர்கள். அவருடைய பெயருக்குக் கீழே இருக்கும் கல்வித் தகுதிகளை நம்பித்தான் அவரிடம் செல்ல வேண்டும். மேலும், ஊரில் அவருக்குள்ள பெயர்.

ஆக, ஒரு மருத்துவரிடமோ, விளையாட்டு வீரனிடமோ கேட்கத் துணியாத கேள்வியை எழுத்தாளனிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதுவும் இந்தக் கேள்வியைத் தமிழர்கள் மட்டுமே நூற்றாண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழர்கள் பொதுவான வியாதி என்று நினைக்கிறேன்.

உலக சினிமாவைப் பார்க்க வெறும் ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டுமே போதும் என்பதைக் கூட அறிந்து கொள்ளாத நீங்கள் எப்படி இது போன்ற கேள்விகளைக் கேட்கத் துணிகிறீர்கள்? உலகின் எந்த மொழிப் படமாக இருந்தாலும் அதற்கு சப்டைட்டில் வரும் என்று உங்களுக்குத் தெரியாதா? நான் இதுவரை உலக சினிமா பற்றி அரை டஜன் புத்தகங்களை எழுதியிருக்கிறேன். அவற்றில் ஏது ஒன்றையாவது படித்திருக்கிறீர்களா? அது போகட்டும்; Glauber Rocha என்று ஒரு ப்ரஸீலியன் இயக்குனர் இருக்கிறார். அடுத்து, Jodorowsky என்ற அமெரிக்க இயக்குனர். Jorge Sanjines என்ற பொலிவிய இயக்குனர். இன்றைய தினம் குரஸவா, குரஸவா என்று புடுக்கு அறுந்த பன்றிகளைப் போல் கத்திக் கொண்டிருக்கும் அன்பர்கள் இந்தப் பெயரையெல்லாம் கேள்விப் பட்டிருக்கக் கூட முடியாது. இவர்களைப் பற்றி நான் எழுதிய லத்தீன் அமெரிக்க சினிமா – ஒரு அறிமுகம் என்ற நூலை 33 ஆண்டுகளுக்கு முன்பு நானே வெளியிட்டேன். இன்னமும் க்ளாபர் ரோச்சா பற்றியும், ஹொடரோவ்ஸ்கி பற்றியும் தொடர்ந்து சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகிறேன். இவர்களைப் பற்றி அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் ஓரிரண்டு பேர் மட்டுமே உண்டு. உலக அளவிலேயே இந்த இயக்குனர்களின் படங்களைப் பார்த்து விவாதித்தவர்கள் குறைவு. ஹோர்ஹோ ஸான்ஹீனஸின் பேட்டி 38 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பிரக்ஞை என்ற பத்திரிகையில் வந்தது. பிறகு அவருடைய படங்கள் அனைத்தையும் தில்லியில் 1977-ஆம் ஆண்டு பார்த்தேன்.

எனவே உலக சினிமா பார்க்கவும், உலக இலக்கியத்தை அறிந்து கொள்ளவும் ஆங்கிலம் மட்டுமே போதும். எனக்குக் கூடுதலாக சில மொழிகள் தெரியும். அதனால் சில பயன்கள் உண்டு. ஸ்பானிஷ் தெரியாதவர்கள் ஜோர்ஜே சாஞ்ஜின்ஸ் என்றும் ஜொடரோவ்ஸ்கி என்றும் தப்பாக எழுதுவார்கள். மட்டுமல்லாமல், ஸ்பானிஷ் பாடல்களைக் கேட்கும் போது அதன் அர்த்தமும் புரியும். மற்றபடி எனக்கு எத்தனை மொழிகள் தெரியும், தெரியாது என்பது பற்றியெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய அளவுக்கான சிநேகபாவம் உங்கள் கேள்விகளில் தெரியாததால் அதைச் சொல்லாமல் விடுகிறேன்.

கடைசியாக ஒன்று. நான் இதுவரை 32 நூல்களை எழுதியிருந்தாலும் தப்புத் தாளங்கள் என்ற ஒரே ஒரு புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். என் தகுதி என்ன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். அந்த நூலை நீங்கள் படிக்கவில்லை என்றே உங்கள் கேள்வியிலிருந்து நான் யூகிக்கிறேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>