முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலைகட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்
சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

என்ன முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. அம்மா, உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் பெரும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு 26 வயது முகமது பௌவாசிசிக்கு. துனிசிய நாட்டின் மக்கள் தொகையில் பாதி அளவிலான 30 வயதுக்கும் குறைந்த 5.3 மில்லியன் இளையர்களில் ஒருவனான அவன், மாதம் யுஎஸ் 140 வெள்ளியைச் சம்பாதிக்கப் பெரும் பாடுபட்டான்.

இளையர்களின் வேலையின்மை விகிதம் 27 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள நாட்டில், வேறு வழியில்லாமல் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் காய்கறிகள், பழங்கள் விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒவ்வொரு முறை பழங்கள், காய்கறிகள் வாங்கும் போதும், விற்கும் போதும் அரசு அலுவலகங்களில் இருப்போர் முகம்மதிடம் பலமுறை லஞ்சம் வாங்கி அவனைத் தொந்தரவு செய்துள்ளார்கள்.

டிசம்பர் 17ம் தேதி அன்று வழக்கம் போல அரசு அதிகாரிகள் அவனிடம் லஞ்சம் கேட்டுள்ளார்கள். அவன் தரமறுத்ததால், அவனிடம் இருந்த பழங்கள், காய்கறிகளை அவர்கள் பறித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் அவனிடமிருந்த எடைக்கருவியையும் கேட்டான். அதை முகமது கொடுக்க மறுத்ததால் அவன் முகமதை அடித்து துன்புறுத்தினான். அவனுடன் இருந்த மூன்று அதிகாரிகளும் சேர்ந்து முகமதை தாக்கினார்கள். முகமது அவர்களிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிப் பார்த்தும் எந்த ஒரு பயனும் கிட்டவில்லை. அவர்கள் முகமதைத் தொடர்ந்து அடித்து விட்டு, அவனது பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்று விட்டார்கள். இதன் பின்னர் முகமது நகரத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு சென்று தனது பொருட்களை திருப்பித்தருமாறு கேட்டிருக்கின்றான். அவர்கள் மறுத்து விட, அவன் அவர்களின் தலைமை அதிகாரியைச் சென்று சந்தித்து தனது பொருட்களை திருப்பித்தருமாறு கேட்டிருக்கின்றான். ஆனால் அங்கேயும் தோல்வியே அவனுக்குப் பரிசாக கிடைக்க, மனம் தளராமல் அந்நகர ஆளுநரைச் சென்று சந்திக்க முயன்ற அவனை காவல் துறை அதிகாரிகள் தடுத்துள்ளார்கள்.

அவர்களிடம் கண்ணீர் விட்டு தனது நிலையை விளக்கிக் கூறியுள்ளான். ஆனால் அவர்கள் யாரும் இவனது நிலையை காது கொடுத்துக் கேட்கக்கூடத் தயாராக இல்லை. அவனது கண் முன்னே எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன.

பிறகு பெட்ரோலை ஊற்றி தன்னைத் தானே எரித்துக்கொண்டான். அவன் தன்னில் வைத்த தீப்பொறி, துனிசிய நாடெங்கும் கிடுகிடுவென பற்றிப் பரவியது.

முகமதின் புகைப்படம் தாங்கிய பதாகையை கையில் ஏந்திக் கொண்டு ஆயிரக்கணக்கான இளையர்கள் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டும், மிகப்பெரிய மக்கள் போராட்டத்தில் இறங்கினர். 23 ஆண்டுகளாகப் பதவியிலிருந்த அதிபர் சினி எல் அபிதீன் பென் அலி ஜனவரி 14ம் தேதி நாட்டை விட்டு ஓடினார். துனிசியாவை அடுத்து இளையர்களின் சக்தி எகிப்தில் எழுச்சி பெற்றது.

2010ஆம் ஆண்டு எகிப்தில் ஓர் இயக்கம் உருவானது - ‘நாங்கள் ஒவ்வொருவரும் காலித் ஸயீத்’. அந்த இயக்கத்தவர்களுக்கு ஆதர்ச நாயகன் இருந்தவன் காலித் முஹம்மது ஸயீத்.

6.6.2010 அன்று அலெக்ஸாண்ட்ரியாவின் 'ஸையிதி ஜாபிர்' பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியில் செயற்பட்ட ஓர் இன்டெர்நெட் கஃபேயில் இணையத்தில் லயித்திருந்த காலிதை, எகிப்தின் காவலர்கள் கழுத்துச் சட்டையைப் பிடித்துத் தரதரவெனெ மாடிப்படிகள் வழியாக இழுத்து வந்து வீதியில் போட்டு அடித்துத் துவைத்ததில் 28 வயதான இளைஞன் காலித் இறந்து போனான். போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போலிசாரை வீடியோவில் படம் பிடித்து இணையத்தில் பரவ விட்ட காலிதின் துணிச்சல், காவலரை நிலைதடுமாறச் செய்தது. அவனுடைய கதையை முடித்து விட்டு, ஆதாரத்தை அழித்து விட்டதாக நினைத்த காவலர்களின் நிம்மதி நிலைக்கவில்லை.

இணைய வழியாக ஒருவாரத்துக்குள் 1,30,000 ‘காலித்’கள் இணைந்தனர். கூடவே அல்ஜஸீராவும். எகிப்தின் காவல்துறையினரின் அடக்குமுறை அத்துமீறல்களை எதிர்த்தும் காலிதின் படுகொலைக்கு நீதிகேட்டும் முதல் போராட்டம் 14.06.2010-இல் வீதிக்கு வந்தது. அதற்குப் பின்னரே உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் காவலர்கள் விசாரிக்கப்பட்டு, புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மஹ்மூத் ஸலாஹ்வும் சர்ஜண்ட் அவாத் இஸ்மாயீல் சுலைமானும் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டனர்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏவும் இஸ்ரேலின் மொசாதும் மட்டுமின்றி அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுங்கூட ஆறுமாதகாலத்துக்குள் ஆட்சி மாற்றம் வரப்போதைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

ஜனவரி 25, 2011 அன்று தலைநகர் கைரோவின் விடுதலைச் சதுக்கத்தில் கூடிய மக்களின் புரட்சி, ‘காலிதின் படுகொலைக்கு நீதி’ எனும் நிலையைத் தாண்டி புதிய அரசியல் பரிணாமம் அடைந்திருந்தது. போராட்டக்காரர்கள் முன்வைத்தவை வெகுசில கோரிக்கைகள் மட்டுமே. ஆனால் வலிமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்த வல்லவை:

-ஹுஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும்.
-அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும்.
-நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்த வேண்டும்.

கைரோவில் மட்டுமின்றி அலெசாண்ட்ரியா உட்பட அனைத்து மாநிலங்களிலும் பரவிய அந்தத் தொடர் போராட்டத்தில் மிகவும் வியப்புக்குரிய அம்சம், நாடு தழுவிய போராட்டத்தை எந்த அரசியல் கட்சியோ இயக்கமோ தலைமையேற்று நடத்தவில்லை. ஆனால் அனைவரும் பங்காற்றியிருந்தனர்.

தலைமையில்லாததால் எளிதாகப் போரட்டத்தை அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆளும் வர்க்கத்தின் எண்ணம் பலிக்கவில்லை. போராட்டத்தைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்ட ராணுவத்தினர் மக்களுக்கெதிராக ஒன்றும் செய்யாதது மட்டுமின்றி அவர்களுள் சிலர், துனிசியாவில் நடந்ததுபோல் போராட்டக்காரர்களோடு இணைந்து விட்டிருந்தனர். பதவியிலிருந்த முப்பதாண்டு காலத்தில் மக்களின் உதிரத்தை உறிஞ்சி 70 பில்லியன் அமெரிக்க டாலர்வரை வளைத்துப் போட்டிருந்த ஹுஸ்னி முபாரக், ‘பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை’ என்று சொல்லிப் பார்த்தார். முபாரக்கின் மூத்த மகன் ஜமால், போராட்டக்காரர்களுக்கு ராணுவத்தினர் கொடுத்த ஒத்துழைப்பை முறியடிக்க, வானில் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்திப் பார்த்தான்.

எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் எதுவும் எடுபடவில்லை. மக்கள் போராட்டம் நாளுக்குநாள் வீரியம் அடைந்து கொண்டிருந்தது. இக்வானுல் முஸ்லிமூன் உள்ளிட்ட எல்லா அமைப்பினரும் போராட்டத்தில் பங்கெடுத்தனர். ஐ.நா.வின் கீழுள்ள உலக அணுசக்தி நிறுவன(International Atomic Energy Agency - IAEA)த்தின் தலைமை நிர்வாகி முஹம்மது முஸ்தஃபா அல்பராதியீயும் அரபு நாடுகள் ஒருங்கிணைப்பின் பொதுச் செயலாளர் அம்ரு முஹம்மது மூஸா ஆகிய பிரபலங்களும் மக்களோடு மக்களாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

17 நாட்கள் தொடர் போராட்டம்.

போராட்டக்காரர்களைத் தாக்கும் நடவடிக்கைகளில் ஹுஸ்னி முபாரக்கின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் பரவலாக ஈடுபட்டனர். அவ்வாறான தாக்குதல்-எதிர்த்தாக்கு நிகழ்வுகளால் போராட்டம் தொடங்கியதிலிருந்து சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத், 1981இல் படுகொலை செய்யப்பட்டபின் அதிபராகப் பொறுப்பேற்ற ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சி, அவரது 82ஆவது வயதில் முடிவுக்கு வந்தது. முப்பதாண்டு காலம் எகிப்தை ஆண்ட முபாரக்கின் குடும்பம் பிரிட்டனில் புகலிடம் தேடிப் போனது. போராட்டக்காரர்கள், ஹோஸ்னி முபாரக்குக்கு, ‘புறப்படும் நாள்’ என்பதாக 11.2.2011 தேதியை முடிவு செய்து அறிவித்தனர். மக்களுடைய எழுச்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் எகிப்தை இராணுவத்திடம் ஒப்படைத்ததுவிட்டு ஹோஸ்னி முபாரக் அன்று இரவு அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.

எகிப்ததைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் மன்னர் ஹமாத் அல் கலிபாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. கூடுதல் சுதந்திரம் கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் பெரும்பான்மையாக ஷியா இன மக்கள் இருந்தாலும், அங்கு ஆட்சியதிகாரம் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் பரம்பரையிடம் உள்ளது. அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் பேச்சு நடத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அண்மையில் அமைச்சரவை மாற்றத்தை மன்னர் ஹமாத் அலி அறிவித்துள்ளார். எனினும் மக்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

அதேபோல மொராக்கோவிலும் மன்னர் முகம்மதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால், சில அதிகாரங்களை விட்டுத் தருவதாகவும், அரசியல் சீர்திருத்தங்கள் செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதேபோன்று வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் யேமன் நாட்டு மக்களும் ஆட்சியாளர்களைப் பதவி விலகக்கோரி வீதியில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டனர். யேமன் நாட்டிலும் அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அல்ஜீரியாவில் அதிபர் அப்தல்லாஷிஸின் 12 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற்சங்கவாதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மற்றொரு அரபு நாடான குவைத்திலும் ஆட்சித் தலைமைக்கு எதிராக இல்லாவிட்டாலும் அமைச்சர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்வரும் 8 ஆம் திகதியன்று மாபெரும் போராட்டத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அல்ஜீரியா, ஜோர்டான், யேமன், எகிப்து, சூடான், சிரியா, ஈரான், லிபியா என்று பரவி மக்களின் -இளையர்களின் புரட்சித் தீ பல்கிப் பரவுகிறது. இதில் தற்போது மிகத் தீவிரமடைந்திருப்பது லிபிய மக்களின் போராட்டம். லிபிய அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து கடந்த இரு வாரங்களாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்களின் எழுச்சியை தனது ஆதரவு படைகள் மூலமாக ஒடுக்கி வருகிறது கடாபி அரசு. அரசின் அடக்குமுறையில் சுமார் 1000 ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்.

ஜனநாயக ரீதியில் கிளர்ச்சியில் ஈடுபடும் போராட்டக்காரர்களை அடக்குமுறை மூலமாக நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிபர் கடாஃபி, தமது ஆதரவாளர்களையும் ராணவத்தையும் மக்களுக்கு எதிராக ஏவி விட்டுள்ளார். "நாங்கள் உங்களை ஆட்சி செய்வோம் அல்லது உங்களைக் கொல்வோம்' என கடாஃபியும் அவரது மகனும் நாட்டு மக்களை எச்சரித்துள்னர். இணையத்தை தடை செய்துள்ளார், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்துள்ளார். மத்திய கிழக்கு போராட்டங்களை தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பும் அல்ஜசீரா இணையத்தளத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. லிபியாவில் மக்கள் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. சாலையெங்கும் உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுவதாகவும் அங்கிருந்து வெளியேறியுள்ள இந்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லிபியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதாகவும், நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. திரிபோலி போலவே நாட்டின் பிற பகுதிகளிலும் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அதிபர் கடாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது ஐநா பாதுகாப்பு மன்றம் தடை விதித்துள்ளது. 15 உறுப்பு நாடுகள் அடங்கிய இந்த அமைப்பு இந்தத் தடைக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. ஆயுத விற்பனைக்குத் தடை, கடாபி வெளிநாட்டுப்பயணத்துக்கு தடை, அவரது சொத்துகளை முடக்குவது உள்ளிட்டவை இந்த தடையில் அடங்கும் .

68 வயது கடாபி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துகளை முடக்குவது, அவர்களும் அவரது ஆட்சித்தலைவர்களும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை விதிப்பது, ஆயுதத்தடை விதிப்பது, மனித குல அழிவில் ஈடுபட்டதாக கடாபி மீது ஹேக்கில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரிக்க கோருவது உள்ளிட்டவை இந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை லிபியா உடனடியாக நிறுத்தவேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
27 நாடுகள் அமைப்பான ஐரோப்பிய யூனியன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை வரவேற்றுள்ளது.

கடாபிக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருவது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

இதன் பிறகும் கடாஃபி தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. "எல்லா வன்முறைகளையும் அடக்குவோம். நான் மக்கள் மத்தியில் இருக்கிறேன். தொடர்ந்து போராடுவேன். எந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும் தோற்கடிப்போம்” என்றும் கூறியுள்ளார்.

சர்வாதிகார ஆட்சி, ஊழல், வேலைவாய்ப்பின்மை, மக்களுக்கு வசதிகள் இல்லாதது, ஆண்டுக்கணக்கான நாட்டை ஆளும் தலைவர்களே சொத்துக்களை முடக்கி வைத்திருப்பது போன்றவற்றால் நொந்து வெந்து போயிருக்கின்றனர் வடஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் மக்கள். இதுவே மக்கள் போராட்டங்களுக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. உதாரணமாக ஆப்ரிக்காவின் மிகப்பெரும் எண்ணெய் வளத்தைத் கொண்ட லிபியாவில், 605 மில்லியன் மொத்த மக்கள் தொகையில் 2/3 பகுதி மக்கள் நாளொன்றுக்கு $2 குறைவான வருமானம் பெறுபவர்களாக உள்ளனர். உலகில் தற்போது அதிக அளவிலான இளையர்கள் உள்ளனர். 3.6 பில்லியன் மக்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள்.

1970க்கும் 2000ம் ஆண்டுக்கும் இடையில் உள்நாட்டுக் கலவரங்கள் நடைபெற்று நாடுகளில் கிட்டத்தட்ட 60% 30 வயதுக்கும் குறைந்தவர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இளைய அரேபியர்கள் மற்ற நாடுகளைப் போலும் தாங்களுக்கும் கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், சுதந்திரம், எதிர்காலம் வேண்டுமென நினைக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள வளமான வாய்ப்புகள் தங்கள் நாட்டில் இல்லாது இவர்களுக்கு விரக்தியையும் மனக்குறைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று வாஷிங்கடனில் உள்ள Population Action International ஆய்வு நிறுவனத்தின் எலிசபெத் லேஹி மாட்சன் கூறுகிறார்.

எவ்விதத் தலைமைத்துவமும் இன்றி, பேஸ் புக், டிவிட்டர் இணையம் போன்ற சமூகக் கட்டமைப்புத் தளங்கள் மூலம் ஒன்றிணைந்து மக்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டங்கள் உலகின் மற்ற நாடுகளையும் அச்சப்படவைத்துள்ளது. மக்கள் புரட்சியை முளையிலேயே கிள்ளி விடும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. பெரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனநாயக ஆதரவுக் கூட்டங்களை கலைக்க அதிக அளவிலான போலிஸ்காரர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், சீன பிரதமர் வென் ஜியாபாவ், மக்களுடன் நேரடியாக இணையத்தில் உரை மாற்றங்களை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும், லஞ்ச ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சமன்செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். தலைமைத்துவமற்ற போராட்டங்கள் சர்வாதிகார ஆட்சிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக அமைந்தாலும், அதன் பின்னான விளைவுகள் குறித்த பெருங் கேள்வி உள்ளது. நீண்ட கால ஆட்சியாளர்கள் பதவி விலகிய பின்னர் துனிசாயாவிலும் எகிப்திலும் அடுத்த தலைமைத்துவம் குறித்து தீர்மானிப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. துனிசியாவின் அரசியலமைப்பில் இன்னமும் சீரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கே தொடர்கின்றன.

எகிப்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்து அரசியல் சீர்திருத்தத்தை செய்வது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது. இனிமேல் அதிபர் பதவிக்கான காலத்தை 4 ஆண்டுகளாக நிர்ணயிக்கலாம். ஒருவரை இரு தடவை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம். ஒருவரை எக்காரணத்தை முன்னிட்டும் இருதடவைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அதிபர், நாடாளுமன்றத் தேர்தல்கள் நீதித்துறை கண்காணிப்புக்கு உட்பட்டது உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் இவை பரிந்துரைகள் ஏற்கப்பட்டு உரிய நடவடிக்கைகள மேற்கொள்ளப்படுமான என்பதைப் பொறுத்திருந்திருந்துதான் பார்க்கவேண்டும். மாற்றங்கள் வேண்டும் என திரளாக கிளர்ந்தெழும் மக்களை, போராட்டம் ஒன்றுபடுத்துகிறது. ஆனால் அதன் பின்னர் அவர்களுக்கிடையிலான பல பிரிவுகள் அவர்களைப் பிரிக்கின்றன. உதாரணமாக லிபியா என்பது ஒரே சமூகத்தைக் கொண்ட பெரும் நாடல்ல. அங்கு பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். கடாஃபியின் சர்வாதிகாரம் இந்தத் தனித் தனிக் குழுக்களை இணைத்திருந்தது. அங்கு கடாஃபியின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், பல குழுக்களுக்கிடையிலான அதிகாரப் போட்டிப் பிரச்சினைகள் ஏற்பட பெரும் வாய்ப்புள்ளது.

மாற்றுக்கொள்கைகள் -வழிமுறைகளை உட்படுத்திய சீர்திருத்தங்களுடன் அவற்றைச் செயல்படுத்தும் தகுதியும் திறனுமுள்ளவர்களின் திட்டமிடப்பட்ட போராட்டமாக இல்லாத பட்சத்தில், அடுத்த யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்கும் பேராபத்து உள்ளது. வாய்ப்புக்காகக் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நாட்டின் வளத்தைப் பங்குபோடக் காத்திருக்கும் வெளிநாடுகள் ஆதரவு என்ற பெயரில் உட்புகுந்து, தமது கட்டுப்பாட்டுக்குள் ஆட்சியாளரைக் கொண்டுவரும் சாத்தியமுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், கைத்தொலைபேசி போன்ற இணைய சமூக கட்டமைப்புகள் விரைவான தகவல் பரிமாற்றத்துக்கு வழிவகுத்தாலும், தெளிவான திட்டமிடலுக்கு உதவுகின்றனவா என்பது தெரியவில்லை.
ஊர்கூடித் தேர் இழுக்கலாம். ஆனால் தேரை சரியான பாதையில் கொண்டு செல்ல சரியான தகுந்த தேரோட்டியும் பாதைத் தீர்மானிக்கும் முன்தீர்மானமும் முக்கியம்.

மத்திய கிழக்கில் உயிரைப் பணயம் வைத்து இளையர்கள் மீட்டெடுத்துள்ள இந்தப் புதிய சுதந்திரம், அவர்களுக்குத் தேவையான தீர்வுகளையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் பெற்றுத்தருவதாக அமைய வேண்டும். இதிலும் லாபம் காண முனையாமல் அதை நிறைவேற்றும் கடமை இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்து வரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கைகளில் உள்ளது. இல்லாது போனால் ஏழாம் திணையின் புரட்சி அங்கும் வெடிக்கலாம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768