|  | 
 | 
		
		
		இந்தக் கதை சொல்லப்படுவதற்கோ வாசிக்கப்படுவதற்கோ அல்ல. இது 
		பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி. ஆகையால் இக்கதையில் சேர வேண்டியவை - 
		சொல்லப்படவேண்டியவை - வாசிப்பின் சிரமங்கள் பற்றிய வேதனைகள் - வசிக்க 
		முடியாதுள்ள குறைபாடுகள் - குறிப்புகள் - திட்டுகள் - சித்திரங்கள் - 
		படங்கள் - என்று அனுப்பக்கூடியதுகளை அனுப்புங்கள். எல்லாம் இக்கதையில் 
		சேர்த்துக்கொள்ளப்படும். 
 2) குட்டிக்கார்
 
  மண்டைக்காய்க்கு 
		மூளைக்கொழுப்பென்றொரு வருத்தமுண்டு. இந்த வருத்தத்தை போக்க கொங்கொங்கில் 
		இருந்து இங்கிலாந்து வரை பறந்து திரிந்தவர் அவர். இங்கிலாந்தில் 
		ஆக்ஸ்போர்ட் என்னும் இடத்தில் இதுக்கு மருந்துன்டென்று சிலர் காசு சேர்த்து 
		அனுப்பி வைத்தார்கள். அங்கு நடந்த ஆய்வின் பிறகு அவரது வருத்தம் 
		முத்தியதேயன்றி குறையவில்லை. அவரது வருத்தத்தை முத்த வைத்தமைக்காக 
		ஆக்ஸ்போர்ட்டை 'சூ' பண்ண வேனும் என்று நீலன் ஒருமுறை சொன்னது ஞாகத்துக்கு 
		வருகிறது. 
 வருத்தம் முத்திய நிலையில் திரும்பி வந்தவர் முதன்முதலாக ஒரு 
		'குட்டிக்கார்' வாங்கினார். அந்தக் காரின் கதை முக்கியமானது. 'நாம் டிரைவர் 
		கொண்டு விடும்' என்று ராஜபக்ச ஒருமுறை நல்ல வெறியில் சொன்னபோது மண்டைக்காய் 
		அதை முற்றாக நிராகரித்தார். 'என்ர கார் பஸ்சுகளுக்கு கீழால 
		சுழிச்சுக்கொண்டு போகும் தெரியுமா' என்றார். 'ஒரு சில்லில பேய்மென்டில 
		சரிஞ்சு சி.டி.பி ஜ ஓவர்டேக் பண்ணும்' என்றவாறு எழுந்து ஒரு கதிரையை எட்டி 
		உதைத்தார். ராஜபக்சவுக்கு காவலுக்கு நின்ற ஒருவர் அவரின் கமக்கட்டுக்குள் 
		கையைவிட்டுப் பிடித்து வாசல்வரை கொண்டுபோய் விடவேண்டியிருந்தது. 
		இன்னுமொருவர் அவரை தூக்கிக்கொண்டுபோய் டிரைவர் சீட்டில் இருத்தி ஒரு காலை 
		பலவந்தமாக இழுத்து பிரேக்கில் வைத்துவிட்டு கதவை மூடினார்.
 
 அண்டைக்கு அந்தக்கார் சி.ரி.பி யிடம் செம்மையடிவாங்கியது. அவரது 
		தெனாவட்டுக்கதைக்கு பஸ் அவரை பழிவாங்கியது. அது குட்டிக்கார் என்பது 
		பொய்க்கதை. தனக்கு விருப்பமானவற்றை குட்டி என்றழைப்பது மண்டைக்காயின் 
		பழக்கம். தனது எந்தக்காதலிகளையும் அவர் பெயர் சொல்லிக் கூப்பிட்டது 
		கிடையாது. 'என்ர குட்டி' என்று செல்லமாக அழைப்பது அவர் பழக்கம். அந்த 
		அர்த்தத்தில்தான் குட்டிக்கார் என்று தன் காதல்காரை அழைத்தார். அண்டைக்கு 
		வாங்கின அடியில் அந்தக் 'குட்டி' திரும்ப எழவேயில்லை. ஆஸ்பத்திரிக்குப்போன 
		மண்டைக்காயும் எழும்பி நடக்கமாட்டார் என்று தான் பலரும் சொன்னார்கள்.
 
 ஆனால் சிங்கன் இரண்டு மாதத்தில் இரண்டுகாலிலும் நின்றார். சிங்கத்தின் 
		கழுத்தடியில் மட்டும் சில கிறுக்கல்கள் மாறமாட்டேன் என்று 
		அடம்பிடித்துவிட்டது. 'நீங்கள் முந்தி இயக்கத்தில் இருந்தனிங்களோ?' என்று 
		ஆக்கள் கேட்கும்போது அவர் குட்டிக்காரை நினைத்துக்கொள்வார். 'உங்களுக்கு 
		செல்லடி குண்டு கிண்டு ஏதும் பட்டதே' என்று யாரும் கேட்கும்போது அவர் 
		குட்டிக்காரை நினைத்துக்கொள்வார். அவர் மனதில் உருக்கம் உறையும். கண்ணீர் 
		மல்க மூக்குக்கண்ணாடியை கழட்டி நெத்தியில் இருந்து நாடிவரை உள்ளங்கையால் 
		தேய்ப்பார். 'சொறி சொறி' என்று கேள்வி கேட்பவர்கள் பதறியடிப்பார்கள். 
		'விடுங்க விடுங்க நம்ம நாட்டில எல்லாருக்கும் தானேயிது' என்று 
		ஆறுதல்கூறத்தொடங்கிவிடுவார்கள். யாருமே அவரை சரியான பதில் சொல்ல 
		விட்டதில்லை. இவ்வாறு அவருக்குப்பின்னால் ஒரு வரலாறிருக்கு என்ற மாயை 
		தானாகவே உருவாகியதற்கு அவர் எப்படிப் பொறுப்பெடுக்க முடியும். இவ்வாறுதான் 
		அந்த குட்டிக்காரின் கதை முக்கியமானது.
 
 3) முதலாம் கனவு
 
 அல்லியின் மணத்தை தூரத்திலிருந்தே நுகர்ந்துவிட்டது ஒரு கனவு. ஆக்களைத்தான் 
		முடித்தார்கள் என்றால் கனவுகளையும் இவர்கள் விடத்தயாராயில்லை. என்று எண்ணி 
		தன் தலையை நிலத்தில் மூன்றுதரம் இடித்தது அக்கனவு. ஏன் மூன்றுதரம் என்று 
		துப்பறியாதீர்கள். எல்லாத்தையும் மூன்றுதரம் செய்யப் பழக்கப்பட்ட கனவது. 
		இவர்கள் என்னைக் கைப்பற்ற விடமாட்டேன் என்ற இறுமாப்புடன் கல்லுகளுக்கும் 
		முள்ளுகளுக்கும் மத்தியில் சிதைவுகளுக்கடியில் புதையுண்டிருந்த கனவு மூச்சை 
		உள்ளிளுத்து எல்லாவற்றையும் தள்ளிவிட்டுக்கொண்டு எழுந்தது.
 
 எழுந்த கனவுக்கு ஏன் எழுந்தோம் என்றாயிற்று. சுற்றிவர இருந்த அழிவின் 
		தடங்கள் பற்றிய அதிர்வல்ல அது. அதுபற்றி கனவுக்கு ஏற்கனவே 
		வடிவாகத்தெரியும். நேராக கண்டு அனுபவித்ததல்லவா அது.
 
 வளைந்து நெளிந்து குற்றுயிராய்க் குடல் சுருங்கிக்கிடந்தது அந்தச் 'சின்னச் 
		சைக்கிள்'.
 
 'சின்னச் சைக்கிள்' - 'சின்னச் சைக்கிள்' - 'சின்னச் சைக்கிள்'
 
 இந்தச்சின்னச் சைக்கிளை அடையப்பட்டபாடு கனவுக்கு பச்சை ஞாபகம்.
 
 சைக்கிள் என்றதும் விறுவிறு என்று வெளிக்கிட்டு நிறுத்திவைச்சு ஏறி 
		வேலைக்குப்போய் ஒரு மூலையில் சாத்தி - எறிந்து விட்டு (ஓமோம் லொக்கும் 
		போட்டுத்தான்) மீணடும் வேலையில் இருந்து திரும்பும் கருவியென்று தப்பாக 
		நினைத்துவிடவேண்டாம்.
 
 சின்ன மானாக்கனாக கனவடைஞ்ச சொத்தது. கனவின் தாய் தகப்பன் வேறு கனவொன்றோடு 
		தொடர்பிருந்த காலமது. அவர்களிடம் இந்தக்கனவை நிவர்த்திசெய்யும் 
		வக்கிருக்கவில்லை. வக்கு - என்றால் யாழ்ப்பானத்தில் குளிக்கப் பாவிக்கும் 
		தொட்டி என்பார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. கிழக்கில் அதற்கு அர்த்தம் 
		இல்லை! இல்லவேயில்லை. வடக்கில் அதாவது இந்தியாவில் திடம் அல்லது தைரியம் 
		என்பார்கள் என்று சொல்வார்கள் - (வடக்கின் மேலாதிக்கத்தை இங்கு கவனிக்க). 
		மலேசியாவில் என்ன மண்ணாங்கட்டியோ யாரறிவார். கனவுகளுக்கு மத்தியில் அதற்கு 
		காசு என்ற உண்மை அர்த்தம் புழக்கத்தில் உண்டு.
 
 வக்கில்லா தாய்தகப்பனுடன் உற்றம் உறவு பக்கத்துவீடு வீதியால் போனவர்கள் 
		மற்றும் வந்தான் வரத்துக்கள் எல்லாருமாக சேர்ந்து ஒரு உறுதியளித்தார்கள். 
		'வரும் ஸகாலர்சிப்பில் பாஸ் பண்ணுவ எண்டால் நாங்கள் உணக்கு ஒரு சின்னச் 
		சைக்கிள் வாங்கித் தருவோம்' என்று உறுதியளித்தார்கள். அண்டைக்கு குந்திய 
		கனவு 'எக்சாம்' முடியும் வரையும் எழவேயில்லை. தேர்வு முடிவுகள் வந்த அன்று 
		இரவு குப்புறப்படுத்து சிமினியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் 
		பின்வரும் வசனங்களை எழுதியது கனவு.
 
 காத்தடிச்சு பறவையெல்லாம்
 மேகத்தில் கரைஞ்சிருக்க
 புயலடிச்சுப் புல்விழுங்கி
 பூமிக்கு வயித்தடிக்க
 பொச்சடிச்சுப் புட்டுண்ணும்
 பேயன் மகனாகி
 பாத்தடிச்சும் பாஸ்பன்ன
 முடியலயே எக்சாம்.
 
 இருப்பினும் இரக்கப்பட்ட கண்டதுகள் நின்டதுகள் எல்லாமாக சேர்ந்து 
		காசுபோட்டு 'செக்கன்கான்டில்' ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். ஜயோ 
		அப்ப பாக்கோனும் இக்கனவை. கனவு முழு விஸ்வரூபம் எடுத்துத் தாண்டவமாடியது. 
		யாரங்கே அடி காத்தை முன் டயருக்கு என்று உறுமியது. ஓற்றைக்கையால் 
		கான்டிலைப்பிடித்து 'பலனஸ்' பார்த்தது.
 
 சைக்கிளத் திருத்தோனும் அந்த தென்னையில அதைக்கொண்டேக் கட்டு பிறகு 
		திருத்துவம் என்றார்கள். கனவுக்குத் தெரியும் அதை திருத்த அவர்கள் 
		வக்கற்றவர்கள் என்று. நடுச்சாமத்தில் எழும்பிய கனவு 'ரிம்மில்' சைக்கிள் 
		ஓடிப்பழகியது. சரக் புரக் என்ற சத்தத்தைப் பாராமல் தென்னைகளைக் கைகளால் 
		தடவித்தடவி சுற்றி வந்தது. அதிகாலையில் சுத்தியலால் அடித்து அடித்து 
		நெளிவுகளைச் சரிப்படுத்தியது.
 
 வந்தான் வரத்தாரில் ஒருவரான வரத்தார் ஒரு நாள் ஒரு 
		குண்டைத்தூக்கிப்போட்டார். 'இந்தச் சைக்கிளுக்கு நாய்ச்சங்கிலி வேனும்' 
		என்றார். கனவிடம் நாயுமில்லை சங்கிலியுமில்லை. பக்கத்து கல்வீட்டாரின் நாயை 
		ஜிம்மி ஜிம்மி என்று டிஸ்கோ இசையில் பாடி அழைக்கும் கனவு சங்கிலி கட்டிய 
		நாயை ஒருக்காலும் கண்டதில்லை. அந்தத் தீவில் ஒரு நாய்க்கும் சங்கிலியில்லை. 
		நாய்ச்சங்கிலி எப்பிடியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது. 'உண்ணிடம் 
		நாய்ச்சங்கிலி இருந்திருந்தால் ரியுப் வாங்கித் தந்திருப்பேன்' என்றார் 
		வரத்தார். நாய்சங்கிலியை தேடிப்புறப்பட்டது கனவு.
 
 முடக்கில் சைக்கில் கடை வைச்சிருந்த யூட்டின் கடைக்கு முன்னால் ஊர் நாய்கள் 
		படுத்தெழும்புவதுண்டு. அதன் அர்த்தம் கனவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக 
		புரியத்தொடங்கியது.
 
 யூட் அற்புதமான மனிதம். கனவுகளற்றவன். இருப்பினும் எந்தக்கனவாலும் 
		அந்தப்பெயரை மறக்கமுடியாது. அந்தக்கதை வேறு. அடுத்தநாட் காலையில் யூட்டிடம் 
		பறந்த கனவு 'அன்னே நாய்ச்சங்கிலி வேனுமாம்' என்று கண்ணீர் மல்க நின்றது. 
		சின்னக் கம்பி மாதிரியொன்றை எடுத்து நீட்டிய யூட் ஓங்காரமாக சிரித்தான். 
		ஏய் விசர்க்கனவே உணக்கெப்படி நாய்ச்சங்கிலி பூட்டத்தெரியும் என்று 
		எக்காளமாய்ச் சிரித்தான். கனவுக்கு உணர்வலைகள் அதிர்ந்தது. நாய்ச்சங்கிலியை 
		கண்டுபிடித்த சந்தோசத்தை மீறி கவலை துளைத்தது.
 
 இது என்ன நாய்ச்சங்கிலி? நாய்களின் விரலைக் கட்டக்கூட இது பயன்படாதே என்று 
		குழம்பிய கனவைப்பார்த்து அங்கு படுத்திருத்த ஜிம்மி சிரித்தது. 
		நாய்ச்சங்கிலியின் கதை அலுப்புத் தாங்க முடியாமல் கொஞ்ச நேரத்தில் ஜிம்மி 
		அந்த இடத்தைவிட்டு எழும்பிப்போய்விட்டது. எப்படி நாய்ச்சங்கிலியை இணைப்பது 
		என்பது பற்றி யூட் இன்னுமொரு சைக்கிளில் செய்து காட்டினான். பின்பு 
		'போல்ஸ்' மற்றும் இதர கருவிகளையும் கொடுத்தனுப்பினான். பின்பு அதற்கு மேலே 
		இரண்டுபடிபோய் - என்ன விசர்க்கதையது - மில்லியன் படி மேலே சென்று 
		-முகில்களைத்தாண்டி -வானத்தில் நின்றபடி இரண்டு பழய ரியூப்புகளையும் அவன் 
		தானமாக வழங்கினான்.
 
 அன்றிரவு கனவு தூங்கவில்லை. ஆடுத்தநாள் காலை சைக்கிளை யூட்டின் கடைக்கு 
		தள்ளிக்கொண்டுபோன கனவு அண்ணே காத்தடிச்சு விடுங்கள் என்றது. யூட் அதிர்ந்து 
		போனான். கடையில 'வேக்கன்சி' இருக்கு வேலைக்கு வாறியா என்றான். கனவுக்கு 
		எதுவும் காதில் விழவில்லை. புசுக் புசுக்கென்று ரியூப்பில் காத்தேறும் 
		சத்தம் யூட்டின் மூச்சிழுப்பையும் மீறிக் கேட்டுக்கொண்டிருந்தது. வேறு 
		'இரைச்சல்' எதுவும் காதில் விழவில்லை.
 
 சைக்கிள் என்றால் சும்மாவா? வேலைக்கு போகும் உபகரணமா அது. அல்லது 
		மண்டைக்காயின் குட்டிக்கார் போன்றதா அது. நிறுத்தி வைச்சு ஏறும் வாகனமா 
		அது. சைக்கிள் என்றால் - தள்ளிக்கொண்டுபோய் பெடலில் கால்வைத்து 
		பறக்கும்போது ஏறும் வாகனம் வேறு ஏதாவது உண்டா?
 
 சைக்கிள் கனவின் ராக்கட். பூமிப்பந்தில் மனிதம் மற்றும் கனவுகள் நடமாட 
		முடியாத எரிநாள் வரும்போது கனவு 'மார்ஸ்' கிரகத்துக்கு தப்பிப்போகும் மர்ம 
		ராக்கட் அது.
 
 எரிகாலம் வந்தது. அவர்கள் கனவை மட்டுமல்ல ராக்கட்டையும் சேர்த்தல்லவா 
		சிதைத்தார்கள். இனித்தப்பிப்போவது எப்படி? தூரத்தில் வெள்ளை வான் - 
		மன்னிக்கவும், உங்களுக்கு இது விளங்காததால் திரும்பச்சொல்கிறேன். வான் 
		என்றால் தமிழில் ஆகாயம் - வானம் என்று அர்த்தம். தூரத்தில் வெள்ளை வான் 
		தெரிந்தது. அதில்தான் அல்லி வந்துகொண்டிருந்தால். ஓடு ஓடு என்று கனவின் 
		எலும்புகள் நரம்புகள் துடித்தன. கனவு ஒற்றைக்காலை ஓடுவதற்காக தூக்கியது.
 
 உப்ஸ். ஜயோ பாவம். இந்த அதிர்வை எப்படி விவரிக்க!
 
 இது தொடரும் சொல்ல நல்ல இடம் என்பதால்... தொடரும்...
 |  |