இதழ் 15
மார்ச் 2010
  தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

தேடியிருக்கும் தருணங்கள்
ஆசிரியர்: ரெ. கார்த்திகேசு


முனைவர் ரெ. கார்த்திகேசு மலேசியத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர். 1960களிலிருந்து மலேசிய இலக்கிய உலகில் தடம் பதித்து வருகிறார்; ஐந்து புதினங்களை எழுதியுள்ளார்.

நான் இடைநிலைப்பள்ளி மாணவனாக இருந்த போதே அவர்பற்றி என் தாயார் சொல்லக் கேள்விப் பட்டிருந்தேன். இருந்தும் ஏனோ அவர் எழுதிய எந்தவொரு புதினத்தையும் இதுநாள் வரை வாசித்திருக்கவில்லை. அவர் இணையத்தில் எழுதியிருந்த கட்டுரைகளையும் விமர்சனங்களையும் வாசிப்பதோடு நிறுத்திக்கொண்டேன். இந்நிலை நேற்றோடு ஒரு முடிவுக்கு வந்தது.

சீனப் புத்தாண்டு விடுமுறைக்காகக் சென்ற வாரம் சுங்கை பட்டாணியிலுள்ள என் பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவரது இரண்டு புதினங்கள் கண்ணில் பட்டன. ஒன்று 'அந்திமக் காலம்'; மற்றது 'தேடியிருக்கும் தருணங்கள்'. புரட்டிப் பார்த்துவிட்டு இரண்டாவதை எடுத்து வந்து நேற்று வாசித்து முடித்தேன். எளிமையான எழுத்து. பிரயாசை இல்லாமலேயே வாசிக்கக் கூடியது.

'தேடியிருக்கும் தருணங்கள்' சூரியமூர்த்தி சாமிநாதன், அல்லது சூரியா, என்ற 25 வயதுடைய இளைஞன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றிய ஒரு புதினம். சூரியா மிகுந்த அறிவாளி; லட்சியவாதி; பொருளியல் துறையில் முனைவர் பட்டத்திற்காகப் பயிலும் இரண்டாமாண்டு மாணவன். அவனது தந்தை அவன்பால் அதீத அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். உலகம் புகழும் பொருளியலாளனாக மகன் தலையெடுக்க வேண்டுமென்று கனா காண்கிறார். அதற்காக அதிக பண செலவு செய்து லண்டனில் படிக்க வைக்கிறார். அவனும் வைராக்கியத்துடன் படிக்கிறான்.

இச்சூழலில்தான் தந்தை நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமாக இருக்கிறார் என்ற தந்தி சூரியாவிடம் கிடைக்கிறது. அத்தந்தியைத் தொடரும் நிகழ்வுகள் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றன.

தந்தி கிடைக்கப்பெற்ற சூரியா, தந்தை சாமிநாதனைக் காண வானூர்தியில் மலேசியாவிற்குத் திரும்புவதாகப் புதினம் தொடங்குகிறது. திரும்பியவனைக் கண்ட தந்தை, "யார் என்ன சொன்னாலும்… நீ என் பிள்ளைதான் கண்ணு!" என்று கூறியவாரே இறந்து போகிறார். அது வெறும் அரற்றலா, அல்லது உள்ளர்த்தம் கொண்டதா என்ற குழப்பத்துடனேயே தந்தையின் இறுதிச் சடங்கைச் செய்து முடிக்கிறான் சூரியா.

இதற்கிடையில், தனக்கும் தன் குடும்பத்திற்கும் நடுவே உள்ள இடைவெளி அதிகரித்திருப்பதாகச் சூரியா உணர்கிறான். தாய் பார்வதி என்றுமே அவனிடத்தில் கண்டிப்பு. தம்பி சந்திராவையும் தங்கை சிவகாமியையும் அவர் கண்டித்தாலும், அவர்களை அரவணைத்துக் கொள்வார்; சூரியாவை அவர் கட்டி அணைத்ததேயில்லை. அம்மா உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர், நெஞ்சுரம் கொண்டவர் என்று சூரியா சாமாதானப் படுத்திக் கொள்வான். தந்தையின் மரணத்திற்குப் பின் சந்திராவும் அவனிடத்தில் பட்டும் படாமல் நடந்துகொள்கிறான்.

தந்தையின் எட்டாந் துக்கத்திற்குப் பின் அவரது உயில் வாசிக்கப்படுகிறது. சொத்துக்களைப் பார்வதியின் பொறுப்பில் விட்டுச்சென்றிருந்தார். அவற்றைச் சந்திரா தொடங்கவுள்ள வியாபாரத்திற்குக் கொடுக்கப் போவதாகப் பார்வதி கூறுகிறார். தான் தன் படிப்பை முடித்தபின் அவ்வாறு செய்யக் கூடாதா என்று சூரியா கேட்கப் போக, அவன் சாமிநாதன்-பார்வதி தம்பதியின் வளர்ப்புப் பிள்ளை என்ற உண்மை அவன் தலையில் இடியாய் விழுகிறது.

சுக்கலாகச் சிதறிய வாழ்வை எவ்வாறு சூரியா மீட்டெடுக்கிறான்; எவ்வாறு பெற்றெடுத்தோரைக் கண்டுபிடித்து, தன் கடந்த காலத்துடன் பரஸ்பரம் வளர்க்கிறான் என்பதாகக் கதை நீளுகின்றது. இடையில், மரணத்திற்கு அப்பாலிருந்து ஒலிக்கும் தந்தையின் குரல் ஆறுதலாக அமைகிறது.

கதையைச் சூரியாவின் பார்வையிலேயே ஆசிரியர் சொல்லியிருக்கிறார். "அந்த அணைப்பு அவளுக்குச் சுகமாக இருந்தது" (பக். 18); 'அப்பா' என்று குறிப்பிடப்பட்டவர் திடீரென 'சாமிநாதன்' ஆதல் (பக். 27க்குப் பிறகு) போன்ற பிசகுகள் ஆங்காங்கு இருந்தாலும் கதை சொல்லல் நேர்த்தியாகவே அமைந்திருந்தது. அதே வேளையில், ஆசிரியர் இன்னொரு பாத்திரத்தின் பார்வையையும் நமக்களித்திருக்கலாமே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

புதினத்தின் நாயகன் சூரியா ஒரு மேலோட்டமான பார்வை கொண்டவனாக இருப்பது இதற்கொரு காரணம். சுயநலம் பாராட்டுபவனாகவும் இருக்கிறான். விளைவாக உறவுகள் கொச்சை படுத்தப் படுகின்றன; சூழலும் ஆழ்மன அலைமோதல்களும் அலசப்படாமல் விடப்படுகின்றன. சூரியா, அவன் தந்தை, இவ்விருவரைத் தவிர்த்து கதையில் வரும் ஏனையோர் தட்டையாக, கருத்தாக்க அளவிலேயே நிற்கின்றனர். தந்தை கூட சற்றே சதை பிடித்தவராகத் தெரிகிறார்.

தம்பி சந்திரா தகாதவர்களின் நட்புடையவன்; கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவன்; எதிலும் உருப்படியில்லை; தாயின் மித மிஞ்சிய அன்பால் தடம் மாறியவன். சொல்லப்போனால் நம் நாட்டில் அலைமொதிக்கொண்டிருக்கும் பல இளைஞர்களின் திருவுரு சந்திரா. இவனே விவஷானு பிள்ளை (24). இவனே பிரான்சிஸ் உடையப்பன் (24). இவனே குகன் (22). சூரியாக்களை விட நம் நாட்டில் சந்திராக்களின் எண்ணிக்கையே அதிகம். மிக மிக அதிகம். இருந்தும் அவனைப் பற்றிய அலசல் — அவனை உண்டாக்கிய அரசியல், பொருளியல், சமூகவியல் காரணிகளைப் பற்றிய பிரக்ஞை — மருந்துக்கும் புதினத்தில் இல்லை.

கல்வியில் பின் தங்கிவிட்ட பூமிபுத்ரா இளைஞர்களுக்கு மலேசிய அரசாங்கம் எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது, தருகிறது. மாரா, ஐ.கே.பி.என், ஐ.எல்.பி பொன்ற பல திட்டங்கள் உள்ளன. அனைத்தும் இலவசம்; உதவிப் பணமும் உண்டு. இலட்சக்கணக்கான பூமிபுத்ரா இளைஞர்கள் இத்திட்டங்களின் வழி ஒவ்வோராண்டும் பயன்பெறுகின்றனர். இத்திட்டங்களில் சந்திரா போன்ற நம்மின இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பும் இட ஒதுக்கீடும் சொற்பத்திலும் சொற்பம். இன்றளவும் தொடரும் அவலம் இது.

பொருளியல் ரீதியிலும் பூமிபுத்ரா சமூகத்திற்கு அரசாங்கம் ஒரு தூணாக நிற்கிறது. பூமிபுத்ரா அல்லாதோருக்கு அரசு, அரசு சார்ந்த நிறுவன ஊழியம் என்பது அத்திப் பூத்தாற் போன்றது. தமிழ், சீன பள்ளிகள் இல்லாதிருப்பின் இப்போதுள்ள நான்கு ஐந்து விழுக்காடு வேலைவாய்ப்பும் மற்றவர்களுக்கு அரசாங்கத்தில் கிடைக்குமா என்பதும் சந்தேகம்! நமக்குத் தனியார் நிறுவனங்களே கதி. அவற்றையும் சீன சமூகத்தினர் பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அடிமட்ட வேலை வாய்ப்புகளே நமக்குக் கொடுக்கப்படுகின்றன. அதற்கும் அந்நியத் தொழிலாளிகளுடன் போட்டியிட வேண்டும். இது அதிகம் படித்த சூரியாக்கள் எதிர்நோக்கும் சிக்கலல்ல; சந்திராக்கள் எதிர்நோக்கும் சிக்கல்.

ஏனோ… இப்பார்வை பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு தொட்டு ஆய்வு நடத்தும் சூரியாவிற்குக் கிட்டாமல் போகிறது. அம்முதலீட்டால் ஏற்படும் அரசியல், சமூக, சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தாராளப் பொருளியல் கொள்கையின் வழியே பார்க்கிறான்.

பினாங்கு நகரின் அசுத்தங்கள் கடலோடு சங்கமமாகும் இடத்தைக் கடந்து செல்லும் சூரியா, "அந்தக் குப்பை கூளத்தின் பின்னணியிலும் சேற்றுக் கூழின் நாற்றத்திலும் நவரசங்களோடு மனித நாடகம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது," என்று சிந்திக்கிறான். "ஒரு நகரத்தின் பொருளாதார முன்னேற்றச் சக்கரம் இப்படி ஒரு பகுதியினரை ஒதுக்கிவிட்டு ஓடுவது ஏன்? சில சமயம் இவர்கள் முதுகில் ஏறிக்கூட அது ஓடும் போலிருக்கிறதே! ஒரு பக்கம் மின்னியல் சாதன உற்பத்தியில் உலக சாதனை ஏற்படுத்துகின்ற இந்தப் பினாங்கு நகரில், இந்த ஏழைகளுக்கு வசதியான வாழ்க்கை நடத்த ஓரிடம் இல்லாமல் போனது ஏன்?" (பக். 84)

இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணுக்கெதிரே இரத்தமும் சதையுமாக இருக்கும் மனிதர்களிடத்தில் தேடாமல் அயல்நாட்டு பேராசிரியரிடம் கேட்டுத் தேரிந்து கொள்ள வேண்டும் என்று சூரியா விழைகிறான்.

பின்னர், ஏழை இந்தியத் தொழிலாளர்களைக் குறைத்துப் பேசும் ஒரு தேயிலைத் தோட்ட கண்டக்டரின் மேட்டிமையை அப்படியே ஏற்கிறான்: "தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சனை, அதனால் அன்னிய தொழிலாளர்கள் வந்து குடியேறுதல், தொழிலாளர்களின் ஒழுக்கக் குறைவுப் பிரச்சினைகள், குடிப் பழக்கம், குடும்பச் சண்டைகள், வீடியோ மோகம், ஜாதிப் பிரச்சனைகள் ஆகியவை இந்தியத் தொழிலாளார்கள் வாழ்கின்ற எல்லா இடங்களுக்கும் பொதுவானவை என்று (சூரியாவிற்குப்) புரிந்தது." (பக். 232)

கடந்த 50 ஆண்டுகளில் மலேசியத் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இருந்தும், அவர்களது மாத ஊதியம் அன்றிருந்த அளவிலேயே இன்றும் போலியாக அழுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. எங்கிருந்து வந்தது தொழிலாளர் பற்றாக்குறை? அதனை உருவாக்கியது ஏற்றுமதியை முன்னிருத்தும் அரசாங்கத்தின் பொருளியல் கொள்கைதானே! காட்டையும் மேட்டையும் அழித்து மலேசியாவை மேம்படுத்திய இந்தியத் தொழிலாளி திடீரென சோம்பேறியாகி விடவில்லை… ஏற்ற ஊதியம் அவனுக்குக் கொடுக்கப்படவில்லை. பொருளியலின் அடிப்படை தத்துவமும் இதுவே!

'தேடியிருக்கும் தருணங்கள்' புதினத்தில் திக்கற்றவர்களாக, வாயற்ற பூச்சிகளாகத் திரியும் கருப்பையா, அவர் அண்ணன் மாணிக்கம், கொத்தடிமை போல கூனிக்குறுகி வாழும் செல்லம்மாவும் அவரது மகளும் எவ்வாறு உருவானார்கள்?

புதினத்தில் வந்து போகும் பாத்திரங்கள் அரசாங்க பிரச்சாரக் கட்டமைப்புக்கு அப்பால் சிந்திக்க மறுக்கின்றன. ஒரே ஒரு இடத்தில் மட்டும் சற்றே மாறுபட்ட சிந்தனைக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதுவும் அச்சிந்தனையை மழுங்கடிப்பதற்காக. ஆறாம் படிவத் தேர்வில் மூன்று பாடங்களில் 'ஏ' எடுத்திருந்தும் உள்ளூரில் மருத்துவம் பயில வாய்ப்பில்லாமல், வீட்டை அடகு வைத்து இந்தியாவில் பயில நேரிட்ட கதையைத் தோழி ஒருத்தி சொல்கிறாள். இதுவே அவள் பூமிபுத்ராவாக இருந்திருந்தால் நடந்திருக்காது என்று சூரியாவின் காதலி பூங்கொடி ஆதங்கப்படுகிறாள். ஆனால் விடுவானா சூரியா… மேதாவியாறிற்றே!

"மருத்துவம் பயில இடங்கிடைக்கலன்னாலும் உயிரியல் பயில இடங் கொடுத்துத்தானே இருக்காங்க?… நீங்கதான் அத வேண்டான்னு ஒதுக்கியிருக்கீங்க!" (பக். 137) என்கிறான்.

இவ்வாறு சிந்திப்பதற்கு ஒரு தனித் திறமை வேண்டும்; அது நிறையவே சூரியாவிடம் இருக்கிறது. அரசு பல்கலைக்கழக நுழைவிலும் உதவித் தொகை வழங்குவதிலும் மலேசிய அரசாங்கம் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்குப் பெரும் அநீதியைக் கடந்த 40 ஆண்டுகளாக இழைத்து வருகிறது. இதனை லண்டனில் பயிலும் சூரியா கண்கூடாகவே பார்த்திருக்க முடியும்.

1990ல் ஆறாம் படிவத்தில் காலெடுத்து வைத்த நான் ஒன்றைக் கவனித்தேன்: ஆதன் அறிவியல் பிரிவில் ஒரு மலாய் மாணவர் கூட இல்லை! அரசு உதவி பெற்று நேரடியாக கல்லூரிகளுக்கோ வெளிநாட்டு படிப்பிற்கோ அவர்கள் சென்று விட்டதாகப் பேச்சு அடிபட்டது. நானும் அவ்வுதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். சொல்லிவைத்தாற் போல அனைத்திற்கும் 'டுக்காச்சீதா' பதிலட்டைகள் வந்து சேர்ந்தன. ஆனால், ஏனோ, நம் நாட்டிற்கில்லாத அக்கறை சிங்கப்பூருக்கு இருந்தது; முழு நிதியுதவியுடன் அங்கு பொறியியல் பயிலும் வாய்ப்பை வழங்கியது. என்னைப் போன்ற பலரை அங்கு சந்தித்தேன். பெரும்பகுதியனர் சீனர்; இந்தியர் சிலர். மலேசிய அரசின்மேல் கொண்டிருந்த வெறுப்பில் நாங்கள் ஒன்றுபட்டிருந்தோம்.

அரசியல், பொருளியல், சமூகவியல் சார்ந்த கட்டமைப்புக் குறைபாடுகள் புதினத்தின் இயற்கை சார்ந்த கண்ணோட்டத்தில் இல்லை. ஆசிரியர் பினாங்கின் எழில்மிகு தோற்றத்தை ஆழ்ந்து அனுபித்தவர் போலும். பினாங்கில் பெய்யும் பேய் மழையை வர்ணிக்கையில், "மழைப்புயல்… பினாங்குத் தீவின் அந்தப் பகுதியை அணைத்துக் கொண்டு ராட்சஸ பாசத்துடன் பாலுட்டிக் கொண்டிருந்தது," என்கிறார். பின்னர், மழை விட்டதும், "வானம் மேகப் பாயைச் சுருட்டி வைத்துவிட்டு ஆயிரம் மினுமினுக்கும் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தது. பினாங்குப் பாலத்தில் தினசரிக் கார்த்திகை ஆரம்பமாயிருந்தது." (பக். 67)

இத்தகைய கவித்துவம் நிறைந்த பத்திகள் புதினம் நெடுகிலும் விரவிக் கிடக்கின்றன. சூரியாவின் சிறு சிறு அவதானிப்புகளும் செயல்பாடுகளும் அவற்றிற்கு வலு சேர்க்கின்றன.

அதே வேளையில், கதை ஓட்டத்திற்குத் தடையாக நிற்கும் சில பத்திகளும் — பக்கங்களும்! — இல்லாமலில்லை. தான் அந்நியனாகிவிட்ட வீட்டிற்குச் சென்று தூசு படிந்த நூல்களைச் சூரியா புரட்ட, ஒன்றரை பக்கத்திக்கு ஒரு இலக்கியப் பாடத்தை நடத்துகிறார் ஆசிரியர். இப்புத்தகங்கள் போதாதென்று சூரியா பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக் கழக நூலகத்திற்குச் செல்கிறான். ஆசிரியரும் உடனே ஒரு சுற்றுலா வழிகாட்டியாக மாறி ஐந்து பக்கங்களுக்கு பல்கலைகழக வீதிகளையும் கட்டடங்களையும் விவரிக்கிறார்.

"மாணவர் விடுதிகளை 'மாணவர் கிராமம்' என்ற பொருள் கொண்ட 'தேசாஸிஸ்வா' என்ற மலாய்ச் சொல்லால் அழைப்பதே மனதுக்கு ஒரு கிளுகிளுப்பைத் தந்தது. அதைத் தொடர்ந்து கட்டடங்களும் ரோமன் அகர வரிசையைப் பின் பற்றி அழகிய இதமான, சமஸ்கிருத அடிப்படையிலுள்ள மலாய்ப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. முதலில் கட்டப்பட்டது A-யில் தொடங்கி 'அமான்' (அமைதி) என்று அழைக்கப் பட்டது. இரண்டாம் கட்டடம் B-யில் 'பக்தி' (பற்று); இவற்றைத் தொடர்ந்து C- 'ச்சஹாயா' (ஒளி),"… இவ்வாறாக 'H' (பக். 164) வரை செல்கிறார் ஆசிரியர். எதற்கென்றுதான் தெரியவில்லை.

பல்கலைக்கழகச் சந்து பொந்தெல்லாம் நோட்டம் விட்ட சூரியா நூலகத்திற்குள் நுழைய, மீண்டுமொரு சுற்றுலா தொடங்குகிறது. "முதல் மாடியில் மாணவர் இருக்கைகள், சஞ்சிகைகள் சேமிப்பு, நிர்வாக அலுவலகங்கள் ஆகியவை மட்டுமே இருந்தன… சூரியா நூல் அட்டவணையைப் பற்றிக் கவலைப்படாமல் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த வரிசையான தட்டுகளுக்கிடையே நடந்தான். அந்தத் தட்டுகளின் ஓரத்தில் அந்தந்தத் தட்டில் உள்ள புத்தகங்களின் பிரிவு… அச்சிட்டு ஒட்டப் பட்டிருந்தன. நிலவியல், அதன் துணை வகைகளாக ஐரோப்பிய நிலவியல், அமெரிக்க நிலவியல், ஆசிய நிலவியல்; அதன் கீழ் தென் கிழக்காசியப் பிரிவுகள், மலேசிய நிலவியல்; அதன் கீழ்…" (பக். 167-168)

இவ்வாறாக ஐந்தாறு பக்கங்களுக்கு நீளும் நூலகச் சுற்றுலா, இரண்டு பொருளியல் நூல்களைச் சூரியா வாசிப்பதாகவும் குறிப்பெடுத்துக் கொள்வதாகவும் முடிவடைகிறது.

சூரியாவிற்கும் அவன் தந்தைக்குமுள்ள உறவை விவரிக்கும் பகுதிகளில் புதினம் ஓங்கி நிற்கிறது. மலேசியாவின் நடுத்தட்டு வர்க்கத் தந்தைகளின் எதிர்ப்பார்ப்புகளையும், கவலைகளையும், கூடவே பலவீனங்களையும் கொண்டவராகச் சூரியாவின் தந்தை இருக்கிறார். மனதை நெகிழ வைக்கும் எழுத்தை ஆசிரியர் ரெ.கா இங்கு நமக்களித்திருக்கிறார்!

அலைமோதிக் கொண்டிருக்கும் சூரியாவின் மனதைத் தந்தையின் கருணைக் கரம் பற்றி நிலைப்படுத்தியதை ரெ.கா. இவ்வாறு விளக்குகிறார்: "முகத்தை உயர்த்தி கடலைப் பார்த்தான் (சூரியா). பளீரென்ற சூரிய வெளிச்சம் அவன் கண்களைச் சுருக்க வைத்தது. இயந்திரப் படகு ஒன்று தூரத்தில் அலைகளில் குதித்துக் குதித்துப் போய்க்கொண்டிருந்தது. அதன் 'டுப் டுப்' என்ற இயந்திர சப்தமும் அலைகளில் அது மோதுகிற சப்தமும் படகுகளுக்குப் பின்னால் ஒரு விநாடி தாமதித்து அவன் காதுகளுக்கு வந்தன." (பக். 105)

தந்தை-மகன் உறவுக்கு உயிரூட்டும் ஆசிரியரின் கரிசனம் ஏனோ தாய்-மகன் உறவுக்கும் நீட்டிக்கப்படவில்லை. தாயைத் தேடும் அவனது முயற்சி இயந்திரத் தன்மை கொண்டதாயிருக்கிறது. இறுதியும் ஒரு வியாபாரப் பரிவர்த்தனை போலவே அமைகிறது. துன்பத்தில் துளியும் பங்குகொள்ளாமல் பிரிகிறான். அதோடு, வளப்புத் தாயின் அன்பையும் அமைதியான அறிவையும் சூரியா புறக்கனிப்பது எரிச்சலைத் தருகிறது. எல்லா பிள்ளைகளையும் ஒரே விதத்தில் பார்க்கும் பக்குவத்தைத் தாய் பெற்றிருக்கிறாள். இப்பார்வை சூர்யாவிற்கு முட்டாள்தனமாக, சுயநலமாகத் தெரிகிறது.

புதினத்தில் விவரிக்கப்படும் பல இடங்கள் எனக்கு மிகவும் பரிட்சயமானவை. சுங்கைப் பட்டாணி பெக்கான் லாமாவிலுள்ள அந்த நாவிதர் கடை, ஜாலான் இப்ராகிமில்லுள்ள கிட்டங்கி, பினாங்கு தேவான் சிறீ பினாங்குக்கு அருகிலுள்ள புல் வெளி, வி.சி. பாறை இவையனைத்துமே என் வாசிப்பிற்கு இன்பமூட்டின. என்றோ மறந்தவற்றையெல்லாம் நினைவூட்டின. தேவையற்றதாகப் பட்ட நூலக விவரிப்பு கூட நான் பல்கலைக்கழக நூலகங்களில், குறிப்பாக கொலம்பியா பட்லர் நூலகத்தில், செலவிட்ட நாட்களை, வாரங்களை, மாதங்களை என் மனக்கண் முன் நிறுத்தின.

புதினத்தின் மிகப் பெரிய குறை அதன் ஆழமின்மையே. 'தேடியிருக்கும் தருணங்கள்' புதினத்தை ரெ.கா., அவரொரு விமர்சனத்தில் கூறிய, "நொறுங்கு தீனி போலச் சத்தில்லாத வெறுங் கதையாகக் கொள்வாரா" என்று தெரியவில்லை. ஒருகால் அதனை ஒரு 'பிட்சா' துண்டாகப் பார்க்கலாம்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768