இதழ் 15
மார்ச் 2010
  அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

அ. முத்துலிங்கத்தின் ‘கிரகணம்’ கதையில் வரும் அந்த வித்தியாசமான பாகிஸ்தானிய சிறுமி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறாள். குறைவான உணவோடு அதிக மணி நேரங்களுக்குக் கம்பளி நெய்ய பணிக்கப்படுபவளை மீட்டு ஐ.நாவில் வேலைச் செய்யும் தமிழ் கதைச்சொல்லி தன் குழந்தைகளோடு வளர்க்க முயல்கிறார். அச்சிறுமி வெகுசீக்கிரத்திலேயே அவர் குழந்தைகளோடு பழகி ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளைக் கற்றுக் கொள்கிறாள். அவள் பைபிள், மகாபாரதம் என பல நூல்களைப் படித்துவிட்டு பல நூதனமான அதேவேளையில் சிந்திக்கவேண்டிய கேள்விகளை எழுப்புகிறாள்.

ஒரு நாள் அவள் அறையிலிருந்து கெட்ட வாடை வருகிறது. ஆராய்ந்து பார்க்கும்போது ஒரு பெட்டியில் சேகரிக்கப்பட்ட உணவுகள் கெட்டுப் போய் கிடக்கின்றன. இத்தனைக்கும் கதைசொல்லியின் வீட்டுக்கு வந்துவிட்ட பிறகு சிறுமிக்கு உணவு பஞ்சமில்லை. இது தொடர்பாக அவளிடமிருந்து அழுகையைத் தவிர வேறெதுவும் பதிலில்லை. உணவு போதாமை சிறுவர்களின் மனதில் நோயாக படிவது கொடுமை. ஒரு சிறுகதையைப் படித்து முடிக்கும் முன்பே அழுத அனுபவம் அன்று நிகழ்ந்தது.

சிறுவயதில் எனக்கும் இம்மாதிரி உணவு போதாமல் போய்விடுமோ என்ற பயம் இருந்தது. காலையில் பசியாறிக் கொண்டிருக்கும்போதே மதிய உணவைப் பற்றி யோசிக்கத் தொடங்கி விடுவேன். மதிய உணவின்போது இரவு உணவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடும் மனது. அடுத்த வேளை உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் அப்போது இருந்தது. உணவை யாராவது பிடுங்கிக் கொள்வார்களோ என அஞ்சுவதுபோல் அரக்க பரக்க உண்ணும் பழக்கமும் இருந்தது. மெதுகாற்றோ, அல்லது லேசாக தள்ளினாலே விழுந்துவிடும் தேகம் கொண்டவன் ஒரே அமர்வில் சர்வ சாதாரணமாக இரண்டு மங்கு சோறு உண்ணும் திறன் பெற்றிருந்தேன் என்பதை இப்போது யோசிக்கும்பொழுது எனக்கே பயமாக இருக்கிறது.

இப்படியெல்லாம் சொல்வதால் எங்கள் குடும்பம் கடும் வறுமையில் வாடிக் கொண்டிருந்ததாக எண்ண வேண்டாம். என் அம்மா (அதாவது அம்மாவின் அம்மா) எனக்கு சமைத்து தந்ததுபோல் என்னைப் பெற்றவர் கூட சமைத்து தந்ததில்லை. காலை ஆறு மணிக்கு பிரட்டுக்கு கிளம்பும் முன்பே பசியாற காலை உணவைத் தயாரித்து விடுவார். நாலரை மணிக்கு எழுபவர் தயாரிக்கும் காலை உணவின் வகைகள் புதிய தலைமுறைகள் பலர் கேட்டிருக்கக் கூட மாட்டார்கள். மங்கப்பம், அவித்த மரவள்ளி கிழங்கு, மீகூன் பல வண்ணங்களில் (வெள்ளை, மஞ்சள், வெளிர் கொக்கோ), கருப்பு சீனி மற்றும் வெள்ளை சீனி புலோட் (Glutinos rice), உளுந்து ரொட்டி, பெங்காங், சொய்யான் என்று இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். அதே காலை உணவை மீண்டும் உண்ண இரண்டு வாரமாவது காத்திருக்க வேண்டும். (தற்சமயம் மலேசியாவிலுள்ள மூவினமும் கொலஸ்டுரோல் அதிகமுள்ள காலை உணவான ‘நாசி லெமாக்’ சாப்பிடுவதில் மட்டும் ‘ஒரே மலேசியா’வாக இருப்பதில் பெருமைப்பட்டு கொள்ள வேண்டியதுதான்.)

இது போதாதென்று மரம் சீவி விட்டு வந்ததும் மதிய உணவுக்கு பொருள் வாங்க சீனக் கடைக்குச் செல்லும்போது நான் அக்கா மற்றும் தம்பியும் அம்மாவின் பின்னாலேயே செல்வோம். தம்பி அம்மாவின் கைலியைப் பிடித்துக் கொண்டுதான் நடந்து வருவான். அப்போது புதிதாக கடைக்கு வந்திருக்கும் தின்பண்டங்களை அம்மா வாங்கி கொடுப்பார். எல்லாம் கடனுக்குதான். சம்பளம் போட்டவுடன் கொஞ்சம் கடனைக் கட்டி விடுவார். அம்மா வயதாகி வேலையை விட்டு விலகியபோது சீனக் கடைக் கடன் மட்டும் வட்டியோடு ஐயாயிரம் வெள்ளி வரை இருந்தது. நாங்கள் மூவரும் சாப்பிட்ட தின்பண்டம் மட்டும் அவ்வளவு மதிப்பு பெறுமே என அப்போது நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு தின்பண்டங்களைச் சாப்பிடும் பழக்கத்தை வெகுவாக குறைத்துக் கொண்டேன்.

எங்களுக்கு முந்திய தலைமுறை சில சமயங்களில் ஒரு வேளை உணவை வயிறார உண்ணக் கூடச் சிரமப்பட்டதாக அம்மா சொல்லியிருக்கிறார். என்னைப் பெற்றவரோடு சேர்த்து அம்மாவுக்குப் பதினொரு பிள்ளைகள். தாத்தாவுக்குக் குடிப்பழக்கம் வேறு. இரப்பர் தொழிலாளிகளின் அடுப்பங்கரையில் வறுமை சொகுசாகப் படுத்துக் கிடந்தது. குழம்பு கூட வைக்க முடியாத நாட்களில் சோற்றை நெத்திலி போட்டு பிரட்டி அனைவரும் பங்கிட்டு சாப்பிடுவார்கள். ஒருவருக்கு நான்கு வாய் கிடைத்தால் பெரும்பேறு. அம்மா இதை என்னிடம் சொல்லும் போது வழியும் கண்ணீரைக் கைலியால் துடைத்துக் கொள்வார்.

பிறகு தன் பெண்பிள்ளைகளின் (என்னைப் பெற்றவர் இரண்டாமவர்) திருமணங்களை ஒருவாறு முடித்தார். மாமாமார்கள் உயர்க்கல்விவரை படித்துவிட்டனர். நான் வளரும்போது வீட்டில் வறுமையின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்தது. அக்கா பெரியம்மாவின் மகள். மாமாமார்களுக்குப் பயந்து ஒழுங்காகப் படிப்போம் என எங்களது பெற்றோர்கள் அம்மாவுடனேயே எங்களை வளர விட்டனர். பாட்டி என்று அழைக்க மறந்து அம்மா என்று கூப்பிடுவதிலேயே அவரின் அன்பின் ஆழம் எத்தகையது என புரிந்து கொள்ள வேண்டியதுதான். இருப்பினும் நான் அப்போது சிறுவன் தானே? பெற்றோரின் பிரிவு என்னைப் பெரிதும் வாட்டியது. அப்பிரிவின் ஏக்கம் இன்னும் கூட மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரிவுதான் என் அதீத உணவுப் பழக்கத்தின் காரணிகளில் ஒன்று என்பதை இப்போது உணர முடிகிறது.

அச்சமயத்தில் என்னுடைய பெரிய எதிரியே என் அக்காதான். என்னிலும் நான்கு வயது மூத்தவர். அவர் எல்லா வகையிலும் மாறுபட்டவர். நான் கொஞ்சம் வெளிரிய மாநிறம். அவர் கறுப்பு. நான் பயங்கர ஒல்லி. அவர் நன்றாக சதைப்பிடிப்புள்ளவர். நான் காலில் சக்கரம் கட்டியது போல் தோட்டத்தை வலம் வந்து கொண்டிருப்பேன். அவர் குத்துக் கல் போல் எங்காவது அமர்ந்திருக்க ஆசைப்படுவார். எல்லாவற்றிலும் உச்சமாக எனக்கு உணவென்றால் உயிர். அவருக்கு வேப்பங்காய்.

அக்காவை வெறுக்கத் துவங்கிய நாள் துல்லியமாக ஞாபகமில்லாவிட்டாலும் சம்பவம் பசுமரத்தாணிப் போல் நெஞ்சில் இருக்கிறது. நாங்கள் இன்னும் தோட்டப்புறத்தில் இருந்த நேரம். பட்டணப்பகுதியில் திருமணமாகி குடியிருந்த சித்தியின் வீட்டில் தைப்பூசம் முடிந்து தங்கப் போயிருந்தோம். எனக்குப் பயங்கர பசி. உணவு மேசையில் ‘கோழி சம்பலின்’ வாசம் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. இன்று ஒரு பிடி பிடித்தவிட வேண்டியதுதான் என மனக்கண்ணில் திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்நிகழ்ச்சி நடந்தது.

‘இது சித்தி வீடு, ரெண்டு துண்டு இறைச்சி மட்டும் போட்டு சாப்பிடு, மத்தவங்களுக்கும் வேணும், அலையாத’ குனிந்து காதுகளில் கிசுகிசுத்தாள் அக்கா. எனக்குத் தலையில் இடி விழுந்ததுப் போல் இருந்தது. துக்கம் முட்டிக் கொண்டு வந்தது. அவர் தலை முடியைப் பிடித்து மேசையில் அடிப்பதுபோல் கற்பனை செய்துக் கொண்டேன். ஆனால் அதுவெல்லாம் என் குச்சிக் கைகளால் சாத்தியமில்லை. அவள் சொற்படி நடந்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் காதைத் திருகுவாள். குறைந்தது மூன்று நாட்களாவது வலி இருக்கும். இராட்சஸி.

தோட்டப்புறத்தில் கொஞ்சம் காசுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடுவார்கள். பெரும்பாலும் க்ரீம் கேக்கோடு கேசரி, ஆக்கரக்கா, மீகூன் போன்றவை உண்ணத் தருவார்கள். அந்தக் கேக்கைப் பார்க்கும்போது வாய் ஊறும். சீனக்கடையில் விற்கும் உலர்ந்த கேக்குகளைப் போல் தொண்டையை அடைக்காமல் இதமாக இறங்கும் க்ரீம் கேக். இரண்டாவது கேக் துண்டு கிடைக்குமா என கேக் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோட்டம் விடும் போதுதான் அக்கா என்னைப் பார்த்தவாறிருப்பதை உணர்வேன். சைகை மொழியில் எச்சரிக்கை வந்து கொண்டிருக்கும். கை என்னையும் அறியாமல் காதுகளைத் தடவிப் பார்க்கும். இன்னும் விரல்களில் அங்கும் இங்கும் ஒட்டிக் கொண்டிருந்த க்ரீமை நக்கிக் கொண்டே வீடு திரும்ப வேண்டியதுதான். இரவு தூக்கத்தில் யாரோ முகம் தெரியாதவர் ஒவ்வொரு கேக் துண்டாக ஊட்டி விடுவது போல் கனவு வரும்.

இப்படியான சமயத்தில் ஒரு நாள் அம்மா உறவினர் திருமணத்திற்காகப் பட்டணம் போக வேண்டி வந்தது. அம்மா இப்படி வெளியில் செல்வதே குறைவுதான். அதுவும் மோட்டார் சைக்களில் செல்வதால் எங்களை அழைத்து செல்வது கடினம். அன்று நானும் வருவதாக அடம் பிடித்தேன். ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று இன்றும் புரியவில்லை. நான் பொதுவாக இப்படியெல்லாம் அடம் பிடிப்பவனல்ல. அம்மா எங்களை ஒரு நாள் கூட அடித்ததில்லை. அன்று அவருக்கு கோபம் வந்து விட்டது. திட்டிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னை இங்கு அனாதையாக விட்டு சென்றுவிட்ட என் பெற்றோர்களைத் திட்டிக் கொண்டே தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருந்தேன்.

அக்காவுக்கு அன்று எதோ நடந்திருக்க வேண்டும். கொஞ்சம் நேரம் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்துவிட்ட பிறகு மெதுவாக அணைத்துக் கொண்டாள். நான் அழுவதைக் கண்டு தம்பியும் அழத் தொடங்கிவிட்டான். ‘ஐயா அழுவாத அக்கா உனக்கு புலோட் செஞ்சி தரேன்’ என்று சொல்லிவிட்டுத் தம்பியை அழைத்துக் கொண்டு குசினிக்குச் சென்றுவிட்டாள். எனக்கு குழப்பமாக இருந்தது. அக்கா வீட்டில் சமைத்து நான் பார்த்ததில்லை. சமையலுக்குப் பயன்படுத்திய பாத்திரங்களை சத்தத்துடன் உருட்டிக் கொண்டே கழுவும்போது அம்மாவிடம் ஏச்சு வாங்குவது மட்டும்தான் எனக்குத் தெரியும்.

அக்கா அப்போது இடைநிலைப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தாள். படிப்பு போக சமையல், தையல், ஓவியம் போன்றவற்றையும் உள்ளடக்கிய பாடத்திட்டம் அவருடையது. சமையல் என்ற பெயரில் அவள் கொண்டு வருவதெல்லாம் மேல் நாட்டு உணவுகள்தான். சான்விட்ச், பிஸ்கட், சுவிஸ் ரோல் என பள்ளியில் தயாரித்ததை வீட்டுக்குக் கொண்டு வருவார். அதன் புதிய சுவையால், உணவு ஆறிவிட்டதையும் பொருட்படுத்தாது சாப்பிட்டு விடுவேன். ஆனால் ஒன்று உறுதி. அக்கா வீட்டில் சமைத்து நான் கண்டதில்லை. கொஞ்சம் அவநம்பிக்கையுடன் குசினிக்குப் போனேன்.

வெளியில் மழை பெய்துக் கொண்டிருந்தது. குளிர், சிமெண்ட் தரையில் ஊறிப் பரவியிருந்தது. தம்பி அடுப்பங்கரையில் குளிர் காய்ந்து கொண்டிருந்தான். குசினியில் இருந்த இரண்டு விறகு அடுப்புகளில் ஒன்றில் புலோட் வெந்து கொண்டிருந்தது. புலோட்டோடு சேர்ந்து வேகும் பண்டான் இலையின் வாசம் குசினி முழுதும் நிறைந்திருந்தது. அக்கா தேங்காய் துருவிக் கொண்டிருந்தார். அடுப்பின் நெருப்பு வெளிச்சம் மட்டும் மங்கலாக குசினியில் பரவியிருந்தது.

அக்காவின் புலோட் சமையல் கிட்டதட்ட அம்மாவின் செய்முறையைதான் ஒத்திருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பள்ளி பேருந்து 6 மணிக்கு வந்து விடுவதால், 5.15 மணிக்கு எழுந்து குளித்துப் பள்ளி சீறுடையணிந்து காலை குளிருக்கு இதமாக விறகடுப்பின் ஓரமாக மணக்கட்டையின் மேலமர்ந்து குளிர் காய்வேன். அம்மா அப்போதுதான் காலை உணவை மும்முரமாகத் தயாரித்துக் கொண்டிருப்பாள். அதனால் பெரும்பாலான காலை உணவின் செய்முறை எனக்கு மனப்பாடமாக இருந்தது. அதே நேரத்தில் எழுந்தாலும் அவள் சிங்காரித்து முடிப்பதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருக்கும். மற்றபடி அக்கா பசியாறுவதில்லை. எனக்கு பசியாறாமல் இருக்கும் மனிதர்கள் பார்க்கும்பொழுது அதிர்ச்சியாக இருக்கும். நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

துருவிய தேங்காய் பூவில் நீர் கலந்து பிழிந்து பாலைத் தனிப் பாத்திரத்தில் எடுத்து வைத்தார் அக்கா. அன்று அக்காவின் முகம் அமைதியாகத் தெரிந்தது. சாதாரண நாளாக இருந்தால் இன்னேரம் நான் செய்த அட்டகாசத்திற்கு காது வீங்கியிருக்கும். ஒரு பருக்கை புலோட்டை எடுத்து நசுக்கி பார்த்து வெந்து விட்டதை உறுதிச் செய்தார். அடம்பிடித்தத் தம்பியின் வாயிலும் ஒரு பருக்கை இட்டார்.

அம்மா எப்போதும் காலை உணவுக்கு வெள்ளை சீனி புலோட்தான் தயாரிப்பார். அதைதான் காலை நேர மும்முரத்தில் விரைவாக சமைக்க முடியும். கருப்பு சீனி புலோட் என்றால் அதை வடிகட்டும் வேலையோடு கருப்பு சீனியின் விலை வேறு அதிகம். கருப்பு சீனி புலோட்டை மாலை தேநீர் வேளையின் போது என்றாவது அபூர்வமாக சமைப்பார். அக்கா அன்று வெள்ளை சீனி புலோட்தான் தயாரித்தார். துருவிய தேங்காய் பாலை சட்டியில் கொட்டி தேவையான அளவு சீனி சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிவரும்போது வெந்த புலோட்டை சேர்த்து கிண்ட வேண்டும். பாகு புலோட்டோடு கெட்டியவுடன் இறக்கி தட்டில் கொட்டி கேசரிபோல் சமப்படுத்தி ஆறவிட வேண்டும். ஆறியவுடன் துண்டு துண்டாக வெட்டி சாப்பிட வேண்டியதுதான்.

காலையில் ஆறுவதற்கெல்லாம் காத்திருக்க முடியாது. சுடச் சுட அள்ளி போட்டு உண்ண வேண்டியதுதான். சுடச் சுட உண்பதும் தனிச் சுவைதான். புலோட்டோடு ஒட்டி காயாமல் மினுமினுத்துக் கொண்டிருக்கும் சீனி சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். புலோட்டின் பிரச்னையே சீக்கிரமே செரிக்காததுதான். அதனால் செரிக்கும்வரை கொஞ்சம் மந்தமாக இருக்கும். அதனால் அம்மா புலோட்டை அதிகம் உண்ண அனுமதிக்க மாட்டார். நாமே ஆசைப்பட்டாலும் அதிகம் உண்ண முடியாது. கொஞ்சம் சாப்பிடவுடனேயே திகட்டத் தொடங்கிவிடும்.

பாகு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் பாகு கொதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தவர் ‘சிவப்பு புலோட் சாப்டிருக்கியா?’ என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அப்படி ஒரு பெயரை இதுவரை கேட்டது கூட இல்லை. அக்கா ஆக்கரக்காவிற்கு சேர்க்கும் சிவப்பு வண்ணத்தை கொதியில் கொஞ்சமாகத் தூவினார். பிறகு வெந்த புலோட்டை கொதியில் சேர்த்து கிண்டத் தொடங்கினார். சிவப்பு புலோட் எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆர்வம் எனக்குள் ஊற தொடங்கியது.

தயாரான சிவப்பு புலோட்டை அக்கா ஒரு தட்டில் கொட்டி சமன் படுத்தத் தொடங்கினார். சிவப்பு புலோட் பார்ப்பதற்கு ஈர்ப்பாக இருந்தது. நாக்கில் ஊறிய எச்சிலை யாருக்கும் தெரியாமல் விழுங்கிக் கொண்டேன். தட்டில் சமன்படுத்தியது போக மீந்ததை எனக்கும் தம்பிக்கும் கொஞ்சம் சுவைத்துப் பார்க்க மங்கில் போட்டுக் கொடுத்தார்.

அந்த சிவப்பு புலோட்டின் ருசி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதற்கு முன்போ அல்லது பின்போ அத்தகைய ருசிக் கொண்ட புலோட்டை நான் சாப்பிட்டதில்லை. நான் இப்படி சொல்வது உங்களுக்கு மிகையாகத் தோன்றலாம். ஆனால் மேலெழுதிய வாக்கியத்தை என் நெருங்கிய நண்பர்கள் படித்தால் நிச்சயம் அதிர்ச்சியடைவார்கள். பொதுவாக நான் அவ்வளவு சீக்கிரத்தில் எதையும் பாராட்டுவதில்லை. இந்த முப்பது வருடத்தில் பத்துக்கும் குறைவான முறைதான் ‘இது அற்புதமான உணவு’ என்று என் நாக்கு சான்றிதழ் வழங்கியிருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். (இதே புத்தி என்னுடைய வாசிப்பின் ருசிக்கும் ஒரு கட்டத்தில் கூடுப் பாய்ந்து கொண்டது. அபிப்பிராயம் என்ற பெயரில் நான் அடித்து துவைத்த நண்பர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவதுண்டு. இருந்தும் வேறு வழியில்லை. குறைந்தபட்சம் என் ருசி மீதாவது உண்மையாக இருக்க வேண்டுமென்பது என் விருப்பம். என் கருத்துகள் நண்பர்களை மிகவும் பாதிப்பதை உணரத் தொடங்கியபோது நான் மெளனம் சாதிக்கத் தொடங்கினேன்.)

இரண்டு துண்டு சாப்பிட்டாலே திகட்டிவிடும் புலோட்டில் கிட்டதட்ட பாதி தட்டை நானே காலி செய்து விட்டேன். பதமாக வெந்தும், அளவான சீனியோடும் கலந்த சிவப்பு வண்ணமும் வித்தியாசமான ருசியைத் தந்திருந்தது. ஒரு நல்ல படைப்பு ஏற்படுத்தும் வலுவமைதி அன்று என்னைச் சூழ்ந்திருந்ததை இப்போது உணர முடிகிறது. அதன் பிறகு நான் அக்காவோடு சண்டையிடும் தருணங்கள் பெரிதும் குறைந்து விட்டன. வெளியிடங்களில் சாப்பிட நேரும்போது எனது உணவு வெறியைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டேன். சிறுவர்களின் வலியை உணர இயலாத ‘எல்லாம் தெரிந்த’ பெரியவர்களோடு பேசுவதை குறைத்துக் கொண்டேன். மெளனமாக தங்கள் உலகை எவ்வித குறுக்கீடுகள் இல்லாமல் திறந்து வைத்துக் கொள்ளும் புத்தகங்களோடு உறவை ஏற்படுத்திக் கொண்டேன்.

அக்கா இன்று திருமணமாகி இரு குழந்தைக்களுக்கும் தாயாகி விட்டார். அவர் வீட்டிற்கு போகும்போதெல்லாம் குறைந்தது ஐந்தாறு உணவு பதார்தங்களோடுதான் சமைத்து வரவேற்கிறார். பெரும்பாலோரைப் போலத்தான் அவரும் சமைக்கிறார். காலம் அவரின் சமையலில் இருந்த பரிசோதனை மற்றும் ஆக்கத்திறன் இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துவிட்டிருந்தது. இடையில் சிவப்பு புலோட் சம்பந்தமாக கேட்டபோது அவரால் சரியாக நினைவுக் கூர இயலாதது பெரும் துக்கமாக இருந்தது. அவர் மறந்தால் என்ன? இன்னும் நாக்கின் ஒரு பகுதியில் பத்திரமாக இருக்கும் சிவப்பு புலோட்டின் ருசியை நான் நிச்சயம் மறக்கப் போவதில்லை. அன்பை மறப்பது அன்பன்று.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768