இதழ் 15
மார்ச் 2010
  பேயும் பயப்படும்
அ. ரெங்கசாமி
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

சிலாங்கூர் மாநிலம் கோலலங்காட் மாவட்டத்தில் ‘கம்போங் மெங்குவாங்’ என்று ஒரு கம்பம். ‘சங்காங் தோட்டம்’ என்று அழைக்கப்பட்ட ஒரு சீனரின் தோட்டம் அங்கே இருந்தது. தமிழ்ப்பாட்டாளிகள் அங்கே வாழ்ந்திருந்தனர். அவர்களின் குடியிருப்புக்களான லயத்துக் காடும் தீவுகள் போன்று அங்கே சிதறிக் கிடந்தன. லயத்துக் காட்டின் தெற்குப் பகுதியில் ஒரு முனியாண்டி கோயிலும் இருந்தது.

அடைக்கன் என்பவரும் அங்கே ஒரு பாட்டாளி இளைஞர் - ஒண்டிக்கட்டை. அங்கே எழுதப் படிக்கத் தெரிந்த ஒரே மனிதர் அவர்தான். ஓய்வு நேரத்தில் பாட்டாளிகளின் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும் இலவச ஆசிரியராகவும் தொண்டு செய்து வந்தார் அவர்.

முனியாண்டி கோயில்தான் அங்கே பள்ளிக் கூடமானது. இரவில் அடைக்கன் உறங்குவதும் அக்கோயிலில் தான். அந்தியில் அங்கே குழந்தைகளுக்குப் பாடம் நடக்கும். இரவு நேரத்தில் பெரியவர்களுக்கான கதா காலச் சேபம் நடக்கும்.

“வயிற்றில் பிறந்ததில்லை வன்கொடுமை செய்ததில்லை
குடலில் பிறந்ததில்லை குலக் கொடுமை செய்ததில்லை
அல்லி இலைமேலே ஆரணங்கு பெண் பிறந்தேன்.
ஏழு வயதினிலே எதுத்த வந்த நீன்முகனை
வெட்டித்தலை துணித்து வீரப்பட்டம் கட்டிக் கொண்டேன்.
அல்லி என்று பேரு சொன்னால் அழுத பிள்ளை வாய்மூடும்!”

தூங்கி வழிந்து கொண்டிருக்கும் சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தவாறு அம்மானை இசையில் இனிய குரலில் அல்லி ராணி கதையை இப்படி எடுப்பாகப் பாடுவார் அடைக்கன்.

நேரம் போவது தெரியாமல் திறந்த வாய்மூடாமல் மதுவுண்ட வண்டாக மயங்கிக் கிடப்பர் மக்கள்! அத்தோட்டத்து மக்களின் அன்றாட வாழ்க்கை இப்படித்தான் ஆனந்தமாய் ஓடிக் கொண்டிருந்தது.

அறிவியல் துறையில் மனிதன் என்னதான் உயர்ந்து கொண்டிருப்பினும் ‘பேய் பிசாசு’ என்ற நம்பிக்கையும் அச்சமும் அன்றும் இன்றும் மனிதனிடம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதும் உண்மைதானே!

அந்த நம்பிக்கையும் பயமும் சங்காங் தோட்ட மக்களையும் அச்சுறுத்தத் தான் செய்தன. லயத்துக் காட்டுக்கு அருகாமையில் ஆற்றங்கரையில் சுடுகாடு இருந்ததே அதற்குக் காரணம்!

சுடுகாடு என்றாலே அது பேய்களின் கூடாரம் என்பது மனித குளத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை அல்லவா! எனவே பொழுதுபட்டு ஆற்றங்கரைப் பக்கம். எவருமே தலைகாட்ட மாட்டார்கள் அத்தோட்டத்து மக்கள். அப்பாடத்தைச் சின்னஞ்சிறுசுகளுக்கும் நல்லாவே கற்றுக் கொடுத்திருந்தனர் அவர்கள்.

தோட்டத்துக் கங்காணியின் ஒரே மகள் சொக்கி. பெயருக்கேற்ற நல்ல அழகு. திருமணம் பருவத்தை அடைந்தவள். அன்றாடம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கமுள்ளவள். அவள் வரும்போதே மஞ்சள் மணம் கமகமக்கும். அவளிடம் அழகு இருந்தது. போன்று அசாத்திய துணிச்சலும் இருந்தது.

“ஏய் சொக்கி! உன்னைப் பார்த்தா மோகினி மாதிரியே இருக்கிறே! உன் மேலுலே மணக்குற மஞ்சள் நாத்தம் எங்களையே மயக்குது. நீ பகலுல கூட அந்த ஆத்துப் பக்கம் போயிடாதே! போனே, அந்த மோகினிப் பிசாசு நிச்சயம் பிடிச்சுக்கும்!” என்று ஊரே அவளைப் பயமுறுத்தி வைத்திருந்தது. ஆனாலும் சொக்கி அதுக்கெல்லாம் அஞ்சுவதில்லை. வழக்கம் போல் அந்தப் பக்கம் போய் வந்து கொண்டு தான் இருந்தாள் அவள்.

ஒரு நாள் அப்பனும் ஆத்தாளும் ஏதோ அவசர வேலையாய் வெளியூர் சென்றிருந்தனர். பொழுது மேற்கே ஆற்றில் இறங்கிக் கொண்டிருந்தது. மேய்ச்சலுக்குச் சென்றிருந்த ஆடுகளும் திரும்பி வந்து பட்டியில் ஏறிக் கொண்டிருந்தன. அனைத்து ஆடுகளும் வந்துவிட்டனவா என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள் சொக்கி.

ஒரு கால் ஊனமான நொண்டி ஆட்டைக் காணவில்லை. திடுக்கிட்டுப் போனாள் சொக்கி.

“ஐயையோ! பாவம்! நொண்டி ஆட்டைக் காணோமே! அப்பனும் ஆத்தாளும் வந்து வைவாகளே!” பதறிப்போன சொக்கி ஆற்றங்கரைப் பக்கம் ஓடினாள்.

“யாருடி அவள் கூறுகெட்டவள் மசண்டை நேரத்துலே ஆத்துப் பக்கம் ஓடுவது?” யாரோ அதட்டினார்கள். சொக்கி திரும்பிப் பாராமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. மே! மே! மே என கத்திக் கொண்டிருக்கின்ற நொண்டி ஆட்டை நெஞ்சோடு அணைத்தவாறு சொக்கி லயத்துக்குள் நுழைந்தாள்.

“பாவம்! நொண்டி ஆடு அல்லூருலே விழுந்துட்டு ஏற முடியாமல் கத்திக்கிட்டு கிடந்துச்சு. நான் போகலேன்னா என்ன ஆகியிருக்கும்” புன்னகை நெளிய ஆட்டை பட்டிக்குள் விட்டாள் சொக்கி.

பார்த்து நின்ற கூட்டம், பெற்றவங்க வந்ததும் சொக்கியைப் பற்றி வத்தி வைத்து விட்டது. அப்பனும் ஆத்தாளும் செம்மைப் பாட்டுக் கொடுத்தனர் சொக்கிக்கு.

“இப்ப நான் என்ன - கொலையா பண்ணிட்டேன். நாயைப் பேசுற மாதிரி ஏன் எல்லாரும் இப்படிப் பேசுறிய” கண்களைக் கசக்கிய சொக்கி, தட தட என்று படியில் ஏறி, மேக்கடைக்குள் புகுந்து கொண்டாள்.

அமாவாசை இருள்! இரவு ஏறிக் கொண்டிருந்தது. கோயிலில் புராணக் கதை. கேட்டிருந்த கூட்டமும் திரும்பி வந்து மேக்கடைக்குள் முடங்கிக் கொள்ள, ஊர் அடங்கிப் போனது.

நள்ளிரவு நேரம். எங்கோ சாமக்கோழி கூவியது. கங்காணி வீட்டின் மேக்கடைக்குள் என்னவோ சல சலப்பு!

வழக்கமாய் படுத்தால் விடிந்துதான் எழுந்திருப்பாள் சொக்கி. அந்த அகால நேரத்தில் எழுந்து சம்மணம் போட்டு ஒரு முனிவரைப் போன்று அமர்ந்து கண்கள் மூடிய நிலையில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஏதோ அரவம் தெரிந்தது கண்டு விழித்துக் கொண்ட கங்காணி, சட்டென்று சிம்னி விளக்கைப் பற்ற வைத்து மகளைப் பார்த்தார். அதிர்ந்து போன அவர் மெல்ல மனைவியையும் எழுப்பிவிட்டார். மகளின் நிலையைக் கண்டு ஆடிப்போன ஆத்தா, “ஆயி! உனக்கு என்னம்மா ஆச்சு?” கட்டியணைத்துக் கொண்டாள் பெற்றவள்.

“அடி பாவி! என் தவத்தைக் கலைச்சுட்டியே!” சினம் கொண்ட முரட்டுக்காளை போன்று பெற்றவளை உதறிவிட்டாள் சொக்கி.

தடுமாறிப் போன ஆத்தாள் அரண்டு போனாள்.

“ஆயி! என்னம்மா பண்ணுது? ஏன் இப்படிப் பேசுறே?” கண்ணீர் வந்துவிட்டது கங்காணிக்கு.

“டேய் யாருடா நீ? நான் யாரு தெரியுமா உனக்கு” சொக்கி அலறினாள்.

சொக்கி, அங்கே தன் மகளாக இல்லை என்பதைப் புரிந்து கொண்ட கங்காணி. “நீ யாரு தாயி?” அமைதியாய்க் கேட்டார்.

“ஒயிலாட்டக்காரன் ஓடாவி நான் தாண்டா!”

“நீ ஏன்ப்பா இங்கே வந்தே?”

“நானா வரலைடா. மஞ்சள் வாசம் என்னை இழுத்து வந்துடுச்சுடா”

“ஏன்ப்பா அறியாப் பொண்ணு. உன்னைக் கும்புடுறேன். என் புள்ளையை விட்டிட்டுப் போயிடு சாமி.” கும்பிட்டார் கங்காணி.

“போகமாட்டேண்டா! போகமாட்டேன்! பயங்கரமாய்ச் சிரித்தாள் சொக்கி.

“அப்பா! இப்ப உனக்கு என்ன தான் வேணும்?” கெஞ்சினார் கங்காணி.

“சலங்கை வேணுண்டா!”

“இப்ப நான் ஆடப்போறேண்டா”

தன்னனானே! தன தன்னனானே
தன்னானே தானதன்னா தன்னனானே!

மேக்கடை கிடுகிடுக்க எழுந்து ஆடத்தொடங்கிவிட்டாள் சொக்கி.

லயத்துக் காடே அகாலமாய் விழித்துக் கொண்டது. கோயிலுக்குள் படுத்திருந்த அடைக்கனும் அங்கே வந்துவிட்டார்.

நள்ளிரவில் தொடங்கிய ஆட்டம் விடிந்தும் தொடர்ந்து கொண்டிருந்தது. தோட்டத்து மக்கள் எவருமே வேலைக்குச் செல்லவில்லை.

கங்காணி மகளுக்குப் பேய் பிடிச்சிட்ட செய்தி அக்கம் பக்கம் ஊர்களுக்கும் பரவி விட்டது. மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டிருக்க சங்காங் தோட்டமே சோகத்தில் மூழ்கிப் போனது.

பேயோட்டும் உள்ளூர் வெளியூர் மந்திரவாதிகளும் உடுக்கடிக்கும் பூசாரிகளும் மற்றும் மலாய்ப் போமோக்களும் அங்கே முகாமிட்டிருந்தனர். பேயை ஓட்டும் முயற்சியில் அவர்கள் இரவு பகலாய்ப் பேயுடன் போராடிக் கொண்டிருந்தனர். ஆனாலும் பேய் போனபாடில்லை!

நீண்ட கூந்தல் விரிந்தாட சுழன்று சுழன்று ஆடினாள் சொக்கி. பூசாரியின் உடுக்கையைப் பிடுங்கி, தாளம் தப்பாமல் அடித்துக் கொண்டே ஆடினாள். இப்படி அவளின் ஆட்டம் இரண்டு பகல் இரவு தொடர்ந்து கொண்டிருந்தது. அப்பனும் ஆத்தாளும் அங்கே உயிருடன் செத்துக் கொண்டிருக்க ஊரே கண்ணீர் வடித்தது. பேயோட்ட வந்தவர்கள் செய்வது அறியாமல் கையைப் பிசைந்து நின்றனர்!

இட நெருக்கடியின் காரணமாய் மேக்கடையில் இருந்து கீக்கடைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த சொக்கி, தனது ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

மூன்றாவது இரவும் வந்தது. உடுக்கைச் சத்தமும் பூசாரிகளின் ஆரவாரமும் இரவை உலுக்கின. இத்தனை நாளும் ஊர்மக்களும் உறங்கவில்லை. தனித்து கோயிலில் படுத்திருந்த அடைக்கனுக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பேயின் செயல் அவரின் நெஞ்சில் பெருஞ்சினத்தை மூட்டியிருக்க வேண்டும்.

சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்த அடைக்கன் இடுப்பு வேட்டியை வரிந்து கட்டினார். துண்டை உதறி தலையில் சுற்றினார். அங்கிருந்து கீக்கடைக்கு அம்பெனப் பாய்ந்தார் அவர்.

அவரின் வேகத்தைக் கண்டு அரண்டுபோன கூட்டம் ஒதுங்கி வழிவிட்டது. நூந்து கிடந்த அடுப்பில் இருந்து ஒரு பிடி சாம்பலை அள்ளிக் கொண்ட அடைக்கன், கொஞ்சமும் அஞ்சாமல் டேய் என்ற ஒரு பயங்கர அதட்டலுடன் ஆடிக் கொண்டிருந்த பேயின் முன்பு வீரவாகு போன்று நின்றிருந்தார்.

சட்டென்று பேயின் ஆட்டம் நின்றது. கையில் இருந்த உடுக்கை நழுவி, கீழே விழுந்தது. எதிரே கிங்கிமன் போல் நின்ற அடைக்கானை உற்றுப்பார்த்த அதன் பார்வையில் மிரட்சி தெரிந்தது.

சுற்றி நின்றிருந்த அத்தனை கண்களும் அவர்கள் மீது குத்திட்டு நின்றன.

“யாரப்பா நீ?” பேய் கேட்டது. அந்தக் குரலில் நடுக்கம் தெரிந்தது.

உன்னை ஓட்ட வந்த உங்கப்பன். இப்பக் கிளம்பப் போறியா? இல்லை நான் யாருன்னு காட்டணுமா?

“ரொம்ப அதட்டாதேப்பா! இன்னும் ரெண்டு நாளுலே போயிடுறேன்ப்பா!” கெஞ்சியது பேய்.

“என்னடா சொன்னே! இன்னும் ரெண்டு நாளா வேணும். இப்ப- இப்பவே கிளம்பணும்” சாம்பலைப் பிடித்திருந்த கையால் படீரென்று சொக்கியின் தலையில் ஓங்கி அடித்து விட்டான் அடைக்கன்.

“சொக்கியின் மண்டை உடைந்து போயிருக்குமோ” என்ற அச்சத்தில் கூட்டம் அடங்கிப் போய் நின்றது சட்டென்று எழுந்து நின்றாள் சொக்கி. அவளின் உடல் நடுங்கியது.

“சாமி! ஏதாவது தந்தியனா போயிடுவேன்”

“என்ன கேட்கிறே?” நெருப்புத் துண்டங்களாய் வந்தது அடைக்கனின் வார்த்தைகள்.

“பெருசா ஏதாவது கொடுங்க”

“இந்தா- இது தான் ரொம்பப் பெரிசு. கெட்டியாய் பிடிச்சுக்கோ” கைவாகாய்க் கிடந்த அம்மிக்கல்லைத் தூக்கி சொக்கியின் தலையில் வைத்தார் அடைக்கன்.
மிரண்டு போன பேய் திகைத்து நின்றது.

“..........ம் அப்புறம் என்ன வேடிக்கை! இதோ பாதை! ஓடு........ திரும்பிப் பார்க்காமல் ஓடு! இல்லை” கையை மீண்டும் ஓங்கினார் அடைக்கன்.

மூன்று நாட்களாய்ப் பட்டினி கிடந்த சொக்கி, கல்லைச் சுமந்தபடி இருளில் ஓடினாள்- இல்லை பறந்தாள். அவளைத் தொடர்ந்து பந்தங்களோடு ஆண்கள் அனைவரும் ஓடினர்.

ஆற்றங்கரையில் தென்னை மரம் ஒன்றை முட்டியபடி நின்றாள் சொக்கி. வெட்டுக்கத்தி வைத்திருந்த ஒருவர் சொக்கியின் கூந்தலில் ஒரு பகுதியை மரத்தோடு அணைத்து ‘சதக்’ என்று வெட்டினார்.

தலையில் இருந்த கல் ஒரு பக்கம் விழ, இன்னொரு பக்கமாய் கொம்பற்ற கொடி போலச் சரிந்தாள் சொக்கி.

மகளை வாரி தோளில் போட்டுக் கொண்ட கங்காணி காற்றெனப் பறந்து வீட்டை அடைந்தார். மகளைப் பரஞ்சாவில் கிடத்தினார். பச்சைத் தண்ணீரை படீர் என்று சொக்கியின் முகத்தில் அடித்தார். பட்டென்று கண்விழித்துக் கொண்டாள் சொக்கி.

நடந்தவை அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். “ஆத்தா பசிக்குது. கொஞ்சம் கஞ்சி தர்றிங்களா?” சொக்கி பேசினாள்.

மூன்று நாளாய் உறக்கம் கெட்ட கூட்டம். மெல்லக் கலையத் தொடங்கியது. வந்திருந்த வைத்தியர்களும் விடைபெற்றுக் கொண்டனர் என்றாலும் எல்லோர் மனத்திலும் புரியாத ஒரு கேள்விக்குறியாக நின்று ஆசிரியர் அடைக்கன் அவர்களைக் குழுப்பிக் கொண்டிருந்தார் என்பதும் உண்மைதான். இந்தக் கேள்வி கங்காணிக்கும் எழத்தான் செய்தது.

“வாத்தியரய்யா! இம்புட்டு விசயம் கத்திருக்கிற நீங்க- ஏன் சாமி என் மகளை இப்படி மூணு நாளா ஆட விட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்திங்க?” கேட்டே விட்டார் கங்காணி.

“நீங்க நினைக்கிற மாதிரி, சத்தியமா நான் மந்திரம மாயம், படிச்சவன் இல்லை. கங்காணி மூணு நாளா அது பண்ணுன தொல்லை தாங்க முடியாமல் தான், ஆத்திரம் தாங்காமல் சும்மா மிரட்டிப் பார்த்தேன். அதென்னடானு இவ்வளவு சுலபமா ஓடிப் போயிடுச்சு!

பேயும் பயப்படும்ன்னு இப்பத்தான் நானும் தெரிஞ்சுக்கிட்டேன் கங்காணி!” அடைக்கன் சிரித்தார்.

கேட்டிருந்தவர்களும் ‘கொல்’ என சிரித்து விட்டனர்.

குறிப்பு:
இது ஒரு உண்மை சம்பவம்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768