இதழ் 15
மார்ச் 2010
  தொடர் : எனது நங்கூரங்கள் ...8
விபச்சாரத்தின் அழகும் சிவப்பு
இளைய அப்துல்லாஹ்
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

எனது முகத்தின் இருபக்கங்களும் லேசாக கறுப்பு படர்ந்து வந்தது. மனிசி சொன்னா “உந்தக் கறுப்பை இல்லாமல் ஆக்குங்கோவன் இப்பத்தான் ஆயிரத் தெட்டு கிறீம்கள் இருக்குதானே” என்று.

அது சரியென்றும் எனக்குப் பட்டது. இங்குள்ள மருந்துக் கடைகளில் பிரபல்யமான ‘பூட்ஸ்’ கடைக்கு போய் அங்கு நின்ற அழகான பெண்ணிடம் என்னுடைய முகத்தை காட்டிய போது அவ ஒரு கிறீமை எடுத்துத் தந்தா. அதில் எழுதப்பட்டிருந்த வாசகம் “நீங்கள் பாவிக்கத் தொடங்கும் முதல் நாளில் இருந்தே செயல்பட ஆரம்பிக்கும்”. உண்மைதான் நான் அலுவலகத்துக்கு போகும் பொழுது அங்குள்ள பெண் பிள்ளைகள் கேட்டார்கள் “என்ன வர வர அழகாகுது முகம்” என்று.

நான் ஒரு நமட்டுச் சிரிப்புடன் “ஓம் ஓம்” என்றேன். அவர்களுக்கு கிறீமின் கைங்கரியம் பற்றி சொல்லவேயில்லை.

எல்லாவற்றிலும் வெள்ளை அழகில் மயங்குவது பொதுவாகவே ஆசியாப் பக்கத்தில் இருக்கிறது. சிலோனில் திருகோணமலையில் இருக்கும் போது வெள்ளைக் கரர்களுக்கு பின்னால் பிள்ளைகள் ஓடி ஓடிப் போவார்கள். ஏனெனில் வெள்ளை அழகு அவர்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

நாங்கள் கறுப்பாய் இருக்கிறோம் அதனால் வெள்ளை அழகை கண்டு வியந்து போகிறோம்.

மாத்தளையில் பாமஸி ஒன்றில் நான் வேலை செய்த போது எங்கள் கடைக்கு ஒரு வெள்ளாக்காரர் கிழமைக்கு இரண்டு தரம் சாமான்கள் வாங்க வருவார். அவரின் மனைவியின் தலைமுடி பொன்னிறமாக அழகாக இருக்கும். அந்த வெள்ளைக் காரரை கண்டால் எனது முதலாளி எழும்பி நின்றுதான் கதைப்பார் சாமான் கொடுப்பார்.

எத்தனை கறுப்பான எங்கள் ஆட்கள் வந்தாலும் எழும்ப மாட்டார். கதிரையில் வைத்து கயிற்றினால் கட்டி விட்டவர் போல இருப்பார். ஆனால் வெள்ளைத் தோலுக்கான மரியாதை அது. எழுந்து நிற்பது.

மகனையோ மகளையோ வைத்திருக்கும் எங்களுடைய தமிழ் ஆட்கள் கலியாண விளம்பரம் போடும் பொழுது இரண்டு விடயத்தில் மிகக் கவனமாக இருப்பார்கள். ஒன்று சாதி. மற்றது சிவந்த நிறமுள்ள ஆம்பிளையோ பொம்பிளையோ தேவை என்பது கட்டாயமாக அந்த விளம்பரத்தில் இருக்கும்.

அந்த அளவுக்கு சிவந்த நிறம் எங்கள் மூளைகளுக்குள் புகுந்து சன்னதம் ஆடுகிறது.

இப்பொழுது கறுப்பாக பிறந்துவிட்ட ஆண்களும் பெண்களும் தங்களை சிவப்பு நிறமாக்குவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

விளம்பரக் கம்பனிகளும் இந்த மனிதர்களின் மனநிலையை புரிந்து கொண்டு முகத்துக்கு பூசும் கிறீம்களுக்கு போடும் விளம்பரங்ளிலும் சிவப்பாகும் தோலின் அளவை அளப்பதற்கு அடிமட்டம் கூட வைத்து விடுகின்றன.

அதுமட்டுமல்ல ஒரு மனிதனின் மனதை எவ்வளவு தூரம் அவை ஊடறுத்து நாசம் செய்கின்றன என்றால்.

மேக்கப் இல்லாத ஒரு பெண்ணின் முகத்தைக் காட்டி விட்டு அது பார்க்க செழிப்பில்லாமல் இருக்கும் போது தன்னம்பிக்கை இல்லாத பெண்ணாக அவள் சோர்ந்து போய் இருப்பதாக விளம்பரங்களில் சொல்வது பெரும் அபத்தம்.

பின்னர் அந்த கிறீமை பூசிவிட்டு அவள் சிவப்பாகி வந்தவுடன் அந்தப் பெண்ணுக்கு தன்னம்பிக்கை வந்து விட்டதாக காட்டுவது கண்டிக்கத்தக்கது.

ஏனெனில் கறுப்பான அல்லது பொது நிறமான பெண் தன்னம்பிக்கை அற்றவளா? அல்லது அந்தக் கிறீமை பூசி விட்டு தோல், இரசாயனத்தால் சிவந்து போனவள் தன்னம்பிக்கை உடையவளா? இவ்வாறான பெண்களை கேலி செய்யும் விளம்பரங்கள் உளவியல் ரீதியில் பெண்களை பெரும் பலவீனமாக்குகின்றன.

அந்த கிறீமை நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கிப் பூசத் திராணியற்ற கிராமத்து கறுப்பு நிறமான பெண் தன்னம்பிக்கையற்றவளா?

இவ்வாறான முட்டாள் தனமான விளம்பரங்கள் மூலம் பெண்களை இழிவு படுத்துகின்ற போக்கை பெண்ணுரிமை அமைப்புகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனை. அந்த விளம்பரங்களில் நடிகைகளும் நடிகர்களும் நடித்து இலட்சக்கணக்கான பணத்தை சம்பளமாக எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் அவர்களைப் பார்க்கும் அவர்களின் ரசிகன், ரசிகை தன்னைச் சிவப்பாக்குவதற்கு அல்லது அவர்களைப் போல் ஆகுவதற்கு படாத பாடு படுகிறான். தனது சேமிப்பு எல்லாவற்றையும் கொட்டி அழுகிறான் / அழுகிறாள்.

இங்கே ஐரோப்பிய நாடுகளில் விபச்சார விடுதிகள் லைசன்ஸ் எடுத்து இயங்கி வருகின்றன. லண்டன், பாரிஸ், பிரங்போட், அம்ஸடம் என்று எல்லா இடங்களிலும் அதனை சட்டபூர்வமான ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறார்கள்.

அந்த தொழிலில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமாக அதன் முதலாளிகள் தேடுவது சிவந்த நிறம் தான். அது மட்டுமல்ல அம்ஸரடம், டென்ஹாக் போன்ற இடங்களில் இருக்கும் விபச்சாரிகளின் பஸாரில் இருக்கும் சௌகரியம் என்ன வெனில் அவர்கள் எல்லோரும் கண்ணாடிப் பெட்டிகளில் அமர்ந்திருப்பார்கள்.

ஹொலன்டின் டென்ஹாக்கில் நேரே பார்த்திருக்கிறேன் நான். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்ணை கண்ணாடிப் பெட்டிகளுக்குள்ளால் தேடி தெரிவு செய்யலாம்.

வீதி நெடுக ஷோ கேஸுக்குள் உட்கார்ந்திருக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். எல்லோருமே வெள்ளை நிறமுள்ளவர்கள்தான்.

அதுமட்டுமல்ல கஸ்டமர்களை வரவேற்கவும் வெள்ளை நிறமுள்ள பெண்கள் தான் வைக்கப்படுகிறார்கள்.

ஏன் எங்களுடைய கல்யாண வீடு சாமத்திய வீடுகளிலும் வரவேற்பதற்கு வெள்ளை நிற முள்ள பெண்களைத் தான் தேடுகிறார்கள்.

கலியாணம் முடிக்கும் எமது ஆண்களும் வெள்ளை நிறமான வயிறு இல்லாத பெண் பிள்ளைகளைத் தான் தேடுகிறார்கள்.

அப்போ நிறம் குறைந்த எங்கள் குமரிகள் என்ன செய்வது? அவர்கள் எல்லோரையும் வெள்ளையாக்க முடியுமா உங்களால்?
உலகம் முழுக்க ஏன் வெள்ளை நிறத்தை வாஞ்சிக்கின்றன. அது என்ன? ஏன்?

எமது கிராமங்களில் இருக்கும் முகச் செந்தளிப்பான பெண்கள் எவ்வளவு அழகாக இருப்பார்கள். ஒரு முறை பச்சைத் தண்ணீரினால் முகத்தைக் கழுவிவிட்டால் அவர்களின் பொலிவு எப்படி இருக்கும். மஞ்சள் பூசி, கடலை மா பூசி, தயிர் ஆடை பூசி முகத்தை செழிப்பாக வைத்திருக்கும் கிராமத்து அழகு எவ்வளவு ரம்யமானது.

நகர்ப்புறங்களில் “வாருங்கள் சிவப்பாக்குகிறோம்” என்று போட் போட்டு வைத்திருக்கும் கடைகள் எல்லாம் உண்மையில் சிவப்பாக்குகின்றனவா?

இங்கு லண்டனில் எனக்குத் தெரிந்த பெண்மணி தனது கறுப்பு தோலை வெள்ளையாக்க ஒரு கடைக்கு போய் அளவுக்கு அதிகமாக பிளீச்சிங் பண்ணி முகம் இப்பொழுது உலகத்தில் இல்லாத ஒரு கலருக்கு வந்துவிட்டது. பிறவுணும் வெள்ளையும் கறுப்பும் கலந்த ஒரு கலர். மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். எல்லாம் வளர்ந்த பிள்ளைகள். புருஷனுக்கு அந்தக் கலர் பிடிக்கவில்லை. தினமும் வீட்டில் மனிசியைக் காணும் போதேல்லாம் சண்டைதான். ஏற்கெனவே இருந்து கறுப்பு கலரில் மனிசியின் முகம் அழகாகவே இருந்தது. ஆனால் கலரை மாற்றி விட்டதன் பிறகு முகம் அலங்கோலம் ஆகிவிட்டது. பிள்ளைகளுக்கும் அந்த புதிய முகம் பிடிக்கவில்லை. அம்மாவுக்கு முகத்தை மாற்றிவிட்ட கவலை. வீட்டில் ஒரே எரிச்சல் படுகிறவர்களுக்கு மத்தியில் இருக்க வேண்டிய நிலை. எல்லோரும் ஒவ்வொரு பக்கத்துக்கு இறுக்கமாக இருக்க, அவலுக்கு யோசித்து யோசித்து மனம் பாதிக்கப்பட்டு இப்பொழுது அவ கவுன்ஸிலிங் போகிறா. இருந்ததை இல்லாமலாக்கியதன் விளைவுஅது.

இப்பொழுது பெண் பிள்ளைகள் அதிகமாக பியூட்டி பாலர்களில் முகத்தை வெள்ளையாக்குவதற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.

அழகாக இருப்பது என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது ஆனால் அதனைப் பற்றியே யோசித்து யோசித்து மன நோய் வருவது என்பது அபத்தம்.

இப்பொழுது பிஸினஸ் மார்க்கட்டை அள்ளுவதற்காக ஆண்களுக்கான வெள்ளை நிற கிறீம் பெண்களுக்கான வெள்ளை அழகு கிறீம் என்று வியாபாரிகள் கடைகளை பெரிதாக்க பெரிதாக்க நோயாளர்கள்தான் அதிகமாகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி யாரோ சொன்னார்கள் என்பதற்காக மீடியம் சைஸில் இருந்த மார்பகத்தை பெரிய சைஸாக மாற்றுவதற்கு அறுவைச் சிகிச்சை செய்தா. இப்பொழுது அவளின் ஒரு மார்பகத்தை முற்றாக அகற்ற வேண்டிய அளவுக்கு நோய் வந்து விட்டது. மார்பக அழகு அறுவைச் சிகிச்சை செய்து அதற்குள் சிலிக்கன் உருண்டைகளை வைத்து பெரிதாக காட்டுவதுதான் இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஸ்டைல்.

ஆனால் சும்மா கிடந்த மார்பகத்தை பெரிதாக்கப் போய் இப்பொழுது புண்ணாகி சீழ் வடியும் நிலைக்கு கொண்டு போய் விட்டு விட்டது அதன் விபரீதம்.

லேசர் சிகிச்சையின் மூலமும் தோலை சிவப்பாக்கும் முயற்சிகள் இப்பொழுது பல இடங்களில் வந்து விட்டன. அது தோல் புற்று நோய் வரை போய்விடும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.

உண்மையில் இயற்கை அழகு எவ்வளவு நல்லது. முகம் அழகாக இருப்பதே நிறைவு தான். கறுப்பை சிவப்பாக்கும் அவசரம் என்ன வந்தது.

உலகத்தில் உள்ள கெமிக்கல்களை எல்லாம் முகத்தில் பூசி அதனை அலங்கோலமாக்கி விட்டு அலைபவர்கள் பலரை எனக்குத் தெரியும்.

தன்னம்பிக்கை என்பது மனதோடு கூடிய விடயம். முகத்தை பிரவுண் ஆக்குவது, தலையை பிரவுண் ஆக்குவது, மார்பகங்களை பெரிதாக்குவது என்று பெண்கள் கொஸ்மட்டிக் சிகிச்சைகளின் பக்கம் போகிறார்கள்.

ஆகவும் வெள்ளைக்காரர்களை விட ஆசிய நாட்டுப் பெண்கள் தான் இந்த விடயங்களில் அதிகம். யாரோ நடிகை எப்போதோ மூக்கை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்து கொண்டா; என்பதற்காக எமது பெண்கள் இப்பவும் மூக்கை சரி செய்வதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

கொஸ்மட்டிக் சிகிச்சையினால் சீரழிந்து போனவர்கள் ஆயிரக்கணகானவர்கள் இருக்கிறார்கள். யு ரியூப் இல் போய் பாருங்கள் வீடியோவாகவே கிடைக்கும்.

உண்மையில் இயற்கை அழகுக்கு நிகர் உலகத்தில் என்ன இருக்கிறது.

பெண்களே! ஆண்களே! எமக்குரிய நிறமே மரியாதைக் குரியது. வெள்ளை நிறம் குளிர்ப்பிரதேச மக்களுக்குரியது. ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு நிறத்தை இயற்கை கொடையாக வழங்கியிருக்கிறது.

ஒன்று தெரியுமா? வெள்ளைக்காரப் பெண்கள் கறுப்பு நிற ஆண்களைத்தான் விரும்புகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் அதுதான் இப்பொழுது ஸ்டைல். வெள்ளையும் கறுப்பும் சேர்ந்த பொன்னிறமான குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்கின்றன. அந்தக் குழந்தைகளின் முடி கறுப்பாக இருக்கும். இது ஒரு புதிய கலப்பின சமூகமாக இப்பொழுது இங்கு வளருகிறது. காலம் மாறிப் போச்சுது. எங்கள் கறுப்பு நிறத்தை நாங்கள் போற்றுவோம் கறுப்பு வாழ்க!

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768