இதழ் 15
மார்ச் 2010
  ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

சோம்பிக் கிடந்த வீட்டின் மூன்றாவது மாடியில் நூலகத்தை அமைத்தவுடன் சட்டென அப்பிரதேசம் முழுதும் உயிர் வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. ஒரு நாளில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தனித்திருப்பது கசகசப்பான மனதின் தன்மையைக் கொஞ்சமாவது அமைதி செய்ய உதவுகிறது.

வீட்டின் மூன்றாவது மாடி விசேஷத் தன்மைகளைக் கொண்டது. மிக நெருக்கி குறுகலாக இருக்கும் அதன் படிக்கட்டுகளில் கால் பதித்து ஏற தனித்திறன் வேண்டும். அவ்வறைக்குப் பக்கத்தில் இருக்கும் மற்றுமொரு இருண்ட அறையும் அதை அடைத்து நிற்கும் பொருட்களும் வீட்டிற்கு அவ்வப்போது வரும் சிறுவர்கள் அங்கே சென்று விளையாடுவதைத் தடுக்கும் விதமாக பயமுறுத்தும்.

திருமணத்திற்கு முன் நான் நூலகம் அமைப்பது பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. திருமணம் நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் நிலையானதால் படுக்கையறையில் தனிமை குறித்தும் மௌனம் குறித்தும் ஏங்குவது அனாவசியம். வாசிப்புக்காக மட்டுமின்றி இடையூரற்ற தனிமைக்காகவும் நான் அவ்வறையைத் தயார் படுத்தியிருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு வார உழைப்பில் இந்த நூலகத்தின் வேலை நிறைவடைந்திருந்தது. நூலகம் தந்த களைப்புத் தீரும் முன்பே ஒரு மெல்லிய அச்சமும் என்னைப் பற்றிக் கொண்டிருந்தது.

பொதுவாகவே நான் எதை விரும்பி செய்தாலும் அல்லது ஆசைப்பட்டாலும் அவ்வாசை நிறைவேறும் தருணம் இது போன்ற பயமே முதலில் என்னை வந்தடைகிறது. சொற்பமாக என்னிடம் உள்ள வார்த்தைகளால் அதை பயம் என்கிறேனே தவிர அவ்வுணர்வுக்கு அறுதியிட்ட வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சம் நீட்டி சொன்னால், நான் விரும்பி பெற்ற அது இன்னொரு சந்தர்ப்பத்தில் எந்த அதிருப்தியும் தெரிவிக்காமலும் தனது இருப்பைக் காட்டாமலும் என் நினைவிலிருந்து விலகிச்செல்லும் தருணம் குறித்தான ஆச்சரிய உணர்வு எனலாம்.

0 0 0

இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தவுடனேயே நான் என் அப்பாவிடம் கேட்டது மௌன்ட்டன் (Mountain) ரக மிதிவண்டியைத்தான். நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதும் இதே போல பி.எம்.எக்ஸ். (BMX) ரக மிதிவண்டியைத் தொடர்ந்து பிடிவாதமாகக் கேட்ட நினைவுண்டு. பி.எம்.எக்ஸ். ரக மிதிவண்டியை அப்பா வாங்கித்தர தவிர்த்தது போலவே மூன்று வருடங்கள் மௌட்டன் ரக சைக்கிளையும் வாங்கித்தர மறுத்தவர், எனது பதினாறாம் வயது பிறந்த நாளின் போது பரிசாக மௌட்டன் சைக்கிளை வாங்கிக்கொடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். (இங்கு எனது பிறந்த நாள் ஜுலை மாத இறுதி என்பதை நினைவில் கொள்ளவும்)

புதிய மிதிவண்டி கிடைத்தவுடன் புதிதாக ஏதோ ஓர் உறுப்பு உடலில் முளைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. கம்பம் முழுதும் புதிய சைக்கிளில் சுற்றி திரிந்தேன். மௌட்டன் சைக்கிளில் கியர் இருக்கும். கியரின் தன்மையைத் தெரிந்து கொள்ளவும் அதை முறையாகச் செலுத்தவுமே எனக்குச் சில நாட்கள் தேவைப்பட்டது. இளச் சாம்பல் நிறத்தில் இருந்த என் சைக்கிள் இதர நண்பர்கள் வைத்திருந்ததைவிட சற்றே வித்தியாசமாய் இருந்தது. வாங்கிப் பல நாட்கள் ஆகியும் சைக்கிளைச் சுற்றியிருந்த நெகிழிகளைப் பிரிக்காதது பற்றி நண்பர்கள் சிலர் கேலிச் செய்த வண்ணமே இருந்தனர். நான் அது குறித்தெல்லாம் கவலைக்கொள்ளாமல் செம்மண் சாலைச் சூழ்ந்த எங்கள் கம்பத்துத் தூசு அதில் படியாமல் பாதுகாத்தேன்.

அது செப்டம்பர் மாதம். அவ்வருடத்தில் தீபாவளி அக்டோபர் மாதமே வர இருந்தது. எனவே நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பத் தபால் தலை வாங்குவதற்காக தபால் நிலையம் சென்றேன். உள்ளே அதிகமான ஆட்கள் இல்லை. எனக்கு முன் நின்றவர்களில் ஒரு மலாய் சிறுவன் வினோதமாகத் தெரிந்தான். ஏதோ ஒரு மலாய் பாடலை சத்தம் போட்டு பாடியப் படி இருந்தான். தலை மயிர் செம்பட்டை நிறத்தில் இருந்தது. அவனைப் பார்த்தவுடனேயே மனதில் ஏதோ சங்கடம் பிறந்தது. சட்டென வெளியில் எட்டிப் பார்த்தேன். எனது சைக்கிள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. ஓடிச்சென்று பூட்டி வைத்துவிட்டு வரலாமா என யோசித்து முடிப்பதற்குள் என் முறை வர தபால்தலை வாங்கச் சென்றுவிட்டேன். காரணமே இல்லாமல் மனம் பரபரத்தது. ஏதோ நடக்கப்போவதை மனம் தீர்க்கமாக நம்பியது. தபால்தலை வாங்கிவிட்டு வெளியில் ஓடினேன். நினைத்தப் படியே மிதிவண்டியைக் காணவில்லை.

மீண்டும் உள்ளே நுழைந்து தபால் நிலைய பணியாளரிடம் முன்பு வந்திருந்த சிறுவனின் முகவரி கேட்டேன். காரணம் கேட்டவரிடம் அவன்தான் என் மிதிவண்டியைத் திருடினான் என உறுதியாகச் சொன்னேன். என்னை ஏற இறங்கப் பார்த்த ஊழியர் ‘தெரியாது’ எனக் கூறிவிட்டார். கண்கள் பனிந்தன. மூன்று வருடம் ஓயாமல் கேட்டுப் பெற்ற மிதிவண்டி மூன்றே மாதத்தில் பறிபோனதை நினைத்து அழுதேன். ஒரு ஜடப்பொருள் எனும் அடையாளத்தைக் கடந்து மிக நெருங்கிய உறவு அந்தச் சைக்கிளோடு எனக்கு ஏற்பட்டிருந்தது. முப்புறங்களிலும் விரிந்து சென்ற சாலையில் எதில் பயணித்து என் சைக்கிளைத் தேடுவதென தெரியவில்லை. அந்தச் சிறுவன் நிச்சயம் கம்பத்து வாசியாக இருக்க வேண்டும் எனத் தோன்றவே மலாய் கம்பங்களை நோக்கி பயணித்தேன். மலாய் கம்பங்களில் அக்காலக் கட்டத்தில் நுழைவது எளிதானதன்று. நமக்கு அங்கு யாராவது நண்பர்கள் இருக்க வேண்டும். அவர்கள் கண்களுக்கு நாம் அந்நியர்களாகவும் சந்தேகத்துக்குரியவர்களாகவும் இருந்தால் சுற்றி வளைத்து துவசம் செய்து விடுவார்கள். இது குறித்தெல்லாம் யோசிக்க எனக்கு அப்போது அவகாசம் இல்லை. எனது மிதிவண்டி அக்குவேறாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படும் முன்பு அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையே அதிகரித்தது.

சுற்றியிருந்த கம்பங்களுக்குள் நுழைந்து தேடியும் கண்களுக்கு ஒன்றும் அகப்படவில்லை. ஆங்காங்கே ‘ஓய் பறையா’ எனும் மலாய் இளைஞர்களின் கேலிக்குரல் மட்டும் கேட்டது. பெருத்த ஏமாற்றத்தோடு திருட்டு மிதிவண்டிகளை வாங்கும் சில மிதிவண்டி கடைகளில் எனது சாம்பல் நிற மிதிவண்டியைத் தேடி அலைந்தேன். இப்படி ஒரு வாரத்திற்கும் மேலாக என் தேடுதல் தொடர்ந்ததே தவிர சைக்கிள் கிடைத்தப்பாடில்லை.

முதலில் மிதிவண்டியைத் தொலைத்ததால் என்னை வீட்டில் கடிந்து கொண்டாலும் பின்னர் என் வேதனையை அறிந்து அப்பா தீபாவளிக்கு (அக்டோப‌ர்) மற்றுமொரு மௌட்டன் ரக சைக்கிளை வாங்கி கொடுத்தார். மீண்டும் எனக்குச் சிறகுகள் முளைத்தன.

மூன்று மாத‌த்திற்குப் பின், படிநிலை நான்கு சென்ற போது வீட்டில் சும்மா கிடந்த அப்பாவின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்த நான் அனுமதிக்கப்பட்டேன் (அப்பா அப்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்தார்). பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களிலேயே மோட்டார் சைக்கிளை எனது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கினேன். அதன் இருக்கையை வெட்டி வடிவத்தை மாற்றியமைப்பது தொடங்கி அதிக சத்தமிடும் எக்சோஸ் பொருத்துவது வரை மோட்டாரின் ஒவ்வொரு பாகத்தையும் எனக்காகவே வடிவமைத்தேன். ஏறக்குறைய ஆறு மாதங்கள் உருண்டப் பின்னர் ஒரு நாள் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது மோட்டாரின் சக்கரம் காற்றிழந்திருந்தது. என்னசெய்வதென தெரியாமல் விழித்தப்போது அம்மா சைக்கிளை நினைவுப் படுத்தினார்.

நான் ஒரு நிமிடம் நிலைக்குலைந்தேன். ஆறு மாதங்களாக சைக்கிள் என் நினைவிலிருந்து விலகிச்சென்றதையும் அதன் இருப்பை எவ்வகையிலும் என்னால் உணர முடியாததும் அதிர்ச்சியை அளித்தது. இறுதியாய் அதை பூட்டிவைத்தக் கொய்யா மரத்தின் அருகில் சென்றேன். சைக்கிளில் உடல் பகுதி கொய்யா மரத்தில் பதிந்து கிடந்தது. பல பகுதிகள் துருப்பிடித்திருந்தன. சக்கரங்கள் காற்றிழந்து நின்றன. பூட்டின் சாவித்துவாரம் துருப்பிடித்து ஒருவகை ஈரப்பசையோடு இருந்தது. இனி எவ்வகையிலும் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்த அதை என்ன செய்வதென தெரியாமல் ஸ்தம்பித்தேன்.

அன்று முழுதும் என் சைக்கிள் காணாமல் போன தருணமும் பின்னர் அதை தேடியலைந்து புதிய சைக்கிள் கிடைத்த நிமிடமும் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தது. புதிதாய் கிடைத்த‌ சைக்கிளை மூன்றே மாத‌த்தில் நானாக‌ கைவிட்ட‌தையும் அத‌ற்கு முன்பு அத‌ன் மீதான‌ பிடிப்பையும் எண்ணும்போது என‌து நிலையில் எது உண்மையான‌து என‌க் குழ‌ம்பினேன். நான் ஒரு காலக்கட்டத்தில் விரும்பி பெற்ற பொருள் இன்னொரு சந்தர்ப்பத்தில் அர்த்தம் இழந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது. அவ்வாறு எனது ஒவ்வொரு வயதிலும் நான் விரும்பி பெற்ற பொருள்களையும் உறவுகளையும் ஒருதரம் பட்டியலிட்டுப்பார்த்தேன். அவற்றில் பலவும் பலரும் நான் தேடிப்பெறும் தொலைவில் இல்லை என அறிந்தபோது அதிர்ச்சியே ஏற்பட்டது. எனது விருப்பங்கள், அதற்கான ஏக்கங்கள், அதைப் பெறுவதற்கான உழைப்பு என அனைத்துமே நான் மீண்டும் ஒருதரம் பரிசீலித்துப்பார்க்கும் நிலையிலேயே இருந்தன.

0 0 0

என்னதான் ஆசைகளின் இறுதி வடிவம் இராட்ஷ‌ச உருவாய் மீண்டும் மீண்டும் எனை அதிர்ச்சிய‌டைய‌ச் செய்தாலும் கடக்க முடியாத நதியாய் வாழ்வும் அதன் எதார்த்தங்களும் பெரும் நமட்டுச்சிரிப்போடு நகர்ந்தபடியே இருக்கிறது. வாழ்வு அவ்வ‌ப்போது த‌ரும் போத‌னைக‌ளை ம‌ற‌ந்துவிடுவ‌துதான் வாழ்வை மேலும் சுவார‌சிய‌ப்ப‌டுத்த‌ உத‌வுகிற‌து என‌ நினைக்கிறேன். நான் விரும்பிய‌ பொருட்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும் ந‌ட‌வ‌டிக்கைகளும் இன்றுவ‌ரையில் த‌னித்து நின்று த‌ங்க‌ள் அடையாள‌ங்க‌ளை ம‌றைத்த‌ப்ப‌டியும் ம‌ற‌ந்த‌ப‌டியும் அத‌ன‌த‌ன் இட‌ங்க‌ளிலேயே இருக்கின்றன‌. மேலும் மேலும் தோன்றும் ஆசைகளையும் விரக்திகளையும் இவை எவ்வ‌கையிலும் பாதிப்ப‌தில்லை. பய‌முறுத்துவ‌துமில்லை.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768