இதழ் 15
மார்ச் 2010
  இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம்
‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ. தேவராஜன்
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

தமிழ் இலக்கியமென்பது மலேசியக் கல்விச் சூழலில் வரையறுப்புத் தன்மையிலிருந்து மீளா நிலையில்தான் உள்ளது. இங்கே இடைநிலைப்பள்ளியில் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் பங்கம் ஏற்பட்டுவிட்டால் நாட்டில் தமிழ் அழிந்துவிடும் என்ற மனப்பீதி கல்வி சார்ந்த மனிதர்களிடம் எழும்பியுள்ளது. அவர்களின் பீதி விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியத்துவம் வாய்ந்த சமகாலச் சிக்கலாகும். தமிழுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்பதான அச்சம் இவர்களுக்குள் எழும்ப வேண்டிய அவசியம் என்ன என்பதும், இத்தனை நாட்கள் அவர்களும் அவர்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள்தானே கல்விப் பீடத்தில் அமர்ந்திருந்தார்கள்? இங்கே ஆட்டம் கண்டிருப்பது ஆரம்பக் கல் என்பதைவிட இடைப்பட்ட காலத்தில் உடைத்து நிர்மாணிக்கப்பட்டபொழுது இந்த ‘ஊமை விசுவாசிகள்’ என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதுதான் பாமரரின் கேள்வியாக இருக்கிறது. பாமரர்களைப் பொருத்தவரையில் அவர்கள் எந்தக் காலக்கட்டங்களிலும் தமிழை அதன் தன்மையிலேயே இந்நாட்டில் வாழ்வித்தவர்கள் எனலாம். எங்ஙனும் அரசியல் மாயை நிலவியிருப்பதால் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பு யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாமலேயே போய்விட்டது. இன்றைய மலேசியக் கல்விச்சூழலில் அன்றுபோல் இன்றும் தமிழ்ப்பள்ளியை வாழ்வித்துக்கொண்டிருப்பவர்கள் இந்தப் பாமரர்கள்தான். அண்மைய சில ஆண்டுகளில் தமிழ் ஆசிரியர்களுக்கும், மேல் மட்டத்தின் வெகு சிலருக்கும் இந்தத் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் புரிதல் ஏற்பட்டிருக்கிறது. பாமரர்கள் எக்காலத்துமே நம்பிக்கைக்குரியவர்கள்தாம். தமிழ்ப் பறிப்புப் பற்றியோ, தமிழ்ப் புதைப்புப் பற்றியோ அவர்களுக்குப் பிரத்தியேகக் கவலையெல்லாம் கிடையாது.

கடந்த ஆண்டு காலாண்டில் எஸ்.பி.எம் தேர்வில் பத்துப் பாடங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று துணைப்பிரதமர் அறிவித்தபோது தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கச் செய்கின்ற விஞ்ஞானப் புல மாணவர்கள் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுக்க இயலாமற் போய், ஒட்டு மொத்த அடைவுநிலையில் தமிழ் இலக்கியத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்துவிடும் என்பது ஒரு சாராரின் கவலை(?). இங்கே கலைப்புல மாணவர்களின் தமிழின் நிலையையையும் எண்ணிக் கலங்குவது போல் மிகவும் சிலாகித்துப் பேசுகிறார்கள். கலைப்புல மாணவர்கள் என்றாலே சராசரிக்கும் கீழான ‘தராதரத்தைக்’ கொண்டவர்கள் என்பதான தோற்றம் இன்னும் மறைந்தபாடில்லை. அவர்களையும் கருத்திற்கொள்வது போலவே கல்வி அமைச்சிலிருந்து ஆசிரியர்கள் வரை இது பேசுபொருளாக இருக்கிறது. இத்தகைய பிற்படுத்தப்பட்ட மாணவர்களை மையப்படுத்தி பயிற்சிகளும் அரங்குகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆசிரியர்களும் வாரக்கணக்கில் பங்கெடுக்கிறார்கள். ஆசிரியர்கள் மீதும் அவர்களின் பணி சார்ந்த அழுத்தங்களுக்கும் இந்தப் பயிற்சியின் மூலம் நவீன விடுதிகளும் இதர பிற வசதிகளும் ஒருவித மனோ விடுதலையைத் தருகின்ற கோணத்தில் மட்டும் நன்மைகளேயொழிய, மேற்குறிப்பிட்ட மாணாக்கர்களுக்குப் விளைபயன் என்பது கேள்விக்குறியாய்த் தொக்கி நிற்கிறது. மாணவர்களுக்குப் போய்ச் சேராத உள்ளீடுகளால் பயிற்சி ஏற்பாட்டாளர்களின் கனவு பெரும்பாலும் பகற்கனவாகவே போய்விடுவதுதான் பெருத்த அபத்தம். அதன் பிரதியுபகாரத்தையும் விளைபலனையும் மேற்குறிப்பிட்ட மாணவர்கள் சுகிக்கவில்லை என்பதுதான் மனசாட்சியுடன் கூடிய உண்மை. இந்த வாக்குமூலத்துக்குத் தோதாகக் கல்விச் சூழலின் தேர்வு நோக்கிய சதவிகித எதிர்பார்ப்பு மாணவர்கள் வரையறுக்கப்பட்ட இலக்கண இலக்கிய வினாக்களுக்குப் பதிலளித்தாலே போதும் என்பதான நெருக்குதலுக்கும், தேர்வுநிலை சரிவு என்றால் மேலிடத்தின் விசாரிப்புக்குப் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலையும் ஆசிரியர்களை ஒரு விதத்தில் கட்டிப்போட்டுவிடுகிறது. இதற்கிடையில், இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியர்கள் காலாகாலாமாக எதிர்கொண்டுவரும் ஒரு பெருஞ்சிக்கலைக் கட்டுரையில் பின்னர் கூறுகிறேன். முதலில் அச்சிக்கலுக்குத் தீர்வு பிறக்கட்டும்.

இடைநிலைப்பள்ளியின் தற்போதைய நிலையில் ஒவ்வொரு படிவத்திற்கும் மூன்று குறட்பாக்களும் சில மொழியணிகளும் இலக்கணங்களும் கற்றுத்தரப்பட, இவற்றில் தேறிவிட்டால் மாணவர்கள் தப்பித்துவிடுவர் என்ற புரிதல் வேரூன்றியுள்ளது. இதனால், பாடத்திட்டத்தில் உள்ளவற்றை மட்டும் முகாந்திரப்படுத்தும் போக்கும், பாட நூலை மையப்படுத்துகின்ற கச்சிதமான அணுகுமுறைகளும், கொஞ்சம் மீறினால் சங்க கால அல்லது 60, 70 களின் இலக்கியப் பெருமைகளை நுனிப்புல் மேய்வதுமே போதும் என்பதே அவர்களின் அணுகுமுறையாகி உள்ளது. தமிழை அதைத் தாண்டி கொண்டு போகவேண்டும் என்ற கடப்பாடு கிஞ்சிற்றுமின்றி, தற்காலத் தமிழின் இலக்கியப் போக்குகளைக் கீழ்த்தரமாக விமர்சிக்கின்ற பாவனைகளுமே மனதில் கவ்வி, எதற்குக் கல்லைத் தூக்கி காலில் போட்டுக்கொள்வானேன் என்ற அபல சித்தாந்தத்தில், பாடத்திட்டத்தையும் அதில் உள்ளவற்றையும் கற்பதே போதுமானவையென எல்லா ஒட்டுமொத்த ஆசிரியர் மனங்களிலும் உண்டு. இவர்களில் பல்கலைக்கழகத்தில் நவீன இலக்கியத்தையும் கற்ற ஆசிரியர்களும் அடங்குவர்.

விஞ்ஞானப் புல மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாகக் கற்பதன் மூலம், பள்ளியின் தேர்ச்சி விகிதம் கூடி, பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் விசாரணைகளுக்கு இடமின்றி தப்பித்துக்கொள்ளலாம் என்பது பெரும்பாலான ஆசிரியர்களின் நிலைப்பாடு (சிலர் விதிவிலக்கு). அங்கேயும் மாணவர்கள்தான் பலிகடா! பல அவசிய பாடங்களைக் கற்க வேண்டிய இக்கட்டில் தத்தளிக்கின்ற விஞ்ஞானப் புல மாணவர்களுக்குத் தமிழ் எவ்விதம் உதவி புரியும் என்பது கேள்விக்கு விட்டுவிடுவோம். அவர்கள் கற்கின்ற தமிழ் எதிர்காலத் தமிழ்க் குமுகாயத்துக்கு எவ்விடம் நன்மை விளைவிக்கும் என்பதையும் கேள்விக்கு விட்டுவிடுவோம். இதுகாறும் கடந்து வந்த பாதையில், இந்த விஞ்ஞானப் புல மாணவர்களால் சமூக நோக்கில் சுய மேம்பாட்டைத் தவிர வேறென்ன நன்மையளித்தார்கள் என்பது நீதியுடன் யோசித்துப் பார்க்கலாம். அவர்களுக்குத் தங்கள் குடும்பம், தங்கள் உத்தியோகம்,தங்கள் இருப்பு உறுதிப்படுத்தப்படுகின்றன என்பதைத் தவிர எதிர்காலத்தில் வேறெதுவும் இல்லை. பின்னாளில் தமிழை மருந்துக்கும் திரும்பிப் பார்க்காத வகையினராய்த்தான் உள்ளனர். கேட்டால் தமிழ்ப் பள்ளியில் படித்தேன், உயர் கல்வித் தேர்வில் தமிழையும் ஒரு பாடமாக எடுத்தேன் எனும் வாக்கு மூலத்தையும் சுய தம்பட்டத்தையும் ஒப்பேற்றவுமே அவர்களின் நாக்கு உருள்கிறது. தனிப்பட்ட முறையில், நான் சந்திக்கின்ற, சமுதாயம் நம்பியிருக்கின்ற இத்தகைய மாணவர்களைப் பார்த்தால் நேருக்கு நேர் ‘நாக்கைப் பிடுங்குகிற’ தோரணையில் கேட்டுவிடுகிறேன்! சூடு சொரணையும் மொழி குறித்த பிரக்ஞையும் இல்லையெனில் என்னதான் செய்வது? இன்றைய சூழலில் தமிழ், தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கின்ற உண்மை உள்ளங்கள் குறைவாகவே உள்ளனர். அக்கறை காட்டுவது போன்ற ‘பாவ்லா’ காட்டுகிற பூச்சாண்டிகளே மேடை போட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்! இத்தனை நாட்கள் இது பற்றிய ஞானத் தேடல் வந்ததா? இலக்கியக் கூட்டத்திலும் கல்விப் போக்கிலும் தீவிரம் காட்டியுள்ளார்களா? அவ்வளவு ஏன், தங்கள் வீட்டில் பிள்ளைகள்/பேரப் பிள்ளைகள் தமிழை, தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாகக் கற்றார்களா, அட, தமிழ்ப்பள்ளிக்குத்தான் போகிறார்களா? கொஞ்சமாவது இங்கிதம்கூட இல்லையா? மேடையில் உணர்ச்சிப் பீறிட ‘கத்துகிறவர்கள்’ என்றைக்காவது சுய வாக்குமூலத்தைத் தந்தார்களா? அதனால்தான், பாமரர்கள்தான் உயர்ந்தவர்கள், உண்மையானவர்களென மேலேயே வலியுறுத்தினேன். அவர்களுக்கு இந்த வம்பு தும்பெல்லாம் தேவையே இல்லை. அவர்கள் வசிக்கின்ற இடத்திற்குச் சென்று தமிழ்ப்பள்ளிப் பிரச்சாரத்தை செய்ய வேண்டிய அவசியம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை. அல்லது அது பற்றி வலியுறுத்துகிற உரிமை தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் இல்லை!

பாட விவகாரத்தில் தமிழ், தமிழ் இலக்கியத்தை இன்னும் சற்றுப் பொருட்பூர்வமாகக் கொண்டு வர என்ன செய்யலாம்? இன்றைய இடைநிலைப்பள்ளியில் தமிழுக்கு வாரத்தில் 120 நிமிடங்களென மூன்று பாட வேளை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இடைநிலைப்பள்ளியில் நன்னெறிக் கல்விப் பாடம் என்று ஒரு பாடம் நேரத்தை வீணாக விழுங்கிவருகிறது. குடியியல் கல்வி இருக்க நன்னெறிப் பாடமும் அதன் விளைபலனும் தேர்வை நோக்கியே ஓடுவதால், செல் இலக்கு செப்பமின்றிப் போக, அப்பாடம் வீணெனவே படுகிறது. அதற்கான நேரத்தைத் தமிழுக்கும் சீனத்துக்கும் கொடுக்கலாம் அல்லவா? எனவே, 12 பாடங்களோ, பத்துப் பாடங்களோ என்பதைக் காட்டிலும், இந்த 120 நிமிடங்களை அதிகரித்தால் நலம். அவ்வாறு நேர அளவு அதிகரிக்கப்பட்டால் நிறைய இலக்கிய உள்ளீடுகளைப் பாடத்திற்குள் கொண்டு வர இயலும். இலக்கியத்தைப் பரந்துபட்ட அளவில் பாடத்திட்டத்திற்குள் கொண்டு வந்தால் அதனால் விளையும் அனுகூலங்கள் ஏராளம். மொழி, இன, சமூக, இலக்கிய ஆர்வம் பெருகி தமிழியம் நீடிக்கும். மாணவர்களுக்குத் தமிழின் மீது பற்றும் பாசமும் பெருக்கெடுத்து ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்க முடியும். இலக்கியக் கூறுகள் மேலோங்கி அவற்றிலிருந்து இலக்கணத்திற்குள் பையப் பைய நுழையும் வாய்ப்பும் ஏற்படும். ஆனால், இந்தச் சுந்தரக் கனவெல்லாம் இந்நாட்டின் தற்போதையச் சூழலில் நடக்கக்கூடிய காரியமா? நிச்சயமாகக் கல்வியமைச்சோ, மேலிடமோ சம்மதிக்குமாதான் என்ன? ஆகவே, நடக்கக்கூடிய காரியத்தைப் பேசினால் மழையில்லாவிட்டாலும் சாரலாவது கிடைக்கும்.

நாட்டிலுள்ள எல்லாத் தமிழாசிரியர்களும், தமிழார்வலர்களும் இன்னும் எத்தனை தடவை கூடிப் பேசப்போகிறார்களோ தெரியவில்லை. பேச்சு ஒரு பக்கமும், மேலிடத்துச் ‘சாமியார்கள்’ அடுத்த தேர்தல் வரைக்கும் இழுத்தடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லா நாட்டு அரசியலும் தமிழனை அதிகமாகவே நேசிக்கிறது போலும். தமிழனைத் தாயமாகவே உருட்டி உருட்டி அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது. கொசுறுக்காக மேலே சொல்ல மறந்த செய்தியை இப்பொழுது சொல்லிவிடுகிறேன். இல்லையெனில், இக்கட்டுரை மோட்சம் சேராது.

மலேசிய கல்விச் சூழலில் தமிழாசிரியர்களைப் போல் தியாக உள்ளமும் அர்ப்பணிப்புணர்வும் வேறு யாருக்கும் இல்லை. அதிலும் தமிழ், தமிழ் இலக்கியம் தொட்டுப் பேசுவதென்றால் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஈகத்தை அரசியல்வாதியோ, ஊடகமோ உச்சி மோந்து பேசியதாக எந்தத் தகவலும் இல்லை. தேர்வு முடிந்த பின்னர் பரிசளிப்பின்போது மட்டுமே பல்ல இளித்துக்கொண்டு தட்டுப்படுவர். தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அப்படி என்னதான் செய்துவிட்டார்கள் என்பது துறை சாராத பலருக்குத் தெரிய வாய்ப்பேயில்லை. தமிழ் ஆசிரியர்களில் எழுத்தாளர்கள் இருந்திருந்தால் ஒருகால் செய்தி வெளியில் கசிந்திருக்கும். பாவம்! அவர்களுக்கு எழுத்து என்பது சுட்டுப் போட்டாலும் வராது. என்னதான் செய்வார்கள், தமிழ் இலக்கியம் போச்சே என்று புலம்புவதைத் தவிர?!

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் அட்டவணைக்கு வெளியேயும் உள்ளது. இந்த நிலை அநேகமாக மோசமாகிக்கொண்டு வரலாம். மற்ற ஆசிரியர்கள் மணி ஒலித்ததும் பையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப, தமிழாசிரியர்கள் கூடுதல் நேரத்தைக் கொண்டு தமிழைக் கற்பிக்க வேண்டிய இளிச்சவாய் நிலை. சில பள்ளிகளில் தமிழ் மாலை 3.40-குப் பிறகுகூட நடக்கிறது. நமது மாணவர்கள்தானே என்ற பேருள்ளம் கொண்ட தமிழ் ஆசிரியர்கள் இதுநாள் வரை போதித்து வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் கண்கொள்ளாக் காட்சி தமிழ் ஆசிரியர்களைத் தவிர, பள்ளி நிர்வாகத்தின் கண்களுக்கு மங்கலாய்த்தான் தெரியும். அதைப் பற்றிப் பெருமைப்படுவதால் அவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? விருது, பாராட்டு என்று வரும்பொழுது தமிழ் சாராத பிற பாடங்களுக்கும், புறப்பாட நடவடிக்கை ஆசிரியர்களுக்குமே உரிய மரியாதை கிடைக்கிறது. அதைவிடக் கேவலம், அட்டச் சோம்பேறிகளுக்கும் அடிவருடிகளுக்கும் கிடைப்பது! எங்கேனும் ஓரிரு தமிழ் ஆசிரியர்களுக்கு நன்மை கிடைக்கலாம். அந்தச் சின்ன மகிழ்ச்சியைப் பங்கு பிரித்து மகா சனங்களுக்குப் பந்தி வைப்பது அழகல்ல. அது பள்ளி நிர்வாகத்தின் உளம்சார்பற்ற அரசியல் சித்து வேலையாகவும் இருக்கலாம். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரை தமிழ் மொழிப் பாடம் அட்டவணைக்கு வெளியே போவது எவ்வகையில் நியாயம் என்பதே இக்கட்டுரையின் முக்கியக் கேள்வி? அது பற்றி முறையான சட்ட ரீதியான கல்வியமைச்சின் சுற்றறிக்கையும் உண்டா? அதில் என்னதான் உண்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது? தமிழை எச்சூழலிலும், எப்படி வேண்டுமானாலும் கற்பிக்கலாமா? தமிழ் அட்டவணைக்கு வெளியே போவது நியாயமா, அநியாயமா? இதைப் பற்றி மேடைப் பேச்சாளர்களோ கல்விமான்களோ வாயை அகலத் திறந்திருக்கிறார்களா?

அடுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வருவோம். இன்றைக்கு நாடு முழுக்க அதுதானே பேச்சு! தமிழ் மொழிப் பாடமே அட்டவணைக்கு வெளியில் வந்து விழும்போது இலக்கியத்தின் கதியைச் சொல்லவும் வேண்டுமா? இத்தனை ஆண்டுகள் இலக்கியத்தைப் போதித்துவந்த ஆசிரியர்கள் உண்மையிலேயே எமது கள்ளங்கபடமற்ற பாராட்டுக்குரியவர்கள்! அவர்கள் பள்ளிக்கான பாட நேரத்தோடு தமிழ் இலக்கியத்தையும் கற்பித்து வந்துள்ளார்களே. உண்மையில் இது சாதாரண விடயம் கிடையாது. அதனால்தான் 300 பேரிலிருந்து 3000 பேர்வரை தமிழ் இலக்கியம் கற்க முடிந்தது. இந்த ஈகம் தமிழ்க் கடவுள் கந்தசாமிக்கும் தெரியாது, மேடை போட்டுக் கோஷமிடும் மற்றச் சாமிகளுக்கும் தெரியாது. அவர்களுக்கெல்லாம் அப்பொழுதே தெரிந்திருந்தால் தமிழுக்கு இந்தக் கதி வந்திருக்காது! எல்லாவற்றையும் அப்பொழுதே கோட்டைவிட்டுவிட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்று ஓலமிடுகிறோம். எப்பொழுது கோட்டைவிட்டோம், இதன் பின்னணியில் ஊமைக்கோட்டான்களாய்ப் பீடத்தை அலங்கரித்த ஆசாமிகள் யார் என்று விசாரித்து வழக்கம்போல் பெருந்தன்மையாய் மன்னிப்பை அருளி, இப்பொழுது செய்ய வேண்டியது தமிழைப் பாட அட்டவணைக்குள் கொண்டு வருவதுதான் அடிப்படையான அறிவுடைமை! யார் செய்வது? அதற்கென்ன வழி?

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768