இதழ் 15
மார்ச் 2010
  தொடர்: நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

அன்று மாலை சென்னையில் மாதந்தோறும் நிகழும் இலக்கிய சிந்தனைக்கூட்டத்துக்கு, சா.கந்தசாமியும் மனைவியும் வந்து அழைத்துப்போக, மிக மகிழ்ச்சியாக இருந்தது. இவள் கணவரோடு தேடிச்சென்று சந்தித்தவர்கள் ல.சா.ராமாமிர்தம், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி போன்ற சிலரே. அதனால் அந்தக்கூட்டத்தில் சுஜாதா, திலீப்குமார், ஜெயந்தன், செ.ரவீந்தர், [இன்னும் சிலரின் பெயர்கள் நினைவில் இல்லை] போன்றோரைச் சந்தித்தது நிறைவாக இருந்தது. ஆனால் அவர்களின் நிகழ்ச்சி, ம்ம்ம்‍...‍ ‍‍‍‍‍‍இக்கரைக்கு அக்கரைப் பச்சை. நிகழ்ச்சியில் எல்லோரையும் விட ஜெயந்தனிடமே இவள் அதிகம் பேசினாள். ஜெயந்தனின் மொட்டை என்ற சிறுகதை [இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதை] அன்றைய உச்சத்தில் இருந்த அவரது பிறிதொரு நாவல் போன்ற எழுத்துக்களால், இவளைப் பெரிதும் கவர்ந்த எழுத்தாளர் ஜெயந்தனாக‌ இருந்தார்.

[இன்றைய நவீனக்கொழுந்துகள் ஜெயந்தனின் நாவலை ஏற்றுக்கொள்வார்களா என்பது எண்டெ சர்ச்சையல்ல.] சுஜாதா சார், முத்துசாமியின் பெயரைக்கேட்டதும் புன்னகைத்தார். அவரது ரத்தம் ஒரே நிறம் நாவலைப்பற்றி மட்டுமே பேசினாள். தமிழில் அவரது நடை சாகசம் இவளுக்கு வரவே வராது என்றிட, 'அப்படியெல்லாம் இல்லை அம்மா! நீங்களாவது, தமிழில் இலக்கியம் படைக்கிறீர்களே? என்னால் ஒருவரி கூட மலையாளம் எழுத வராதே,' என்றிட, அகிலன் கண்ணன் அருகே வந்தார். அவரிடம் இவளை அறிமுகப்படுத்தினார் சுஜாதா. வேறு சில பத்திரிகையாளர்களும் கூட அந்நிகழ்வுக்கு வந்திருந்தனர். மறுநாள் காலை ராமானுஜம் சார் வந்து சேர மீண்டும் பசுபதி மௌனம். பக்தியா, அடக்கமா, ஊஹ்ஹூம். தெரியவில்லை.

அன்றுமாலை, குறும்படம் ஒன்றுக்கு செல்ல ஏற்பாடாகி இருந்தது. லெனினின் டைரக்‌ஷனில் மிக மிக கவர்ந்த சினிமா. இவ்வளவு அருமையான குறும்படம் வாழ்க்கையில் இப்பொழுதுதான் முதன் முதலாகப் பார்க்கிறாள். நிகழ்ச்சி முடிந்து வெளியேவர, வெள்ளை வேஷ்டியும் வெள்ளை ஜிப்பாவும், பளீரென்று தேஜஸோடும் ஒருவர் அருகே வர ராமானுஜம் சார் அறிமுகப்படுத்தினார். நமஸ்காரம், என்று சிரித்தமுகத்தோடு இவளிடம் மேலும் சில வார்த்தைகளும் கூட மலையாளத்தில் பேச இவளின் உற்சாகம் தலை தூக்கியது. யார் தெரியுமா?

அவர்தான் திருப்பூர் கிருஷ்ணன். மறுநாள் அவரது அலுவலகத்திலிருந்து நிருபர் ஒருவர் இவளை பேட்டி காண வர, அச்சு அச்சாய், அப்படியே இவளது பாஷையிலேயே, இவளைப்பேசவைத்து பேட்டி எடுத்தார் அந்த நிருபர். இரண்டே நாட்களில் ஞாயிறு இதழில் அவளது பேட்டியும் தகவலும் வர, மாணவர்களில் முருகனுக்கு மட்டும் வருத்தம். சேச்சியின் கழுத்துவரை உள்ள பாதிப்போட்டோ தானே வந்திருக்கிறது, முழுப்போட்டோவும் வரவில்லையே என்று. இதற்கிடையே கூத்துப்பட்டறையில் இவளுக்கு சரளம் ஏற்பட்டுவிட்டது. ஆசிரியர் முத்துசாமிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் என்று பெயரிட்டு விட்டாள். தென்னாற்காடு என்பது இன்னொரு மாணவருக்கு. அதுபோலவே இவளுக்கும், அவர்கள் பெயரிட்டுவிட்டார்கள். என்ன பெயர் தெரியுமா? ஊஹூம், கட்டுரை இறுதியில் சொல்கிறேன்.

அன்றுசென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ராமானுஜம், ரவீந்திரன், பசுபதி, இவள் என பேசச் சென்றனர். ராமானுஜம் சார் இவளை அறிமுகப்படுத்திவிட்டு, அமர்ந்து விட்டார். ரவீந்திரன் சார் பேசவில்லை. ஒரு பார்வையாளராக மட்டுமே வந்தார். வேறொரு பல்கலைக்கழகத்திலிருந்து வந்த பேராசிரியர் ஒருவர் பேசினார். அடுத்த பேச்சாளர் பசுபதி. பசுபதி பேசவில்லை. பசுபதி சொற்பொழிவாற்றவில்லை. ஆனால் பசுபதிதான் நவீனம், பசுபதிதான் நாடகம், அப்படி ஸ்தம்பிக்கவைத்தான் பசுபதி. வகுப்பில் மாணவர்களை அதட்டுவதும், எல்லாரையும் நாட்டாமை செய்தும், ரவீந்திரன் சாரோடு உரிமையோடும் பழகி, வகுப்பையே கலகலக்கவைக்கும் பசுபதி, சராசரி மாணவரல்ல. பசுபதியின் தீட்சண்யம் திகைக்க வைத்தது. பசுபதியின் தமிழ்தான் இடறியதே தவிர, பசுபதி, பசுபதி தான். அன்றைய விழா நாயகனாக இவளுக்குப் பட்டது. அவ்வளவு ஆழமாக வீதிநாடகம், தேவராட்டம் பற்றியெல்லாம் பேசினான். அடுத்த பேச்சாளர் இவள். நவீனத்துவத்தில் அல்காசியின், டிராய் நாட்டுப்பெண்கள், சூத்ரகரின் மண்ணியல் தேர், பெட்ரோல் பிரக்டின் மனிதனுக்குச் சமம் மனிதன்தான் என்ற சில நாடகங்கள் மட்டுமே இவளை கொஞ்சமாவது அசைத்துள்ளது. படைப்பாக்க நுணுக்கத்தை, படிமப்பாங்கு விளக்கத்தில், தொய்வில்லாமல் பேச இவள் சிரமப்படவில்லை. 'நாடகம்', என்ற சொற்பிரபஞ்சத்துள் அடங்கியுள்ள பனுவலை மேடை நிகழ்வாக அமைப்பதில் இவள் ஒருபோதும் தமிழ் நாட்டில் பின்பற்றும் பாணியை தொடரப்போவதில்லை.

சிங்கையில் எங்களுக்கே உரித்தான வாழ்வியல் அம்சம், எங்களின் மண்ணின் விழுமியம், பின்னிப்பிணைந்த சம்பவக்கோர்வைகளே எங்களுக்கு உவப்பானவை என்றும் இன்றைய சிங்கையின் இலக்கியப்பார்வை என்றும் இன்னும் நிறைய‌வே பேசிவிட்டு அமர்ந்தாள். மாணவிகள், பேராசிரியர்கள் எனப் பலரும் ஆர்வத்தோடு வந்து பேசினார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்து வெளியேற, அடுத்தநிமிஷமே, பசுபதியின் வழக்கமான கேலியோடு சேச்சி, எமது பேச்சு தங்களுக்கு ஏற்புடையதாக இருந்ததா? என்று பணிவோடு கேட்க ராமானுஜம் சாரே சிரித்துவிட்டார். இவளுக்கு கோபம் வந்து விட்டது. இவ்வளவு ஆற்றலை வைத்துக்கொண்டு சதா என்ன கேலி? ரவீந்திரன் சார் உதவிக்கு வந்தார். 'கமலாதேவி, நீங்கள் பேசும் தமிழைத்தானே பசுபதி பேசுகிறார், பிறகு ஏன் கோபப்படுகிறீர்கள்?'

பசுபதியின் ஆற்றல் என்ன லேசு பாசா? வா போ என்று இனியும் முன்போல் பசுபதியை ஒருமையில் அழைத்துப்பேச முடியுமா? என்ற கவலையில் இவள் நிற்க, 'சேச்சி, ஏன் மெளனம்? ஏதாவது செப்புங்களேன்?' என்றிட வாய்விட்டு சிரித்துவிட்டாள். மரியாதையாவது, மண்ணாவது? போடாக்கழுதை, என்று இவள் திட்ட கச்சேரி வழக்கம் போல் களை கட்டியது.

-தொடரும்

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768